Friday, July 04, 2008

ஆத்மா, நித்யா மற்றும் அவர்.

"ப்படி ஸார் இருக்கீங்க...?"

"அடடே..! ஆத்மா நீயா..? நித்யாவும் வந்திருக்காளா..? ஜில்லு கூடவா..? ஜில்லு வா..! மடியில உட்கார்ந்துக்கோ..!"

"சார்..! நல்லா இருக்கீங்களா..?"

"எனக்கென்னப்பா குறைச்சல்..! நீ தான் பாக்கறியே! இந்தப் பக்கம் வைகுண்டம். பெருமாள் பார் எவ்ளோ ஆனந்தமா சயனத்தில் இருக்கார்.

'பச்சை மாமலை போல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண் அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே எனும் இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே'னு அன்னிக்கு தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொன்னா மாதிரியே படுத்திருக்கார் பார்த்தியா..? அன்னிக்கு சொன்ன மட்டுக்கு இன்னும் அதே போல் இருக்கார். ஐன்ஸ்டீன் சொன்ன ரிலேட்டிவிட்டி தியரிபடி அரங்கனுக்கு மட்டும் டைம் ஸ்கேல் மூவ் ஆகறதே இல்லை போல இருக்கு..! நித்யா நீயும் சேவிச்சுக்கோ! திமலால பார்த்தது. அங்க ஜருகண்டி, ஜருகண்டினு வெரட்டிடே இருந்தான் இல்லியா..? இங்க அப்படி எல்லாம் யாரும் கிடையாது. கண் குளிர சேவிச்சுக்கோ! ஜில்லு நீயும் பாரு..! உம்மாச்சி. எங்க, திருப்பாவை ஒண்ணு சொல்லு!"

"மாய்கயித் திங்கள் மயி நியைந்த..."

"போறும்! போறும்..! குழந்தைக்கு மூச்சு முட்டறது..!"

"ஆத்மா..! இந்தப் பக்கம் பாரு..! நரகம்னு நம்ம ஊர்ல சொல்றா இல்லியா, அது! மார்க் ட்வைன் சொன்னாப்ல, Go to Heaven for the climate, Hell for the company. ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் இங்க தான் இருக்காங்க. அப்பப்போ போய் பேசிட்டு வர்றதுல நேரம் போறதே தெரியலப்பா. அங்க இருக்கும் போது அடிச்சிக்கட்டவா எல்லாரும் இங்க தான் இருக்காங்க...! பல பேர் கூட பேசும் போது சுவாரஸ்யமான தகவல்களா கொட்றது...! இதெல்லாம் அங்க இருக்கும் போதே தெரிஞ்சிருந்தா இன்னும் நிறைய 'கற்றதும் பெற்றதும்' எழுதி இருக்கலாம்னு இப்ப தோணுது..!"

"ஸார்..! இங்க எப்படி நீங்க டைம் பாஸ் பண்றீங்க..!"

"சுத்திப் பார்...! எல்லாம் புக்ஸ்! சி.டி.ஸ்..! டி.வி.டி.ஸ்..! படிக்க வேண்டிய புகஸ் நிறைய இருக்குப்பா இங்க..! யாழ்ப்பாணத்தில் கொளுத்தினாங்களே, 'ஒரு லட்சம் புத்தகங்கள்' - எல்லாம் இங்க தான் இருக்கு..! எல்லாத்தையும் எடுத்து வெச்சுப் படிச்சுட்டு இருக்கேன். எவ்ளோ நல்லா இருக்கு தெரியுமா..? யாழ்த் தமிழ்ல ஸ்க்ரீன்ப்ளே தான் எழுதி இருக்கேன். ஞாபகம் இருக்கா..? கன்னத்தில் முத்தமிட்டால். ஒரு கதை கூட எழுதி இருக்கலாம்...."

"ஸார்..! நீங்க வந்திடுங்களேன் அங்க..! எங்களுக்கெல்லாம் தனியா இருக்க பயமா இருக்கு..! நீங்க இல்லாம..!"

"நான் எப்படி இல்லாம போவேன்..? என்னோட புக்ஸ் எல்லாத்திலயும் நான் எப்பவும் இருந்துக்கிட்டே தானே இருப்பேன். Anais Nin என்ன சொல்லி இருக்கா..? People living deeply have no fear of death. என் எழுத்துக்கள்ல நான் ஆழந்து இருப்பதால் எனக்கு மரணம் இல்லை, அப்படினு இதை நான் ட்ரான்ஸ்லேட் பண்ணிக்கறேன். என்ன சொல்ற நித்யா..?"

"இப்போ சயின்ஸ் பிக்ஷன் ஸ்டோரிஸ் எல்லாரும் எழுதறாங்க..! நீங்க இருந்தா நல்லா இருந்திருக்குமே சார்...!"

"பாரு நித்யா..! இது ஒரு தொடர்..! நான் இல்லாட்டி என்ன இப்போ..? நாற்பது வருஷமா நான் ரெண்டு தலைமுறைகளை வளர்த்திருக்கேன். அந்த குழந்தைகள் எல்லாரும் என்னை விட சிறப்பா வர்றாங்க. வருவாங்க. வளர்வாங்க. நான் ஒரு தகப்பன் மாதிரி இங்க இருந்து அதை எல்லாம் படிச்சிட்டு தான் இருக்கேன். நான் என்னால முடிஞ்ச அளவுக்கு அவங்களுக்கு எனக்கு என்ன தெரியுமோ அதை எல்லாம் குடுத்திருக்கேன். இனிமேல் அவங்க சாமர்த்தியம். 'தம்மின் தம் மக்கள் அறிவுடைமை'. யாரு சொன்னா தெரியுமா..?

ஜில்லு
நீ
சொல்லு..?"

"வல்லுவல் லாலா...."

"கரெக்ட்..."

"இனிமேல் நாங்க எல்லாரும் அவ்ளோ தானா..? எங்களுக்கு இயக்கங்கள் கிடையாதா..?"

