Saturday, September 09, 2006

அண்ணே..லிப்ட் அண்ணே..!

"ண்ணே.. அண்ணே.."

கொஞ்சம் வேகமாய்த் தான் போய்க் கொண்டிருந்தேன் போல. சடன் ப்ரேக் போட்டேன். யார்ராது கூப்பிடறதுனு பார்த்தேன். சின்னப் பய. நம்ம பக்கத்துல கூட நிக்கமாட்டாத பய. இருந்தாலும் அண்ணேனு கூப்பிட்டுட்டான். என்னன்னு தான் கேட்டுப் பாப்போமே..

"என்ன தம்பி..?"

"அண்ணே.. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா அண்ணே..!"

இவனுங்க எப்பவுமே இப்படித் தான். நான் எங்க, எப்ப வேகமாய்ப் போய்க்கிட்டு இருந்தாலும், இந்த மாதிரி லிப்ட் கேட்டுருவானுங்க.. இவனாவது பரவாயில்ல.. கொஞ்சம் மரியாதையா கேக்குறான். சில பயலுக இருக்கானுங்க.. எங்கயாவது கொஞ்ச நேரம் நின்னுட்டு இருந்தா போதும். அவனுங்களா வந்து உட்கார்ந்துருவானுங்க. அப்புறம் ஒண்ணும் பண்ண முடியாது. அவனுங்க எது பேசினாலும், பேசாட்டியும் மண்டையை ஆட்டிக்கிட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியது தான்.

தனியா எவனாவது மாட்டினா, போட்டுறனும்னு நெனைச்சிட்டே இருப்பேன். இவன் மாட்டியிருக்கான். இவனக் கேட்குற கேள்விகள்ல, எவனும் இனிமேல நம்மகிட்ட லிப்டே கேக்கக் கூடாது.

"என்ன.. தம்பி கேட்டே.."

"லிப்ட் அண்ணே..."

"தம்பி..உனக்கு லிப்ட் தர்றதுனால எனக்கு என்ன லாபம்..?"

"என்ன அண்ணே.. இப்படிக் கேட்டுட்டீங்க.. நான் கூட வரும்போது, உங்ககூட பேசிக்கிட்டே வருவேன். உங்களுக்கும் போரடிக்காம இருக்கும். அப்படியே நான் எதாவது கொறிச்சிட்டே வருவேன். உங்களுக்கும் தருவேன் அண்ணே.."

"ஐயையே.. நீ கொறிக்கறது எல்லாம் நீயே வெச்சிக்கோ.. எனக்கு வேணாம்...
என்னத் தொந்தரவு பண்ணாம நீயா போய்க்கக் கூடாதா.."

"என்ன இருந்தாலும் உங்க கூட லிப்ட்ல வந்து போகற சொகுசு மாதிரி இருக்குமா..?"

"அப்படி என்ன சொகுசு பார்த்துட்ட நீ.. எனக்குத் தெரியாம...?"

"என்ன அண்ணே.. இப்படிக் கேட்டுட்டீங்க.. முழுக்க பஞ்சு மாதிரி மெது மெதுனு, மணி வீட்டுல இருக்கற கரடி பொம்மை மாதிரி பொசு பொசுனு சோபா மாதிரி இருக்கு... அதுல உட்கார்ந்துட்டு வர்றது எவ்ளோ சுகமா இருக்கு தெரியுமா.. அப்புறம் கொறிச்சிட்டு வரும் போது, குப்பையெல்லாம் இங்கயே போட்டுறலாம்.. நீங்களும் கண்டுக்க மாட்டீங்க.." கண்ணடித்தான்.

பார்றா பயபுள்ளகளை.. இவ்ளோ நாள் இத்தனை நடந்திருக்கா.. நாளைக்கு சுத்தம் பண்ணும் போது சின்னசாமிகிட்ட சொல்லணும்.இனிமேல இவனுங்களுக்கு லிப்டே குடுக்கக் கூடாது.. குடுத்தாலும் உஷாரா இருக்கணும்.

"சரி.. இது தான் கடைசி தரம். இனிமேல என்கிட்ட லிப்டே கேக்கக் கூடாது."

"சரிங்கண்ணே.."

ன்ன இது..? நல்லா சுத்தம் பண்ண மாதிரி தான இருந்துச்சு.. நானும் பார்த்துக்கிட்டு தானே இருந்தேன். அப்புறம் ஏன் இன்னும் முதுகில குத்தற மாதிரி இருக்கு.. எல்லாம் இந்த லிப்ட் கேக்கற பயலுக பண்ணிட்டு போற வேலயாத் தான் இருக்கும். இனிமேல இவனுங்களுக்கு லிப்டே குடுக்கக் கூடாது.

ஆ.. அங்க நிக்கறது யாரு..? அவனே தான். நேத்து லிப்ட் கேட்ட அதே படுவா தான். வரட்டும். இன்னைக்கு அவன கேக்கற கேள்வில, மரத்துல இருந்து விழுந்து, அவன் சாகணும். ப்ரேக் போட்டேன்.

"அண்ணே.."

"வந்துட்டியாடா.. ஏண்டா நேத்து தான் நான் சொன்னேனே.. இது தான் கடைசி தரம் லிப்ட் குடுக்கறதுனு.. மறுபடியும் வெட்கங்கெட்டு வந்துருக்க. ஒரு தரம் சொன்னா புரியாத.. அரிசி தான் சாப்புடற..இல்ல வேற ஏதாவதா.?.."

"அண்ணே.. என்னண்ணே இப்படி பேசறீங்க.. நீங்க லிப்ட் குடுத்தாத் தான், நான் சாப்பிடவே முடியும்.."

" நான் தெனமும் இதே ரூட்ல வர்றது தெரிஞ்சு தானே, எங்கிட்டயே லிப்ட் கேக்கறே..? வேற யாருகிட்டயாவது கேக்கறயா..? இனிமேல உனக்கு லிப்ட் கிடையாது. ஏன்னா இனிமேல நான் வேற ரூட்ல போகப் போறேன். வர்ட்டா..?" கிளம்பினேன்.

