Wednesday, April 11, 2007

MJ - பாப் பாயும் புலி...!




முதலில் MJ எங்கு அறிமுகமானார் என்று நினைத்துப் பார்க்கிறேன்.



தமிழ்ப் படங்களில் இருந்து கவனங்கள் விரியத் தொடங்கி, இந்திப் படங்கள் மேல் பார்வை பதியத் தொடங்கிய ஆதிப்பதின்ம வயது.

அந்தக் காலங்கள் தான் கவனங்கள் மெல்ல,மெல்ல மாறுகின்ற நாட்கள். காபியெல்லாம் குடிக்க மாட்டேன், அது விஷம் போன்றது என்று புத்தகங்களில் கூறியிருக்கிறார்கள் என்று அம்மாவிடம் சொல்லி, பால் மட்டுமே வேண்டும் என்று அடம் பிடிக்கின்ற வயது. (பால் குடித்தால் தான் உதடுகள் சிவப்பாக மாறும் என்று படித்த ஓர் உண்மையான காரணம் இருந்தது.)


முதன்முதலில் மேலுதட்டில் படிகின்ற பூனைமுடிகளை 'ஷேவ்' பண்ணுகிறேன் என்று கிளம்பி, வெளியே அப்பா முன் செய்ய வெட்கப்பட்டு, அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டு உள்ளே ஓடும் போது அப்பா சிரிக்கின்ற சத்தம் கேட்டு, கன்னமெல்லாம் கிழித்துக் கொண்ட கோலத்தில் வெளியே வந்து வெட்கச்சிரிப்பு சிரிக்கின்ற நாட்கள்.

தம்பி அடித்து விட்டான் என்று, பள்ளியில் சாதாரணமாக உபயோகப்படுத்தும் கெட்ட வார்த்தையொன்றை கூறி அவனைத் திட்டிவிட, கிடைத்த வெளுப்புகள் இன்றும் மறக்க முடியாது.


ஊரோர ஒதுக்குப்புற தியேட்டர்களின் பட போஸ்டர்களைப் பார்த்துக் கொண்டு செல்கையில், 'தியேட்டர் பெயரை ஒட்டுவதற்கு போஸ்டரில் வேறு இடமே கிடைக்கவில்லையா இவனுக்கு' என்று நினைத்துக் கொண்டே சென்ற வயது. (ஐயையோ.. இதையெல்லாம் சொல்கிறேனே... வீட்டில் போட்டுக் கொடுத்து விடுவார்களோ..)



சரி..கதைக்கு வருவோம்.


கேசட் கடைக்குப் போய் ஏதாவது புதிய கேசட் வந்திருக்கிறதா என்று நோட்டம் விட்டதில், கண்ணில் பட்டார், மைக் ஜாக். மிக , மிக வித்தியாசமான அட்டைப் படத்தில் அட்டகாசமாக இருந்தது கேசட். உடனே அள்ளிக் கொண்டு போய்க் கேட்டதில் தொடங்கியது, மற்றுமொரு கிறுக்கு!









Dangerous, Billie Jean, Beat It, Thriller, Smooth Criminal, Black or White, Remember the Time, என்று தறிகெட்டுப் பறந்தன அக்காலங்கள். ஒவ்வொன்றும் என்ன வகையான ஆட்டங்கள்...! இன்று கேட்கும் போதும் எழுந்து ஆட்டம் போடச் செய்கின்றன.



'வெற்றி நிச்சயம்' பாடலுக்குப் பிறகு ரத்த நாளங்களில் வெறியேற்றி, முன்னேற்றத்திற்குப் போராட வலிமையும், உற்சாகமும் கொடுத்த பாடல் என்றால், நான் ஒத்துக் கொள்ள வேண்டியது, BEAT IT. நீங்களும் அதன் வரிகளைப் பாருங்கள்.




கொஞ்சம் பக்குவம் வந்த பிறகு MJ-யின் சமூக அக்கறை பற்றிய பாடல்களைக் கேட்டுப் பார்த்து நெகிழ்ந்து போனேன்.


நீங்களும் பாருங்களேன்.


Earth.


You are not Alone.


MJ பற்றி என்னென்னவோ சர்ச்சைகள் வந்த போதிலும், அவருக்காக வருத்தப்பட்ட பல்லாயிரம் இதயங்களில் நானும் ஒருவன். ஆபாசமில்லாத, அற்புதமான பாடல்கள் மூலம் எங்கள் வாழ்வின் ஒரு பகுதியை நீர் நிரப்பினீர். அதற்காக எமது நன்றிகள்.


We Salute You MJ...!

