Wednesday, September 23, 2009

மூன்று சந்திப்புகள்.

ல்யாண் மருத்துவமனைக்கு அருகிலேயே ஆட்டோவை நிறுத்தி விட்டு, இருபது ருபாய் வாங்கிக் கொண்டார். நடந்து, குறியத்தி பைபாஸ் ரோட்டுக்கு வந்தேன். ஆட்டோ ஸ்டாண்டில் 45'யில் ஒன்றைக் கவிழ்த்து அடியில் பாய்ந்திருந்தார்கள். பார்சல்கள் கொண்ட லாரி ஒன்று நின்றிருந்தது. பி.ஸி.ஓ.வில் ஒர் பெண் பேசிக் கொண்டிருந்தாள். வெள்ளிக்கிழமை இரவு நல்ல மழை பெய்திருந்தது. ஃபேன்ஸி ஸ்டோரில் ஒர் பெரிய மன்ச் மட்டும் வாங்கிக் கொண்டேன். சாப்பிடுவாரா என்ற் தெரியவில்லை. இருந்தாலும், பெரியவர்களைப் பார்க்கப் போகும் போது வெறுங்கையோடு போகக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். தேங்கியிருந்த சேற்று நீரில் செம்பருத்திப் பூநிழல் காற்றில் கசங்கியது. மெய்ன் கதவைத் திறந்து உள்ளே சென்று, அழைப்பு மணியை அழுத்தினால், கொஞ்ச நொடிகளில் வந்து கதவைத் திறந்தார், எழுத்தாளர் நீலபத்மநாபன் அவர்கள்.



அவர் மனைவி மகள் வீட்டுக்குச் சென்றிருந்தார். தனியாகத் தான் இருந்தார். கோட்டையில் ஒரு ப்ராமின் வீட்டில் செய்யச் சொல்லி உணவு கொண்டு வருகிறார்கள். முதுகு வலி படுத்துகின்றது. இருந்தாலும் எனக்காக உட்கார்ந்து நிறைய நேரம் பேசினார். கமலாதாஸ் மறைவை ஒட்டி 'நெய்ப்பாயாசம்' என்ற அவரது கதையை தீராநதியில் இவர் மொழிபெயர்த்து அனுப்பி வைக்க வெளியிட்டிருக்கிறார்கள். குட கொஞ்சம் கவிதைகளையும் பெயர்த்து அனுப்பியிருந்தார். எதிலும் வரவில்லை. ஓணம் திருவிழா சிறப்பு மலர்களுக்காக ஜனயுகம் போன்ற மலையாள பத்திரிக்கைகள் சாரின் புதிய கதைகளைக் கேட்டு வாங்கிப் பிரசுரித்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்ப் பத்திரிக்கைகளில் அனுப்பி வைத்தால்ம் வருவது இல்லை. பொறியாளர் தினத்திற்காக ஒரு பொறியாளரின் பேட்டி வேண்டுமென இவரைத் தேடி வந்து பத்தி போட்டிருக்கிறார்கள். 'என்னை ஏன்?' எனக் கேட்க, நகரில் நிறைய எஞ்சினியர்கள் இருக்கிறார்கள். ஆனால் இலக்கியத் தொடர்புள்ள இஞ்சினியர் நீங்கள் தானே என்று சொல்கிறார்கள்.

மேலே மாடிக்குச் சென்றால் ஓர் எழுபதாண்டு எழுத்து வாழ்க்கையின் சாரம் அலமாரிகளில் நிறைந்திருக்கின்றது. தனியாக ஒரு பீரோவில் அவர் எழுதிய புத்தகங்கள். ஒரு நெருக்கடியான அலுவலக வாழ்வில், எழுதுவதின் மேல் எத்தனை பிரியம் இருந்தால், இப்படி எழுதியிருக்க முடியும் என்ற ஆச்சரியம் வருகின்றது. அவர் கணிப்பொறியில் சில சின்ன பிரச்னைகள் இருந்தன. அதைச் சரி செய்து கொடுத்தேன். அவரது வலைப்பதிவில், 'கோபிகையின் கெஞ்சல்' என்ற கவிதையின் கீழேயே அதன் ஒலி வடிவமும் வருமாறு செய்யச் சொன்னார். செய்யப்பட்டது.

