Tuesday, September 09, 2008

அத்தப்பூக்காலம்... அழகுப் பூக்கோலம்...!

ன்று (10.செப்.2008) நிறுவனத்தில் அத்தப்பூக்காலம் கண்காட்சி நடைபெற இருக்கின்றது. அதற்காக ஒரு குழுவில் சேர்ந்து விட்டதால், இரவு 1 மணி வரை (09.செப்.2008) பூக்களைப் பிய்த்து போட்டு கை, விரல்கள், முதுகு, கழுத்து என்று எல்லா ஜாயிண்ட்களிலும் பிடித்துக் கொண்டது.

பூக்களைப் பிரித்தெடுக்கும் (கு கையில் பூன்னெல்லாம் சொல்லக் கூடாது!!) சில போட்டோக்கள்.







இன்று போட்டி முடிந்ததும், செல்லில் சிறை பிடிக்கப்பட்ட பூக்கோலங்கள் இங்கே அப்டேட் செய்யப்படும். அதுவரை உங்களுக்கு ஒரு பழைய பாடல்.



சேர்க்கப்பட்டது (Updated) ::

ஒவ்வொரு கலை வடிவத்தின் பின்பும் அறிவியல் இருக்குமா? ஓவியம், கதை, கவிதை, நடனம், இசை... தெரியவில்லை. ஆனால் அத்தப்பூக்காலம் என்ப்படும் இந்த பூஓவியத்தின் அடிப்படை கணக்குகளுடன் தான் இருக்கிறது.

எளிய முறையில் (கயிற்றில் சாக்பீஸ்கள் கட்டி வட்டம் வரைதல், அரை வட்டம் வரைய ஓரளவிற்கு கோணங்கள் வரைதல், அட்டைகள் தயார் செய்து டெம்ப்ளேட் ஆக பயன்படுத்தல்) அடிப்படை வரைபடங்கள் வரைந்து கொள்ளுதல், எந்த எந்த கட்டங்களுக்கு எத்தகைய நிறங்கள் கொடுக்க வேண்டும் என்ற அழகுணர்ச்சி, அந்த நிறங்களுக்கு ஏற்றாற் போல் பூக்களையோ, காய்கறிகளையோ முடிவு செய்தல், அழகாக அடுக்குதல், சிதறுகின்ற மலர் இதழ்களை அவற்றின் எல்லைகளுக்குள் அடுக்குதல் என்று ஒவ்வொரு நுட்பமாகச் செதுக்கும் போது, கண்களைப் பறிக்கும் அழகுடன் பூக்கோலம் உருப்பெறுகின்றது.

இதோ, நாங்கள் செய்த ஒரு பூக்காலத்தின் ஸ்டெப்ஸ் ::















மற்ற அணிகளின் பூக்காலங்களையும் கண்டு இரசிப்போமா?













பறவைப் பார்வையில் ::



சரி! நீ என்ன செய்து கொண்டிருந்தாய் என்று கேட்பவர்களுக்காக, வேறென்ன... அழகை ஆராதித்தல் தான்...!

வர்களிலோ, பொக்கேகளிலோ, காகிதச் செடிகளாக, ப்ளாஸ்டிக் மலர்களாகவோ இருக்கும் செடிகளும், பூக்களும் ஜீவனற்று இருக்கும். எவ்வித உணர்ச்சிகளும் அற்று, ஒளி இருக்கும் திசையை அறியாமலும், வளர்ச்சியற்றும் இருக்கும். ஆனால், அவ்வாறு இருக்கும் ஒரு மலரையோ, செடியையோ எடுத்து உயிர் கொடுத்து, செழுமையும் உயிர்த்துடிப்பும் நிரம்பிய செம்மண்ணில் நட்டு, நன்னீர் பாய்ச்சி, மஞ்சள் சூரிய ஒளியில் நிற்க வைத்தால், எத்தனை புத்துணர்வும், பளிச்சிடலும், ஜீவக்களையும் நிரம்பியதகா அம்மலர் காணப்படும்? புத்தம் புது இரத்தம் பாய்கிறார்ப் போல் புஷ்டியடையும் அல்லவா?