Monday, April 09, 2007

அலை ஓசை - கல்கி.



பேராசிரியர் கல்கி அவர்களின் 'பொன்னியின் செல்வன்','சிவகாமியின் சபதம்','பார்த்திபன் கனவு' ஆகிய வரலாற்றுப் புதினங்களைப் பற்றி பல பேருக்கும் தெரிந்திருக்கும். ஆசிரியரின் சமூக நாவல்களில் மிகப் பிரபலமானதும், அவருக்கு சாகித்திய அகாதமி விருது வாங்கிக் கொடுத்ததுமான 'அலை ஓசை' நாவல், எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.




தலைப்பைக் கண்டதும், பலருக்கு புகையோடிய பிம்பம் போலவும், முற்பிறவி நினைவுகள் போலவும் சில காட்சிகள் கண் முன் தோன்றியிருக்க வேண்டுமே...? ஆம்..! நீங்கள் நினைப்பது சரிதான். முன்பொரு காலத்தில், முன்னிரவு அல்லது பின்மாலை நேரங்கள் என்று சொல்லக்கூடிய நேரங்களில் மட்டும் தமிழ் பேசிக் கொண்டிருந்த தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிய தொடர் தான். கல்கி அவர்களின் புதினத்தை நாடக வடிவில் ஒளிபரப்பினார்கள்.




முதலில் புத்தகத்தை எடுத்த உடனேயே சந்தேகம் வந்தது. ' நமக்குத் தெரிந்த வரை, தலைப்பு 'அலையோசை' என்று தானே இருக்க வேண்டும். இங்கே பிரிந்து உள்ளதே' என்று தோன்றியது. ஆசிரியர் ஏதேனும் காரணத்தோடு தான் எழுதியிருக்க வேண்டும் என்று தேற்றிக் கொண்டு, புதினத்தைத் தொடர்ந்து படிக்கலானேன். கல்கி அல்லவா! தலைப்பை நியாயப் படுத்தி விட்டார். நான் சொல்லப் போவதில்லை. நீங்களே படித்து அறியுங்கள்.


கதையைப் பற்றி நான் ஒன்றும் கூறப் போவதில்லை. வழக்கமான கல்கி அவர்களின் பரபரப்பான திருப்பங்கள், தேன் சிந்தும் காதல் வர்ணனைகள், போராட்ட வசனங்கள், இயற்கை வர்ணிப்புகள் நிறைந்ததுடன் அல்லாமல், புதினம் முழுதும் ஒரு பாலாடை போல் பரவியிருக்கிறது தேசிய உணர்வு.




இயக்குனர் மணிரத்னம் அவர்கள், எவ்வாறு சமூகப் பிரச்னைகள் பற்றிய படம் என்றாலும், போராட்டக் களத்தை மட்டும் காண்பிக்காமல், ஒரு குடும்பம் அல்லது ஒரு காதல் வழியாக கதை நகர்த்திச் செல்கிறாரோ, அந்த பாணி, கல்கி அவர்களின் புதினங்களில் இருந்து தான் உருவப்பட்டு இருக்க வேண்டும் என்பது என் தாழ்மையான எண்ணம்.




சீதா, சொளந்தர ராகவன், தாரிணி, சூர்யா ஆகிய நான்கு பாத்திரங்கள், அவர்களைச் சுற்றியிருக்கும் உறவினர்கள், அவர்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், அவர்களைப் பாதிக்கின்ற நாட்டின் அடிமை நிலை என்று இராஜம்பேட்டை என்ற சிறு கிராமத்தில் இருந்து, சென்னை, பம்பாய், தில்லி, ஆக்ரா, ரஜனிபூர், லாகூர் என்று கதை பரந்து விரிகையில் ரோலர் கோஸ்டரில் ஏறிப் பறக்கின்ற அனுபவத்திற்கு நாம் ஆளாவது திண்ணம்.




'சாலையின் இரு புறத்திலும் ஆலமரங்கள் சோலையாக வளர்ந்திருந்தன. ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளைப் போல் அந்தச் சாலை எங்கே ஆரம்பமாகிறது, எங்கே முடிவாகிறது என்று தெரிந்துகொள்ள முடியாதிருந்தது. பகவானுடைய விசுவரூபத்தின் அடியும், முடியும்போல், இரு திசையிலும் அடர்ந்த மரக்கிளைகளிடையில் அந்தச் சாலை மறைந்துவிட்டது.'என்று தொடங்கிப் படிக்கத் துவங்குகையில், நாமும் அந்தச் சாலையிலேயே நம் பயணத்தைத் துவக்குகிறோம்.




