Friday, August 25, 2006

தமிழ்



இதற்குத் தலைப்பு வைக்கும் தகுதி எனக்கில்லை. எனவே "தமிழ்" என்றே தலைப்பிட்டேன்.

படம் உதவி நன்றி : வேந்தன்.

எதுக்கு சண்டை..?


"அப்பா வந்தாச்சு..அப்பா வந்தாச்சு.."

"பன்னி..ஏன் அதுக்கு இப்படி கத்திக்கிட்டே வர்ற..."

"அப்பா, என்ன வெயில்..என்ன வெயில்.."

"இந்தாங்க...தண்ணி குடிங்க.."

"அப்பா..அப்பா.. நான் சொன்ன ஊதாக் கலர் பாவாடை வாங்கிட்டீங்களா..?"

"பூரணி.. அனுவுக்கு மட்டும் தான் இப்ப வாங்கிட்டு வந்திருக்கேன்...உனக்கு பொங்கலுக்கு வாங்கித் தரேம்மா.."

"போங்கப்பா..."

"எனக்கு மட்டும் துணி...அக்காவுக்கு இல்ல...ஜாலி..வெவ்வெவ்வெ..."

"ஏங்க.. பூரணிக்கும் வாங்கிட்டு வந்திருக்கலாம்ல..."

"புரியாம பேசாத...குடுத்த போனஸ்ல அவ்ளோ தான் வாங்க முடிஞ்சது..."

"அப்பா..எனக்கு வாங்கிட்டு, அப்புறம் சின்னதா போனப்புறம், அவளுக்கு குடுக்கலாம்ல..."

"பாவம்மா சின்னப் பொண்ணு..."

"எப்பப் பாத்தாலும் சின்னப் பொண்ணு...சின்னப் பொண்ணு..."

"உனக்கு பர்த்டே ட்ரெஸ் இருக்குள்ள, அதைப் போட்டுக்கயேம்மா..."

"போங்கப்பா..."

***

"அப்பா.. நல்லாருக்கா.."

"சூப்பரா இருக்குடா அனு... பார்த்து பட்டாசு வெடிக்கணும்"

"சரிப்பா.."

"அக்கா.. நல்லாருக்கா.."

"போடி..."

"வெவ்வெவ்வெ.."

"என்னங்க பாவம் பூரணி...பண்டிகையும் அதுவுமா.. முகத்தைப் பாருங்க..."

"என்ன பண்ணச் சொல்ற கமலா..? பூரணி, இங்க வா..இந்த மத்தாப்ப பிடிச்சிட்டு நில்லு..அப்பா உள்ள போய்ட்டு வர்றேன்"

"சரிப்பா.."

"அனு பார்த்து...பார்த்து...அனூஊஊ."

"என்னாச்சு...."

"ஆ..ஆஆஆ.."

"அம்மா...அவ நகந்துட்டே வந்தாளா...அனு பாவாடைல தீ பிடிக்க இருந்துச்சும்மா... நல்ல வேளை நான் போய் அனுவத் தூக்கிட்டு வந்திட்டேன்...அப்பா எவ்ளோ கஷ்டப்பட்டு இந்த பாவாடையை வாங்கிருப்பார் இல்லமா..?"

"என் செல்லக் குட்டி..."

இச்...இச்...இச்...

"அக்கா...இந்தா ஜாமூன் சாப்பிடு...."

" நீயும் சாப்பிடு அனு...."

****

ஏஞ்சாமி...


"ஏஞ்சாமி...இன்னும் வயிரு நோகுதா..?"

"ஆமாம்மா..."

"ஏனுங்க..குழந்தைக்கு ஒடம்பு சரியில்ல பாருங்க... வைத்தியர்கிட்ட கூட்டிட்டுப் போங்க...இன்னிக்கு பள்ளிக்கோடத்தோக்கு விடுப்பு எடுத்துக்கட்டுங்க..."

"அம்மணி..அவன் நல்லா ஏமாத்தறான்..எல்லாம் கொரத்தனம்.."

"இல்லீங்பா.. நெசமாலும் வயிரு வலிக்குதுங்பா..."

" நேத்து என்னடா சாப்பிட்ட...அம்மணி, நேத்து என்ன போட்ட..?"

"முந்தானேத்து பழைய சாதம், நாந்தாங்க புழிஞ்சு சாப்பிட்டேன்...புள்ளைக்கு தோசை தான் கொடுத்தேங்க.."

"பின்ன எப்படி இவனுக்கு நோக்காடு வந்திச்சு..?"

"அம்மா..."

"ஏனுங்க..பையனே நோவுல கிடக்கான்..அவனப் போய் கேள்வி கேட்டு நோண்டிக்கிட்டு..?"

"சரி..சரி.. நான் வைத்தியர்கிட்ட கூட்டிட்டுப் போறேன்..இன்னிக்கு மட்டும் விடுப்பு எடுத்துக்கிட்டும்.."

***

"அம்மா.. நான் குமரேசன் வீட்டுக்கு போய் கொஞ்சம் கணக்கு எழுதிட்டு வர்றேன்.."

"கண்ணு..பதினோரு மணி வெயில் இப்படி அடிக்குது..சூடு தாங்க மாட்டியேப்பா..."

"பரவாயில்லமா..படிப்பு தான முக்கியம்.."

"என் ராசா..உன்னை போய் அய்யன் தப்பா நெனைசிடுச்சே..ஏங்கண்ணு மத்தியானம் சாப்பாட்டுக்கு வந்துருவல..?"

