Thursday, January 05, 2017

நீலாம்பல் நெடுமலர்.11.


அகல் விளக்கின் சுடர் நிலையாக நின்றிருக்கின்றது. பொன் கல்லால் செதுக்கி வைத்த ஒற்றை விரல் போல் குவிந்து கீழகன்று மேல் குறுகிக் கூர் நுனி கொண்டு வானோக்கி ஒரு சிகரம் போல். செழும் செவ்வண்ணம் அடிவானின் சிவப்பு போல் அடியில் தேங்கி குவிகின்றது. புதுக்காலை கீழ் ஆகாயம் போல் இளமஞ்சள் நிறம் பரவிய மேல் பகுதியைத் தாங்கி நிற்கும் சுடர் ஓர் அற்புதம்.

சுடரைத் தீண்டும் எண்ணம் கிளரச் செய்யும் இளமனதை. சுடர் எப்போதும் எரிந்து கொண்டிருப்பதில்லை. விளக்கின் உள்ளே உறங்கிக் கொண்டிருக்கையில் தூண்டும் எரி அகம் கிளறிப் புறம் ஏகப் பற்றி எரியும் செந்தீ. சிறியதாய்த் தெரியும் திரியை வெம்மை தின்று கொண்டிருக்கும்.

அணையாச் சுடர் ஆளும் புடவியை பலகோடி சிறு சுடர்கள் காக்கின்றன. அவ்வெம்மை தீராதிருக்கும் வரை ஜீவ செழுமை நிறைத்துக் கொண்டிருக்கும் இவ்வெளியை.

Wednesday, January 04, 2017

நீலாம்பல் நெடுமலர்.10.

தேவி..!

இருள் கவியும் இலைகளின் அடியில் கவிழ்ந்துறங்கும் புழுவைப் போல் உறங்கிக் கிடந்தேன். பொன்னொளிர்க் கன்னிமையில் என்னுள் மஞ்சள் கதிரென நுழைந்தாய். விண்ணிலிறங்கும் வெண்ணிறகுகளுடன் ஒரு தேவதையாய் வந்தருகணைந்து மெல்லத் தீண்டினாய். பெரும்பாறை அடைத்துக் கிடந்த மனதின் பாதையில் உன் தொடுகை, நெய்யென உருகி ஒளி பாய்ச்சியது. கருணை பொழியும் கண்களால் என்னுள் நிறைந்தாய். உதிரமொட்டுகளை உன் தண்விரல்களால் மெல்லத் தட்டியெழுப்பினாய். நறுமணம் படர்க் காற்றை என்னைச் சுற்றிலும் நிரப்பினாய். சுகந்தம் திகழும் ஸ்வர்ணமாய்ப் பரவினாய்.

தேவி..!

இனிமை சுமக்கும் உன் இதழ்களில் ஒரு புன்னகை கொடுத்தாய். இமயத்தின் கருவறைக்குள் இருத்திக் கொண்ட குளுமையில் அமர்த்தினாய். ஒரு சொல் சொன்னாய். பைங்கிளிப் பேச்சின் பசுமையில் மறந்தேன். வெண்மணி வரிசையில் தத்தித் தத்தித் தாவிச் செல்லும் சிறு பிள்ளையாக மாற்றினாய்.

தேவி..!

மதுவே! மலரே! மலர் கொள் மணமே! புகழே! சிறுவிளக்கின் அகலே! மெய்யகல் நெய்ச்சுடரே! நெய்யகல் சுடர்முகமே! திருமகளே! துளிகர்வம் கொண்டு என்னை அள்ளிக் கொள்ளாயோ? அணைக்கும் இருகரங்களால் முழுதுடலை உனக்குள் இறுக்கிக் கொண்டாய். இன்னும் எஞ்சியிருப்பது சிறு வாழ்வே! தடுமாறி அலைபாயும் நாட்களில் பற்றிக் கொள்ள ஒரு வேங்கைமரக் கொம்பு போல கிடைத்தாய். மண் விலகி விண்ணேகும் பொழுதில் எண்ணிக் கொள்ள சில புன்னகைகளை விட்டுச் சென்றாய். இன்னும் கிடைக்கின்றது வாழ சில காரணங்கள்.

தேவி..!

முகில் கொழுத்த மாலை வானில் எட்டுத் திக்குகளும் அதிரக் கிளம்பும் வெண்மின்னல் போல் பேரொலி எழுப்பி நீ உள் நுழைந்தாய். குகைகளில் பதுங்கிக் கிடக்கும் மலை எலி போல சுருண்டு கிடந்தேன். பெருமழை புகுந்து தனதாக்கிக் கொண்ட பின் அலைகளில் அலைப்புண்ட மெல்லிலை போல் தத்தளிக்கிறேன்.