"பாருப்பா..! உங்களுக்கு அழிவு இல்லை. என்னைப் பாரு..? மல்டி ஆர்கன் ஃபெயிலியர் அது இதுனு வந்து இப்போ ரங்கனடி அடைஞ்சிருக்கேன். உனக்கு, நித்யாவுக்கு, ஜில்லுக்கு, கணேஷ், வசந்த் எல்லாரும் சாஸ்வதம். இண்டர்நெட் மாதிரி..! என்றைக்கும் இருப்பீங்க..! பெருமாள் மாதிரி..! கவலைப்படாதீங்க..! நான் கூடிய சீக்கிரம் வருவேன். இங்க படிக்க வேண்டிய புக்ஸ் எல்லத்தையும் படிச்சுட்டு நான் இங்க சும்மா உட்கார்ந்து பல் குத்திட்டு இருப்பேன்னு நினைக்கிறயா..? நெவர். அது என்னால முடியாது. நான் கத்துக்கிட்டதை எல்லாம் என் குழந்தைகளுக்கு சொல்லித் தராம என்னால இருக்க முடியுமா..?

இந்த அரங்கன் தான் ஆழ்வார்கள் பழைய மெதட்லயே பாசுரம் சொல்லிட்டு இருக்காங்க. போர் அடிக்குது. நீ கொஞ்சம் எளிமையா சொல்லு..? ஆல்ரெடி கல்கில சொன்னவன் தானே நீ..? அப்டினு வரச் சொல்லி இருக்கான். அவனுக்கு தினம் பாசுரம் சொல்றேன்.

அப்புறம் பாட்டியை தினம் போய்ப் பாக்கறேன். பாட்டிக்கு நான் இன்னும் 'பூனை பிரசவித்த மாதிரி சத்தம் எழுப்பும் புல்புல்தாரா' பேரன் தான். நான் புல்புல்தாரா தாண்டி, நயன் தாரா வரைக்கும் வந்தாச்சுனு சொன்னா இன்னும் மிரள்றா. அவளை அப்பப்ப நான் தான் போய் பார்த்துக்கறேன்.

இன்னும் ரங்கத்துல பார்த்த சீனு, கோவிந்த், மாஞ்சு, ரங்கு எல்லாரையும் பார்த்து பேசிட்டு தான் இருக்கேன்.

அப்பாவையும் கவனிச்சுக்கறேன். வரும் போது ஏதாவது புக்ஸ் கொண்டு வந்தியானு கேட்டார். புக்ஸ் எல்லாம் தரலைப்பனு சொன்னேன். பெங்களூர்ல இருக்கும் போது குரான் படிச்ச பழைய ஞாபகம்.

சரி..! நீங்க கிளம்புங்க. சுந்தர ராமசாமி கூட ஒரு டிஸ்கஷன் பண்ணிட்டு புதுமைப்பித்தனோடு டிபன் இருக்கு. அப்புறம் மைக்கல்சன் - மார்லே எக்ஸ்ப்ரிமெண்ட்ல எனக்கென்னவோ நம்ம கேனோபநிஷத்துல சொன்ன 'யார் காரணம்' அப்படிங்கற கேள்விக்கு பதில் இருக்கற மாதிரி தோண்றது. அதைப் பத்தி மை.மா.க்கு ஒரு மெயில் அனுப்பி இருக்கேன். போகணும். நீங்க கிளம்பறீங்களா..?

"சார்..! நாங்க போகணுமா..? நாங்களும் இங்கயே இருந்திடறோமே..?"

"நோ..! நோ..! நீங்க கண்டிப்பா போய்த் தான் ஆகணும். டோண்ட் வொரி. உங்களுக்கு எப்ப என்னைப் பார்க்கணும்னு தோணுதோ, அப்பெல்லாம் வாங்க..! பேசுவோம். நிறைய பேசலாம்..!"

"போய்ட்டு வர்றோம் சார்..!"

"பை..! பை..! ஸீ..யூ..!"

"ஜில்லி சாருக்கு டாடா சொல்லு..!"

"தாத்தா தா தா..!"

"டாடா...!"

"பெருமாளே..! இத்தனை புக்ஸையும் படிச்சப்புறம் என்னை மறுபடியும் ஒரு தடவை அனுப்பி வை..! நிறைய சொல்ல வேண்டி இருக்கு என் குழந்தைகளுக்கு...!"

பெருமாள் அரைக்கண்ணால் புன்னகைத்தார்.

Thursday, July 03, 2008

இன்று ஆச்சரியப்படுத்திய விஷயம்.



ஸ்பீச் கோடக் RFC 3951 பற்றி படிக்க நேர்ந்தது. அந்த எண்ணைப் பார்த்ததும் ஏதோ தொடர்பு இருப்பதாகப் பட்டது. கொஞ்சம் யோசித்ததும், சிக்கியது.

3 ஸ்கொயர் 9.
3 + 2 = 5.
3 - 2 = 1.

இது எப்படி சாத்தியம்..?

இதே போல் ரேண்டம் எண்களுக்கு முயற்சி செய்து பார்த்ததில், என்ன ஒரு ஆச்சரியம்...!

நானாக சில ரேண்டம் எண்களுக்கு முயற்சி செய்து பார்த்தேன். பின் சில நண்பர்களை அணுகி நம்பர்களை வாங்கினேன். எல்லா எண்களும் அழகாக தொடர்புச் சங்கிலியில் (connection chain) மாட்டின.

ஆச்சரியப்பட்டேன்.

ஒரு தியரி ஃபார்ம் ஆகியது. அது கடைசியில்..!

இரு உதாரணங்கள் பார்ப்போம்.

1.
இந்த எண்ணை எடுத்துக் கொள்ளுவோம்.

7651 7655 3218 86230

இது ஒரு எண் தொடர். அடுத்தடுத்த எண்களுக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை அல்லவா? சரி. இப்போது நம் இடது புறம் இருக்கும் 7-ன் நிலையை முதலாம் புள்ளி என்றும், நம் வலது புறம் இருக்கும் 0-ஐ 17வது புள்ளி என்றும் கொள்ளுவோம்.

அருகருகில் இருக்கும் எண்கள் மற்றும் அவற்றின் கூட்டுத் தொகை வரும் எண்களை இணைத்துக் கொள்வோம். இப்படி :

5 (@புள்ளி 3) + 1 (@புள்ளி 4) = 6 (@புள்ளி 2)
3 (@புள்ளி 9) + 2 (@புள்ளி 10) = 5 (@புள்ளி 8)
5 (@புள்ளி 7) + 1 (@புள்ளி 11) = 6 (@புள்ளி 14)

முதல் ஸ்டெப் :: எவ்வளவுகெவ்வளவு அருகருகில் மேற்கண்டது போல் கூட்டு அமைகிறதோ அமைத்துக் கொண்டு சங்கிலிகள் அமைத்துக் கொள்வோம்.