பூக்களுக்கு எப்படியோ, அவற்றைக் காண்பவர்க்கு களிப்பு தானே?

தினம் தினம் ஒரே மாதிரியான சுடிதார்களில் கண்டிருந்த அழகிய மலையாள மங்கைகள், கேரளப் பாரம்பரிய மஞ்சள் பட்டுச் சரிகைப் புடவைகளிலும், அழுத்தமான பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, பொன் நிறங்களிலும் ஆடைகள் அணிந்து, ஈரக்கூந்தல் அலையலையாய்ப் பறக்க, மலர்கள் நிறைத்தும், முகமெல்லாம் பண்டிகை மகிழ்ச்சி படர்ந்திருக்க, சிரிப்போடு அங்கே இங்கே வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கின்ற காட்சி...! உள்ளக் கிளர்ச்சியையும், உண்மையான மலர்ச்சியையும் மனதிற்கு ஏற்படுத்தியது.

பல பூக்களே
பூக்காலம்
வரைகின்றதே!!!

அந்த அரிய அழகுகளைப் படமெடுத்தலிலேயே எனது நாள் பொழுதைச் செலவிட்டேன். ஆனால் அப்படங்கள் எல்லாம் பெர்சனல்..! ;-) (இதான்யா இவன்கிட்ட பிடிக்காததே! டைம் பார்த்து நழுவிடறானே என்று கவுண்டர் பாணியில் புலம்புகிறீர்களா..? Cooooooollll!)

மதியம் உண்ட சோறும், கூட்டும், பொறியலும், இனிப்புச் சட்னிகளும், மூன்று வித தேன் பாயசங்களும், சாம்பாரும், மோரும், இனிப்பு அப்பமும்.... அடடா... என்ன சுவை! எத்தனை மணம்..! கையெல்லாம் ஒட்டிக் கொண்டே வந்தது!

பிறகு பற்பல நிகழ்ச்சிகள் நடந்தன. மிமிக்ரி, ட்ரெஷர் ஹண்ட் என்றெல்லாம்! நமக்கெதற்கு அதெல்லாம்! நாம் தான் வேறு விதமான ட்ரெஷர் ஹண்ட்களில் பிஸியாக இருக்கிறோமே!

போதும்பா..! ஒரு நாள் சாப்பிட்டதே, ஆறு மாசத்துக்கு தாங்கும் போல...!

ங்...! சொல்ல மறந்தேனே! எங்கள் பூக்காலம் இரண்டாம் பரிசு பெற்றது!

Sunday, September 07, 2008

என்ன ஊருய்யா இது?

நேற்றில் இருந்து வானம் பளிச்சென்றிருந்தது. பத்து மணிக்கு மேல் வெயில் அடித்து சூடுபடுத்திக் கொண்டிருந்தது. அதை நம்பி, இருந்த கொஞ்ச துணிகளைத் துவைத்துக் காயப் போட்டு விட்டு, குளிக்கப் போகும் வரை வானம் வெயிலடித்தது. குளித்து விட்டு வந்து பார்த்தால், கருமேகங்கள் சுழன்றன. அவசரமாக ஓடிப் போய்க் கொஞ்சமாய்க் காய்ந்திருந்த துணிகளை எடுத்து வர வர தூற ஆரம்பித்து, அதிகமாகி, வலுவாகி பெய்யத் தொடங்கியது.

கொஞ்ச நேரத்தில் மீண்டும் க்ளியரானது. வெளியே ஷாப்பிங் சென்று தம்பானூரில் பிக் பஸாருக்குள் நுழைந்து வேடிக்கை பார்த்து விட்டு வெளியே வந்தால், காற்று ஜில்லென்று வீசியது. இந்தியன் காஃபி ஹவுஸுக்குச் சென்று டின்னர் ஆர்டர் செய்து விட்டு காத்திருந்த நேரத்தில் வெளியே எட்டிப் பார்க்க, நியான் மஞ்சள் வெளிச்சத்தில் துளிகள் வெகு பலமாய்க் கொட்டிக் கொண்டிருந்தன.

வீட்டுக்கு வரும் வரை மழை.