தேவி..!

உனக்கே என் நாட்களெலாம் அர்ப்பணம். உனக்கே என் இரவுகளெலாம் சமர்ப்பணம். சிரம் மேல் தாள் பதித்து நீ நடனமிடும் ஆனந்த நர்த்தனத்தில் என் குருதி உடைந்து பெருகி நின் கழலிணைகளைச் சூழும்.  அருளுடன் ஒரு கரம். அபயமென ஒரு கரம். பயங்கரத்துடன் ஒரு கரம். பயப்படேலென ஒரு கரம். ஆயிரம் பல்லாயிரம் சிரங்கள் காட்டி மாயத்தில் ஆழ்த்தும் மகாசக்தி, உன் செவ்விழி சினத்தில் எரிந்து தூசாகுமுன் மடி மேல் வைத்து உன் அமுதில் எனைக் குளிப்பாட்டு.


Tuesday, December 27, 2016

நீலாம்பல் நெடுமலர்.9.


சில கவிதைகளையும்
தனித்த இரவில்
பெருமூச்சுகளையும்
கொடுத்தபின்
ஒரு
முத்தமாவது
தரலாம் நீ.

உன் மெளனம்
ஒரு பிடிவாதம்.
உன் தவிர்த்தல்
ஒரு நிழல்வெளி.
உன் பார்வை
ஒரு மறைபொருள்.
உன் மறைபொருட்கள்
கற்பனையின்
கல்லணைகள்.

நழுவி விழுந்து
தெறித்த
கண்ணாடிக் குடுவை
உன் சொற்கள்.
தொடாமல் கால்
படாமல்
நடக்கத் தெரியா
பிள்ளை நான்.

குருதி பூக்கும்
முட்செடிகளை
மெளனத்தால்
மூடி வைக்கிறாய்.
தொட்டுத்தொட்டு
சுவைக்கும்
செந்நா எனது.

நதிக்கரையில்
ஒற்றை மரமென
நின்றிருக்கும் வேளையில்,
அலையடிக்கும்
வெண்புறா போல்
சிலநேரம்
அமர்ந்தபின்
பறந்து விட்டாய்.
வானைக் கிளைகளாலும்
மண்ணை வேர்களாலும்
துழாவுகிறேன்.

நில்
பசிக்கிறேன்
சொல்
ரசிக்கிறேன்
கொல்
ருசிக்கிறேன்.

வழியில்
விழியால் சிரித்தாய்.
மரங்களெலாம் பூத்து
மண்ணெலாம் இனித்து
நீரெலாம் குளிர்ந்து
நீயின்றிப் பிறரிலை.

மலைச் சிகரங்கள்
கூழாங்கற்கள்.
எரிமலைத் தீ
எறும்புக் கடி.
இமயப் பனி
இலைநுனித்
துளி.
உன் பார்வை
பிரபஞ்ச விரிவு.

அலைகள்
கொந்தளிக்கும் ஆற்றில்
விழுந்த சிற்றிலை
போல்
நீந்திச் செல்கின்றன
உன் சொற்கள்.

வானவில் நிறங்களில்
இல்லா ஒரு
நிறம்
உன்
நீ.

இளங்காலைக் குளிர்த்தென்றல்
முதிர்காலைத் தெளிவொளி
முன்மதியப் பனிமழை
பின்மாலைக் கிளிக்கூட்டம்
அந்தியிரவு மலையிணைவு
நள்ளிரவு மெளனத் தூறல்
நாளும் இரவும்
நினைவின் பாரம்.

பொற்றேரில்
பயணிக்கும் இளவரசி
வெண்ணிலவில் வழியும்
அமுதை விரும்பினாள்.
மண்புழு நிமிண்டும்
மனமெனது.


Thursday, December 22, 2016

நீலாம்பல் நெடுமலர்.8.



மேற்கண்ட படத்திற்குத் தொடர்பாக 'படத்திற்கு வெண்பா படை' என்று கேட்கப்பட்டிருக்க, எழுதியவை கீழே.

ஒருநதியில் ஓடிடும் ஓடத்தில் நாமே
ஒருபுறம் ஓட்டை எனினும் - வருந்தா
தெனக்கென்ன வென்றிருப்பின் மூழ்கி மரித்தல்
அனைவர்க்கும் ஆமே அறி.