இனி மிச்சம் இருக்கின்ற வஸ்தாது எண்களை வரிசையாக அமைப்போம்.

7768 8230

இவர்களை நமது முதல் ஸ்டெப்பின் படி ஜோடி அமைக்க முடியாது. அதனால் வேறு ஒரே நீண்ட செயின். அப்படியே எல்லா எண்களையும் இணைக்க வேண்டும்.

அமைப்போமா..?

7 (@புள்ளி 1) * 7 (@புள்ளி 5) = 49. - a.
8 (@புள்ளி 12) * 8 (@புள்ளி 13) = 48. - b.
3 (@புள்ளி 16) - 2 (@புள்ளி 15) = 1. - c.

b + c - a = 0 (@புள்ளி 17).

எல்லா எண்களையும் இணைக்க முடிந்ததா...? ஒன்றும் விடுபவில்லையே..!

இப்ப பேப்பர் அண்ட் பேனா எடுத்து இந்த நம்பர்ஸை எழுதி நாம் வடிவமைத்த படி கோடுகளால் இணைத்துப் பாருங்கள். ஆச்சரியம் அல்லவா..?

நாம் எடுத்துக் கொண்டது என்ன? ஒரு ரேண்டம் எண். அதன் ஒவ்வொரு டிஜிட்டும் தனித்தனி. அடுத்தடுத்த எண்களுக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை. ஆனால் நாம் நான்கு அடிப்படை ஆபரேஷன்களில் (இங்கு மூன்று மட்டும் தான், + , - , *) எல்லா எண்களையும் எப்படி அழகாகத் தொடர்பு படுத்த முடிகின்றது...?

சரி...! இன்னொரு உதாரணம் பார்ப்போம். கொஞ்சம் பெரிய எண்...! இந்த தபா கொஞ்சம் கஷ்டமாக.! ஸீரோ வேண்டாம்.

2.

2965 4315 3752 8169 3281 5735 2787 3529 5324 5737 469

யப்பா..! கொஞ்சம் பெருசு தான் இல்லியா..? (ஒரு வேளை கி.பி.25000ல எல்லாரோட ஃபோன் நம்பரும் இப்படி தான் இருக்குமோ..? அடடா...இதை வெச்சு ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் எழுதி இருக்கலாமே...!)

ஓ.கே. இப்ப நாம ஃப்ர்ஸ்ட் ஸ்டெப் எடுத்து வைப்போம்.

பக்கத்துப் பக்கத்துல இருக்கற ஜோடிகளை சேர்ப்போம்.

5 (@புள்ளி 4) + 4 (@புள்ளி 5) = 9 (@புள்ளி 2)
3 (@புள்ளி 6) + 1 (@புள்ளி 7) + 3 (@புள்ளி 9) = 7 (@புள்ளி 10)
5 (@புள்ளி 11) + 2 (@புள்ளி 12) + 1 (@புள்ளி 14) = 8 (@புள்ளி 13)
6 (@புள்ளி 15) + 3 (@புள்ளி 13) = 9 (@புள்ளி 16)
5 (@புள்ளி 21) + 2 (@புள்ளி 18) + 1 (@புள்ளி 20) = 8 (@புள்ளி 19)
5 (@புள்ளி 24) + 2 (@புள்ளி 25) = 7 (@புள்ளி 22)
5 (@புள்ளி 30) + 3 (@புள்ளி 29) = 8 (@புள்ளி 27)

5 (@புள்ளி 33) + 2 (@புள்ளி 31) + 2 (@புள்ளி 35) = 9 (@புள்ளி 32)
3 (@புள்ளி 34) + 4 (@புள்ளி 36) = 7 (@புள்ளி 38)
3 (@புள்ளி 39) + 4 (@புள்ளி 41) = 7 (@புள்ளி 40)

ஓ.கே..! அடுத்தது மிச்சம் இருக்கற நம்பர்ஸ்.

2653 7756 9

இவங்களை இப்படி சேர்ப்போம்.

2 (@புள்ளி 1) * 6 (@புள்ளி 3) - 5 (@புள்ளி 8) = 7 (@புள்ளி 26)

3 (@புள்ளி 23) + 7 (@புள்ளி 28) - 9 (@புள்ளி 43) + 5 (@புள்ளி 37) = 6 (@புள்ளி 42).

ஆச்சரியமா இருக்கு இல்லையா..?

இதெல்லாம் எப்படி பாஸிபிள்..?

நீங்களும் உங்களால முடிஞ்ச அளவுக்கு பெரீய்ய்ய்ய்ய்ய ரேண்டம் எண்ணை ப்ரிப்பேர் பண்ணி, இது போல் அமைச்சுப் பாருங்க. கண்டிப்பாக அமைக்க முடியும்.

எனக்கு சில சந்தேகங்கள் வருகின்றன.

1. இது போல ரேண்டம் நம்பருக்குள்ள இருக்கின்ற டிஜிட்ஸ் எல்லாத்தையும் அழகாக செயின் போட்டு இணைக்க முடிந்தால் எப்படி இது ரேண்டம் எண் ஆகும்..?

2. இந்த ப்ராபர்ட்டி ஏற்கனவே தெரிஞ்சது தான..? இல்லை நாம் இதை கவனிக்காமல் இருக்கிறோமா..?

கடவுள் ஒரு கணிதன் என்பது மற்றுமொரு முறை உறுதிப்படுத்தப்படுகின்றது.

இது புதுசுன்னா இதுக்கு காபிரைட் வாங்கலாம் என்று இருக்கிறேன். (அட, நிஜமா தாங்க...!)

தியரி ::


எந்தவொரு ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத ஒரு பெரிய குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ள ஓர் எண்ணில் உள்ள எல்லா தனித்தனி எண்களையும் எந்தவொரு எண்ணையும் விட்டு வைக்காமல் ஒன்றையொன்று ஒரே தொடர்பில் இணைத்து விட முடியும். ...!


இப்போது எழுதுகின்ற ட்ரெண்ட்படி, இதை கொஞ்சம் சோஷியாலஜி கூட மேப் செய்து பார்க்கும் போது கேயாஸ் தியரிக்கும், ஃப்ராக்டல்ஸுக்கும் ஒரு மேதமாடிக்கல் மாடல் போல் வருகின்றது.

அடுத்த கதையில் இதை அப்ளை செய்திடலாமா..?

படம் நன்றி :: http://www.jor-on.com/blog/wp-content/uploads/2007/12/mathematics_theproblem.jpg

Monday, June 30, 2008

விதி எனலாம்!