"இல்லமா.. குமரேசன் வீட்டுலயே சாப்பிட்டுக்கிறேம்மா.."

"சீக்கிரம் வந்திடு கண்ணு.."

***

"டேய்..ஏண்டா இவ்ளோ லேட்டு..?"

"எங்கய்யன் காட்டுக்குப் போக நேரமாயிடுச்சு... நீங்க எல்லாம் என்னடா வீட்டுலச் சொன்னீங்க.."

" நான் காச்சல்... நீ என்ன சொன்ன..?"

" நான் வயித்து வலினு சொன்னேன்டா..சரி ஆரம்பிச்சிட்டீங்களாடா..எப்ப ஆரம்பிச்சீங்க...எத்தன ஓவர் ஆச்சு..?"

"ஆமா.. நீ வர்ற வரைக்கும் காத்திருந்தா, வெளங்கனாப்ல தான்..பத்தரை மணிக்கே ஆரம்பிச்சிட்டோம்..எட்டு ஓவர் ஆச்சு..."

"சரி.. நான் இப்ப எங்க நிக்கறது..?"

"லெக் அம்பயருக்குப் பின்னாடி போய், அந்த புதர் தெரியுதுல்ல... அங்க போய் நில்லு.."

"இந்த அசிங்கம் எல்லாம் எப்படா சுத்தம் பண்ணுவாங்க... நாமளாம் இங்க வெளயாடுவோம்னு தெரியாதா அவனுங்களுக்கு..?"

"போய் நில்லுடா..வர்றதே லேட்டு..வெட்டிக்கதை பேசிக்கிட்டு..."

"டேய்.. நீ போய் ஒழுங்கா பேட் பண்ணு..ஓவராப் பேசாத...உன் அவுட் எங்கைல தாண்டே..."

"பாத்திருவம்டா.."

****

"மச்சான் எழுந்திரு..ஏந்திரு மச்சான் ஏந்திரு.."

"டேய்..மணி என்ன ஆச்சு..?"

"ஒன்பதே கால் ஆகுது...பர்ஸ்ட் அவர் சர்க்யூட்ஸ்2 டா..ப்ராக்ஸி எல்லாம் குடுக்க முடியாது..கண்டுபிடிச்சுடுவார்டா.."

"என் கண்ணுள்ள...எப்படியாவது குடுத்திடுடா.."

" நீ வரலையா அப்ப..?"

"டேய்.. நான் வந்து படுத்ததே நைட் மூன்றரைக்குடா..."

"பாவி..என்னடா பண்ணே, அவ்ளோ நேரம்..?"

"வெட்டி மொக்கை தான்... சிக்ஸ்த் ப்ளாக்ல போய் பாரு..38லயும், 40லயும் இன்னும் நாலு பேரு தூங்கிட்டு இருப்பாங்க.."

"சரி, அடுத்த பீரியடாவது வந்திடுவயில்ல..?"

"மச்சான்..ஒண்ணு பண்றியா..?"

"என்ன..?"

"கரெக்டா 12 40க்கு வந்து எழுப்பி வுடறியா..?"

"எதுக்கு சாப்படறதுக்கா?. நீ திருந்தவே மாட்டே.."

"ரொம்ப நன்றி மாமா.."

****
"Anu..getup..It's time to go to school.."

"mummy...."

"what..?"

"i feel small pain in stomach.."

"really...?"

"yes mom...aah...!!"

"Dear..come here and see your child...she refuses to go to school.."

"anumma..whats the problem..?"

"daddy...i feel uneasy...stomach pain.."

"ஏஞ்சாமி...இன்னும் வயிரு நோகுதா..?"

*************

Thursday, August 24, 2006

"ங்கா...ங்கா.."


"ங்கா...ங்கா.."
"என்னப்பா....பப்பு மம்மம் வேணாமா..?"

"ங்கா...ங்கா.."
"அசம் மம்மம் வேணுமா..?"

"ங்கா...ங்கா.."
"தச்சு மம்மம்..?"

"ங்கா...ங்கா.."
"இப்ப பப்பு மம்மம் சாப்பிடுவியாம். அங்க நிலா தெரியுதில்ல..அம்மா அங்க கூட்டிட்டு போவேனாம்.."

"ங்கா...ங்கா.."
"இந்த ஒரு வாய் மட்டும் சாப்பிடுவியாம்..."

"ங்கா...ங்கா.."
" நல்ல குழந்த இல்ல....இந்த ஒரு வாய் மட்டும்..."

"ங்கா...ங்கா.."
"ஓ.. நிலால இருக்கிற பாட்டிகிட்ட கூட்டிட்டு போகணுமா..?"

"ங்கா...ங்கா.."
"என்ன..? பெரியவனா ஆனப்புறம் நீயே போயிடுவியா..?"

"ங்கா...ங்கா.."
"அம்மாவையும் கூட்டிட்டு போவியா...?"

"ங்கா...ங்கா.."
"இந்த ஒரு வாய் சாப்பிட்டா தான், நானும் வருவேன்.."

"ங்கா...ங்கா.."
" நல்ல பையன்...சொன்னவுடனே சப்பிட்டுட்டியே..."

இச்..இச்..இச்...

"ஏண்டி...? உங்கப்பன் கல்யாணத்துக்கு போடறதா சொன்ன நாலு பவுன் சங்கிலி எப்ப டி போடுவான்..? உங்கப்பன் சோறு தான் சாப்பிடறானா, இல்ல வேற ஏதாவதா..?"

