Tuesday, August 26, 2008

ராஜா வருகை.

ப்போதோ கேட்கும் காகங்களின் கரைதல்கள் யாரேனும் உணவு கொண்டு வருவார்களா என்ற எதிர்பார்ப்பாய் இருந்தது. அரச மரத்தின் அடியில் மஞ்சள் பூசியிருந்த பிள்ளையாரையும், நாகக் கணங்களையும், வேப்ப மர இலைகளின் சரசரப்பையும் தாண்டி பண்டாரத்தின் குறட்டைச் சத்தம் கேட்டது. அம்மன் சன்னதியில் மதிய உணவு வழங்கியாகி விட்டது என்பதை அவனது குறட்டையும், வீட்டிற்கு புறப்படும் முன் கோயில் கதவுகள் இழுத்துச் சாத்தப்படும் சத்தமும் ஒன்றையொன்று தொடர்ந்து காற்றிற்குச் சொல்லிக் கொண்டிருந்தன. பச்சையும், ஓரங்களில் மஞ்சள் பழுப்பும் கலந்திருந்த இலைகள் மட்டக் காகிதத்தால் சுருட்டப்பட்டு, கிழிந்து இரைந்து கிடந்தன. அவற்றில் இருந்த புளிசாத துணுக்குகளையும், எலுமிச்சை சாத மிச்சங்களையும் எறும்புகள் இழுத்துக் கொண்டு அலைந்தன. மதிய வெயிலின் உக்கிரத்தை கொஞ்சம் போல் குறைப்பதாய் ஒரு மேகம் மூடி பின் விலகியது. அந்த மேகம் பயணம் செய்யும் திசையிலேயே ஒரு கொத்து நிழலும் நகர்ந்து கொண்டே செல்லும் அல்லவா?

கோயிலை ஒட்டி இருந்த குளம் பச்சை பூத்திருந்தது. அதன் விளிம்புகளில் சில தாமரைப் பூக்கள். லேசாக வீசிய காற்று, நீளப் படித்துறை வழியே இறங்கியது. பின் குளத்தின் மையத்தில் அமைந்திருந்த ஒரு சிறு மண்டபத்தை கட்டிப் பிடித்துச் சென்றது. மண்டபத்தில் யாரோ புதியதாக உட்கார்ந்திருந்தார்கள். எப்படி அவர் அங்கு சென்றிருக்க முடியும்? நீந்திச் செல்வது கஷ்டம். குளத்தின் அடியாழத்தில் ஒரு மஹா மாளிகை இருப்பதாகவும், படித்துறையில் இருந்து பத்தடிக்கு மேல் உள்ளே நடப்பவர்களை அந்த மாளிகையின் காவல்காரர்களான பூதங்கள் பிடித்துக் கொண்டு தங்களது அகோரப் பசிக்கு உணவாக்கிக் கொள்வதாக பையன்களிடையே ஒரு பேச்சுண்டு. மண்டபத்தைக் கடக்கும் காற்று மேலும் செல்ல முயலும். ஆனால் பாவம், அது எதிரே இருக்கும் கோட்டையின் மேற்குச் சுவரில் முட்டிக் கொள்ளும். பின் வந்த வழியே திரும்பிச் செல்லும்.

கோட்டை, உள்ளே இருக்கும் அரண்மனையைச் சுற்றிலும் நான்கு திசைகளிலும் காத்து கட்டப்பட்டிருக்கிறது. அதற்காகத் தானே கோட்டை? அரண்மனையின் கிழக்கு வாசலின் முன்னே ஒரு விநாயகர் கோயில் இருக்கிறது. எப்போதாவது அதற்கு பூஜை நடத்தப்பட்டு, அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தால், யாரோ பெரிய மனிதர்கள் வருகிறார்கள் எனக் கொள்ளலாம். அல்லது ஏதாவது சினிமா சூட்டிங்.

ராஜா மகாகனம் பொருந்திய..கூடாது. மகாராஜாவின் பெயரை நான் சொல்லக் கூடாது. எனக்கு இன்னும் அந்த வயது வரவில்லை. பிஜூ சொல்லுவான். அவனுக்கு அந்த வயது வந்து விட்டது. ஆற்றின் பாலத்தின் அடியில் அவனது சிநேகிதர்களோடு ஒருநாள் வெள்ளைக் காகிதத்தை எரித்து புகை செய்து, இருமிக் கொண்டிருந்த போது, அவனை நான் பார்த்து விட்டேன். அப்போது ' நான் ஒருநாள் - மகாராஜாவின் பெயரைச் சொல்லி - போல் பெரிய ஆளாவேன். அப்போது உனக்கு எனது தளபதி பதவி தருவேன். அச்சனிடம் சொல்லி விடாதே' என்று கெஞ்சினான்.

எனக்கு தளபதி பதவி தான் பிடிக்கும். ராஜா பிடிக்காது. அது சங்கரனுக்குத் தான் பொருத்தமாக இருப்பதாக பொன்மணி மிஸ் சொன்னார். எனக்கு சங்கரனைப் பிடிக்காது. அதனால் ராஜாவையும் பிடிக்காது. எனக்கு தளபதி வேஷம் தான் நன்றாக இருந்தது என்று சைத்ரா சொன்னாள், நாடகம் முடிந்த பின்பு! அதனால் தான் எனக்கு அந்த பதவி பிடித்தது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். யார் சைத்ரா என்றும் கேட்காதீர்கள். ரகசியம்..!