இன்று காலையில் பத்து மணிக்கு எழுந்து பார்த்தால், செம வெயில்! 'அடடா , இன்று துவைத்து காயப் போட்டிருக்கலாமே!' என்று ஆதங்கப்பட்டு, கொஞ்ச நேரம் வலை வீசி விட்டு, வெளியே வந்தால், அடக் கடவுளே! சடசடவென கருகும்மென்ற மேகங்கள் கூட்டு சேர்ந்து, பெருமழை!

இப்போது வரை (14:10 Hrs) மாறி மாறி நிற்கிறது; தூறுகிறது; பெய்கிறது; சாரலடிக்கிறது; காணாமல் போகிறது;

வெளியே போகும் ப்ளான்கள் மாறி மாறி...

என்ன ஊருய்யா இது?

வானில் இருக்கும் மாகடலில் இருந்து கண்ணுக்குத் தெரியாத கோடிக்கணக்கான தொலைதூர நட்சத்திர ஓட்டைகள் வழியாக நீர்த் துளிகள் பெய்யும் போது, மம்மூக்கா சொன்னது போல், 'நாலு சுவருக்குள் வாழ நீ ஒரு கைதியா?' என ம.சா. போட்டு உலுக்கியதில், வெகுண்டெழுந்து 'ஆஹா எழுந்தது பார் யுகப்புரட்சி' என்று வீறு கொண்டு உறக்கத்தில் இருந்து உதறிக் கொண்டு, குளிரில் ஒரு சிறு குளியல் போட்டு விட்டு கிளம்பினேன் கடற்கரைக்கு!

ஈரப் பாலித்தீன் பாவாடைகள் மறைத்திருந்த ஜன்னல்களின் வழி ஈரம் சிலுசிலுவென அடித்துக் கொண்டேயிருக்க, ஆட்டிங்கல் செல்லும் தகர நகரப் பேருந்தில் ஒரு சீட்டுக்கு அல்லாடி, பிடித்து 'அப்பாடி' என்றமர்ந்தேன். எனதருமை மல்லு குட்டிகளும், சேட்டன்களும் தமது மஹாராஜாவின் வருகைக்காக தயாராவதை, காற்றில் பறக்கும் கருங்கூந்தல்களூம், நுனியில் மடித்துப் பிடித்துக் கொண்டு அங்குமிங்கும் நடைபயில்தல்களும் காட்டியதை கவனித்துக் கொண்டே கழக்குட்டம் வந்தடைந்தேன்.

கும்பிட்டுத் தொழத்தக்க கூகுள் மேப்ஸில் கண்டிருந்தேன், கழக்குட்டத்தின் அருகாமையிலேயே இருக்கும் ஒரு கடற்கரையை! 'பள்ளித்துற' என்ற ஒரு பாங்கான பெயர் அவ்விடத்திற்கு! ஓர் ஆட்டோ பிடித்தேன்! ஐம்பது ரூபாய் என்றார் அதன் ஓட்டுநர்! மழை குலைத்துப் போட்டிருந்த அம்மைத் தழும்புச் சாலைகள் வழி ஆட்டோ, ஆடி, ஆடி சென்றது!

நிறுத்தியது ஒரு கை! இரும்புக்கை! மாயாவியுடையது அல்ல, மத்திய ஸர்க்காருடையது! ஆம்! அந்த இரும்புக்கை, இருப்புப் பாதையின் தடுப்புக்கை! கொஞ்ச நேரத்தில் கடக்குமாம், ஒரு நெடும் மலைப்பாம்பு! அப்புறத்தும் இப்புறத்தும் எத்துணை வண்டிகள்! ஆட்டோ, சைக்கிள், கார், லாரி, பைக்! சில சின்னஞ் சிறுசுகள் துணிந்து கடந்தன! இளங்கன்றுகள்!

காத்திருந்தோம்! காத்திருந்தோம்! கட்டுண்டோம்! 'இனி பொறுப்பதில்லை, தம்பி எடு எரிதழலை', பீடி பற்ற வைத்துக் கொள்கிறேன் என்று டிரைவர் புகைக்கத் தொடங்குமுன், பெரும் மின்வண்டி தடதடவென கடந்தது!