"ன்ன சின்னசாமி..? வழக்கமா மேய்ச்சலுக்கு போற ரூட்ட விட்டு வேற எங்கயோ போற மாதிரி இருக்கு..?"

"ஒண்ணுமில்ல ராசண்ணே.. நம்ம காளை காங்கேயன் இருக்கான் இல்ல.. அவந்தான் பழய ரூட்ல போனா கொஞ்சம் மொரண்டு பிடிக்கறான்.. வேற ரூட்ல போனா கம்முனு வர்றான். பழய ரூட்ல குருவிங்க தொந்தரவு கொஞ்சம் ஜாஸ்தியா ஆகிடுச்சு போல. நம்ம காங்கேயன் முதுகுல இருந்து பூச்சியெல்லாம் சாப்பிட்டுட்டு, மேலயே எச்சம் பண்ணிட்டு போயிடுது போல.. அதுதான் கொஞ்ச நாள் வேற ரூட்ல போகலாம்னு இருக்கேன் அண்ணே.. சரி அப்ப நான் வரட்டுங்களா..?"

(தேன்கூடு - செப் 06 - போட்டிக்கான பதிவு.)

Friday, September 08, 2006

விரல் பிடிப்பாயா..?

டற்காற்று விட்டு விட்டு வீசிக் கொண்டிருந்தது. பொறிகின்ற நெருப்புக் கீற்றுகள் காற்றில் பரவிக் கொண்டிருந்தன. உப்புமணம் படர்ந்த கடற்கரையெங்கும் வந்து போன மனிதர்களின் நினைவாய் குப்பைகள். வெடித்த பலூன், ஈரச் சுண்டல் காகிதம், ஒற்றைச் செருப்பு, வறுத்த மீன் செதில்கள், காண்டம்...

வேத நாயகம் கண்களை மூடிக் கொண்டார்.

" ராசா..! எழுந்துருயா..! ரொம்ப வெசனப்பட்டு தூங்கிட்டப் போல..! உனக்கு பையன் பொறந்திருக்கையா..! உன்ற அய்யாவே மறுபடியும் பொறந்திருக்காரு போல..!"

"அம்மா..!"

"அழுவாதையா..! போயி புள்ள மொகத்தைப் பாரு..! அப்புடியே, தாத்தா சாடை..!"

மெல்ல, மெல்ல இருள் பரவத் தொடங்கியது. அலைகளில் நனைந்த கால்களில், முத்தமிட்டு ஒட்டின, வெள்ளை மணற்துகள்கள். லாந்தர் விளக்கின் வெளிர் மஞ்சள் ஒளியில், வறுத்த வேர்க்கடலையின் வாசனை மெல்லக் காற்றில் படர்ந்தது.

"டாடி..டாடி.."

"பார்த்து... மெதுவா வாப்பா.."

"டாடி..டாடி.. இந்த எக்ஸாம்லயும் நாந்தான் ப்ர்ஸ்ட் ரேங்க்.."

"குட் பாய்..வா அம்மாகிட்ட போய் காட்டலாம்.."

"டாடி..டாடி.. எனக்கு வேர்க்கடலை வாங்கிக் குடுங்க டாடி.."

"இது வேணாம்பா... வீட்டுக்குப் போனப்புறம் அம்மாகிட்ட சொல்லி நெறைய செஞ்சுத் தரச் சொல்றேன், என்ன.."

"போங்க டாடி.. அருண் அப்பா எல்லாம் எப்ப, எது கேட்டாலும் வாங்கித் தருவாராம்.. ஒவ்வொரு எக்ஸாமுக்கும் நியூ ஜாமெட்ரி பாக்ஸ், பென் எல்லாம் கொண்டு வருவான். நான் லாஸ்ட் டூ இயர்ஸா அதே பாக்ஸ் தான் யூஸ் பண்றேன்.."

"அப்பா இந்த தீபாவளி போனஸ் வரும் போது வாங்கித் தருவேனாம். வீடு வந்திடுச்சு..அம்மாகிட்ட போய் மார்க் ஷீட்டைக் காட்டு..."

"ஏய்யா.. என்னய்யா.. மொகமே கள இல்லாம இருக்கு.."

"அம்மா.. பையன் பள்ளிக்கூட பீஸ் ரொம்ப ஆகுதும்மா..."

"ஏய்யா.. இவ்ளோ செலவு செஞ்சு அந்தப் பள்ளிக்கோடத்துல தான் படிக்க வெக்கணுமா..? உங்க அய்யா எல்லாம் எங்க போயி படிச்சாரு..? நிம்மதியா இருந்திட்டு போகலியா..? "

"காலம் ரொம்ப மாறிக்கிட்டு இருக்குமா.. இப்பெல்லாம் இங்கிலீஸ் கண்டிப்பாத் தெரிஞ்சிருக்கணும்மா.."

"என்னவோ போப்பா.. செலவுக்கெல்லாம் என்னய்யா பண்ணப்போறே..?"

"மில்லுல கடன் தான் கேக்கணும்மா.."

லங்கரை விளக்கம், மேற்கில் இறந்த கதிரின் கடைசித்துளிகளை, ஒளித்து கடற்கரையெங்கும் மஞ்சள் ஒளியைப் பரப்பியது. துறைமுகத்தின் இரைச்சலை நோக்கி, தயங்கி வருகின்றன தூரத்துப் புள்ளிக் கப்பல்கள்.

"ன்னய்யா.. ஏதோ சொல்ல வர்ற போல இருக்கு.."

"அம்மா.. நேத்து ராத்திரி , நானும், அவளும் பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கோம்மா.."

"என்னய்யா..?"

"பையன் நல்லாப் படிக்கணும், நல்ல வேலைக்குப் போகணும்னா சென்னைக்குப் போய் நல்ல ஸ்கூல்ல சேக்கணும்னு, இவங்க ஸ்கூல் ப்ரின்சிபாலே சொன்னாரும்மா.. அத்னால நாம எல்லாரும் சென்னைக்கே போயிடலாம்மா.. எனக்கும் அங்க இன்னும் கொஞ்சம் அதிக சம்பளத்தோட வேலை கிடைக்கும்னு நெனைக்கிறேம்மா.."