மற்றொரு முறை வாய்க்காலில் குளிக்க நானும் வருவேன் என்று அடம் பிடித்து, அவனுடன் வந்தேன். என்னைத் தனியே குளிக்கச் சொல்லி விட்டு, அவன் வேறொரு இடத்திற்குப் போனான். நானும் அவன் அறியாமல் போனேன். அப்போது அவனும், அவனது சிநேகிதக்காரர்களும் ராஜாவின் பேரைச் சொல்லி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்து பெண்டுகள் குளிக்கும் இடம் பக்கம் என்று அறிந்து ஓடி வந்து விட்டேன். அசிங்கம்.

அரண்மனை இப்போது அமைதியாக இருந்தது. ராஜாவின் தர்பாரும், அரசவையும், அந்தப்புரங்களும், குளியலறையும், பசுத் தொழுவமும், குதிரைக் கொட்டாயும், வெகுகாலமாகவே அமைதியாகவே இருக்கின்றன. கடைசி ராஜா ரொம்பவும் தாராள மனசானவராம். கேட்டவருக்கெல்லாம் வாரி,வாரி தந்தவராம். பாரத சர்க்கார் 'நாட்டைக் கொடு' என்று கேட்டவுடன் ராஜாங்கத்தையே கொடுத்து விட்டு, கால்நடையாகவே குடும்பத்தோடு வடக்கே சென்று விட்டதாக தாத்தா அடிக்கடி கூறுவார். உடனே கண்களில் கரை கட்டியிருக்கும் கண்ணீரையும் மேல் துண்டால் துடைத்துக் கொள்வார். இது இயல்பாக நடக்கும் நிகழ்ச்சி.

தாத்தா, பெரிய தாத்தா, அவருக்கு அச்சன், அவருக்கு அச்சன்.... இப்படி எல்லாருமே ராஜாவுக்கு சேவகம் செய்தவர்கள். என்ன சேவகம் என்று எனக்கு சரியாகத் தெரியாது. குடும்பத்தின் விசுவாசத்திற்காக அரண்மனையை ஒட்டி பத்து ஏக்கர் நிலத்தை மானியமாக கொடுத்து விட்டதாக தாத்தா சொல்லுவார். அதில் இருந்து வருகின்ற குத்தகைப் பணமும், தானியங்களும் நிரம்பி இருக்கும் அறைக்குப் பக்கத்தில் தான் தாத்தாவும் இப்போது இருந்து வருகிறார். அந்த தானியங்களின் வறுத்த வாசனையிலும், அந்த நெருக்கத்திலும் பழைய காலங்களின் பாதையில் பயணம் செய்து வருகிறாரோ என்று எனக்கு அவ்வப்போது சந்தேகம் வரும்.

இன்று கூட பாருங்கள், அவர் ஏதோ யோசித்துக் கொண்டு நெடுக் கம்பிகள் வைத்த ஜன்னல் வழியாக தூரத்தில் தெரிந்த அரண்மனையின் வடக்கு கோபுரத்தைப் பார்த்து கொண்டிருக்கிறார்.

"அப்பு...! தாத்தாவைக் கூட்டிட்டு வா. உண்ண நேரமாச்சுனு சொல்லு. இல்லாட்டி நீ வந்து எடுத்திட்டு போ..!" அம்மா குரல்.

தாத்தாவிற்கும் இது கேட்டிருக்க வேண்டும். ஜன்னலில் இருந்து பார்வையைத் திருப்பினார். நானும் காற்றில் அங்குமிங்கும் பறந்தோடிக் கொண்டிருந்த சுருங்கிய சருகிலிருந்து விடுபட்டு தாத்தாவைப் பார்த்தேன்.

அவர் முகத்தில் வழக்கமான ஒரு சோகக் கீற்று இல்லை. கொஞ்சம் புன்னகையும் இருந்தது. நான் என்ன விஷயம் என்று கேட்பதற்கு முன்,

"நாளை ராஜா வருகிறார்.." என்றார்.

கேளப்பா கோளுங் கிழமையுநல் லோர்மகிழ்
நாளப்பா கொண்ட திருவோணத் தாளப்பா
பேசாநீ பெற்றமகற் பிள்ளை தவிரெனில்
ராசா வருகின்ற நாள்.


வயலின் வரப்புகளில் பச்சைப் புற்கள் நிறைய வளர்ந்து விட்டன. பாத்தி கட்டி வைத்த நீரின் வழியெங்கும் சின்னச் சின்ன கூழாங்கற்கள் நிரடிக் கொண்டிருந்தன. வயலை ஒரு முழுப் பார்வை பார்க்கும் விதமாக அமைந்திருந்த ஆலமரத்தின் அடி விழுதுகள் கெட்டியாக மண்ணில் ஊன்றி இருந்தன. அவற்றின் இடையில் கயிறுச் சுருக்கு போட்டு ஊஞ்சல் இட்டு விளையாடுவது எனக்குப் பிடிக்கும்.

