Thursday, August 06, 2009

அவசியம் காண வேண்டிய இரு தளங்கள்.

லை ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் காண வேண்டிய இரு இணையத் தளங்களைப் பார்ப்போம்.

இணைய கலைக் கூடம்.

ஹங்கேரியைச் சேர்ந்த இரு தகவல் தொழில்நுட்ப விஞ்ஞானிகள் கி.பி.1996-ல் ஆரம்பித்து தொடர்ந்து விரிவாக்கம் செய்து வரும் தளம் இது. பல வகையான காலகட்டத்தைச் சேர்ந்த ஓவியங்களை காட்சிக்கு வைத்துள்ளார்கள். 'மாய உலா' எனும் வகையில் நாம் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியங்களையும் காணலாம். மட்டுமல்லாது கலையின் மற்ற வடிவங்களான மர வேலைப்பாட்டு அற்புதங்கள், கண்ணாடியில் கண்கவர் சாதனைகள், துணியில் நெய்த நிகழ்ச்சிகள், மட்பாண்ட மற்றும் பீங்கான் செதுக்கல்கள் என்று ஒரு தனி துறை உள்ளது.

ஓவியர்களின் அகர வரிசையிலோ, தேடுபொறி மூலமாகவோ, காலகட்ட வகை வழியாகவோ, இரட்டை சாளரம் முறையிலோ எந்த வகையிலும் நாம் ஓவியங்களையும், ஓவியர்களையும் அலசிக் கண்டு களிக்கலாம். ஏற்கனவே சில உலா வரிசைகளை வைத்துள்ளார்கள். அதன்படியும் சென்று வரலாம்.

Gothic, Renaissance, Baroque, Neoclassicism, Romanticism and Realism கலைக் கால கட்டங்களைச் சேர்ந்த (1100 - 1850 A.D.) கிட்டத்தட்ட 22600 படைப்புகளை சேர்த்துள்ளார்கள். ஓவியங்கள் மேதோ, மேற்குறிப்பிட்ட கலை வகைகளின் மேலோ ஈடுபாடு கொண்டிருப்பவர்கள் ரசித்து ருசித்துப் பார்த்து மகிழுங்கள்.

வரலாறு

முதலில், வரும் சுதந்திர தினத்தோடு ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்கின்ற வரலாறு குழுவிற்கு என் வாழ்த்துக்கள்.

தமிழர்களின் கலை, கலாச்சாரத்தின் மிச்சம் இருக்கின்ற ஒரே கூறான கோயில்கள், அவற்றில் செதுக்கியிருக்கும் கல்வெட்டுகள், வாழ்வைக் காட்டும் சிற்பங்கள், இலக்கிய ரசனை என்று தேடித் தேடிப் பயணம் செய்வதைப் பதிவு செய்யும் தளம் இது. மாதம் ஒருமுறை மலரும் வரலாறு, மேலும் பல தொடர்களையும் சொல்லி கடந்த கால பெருமைகளை நமக்கு கட்டும் மிக உயர்ந்த பணியில் ஈடுபட்டிருக்கின்றது.

61 இதழ்கள்...910 கட்டுரைகள்..! அத்தனையும் அறிந்து கொள்ள வேண்டிய அறிவுச் சொத்துக்கள். நியாயமாக தமிழ் அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை இது. இந்தப் பணியின் அவசியத்தை தமிழ்ச் சமூகம் இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து தொலைத்தவற்றைத் தேடும் போது அறிந்து கொள்ளும்.

ஆகஸ்ட் 15, 2009ல் 'பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவையின் வரலாற்றுப் பெருவிழா 2009', தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தில் நடைபெற இருக்கின்றது. அடுத்த நாள் ஞாயிறில், சென்னையைச் சுற்றி இருக்கும் முக்கியமான சோழர் காலச் சரித்திர இடங்களுக்கு கூட்டிப் போகிறார்கள். ஆர்வமிருக்கும் பதிவர்களும் கலந்து கொண்டு படப் பதிவுகள் போட்டால், அயலூர்க்காரர்கள் மகிழ்வோம்.

Wednesday, August 05, 2009

வார்த்த வார்த்தைகள்.

ளுக்கொரு
திசையில்,
நேரத்தில்
நின்ற
மின் காற்றாடிகள்,
இயங்கிய போது
ஒரே வேகத்தில்
சுற்றியதாகத்
தோன்றியிருந்தன.

***

டையில்
தென்னம் பாளை
ஒரு கரப்பான்
போல்
கால் விரித்து
மிதந்தது.

கூரை கரைந்து
வீட்டு நிலை
மேல்
ஒண்டியது
சின்னக் குருவி.