' தம்பிக்கு பீஸ் கட்ட செலவாயிடிச்சுனு அப்பா சொன்னாரே..இந்த மனுஷனுக்கு இதை எப்படி புரிய வெப்பேன்...!'

மெளனம் அடர்ந்தது.



பெரும் சத்தத்தோடு பெய்கின்ற பெருமழை, பாறைகளை உருட்டித்தள்ளிப் பொழிகின்ற பேரருவி, வாடைக் காற்றுக்கு வளைந்தாடுகின்ற வயல், முன்னிரவுக் காற்றுக்குப் பேயாட்டம் ஆடுகின்ற தென்னை மரங்கள் தாண்டியும் மெளனப் பொழுதுகளால் நிரம்பி நகர்கிறது, வாழ்க்கை.

பள்ளி செல்கையில் வரப்பின் ஓரம், இரு பாம்புப் புணர்வைக் கண்டதில் துவங்கின என் மெளனக் கணங்கள்.

புத்தகங்களை மாற்றிக் கொள்கையில், உரசிய விரல்களை சடாரென விலக்கி , தோழி முகம் பார்க்கையில் எழுந்த மெளனம், வெட்கம் எனப் பெயர் கொண்டது.

வாத்தியார் மறைவுக்கு, வழிபாட்டுக் கூட்டத்தில் அஞ்சலி செலுத்துகையில் நிறைந்த மெளனம் மரியாதை என்றானது.

ஆசிரியர் வரும் வரை அமைதியாய் இருக்கச் சொல்ல்லி, வகுப்பில் தோன்றிய மெளனத்திற்கு பயமே மூலமானது.

இரு நாய்களின் உறவைக் காண நேர்ந்து, உடன் வந்த தம்பியின் முகம் காண எழுந்த சங்கடத்திற்கு, மெளனமே முலாம் பூசியது.

சில காதல்களை உளறி, இழந்த தோழிகளின் முகம் பார்க்க முடியாமல், பழகிய மெளனம் மட்டும் வலி என்றானது.

குறிஞ்சி.



எண்ணி விட வேண்டும் இந்த விண்மீன்களை, ஒரு நாளைக்கேனும்.

கொண்டையில் மின்பூ அணிந்த, ஒற்றைக் கோபுரம், பனிப்பழிவில் நனைகிறது. சரம் சரமாய் மினுக்கிற ஒளித்துளிகள் கொண்ட கோயிலில் ஒரு பண்டிகை நாளின் முன்னிரவு அது.

படர்ந்திருக்கும் அடிவார நகரின் செயற்கை ஒளிச்சிதறல்கள்.

பிரம்மாண்டமாய் விரைந்து செல்லும் மேகங்களுக்கிடையே எட்டிப் பார்க்கும் இயற்கை ஒளித்தெளிப்புகள் தீண்டுகின்ற, ஒரு குன்றின் மேல் அமர்ந்திருக்கின்றோம்.

மற்றுமொரு வள்ளிக் கதையில் ஆழ்ந்திருக்கும் பெரியவர்களின் மடியில் தூங்கிக் கொண்டிருந்தனர், குழந்தை முருகனும், குறவள்ளியும்.

பெளர்ணமி நிலவின் வெண்ணொளியை உறிஞ்சி நகர்கின்றன, பெரும் கரும்பூத மேகங்கள்.

செதுக்கிய பின் படிக்கட்டுகளான பாறைகளின் இடுக்குகளில் இருந்து எட்டிப் பார்க்கிறது இருள்.

இப்படியும் அமைதியாய் நீ அமர்வாய் என முன்பே அறிந்திராதலால், ஊதற்காற்றுக்கு ஆடுகின்ற பெரு மரங்கள் நிறைந்திருக்கும் இம்மலைக்கு வர பெருமுரணாய் உள்ளது.

முன்பொரு பெரும்பனிக் காலத்தில், உன் கூந்தல் சரிக்கும் பூக்கள், மலைச்சரிவின் பாறைகள் என்று சொன்னதில், மேலுமொரு முறை சிரித்தாய். மற்றுமிரு பாறைகள் உருண்டன.

வெள்ளி மாலைகளில், வள்ளியைக் காண ஒரு கையில் தட்டுகளோடு, மறு கையில் ஒரு சிறுமியோடு வருவாய்.

காத்திருக்கும் என்னைக் காட்டி, பூதம் என்பாயோ, பூச்சாண்டி என்பாயோ, பயம் ஒட்டியிருக்கும் கண்களால் தான் என்னை இன்னும் பார்க்கிறாள் அவள்.

ஒரு மதியப் பொழுதில், நாம் தனித்து அமர்கையில், தூரத்தில் தெரிந்த மயிலைக் காட்டி நீ பரவசமடைந்தாய்.
அருகில் இருந்த மயிலைக் கண்டு, நான் ஆனந்தப்பட்டேன்.

...................................

நெருங்குகிறது, உனது திருமண நாள், நமது அல்ல.

முன்பனி இரவில் தனித்து விட்டு,கிளம்பி விடுகிறாய். இனி வெளிச்சம் இல்லை என்பதாய், நீள்கிறது இரவு.

உறைந்த புன்னகையும், ஒளிர்ந்த நகைகளும் அணிந்த சிலைகளின் அறையெங்கும் கவ்விக் கொள்கிறது, எண்ணெய்த் திரி விளக்குகள் பொறிகின்ற, காரிருள்.