மதிய உணவிற்குப் பின் வயலை ஒரு உலா போய்ப் பார்த்து விட்டு வந்து, கொஞ்ச நேர உறக்கத்தில் ஆழ்வார் தாத்தா. அந்த தூக்கத்தில் கொள்ள, கனவுகளைத் தான் இந்த சிறு உலாவில் சேகரிக்கிறார் என்று எனக்குத் தோன்றும்.

இன்று நானும் அவருடன் நடந்து வந்தேன்.

மேற்குத் தொடர் மலைகளின் முகமெங்கும் மஸ்லின் முகமூடிகள் போல் வெண் சாம்பல் மேகங்கள் மூடியிருந்தன. பின்புறம் பெரும் மழை பெய்தல் போலும் ஒரு நிலக் காட்சி அங்கே காட்டியது. அடிவார நிலங்கள் பச்சையாய்க் காற்றின் போக்கிற்கு தலையாட்டிக் கொண்டிருந்தன. கருவேலி முட்கள் எல்லைகளின் அய்யனாரின் வாளை விடவும் கூர்மையாய் இருந்தன. பல லட்சக்கணக்கான பறவைகளின் கீச்சுக் குரல்களும், கோடிக்கணக்கான பூச்சிகளின் ரீங்காரமும், திசை அறியாத காற்றின் விழுதுகளுக்கிடை புகுந்து புறப்படும் ஊதல் ஓசையும்..!

பெருமரத்தைச் சுற்றிக் கட்டிய சிமெண்ட் திட்டின் இடிந்த புறமொன்றில் தாத்தா அமர்ந்து கொண்டார். நான் ஊஞ்சலில் மேலும் கீழும்!

"நாளை ராஜா வருகிறார்..!" என்றார் மறுபடியும்.

வானத்தின் தெளிவில்லாத கணத்திற்கொரு வடிவம் மாற்றும் பொதி மேகங்களைப் பார்த்துக் கொண்டு, அவற்றை எட்டிப் பிடிக்கும் வேகத்தோடு அரைவட்டச் சுழலில் வேக வேகமாய்ப் போய்க் கொண்டும், வந்து கொண்டும் இருந்த நான், அவரைப் பார்த்தேன்.

தாத்தாவோடு, சிமெண்ட் திட்டும், பருத்த அடிமரமும், பூச்சிகள் குடிகொண்ட விழுதுகளும், அருகின் வயல்களும், வாய்க்கால்களும், பின் தூர மலைகளும், உச்சி முகில்களும் அரைவட்டச் சுழலில் போய்க் கொண்டும், வந்து கொண்டும்...!!

ஊஞ்சலை நிறுத்தி அவர் அருகில் சென்று அமர்ந்தேன். தன் கையில் இருந்த பழைய ஓலைச் சுவடியை நீட்டினார். ஏதோ கிறுக்கி இருந்தது.

"திருவோணத்திற்கு இன்னும் எவ்வளவு நாட்கள் இருக்கின்றன..?" கேட்டார்.

"ஏழு நாட்கள்..!" சட்டென்று சொன்னேன். தினமும் நாட்காகிதம் கிழிக்கும் போது குறைத்துக் கொண்டே வருகிறேன். புதுத் துணிகள் உடுத்த, பல வகை காய்கறிகளோடு, பால் பாயசம், அடப் பிரதமன் சாப்பிட, ஸ்கூலுக்கு லீவாக, டவுனுக்கு சென்று புதுப்படம் பார்க்க...! இன்னும் ஏழு நாட்கள் மட்டுமே!

"நாளை நம்மைப் பார்க்க மகாராஜா வருகிறார்..!"

"அதெப்படி? மகாபலிச் சக்கரவர்த்தி நம்மைப் பார்க்க வரும் நாள் தானே ஓணம்? அதற்குத் தான் இன்னும் ஒரு வாரம் இருக்கின்றதே!" ஒரு வாரம் இருக்கின்றது.

மெதுவாகச் சிரித்துக் கொண்ட தாத்தா, தோளில் துவண்டு, காற்றில் அப்படியும் இப்படியும் அலைந்து கொண்டிருந்த துண்டை எடுத்து கண்களை துடைத்துக் கொண்டார்.

"அப்பு! உங்க ஸ்கூல்ல இன்ஸ்பெக்ஷன் வர்றாங்கனா, என்ன செய்வீங்க?"

"ம்..! க்ளாஸ் எல்லாம் க்ளீன் பண்ணுவோம். நிறைய சார்ட் பேப்பர்ஸ் ஒட்டி வைப்போம். போர்டெல்லாம் கழுவி விடுவோம். டெஸ்க்கெல்லாம் துடைச்சு வைப்போம். புக்ஸ், நோட்டுக்கெல்லாம் அட்டை போடுவோம்..ம்.. அப்புறம்.."

"சரி! இன்ஸ்பெக்ஷன் சார் வர்றதுக்கு முன்னாடி யார் வருவா?"

"அவங்க எல்லம வர்றதுக்கு முன்னாடி, நமா எல்லாம் கரெக்டா பண்ணி இருக்கோமானு செக் பண்றதுக்காக அவங்க கூட ஒர்க் பண்றவங்க வந்து பார்ப்பாங்க.."