"...எனவே குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணசாமி குற்றவாளி என சாட்சிகள் மூலம் உறுதிப்பட்டு விட்டதால் அவருக்கு மரண தண்டனை அளிக்க உத்தரவிடுகிறேன்..!" பேனா நுனியை உடைத்தார்.

"அடுத்தது என்னப்பா..? காஞ்சனா ரேப் கேஸா..?"

கிருஷ்ணசாமி இரு காவலர்கள் துணையுடன் கூண்டில் இருந்து இறங்கி நடந்தார். வக்கீலைப் பார்த்தார்.

"ஹை கோர்ட்டுக்கு அப்பீல் பண்ணுங்க..!" விலகி நடந்தார்.

சிறையில் இருவரும் சந்தித்தனர்.

"என்ன அழகு..? கேஸ் ஹை கோர்ட்டுக்கு போனா நிக்குமா..?"

"கஷ்டம் தான் ஸார்...! விட்னஸ் எல்லாம் நமக்கு எதிராகவே இருக்காங்க. பணத்தால் வாங்கறதும் ரொம்ப கஷ்டம். சுப்ரீம் கோர்ட் வக்கீல் யாராவது இறங்கினா தான் உண்டு..! அப்படியும்..."

"புரியுது..! நீங்க ஒண்ணு பண்ணுங்க! நம்ம இன்ஸ்டிட்யூட்ல விநாயக்ராம்னு ஒரு ரிஸர்ச் அனலிஸ்ட் இருப்பாரு..! அவரை நாளைக்கு ஜி.ஹெச்.க்கு வரச் சொல்லிடுங்க...!"

"சார்..! ஜி.ஹெச்.ல...?"

"இன்னும் கொஞ்ச நேரத்துல நெஞ்சு வலிக்குதுனு படுத்திடுவேன். அங்க தான் அட்மிட் பண்ணுவாங்க. இன்ஃப்ளூயன்ஸ் யூஸ் பண்ணி நம்ம ஹாஸ்பிடல்க்கு மாறிக்கலாம். அப்புறம் நான் ஒரு ப்ளான் வெச்சிருக்கேன்...!"

"ஓ.கே.சார்..!"

"விநாயக் வாங்க..! உங்க கிட்ட சில இரகசியங்கள் சொல்லணும்..! கேக்கணும்..!"

"சொல்லுங்க சார்..!"

"நான் பண்ணினது பெரிய தப்பா..? இல்ல. துரோகம் பண்ணின மனைவியைக் கொல்றது சரி. மிகச் சரியான செயல். என்ன சார் குறை வெச்சேன்? பணம். பணம். எத்தனை பணம்..! எத்தனை நகை? வீட்டுல, பீரோல, பேங்க் லாக்கார்ல எத்தனை பவுன்..! எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு அந்த சுகுமாரோட ஓடிப் போனா சார்..! பொறுக்கல! போட்டுத் தள்ளிட்டேன் ரெண்டு பேரையும். இது தப்பா..?"

"சார்! நம்ம நியாயங்கள் வேற. சட்ட திட்டங்கள் சொல்ற நியாயங்கள் வேற..!"

"நமக்காகத் தான் சட்டங்கள் இல்லையா..?"

"இது கொஞ்சம் குழப்பமான கேள்வி சார்..!"

"சரி! நான் உங்க கூட இந்த தேசத்தோட, இல்லை.. இந்த உலகத்தோட சட்ட திட்டங்களைப் பற்றி பேச விரும்பல. வக்கீல் சொல்லிட்டாரு, ஹை கோர்ட், சுப்ரீம் கோர்ட் போனாலும் கேஸ் நிக்காது. எனக்கு இந்த உலகத்துல வாழ பிடிக்கல. துரோகம் நிறைந்த உலகம். போட்டியாளரை அடியோடு ஒழிச்சுக் கட்ட என்ன வேணா செய்யும் இந்த உலகம். இல்லாட்டி பதினஞ்சு வருஷமா வேலை பார்த்த தோட்டக்காரர்ல இருந்து எல்லாரும் எனக்கு எதிரா விட்னஸ் பண்ண என்ன காரணம் இருக்க முடியும்..? பிற பிஸினஸ் புலிகள். நான் கறுப்பு முகமூடி போட்டு கயித்துல தொங்கி சாக விரும்பல. ஏதாவது ஊசி போட்டு கொன்னுடுங்க என்னை..! ப்ளீஸ்..!"

"சார்..! இது என்ன பேச்சு..! இன்னும் ஹை கோர்ட் இருக்கு! சுப்ரீம் கோர்ட் இருக்கு..! வி வில் ட்ரை அவர் பெஸ்ட்..!"

"இல்லை விநாயக்! நான் தப்பிச்சு வந்தாலும் என்னோட மாரல்ஸ் என்னை தினமும் கொல்லும். ரெண்டு பேரைக் கொன்னுட்டமேனு தினம் துப்பும். ப்ளீஸ்..!"

"ஸார்..! இப்ப உங்களுக்கு என்ன..? இந்த உலகத்தை விட்டுப் போகணும்! இந்த ஜனங்களைப் பார்க்கக் கூடாது. அவ்ளோ தான..? நீங்க சாகாம, இந்த உலகத்தை விட்டுப் போக என்னால ஹெல்ப் பண்ண முடியும்..! உங்க நினைவுகள் மட்டும் கொஞ்சம் நிரடும் அப்பப்போ! சமாளிச்சுக்கலாம்."

"என்ன ஒளர்றீங்க..? திரிசங்கு மாதிரி எங்கயாவது நடுவில தொங்க விடப் போறீங்களா..?"

"இல்லை அது புராணம். நான் சொல்லப் போறது சயின்ஸ்..! விளக்கமாவே சொல்றேன். கேக்கறீங்களா..?"

"ஓ.கே. சொல்லுங்க..!"