காய்ந்த மாலைகளும், ஓய்ந்த சத்தங்களும், சாய்ந்த பந்தல்களுமாய் நகரப் போகின்றன நாளையப் பொழுதுகள்.

முடிந்து போன பண்டிகைகளின் மிச்சம் போல் ஒட்டியிருக்கும், கழிந்து போன என் கண்ணீர்த் துளிகளின் தடங்கள்.

உன் வார்த்தைச் சூட்டில் பொறிந்த கொப்புளங்களாய் மினுக்கும்,
இந்த விண்மீன்களை எண்ணி விட வேண்டும், ஒரு நாளைக்கேனும்...!

Wednesday, August 23, 2006

மற்றும் சில வரிகள்...!



ஒரு மழை நாளிரவு.

ஒரு
மழை நாளிரவில்
ஒற்றைக் குடைக்குள்
நாம்
நடக்கையில்,
நம்மோடு
நனைந்து கொண்டே
வந்தது
நம் காதல்.

காதல் புதையல்.

நம்
காதல் புதையலைக்
காக்கின்ற
பூதங்களாய்
உனது நாணமும்,
எனது அச்சமும்.

கனம்..!

குச்சிகளால்
குத்தி விளையாடிய
ஓணானின் வலி,

இறுக்கக் கட்டிய
பட்டாசு வாலோடு
கழுதையின் கதறல்,

குறிபார்த்து
விட்டெறிந்த
கல் பட்ட
தெரு நாயின் ஓலம்,

உண்டி வில்லால்
அடிபட்ட
சின்னக்குருவியின்
துடிப்பு,

நினைவுபடுத்துகிறது
நீயென் மனதில்
விட்டுச்சென்ற
காதலின் கனம்.

Tuesday, August 22, 2006

சச்சினும் ஏ.ஆர்.ரகுமானும்...!

கொஞ்சம் பக்கமா India Today-ல நம்மள மாதிரி யூத் மக்களை 'உங்க ஐடியல் யாரு'னு கேட்டிருக்காங்க போல..
நிறைய பேரு சொல்லி, முதல்ல வந்தது யாரு தெரியுங்களா..? நம்ம சச்சின் தானுங்க...

சச்சின் பத்தி படிக்கும் போதோ, இல்ல ஏதாவது விஷயம் கேள்விப்படும் போதோ, நமக்கு ஒண்ணு தோணுங்க... நமக்கு எப்பவுமே, சச்சினும், ஏ.ஆர்.ரகுமானும் ஒரே மாதிரி தோணுங்க...

ரெண்டு பேரும் கொஞ்சம் குள்ளமாக இருப்பாங்க..ஆனா 'கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது'ங்கற மாதிரி, அவங்கவங்க ஏரியாவில Giant-ஆ தான் இருக்காங்க...

ரொம்ப முக்கியமான விஷயம் ஒண்ணு வந்து, அவங்க குரல்ங்க...ரெண்டு பேர்க்கும் ஒரே மாதிரி குரல்ங்க...எனக்கென்னமோ ரகுமான் பாடிக் கேக்கும் போதும், சச்சின் பேட்டில பேசிக் கேக்கும் போதும் 'சில்'லுனு இருக்குங்க... இப்போ கூட ரகுமானோட 'சில்லுனு ஒரு காதல்'ல ' நியூயார்க் நகரம் தூங்கும் நேரம்' தாங்க கேட்டுட்டு இருக்கங்க..என்ன வாய்ஸ்ங்க....

இன்னொரு விவகாரமான Comoparison இருக்குங்க...

நம்ம 'தாதா' கங்குலியும், 'தல' அஜீத் அண்ணனும் தாங்க..

அப்பப்போ கிடைச்ச வாய்ப்புகள்ல கலக்கினாலும் இப்பத்து நிலைமைக்கு ரெண்டு பேரும் கொஞ்சம் சுருண்டு தான் போயிருக்காங்க போல..
ரெண்டு பேர்க்கும் முதல் எதிரி அவங்க வாய்ஸ் தான்னு நினைக்கிறேங்க.. ஓவரா சவுண்டு விட்டு மாட்டிக்கிறதுல இவங்கள அடிச்சிக்க முடியாதுனு தோணுதுங்க...

இதோட நிறுத்திக்கறேங்க...

இல்லாட்டி 'டின்னு' கட்டிடுவாங்க... நம்ம தல மக்களும், தாதா ஆளுங்களும்...

வர்றேங்க...

நீயும் நானும்...!



பொன் அந்தி மாலை நேரம்.

பூக்கள் தூவும் மெல்லிய கிளைகளில் புதைந்திருந்த குளிரின் வாசம் காற்றோடு கலந்து ராகமாய் புறப்பட்டது.

மனதை மாயமாய் மீட்டுகின்ற தென்றலின் கையால், மிரட்சியான கதிரொளி தடவிப் பாய்கின்ற, பச்சை இலைகளின் மேனியெங்கும் மஞ்சள் மினுமினுப்பு.

அசைத்து அசைத்து நடக்கையில் இலைகளின் இதழ்களிலிருந்து சூடாகத் தெறிக்கிறது வெயில்.

ரீங்காரிக்கின்ற சில்வண்டுகளின் தேனோசை, சிங்காரிக்கின்ற பொழுதின் எல்லைகள் காலத்தின் முடிவிலி வரை நீண்டிருக்கின்றன.