" நீங்க எங்க வேணா போங்கய்யா... இந்தக் கிழவி இந்த ஊரை விட்டு நகராது.."

"அம்மா...."

"இல்லய்யா.. எனக்கும் வயசாயிடுச்சு... இனிமேல எதுக்குய்யா புது ஊரு எல்லாம்.. இங்கயே இருந்துக்கறேன்.. அப்பப்ப வந்து கெழவியப் பாத்துக்கய்யா.."

வேத நாயகம் எழுந்தார். கண்ணாடியைச் சரியாக அணிந்து கொண்டார். நிமிர்ந்து பார்த்தார். மெதுவாய்ப் படர்கின்ற இருளின் பின்புலத்தில் சச்சரவோடு பறக்கின்றன பறவைகள். 'பாவம் இருப்பிடத்திற்கும், வழ்வதற்கும் அல்லாடுகின்றன்' எண்ணியவாறு, தளர்வாய்ச் சாய்ந்திருந்த கைத்தடியை இறுக்கப் பற்றியபடி, மெல்ல நடக்கத் தொடங்கினார்.

"ப்பா.. அப்பாவ இந்த நிலைமையில விட்டுட்டு, நீ கண்டிப்பா சீமைக்குப் போய்த் தான் ஆகணுமா..?

"பாட்டி.. நீயும் அவர்கூட சேர்ந்துட்டு, இப்படி பேசாத.. பாரின் எல்லாம் போனா தான் நிறய சம்பாதிக்க முடியும்.. இங்கயே இருந்தா அவ்ளோ காசு கிடைக்குமா..?"

"ஏப்பா... அம்மாவும் மாரடைப்புல காலமாயிட்டா.. கெழவிக்கும் வயசாகிட்டே போகுது.. அப்பாவ இந்த நெலமையில நீயும் விட்டுட்டுப் போயிட்டயினா, எப்படிப்பா..?"

"பாரு பாட்டி... நீ என்னவோ சொல்லிக்கோ.. நான் அவளோட அமெரிக்கா போகத் தான் போறேன்.. அவருக்கு மாசாமாசம் பணம் அனுப்பிடறேன்.. வாங்கிக்கச் சொல்லு.. நான் அங்க போயிட்டு, முடிஞ்சா அவரையும் கூப்பிட்டுக்கிறேன்.."

வேத நாயகம் நிமிர்ந்து பார்த்தார். ஒரு இளைஞன் பைக்கில் வந்து கொண்டிருந்தான். கைகாட்டி நிறுத்தினார்.

"என்ன சார் வேணும்..?

"தம்பி.. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா..?"

"எது வரைக்கும் சார் போகணும்..?"

"அமெரிக்கா..!!"

(தேன்கூடு - செப் 06 - போட்டிக்கான பதிவு.)

Thursday, September 07, 2006

மம்மி..மம்மி..


"ம்மா..அம்மா.."

"என்னம்மா..?"

"அந்த Gangarooவால மட்டும் எப்படிம்மா, அதோட குட்டியை லிப்ட் பண்ணி, அதோட bagல வெச்சு அது கூடயே தூக்கிட்டு போக முடியுது..?"

"God அப்படி வெச்சிருக்காரும்மா..!"

"ஏம்மா, God நமக்கு மட்டும் அந்த மாதிரி bag தரலை.."

" நமக்கு அது மாதிரி life இல்லம்மா. அதனால தான் நமக்கு அந்த மாதிரி bag இல்ல.."

"அந்த குட்டி, அம்மா எடுத்துக்கிற முன்னாடி அம்மாகிட்ட என்னம்மா கேட்கும்..?"

"மம்மி, மம்மி.. 'கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா' மம்மினு தான் கேட்டிருக்கும்..."

"மம்மி, மம்மி.. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா...?"

"அடி மானே..."

"ம்மி, ப்ராமிஸா அந்த மான்குட்டி, அம்மா மான்கிட்ட இப்படி தான் பேசியிருக்குமா..?"

"ஆமா... கண்ணம்மா..."

" நீ எப்படிம்மா, அந்த அம்மா மான் பேசினது எல்லாம், அண்டர்ஸ்டேண்ட் பண்ணின...?"

"குட்டிம்மா.. ஒரு அம்மா நினைக்கிறது, பேசறது எல்லாம் இன்னொரு அம்மாக்கு நல்லா புரியும்மா...ஒ.கே... ஜூ க்ளோஸ் பண்ற டைம் ஆச்சு.. கிளம்பலாம் வா.. நாளைக்கு நாம ஜூக்கு வந்து அம்மா மயில், குட்டி மயில்கிட்ட என்ன பேசுதுனு சொல்லுவனாம்.."

"மம்மி.."

"என்னம்மா..?"

"மம்மி, மம்மி.. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா...?"

"என் கண்ணு.. வா அம்மா உன்னைத் தூக்கிக்கிறேன்..."

அம்மா என்னைத் தோளில் தூக்கிக் கொண்டார்.

(தேன்கூடு - செப் 06 - போட்டிக்கான பதிவு.)

காக்க காக்க = வேட்டையாடு விளையாடு Part 2 ?















நம்ம வலை நண்பர்கள் நிறைய பேரு வந்து, 'வே.வி' பத்தி நிறைய விமர்சனம் பண்ணியிருக்காங்க. நாம அந்த அளவுக்குத் தெரியாதுனாலும், வேற ஒண்ணு தோணுதுங்க.

ஆங்கிலப் படம் எல்லாம் பார்த்தீங்கன்னா, முதல்ல முதல் பார்ட் வரும், அப்புறம் செகண்ட் பார்ட் வரும். படம் அப்படியும் ஓடுதுனா மூணாவது, நாலாவதுனு எல்லாம் போவாங்க. உதாரணத்துக்கு, நம்ம Harry Potter படங்கள் எல்லாம்.

நம்ம கெளதம், ரொம்ப வித்தியாசம பண்ணியிருக்காருனு தோணுதுங்க. முதல்ல காக்க காக்க எடுத்திட்டு, அப்புறம் அதோட முதல் பாகமான வேட்டையாடு விளையாடு எடுத்திருக்காருனு தோணுதுங்க. ஏன் அப்படி?