கீழே வந்து நிறைய சொன்னார். தமிழில் எழுதுவது பற்றிய சில அறிவுரைகள், இலக்கிய உலகில் எழக்கூடிய இடையூறுகள், தமிழில் எதிர்பார்க்கக்கூடிய அங்கீகாரமின்மைகள்...! அவரை நிறைய தொந்தரவு செய்ய விரும்பாததாலும், தமிழ்ச்சங்கர் ஒருவரது வீட்டில் மதிய உணவுக்கு வருவதாகச் சொல்லியிருந்தபடியாலும் கிளம்ப வேண்டியதாக இருந்தது. கிளம்பும் ம்ன் ஆசீர்வாதம் வேண்டும் என்றேன். பூஜையறைக்குக் கூட்டிச் சென்றார். நவராத்திரி துவக்க நாளாகையால், சரஸ்வதி முன்னே வீற்றிருந்தாள். காலில் விழுந்து வணங்க, பூஜையில் வைத்திருந்த சிறிய வாழைப்பழத்தைக் கொடுத்து, நெற்றியில் நீறு பூசி விட்டார். ஒரே ஒரு போட்டோ எடுக்கக் கேட்டேன். மேலே துண்டு போர்த்தியிருந்தவர், 'ஜெயகாந்தன் மாதிரி ஆகியிரக் கூடாதில்லையா? போன வாரம் விகடன் பார்த்தேளா..!' என்று சிரித்து சட்டை போட்டுக் கொண்டார். எவ்வளவு அப்டேட்டாக இருக்கிறார்..!

அடுத்த நாள் மற்றுமொரு எழுத்தாளரைப் பார்க்கப் போவதாகச் சொன்ன போது, அவரையும் நலம் விசாரிக்கச் சொன்னார். கிளம்பி விட்டேன்.

முன்பாக படிக்க ஏதாவது புத்தகம் கொடுங்கள் என்று கேட்டேன். குறிப்பாக அவரது புத்தகங்களில் ஒன்று. கொடுத்தார் ஒரு 750 பக்க புத்தகம். 'உணர்வுகள் சிந்தனைகள்'. 1965லிருந்து 2005 வரை அவர் எழுதிய அத்தனை கட்டுரைகளையும் என்.சி.பி.ஹெச் தொகுத்து 400 ரூபாயில் வெளியீடு. (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-B, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 98. 044 - 2635 9906, 2625 1968.)

ஓர் எழுத்தாளர். கடந்த ஐம்பது ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருப்பவர். அதிலும் தமிழ், மலையாளம் என்ற இரு பிராந்திய மொழிகளில் வல்லமை பெற்று, அங்கிருந்து இங்கும் இங்கிருந்து அங்கும் மொழிபெயர்த்துக் கொடுத்தவர். திருவனந்தபுரத்தில் இருந்து கொண்டு, மலையாள இலக்கிய உலகை உள்ளிழுத்து அப்படியே தமிழில் நடக்கின்றவற்றைக் கண்டு... இரண்டு வகைகளின் ஒப்பீட்டைச் செய்து எழுதுகிறார். இன்னும் படித்து முடிக்கவில்லை. படித்தவரையிலுமே இந்நூல் ஒரு இலக்கிய வாசகனின் கையில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒன்று என்று தெளிவாகத் தெரிந்து விட்டது. சென்ற காலகட்டங்களின் வரலாற்றை, முக்கியமாக இலக்கியப் போக்குகளைத் தெரிந்து கொள்ள ஓர் ஆவண நூல் இது. காசு கொடுத்து ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளப் போகிறேன்.

னந்தபுரம் தமிழ்ச்சங்கத்தில் பழக்கமானவர் திரு.கமலநாதன். இப்பெயரிலேயே நிறைய குட்டிக் குட்டிக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். மங்கையர் மலர், சுட்டி விகடன், சக்தி விகடன், குமுதம் என பல பத்திரிக்கைகளிலும் வந்திருக்கின்றன. சிறுகதைகளும் எழுதுவார். இவர் மனைவியும் எழுதுவார். அசன் நகரில் வீடு இருக்கின்றது. மதிய உணவிற்குச் சென்றேன்.