துளை விழுந்த
மூங்கிலில்
கிளம்பியது
ஈரமாய்
ராகம்.

நிலவைக் கரைத்து
நேற்று இரவு
பெய்த மழை
இன்னும்
என்னென்ன
அடையாளங்கள்
விட்டுச் சென்றதோ,
என்னையும் கவிஞனாக்கி..!

***

கொடுத்த
நான்கு சீட்டுகளில்
முதல் சீட்டைப்
பிரித்த
கிளிக்கு ஆச்சரியம்.
அதில் என் முகம்.
தள்ளி விட்டு
எடுத்த அடுத்த சீட்டிலும்
என் முகம்.
மூன்றாவதில்...
என் முகம்.
கடைசியில் பார்த்தால்,
அதிலும் என் முகம்.
'ஏன் இப்படி..?
என்ன பலன்..?'
கேட்ட கிளிக்கு
பதில் சொன்னார்
கிளிகளின் கடவுள்.
'எனக்குத் தெரியாது.
இது
அவன் கவிதை!'

Tuesday, August 04, 2009

தலையெடு!

வுன் ஹால் ஏரியாவில் ஜில்லென்ற தயிர்வடைக்கு கங்கப்ரஸாத்திற்கு இரண்டாமிடம் தருகிறார்கள். ஜோனல் சந்திப்புகளுக்காக கோவை வரும் போதெல்லாம் நான் தங்கும் ஒரு டிங்ஜிங் ஹோட்டல் அது. போர்டிங் & லாட்ஜிங். அதன் காரை பெயர்ந்த கூரைகளும், மூட்டைப்பூச்சி மெத்தைகளும், பழுப்பு கரைந்த பாத்ரூம்களும் எனக்கு மனைவிமுகம் போல் பரிச்சயமாகியிருந்தன.

காலையிலேயே டயபடீஸ்காரன் போல் விட்டு விட்டு வானம் பெய்து கொண்டிருந்தது. ஒன்பது முப்பதுக்கு எனக்கு டிபார்ட்மெண்ட் மீட்டிங். முடித்து,'கணபதி'யில் ஒரு ஏஜெண்டைப் பார்த்து விட்டு, 15:50க்கு ஜங்ஷனில் மங்களூர் சென்னை எக்ஸ்ப்ரஸைப் பிடித்தால், ராத்திரி பத்து மணிக்கு திருச்சிக்குத் திரும்பி விட முடியும்.

வழக்கமான அலங்காரங்கள் அணிந்து கொண்டு, படிக்கட்டுகள் வழி இறங்கி ஹோட்டலுக்குள் செல்வதற்குள் லேசாக நனைந்து விட்டேன். சுழலும் எல்.ஈ.டி.க்களின் நடுவே ஃப்ரேமிட்ட பெருமாள். மல்லிகைக் கொத்து. சந்தனக் குப்பி. பில் சுமக்கும் சிரசாசன குத்தூசி. பாக்கெட்டுகளில் சில்லறைகளாக மைசூர்பாக், லட்டு, மிக்சர், பால்கோவா மற்றும் அருணாச்சலம்.

ஒற்றை வாரிசான மனைவியுடன் சீதனமாக வந்த ஹோட்டலுக்கு அவள் பெயரையும், பிறந்த மகன் பெயரையும் சேர்த்து வைத்து விட்டு, கல்லாவிலேயே உட்கார்ந்து விட்டான் என்பதாகப் பேச்சிருக்கிறது.

'என்ன இன்சூரன்ஸ்காரரே..! மதியானம் சாப்பாடு இங்க தான..?' கேட்டான்.

'ஆமாங்க...!' சொல்லிக் கொண்டே என் வழக்கமான சீட்டை அடைந்தேன். காலை நேரத்தில் கொஞ்சம் கூட்டம் அங்கே இங்கே சிதறி உட்கார்ந்திருந்தது. வெண்ணுருண்டை இட்லிகளும், தட்டை தோசைகளும், பூரி மசால்களும், சாம்பார் தளும்பத் தளும்ப பச்சை, செந்நிற சட்னிக் கூட்டணிகள், மெதுவடையுடன் தட்டுகள் டேபிளுக்கு டேபிள் போய்க் கொண்டும், வந்து கொண்டும் இருந்தன. சர்வர்கள் குறுக்கும் நெடுக்கும் கோடுகள் கிழித்து நடந்தார்கள்.