"அதே மாதிரி, நம்மை எல்லாம் பார்க்க மகாபலிச் சக்ரவர்த்தி வர்றதுக்கு முன்னாடி, அவர்கூட இருக்கற நம்ம மகாராஜா நாளைக்கு வருவாரு. அப்புறம் தான் சக்ரவர்த்தி வருவாரு..!"

"போன வருஷம் அவர் வரலையே?"

"இல்ல! இந்த வருஷம் மட்டும் தான் வர்றப் போறார். அதற்கான நேரம், நாள் எல்லாம் இந்த வருஷம் மட்டும் தான் சரியா அமைஞ்சிருக்கு! இனி இது மாதிரி மறுபடியும் அமைய ஆயிரம் வருஷம் ஆகும். நானோ, நீயோ அதைப் பார்க்க இருக்க மாட்டோம்...!"

"அச்சன்கிட்டயும், அம்மைகிட்டயும் உடனே சொல்லுவோம். நம்ம வீடு இன்னும் சரியா சுத்தம் பண்ணவே இல்லையே..!"

"இல்ல! இது யாருக்கும் சொல்லக் கூடாது. உனக்கும் எனக்கும் மட்டும் தெரிய வேண்டிய ரகசியம். நாம நம்ம ரூமை மட்டும் சுத்தம் பண்ணுவோம்.."

எனக்கும் தாத்தாவுக்கும் மட்டுமே தெரிந்திருக்கும் ரகசியம்! பிஜுவுக்கு கூட தெரியாது. சந்தோஷமாக இருந்தது.

"இந்த ஓலைச் சுவடியைப் பார்த்தியா? இதில போட்டிருக்கு. உனக்கு மட்டும் தான் சொல்லணும்னு. வா போகலாம். நாளைக்கு எப்ப வேணா நம்ம மகாராஜா வரலாம். அதுக்குள்ள நாம சுத்தம் பண்ணி இருக்கணும்.."

இருவரும் வீட்டிற்கு செல்லும் பாதையில் நடக்க ஆரம்பித்தோம். எங்களுக்கு பின்னே கருமேகங்கள் கும்பல் கும்பலாய், குப்பல் குப்பலாய் பொங்கி வருவதை சிலீர் என்ற காற்றில் உணர முடிந்தது. விரைவாக நடந்தோம்.

வீட்டின் தெருவிற்குத் திரும்பும் போது, வானம் பொத்துக் கொண்டது. எதிராளி தெரியா அளவில் பெரிய பெரிய துளிகள் மேலே விழுந்தன. படலையை விலக்கி திண்ணையை அடைவதற்குள் முழுக்க நனைந்து போயிருந்தோம். வேலியை ஒட்டி நட்டிருந்த நந்தியாவட்டை, மல்லிகை, நாகவந்தி மலர்ச் செடிகள் மழையில் எக்காளமிட்டன. மரங்கள் பேயாட்டமிட்டன. தொழுவத்தின் பசுக்கள் உள்ளே சென்று ஒளிந்தன. குட்டன் வீட்டு எருமை ஒன்று சாவகாசமாக பெருமழையில் நனைந்து, வாயை சவட்டிக் கொன்டு நகர்ந்து சென்றது. எங்கிருந்தோ அவசர அவசரமாக வந்த பிஜூ சைக்கிளை ஓட்டின் நேர் மழைப் பாயும் எல்லைகளுக்குள் நிறுத்தினான். அவனை இன்று மதிக்கத் தேவையில்லை. அவனுக்குத் தெரியாத ரகசியம் ஒன்று எனக்குத் தெரியுமே!

கொஞ்ச நேரத்தில் கரண்ட் போனது. ஆங்காங்கே அறைகளில் லாந்தர் விளக்குகள் உயிர் பெற்றன. அம்மா தலையைத் துவட்டி விட்ட பின், வேறு ஆடைகளுக்கு மாறிய பின் தாத்தா அறைக்குப் போனேன்.

வேஷ்டி, சட்டை வஸ்திரங்கள், பெரிய பெரிய புஸ்தகங்கள், ஓலைச் சுவடிகள், அடுக்குகள், பழைய பாத்திரங்கள், ஜன்னல் தூசுகள் எல்லாவற்றையும் ஒதுக்கிக் கொண்டிருந்தார்.

என்னைப் பார்த்ததும்,

"நாளை கண்டிப்பாக ராஜா வருகிறார்..! இதைப் படிக்கிறேன், கேள்..!" என்று படித்தார்.

சந்திரந் தேயுநாளில் சந்ததியைக் கண்டுசெல்ல
வந்திறங்கும் மன்னனை வாழ்த்தமுன் அந்தி
குழைத்து மகிழ்ந்து குதூகலித்துப் பெய்யும்
மழையெனும் மங்களப் பால்!


வானெங்கும் கருகும்மென்று திரை கட்டிய இருள் நெருங்கி கொண்டிருந்தது. தூர அரண்மனையில் சில விளக்குகள், கிடுகிடுத்த இடிகளின் சப்தங்களுக்கேற்றவாறு நடனமாடிக் கொண்டிருந்ததை ஜன்னல் வழி பார்த்தேன்.