வயிற்றுக்கு ஈயும் போதே செவிக்கும் ஈந்தார். இவர் சொன்னதில் இங்கே ஒன்று சொல்கிறேன். 'கணிணித் தளத்தில் பணிபுரிவதால், அறிவியல் / தொழில்நுட்பக் கட்டுரைகள் எழுதலாமே என்றார். எந்த அளவுக்கு எளிமையாகவும், படிக்கும் தன்மையிலும் என்னால் எழுத முடியும் என்று தெரியவில்லை. முயல்கிறேன்' என்று சொல்லி வைத்தேன். ஒரு ஆர்வ முயற்சியாக சிஙகப்பூர் பதிவர்கள் குழுமம் நடத்தும் 'மணற்கேணி - 2009'க்கு ஒரு தொழில்நுட்பக் கட்டுரை (Audio Signal Processing) அனுப்பியிருப்பதைச் சொன்னேன்.

சம்பா சோறு. மென் சாம்பார். ரசம். அப்பளங்கள். கூட்டு. பொறியல். வாழைப்பழம். முடித்து விட்டு கை கழுவும் போதே கண்கள் சொக்க ஆரம்பித்து விட்டன. இன்னும் கொஞ்சம் பேசி விட்டு, கிழக்குக் கோட்டைக்கு நடந்தே வந்து, பிக் பஸார் பின் சந்தில் நடந்து, ரெயில்வே ஸ்டேஷனை அடைந்தேன். கோட்டோவியம் போல் கலந்திருந்த தண்டவாளங்கள் மேல் ஏறி புக் ஸ்டால் வந்து, சில புத்தகங்கள் வாங்கிக் கொண்டு எதிர்ப்புற தம்பானூர் பேருந்து நிலையத்தில் ஆட்டிங்கல் பஸ் பிடித்து, கழக்குட்டம் திரும்பினேன்.

ப்ளாக்கர் ப்ரொஃபைலில் வயது 28 என்று மாறிய நாற்பது நிமிடத்தில் தமிழ்ப்பறவையிடமிருந்து வாழ்த்து செல்லில் வந்தது. மற்றுமொரு பிறந்த நாள் விடியப் போகின்றது. எதுவும் ஸ்பெஷலாகச் செய்ய வேண்டும் என்று தோன்றவில்லை. அம்மா புது உடை எடுத்தாயா? உடுப்பாயா? என்று கேட்டார்கள். இல்லை. ஏனோ சின்ன வயதிலிருந்தே ஆடைகள் மேல் விருப்பம் இருந்ததில்லை. ஏதே ஒரு வருட தினமலர் தீபாவளி மலரில் திலகர் தன் மாமனாரிடம் தலைதீபாவளிக்கு புதுத்துணிகளோ, மோதிரமோ வேண்டாம் என்று சொல்லி, அதற்கிணையான பணத்தைப் பெற்றுக் கொண்டு அத்தனைக்கும் புத்தகங்களாக வாங்கி வந்தார் என்று படித்திருந்தேன். அடுத்த வருட பிறந்த நாளுக்கு (அல்லது பொங்கலுக்கு?) எனக்கும் துணி வேண்டாம். புக் வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டு அடம் பிடித்தது நினைவுக்கு வருகிறது. உண்மையில் என் கையில் காசு கொடுத்தால் ஒன்று புத்தகம் வாங்குவேன்; இன்றேல் ஏதேனும் பண்டம் வாங்கித் தின்பேன். வேறு எதற்கும் செலவு செய்ய விரும்புவதில்லை.

குறைவான அழுக்குப் படிந்த ஒரு சட்டை, வழக்கமான பேண்ட் இரண்டையும் எடுத்து வைத்துக் குளித்து விட்டு அணிந்து கொண்டேன். பிறந்த நாளுக்குக் கோயிலுக்குப் போன பழக்கமெல்லாம் எப்போதோ நிகழ்ந்த கனவுகள் போல் தோன்றுகின்றது. எப்போது வீட்டின் பிடியை விட்டு வெளியேறினேனோ, அப்போதே குடும்பம் என்ற அந்த அழகான அமைப்பின் சில விதிகள் தாண்டப்பட்டு விட்டன. இப்போது கூட பாருங்கள். புரட்டாசி மாதம். நான் வெஜ் சாப்பிடக் கூடாது, வீட்டிலிருந்த வரை. இந்த செவ்வாய் கூட சிக்கன் சாப்பிட்டேன். நவராத்திரி நேரங்கள். ஹூம்...!