வழக்கமாக அமரும் டேபிளை அடைந்தேன். நான் வருவதை முன்பே பார்த்திருந்த பாபு, சப்பாத்தியும், கேரட் ஹல்வாவும் கொண்டு வந்து வைத்து சிரித்தான். இந்த கூட்டு எனக்குப் பிடிக்கும். சப்பாத்தியைக் கிழித்து, மாவை ஊதி விட்டு, ஹல்வாவைக் கொஞ்சமாய் விள்ளி, கிழிசலுக்குள் உதறி, பீடா போல் சுருட்டி, கன்னத்திற்கும், கீழ்ப்பற்களுக்கும் இடையில் அதக்கிக் கொண்டு அழுத்தினால், கசியும் ஹல்வ இனிப்பு முகம் முழுவதும் கிளைக்கும்.

'தட்...!'

கிறங்கியிருந்த நான் விழித்துப் பார்த்தேன். பாபு பின் தலையைத் தேய்த்துக் கொண்டிருந்தான். பக்கத்தில் கோபால் காலரை இழுத்து விட்டுக் கொண்டு நடந்தான். சீனியர் சர்வர். பாபுவைத் தலையில் தட்டியிருக்க வேண்டும்.

'ஏன்டா... ஆர்டர் கொண்டு வரும் போதே, தண்ணி எடுத்து வைக்க மாட்டியா..?' பாபு உள்ளே போனான். என்னை ஒருமுறை திரும்பிப் பார்த்தான். அவன் கண்களில் கொஞ்சம் ஈரம்.

இதை அடிக்கடி பார்த்திருக்கிறேன். காரணம் இருக்கின்றதோ, இல்லையோ கோபால் இவனைத் தலையில் ஒரு தட்டு தட்டுவான். சில சமயங்களில் போகிற போக்கில் ஒரு தட்டு..! வயதில் பெரியவனாக இருக்கும், தனக்கு சம்பந்தமில்லாத ஒரு காரணத்திற்காக ஒரு சிறு பயலை அதிகாரம் செலுத்துவது எனக்கு வருத்தமாயிருந்தது.

டம்ளர் கொண்டு வைத்து விட்டு, பாபு என் முகம் பார்க்காமலேயே வேறொரு டேபிளுக்குப் போய் விட்டான். ஒரு நாள் இந்த கோபால் வசமாக மாட்டும் போது, பாபு அவனை இதற்கெல்லாம் பழி வாங்குவான் என்று மட்டும் தோன்றியது. டிஃபன் முடித்து விட்டு கிளம்பினேன்.

மீட்டிங் மசாலா டீயோடு நிறைந்தது. ஏஜெண்ட்டைப் பார்த்து விட்டு, கமிஷன் விஷயமாகப் பேசி விட்டு, லாட்ஜுக்குத் திரும்பி, அறையைக் காலி செய்து, சாவியைக் கொடுப்பதற்காக ஹோட்டலுக்குச் சென்ற போது அருணாச்சலம் கத்திக் கொண்டிருந்தான்.

'எங்கடா போனான் கோபாலு..?'

எனக்கு முன்னால் ஒரு குடும்பம் நின்றிருந்தது. தலைவர் ரோஸ் சீட்டுக்கும், இளம்பச்சை சீட்டுக்கும் விளக்கம் கேட்டுக் கொண்டிருக்க, தலைவி மார் மேல் கிடந்த குழந்தையை எழுப்பி விட முயற்சிக்க, பெண் குழந்தை சமர்த்தாய்ப் போய் குமிழ் அமுக்கி கை கழுவிக் கொண்டு, சுமாராய் ஃபேன் ஓடும் ஸ்தலத்தில் சென்று அமர்ந்து கொண்டு, டேபிள் மேல் தாளம் போட்டது. குடும்பஸ்தர் தயிரில்லாத இளம்பச்சை சீட்டுகள் இரண்டு வாங்கிக் கொண்டு, பெண்ணுக்காக மட்டும் ஒரு ரோஸ் சீட்.

'பால் இன்னும் வரலைங்க. சொசைட்டி வரைக்கும் போயிருக்காரு..! உங்ககிட்ட சொல்லலீங்களா..?' சமையற்காரர் பனியனில் செருகிய துண்டில் கைகளைத் துடைத்து வந்தார்.

'வரட்டும் அவன்...! ஒரு வார்த்தை சொல்லாம அவன் இஷ்டத்துக்கு போறான்..வர்றான்..! இன்னியோட கணக்க தீத்து முடிச்சர்றேன்..' என்னைப் பார்த்தும் அவனது வழக்கமான சிரிப்பு முகமூடியை மாட்டிக் கொள்ள முடியாமல் நெளிந்தான்.

'என்ன அதுக்குள்ள காலி பண்றீங்களா...? மறுபடியும் எப்ப வருவீங்க..?' என் வழக்கமான பிங்க் சீட்டைக் கிழித்துக் கொடுத்தான்.