கார்கால முகில் கருத்திருக்கும், கருத்தரித்திருக்கும் முன்மாலைப் பொழுது.

ஒரு நீல நதியின் கரங்கள் தீண்டும் கரையொன்றில் காத்திருக்கிறேன்.
நாணல்கள் அசைந்தாடும் நுரை ததும்பும் கரைமணலில் அமர்ந்திருக்கிறேன்.

ஈரம் கலந்த தென்றல் மேல், யாரோ அனுப்பும் குழலோசை மிதக்கும் குளிர் காற்றின் குரல் கேட்கும் மாலை வேளையின் மயக்கத்தில் நீ ஆழ்ந்திருக்கிறாய்.

அந்தி மயங்கும் ஆகாய மன்னனின் ஒளிக்கற்றைகள் நனைந்து வழிகின்ற கருமேகங்களின் விளிம்புகள் மட்டும் பொன்னிறமாய் ஜொலிக்கின்றன.

வெண் பட்டாடை உதறி விரித்தது போல், பறக்கின்ற வெண் நாரைக் கூட்டம், பறந்து தொலைவில் புள்ளியாய் மறைவதைப் பார்த்து திரும்புகிறாய். 'கிளம்பலாமா' கேட்கிறாய்.

ஒரே ஒரு முறை மட்டும் குலை தள்ளுவதற்காக, வாழ்ந்து மடிகின்ற வாழை மரம் போல், ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லி விட்டு கிளம்பப் பார்க்கிறாய்.

இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்றான பின்பு, வார்த்தைச் சாவிகளே இல்லாத வாய்ப்பூட்டு பூட்டிக் கொள்கிறேன்.

எத்தனையோ முறை நாம் சிரித்துப் பேசியதைக் கண்ட இந்த நதிக்கரை, இனி யாரைக் காணும்..?
சேர்வதாய் வந்து, பின்பு பிரிந்து செல்கின்ற இந்த நதியலை, இனி யார் கால்களை நனைக்கும்..?

நமது பொருள் இல்லாத வார்த்தைகளை சுமந்து சென்ற தென்றல் காற்று, இனி யார் வார்த்தைகளை அசை போடும்..?
நீ கேட்டாய் என்பதற்காக நீந்திச் சென்று, நான் பறிப்பதற்காக ஒற்றைப் பூ பூத்திருந்த அந்த ஈரச்செடி, இனி யார் பறித்தலுக்காக மஞ்சள் பூ சுமக்கும்..?

எழுந்து நடக்கிறோம் நீயொரு திசையிலும், நானதன் எதிரிலும்..!

பொருளாதார தூரங்களும், பெற்றோர் பாசங்களும் உன்னைக் கட்டிப் போட்ட பின்பு, நம் குழந்தைகளுக்கு சூட்ட வைத்திருந்த பெயர்கள் புகை போல் மறைகின்றன.

இனி உன் குழந்தைக்கு என் பெயரையும், என் குழந்தைக்கு உன் பெயரையும் வைத்த பின்பு, கனவில் வந்து அழுகின்ற நம் குழந்தைப் பெயர்களை நாம் எதைக் கொண்டு அமைதிப்படுத்துவது....?

Monday, August 21, 2006

நம்ம பள்ளி நண்பர்கள்.


பள்ளிக்குப் போகிற வயசில, நமக்கு பல Heroes இருந்தாங்க. TVல பார்த்தீங்கனா, He-Man. அவர் வந்து கத்திய எடுத்து சண்டை போடும் போது, பார்க்கணுமே..அவர் கூட, ஒரு சிங்கம் வரும் பாருங்க, நார்னியா சிங்கம் எல்லாம் அது கிட்ட பிச்சை தான் வாங்கனுங்க.

அப்புறம் அந்த வயசில சிறுவர் மலர் தாங்க பைபிள் மாதிரிங்க. சிறுவர் மலர்னா என்னனு கேக்கறவங்களுக்கு மழை நாளில் ஆறிப்போன இட்லியும், ஊசிப் போன வடையும் கிடைக்கட்டுங்க. பிரதி வாரம் வெள்ளிக் கிழமை , தினமலர் கூட இலவச இணைப்பா வருங்க. நமக்கு அதுல Hero வந்து 'பலமுக மன்னன் ஜோ' தாங்க. வாரவாரம் அவரோட அட்டகாசம் அருமையா இருக்குங்க.

அப்புறம் வந்து எனக்கு அதில ரொம்ப பிடிச்ச தொடர் 'உயிரைத் தேடி' தாங்க. அருமையான தொடர்ங்க. அதில உலகமே அழிஞ்சு போயிடும். Hero ஒரு பையன்ங்க. அவன் வந்து வேற யாராவது உயிரோடு இருக்காங்களானு தேடுதேடுனு தேடுவானுங்க. உங்கள்ல யாருக்காவது நினைவு இருந்தா சொல்லுங்க.

அப்புறம் ஊருக்குப் போகும் போதெல்லாம் 'பூந்தளிர்' தாங்க நமக்குத் துணை. அதுல 'சுப்பாண்டி','கபீஷ்','வேட்டைக்காரன் வேலுத்தம்பி',அப்புறம் ஒரு மந்திரி இருப்பாருங்க, ராஜாவைக் கவுக்க திட்டம் போட்டு, ஒவ்வொரு தடவையும் ஏமாறுவாருங்க, இவங்க எல்லாம் நம்ம நண்பர்களா பயணம் முழுக்க வருவாங்க.

கொஞ்சும் கவிதைகள்.