இனி, தாஜ் மகாலைப் பற்றி ஆசிரியரின் ஒரு வர்ணனையைப் பார்ப்போம்.




பாகம் : புயல் அத்தியாயம் : 11


தாஜ்மகால்





புதுமணம் புரிந்த மங்கை தன்னுடைய காதலன் அருகில் நெருங்கி வரும்போது ஆசையும் நாணமும் கலந்த தோற்றத்துடன் நிற்பதுபோலத் தங்க நிலாவில் தாஜ்மகால் என்னும் மோகினி நின்றாள். தும்பைப்பூவையொத்த வெண்மையும் மென்மையும் பொருந்தியடாக்கா மஸ்லினைக் கொண்டு மேனியை மட்டுமின்றி முகத்தையும் முக்கால் பங்கு மறைத்துக் கொண்டு அந்தப் புவன மோகினி சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். அவளை நாலு புறமும் காவல்கள் புரியும் தோழிப் பெண்களைப்போல் நெடிதுயர்ந்த ஸ்தம்பக் கோபுரங்கள் நாலு மூலையிலும் நிமிர்ந்து நின்றன.

உலகந் தோன்றிய நாள் தொட்டுக் காதலர்களுக்கு வேதனை தருவதையே தொழிலாகக் கொண்ட பூரண சந்திரன் தனது கர்ம பலனை இந்தத் தாஜ்மகால் மோகினியிடம் அனுபவித்தான். தன்னுடைய ஆயிரமாயிரம் தங்கக் கரங்களினால் அந்த இணையில்லா அழகியைத் தழுவ ஆசைகொண்டு எவ்வளவோ முயன்றான். எனினும் தூய்மையே உருவெடுத்த அந்த நங்கையின் மேனியை அவனுடைய கரங்கள் தொட முடியாமல் அப்பால் நழுவி விழுந்தன. ஒருவேளை நாணங் காரணமாகத் தன்னைப் புறக்கணிக்கிறாளோ என்று எண்ணி இருள் நிழலைத் தன் உதவிக்கு அழைத்தான். ஆனால் நிழல் அந்தக் கற்பரசியின் மேனிக்கு ஒரு கவசமாகிக் காமுகனுடைய கரங்களை அப்பால் நிற்கச் செய்தது.

சந்திரனுக்குக் காதல் வேதனை பொறுக்க முடியாமற் போயிற்று. "தாஜ்மகால் மோகினியினால் நிராகரிக்கப்பட்ட பிறகு இந்த ஜன்மம் என்னத்திற்கு?" என்று நிராசை அடைந்தான். அவள் கண்ணுக்கெதிரே தன் உயிரை விட்டுவிட எண்ணி அங்கிருந்த அழகிய நீர் ஓடையில் தலைக் குப்புற விழுந்தான். அப்போதுதான் அந்த வெண்மலர் மேனியினாளுக்கு மனதில் இரக்கம் உண்டாயிற்று. சந்திரனைக் கரையேற்றத் தானும் ஓடையில் குதித்தாள்! பளிங்குக்கல் ஓடையில் ஸ்படிகம் போலத் தெளிந்திருந்த நீரில் தங்கச் சந்திரனும் தாஜ்மகால் மோகினியும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொள்வதாகக் காதலர் உலகத்தில் மெய்மறந்து சஞ்சரித்துக் கொண்டிருந்த சீதாவின் கற்பனைக் கண்களுக்குத் தோன்றியது. ஆஹா! எத்தனை காலமாக இந்தத் தாஜ்மகாலைப் பார்ப்பதற்கு அவள் ஆவல் கொண்டிருந்தாள்! எத்தனை முறை மானசீக யாத்திரை செய்து இங்கே இவள் வந்திருக்கிறாள்! - அந்தக் கனவெல்லாம் இன்றைய தினம் உண்மையாகிவிட்டது. சீதாவின் வாழ்க்கையில் இது ஒரு மகத்தான நன்னாள் என்பதில் சந்தேகம் என்ன?

***

1930களில் வெளிவந்த ஒரு அமைதியான கறுப்பு-வெள்ளைப் படம் பார்ப்பது போல் இருக்கும், இந்தப் புதினம் படிக்கும் போதெல்லாம்..!

புத்தகம் : அலை ஓசை.

புத்தக வகை : சமூகப் புதினம்.

ஆசிரியர் : பேராசிரியர் கல்கி.

கிடைக்குமிடம் : உங்கள் அபிமான நூல் விற்பனையகங்கள்.

இணையம்: தமிழ் தேசம்

Saturday, March 17, 2007

என்னய்யா... இப்படிப் பண்றாய்ங்க...