'தெரியலீங்க. மீட்டிங் போட்டா வர வேண்டியது தான்..' நான் எப்போதும் அமரும் டேபிளை அந்தக் குடும்பம் ஆக்ரமித்திருந்தது. பாபு தட்டுக்களை எடுத்து வந்து கொண்டிருந்தான். அவன் முகத்தில் ஒரு சிரிப்பு பரவியிருந்தது. குழாய்க் குமிழைத் திருகியபடி ஒரு டேபிளில் அமர்ந்தேன். பாபுவின் சிரிப்புக்கு என்ன காரணம் இருக்க முடியும்..? கோபால் இல்லாததாகத் தான் இருக்க முடியும். இப்போது என் முன்னால் அவனை அடிக்க ஆள் இல்லை அல்லவா..?

'சார் மீல்ஸா..?' ஒரு குட்டிப் பையன் என் கையில் இருந்த சீட்டை வாங்கிப் போனான். இன்று தான் சேர்ந்திருப்பான் போல. புதிதாய் இருந்தான். கொஞ்ச நேரம் கழித்து காலி தட்டைக் கொண்டு வந்து வைத்தான். சாதக் குண்டாவைக் கஷ்டப்பட்டு தூக்கிக் கொண்டு வந்து என் தட்டில் எடுத்து வைத்தான். கனம் தாங்காமல் 'பொத்'தென்று வைத்து விட, ஒரு கட்டி உருண்டு வெளியே போய் விழுந்தது.

பக்கத்து டேபிளில் இருந்து பாபு வந்தான். வலது கை விரல்களை ஒன்றாக்கி, குட்டிப் பையனின் தலை மேல் ஒரு வீசு வீசினான். பையன் கண்களில் பூச்சி பறந்தது. பாபு என்னைப் பார்த்தவாறே காலரை இழுத்து விட்டுக் கொண்டான்.

Monday, August 03, 2009

மொக்ஸ் - 03.aug.2K9

பிடித்த நான்கு கவிதைகளைச் சொல்லிப் பார்க்கிறேன்.



வெண்பா பயிற்சிப் பதிவில் எழுதிய சில வெண்பாக்கள்.

ஈயூர இல்லை இடம் ::

புசுபுசு பூனை புதிதான கோழிச்
சிசுவைத் தடவிச் செவியில் - கிசுகிசுப்பாய்
"நீயும்நா னும்நட்பா லொன்றிட்டால் நம்மிடை
ஈயூர இல்லை இடம்!"

நெருப்பில் விழுந்த நிலவு ::

விரலைத் தொடுகையில் கைநுனியில் வேர்க்கக்
குரலைத் துழாவநா கோர்த்து - "வரலை..!"
மறுத்துக்கொண் டேதுடித்து மாரிட்சா யும்பெண்,
நெருப்பில் விழுந்த நிலவு.

நிலவில் பிறந்த நெருப்பு ::

சந்த்ரயனில் முன்சாமி சல்லென்று போனார்.மின்
எந்திரங்கள் பார்த்துக்கொள் ளெந்த பயமுமின்றி
வந்துசேர்ந்தார் முன்சாமி. வாழ்த்தி நிலாராசா.
"இந்தியா வில்லெல்லோ ரும்நலமா?" கேட்க

"குஜாலாத்தான் கீறாங்கோ. குப்பையெதும் இல்ல.
உஜாலாவுட்(டு) சுத்தஞ்செஞ் சாப்ல பளிச்னு
மஜாவா இருக்காங்கோ. குப்பையள்ற காண்ட்ராக்ட
ராஜா எடுத்தீங்க. என்னெதுக்கு கூப்ட்டீங்(க)?"

"பலகாலம் சூரியன் வெண்ணொளி தந்தான்.
சிலநாளாய்ச் சொந்தமாய்ச் செவ்வொளிக்கு ஆசை."
"கலங்காத!" தீப்பெட்டி தேய்க்க அதுதான்
நிலவில் பிறந்த நெருப்பு.



குறும்படக் கருத்திற்காக எழுதியது ::

ஆடை அவரவர் ஆசை. அதற்காக
மேடையில் மென்னடை போடுகின்ற - பேடையின்
போதையுடை யும்வேண்டாம். எவ்வுடையி லும்வாழ்வுப்
பாதையில் நல்லதாய் நட.

இலவச இணைப்பாக சமீப கதிரவ கிரகணம் பற்றி ::

சூலைத்திங் கள்நான்காம் வாரபுதன் இவ்வாண்டு
காலை. கிழக்கினில் வானத்து - ஆளைப்
பொறுப்பைத் தொடங்கத் தடுத்ததார் என்றால்
நெருப்பை மறைத்த நிலவு.