ஜன்னல் முகங்கள் எங்களை ஒரு பொருட்டாய்ப் பார்ப்பதை உணர்வதற்குள், பெரும் அசுரனைப் போல், ஓடி மறைந்தது ரயில்! திறக்கவில்லை, தடுத்திருக்கும் வலுக்கரம்! என்ன காரணம் என்று யோசித்துப் பார்ப்பதற்குள், எஞ்சின் ஒன்று மட்டும் கடந்தது, ஒரு பூனைக்குட்டி போல்!

சீறின வாகனங்கள்! பாய்ந்தன பாதையில்!

கொஞ்ச நேரத்தில் சாலையில் நல்ல முன்னேற்றம்! அவ்வளவாய் குழிகள் இல்லை! இருபுறமும் பச்சை தென்னை மரங்கள்! நீரோடைகள்! அமைதியான ஊர்கள்! அதன் பெயர் 'மேனன்குளம்'! பெருங்கடல் ஓர ஊரின் பேர் குளம்! என்ன முரண்!

பள்ளித்துற செல்ல வேண்டுமா, இல்லை அலைகள் பாயும் பீச் என்றால் மதியா? பீச் மட்டுமே என்றதால் பத்து ரூபாய் மிஞ்சியது! ஒரு கடற்கரையில் இறக்கி விட்டு, காணாமல் போனார் பாட்ஷா!

ஆஹா! என்னவென்று சொல்வேன்! ஆங்கே கண்ட எழிலை! யாருமற்ற தனிமையில் நானும், ஒரு கடலும்! வழக்கமாய் ஏதோ சிறிது கூட்டம் இருக்கும், இன்று மழை என்பதால், யாருமில்லையாம்!

எப்பேர்ப்பட்ட கடல்!

பொங்கிப் பாய்ந்தது! ஹோவென எழும்பியது! அமைதியாக வரவில்லை! வெவ்வேறு திசைகளில் இருந்து வெவ்வேறு வேகங்களில் வீசுகின்ற பெருங்காற்றுகளின் விளைவாய் ஒன்றுடன் ஒன்று மோதின! நுரைகள் தெறித்தன! 'உன்னை அள்ளி விழுங்கப் போகிறேன், பார்' என்பது போல் திறந்த வாயுடன் ஒரு பழுப்பு நிறக் கரைசலாய் எழுந்து, விழுந்து, விரிந்து, மணல் மேடுகளைக் கவ்விப் படர்ந்தன!

அடிவானம் முழுதும் மேக நிறம் பூண்ட அரபிக் கடலன்றோ இது? பிரபஞ்ச நாதம் இது தானோ என்பது போல், ஓங்காரச் சப்தம்! ஆங்கார ஒலி! எத்துணை எத்துணை கோடி நூற்றாண்டுகள் நில்லாது, ஓயாது, சாயாது, தேயாது தோன்றிக் கொண்டேயிருக்கும் பேரொலி!

'சிறு மழையின் நனைதலுக்கு பயந்து, ஒற்றைக் குடையுடன், சண்டே லீவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் வெட்டித்தனமாய் என்னைக் காண ஸ்ரீகார்யத்தில் இருந்து வந்திருக்கும் மானிடனே! நீ எத்தனை சிறியவன்! நான் ஓர் அறை விட்டால் தாங்குவாயா? உனக்குத் தான் எத்தனை கர்வம்! எத்தனை ஆணவம்! நான்கு போட்டோக்கள் பிடித்து விட்டு நாற்பது பக்கத்திற்கு கட்டுரை எழுத, சரக்கு தேட வந்தவனே! அளந்து பார்! எத்த்னை அலைகள்! எண்ணிப் பார்! எத்தனை நுரைகள்! அலைகள் வந்து விழுந்து நழுவிய பின் மண்ணில் எழும் காற்றுத் துளைகள் தான் எத்தனை! நான் என்றாவது கர்வம் கொள்கிறேனா? போ! வேலையைப் பார்! நாளைக்கு ஆபீஸுக்குப் போக வேண்டும்! துணிகளை அயர்ன் செய் போ!' என்றது கடல் என்னிடம்!