1. வே.வி-ல ஜோதிகாவோட முதல் திருமணத்துல பிறக்கிற குழந்தை பேரு மயா. கா.கா-ல வர்ற நாயகி ஜோதிகா பேரும் மாயா. அந்த ஜோதிகா பொண்ணு இந்த ஜோதிகா -வா ஏன் இருக்கக் கூடாது?

2. வே.வி ஜோ யு.எஸ் ல இருந்து சென்னை வந்து, கமலோட வாழ ஆரம்பிக்கறாங்க. கா.கா. ஜோ சென்னைல தான் டீச்சர் வேலை பார்க்கிறாங்க.

3.வே.வி வில்லன் இளமாறன் மகனை (குருதிப் புனல்?) , போலிஸ் வேலையிலயே கமல் சேர்த்தி விடறார். அவர் தான் கா.கா -ல சூர்யா டீம்ல இருக்கார். ஆனாலும், மாயா ஜோவைப் பழி வாங்கிற 'உள் மன எண்ணத்தில்' தான் கா.கா. வில்லன் பாண்டியாகிட்ட, சூர்யாவைக் காட்டிக் கொடுத்திடறார்.

ஒரு பாயிண்ட் தான் இடிக்குதுங்க.

1. கா.கா-ல ஜோ சொல்ற 'பாண்டிச்சேரி அக்கா' கமல்-ஜோ -க்கு பிறந்த குழந்தையா இருக்கணும். ஏன்னா வே.வி. ஜோக்கு மாயாக்கு முன்னாடி குழந்தையில்லை. கமல் குழந்தையாகவும் இருக்க சான்ஸ் இல்ல. என்னா 5 மாசக் கர்ப்பத்துலயே கமல் முதல் மனைவி இறந்திடறாங்க.

ஆராய்ச்சி தொடரும்.

படையப்பரும், சில சந்தேகங்களும்..!

நேத்து 1015-வது தடவையா, தலைவரோட படையப்பா , லோகல் கேபிள் அலைவரிசையில் போட்டாங்க.. எல்லா வேலையும் ஸ்டாப் செஞ்சிட்டு, ( என்ன பெரிய வேலை, தூங்கறது தான்) ரூம் மேட்ஸ் 3 பேரும் உட்கார்ந்து பார்க்க ஆரம்பிச்சோம்... படம் கடைசியைப் பார்க்கும் போது, வழக்கமா வர்ற சந்தேகம் வந்து பேச ஆரம்பிச்சோம்... நீங்களும் கொஞ்சம் படித்துப் பாருங்க...

1: செளந்தர்யா சிகப்பு (சிகப்பா, சிவப்பா) சேலை கட்டியப்போ முட்ட வந்த மாடும், ரம்யா சிகப்பு சேலை கட்டியப்போ முட்ட வந்த மாடும் ஒரே மாடா..? இல்ல வேற வேறயா?

2: ஒரே மாடா இருக்க சான்ஸ் இல்ல. ஏன்னா, மாட்டோட ஆயுள் 10 வருஷம் இருக்கும்னு நினைக்கிறேன். அப்படியே இருந்தாலும், 18 வருஷத்துக்கு முந்தியே, அது 'கட்டிளங் காளையா' இருந்தது. இப்பொ அதுக்கு கண்ணெல்லாம் காலியாகி இருக்கணுமே?

3: வேற மாடா இருந்தா, எல்லா மாடுமா சிகப்பு சேலையப் பார்த்தா, மிரளும்?

1:இன்னொண்ணு கவனி. செளந்தர்யாக்கு கொடுத்த அதே சிகப்பு சேலை மாதிரி தான், ரம்யாவும் கட்டிருக்காங்க. அவங்களுக்கு குடுத்த சேலை, எப்படி இவங்ககிட்ட வந்தது?

3: அப்படியே வந்திருந்தாலும்,அது சிகப்பா இருக்க சான்ஸ் இல்ல. ஏன்னா தலைவர் தான், மாடு முட்ட வந்தப்போ, மஞ்சள் தண்ணியை சேலை மேல ஊத்திட்டாரில்ல?

2: ட்ரை வாஷ் பன்னியிருப்பாங்க டா.

1: இல்ல. ஒருவேளை, ஆடித்தள்ளுபடிக்கு அந்தப் புடவை எடுத்திருப்பாங்க. 'ஒண்ணு வங்கினா ஒண்ணு இலவசம்'னு ரெண்டு புடவை அதே சிகப்பு கலர்ல, எடுத்திருப்பாங்க. அதில ஒரு புடவை, செளந்தர்யாவுக்கு குடுத்திருப்பாங்க, இன்னொண்ணு ரம்யாவே வெச்சிருப்பாங்க.

3: ஏண்டா.. 18 வருஷத்துக்கு, முந்தி எடுத்த அதே சிகப்பு சேலையைவா கிளைமாக்ஸ்ல கட்டிட்டு வருவாங்க..?

2: ஆமாண்டா.. ஏன்னா அவங்க தான் 18 வருஷமா அவங்க ரூமை விட்டு வெளியவே வரலையே.. அப்புறம் எப்படி வேற துணி எடுத்திருப்பாங்க...?

இந்த ரேஞ்சிலயே, மொக்கை போயிட்டு இருந்திச்சுங்க... தாங்க முடியாம நாங்களே, டி.வி.யை அணைச்சிட்டு போய்த் தூங்க ஆரம்பிச்சிட்டோம்.

Tuesday, September 05, 2006

அன்புத் தோழி, திவ்யா..!

திவ்யாவை எனக்கு கொஞ்ச நாளாய்ப் பிடிப்பதில்லை. கொஞ்ச நாளாய் என்றால், அரையாண்டுத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப் பட்டதிலிருந்து. எப்போதும் நான் முதல் ரேங்க்கும், திவ்யா இரண்டாம் ரேங்கும் வாங்குவது என்பது எழுதப்படாத ஒப்பந்தம். இந்த தடவை அது மாறி விட்டது. திவ்யா என்னை விட நான்கு மதிப்பெண்கள் அதிகம்.

வெறும் நான்கு..! அதற்கே அப்பா என்னை பிலுபிலுவென பிடித்து விட்டார்.