ரவு முழுதும் பெரும் மழை வந்திருக்க வேண்டும். திண்ணையின் ஓரங்கள், சுவரின் விளிம்புகள் அனைத்தும் ஓதங்களால் நிரம்பியிருந்தன. முழுதும் நனைந்து நடுங்கி இருந்த சைக்கிளின் சக்கரக் கம்பிகளிலிருந்து சொட்டு சொட்டாய்ச் சத்தங்கள். பூச்செடிகள் சாய்ந்தும், சாலையோர மரங்கள் பளிச்சென சுத்த பச்சையாயும், செம்மண் குழைவுகள் சகதியாயும் இருந்தது, என் கனவுகளில் சொட், சொட்டென துளிகள் விழுந்தது முற்றத்தில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த அலுமினியப் பாத்திரங்களில் பெய்து நிறைத்த மழைத் துளிகள் என்பதை உறுதிப்படுத்தின.

"அப்புக் குட்டா! இங்க வா! பல் தேச்சிட்டயா? முக்கு கடைக்கு போய், கால் லிட்டர் தேங்கா எண்ணெய் வாங்கிட்டு வா! அச்சன்ட்ட காசு வாங்கிக்கோ!"

பாய் கடையில் இல்லை. அக்கா தான் இருந்தார்கள். எண்ணெயைக் கொடுத்து விட்டு, "அப்பு! பிஜூவை சிகரெட்டு பிடிக்கறதை கொறைச்சுக்க சொல்லுடா! மஜீத் அப்பா டவுன்ல சரக்கு வாங்கும் போது பாத்திருக்காரு! ஏண்டா அவனுக்கு புத்தி இப்படி போகுது?"

வானம் இன்னும் தெளியவில்லை.

"அப்பு! என்னோட பாக்கெட்டில ஒரு ப்ளூ பென்சில் வெச்சிருந்தேனே பாத்தியா? தேடிப் பாருடா..!"

டைனிங் ரூம், ஸ்டோர் ரூம், பூஜா ரூம், தோட்டம், தொழுவம், பாத் ரூம்...

"அப்பா! இங்க இருக்கு! டாய்லெட்ல க்ராஸ்வேர்ட் போட்டீங்களா..?"

"அப்பு! இங்க வாடா..! என்னோட பிஸிக்ஸ் நோட் பாத்தியா? இன்னிக்கு அசைன்மெண்ட் சப்மிட் பண்ணணும்டா..!"

"நேத்து மது வீட்டுக்கு போயிருந்தியே..! அங்கயே வெச்சிட்டு வந்திட்டியா?"

"மை காட்! இன்னிக்கு லாஸ்ட் டேட்! எண்ட குருவாயூரப்பா..!"

கூப்பிடாமலேயே தாத்தாவைப் பார்க்கப் போனேன். குளித்து, அவருக்கு சென்ற திருவாதரையில் வாங்கிய மடிப்புக் கலையாத வேச்டி, சட்டை அணிந்திருந்தார்.

"என்ன அப்பு? நீ இன்னும் குளிக்கலையா? சீக்கிரம் குளிச்சிட்டு புது ட்ரெஸ்போட்டுட்டு கோயிலுக்குப் போய்ட்டு வந்திடு..! நீ தான் ராஜாகிட்ட பேசப் போற..!"

"நானா..?" எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொஞ்சம் பயமாகவும்!

"ஆமா! எனக்கு தான் அவர் பாஷை தெரியாதே! புரியாதே! இதுல சொல்லி இருக்கு பார்!"

ஓடியாயி ரந்தொலைவிட்(டு) ஓர்மைஇல் பார்த்திருக்க
தேடிவருந் தேவன் மகிழ்ந்து - படிதாவி
வீசு குளிர்த்தென்றல் வேறிடஞ் செல்லது
பேசு மொழியது மாறு!


நான் குளித்து விட்டு, சென்ற விஷுவுக்கு எடுத்த கலர்கள் நிறைந்த டீஷர்ட்டையும் ஜீன்ஸ் பேண்ட்டையும் அனிந்து கொண்டு தாத்தாவிடம் காட்ட ஓடினேன்.

"என்னடா இது? வர்றது யாரு? நம்ம ராஜாடா..! இப்படி தான் ட்ரெஸ் பண்ணி இருப்பியா? போ! வேஷ்டி, சட்டை போட்டுட்டு வா, போ!"

மீண்டும் அதுபடி செய்ய,

"அப்பு! என்னாச்சு இன்னிக்கு? நீயும் தாத்தாவும் ரொம்ப அலம்பல் பண்றீங்க? புது ட்ரெஸ் போட்டுக்கறீங்க..? என்னாச்சு உன் தாத்தாவுக்கு? ரொம்ப முத்திடுச்சோ..?; என்றாள் அம்மா.

முறைத்து விட்டு, "அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது. எனக்கும் தாத்தாவுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்..!"

அம்மையின் முணுமுணுப்பையும் அசட்டை செய்து, மீண்டும் தாத்தாவிடம் ஓடினேன்.

"தாத்தா! ராஜா எதுல வருவாருன்னு எழுதி இருக்கா..?"