நானூறு தப்படிகள் நடந்தேன் நான்! 'யாரது புதியவன்?' என்பது போல் சில பைரவர்கள் விரோதமாய்ப் பார்த்தார்கள்! ஆனாலும் அவர்கள் தம் நா அசையவில்லை! கண்களில் குடி கொண்டிருந்த குரோதமும் கொஞ்ச நேரத்தில் குறைந்து போய் பின் காணாமல் போய், என்னை கண்டு கொள்ளவில்லை!

சில படகுகள் கூரை கட்டியிருந்தன! சில கவிழ்ந்தும்! சில வலைகளோடு நனைந்திருந்தன!

அலைகள் வந்து செல்லும் புள்ளியிலிருந்து பத்து மீட்டர் தொலைவுக்குள்ளேயே குடிசைகள்! தென்னை மரங்கள்! ஆம், மீனவ நண்பர்களின் வாழிடங்கள்!

மிகத் தூய்மையாய் வாழ்பவர் யாராயினும் இவ்விடம் வந்தால், ஐந்து நிமிடங்களுக்குள் கட்டாயம் வாந்தி எடுப்பர்! இல்லையேல் ஓட்டம் பிடிப்பர்!

மீன் நாற்றம்! பழகிக் கொண்டால் பனிப்பிரதேசத்திலும் பாயா சாப்பிடலாம் எனில், இங்கே மூச்சு முன்னூறுக்குப் பின், மறைந்து போயிற்று, மறந்தும் போயிற்று எனக்கு!

நம்மவர்கள் நல்லவர்கள்! கவலையே இன்றி, கடன் கழிக்கிறார்கள் கடற்கரையிலேயே! பிரம்மாண்ட பேரண்டக் கடல் நீர், கால் கழுவப் பயனாகிறது! அமரும் போது, குடை பிடித்துக் கொண்டார்கள்! ஓ! மழைக்கு பயந்தா? நினைத்தேன் நான்! இல்லை, சுற்றி வரும் நாய்களுக்கு அஞ்சி! நல்லதோர் உணவிடுகிறோம் நாய்களுக்கு நாம்!

ஒருபுறம் சென்றேன் சிறு தொலைவு! பின் வந்த வழியே மீண்டும் நடந்தேன்! கடலில் இருந்து கண்களைப் பெயர்த்தெடுத்து குடியிருப்புகள் மேல் வீசி எறிந்தேன்! காகங்களின் கூட்டங்கள் தான் எத்தனை! ஒரு தேவாலயம் உச்சியில் சிலுவை கொண்டு நின்றிருந்தது! ஒரு பாட்டி முகத்தின் முகட்டில் முட்டுக் கொடுத்து! கறுப்பான மீனவர்கள் ஆங்காங்கே கலந்தாலோசித்துக் கொண்டிருந்தனர்!

ஒரு பெண் வீட்டு வாசலைக் கூட்டிக் கொண்டிருந்தார்! அத்தனை ஆக்ரோஷ கடலின் பேரிரைச்சலிலும், அவர் கூட்டும் ஒலி கேட்டது, நமது Psycho Acoustic சிஸ்டத்தின் Logaraihmic Response உணர்ந்து மகிழ்ந்து, நன்றினேன்! சோறு போடும் துறை அல்லவா?

போதும், திரும்பலாம் என்று வெளி வந்தேன்! பேருந்து வர பலகாலம் ஆகும் என்று சொன்னார்கள், காத்திருந்தே முடி நரைத்த சில மூதாதையர்கள்! வயிறு வலித்தது, பசி கிள்ளியதால்! பார்த்தேன் சுற்றுமுற்றும்! ஒரு மளிகைகடை!

கேரளாவில் சீப்பாய்க் கிடைப்பவைகளில் ஒன்றான வாழைப்பழச் சீப்பு ஒன்று வாங்கினேன்! நடக்கலாம், வெறும் நான்கு கி.மீ. தானே என்ற நம்பிகையில் நாலு எட்டு வைத்தேன்!