"ஷ்ரோடிங்கர்ஸ் கேட்னு ஒரு ஃபேமஸான எல்ஸ்பிரிமெண்ட் இருக்கு. ஒரு பெட்டிக்குள்ள ஒரு பூனையை விட்டாச்சு. அது அங்க இங்க அசையாம அடைச்சுட்டோம். அதை குறி பார்த்து ஒரு தோட்டாக்கள் நிரம்பிய துப்பாக்கி. அதோட ட்ரிக்கரை கண்ட்ரோல் பண்றது சில ரேடியோ ஆக்டிவ் அணுக்கள். அந்த அணுக்கள் சிதையும். ஆனா எப்போ சிதையும்னு ஒரு குறிப்பிட்ட டைம் குடுக்க முடியாது. random decay time. ஒரே ஓர் அணு சிதைஞ்சாலும் ட்ரிக்கர் சுண்டப்படும். துப்பாக்கி வெடிக்கும். பூனை காலி. பெட்டியை மூடி வெச்சிட்டோம். கொஞ்ச நேரம், ஒரு அரை மணி நேரம்னு வெச்சிக்கலாம். இப்போ அந்த பூனை உயிரோடு இருக்குமா, இல்ல செத்துப் போயிருக்குமா..?"

"பெட்டியைத் திறந்து பார்த்தா தெரிஞ்சிடப் போகுது..!"

"எக்ஸாக்ட்லி! பட் பெட்டியை மூடி வெச்சதுக்கும் பெட்டியைத் திறந்து பாக்கறதுக்கும் இடைப்பட்ட நேரத்தில் பூனையோட கதி என்ன..? தெரியாது தானே..? பிஃப்டி பிஃப்டி பாசிபிளிடி இருக்கு இல்லையா..? அதுக்குத் தான் ஃபிசிஸிஸ்ட்ஸ் என்ன சொல்றாங்கன்னா, அந்த நேர இடைவெளில பூனை பாதி உயிரோடயும், பாதி இறந்தும் இருக்கும். நாம திறந்து பாக்கும் போது அந்த ரெண்டு வாய்ப்புகள்ல ஏதோ ஒண்ணை நூறு சதம் அடைஞ்சிருக்கும்.."

"பாதி செத்தும், பாதி உயிரோடவுமா..? நல்ல கதையா இருக்கு..!"

"இல்ல. இதுக்கு என்ன அர்த்தம் சொல்றாங்கன்னா... பூனையை அடைச்சு வெச்சதுக்கப்புறம் ரெண்டு பாதைகள்ல முடிவு போகுது. ஒண்ணுல பூனை உயிரோட இருக்கலாம். இன்னொண்ணுல செத்துப் போயிருக்கலாம். ரெண்டு ப்ராஞ்ச் பிரியுது. ஓர் உலகத்துல பூனை உயிரோடயும், மற்றோர் உலகத்துல செத்தும் போயிருக்கும். ரெண்டு உலகம் இருக்கு. நாம ஓர் உலகத்துல இருக்கோம். அடுத்தது. ரேஸுக்குப் போறீங்க. ஏழாவது குதிர கால்ல பணத்தைக் கட்றீங்க. நாலாவது குதிரை ஜெயிக்குது இங்க. வேறோரு உலகத்துல அஞ்சாவது ஜெயிக்கும். இப்படியே பத்து குதிரைங்க ஓடிச்சுனா, பத்து உலகங்கள்ல பத்து குதிரைகளும் ஜெயிக்கும். இப்ப பத்து உலகம் ஆச்சு. இப்படியே நாம செய்கின்ற ஒவ்வொரு சின்னச் சின்ன செயலுக்கும் ஏற்பட வாய்ப்பிருக்கின்ற பல கோடிக்கணக்கான ரிசல்ட்ஸ் பார்த்தோம்னா எண்ணவே முடியாத அளவுக்கு - இன்பினிட்டி - யூனிவர்ஸஸ் இருக்கு.

நாம அதுல ஒரு உலகத்துல சுத்திட்டு இருக்கோம்.

ஒரு மரம் இருக்கு. அதில இருந்து ஒரு கிளை பிரியுது. அதில இருந்து இன்னொரு சின்ன கிளை. அதிலிருந்து ஒரு காம்பு. ஒரு நரம்பு. இப்படி ஒவ்வொரு புள்ளியில இருந்து ஒரு ப்ராஞ்ச் பிரிஞ்சு போய்க்கிட்டே இருக்கு.

இந்த உலகம் அப்படி ஒரு ப்ராஞ்ச் மாதிரி போய்ட்டு இருக்கு.

இந்த தியரியைத் தான் பல்லுலக புரிதல் தியரினு (Many Worlds Interpretation - MWI) சொல்றாங்க.

இப்ப நம்ம கதைக்கு வருவோம். நிலைமை என்ன? நீங்க ரெண்டு கொலைகள் பண்ணியாச்சு. கோர்ட்ல கேஸ் நடந்து தூக்குனு சொல்லியாச்சு. உங்களுக்கும் வாழப் பிடிக்கல. இதெல்லாமே இந்த உலகத்தோட நிலைமைகள். நீங்க சொஸைட்டில ஒரு பெரிய புள்ளி. இது ஸ்டேஜ் அ. இப்ப தூக்குத் தண்டனை கைதி. இது ஒரு ஸ்டேஜ் எ. அ-ல இருந்து எ- வரைக்கும் ஒரு லைன்ல உலகம் வந்திருக்கு.

என்னோட ஐடியா என்னன்னா, இருக்கிற உலகங்களை அனலைஸ் பண்ணி எந்த உலகத்துல ஸ்டேஜ் அ இருக்கோ அங்க உங்களை அனுப்பி வைக்கிறேன். முடியும். அங்க இருந்து நீங்க மறுபடியும் நீங்க உங்க வாழ்க்கையைத் தொடர முடியும்."

கிருஷ்ணசாமி பிரமிப்பாய்க் கேட்டுக் கொண்டிருந்தார்.

"நீங்க சொல்றதெல்லாம் ஏதோ சயின்ஸ் பிக்ஷன் மாதிரி இருக்கு..!"

"இல்லை நிஜம்..! இந்த 22ன்ட் செஞ்சுரில நான் இந்த மெஷினை உருவாக்கியாச்சு...!"

"எப்படி அனுப்புவீங்க..?"

"கேளுங்க..! நம்ம உடல்ங்கறது என்ன? மூணு மெடீரியல்ஸ். உடல். இது மெஷின். உயிர். இது தான் கோர். சக்தி. மூணாவது நம்ம எண்ணங்கள். அந்த நினைவுகள் தான் உங்களையும், என்னையும், ஒவ்வொருத்தரையும் தனித்தனியா பிரிக்கறது. இது இல்லாம பார்த்தோம்னா உடலும், உயிரும் ஒண்ணு தான் எல்லார்க்கும். பஞ்ச பூதங்களால் ஆனது உடல். பிராண ஷக்தி தான் உயிர்.