"இருக்குடா..! சொல்றேன்.."

திருவீடு முன்வாயில் தில்லைமகன் திண்டாம்
அருகினில் பேரொரு தேரில் - கருநிறைந்து
வானெங்கும் நீர்முகில் வாரித் தெளித்திருக்க
வந்திறங்கு மன்ன னவன்.


அம்மா பக்கத்து கடைக்குச் சென்று விட, அப்பா வேலைக்குச் சென்று விட, பிஜூ ஸ்பெஷல் க்ளாஸுக்கு போய் விட, நானும் தாத்தாவும் மட்டும் தனித்து விடப்பட்டோம். நான் பாட்டின் பொருளை உணர்ந்து, அரண்மனையின் முன்வாசலைப் பார்க்க ஆரம்பித்தேன்.

கொஞ்சம் தொலைவில் ஒரு ட்ராவல்ஸ் பஸ். ஈரச் சாலைகளின் மீத நீர்க் குட்டைகளை வாரி இறைத்து, ஓரச் செடிகளுக்கு வாரி வழங்கி விட்டு வந்து கொண்டிருந்தது. இரண்டாள் உயரத்தில் ஜன்னல்கள். சிலவற்றில் ரோஸ் முகங்கள்.

கோட்டையின் முன் வாசலுக்கு பிள்ளையார் திட்டின் அருகே வந்து நின்றது. வெள்ளைக்காரர்கள். கொஞ்சம் கொஞ்சம் ஆங்கில எழுத்துக்களில், இதுவரை பார்த்திராத படங்களில் பனியன்கள். கறுப்புக் கண்ணாடிகள். வட்ட, முக்கோண, நேர்த் தொப்பிகள். அரைக்கால் ட்ரெளசர்கள். முதுகுகளில் சில பைகள்.

"அம்மன் கோயில் தூண்கிட்ட போய் அதை தடவி நிக்கறார் பாரு, மகாராஜா. போய்க் கூட்டிட்டு வா..!" டக்கென திரும்பி பார்த்தேன். பஸ் வரும் சத்தத்தைக் கேட்டு தாத்தா வந்திருக்கிறார்.

"தாத்தா..! அவங்க வெள்ளைக்காரங்க. அவங்களைப் போய் மகாராஜான்னுட்டு..?" எனக்கு சிரிப்பு வந்தது.

தாத்தா கோபமானார். "எடே! அவர் தான்டா போன பிறவில நம்ம மகாராஜா. இப்ப வேற ஒரு தேசத்துல, வேற ஒரு மொழி பேசறவரா பிறந்திருக்கார். ஆனாலும் விதி பார்த்தியா? பாட்டுல சொன்னபடி அவர் இன்னிக்கு அவரோட தேசத்துக்கு வந்து தீரணும். வந்திருக்கார். போய் கூட்டிட்டு வா..!"

பிஜூவின் சிநேகிதக்காரங்களை விட கொஞ்சம் தான் வயது அதிகம் இருக்கும். நல்ல வெளுப்பு. சைத்ராவை விடவும்! அருகில் போனேன். கேள்விக்குறிகளாய் புருவங்கள் வளைந்தன.

"கம்..! கம்..!" நான் சைகையால் கூப்பிட்டேன். அவர் சிநேகமாய்ச் சிரித்தார். அருகில் இருக்கும் மற்றவர்களைப் பார்த்தார்.

கைடு, பூட்டியிருந்த கோட்டைக் காவலாளியைத் தேடிப் போயிருந்தார். மற்றவர்கள் ஆங்காங்கே அமர்ந்தும், பைனாகுலரால் பச்சைக் குளத்தையும், அதன் வானமுகட்டில் பறக்கும் திசை மாற்றி மாற்றி விளையாடும் V பறவைக் கூட்டத்தையும் பார்த்துப் பார்த்து தங்களுக்குள் பேசிக் கொண்டனர். சிலர் காமிராவால் தொலை மேகத்தையும் கலைந்து கரையும் மேகக் கூட்டங்களையும், பச்சை வயல்களையும், ஈரம் நிறைந்து ஒழுகிக் கொண்டிருக்கும் குடிசைகளையும், "ஆசம், வொண்டர்ஃபுல்" என்றவாறு காட்சிப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.

அவர் ஆச்சரியப்பட்டு என்னுடன் வந்தார்.

"வரணும்..! வரணும்..! இந்த ஏழையின் குடிசைக்கு மகாராஜா வரணும்! தங்களுக்கு பூரண கும்ப மரியாதை கொடுக்க என்னால் முடியவில்லை..! மன்னிக்கவும். உங்களுக்கு என்னால் முடிந்தது..!" என்று கூன் போல் குனிந்து அழகாக சீவி விடப்பட்டிருந்த செவ்விளநியை கொடுத்தார் தாத்தா.

அவர் என்னைப் பார்க்க, எனக்கு தாத்தாவின் வசனங்களை ஆங்கிலப்படுத்த தெரியாமல், "வெல்கம்.. வெல்கம்.." என்றேன். என் அடிமனதில் இந்த தாத்தா எப்போது இந்த இளநியை வெட்டினார் என்ற கேள்வி ஓடிக் கொண்டிருந்தது.