ஒரு
பூஎழுதிய,
விரலிடுக்குகளில்
வழிகின்ற
வாசத்தில்
வசிக்கின்ற பொழுதுகள்.

*****

எதிர்பார்க்காமல்
உன்னை
எதிரே பார்க்கையில்,
என்ன பேசுவது என்று
இந்த மனதிற்கு
யார்
கற்றுக் கொடுப்பது?
***

சிரிப்பான பொழுதுகளின்
போது படிந்த
உன்னழகின்
இனிப்பான பதிவுகளைத்
தொட்டு
அழிக்கிறது,
மறுப்பின் போது
நான் கண்ட
வெறுப்பு முகத்தின்
ஈரக்கை.

***

சின்னச் சின்ன ஆசைகள்.

இப்ப பார்த்தீங்கனா, நம்ம எல்லோர்க்கும் பெரிய, பெரிய ஆசைகள் இருக்குங்க. பெரிய வீடு கட்டணும், நிறைய பணம் இருக்கணும், ஐஸ் மாதிரி Girl Friend/Wife இருக்கணும், குழந்தைங்க சொன்ன பேச்சைக் கேட்டு, திருவிழாவுக்கு போனமா, வந்தமானு இருக்கனும் (இதெல்லாம் பெரிய ஆசையானு நினைச்சிடாதீங்க. திருவிழா, கண்காட்சிக்கு போய்ட்டு, அப்பா கையால அடி வாங்காம,அழாம வர்ற குழந்தைகளை விரல் விடாமலேயே எண்ணிடலாங்க. நாங்க எல்லாம் அந்த காலத்துல அப்படி படுத்தியிருக்கோங்க. சரி, அதை விடுங்க, அந்த வயசு அப்படி.) .

அதே மாதிரி, எல்லர்க்கும் சின்னச்சின்ன ஆசைகளும் இருக்குங்க. நம்ம மதுபாலா அக்காவுக்கு 'வெண்ணிலவைத் தொட்டு முத்தமிடணும்'ங்கிற்து சின்ன ஆசை. ஆனா அது எவ்வளவு மில்லியன் டாலர் ஆசைங்கிறது JFK ஐயாவைத் தான் கேக்கணும்.

நமக்கும் கொஞ்சம் சின்னசின்ன ஆசைகள் இருக்குங்க.

1. நாம பிறந்தது கோயம்புத்தூர்ல KGலங்க. அங்க போய், அம்மாக்கு முன்னாடியே நம்மைத் தொட்டுத் தூக்கின நர்ஸம்மாவைத் தேடிக் கண்டுபிடிச்சு, 'அம்மா, நான் நல்லாயிருக்கேம்மா, நீங்க எப்படி இருக்கீங்க'னு கேக்கனுங்க.

2.குடும்பச் சூழலால் மெட்ரிக்ல இருந்து பிரிஞ்சு போகும் போது, என்னை அங்கேயே இருக்கச் சொல்லி கேட்டுக்கிட்ட Teachers, Princi Madam கிட்ட போய் ' நான் நல்லா தான் இருக்கேன் மேடம்'னு சொல்லனுங்க.

3. சிக்கன் குனியா வந்து, முட்டி வலியோடு இருக்கிற கோழி கால்ல, வைப்ரேட்டர் ஆன் பண்ணின செல் போனைக் கட்டி, அதோட ஆண்ட்டெனால, சாக்பீஸைக் கட்டி , கிறுக்கச் சொன்னா எப்படி கிறுக்குமோ, அப்படி கிறுக்கிட்டு இருந்தப்போ, மூணாப்பு படிக்கும் போது கைமுட்டி, முட்டியா அடிச்சு ஓரளவு திருத்தின Teacher -ஐப் பார்த்து 'இப்ப எல்லாம் நான் கையால் எதுவும் எழுதுறதில்லைங்க Madam. எல்லாம் கீ-போர்டு தான். கையெழுத்தே மறந்து போச்சுங்க Madam'னு சொல்லனுங்க.

அடுத்த சின்ன சின்ன ஆசைங்க அப்புறம் சொல்றேங்க.
பார்க்கலாங்க.

சில கவிதைகள்...!

எங்க அப்பா வந்து நல்லா கவிதை எழுதுவாருங்க..! அவரோட genes நமக்குள்ள ஓடுதுங்களா, அதனால, அப்பப்போ நாமளும் கொஞ்சம் முயற்சி பண்றதுங்க. அதுல பாருங்க, ஏழாப்பு படிக்கும் போது, வானம், நிலா, பூமி, மழை, மரம்னு கொஞ்சம் கோர்த்து விட்டு, எங்க தமிழ் அய்யாகிட்ட போய் காட்டினேங்க.

அவரு ரொம்ப நல்லவருங்க. மேலாவ பார்த்திட்டு, 'கவிதைன்னா இப்படி இருக்கக் கூடாது, கொழந்தை'னு சொல்லி, அணி, யாப்பு, வெண்பா, ஆசிரியப்பானு குடுத்தாருங்க பாருங்க, ஒரு lecture. ஓடினேன், ஓடினேன் கவிதையுலகின் எல்லை வரை ஓடிட்டேங்க.