என்னம்மா கண்ணு படத்தில், வடிவேலு கோவை சரளாவிடம் கூறுவார்.


"அவன் குடும்பத்த நான் கேவலமாப் பேசுவான். என் குடும்பத்த அவன் ரொம்பக் கேவலமாப் பேசுவான். இத நாங்க ஒரு ஜாலியாவே எடுத்துக்கறது..."


என்பார்.


அது போல, இந்தப் பக்கம் இந்தியா இவ்வளவு கேவலமாக விளையாடுகிறதே என்று அடுத்த மேட்சைப் பார்த்தால், அயர்லாந்து பாகிஸ்தானுக்குத் தாண்ணி காட்டிக் கொண்டிருக்கிறது.


என்னய்யா... இப்படிப் பண்றாய்ங்க...

பார்க்க:


இந்தியா : வங்காளதேசம்,பாகிஸ்தான் : அயர்லாந்து.

Monday, March 12, 2007

ஓர் ஆய்வு.

காதல், வெயில், பருத்தி வீரன் போன்ற படங்களுக்கு கிடைக்கின்ற பிரம்மாண்டமான வெற்றிக்குக் காரணம் என்ன?

ஆர்குட்டில் மிகப் பெரும்பாலான தமிழ் மக்கள் அனைவரும் தத்தம் சாதிக் குழுவில் உறுப்பினராய் இருக்கும் நிலைக்குக் காரணம் என்ன?

ஒவ்வொருவரும் தத்தம் உள்ளம் தோன்றும் எண்ணங்களை, திறமைகளை வெளிப்படுத்தும் அற்புதமான களமான தமிழ்ப் பதிவுகள், சாதி வெறியோடு ஒவ்வொருவரும் அடித்துக் கொள்வதற்கான இடமாய்ப் போனதற்குக் காரணமென்ன?

சிந்தித்துப் பார்த்ததில், சில விடயங்கள் எனக்குத் தோன்றின.

வெளி உலகப் பழக்கமே இல்லாதிருந்த காலங்கள் கடந்து வந்து, இப்போது எல்லொரும், எங்கு வேண்டுமானாலும் யாரையும் தொடர்பு கொள்ள முடியும் என்ற காலத்திற்கு வந்துள்ளோம். தனி மனிதனாய், காட்டுமிராண்டியாய் இருந்து, பின் சமூகத் தேவையை உணர்ந்து குழுக்களாய் வாழ்ந்து, பின் எப்படியோ சாதி, இனம், மதம் எனும் கூட்ட உணர்வுகளுக்குள் வந்து வாழ்ந்தோம். சாதிக் குழுக்கள் தனித்தனியாய் வாழ்ந்து, இப்போது நகரங்களில் பக்கத்து வீட்டுக்காரர் யாரென்னும் அறிந்து கொள்ளாத நிலையில் வாழ்கிறோம்.

மனித மனம் 'இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும்' என்று தேடக் கூடிய சுபாவம் கொண்டது. இருப்பதோ ஒரேயொரு தனிமையான கிரகம். யாரும், எங்கும் செல்லலாம் என்ற நிலை வந்த பின்பு, மனித மனம் சலிப்புறத் தொடங்கியுள்ளது. இனி செல்வதற்கு எங்குமில்லை என்று உணர்ந்த பின்பு, உள்முகமாய்த் திரும்புகிறது.

'என் மதம்',' என் இனம்', 'என் மொழி', 'என் மண்', 'என் ஊர்' என்ற எண்ணங்கள் தலைதூக்குகின்றன.

புலம் பெயர்ந்து வாழ்கின்ற மனங்கள், மகிழ்வாய் இருந்த மீஇளம் காலங்களை அசை போடுகின்ற போது, அப்போது கழித்த ஊர் நினைவுகள் வருகின்றன. பின்னாலேயே வால் போல, மேற்சொன்ன 'என்..' களும் வருகின்றன.

வேறென்ன காரணம் இருக்க முடியும், பரந்து விரிந்த உலகில், தத்தம் சாதிக் குழுவில் உறுப்பினராகும் ஆர்குட் நண்பர்களுக்கு?

வேறென்ன காரணம் இருக்க முடியும், கிராமத்துப் படங்கள் வெற்றி பெறுவதற்கு?( மேலும் பல கிராமத்துப் படங்கள் ஊற்றிக் கொண்டுள்ளன என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய 1).

உயர்ந்த எண்ணங்களை, அற்புதமான கனவுகளை சொல்லும் இடத்தில், என் சாதி, என் மதம் என்று ஒருவர் மேல் ஒருவர் உமிழ்ந்து கொள்வத்று வேறு என்னதான் காரணம் இருக்க முடியும்..?