"ஏண்டா..! நாலு மார்க் கம்மி..? இப்ப நாலு மார்க் கம்மி. இது அடுத்த பரிட்சையில நாற்பதாகும். அப்புறம் நானூறாகும்..உனக்கு இந்த தடவை சைக்கிள் கிடையாது..."

இது என்ன டைப் progression என்றே புரியவில்லை. கணக்கு டீச்சராய் வர வேண்டியவர், பேங்கில் உட்கார்ந்து ஊரார் பணத்தை எண்ணிக் கொண்டிருக்கிறார். சைக்கிள் வேற போச்சு...!!

கணக்கு டீச்சர்..! எல்லாம் அவரால் வந்தது தான். ஸ்டெப் மார்க் போடாம என்ன திருத்துகிறார்? ஒரு கணக்கிலே, - பார்க்காம விட்டுட்டேன். நியாயமா, அதுக்கு ஸ்டெப் மார்க் உண்டு. எனக்கு மட்டும் கிடையாதாம். ஏன்னா நான் நல்லா படிக்கிற பையனாம். இந்த careless mistake மறுபடியும் பண்ணக் கூடாதுனா, இந்த தண்டனை அனுபவிச்சே ஆகணுமாம்.

அவரால, இப்பொ ஈவ்னிங், ஸ்போர்ட்ஸ் கட்டு. சண்டே மூவி கட்டு. இப்பவே, ஸ்கூல்ல, பெரிய அவமானமா போச்சு. அவனவன் சிரிக்கிறான்.

அடுத்த பரீட்சையில, மட்டும் ரேங்க், எடுக்கலைனா, வீட்டை விட்டு ஓடிப் போயிட வேண்டியது தான். மெட்ராஸ் போயி, ஏதாவது ஒரு வேலை தேடி, அப்புறம் பெரிய பணக்காரனா ஆனப்புறம் தான் திரும்ப இங்க வரணும். போன தீபாவளிக்கு ரிலீஸான படத்துல தலைவர் அப்படித் தான் செய்வார். சூர்யாகிட்ட இதப் பத்திப் பேசணும். அவன் தான் ஆரம்பத்தில் இருந்து, இப்படி பண்ணலாம் என்று சொல்லிட்டு இருக்கிறான்.

ருணுக்கு என்ன ஆச்சு என்றே புரியவில்லை. நன்றாகத் தான் பேசிக் கொண்டிருந்தான். மேத்ஸ் டவுட் எல்லாம் சொல்லித் தருவான். எங்க வீட்டிலிருந்து, மூன்று தெரு தள்ளி தான் அவங்க வீடு. அவங்க வீட்டுக்கு அடிக்கடி போவேன். ஆன்டி செய்கின்ற இனிப்பு ஊத்தப்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவனும் எங்க வீட்டுக்கு வந்தான்னா சும்மா இருக்க மாட்டான். எங்க அம்மாவே ப்ரிபேர் பண்ற, ஊறுகாய் ஒரு மூடி காலி பண்ணுவான். அப்புறம், ரெண்டு நாள் ஸ்கூலுக்கே வராம டாய்லெட்லயே இருப்பான்.

சுதாகிட்ட பேசும் போது தான் தெரிந்தது. வருணை விட, நான் அதிக மார்க் எடுத்ததால் என் மேல் வருத்தமாக இருக்கிறான் என்று. இது அன்புவிடம், சுதா பேசும் போது சொன்னானாம். டேய் முட்டாள், இதுக்கு நான் என்னடா பண்ண முடியும்னு கத்த வேண்டும் போல் இருந்தது.

னக்கு ஒரே பயமாயிருக்கு...! நான் சூர்யாகிட்ட ஊரை விட்டு ஓடிப் போகிறதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது, திவ்யா வந்து விட்டாள். அவள் எதுவும் சரியாக கேட்கவில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால், அவள் அதைப் பற்றி எதுவும் என்னைக் கேட்கவில்லை. ப்ரீ- Annualக்கு எப்படி ப்ரிபேர் பண்ணுகிறாய் என்று தான் கேட்டாள். இருந்தாலும் அவள் எதுவும் வீட்டில் போய் சொல்லி விடக் கூடாதே..!

பிள்ளையாரே, அவள் அப்படி எதுவும் வீட்டில் சொல்லாமல் இருக்க வேண்டும். நான் தான் ப்ரீ- Annual -ல் first ரேங்க் வரணும். அப்படி நடந்தா, உனக்கு 108 தேங்காய் உடைக்கிறேன். ஏன்னா, தலைவர் அப்படித் தான் ஒரு வருஷம் பொங்கலுக்கு வந்த படத்தில் வேண்டிக் கொள்வார். அவர் வேண்டின மாதிரியே நடக்கும்.

ன் இந்த மாதிரி எல்லாம் திங்க் பண்றான்? யார் இந்த மாதிரி எல்லாம் சொல்லித் தருகிறார்கள்? நல்ல வேளை நான் கேட்டதால், நல்லதாகப் போனது. வேறு யாராவது கேட்டிருந்தால், நேராக வீட்டிற்குப் போய் சொல்லியிருப்பார்கள். அங்கிள் பெல்ட் பிய்யப் பிய்ய அடித்திருப்பார். வருண் நல்ல பையன். இந்த ப்ரி- Annualல அவன் first ரேங்க் வாங்கட்டும். அப்புறம், நம்மிடம் மீண்டும் நன்றாகப் பழகுவான். அப்போது, அவனைப் பேசித் திருத்த வேண்டியது தான்.

க்ஸஸ்...! நான் தான் இப்ப first ரேங்க்..!

நாந்தான்...! நாந்தான்...!

அப்பா சைக்கிள் வாங்கித் தந்திட்டார்..! ஆனா இதில் நான் first யாரை வெச்சு ஓட்டப் போறேன் தெரியுமா..? திவ்யாவைத் தான். ஏன்னா, சுதா நேத்து சொன்னாள். நான் எப்படி first ரேங்க் வாங்கினேன் என்று. திவ்யா நாலு 1 மார்க் கேள்வி வேண்டுமென்றே, கணக்குப் பரிட்சையில் விட்டு விட்டாளாம். என் ப்ரெண்டு திவ்யாவை விட்டு ஓடப் பார்த்தேனே...! சே...!!

"கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா..?" திவ்யா தான் கேட்கிறாள்.

உனக்கில்லாத்தானு சொல்லி விட்டு, சைக்கிளைக் கொடுத்து ஓட்டச் சொல்லலாம் என்று நினைத்தேன். பிறகு, அவளை front-ல உட்கார வைத்து, சைக்கிளை ஓட்டினேன். ஏன்னா, ஒரு தமிழ்ப் புத்தாண்டுக்கு வந்த படத்தில், தலைவர் அப்படித்தான் கதா நாயகியை வைத்து சைக்கிள் ஓட்டுவார்.

"றெக்கை கட்டிப் பறக்குதடா..."

(தேன்கூடு - செப் 06 - போட்டிக்கான பதிவு.)

கொஞ்சம் உடன் அழைத்துச் செல்வீர்களா..?

"அன்பே..!"

"இளவரசே..!"

"என் பெயரை இன்னும் ஒருமுறை கூறு..!"

"போங்கள் இளவரசே! தங்கள் பெயரை ஒருமுறை சொல்வதற்கே என்னை வெட்கம் பிடுங்கித் தின்று விட்டது. மீண்டும் ஒருமுறை சொல்வதென்றால்...! மேலும் உங்கள் பெயரைத்தான் சோழ மண்டலம் வரை பேசுகிறார்களே?"

"கண்ணே..! மற்றவர்கள் கூறும் போதெல்லாம், அதில் இளவரசருக்கான மரியாதை தான் இருக்கும். ஆனால், தேனமுது ஊறுகின்ற உன் செவ்விதழ்களைத் திறந்து, என் பெயரை நீ உச்சரிக்கும் போதெல்லாம், என் பெயரின் மீது எனக்கே காதல் கனிகிறதே, என் கனியமுதே..!"

"மாமல்லா..!மாமல்லா..!"

"இந்த சுகரைப் பாருங்கள். தென்னகமே போற்றிப் புகழ்கின்ற பல்லவ இளவரசரை அச்சமின்றி பெயர் சொல்லி அழைப்பதை..?"

"அதில் ஒன்றும் வியப்பில்லை, அமுதே! பாரெல்லாம் போற்றும் சிற்பக்கலையின் பேரறிஞர் ஆயனரின் மகள் சிவகாமியின் பேரன்பற்குரிய கிளியல்லவா..?"

"அதுதான் எனக்கும் வருத்தமாயிருக்கிறது."

"எது..?"

"ஆயனரின் மகளாய்ப் பிறந்தது. நானும் ஒரு கிளியாய்ப் பிறந்திருக்கலாம்.அப்படி பிறந்திருந்தால் என்னவெல்லாம் செய்வேன் தெரியுமா..? "

"என்னவெல்லாம் செய்வாய்..?

"சுகரைப் போல் ஆயனரின் உடைந்த கற்கள் நிரம்பிய குடிசையில் இருந்துகொண்டு, சக்ரவர்த்தித் திருமகனை நினைத்து நினைத்து வாடுகின்ற அவரது பெண்ணைச் சுற்றிக் கொண்டிருக்க மாட்டேன். மாறாக, தொண்டை மண்டலம் முழுதும் வலம் வருவேன். பின் நுரை ததும்பும் காவிரி பாயும் வள நடான சோழ மண்டலம் செல்வேன். கொங்கு நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, ஈழ நாடு எங்கும் பறந்து செல்வேன். எங்கெல்லாம் எங்கள் இளவரசரின் புகழ் பரவாமல் இருக்கிறதோ, அங்கெல்லாம் அவரது பெருமையை வாய் ஓயாமல் பரப்புவேன். பிறகு புலிகேசி ஆளுகின்ற கன்னட நாடு, கலிங்க நாடு செல்வேன். மாமன்னர் கர்ஷவர்த்தனர் ஆளும் வடனாடு செல்வேன். அங்கும் எங்கள் மாவீரர் மாமல்லரைப் பற்றி புகழ் பாடுவேன்..."

"சிவகாமி...! சிவகாமி..!"

"பொறுங்கள் அரசே.! இன்னும் முடியவில்லை.! இந்த பரந்த பாரதம் முழுதும் தங்களது புகழ் பரப்பியபின்னும் என் மனம் அமைதியுறாது. தேன் கோப்பையின் நுனியில் அமர்ந்து தேன் குடிக்கும் பூச்சி, பின் கோப்பையின் உள்ளேயே விழுந்து இன்பம் கொள்வது போல், உங்கள் புகழ் தேசமெங்கும் பரப்பிய பின், உங்கள் புகழாகவே மாறி விடுவேன். பின் இமயம் தாண்டி சீனம் செல்வேன். அங்கே இருக்கும் பஞ்சவர்ணக் கிளிகள் எல்லாம் என்னிடம் 'காஞ்சிப் பட்டு கொண்டு வந்தாயா' என்று கேட்கும். நான் கூறுவேன், காஞ்சிப் பட்டு எதற்கு, எங்கள் இளவரசர் மாமல்லரின் புகழ் பாடுகிறேன் கேளுங்கள். காஞ்சிப் பட்டை விடவும், அவரது புகழ் மேன்மையானது என்பேன். பின் காம்போஜம் செல்வேன். அங்கும் தங்களைப் பற்றியே பாடுவேன். பின் யவனம் செல்வேன். அங்கிருக்கும் நமது வணிகர்கள், தாங்கள் கூறியவற்றை மறந்து, நேர்மையற்ற வழியில் வணிகம் செய்தார்கள் எனில், அவர்களது செவியருகில் சென்று, உங்கள் பெயர் சொல்லி நினைவூட்டுவேன். பின் மல்லை திரும்பி, உங்களது புதிய புகழ்களைத் தெரிந்து, மீண்டும் தேசாந்திரம் புறப்படுவேன்...."

"சிவகாமி...! நீ போகும் இடமெல்லாம் உன்னோடு அழைத்துச் செல்வாயா..? நானும் உன்னுடன் வரலாமா?"