புன்னகைத்து வாங்கிக் கொண்டார்.

உள்ளே வந்து தாத்தாவின் அறைக்கு வந்தார். அறையின் நிலைமையைப் பார்த்தார். தாத்தா குறுகி ஓர் ஓரமாய் நின்றார்.

அவர் ஏதோ கூற வாய் திறக்குமுன்,

"ராபர்ட்..! ராபர்ட்..!" என்ற குரல் வெளியிலிருந்து உள்ளே பாய்ந்தது.

அவர் அவசரமாக எழுந்து கொண்டார். அவரது பர்சிலிருந்து ஒரு பச்சைத் தாளை எடுத்தார். நான் உணர்ந்து மறுப்பதற்குள் தத்தாவின் கைகளில் திணித்து விட்டு வெளியேறினார்.

"தாத்தா! அதைக் கொடு! அவர் தப்பா நினைச்சுட்டார்..! திருப்பிக் கொடுத்திட்டு வர்றேன்..!"

"சும்மா இருடா..! இப்ப ஒத்துக்கிறயா? அவர் மகாராஜாடா..! எத்தனை ஜென்மம் ஆனாலும், எந்த தேசத்தில பிறந்தாலும், ராஜ வம்சத்தோட ரத்தம் மாறுமா..? அந்த வள்ளல் குணம் காணாமப் போகுமா..? இது மகாராஜா இந்த ஏழைக்கு கொடுத்த பரிசு..! இதைப் போய் திருப்பித் தர்றதாவது? மகாராஜா கொடுத்ததை நாம திருப்பித் தர்றது சரியானதா என்ன..? என் குருநாதர் ஜோசியப் பெருநிதி காலக் கணக்குக் கனகசபைநாத சுவாமிகள் எழுதி வெச்ச பாட்டு உண்மையாகிடுச்சு பார்த்தியா...?"

"தாத்தா! அவங்க ஊர் சுத்திப் பார்க்க வந்தவங்க..!"

"போடா முட்டாள்..! அவங்க வந்த பஸ்ஸோட முகப்புல என்ன எழுதி இருக்குனு பாரு..!" என்றவாறு அந்த நோட்டை கண்களில் ஒத்திக் கொண்டார். தனது சொத்தான தகரப் பெட்டியைத் திறந்தார்.

அரண்மனைக் காவலாளியைக் காணவில்லை போலும்! அவன் எங்கேயாவது இரவின் மழைக்கு ஒதுங்கி இருந்து இன்னும் தெளிந்திருக்க மாட்டான். பஸ் திரும்பி போய்க் கொண்டிருந்தது. அதன் பின் முகப்பில் "THE CHARIOT" என்று சிவப்பு பெயிண்ட்டில் பளிச்சிட்டது.

சட்டென என் நினைவில்,

'அருகினில் பேரொரு தேரில்'...!

9 comments:

அகரம் அமுதா said...

கதையும் அருமை. வெண்பாவும் அருமை. அவ்வெண்பாக்கள் நீங்கள் எழுதியதா?

Wandering Dervish said...

நண்பா, இந்த கதைக்களன் மலையாள கரை ஓரம் நடை பெறுகின்றது மொழியோ பல இடங்களில் மலையக மொழியை பிரதிபலித்தாலும் முக்கியமான் சில இடங்களில் சுத்த தமிழ் வந்து முட்டுகிறது ...

வெண்பாக்கள் அருமை
இரா. முருகனின் எழுத்துக்கள் மலையாள கரை ஓரம் வாழ்ந்த தமிழர்களின் மொழியை அற்புதமாக சொல்லும்
அவரின் சமீபத்திய கதை http://www.thinnai.com/?module=displaystory&story_id=10808212&format=html

Anonymous said...

கதையும் அதன் வர்ணனைகளும் சூப்பர். இடையில் வரும் பாட்டுக்களும் சூப்பர். ஆனால் கதைகதையும்யின் முடிவுதான் தெரியவில்லை. ராஜா வந்தாரா

இரா. வசந்த குமார். said...

கமெண்ட்டிய அனைவர்க்கும் நன்றிகள் மற்றும் மன்னிப்புகள்.

@அகரம். அமுதா ::

இந்த கதையை முழுதும் முடித்து விட்டு உங்களிடம் காட்டி "சரியா பாருங்கள்?" என்று கேட்கலாம் என்றிருந்தேன். அதற்குள் நீங்களே பார்த்து விட்டு கேள்வி கேட்டு விட்டீர்கள். இருந்தாலும் கதையை முழுக்க முடித்து விட்டு தான் உங்களுக்கு பதில் எழுத வேண்டும் என்று பொறுத்திருந்தேன்.

இப்போது சொல்லுங்கள், "வெண்பாக்கள் ஓ.கே.வா..?"

@நாடோடி ::

கதை மலையாள்க் கரையோரம் நடக்கின்றது என்பதைக் காட்ட தான் சில மலையாள வார்த்தைகள், பெயர்கள். ஆனால் கதையை எழுதும் நானும், கதையைப் படிக்கும் நீங்களும் தமிழ் மட்டும் அறிந்திருந்தால் போதும் என்ற எண்ணத்திற்காகத் தான் அப்புவின் நினைப்பும், பேச்சுகளும், வர்ணனைகளும் தமிழில் எழுதி உள்ளேன்.