அப்பரல் பார்க் அழகாய் எதிர்ப்பட்டது! சாலையெங்கும் எட்டிப் பார்த்தால், என் முகத்திற்குப் பழுப்புச் சாயம் பூசிக் காட்டும் சேற்றுக் கலங்கலில் மழைத் தேக்கங்கள்! வயற்காடுகள்! பளிச்சென பல வீடுகள்! அலங்காரமாய், அபாரமாய், ஆடம்பரமாய்.. எப்படி இருந்தாலும், சிறு சிறு செடிகள்! தோட்டத்திற்கென்று கால்வாசி இடமாவது விட்டிருக்கிறார்கள்!

ஒரு டீக்கடையில் சாயா! அங்கே 'காதல் ரோஜாவே'யின் சோக பியானோ இசை ஏதோ ஒரு ரேடியோவில் இருந்து வழிந்தது! அதே பழைய கொதிக்கும் பால் அண்டா! பழைய இட்லித் துணியில் செய்த டீத்தூள் வடிகட்டி! கண்ணாடித் தம்ளர்கள்! வெந்நீரில் மூன்று முறை நனைத்து 'கழுவல்'! இதெல்லாம் எப்போது மாறும் என்று பார்த்தால், பக்கத்துக் கடை என்ன தெரியுமா? 'Education Consultancy. Want Australian Visa? Contact Us'! என்ன கொடுமை கேரளா இது!

அவ்வப்போது சில காட்சிகளை சிறைப்படுத்தினேன் சீனச் சின்னச் செல்லில்! நிற்கும் போதெல்லாம், தலையில் சொட்டிக் கொண்டே இருந்தன, முந்தின மழையின் தேங்கியிருந்த மிச்சத் துளிகளை கனிந்து, சாய்ந்திருந்த பச்சை ஓலை தென்னங் கீற்றுகள்!

மெதுவாக நடந்து, வாழைப்பழங்களை உரித்து உள்ளே தள்ளி கொண்டே, ரயில்வே ட்ராக்கை அடைந்தேன்! 'தாமரை இலைத் தண்ணீர் போல்' ஒட்டியும் ஒட்டாமலும் இணை கரங்களாய் சென்றிருந்தன இரும்புத் தடங்கள், எந்த சிறையிலோ, எதற்கோ காவலில் இருந்த யாரோ சில கைதிகள் உடைத்த கற்களின் மேல்!

ஊருக்குள் நுழைந்தேன்! பகவதி கோயில்! உள்ளே நுழையும் முன், ஆச்சரியம்! 'கணபதி அருள் தருவாய்' என்று செம்மொழியில் பாடிக் கொண்டிருந்த சீனியர் சீர்காழியாரின் குரல்! காதுகளில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது!

சில புத்தகங்கள், மனோரமா, க்ருஹலக்ஷ்மியின் ஓணம் சிறப்பிதழ்கள் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தால், இந்த வார கோட்டா 19:00 - 19:30 மின் கட்!

பொங்கு மாக்கடலும், தனிமையின் நிறம் பூசிய கருமேகக் கூட்டங்களும்!



அரபி ஆழியும், ஆகாயக் குளிர்ப் பந்தலும்!



என்னோடு எஞ்சியிருந்த பைரவரும், காக்கைக் கூட்டங்களும், தென்னந் தோப்புகளும், தேங்கி நிற்கும் படகும், மழைத் துளிகள் தளும்பும் வானப் பரப்பும்!





நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே!



ஆழக் குழி தோண்டி அதிலேயொரு முட்டை இட்டு, அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை!



SBT-ல் கார் லோன் வாங்க அப்பாவிக் கணவன் காக்காவை நச்சரிக்கும் மனைவிக் காகம்!



பழுப்பு முகம் காட்டும் சாலையோர மழை மிச்சங்கள்!



நிமிர்ந்து நில்!



நீரோடைக் குறுங் கால்வாய்கள்!





இரட்டை இரும்புத் தண்டவாளத் தடங்கள்!



***

மழை தொடர்பான சில பதிவுகள் ::

இவன்..!

தூறல் போடும் மேகங்கள்.