இருவர் உழைக்க ஒருவர் சிரிக்க
இருநிலை ஏனோ இயம்பின் - வருத்தம்
வருமே வருநிலை யாவர்க்கு மன்றோ
வருமுன் உணர்தல் நலம்

நீரள்ளி நீரள்ளி நீரிறைக்கும் வாளியில்
நீரறியா நீர்வழி உண்டாயின் - நீரது
நீங்காது நீந்துவோர் நின்றிட நீந்தாதோர்
நீங்குவர் நீத்தார் என.

 படகில் புகுநீர் மெதுவாய்க் கவிழ்க்கும்
உடனே கவனித்தல் நன்றாம் - கடமையோ
என்றிருப்பின் கண்டோரும் காணோரும் ஆவாரே
இன்றிருப்பர் நாளையோ இல்.

மேலே அமர்தல் சுகமே என்றாலும்
கீழே உழைப்பவர் நீரிலே - வாழேன்
எனவமைதல் என்றும் புகழ்.

வடத்திற்குத் தேர்போலே வாழ்வுக்கு நீரே
தடத்திற்குத் தார்போலே தாழ்வுக்குச் சோம்பல்
குடத்திற்குள் சிற்றலையாய்த் தந்தேன் உமது
படத்திற்கு வெண்பாப் படை.

Tuesday, December 20, 2016

நீலாம்பல் நெடுமலர்.7.

'வியத்தகு வெண்பா விருந்து' என்ற ஈற்றடிக்கு எழுதியது.

இருவிழி துள்ளும் துவளும் துடிக்கும்
கருவிழி சொல்லும் குழற்றும் பிதற்றும்
இருகரம் தீண்டும் தழுவும் தடவும்
இருபுறம் கேட்கும் கொடுக்கும் பிடிக்கும்
இருமார்கள் வேண்டும் திமுறும் குமுறும்
இருகூர்மை கொல்லும் குழையும் குவியும்
இருகால்கள் தாங்கும் தடுக்கும் தவழும்
இருந்தாழ்கள் வாங்கும் வருடும் வணங்கும்
இருப்பாளே என்றும் குறளடி தேனாய்
இறுக்கும் சிவந்த இதழ்.

கண்வழி அன்பென என்மீது சிந்தடி
முன்வழி பெண்ணென மெய்மீது சிந்தடி
சொல்வழி செல்வதைச் சொல்லுமுன் சிந்தடி
வில்விழி கொல்வதை நீராலே சிந்தடி
கைவழிக் காதலைக் கண்டதும் சிந்தடி
தையலின் மோகமே தைத்தபின் சிந்தடி
கள்ளுள மாரினைக் கவ்வுமுன் சிந்தடி
உள்ளுளப் பிள்ளையை உண்மையாய்ச் சிந்தடி
மெல்லுணர் வாழ்விலே மெய்யெனச் சிந்தடி
மெல்லிடை ஆள்வதை மெத்தைமேல் சிந்தடி
கள்ளியே கள்வனைக் காத்தபின் சிந்தடி
கள்வனோ சென்றபின் நீர்.

நெய்யகல் தீமுகம் நீலாம்பல் தேன்மலர்
பொய்யகல் தீஞ்சொல் புகழுடை பொன்தளிர்
மெய்யுணர் மெல்லுடல் மேற்றிசை மென்னொளி
கையனல் கொல்மணம் கள்ளிதழ் முள்தனம்
வேல்விழி கூர்முடி நீள்விரல் நெற்கதிர்
பால்நிறம் பன்னீர்த் துளிகுரல் வான்குளிர்
ஆலிடை நெய்த்தொடை அல்குலை ஆள்பவன்
கோலின் அளவடி நீ.

இயங்கிடும் போதுகளில் இன்மைக் கணத்தில்
முயங்கிடும் முன்மாலைப் பின்னால் - தயங்கா
மயக்குறு மங்கைநீ மன்னன் படிக்கும்
வியத்தகு வெண்பா விருந்து.


அடியும் முடியும் ஒரே சொல் கொண்டு அமையும் குறள் வெண்பாக்கள்.

முயலாமை முந்திய வித்தை அறிவீர்
தயங்கினால் நீயே முயல்.

கிழித்துக் களம்படா நீங்கல் மறவர்
பழிப்பினும் வீரர்க் கிழி.

கண்ணேநீ என்றால் இமைப்பின் மறைவனோ
என்றாள் அவளுமென் கண்.

தொடவாநான் என்றாய் தொடுவது போதா
படவாநீ கூர்வில் தொடு.

மதுரமே உன்சொல் உதிருமே உண்ணா
அதரமே தேக்கும் மது.