ஸ்டேஜ் அல இருந்து ஸ்டேஜ் எ வரைக்கும் இருக்கற உங்க லைஃப் லைன்ல இப்போ இந்த மர்டர்ஸ், கோர்ட், கேஸ் ஜட்ஜ்மெண்ட் எல்லாம் ஏட் ஆகி இருக்கும். சோ, இப்போ நான் அனலைஸ் பண்ணப் போற உலகம் என்னென்ன கண்டிஷன்ல இருக்கணும்?

நீங்க மர்டர்ஸ் பண்ற வரைக்கும் இந்த உலகம் இருந்த ஸ்டேஜ்ல அந்த உலகம் இருக்கணும். நெக்ஸ்ட் உங்க மனைவி துரோகம் பண்ணாத பெண்ணாய் இருக்கணும். அவ்ளோ தான். நீங்க கவலைப்பட தேவையில்லை. அதுக்கெல்லாம் பக்காவா அல்காரிதம் எழுதி வெச்சிருக்கேன்.

இன்னொரு முக்கிய கண்டிஷன் இருக்கு. நான் சொன்னதில் இருந்து உங்களுக்கே புரிஞ்சிருக்கும். நான் அனுப்பப் போறது..."

"எண்ணங்கள். என் நினைவு அடையாளங்கள் மட்டுமே..!"

"எக்ஸலெண்ட்! ஸோ நம்ம கண்டிஷன்ல இன்னொண்ணும் ஏட் பண்ன வேண்டியது இருக்கு. அந்த லோகத்துல நீங்க உங்க இந்த நினைவுகளை ரிஸீவ் பண்ற நிலைமைல இருக்கணும். ஸோ, நீங்க கோமால இருக்கணும். மூணு கண்டிஷன்ஸ். உலகம் ஸ்டேஜ் அ வரைக்கும். கற்பு தவறாத மனைவி. உங்கள் உடல் இந்த எண்ணங்களை ரிஸீவ் பண்ணும் கோமா நிலைமை. டோண்ட் வொர்ரி. இருக்கற இன்ஃபினிட்டி பாசிபிளிட்டி உலகங்கள்ல கண்டிப்பா இந்த கண்டிஷன்ஸ்ல மேட்ச் ஆகிற உலகம் இருந்தே ஆகணும். இல்லாட்டி மேக்ஸ் ஃபெயில்.

உங்க நினைவுகளை அப்படியே எக்ஸ்ட்ராக்ட் பண்ணி, இந்த மர்டர் சிந்தனைகளை மட்டும் சுத்தமா ஃபில்டர் பண்ற ப்ரோக்ராம்ஸ் எல்லாம் நான் எழுதி வெச்சாச்சு. இதுல நான் இன்னும் கண்டுபிடிக்காத ஒண்ணு இருக்கு. உங்க எண்ணங்களை ஸேவ் பண்ண முடியாது. அப்படியே ட்ரான்ஸ்மிட் ஆகிட்டே இருக்கும் கண்டின்யுஸா..!

நீங்க அந்த உலகத்துக்கு போய் மறுபடியும் உங்க இயல்பான வாழ்க்கையை வாழலாம். 1000% காரண்டி நான்..."

"இஃப் இட்ஸ் பாஸிபிள் , தென் ஐ வில் பி ரெடி..!"

ருவரும் அந்த பிரம்மாண்ட மல்டி வேர்ல்ட் சியர்ச்சர் முன் அமர்ந்தனர். விநாயக் சில கமாண்ட்களைக் கொடுத்தார். கண்டிஷன்கள். பரபரவென கண்களெனத் தகும் எண்களும் எழுத்துக்களும் ஓடிக் கொண்டே இருந்தன.

"MATCH FOUND" ப்ளிங்கியது.

"வி காட் இட். வேர்ல்ட் ஐ.டி.0x3எfKஜ்@#*. ஐ வில் ட்யூன் தி ட்ரான்ஸ்மீட்டர் டு தட் ஃபேஸ்." பட்டன்களைத் தடவினார்.

"இப்ப இந்த மல்டி வேர்ல்ட் வாட்சர்ல பாருங்க. உங்க பாடி ரீஜனை ஃபீட் பண்றேன். என்ன நடந்துட்டு இருக்குனு பாருங்க..!"

கிருஷ்ணசாமியின் மாளிகை. படுக்கையறை. படுக்கை. நாராய்ப் படுத்திருக்கிறார் கிருஷ்ணசாமி. பக்கத்தில் தேவி. பக்கத்தில் சில நர்ஸுகள். ஓர் ஆஸ்பத்திரி வாசம்.

"வாசம் கூட வருது விநாயக்..!"

"அல்காரிதம் சார்..!"

"தேவி...! எப்ப சரியாகும்னு டாக்டர் ஏதாவது சொன்னாராம்மா..?"

"இல்லம்மா..! வெய்ட் பண்ணிப் பார்க்கலாம்னு தான் சொல்றாங்க..!"

"இதையே எவ்ளோ நாள் தான் சொல்லுவாங்களோ..? அதுவரைக்கும் நீ சாப்பிடாம பட்டினி கிடக்கப் போறியாமா..?"

"அவர் இப்படி நினைவில்லாம கிடக்கிறதைப் பார்க்க பார்க்க என்னால தாங்க முடியலம்மா..! எனக்கு சாப்பாடு அவசியமாம்மா..?"

"நீயும் உன் உடம்பை கொஞ்சம் கவனிச்சுக்கம்மா..!"

"ஆஹா..! தேவி..! என் வைஃபா..? என் மேல இவ்ளோ அக்கறையா இருக்கா..?"

"அது தான் மேதமேடிக்ஸ்...!"

"அப்ப இந்த உலகத்துக்கே என்னை அனுப்பிடுங்க.. நான் இங்க நடந்த எல்லாத்தையும் மறந்திடறேன். அங்க போய் ப்யூரா, அமைதியா வாழறேன்.."

கிருஷ்ணசாமி தலையில் மெமரி எக்ஸ்ட்ராக்டரை இணைத்தார் விநாயக். சரியான இ.எக்ஸி. ஃபைலை எக்ஸிக்யூட் செய்ய, மெமரி பைட்கள் சிஸ்டம் மெமரிக்கு மூவ் ஆகின. கிருஷ்ணசாமி கோமா நிலைக்கு போனார். ஃபில்டர் சப் ரொட்டீனில் பராமீட்டர்ஸை செட் செய்து எண்டர் அடிக்க, சில மெண்டல் ஃப்ரீக்வன்ஸிகள் காணாமல் போயின.