இருந்தாலும் எல்லை தாண்டி வந்து வம்பு பண்றவங்க மாதிரி, நாமளும் அப்பப்போ கவிதையுலகத்தோட மணல்ல, கொஞ்சம் கிறுக்கிட்டு ஓடி வந்திடறதுங்க.
அதுல நெறைய சொத்தைங்க இருந்தாலும், சிலதெல்லாம் நல்லாவே வந்திடுங்க. அப்போ கொஞ்சம் கர்வம் தலைக்கேறினாலும், ஒரு விஷயம் நினைவுக்கு வந்திடுதுங்க..

நம்ம குடியரசுத் தலைவர் கலாம் ஐயா அவங்க வந்து, சின்ன புள்ளையா இருக்கும் போது, இராமேஸ்வரத்தில படிச்சு முடிச்சிட்டு, மேற்படிப்புக்காக இராமனாதபுரம் போகணுங்களாம். அவங்க அம்மாவால குழந்தையை பிரிஞ்சிருக்கணுமேனு கவலையாகி, அழ ஆரம்பிச்சிட்டாங்களாம். அப்போ கலாம் ஐயாவோட அப்பா சொன்னாராம்.
'அம்மணி, கலாம் நம்ம மூலமா பூமிக்கு வரணும்னு கடவுள் விரும்பியிருக்கார். நாம் காரணம் கிடையாது. அது போல் கலாமோட உடலுக்கு மட்டும் தான், இந்த இராமேஸ்வரம் இடம் தந்திருக்கிறது. ஆன்மாவிற்கு அல்ல. ஆன்மாவிற்கு கட்டுப்பாடுகள் கிடையாது.' அப்படின்னாராம்.

அது போல, இந்த கவிதை நம்ம மூலமா வரணும்னு இருக்கு. நாம் வெறும் கருவி மட்டும் தான். அதனால கர்வம் வர்ற அவசியமில்லைனு தோணுங்க.

கீழ இருக்கிற சில கவிதைகளை (அப்படினு நான் நினைச்சிட்டு இருக்கிறதை..) படிச்சிட்டு ரொம்ப டென்ஷன் ஆகிறவங்க, இதுக்கு இவ்ளோ மேல் கட்டுமானமா (Build Up)னு கடுப்பாகிறாவங்க, நல்லா அடிச்சிடுங்க...என்னையில்லை, பின்னூட்டத்தில.

காத்திருக்கும் இதயம்.
எந்த அறையில்
வந்து
வசிக்கப் போகிறாய்?
நான்கு
அறைகளுடன்
காத்திருக்கிறது
என் இதயம்.

EggStraw.
பேசாத ஒரு மெளனத்தால்
என்னை உறிஞ்சும்
உன் இதழ்கள்
ஒரு Straw.
போதும் போதாதற்கு
உருட்டி விளையாடும்
Egg போன்ற கண்கள்
உனக்கெதற்கடி EggStraw.

(இதெல்லாம் உருப்பிடற கேஸானு நீங்க நினைக்கிறது புரியுதுங்க...அதெப்படிங்க, எல்லாரும் ஒரே மாதிரி நினைக்கிறீங்கனு தாங்க புரிய மாட்டேங்குதுங்க....)

சரி, அப்ப வரட்டுங்களா...

ஒரு வெட்டிச் சிந்தனை...!

ப்போ வெளி நாட்டுல எல்லாம், விவாகரத்து, living together, single parent அதிகமாயிடுச்சுனு கேள்விப்படறோங்க.. நம்ம ஊருல கொஞ்சம் கம்மி. 1000 காரணம் இருக்குங்க. எனக்குத் தோன்றத மட்டும் சொல்லிடறேங்க.
நம்ம உடம்பு வளர்றது நாம சாப்பிடற சாப்பாட்டைப் பொறுத்து இருக்கு, இல்லீங்களா.? அது மாதிரி, நாம நடந்துக்கிறது வந்து, நம்ம நினைப்பை பொறுத்து இருக்குனு பெரியவங்க சொல்லியிருக்காங்க. நாம எப்படி நினைக்கிறோம்? நம்ம மொழியில தான். இப்ப நீங்க westல இருந்து move பண்ணி வந்தீங்கன்னா, மொழிகள்ல ஒரு முக்கியமான மாற்றம் தெரியுங்க..மேற்கு நாட்டு மொழிகள்ல எல்லாம், எவ்வளவோ எழுத்துக்கள் சேர்ந்து வார்த்தைகள் அமைச்சாலும், அதுங்க எல்லாம், தனித்தனியாகவே இருக்குங்க. உதாரணத்துக்கு பார்த்தோம்னா, 'cat'னு எழுதுங்க..அடிப்படையில c a t னு இருந்தது, இப்போ 'cat'னு மாறியிருக்கு. பிரிச்சா, ம்றுபடியும் c a tனு ஆகிடும், இல்லீங்களா..? இப்போ நாம 'பூனை'னு எழுதுறோம். பிரிச்சுப் பார்த்தோம்னா 'பூ +னை'னு தான் மாறுமே ஒழிய, அடிப்படையான 'ப் + ஊ' + 'ன் + ஐ', அப்படினுஎல்லாம் மாறாதுங்க.
அதாவதுங்க, அடிப்படையில ப், ஊ,ன், ஐனு இருந்ததெல்லாம் ஒண்ணாகும் போது, 'ப் ஊன் ஐ' அப்படி ஆகாம, ஒண்ணோடு ஒண்ணு கலந்து, அததோட சுயத்தை இழந்து, புதுசா உருவாகிடுதுங்க. அது போல, திருமணத்துக்கு முன்னாடி எப்படியோ இருந்தவங்க, திருமணத்துக்கு அப்புறம் புதுசா ஆகிடுறங்க. பிரிச்சாலும் பழசு மாதிரி ஆக மாட்டாங்க.
இன்னும் சீனம், ஜப்பான் மொழியெல்லாம் பாருங்க, 'காசு கொடு, சந்தைக்குப் போகனும்.ஆத்தா வையும்'ங்கறதையெல்லாம் ஒரே எழுத்தில முடிச்சிடறாங்க. அங்க குடும்ப அமைப்பு இன்னும் சிதையாம இருக்கும்னு தோனுதுங்க.