மீண்டும் ஒரு குடும்பம் அமைந்த பின், அதன் இனிய கட்டுப்பாடுகளுக்குள் அடங்கும் வரை இப்படிப்பட்ட விதிமீறல்கள் - இவற்றை மீறல்கள் என்று சொல்லலாமா? கண்டு கொள்ளாமல் இருத்தல் எனலாம் - இருக்கும் என்று நினைக்கிறேன்.

திருவனந்தபுரம் - நாகர்கோயில் சாலை வழி அத்தனை அழகாய் இருக்கும். அதுவும் நான் பயணம் செய்த ஞாயிறு அதற்கான விடுமுறை நாளின் அமைதியை, மெளனத்தை பூசிக் கொண்டு விரிந்திருக்கின்றது. சாலை ஏறி, இறங்கி, வளைந்து, கலைந்து, பிரிந்து, இணைந்து போய்க் கொண்டே இருக்கின்றது. திடீர் திடீரென அல்லிக் குளங்களும், விரிந்த தாமரைத் தேக்கங்களும் சாலையோரங்களில் சலசலக்கின்றன. ஓர் ஊதாக் காற்று ஜன்னல் விளிம்புகளில் தடவி உள்ளே பாய்கின்றது. சில மசூதிகள் வெளிர் பச்சை அல்லது பிக் ஃபன் இளம் ரோஸ் நிறங்களில் வெய்யிலில் நிற்கின்றன. மாட்டுக் கறிக்கடைகளில் கொக்கிகளில் சதைகள் தொங்குகின்றன. கேரள வீடுகள் சிலவற்றில் காலியான ஊஞ்சல்கள் தெரிகின்றன. லேசாக அதிர்கின்ற பாலத்தில் கடக்கும் போது, கால் வட்டம் envelope போல் நதி குதித்து ஓடிக் கொண்டிருக்கின்றது. நெய்யாற்றின்கரா தாண்டி ஏதோ ஒரு குக் பஸ் ஸ்டாப்பில் ஒரு குடும்பம் ஏறிக் கொண்டது. அப்பா மூவர் சீட்டில் அமர்ந்து கொண்டார். அம்மா முன்பாகவே நிற்க, குட்டித் தங்கை அப்பாவுக்குப் பின் மூவர் சீட்டில் அமர்ந்து, அண்ணனைக் கூப்பிட, அவன் கண்டு கொள்ளாது என் அருகில் வந்தான். நகர்ந்து அவனுக்கு ஜன்னல் சீட்டைக் கொடுத்தேன். ஆர்வமாய் நுழைந்து ஜன்னலில் தொலைந்தான். ஏனோ இப்போதெல்லாம் ஜன்னல் சீட் தியாகம், ரயிலில் பிரயாணிக்கையில் ஏதாவது தின்றால், கண்ணுக்குத் தெரியும் சிறுவனுக்கு/சிறுமிக்கு கூப்பிட்டுக் கொடுப்பது, நன்றாகப் படிக்கும் பையனைக் கண்டால் அவர்களுக்கு ஏதாவது ஊக்கமாகச் சொல்வது என்று செய்யத் தோன்றுகின்றது. இதை முதிர்தல் என்பதா இல்லை ஒருவித அன்பு கிளைக்கின்ற மனம் வந்து கொண்டிருக்கின்றது என்பதா என்று புரியவில்லை. பயமாக இருக்கின்றது.