//
இரா. முருகனின் எழுத்துக்கள் மலையாள கரை ஓரம் வாழ்ந்த தமிழர்களின் மொழியை அற்புதமாக சொல்லும்
//


நான் மலையாளக் கரையோரம் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லப் புகவில்லை, இங்கு. கதை நடக்கும் தளம் மலை நாடு என்பதை லேசாக சொல்லி விட்டு, ஒரு Fantasy வகை கதையாகத் தான் இதை எழுத முயன்றேன். மலையாளக் கரைத் தமிழர்களைப் பற்றி எனக்கு கிஞ்சித்தும் தெரியாது என்பதால் அப்படி எழுத நினைத்தாலும் என்னால் இயலாது.

ஒரு சுற்றுலாப் பகுதியில் நடக்கும் சாதாரணமான நிகழ்ச்சி வெளிநாட்டார் வருகை. அதை வைத்து ஒரு Incarnation பின்புலமாக ஏற்றி, நான் தற்போது கற்று வரும் வெண்பா எழுதும் முறைகளைத் (நன்றி அகரம் அமுதா..!) தம்பட்டம் அடித்துக் கொள்ளவும் இக்கதை.

@அம்மா::

மிக்க நன்றி நீங்கள் பாராட்டியதற்கு! இப்போது கதையைப் படித்துப் பாருங்கள்...!

அகரம் அமுதா said...

அருமை,அருமை, எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை, கதையின் ஓட்டத்திற்கேற்ப வெண்பாவை அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள், எள்ளல் நக்கல் நகைச்சுவை இம்மூன்றையும் ஒன்றாகக் கலந்து வெண்பாவாக்கும் கலை கைவரப் பெற்றிருக்கிறீர்கள், மென்மேலும் முயன்றால் நிச்சயம் ஆகாசம்பட்டு சேஷாசலம் வெண்பாவில் புகழடையமுடியும். அத்தகுதி தங்களுக்கிருக்கிறது, வாழ்த்துகள்,

///////பேசு மொழி மாறு!//////
இவ்வீற்றடி தளைதட்டுகிறது, கவனிக்கவும்

இரா. வசந்த குமார். said...

அன்பு அகரம் அமுதா...

மிக்க நன்றிகள் தங்கள் வாழ்த்துக்களுக்கும், வருகைக்கும்..!!!

thamizhparavai said...

நண்பர் வசந்த்துக்கு....
'ராஜா வருகை' கதையை சமீபத்தில்தான் படித்தேன். தங்களின் வருணனைகள் என்னை கதை நிகழும் இடத்திற்கு வெகு அருகே இருத்தி விட்டது.
//சட்டென என் நினைவில்,

'அருகினில் பேரொரு தேரில்'...//
இவ்வரிகள் கூடத் தேவையில்லை. வாசகனுக்குப் புரியும்.
//அதன் பின் முகப்பில் "THE CHARIOT" என்று சிவப்பு பெயிண்ட்டில் பளிச்சிட்டது// இவ்வரிகளுக்குப் பின் 80 சதம் வாசகர்கள் மேலிருக்கும் வெண்பாவைச் சோதித்துச் சரிபார்க்கச் சென்றுவிடுவர்.
மழை பெய்யும் காட்சி என்னைப் பின்னுக்குத் தள்ளியது. மழையில், மின்சாரமற்ற இரவில் அரிக்கேன் விளக்கின் ஆடும் நிழலில் (ஒருவிதத் திகிலுடன்) கதையையும்,கற்பனையையும் ஓட்டிய காலங்கள் கண் முன்னே வந்து போனது.

thamizhparavai said...

நண்பர் வசந்த்துக்கு....
'ராஜா வருகை' கதையை சமீபத்தில்தான் படித்தேன். தங்களின் வருணனைகள் என்னை கதை நிகழும் இடத்திற்கு வெகு அருகே இருத்தி விட்டது.
//சட்டென என் நினைவில்,

'அருகினில் பேரொரு தேரில்'...//
இவ்வரிகள் கூடத் தேவையில்லை. வாசகனுக்குப் புரியும்.
//அதன் பின் முகப்பில் "THE CHARIOT" என்று சிவப்பு பெயிண்ட்டில் பளிச்சிட்டது// இவ்வரிகளுக்குப் பின் 80 சதம் வாசகர்கள் மேலிருக்கும் வெண்பாவைச் சோதித்துச் சரிபார்க்கச் சென்றுவிடுவர்.
மழை பெய்யும் காட்சி என்னைப் பின்னுக்குத் தள்ளியது. மழையில், மின்சாரமற்ற இரவில் அரிக்கேன் விளக்கின் ஆடும் நிழலில் (ஒருவிதத் திகிலுடன்) கதையையும்,கற்பனையையும் ஓட்டிய காலங்கள் கண் முன்னே வந்து போனது.

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

மிக்க நன்றிகள் தங்கள் கருத்துக்கு!

கொஞ்சம் கவித்துவமாகக் கதை சொல்ல முயலலாம் என்று எழுதியதில் வந்தது இது!