சரியான சேனலைப் பிடித்து ட்யூன் செய்ய கிருஷ்ணசாமியின் நினைவுகள் வேர்ல்ட் ஐ.டி.0x3எfKஜ்@#*க்கு ட்ரான்ஸ்மிட் ஆகின. சிஸ்டம் மெமரி காலியாகிக் கொண்டே வந்தது. அங்கே கோமா நிலையில் இருந்த அவரின் வேகண்ட் மெமரி லொகேஷன்களில் நிரம்பின.

தூக்கத்தில் இருந்து விழிப்பது போல் எழுந்தார் கி.சாமி. சோர்வாய் அமர்ந்து வாரப் பத்திரிக்கை படித்துக் கொண்டிருந்த நர்ஸு திடுக்கிட்டு எழுந்து, "இட்ஸ் எ மெடிக்கில் மிராக்கிள்..!" என்று கண்ணாடியைக் கழட்டிச் சொன்னார்.

சோகையாய் அமர்ந்திருந்த தேவி, நிமிர்ந்து பார்த்தாள்.

"என்னங்க.. நீங்க எழுந்துட்டீங்களா..? தேங்க் காட்.."

அவருக்கு ஒரே கலங்கலாய் இருந்தது. நீண்ட தொலைவில் ட்ராவல் பண்ணி வந்த களைப்பு கண்களில் தேங்கி இருந்தது. மனைவியைக் கண்ட மாத்திரத்தில் நினைவுகள் திரும்பின.

"தேவி...! எப்படிம்மா இருக்க..? சாப்பிடக் கூட இல்லையா..? எனக்கு ஒண்ணும் இல்லைமா. கொஞ்சம் டயர்டா இருக்கு. அவ்ளோ தான்..!"

"இருங்க..! நீங்க இப்படி திடீர்னு கண் முழிச்சா, இம்மீடியட் எனர்ஜிக்கு ஆரஞ்சு ஜூஸ் குடுக்கச் சொல்லி இருக்கார் டாக்டர்...!" என்று டேபிளை நோக்கிப் போனாள்.

நர்ஸ் டெலிபோனை நோக்கிப் போனாள்.

டேபிளை கட்டிலின் அருகில் இழுத்துப் போட்டு அமர்ந்தாள். கி.சாமி ஓரளவு நிமிர்ந்து உட்கார்ந்தார்.

ஆரஞ்சுப் பழத்தைக் கத்தியால் கீறினாள். புதுப் பழம். தோல் கடினமாய் இருந்தது. இழுத்த இழுப்பில் கத்தி விலகியது. தேவி பிடியை விட்டு நழுவி, தோலைச் சீவிய வேகத்தில் காற்றைக் கிழித்துப் பறந்தது கத்தி. நிமிர்ந்து உட்கார்ந்து சுற்றுமுற்றும் பார்த்து பழைய நினைவுகளை கோர்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணசாமியின் நடு இதயப் பிரதேசத்தில் மிகச் சரியாகப் பாய்ந்தது; பதிந்தது.

"என்னங்க...!" கூக்குரலில் கூவினாள் தேவி.

சடுதியில் பொழிந்து போர்த்தி இருந்த பெட்ஷீட்டை நனைத்தது, சிவப்பு இரத்தம். சரிந்து விழுந்தார். கண்கள் வழி உயிரும், நினைவுகளும் வேகமாக வெளியேறிக் கொண்டிருந்தன.

துடித்து பக்கவாட்டில் விழுந்தார்.

அடங்கினார்.

ல்டி வேர்ல்ட் வாட்சரில் பார்த்துக் கொண்டிருந்த விநாயக் அதிர்ந்து போனார்.

"இதனை விதி எனலாம்..!" என்று முனகினார்.

(தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகதை போட்டிக்காக.)

270 டிகிரியில் ஒரு காதல் ப்ரபோஸல்!

வள் அத்தனை அபார அழகோடு அமைந்திருந்தாள்.

இடம் : ப்ளானிடோரியம். நாள் : சுப தினம். நேரம் : நல்ல நேரம்.

வெண்மையான நிறம். வாகான உடல். கூர்மையான நாசி. பளபளக்கின்ற கண்கள் என்று சிரித்தாள். யூரோப்பிய மங்கை போலிருந்தாள். நம் பக்கங்களில் இத்தகைய ஒரு வெண்மை சாத்தியம் இல்லை. டீ-ஷர்ட் போல் ஏதோ அணிந்து அதில் ஏதோ வாக்கியம் எழுதி இருக்க அதைப் படிக்க முயன்றேன்.

"ரொம்ப கஷ்டப்படாதீங்க..! அங்கே My world is not Flat..!" என்று விகல்பமில்லாமல் சிரித்தாள்.

அந்தச் சிரிப்பில் எதிராளியைச் சிதறடிக்கும் வாலி பலம் அரை அவுன்ஸ் இருந்தது.

கால் செகண்ட் வழிந்து விட்டு, "உங்களை இங்கே இப்போது தான் முதன்முதல் பார்க்கிறேன். நீங்கள் இங்கு வருவது இது தான் முதல் முறையா..?" என்று கேட்டேன்.

"எஸ்..! திஸ் இஸ் தி ஃபர்ஸ்ட் டைம். பை த வே, என் பெயர் ம்ருதுளா..!" கை நீட்டினாள்.

இளஞ்சூடு மிதக்க, அவள் பெயர்க்காரணம் சொல்லியது அந்த கைகுலுப்பு.

"இட்ஸ் ரியலி ஃபண்டாஸ்டிக் இல்லையா..? நம் கை அதிர்வுகளுக்கு ஏற்ப மின் விளக்குகள் கண் சிமிட்டி மின்னுதல்..!" என்றாள்.

"ஆம்..! நீங்கள் இன்னும் இந்தப் பகுதியில் நிறைய பார்க்கலாம். மிர்ரர் அதிசயங்கள், ராமானுஜம் விளக்கங்கள், விலங்குகள் அறை, போக்குவரத்து பரிமாணங்கள் இன்னும் நிறைய. ஆனால் இவற்றை விட எனக்கு அதிசயமாய் இன்று தெரிவது ஒன்று தான்..!" என்றேன்.

"என்ன அது..?" பதில் தெரிந்து கொண்டே கேள்வி கேட்டால் எப்படி இருக்கும் அது போல்.