மார்த்தாண்டம் சர்ச்சிலும், இன்னும் சில தேவாலயங்களிலும் சண்டே மார்னிங் ப்ரேயர் நடந்து கொண்டிருக்கின்றது. நிறைந்து, வெளியே நின்றபடியும் கேட்கிறார்கள். பச்சைப் பூபாளம் இசைக்கின்ற வயல்வெளிகள் சாலைக்கு ஜரிகை போல் மின்னியபடியே வருகின்றன. மிக அருகாமையில் படர்கின்ற மலைத் தொடர்களில் மேகங்கள் பிஞ்சு பிஞ்சாய்க் காய்த்து மிதக்கின்றன. மேலே கருமுகில்கள் யார் உத்தரவிற்கோ காத்து அழத்தயாராய் நிற்கின்றன. நாகர்கோயிலுக்கு நான்கு கி.மீ. முன்பே இறங்கி சிலரிடம் விசாரித்து நடந்து போய், ஒரு குளம் அருகில் இறங்கினேன். கொக்குக் கால்கள் போல் கொஞ்சம் சிவப்பாய் நின்ற ஒற்றைத் தண்டுகளின் மேல் U U U-வாய் இணைந்து வெண்மையாய் நீர்மலர்கள் ஈரத்துடன் சரிந்து நாணின. குளம் பச்சையாய் இருந்தது. இலைகள் பச்சையாய் இருந்தன. குளத்தின் மேலாடையில் முற்பகலின் வெயில் முனைகள் கொண்ட வானம் வரையப்பட்டிருந்தது. வேலி இருந்தது. ப்ளாஸ்டிக் பாட்டில்களும், பிஸ்கட் கவர்களும், குடும்பக் குப்பைகளும் இருந்தன. ஆனாலும் அந்த மலர்கள் அழகாகவே சிரித்தன. போன் செய்து வந்து விட்டதைச் சொல்லிட, பையன் வந்து வீட்டுக்குக் கூட்டிச் சென்ற மாடியில், சுவரோடு சேர்ந்திருந்த கண்ணாடி குகைகளுக்குள் பொக்கிஷங்களாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களுக்குள் அசோகமித்திரனும், காந்தியும் உறைந்த சட்டங்களின் முன் அமர்ந்து எனக்கு கை நீட்டினார் எழுத்தாளர் ஜெயமோகன்.



நிறைய விஷயங்கள் சொன்னார்; அறிவியல் கட்டுரைகள் எழுதுவதை எப்படி சுவாரஸ்யமாகவ்ம், தகவல்களாகவும் சொல்வது என்று சில உதாரணமுறைகள் சொன்னார்; நிறைய நிறைய படித்தால் மட்டுமே கொஞ்சமாவது எழுத முடியும் என்றார்; அவர் பேச்சின் குறுக்கே சென்று அஜிதன் தனியாக படித்தான். +2. என் இரண்டு கதைகளைப் படிக்கச் சொல்லித் தொந்தரவு செய்ததில் படித்து விட்டு, 'தேறாது' என்பதற்கு கொஞ்சம் மேலே மார்க் போட்டார். 'நீங்கள் புதுமைப்பித்தனிலிருந்து யுவன் வரை அத்தனை கதைகளையும் படித்தால் மட்டுமே ட்ரிக் மட்டும் கதை அல்ல. அதில் ஆத்மா இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்' என்றார்;

அவர் வீட்டிலேயே மதிய உணவு கொண்டேன். மேடம் எளிமையாக இருந்தார். சகஜமாகப் பேசினார். உனவு இனிமையாக இருந்தது. உண்டு விட்டு ஒரு ஃபோட்டோ எடுத்து விட்டு அவர் தூங்கச் செல்ல, நான் இறங்கி வந்து, பூனை போல் மெல்ல நடந்தும் புரிந்து கொண்டு ஹீரோ குரைத்து எடுத்தார். நடப்பது போல் கிட்டத்தட்ட ஓடி வெளியே வந்து விட்டேன். மீண்டும் வடசேரி சென்று பஸ் பிடித்து, தூங்கிக் கொண்டே அனந்தபுரம் வந்து சேர்ந்தேன்.

சில வீடியோக்கள்...!

லைவர் 1 :







தலைவர் 2 :



தலைவர் 3 :



F*king Brilliant...!!



Maa ki Tongue :



Just for relax :

Tuesday, September 22, 2009

செவன்லிங், சிட்ஜோ.

மாலை நேரம்
மழை தூறும் காலம்
என் ஜன்னலோரம் நிற்கிறேன்.

நீயும் நானும்
ஒரு போர்வைக்குள்ளே
சிறுமேகம் போலே மிதக்கிறேன்.

ஓடும் காலங்கள்.

அன்னா அக்மாதொவா என்ற இரஷ்ய கவிஞர் உருவாக்கிய கவிதை வடிவம் செவன்லிங்.