"பேரரசே..! தாங்கள் இவ்விதம் என்னிடம் கேட்க வேண்டியதே இல்லை. நான் செல்லும் வழியெல்லாம் , உங்களையும், உங்கள் நினைவுகளையும் சுமந்து கொண்டு தான் பறப்பேன். ஆனால் என்ன செய்ய..? ஆயனரின் மகளாய்ப் பிறந்து, மானிடப் பிறவி எடுத்து விட்டேனே...!"

"கண்மணி..! நாட்டிய உலகமே வியந்து போற்றும் அபினய சரஸ்வதி சிவகாமியாய் பிறந்ததற்காக நீ வருத்தப்படத் தேவையில்லை..! மாறாக, பெரும் சேனையுடன் வருகின்ற புலிகேசியை எதிர்க்கச் செல்லாமல் கோட்டைக்குள்ளேயே குறுகி அமர்ந்திருக்கின்ற இளவரசனாய், பிறக்காமல் போனோமே என்று மகிழ்ச்சியடை..!"

"இளவரசே..! இது என்ன பேச்சு.? மாமன்னர் இவ்வாறு கட்டளையிட்டுச் சென்றிருக்கிறார் எனில், அதில் ஏதேனும் பொருளிருக்கும் என்பது தாங்கள் அறியாததா..?"

"ஆயினும் இவ்வாறு, கோழையாய் அமர்ந்திருப்பதை எண்ணி, சில பொழுது, விரக்தியுறுகிறேன். மாறாக பரஞ்சோதியைப் போல் குடிமகனாய் பிறந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் அல்லவா..? பார், வந்த பொழுதிலேயே, போர்க்களம் சென்றுவிட்டான்"

"இருக்கட்டும்..! அவரைப் போல் தாங்கள் பிறந்திருந்தால் என்ன செய்வீர்கள், இளவரசே..?"

"உன்னைப் போல் தேசாந்திரம் கிளம்பி விடுவேன். மாமல்லனைப் போல் கோட்டைக்குள்ளேயே குடியிருக்க மாட்டேன்.."

"அன்பரே..! அவ்வாறு தாங்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம் என்னையும் அழைத்துச் செல்வீர்களா..?"

"ஐயம் ஏன் கண்ணே..? உயிர் இல்லாமல் உடல் மட்டும் பயணம் செல்ல முடியுமா..? எழுத்துக்கள் இல்லாமல் நூலினால் ஆன பயன் தான் என்ன ..?கொழுகொம்புடன் நிற்கும் தாமரை இல்லாமல் குள நீர் தேங்கி தான் என்ன?"

"இளவரசே..!"

"கேள் சிவகாமி..! இருவரும் ஏகாம்பர நாதர் கோயில் சென்று வணங்கி நமது பயணத்தைத் தொடங்குவோம். பிறகு வழியெங்கும் உள்ள திருக்கோயில்களை தரிசிப்போம். அங்கெல்லாம் உனது ஒப்பிலா நாட்டியத்தை நிகழ்த்துவாய். கோயில் சிற்பங்கள், பூத கணங்கள், தவ முனிவர் அனைவரும் கண் கொட்டிப் பார்க்கும் சிலையாவார்கள். நான் மட்டும் உனக்கு சுதி சொல்லிப் பாடுவேன். பின் சிராப்பள்ளி, தஞ்சை, நாகை செல்வோம். கோயில், கோயிலாய் சென்று, பின் சிற்றம்பலம் செல்வோம். 'ஆடற்கலையின் நாயகன்' சிற்றம்பலவாணன் முன் உனது திறமையைக் காட்டுவாய். பின் கடற்கரையோரமாய் செல்வோம். செழுமீன்களை நீ பார்ப்பாய். உனது ஒளிவீசும் விழிகளின் முன்னால், அவை கர்வபங்கப்படும். பின் சந்தன மரங்கள் நிறைந்த சேர நாடு செல்வோம். உன் நிறம் கண்டு, அந்த சந்தனத் தூள்கள், காற்றில் கரைந்து போம். பூவுலகில் பயணம் செய்து களைப்படைந்தாயா..? தேவேந்திரனைக் கேட்டு, புஷ்பக விமானம் பெறுவோம். பாரிஜாதம் நிறைந்த தேவலோகத் தோட்டம் செல்வோம். மாசறு பொன் போல் ஒளிரும் உன் திருமுகத்திலிருந்து, ஒளியெடுத்து, சந்திரனுக்கு வழங்குவேன். உன் பாதக் கழல் மணிகளுக்காக விண்மீன்களை எடுத்து வைப்பேன். சூரியனின் கதிர்களை எடுத்து, உன் கைவளைகளில் நிரப்புவேன். ஐராவதத்தின் மேல் அம்பாரியில் நாம் அமர்ந்து வானுலகைச் சுற்றி வருகையில், தன் துதிக்கை கொண்டு, பயணம் முழுதும் நம் மீது பன்னீர் தெளிக்க ஆணையிடுவேன். காஞ்சி திரும்பியதும், ஆயனரின் சிற்பக் கூடத்தில் நான் மாணவனாக மாறுவேன். நீ எனக்காக அபினயம் பிடிக்கின்ற தெய்வ ஸ்வரூபம் ஆவாய்...! அட, ஏன் சிரிக்கிறாய், சிவகாமி..?"

" நம் இருவரில் யார் முற்றிய பைத்தியம் என்று நினைத்தேன், இளவரசே..!"

" சந்தேகமென்ன..? இருவருமே தான்...!"

******
இது அமரர் கல்கி அவர்களின் 'சிவகாமியின் சபதம்' நாவலைப் பலமுறைப் படித்த பாதிப்பு. 'கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா' என்ற தலைப்பின் கீழ் கொணர்வதற்காக, இந்த கற்பனை உரையாடல். ஏதேனும் பிழையிருந்தாலோ, யார் மனமாவது புண்பட்டிருந்தாலோ மன்னித்து பொறுத்தருள்க.

(தேன்கூடு - செப் 06 - போட்டிக்கான பதிவு.)

இன்னா சார்?