"நீங்கள் தான்...!"

"ஏன்..?" மின்னலாய்ச் சிரித்தாள்.

"என்ன என் பதிலுக்கு நீங்கள் அதிரவே இல்லை? பழைய தமிழ்ப் படங்களின் தாவணிக் கதாநாயகிகள் போல் 'ச்சீ..! இவ்வளவு தானா உங்கள் கண்ணியம்.." என்று கூறி ஒரு கீழ்ப்பார்வை பார்த்து விட்டு ஓடவில்லை..!"

"ஸாரி..! நீங்கள் கூறுகின்ற படங்களை நான் பார்த்ததில்லை..!"

"நினைத்தேன்..! நீங்கள் ஒரு இன்றைய யுக மங்கை..! ஷிட்னி படித்து விட்டு, செரலாக் குடித்து விட்டு, டெடி பியரோடு இரவுகளைக் கழித்து விட்டு, சனி மாலைகளில் டிஸ்கொதே சென்று ஆட்டத்தில் கலந்து விட்டு, இளைஞர்களைப் பின்னிரவில் த்ராட்டில் விட்டு விடும் நவீன யுக பெண்..? சரியா..?"

"ஆம்..! எனினும் உங்களை விட சிறு பெண் தான்..! என்னை நீ என்றே நீங்கள் சொல்லலாம்..!"

அந்தப் பெண்ணின் மேலிருந்து வீசிய ஒரு சுகந்த மணம் மாலை நேரத்தின் முதிர் வெயிலை மீறி ஈர்த்தது.

"என்ன பெளடர் உபயோகிக்கிறாய்..?ஸ்பென்ஸ்..?"

"இல்லை..! களிமண்..!" என்று மறுபடியும் ஒரு மின்னல்.

இதற்குள் கீழே வந்திருந்தோம்.

"என் பெயரை நீ கேட்கவே இல்லையே..?"

"வேண்டாம். எனக்குத் தேவையில்லை..! எனினும் நீங்கள் என் மனதைக் கவர்ந்து விட்டீர்கள். உங்களை எனக்குப் பிடித்திருக்கின்றது..!" ஒரு மோன நிலைத் தேவதை போல் புன்னகைத்தாள்.

"சில்ட்ரன்..! எல்லாரும் வரிசையாகப் போகணும்..! சைலன்ஸ்..!"

"மிஸ்..!"

"என்ன..?"

"ஒன் பாத்ரூம் போகணும்..!"

"துரைசாமி..! இவனைக் கூட்டிட்டு போங்க..! அருண்..! சிப்ஸ் பாக்கெட் எல்லாம் எடுக்கக் கூடாது..! அங்கயே வெச்சிடு..!"

"குழந்தைகள் என்றாலே அழகு.. இல்லையா..?"

"ம்..!"

"என்ன ஆயிற்று..?"

"இல்லை..! ரொம்ப வெயிலா இருக்கு...!"

"சம்மர்..! கொஞ்சம் அப்படித் தான் இருக்கும்..!"

"ப்ளீஸ்..! நாம் அந்த ப்ளானிடோரியத்துக்கு உள்ள போயிடலாமா..? என்னால இந்த வெயில் தாங்க முடியல..! அப்படியே உருகிப் போயிடுவேன் போல் இருக்கு..!"

உண்மை தான். அந்த வெண் கைகள் ரத்தம் பொங்கி சிவப்பாக இருந்தன.

டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தோம். எங்களோடு குழாமாக சின்னஞ்சிறு குழந்தைகளும் நுழைந்தனர்.

கம்மென்ற ஏ.ஸி.யின் குளிர் வீசியது. அமைதியான ஒரு சூழலில், அலுமினியம் டோமின் கீழே 270 டிகிரியில் சாய்ந்து அமர்ந்திருக்க, GMII ப்ரொஜக்டர் ஒரு பிரம்மாண்ட ராட்சஸன் போல் மல்டி பல்புகளில் ஒளியை விசிறி அடித்து அபார ஆங்கிலத்தில் பொழிந்து கொண்டிருந்த ஒரு நேரத்தில், "ஐ லவ் யூ..!" என்றாள்.

சுற்றிலும் மேலான குளிரில் குழந்தைகள் அனைத்தும் உறங்கி இருக்க, ஆசிரியைகள் அசமந்தமாய்க் கழுத்தைத் தடவிக் கொண்டிருக்கையில் நாங்கள் இருவர் மட்டும் இருநூறு சதம் முழு விழிப்புணர்வில் இருந்தார்ப் போல் தோன்றியது.

"பார் பெண்ணே..! நீ யார் என்று தெரியாது..! உன் ஊர் எது? எனக்குத் தெரியாது. உன் குடும்பம் என்ன..? அறியேன்..? அரை நாள் பழக்கத்தில் காதல் வரும் அளவிற்கு நான் ஒன்று அழகன் அல்லவே..?" என்றேன்.

"அழகாய்ப் பேசுகிறீர்கள். எனக்குப் பிடித்திருக்கின்றது. உங்களைத் தேடித் தானே இங்கே வந்தேன். பெருங் குளிரில் ஆண்கள் எல்லாம் அழிந்து போய் விட நாங்கள் கொஞ்சம் பேர் மட்டும் மிஞ்சி இருக்கிறோம். உங்களைத் தேடி நான் வந்ததைப் போல் வெவ்வேறு இடங்களுக்கு என் தோழிகளும் சென்றிருப்பார்கள். அவர்கள் காரியத்தில் வெற்றி பெற்று விட்டதை என் உள்ளுணர்வில் அறிகிறேன். நானும் வென்றாக வேண்டும். என் வீடு எது என்று கேட்டீர்கள் அல்லவா..? அதோ பாருங்கள்..!"

Viewers..! Now you are seeing the Neptune...! The Eighth planet in the solar galaxy...! It has...

வெண் பொரிகளாய் நட்சத்திரங்கள் சுற்றியும் விழுந்து கொண்டிருக்க ஒரு நீல உருண்டையாய் நெப்டியூன் கிரகம் பிரம்மாண்டமாய் மேலிருந்து விரிந்து எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது.

என் இடது தோளை ஒரு கையால் பிடித்து, மறு கையின் நீள விரலால் நெப்டியூனைச் சுட்டிக் காட்டினாள்.

அவள் கை மகா ஜில் என்று இருந்தது.

(தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகதை போட்டிக்காக.)