இப்போ நாம ஆங்கிலத்தில பேசறதால, எழுதறதால நம்ம சிந்தனையும் west போல, (இந்த குடும்ப விஷயத்திலங்க..) மாறிட்டு வருதோனு தோனுதுங்க..
நமக்கு திருமணத்தில இன்னும் அனுபவம் இல்லிங்க... அதனால அனுபவசாலிங்க வேற ஏதாவது காரணம் சொல்லலாங்க..திட்டறவங்க கொஞ்சம் பார்த்து திட்டுங்க...பூரிக்கட்டையை கையில எடுத்து வெச்சிருக்க அம்மணிங்க, மன்னிச்சு விட்ருங்க..

அப்ப வரட்டுங்களா...

நம்ம ஊர்க் கோயில்..!


ம்மளைப் பத்திக் கொஞ்சம் சொல்லிக்கிறேங்க. நம்ம பேரு...அட..அது அவ்வளவு முக்கியமாங்க...'காலப்பயணி'யே ரொம்ப நல்லாயிருக்குங்க... நாம எல்லாரும் காலத்தோட ஓடிட்டு இருக்கிற பயணிகள் தானுங்களே... நமக்கு சொந்த ஊரு வந்து ஈரோட்டுக்குப் பக்கத்துல பவானினு ஊருங்க... நல்ல அமைதியான ஊருங்க...கிழக்கால காவேரி ஓடுதுங்க..மேற்கால பவானி (இது ஆறு பேருங்க...) ஓடுதுங்க...இந்த ரெண்டு ஆறும் நம்ம ஊருல தாங்க சங்கமிக்கறதுங்க...இதைத் தவிர நம்ம கண்ணுக்குத் தெரியாம சரஸ்வதினு ஒரு நதியும் சங்கமிக்கறதா ஐதீகங்க...வடக்குல அலகாபாத் போல 3 நதி சங்கமிக்கறதால, நம்ம ஊரை 'தக்ஷிண பிரயாகை','திரிவேணி சங்கமம்'னு எல்லாம் சொல்லுவாங்க...இந்த நதிகள் கூடுற இடத்துக்கு பேர் 'கூடுதுறை'ங்க...இங்க ஒரு அற்புதமான பழைய காலத்துக் கோயில் இருக்குங்க..சங்கமேஸ்வரர் கோயில்னு பேருங்க..கோயில்ல அப்பா பேரு சங்கமேஸ்வரருங்க...அம்மா பேரு வேத நாயகி அம்பாளுங்க... நம்ம ஊருல அப்பா, அம்மா போட்டோ எடுக்கும் போது, கடைக்குட்டியை நடுவில உக்கார வெச்சிக்குவாங்கல்ல...அது போல இங்கே, குறும்பன் முருகன், வள்ளி,தெய்வானையோடு அம்மா,அப்பா நடுவில 'சோமாஸ்கந்த மூர்த்தியாய்' நிற்கிறாருங்க. அப்ப மூத்தவர்? அவருக்கென்னங்க...அம்சமா கோயில் முன்னாடி 'கோட்டை வினாயகரா' இருக்கிறாருங்க...கோயில்ல இருக்கிற அரசமரம், இலந்தை மரம் (இது தான் நம்ம கோயில் ஸ்தல மரம்ங்க..) இங்கயும் பிள்ளையார் தாங்க.கோட்டை வினாயகருக்கு துணையா ''கோட்டை ஆஞ்சனேயர்' இருக்காருங்க..இவர் எங்க இங்க வந்தாருன்னு பாக்கறீங்களா... நம்ம கோயில்ல பெருமாளும் தாயாரோடு இருக்காருங்க..அதுதான் இராம தாசர் மாருதி, கோட்டை வாசல்ல காவலுக்கு இருக்காருங்க. இங்க எம்பெருமான் 'ஆதிகேசவப் பெருமாளா' எழுந்தருளியிருக்காருங்க. அம்மா பேர் 'செளந்தரவல்லித் தாயாரு'ங்க. கருடாழ்வார்,வேணுகோபால் சுவாமி, எல்லாரும் இருக்காங்க. நம்ம கோயிலைப் பத்தி நிறைய சொல்றதுக்கு இருக்குங்க...அப்புறமா சொல்றேங்க.. நீங்க இங்க போய் பாருங்க. சரி இப்ப வரட்டுங்களா....

அன்புடையோர்க்கு....

எல்லார்க்கும் வணக்கங்க....உங்க எல்லாரையும் பார்க்கறதுல நமக்கு ரொம்ப சந்தோஷங்க...கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் நாம இந்த பக்கமெல்லாம் வந்து பார்த்ததுங்க...ரொம்ப நல்லாருந்துச்சுங்க...அட, நாமளும் இதுல கலந்துக்கலாம்னு தோணுச்சுங்க....அது தான் வந்துட்டேங்க....சரிங்க தொடர்ந்து பார்க்கலாங்க.....