இதில் மொத்தம் ஏழு வரிகள் இருக்கும். சில விதிகள் இருக்கின்றன. இரண்டு பகுதிகளாக எழுதப்பட வேண்டும். கடைசியாக ஒரு வரி வர வேண்டும். முதல் மற்றும் இரண்டாம் பாராக்கள் மூன்று வரிகளில் மட்டுமே இருக்க வேண்டும். சிறப்பம்சம் என்னவென்றால், முதல் பாராவில் மூன்று பொருட்கள்/ மூன்று உணர்வுகள்.. ஏதேனும் மூன்று தொடர்பான விஷயங்கள் வர வேண்டும். இரண்டாம் பாராவிலும் ஏதேனும் தொடர்பான மூன்று வர வேண்டும். ஆனால் முதல் பாராவில் வரும் மூன்று விஷயங்களும், இரண்டாம் பாராவில் வரும் மூன்று விஷயங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருப்பது சிறப்பு. கடைசி வரி இரண்டு பாராக்களுக்கும் சம்பந்தமேயில்லாமல் இருப்பது நலம். முக்கிய நிபந்தனை, எழாவது வரியோடு கவிதை முற்றுப் பெற்று விடக்கூடாது. இன்னும் கதை இருக்கின்றது என்பதைப் படிப்பவர் மனதில் ஏற்படுத்துமாறு எழுத வேண்டும். இதில் ஆங்காங்கே எதுகை, மோனைகள் வந்தால் எழில் கூடும்.

ஏழு வரிகள் வருவதால் இது செவன்லிங் எனப்படுகிறது. நாம் தமிழில் என்ன சொல்லலாம்? நான் 'ஏழ்வரி' முன் வைக்கிறேன். வேறு அழகான வார்த்தை கிடைத்தால் சொல்லுங்கள்.

ஓர் அழகான ஏழ்வரி :

அவன் மூன்றை மட்டும் விரும்பினான்:
வெண் மயில்கள், ஈவென்சாங்,
அமெரிக்காவின் பழைய வரைபடங்கள்.

குழந்தைகள் அழுவதையும்,
செர்ரி ஜாமுடன் தேயிலை குடிப்பதையும்,
பெண்ணின் கத்தலையும் வெறுத்தான்.

...மற்றும் அவன் என்னை மணந்து கொண்டான்.

மேற்கண்ட கவிதை மேற்கண்ட அம்மணியின் கவிதை.

அவன் பையில் இருந்தது, இங்க் பேனா,
ஐநூறு ரூபாய் நோட்டு,
டி.பி. மருந்துச் சீட்டு.

என் கையில் பேனாக் கத்தி,
ஆக்ஸா ப்ளேடு,
ஆசிட் முட்டை.

தியேட்டரில் கரண்ட் போனது.

http://en.wikipedia.org/wiki/Sevenling
http://en.wikipedia.org/wiki/Anna_Akhmatova

சிட்ஜோ என்பது கொரியக் கவிதை வடிவம்.

மூன்றே வரிகள். ஒவ்வொரு வரிக்கும் 14 - 16 அசைகள் வரலாம். முதல் வரியில் ஒர் காட்சியை அறிமுகப்படுத்துவது; இரண்டாம் வரியில் அதனை விரிவுபடுத்துவது; மூன்றாம் வரியின் முதல் பாதியில் ஒரு திருப்பம் வைத்து, மறு பாதியில் கவிதையை முடித்து விடுவது. ஒரு திரைக்கதையினை எழுத வேண்டிய முறை இது. ஒவ்வொரு வரிக்கும் அசை எண்ணிகையையும் தெளிவாக குறித்து வைத்து விட்டார்கள்.

முதல் வரி : 3, 4, 4,4
இரண்டாம் வரி : 3, 4, 4, 4
மூன்றாம் வரியின் முதல் பகுதி: 3, 5
மூன்றாம் வரியின் இரண்டாம் பகுதி: 4, 3

U Tak (1262–1342) எழுதிய ஓர் அற்புதமான சிட்ஜோ :

பின்பனிக்காலக் காற்று மலைகளின் பனியை உருக்கி உடனே மறைய வைத்து விடுகிறது.
கொஞ்சம் அதை வாங்கி என் தலைமுடி மேல் வீசச் செய்ய விரும்புகிறேன்.
என் காதுகளின் மேல் தேங்கியிருக்கும் முதுமையின் பனியை உருகச் செய்வதற்காக!

மொழிபெயர்ப்பில் நிறைய அசைகள் ஆகி விட்டன. கொரிய எழுத்தில் சரியாக வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

http://en.wikipedia.org/wiki/Sijo
The Bamboo Grove

***

கூகுள் செல்லுங்கள். how என்று டைப் அடித்து விட்டு, கூகுள் சஜஷன்ஸ் முதலில் என்ன தருகின்றதென்றால்,



முதல் கேள்விக்கு கூகுளில் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டுமா?