இன்னா சார்? எப்டி இருக்க? கண்டுக்காம போற பாத்தியா? நாந்தான் சார், பெருமாளு? இன்னா, மறந்துட்டியா..? அல்லாரும் இப்டி தான் சார் இருக்காங்கோ. மனோகர் சார் கூட இப்டி தான். மொதல்ல பாக்க சொல்ல கண்டுக்காம போனாரு. வுட்ருவனா? கபால்னு புட்ச்சு பேசுனேன் சார்.

போன தபா, ஒரு வேலயா அடயாராண்ட போயிருந்தேனா, அங்க புட்ச்சேன் மனோகர் சார. இன்னா வூடுன்றெ நீ? சும்மா சோக்கா இருந்ச்சு சார். ஒரு காருல கெளம்பிக்கினு இருந்தாரு. காரு, நம்ம மைலாப்பூரு தேரு கணக்கா இருக்கு. உள்ள ஒரு குஜிலி வேற. செம குஜால்ஸ் தான்.

அப்டியே காரு முன்னாடி நின்னு, கூப்புடறேன் சார், மனோகர் சாருனு, கண்டுக்கவேயில்ல. சும்மா வுட்ருவனா? அப்பால வாத்தியார் கணக்கா பாஞ்சு போயி பேசினேனு வெய்யி.

எத்தினி தபா நம்ம கூட வந்திருப்பாரு. "பெருமாளு, பெருமாளு"னு எத்தினி தபா கூப்டுவாரு. அதெல்லாம் பளய ஸ்டோரியா ஆயிடிச்சு சார்.

எத்தினி பேர மேலயும், கீளயும் கூட்டிகினு போயிருக்கேன் தெரியுமா சார், உனக்கு? எவ்ளோ ஜபர்தஸ்தா இருந்தேன் தெரியுமா சார்? அல்லாரும் நின்னுகினு தான் வருவாங்கோ. நா மட்டுந் தான் சும்மா ராசா கணக்கா ஜம்முனு ஒக்காண்டு வருவேன்.

அப்பல்லாம் நான் போய் கை வெக்காட்டி, எவனும் லிப்டுல ஏற முடியாது , ஆமா.

ஒரு தபா என்ன நடந்துச்சு, நெனவு இருக்கா சார், உனக்கு. அட, பேப்பருல அல்லாம் வந்துச்சே.

கவர்னரு வந்து பத்தாவது மாடியில, ஏதொ ஆபீசு தொறக்கணுமாம். நெறிய ஆபீசு தெறந்துகினே இருந்தாங்கோ, அந்த பீரியடுல. அல்லா அபீசும் ஒயுங்கா வொர்க்காயி வேலயெல்லாம் சுளுவா முடிஞ்சுதானு மட்டும் கேட்டுடாத. அது வேற கத.

கவர்னரு வந்து வெயிட் பண்ணிகினு கீறாரு. அல்லாரும் பெருமாளு எங்கனு நம்மளத் தேடிகினுகீறாங்கோ. நமக்கு வூட்ல ஒரு காரியமாய்ப் போயிடுச்சு. அத்த முடிசிகினு வர கொஞ்சம் லேட்டாயிடுச்சு. அப்பால போயி லிப்டுல அல்லாரையும் மேல கூட்டிட்டு போனேனு வெய்யி.அப்பாலிக்கு தனியா ஒரு பாடு அல்லாருகிட்டயும் வாங்குனேன், அது வேற.

"லிப்ட் ஆபரேட்டருக்காக வெயிட் பண்ணிய கவர்னரு"னு பேப்பருல அல்லாம் வந்துச்சு சார். நம்ம வூட்டாண்ட அல்லாரும் நம்மல எப்டி பாத்தானுங்கங்கிற? சொம்மா ராசா மாரி.

அல்லாம் பளய ஸ்டோரி சார்.

இப்பெல்லாம் போற, வர்றவங்களே லிப்ட் ஆபரேட் பண்றாங்களாம். உனக்கு வேல இல்லனு தொரத்திட்டாங்க சார்.

போக வர்றச் சொல்ல, எதுனா பிராபளம், ரிப்பேரு ஆகிடுச்சுனு வெய்யி. அவுங்க இன்னா பண்ணுவாங்கோ? இல்ல, இன்னா தெரியும் அவுங்களுக்குனு கேக்குறேன்? எனிக்குத் தெரியும் சார். எங்க ஒயரு போகுது, எங்க மெயின் இருக்குனு எனிக்கி மட்டும் தான் சார், தெரியும். நீயும் இப்பல்லாம் அப்டிதான் போய்க்கினும், வந்திகினும் இருப்பனு நெனிக்கிறேன். கொஞ்சம் உசாரா இருந்துக்கோ.

அத்த வுடு சார்.

பெசன்ட் நகராண்ட, நமக்கு கொஞ்சம் வேல இருக்கு. கொஞ்சம் லிப்ட் குடுக்கிறயா சார்?

இன்னாடா நமக்கு லிப்டு குடுத்துகினு மேலயும், கீளயும் கூட்டிகினு போய்க்கினு இருந்தவன், நம்மகிட்டயே லிப்டு கேக்குறான்னு நெனக்காத.
"நம்ம பெருமாளு"னு நெனச்சுகினு லிப்டு குடு சார். மனோகர் சார் மாரி மறந்துடாத, என்ன?

வண்டியில ஏறிக்கவா, சார்?

(தேன்கூடு - செப் 06 - போட்டிக்கான பதிவு.)

கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?

கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?

விதை மண்ணைக் கேட்பதில்லை.
முட்டி மோதி,
மண்ணைக் கிழித்து
வெளிவருகிறது.

கதிர் இரவைக் கேட்பதில்லை.
ஆயிரம் கரங்கள் கொண்டு
வானை ஊடுறுவி
பகலாகிறது.

கடல் கரையைக் கேட்பதில்லை.
ஆண்டாண்டு காலமாய்
அலைகள் கொண்டு
உள் நுழைகிறது.

நாம் மட்டும் ஏன்
அடுத்தவரைக் கேட்டுக்
கொண்டேயிருக்கிறோம்?

விழித்து,
எழுந்து,
உழைப்போம்.

ஞான முனி
சொன்னபடி
நடப்போம்.

(தேன்கூடு - செப் 06 - போட்டிக்கான பதிவு.)