Thursday, March 08, 2007

மகளிருக்கு ஜே.

இரண்டு நாட்களுக்கு முன்பு எனது அக்கா ஒருவருக்குத் திருமணம். விழாவில் பங்கு கொள்வதற்காக ஊருக்குச் சென்றிருந்தேன். அதைப் பற்றிய சிறு பதிவு இது.

'நண்பரின் பிரிவை விட, நட்பின் பிரிவு வலிமிக்கது'. இம்மொழியை நாம் கேள்விப்பட்டு இருப்போம். அது போல் உறவுகளின் பிரிவும் என்பதைக் கண்டேன். கல்லூரியில் படிக்கும் காலத்தில், நெருக்கமான மரணங்களை நெருங்கிப் பார்த்து விட்டதால், பிரிதல்கள் பழகிப் போய் விட்டிருந்தன என நினைத்திருந்தேன்.

ஈரம் குழைத்துச் செய்த பானை, நெருப்பில் போட்டுக் காய்ச்சியதும் உருவாகும் பானை மீண்டும் ஈரம் பட்டால் களிமண்ணாய் குழைவதில்லை என்று நினைத்திருந்தேன்.

மனம் காய்ந்து போகும் பானை இல்லை, பாறை மறைவில் பதுங்கியிருக்கும் விதை என்று புரிந்தது. கால, காலமாய் ஒளிந்திருந்தாலும், விழுந்த முதல் துளி மழைக்கே மொட்டு விடும் என்று புரிந்தது.

இனிமேல் அவர் 'அக்கா' மட்டும் இல்லை. மரியாதைக்குரிய ஒரு மனைவி. இல்லத்தை நிர்வகிக்கப் போகும் நிர்வாகி. ஒரு புதிய தலைமுறைக்கு மூலம். இனிமேல் 'ஏ.. புள்ள..இங்க வா.. போ..' என்றெல்லாம் மிரட்ட முடியாது, என்றெல்லாம் நினைக்கையில் கொஞ்சம் வருத்தமும் , கொஞ்சம் சந்தோஷமும் நிறைகிறது உள்ளே.

புது மனிதர்கள்! புது வாழ்முறை! புதுக் குடும்பம்!

புலம் பெயர்தலின் வலி நிறைந்த கண்கள் கண்ணீர் வழி, வழிந்து விடக் கூடாதென்றே, பெண் தலைகுனிந்து நிற்கிறாள் என்று புரிகிறது.இத்தனை வருட வாழ்வில் பல திருமணங்களைக் கண்டு விட்டது. ஆனால் இந்த் நெருக்கமான மணம் கொஞ்சம் பார்வையை மாற்றித்தான் போட்டது.

இரவில் இரயில் ஏறிப் பணிக்குத் திரும்பி விட்ட எனக்கே, அந்த புதுமுகங்களைக் கண்டு இயற்கையான பயம் முளைத்தது என்றால், இனி வாழ்வு முழுதும் அங்கேயே இருக்க வேண்டிய பெண் மனதில் தோன்றும் பயங்கள்.. என்னால் எழுத முடியாதது. பெண்களால் மட்டுமே எழுதக் கூடியது. மகளிருக்கு ஜே.

மற்றொரு விஷயம் கவனித்தது:

"குழந்தைகள் கண்முன்னால் எப்படி வளர்ந்து விடுகிறார்கள்" என்று காம்ப்ளானோ, பூஸ்டோ விளம்பரம் வரும், நினைவிருக்கிறதா? அப்படி சில குழந்தைகளைக் கண்டேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி, சிறு குழந்தையாய்ப் பார்த்த பையன் இன்று மேலுதட்டில் அரும்பு மீசையோடு, 'அண்ணா, நான் எட்டாவது படிக்கிறேன்' என்று நிற்கிறான். தோளில் தூக்கிக் கொண்டு திரிந்த குழந்தை, கல்லூரியில் அடியெடுத்து வைத்து விட்டது.

கொஞ்சம் பயமாய்த் தான் இருக்கிறது. ' நமக்கும் வயதாகிக் கொண்டு போகிறதோ...' என்ற நினைவு வருகிறது. ஹூம்....

அந்த முகங்களில் கண்ட கள்ளங்கபடமற்ற குழந்தைத்தனம், புன்னகை, பிரகாசம்.. இதெல்லம் எங்கே, எப்போது நாம் தொலைத்தோம் என்று ஆயாசம் வருகிறது. 'பிள்ளையாய் இருந்து விட்டால், இல்லை ஒரு தொல்லையடா' என்று பாடத் தோன்றியது.