Sunday, January 28, 2007

3ச#^ ஒளி ஆண்டுகள் தொலைவில்...!


"ருள் நல்லான் - க ஙஉ ங.! எழில் நங்கை - க உ ங.!... உங்கள் உறவு நிலைப் படிமாணத்தின் ஐந்தாம் நிலை, ஆறாம் புள்ளிக்கு வந்துள்ளீர்கள். இந் நிலையை சரியாக முடிக்க தங்களுக்கு மூன்று நிமிடங்கள், இருபத்தெட்டு துளிகள் அனுமதிக்கப் படுகின்றன. அதற்குமேல் எடுத்துக் கொள்ளும் ஒரு நிமிட நேரத்தில், தங்கள் உடல்களுக்கு காந்த நுண்ணலை மூலம் அளிக்கப்படும் உயிர்த்துகள் பாதியாகக் குறைக்கப்படும். இந்த எச்சரிக்கை விதி 32/45ன் கீழ் தங்களுக்குச் சொல்லப்படுகிறது. நன்றி..." சொல்லிவிட்டு 'டப்' என்ற சத்தத்துடன் துகள்களாய்ச் சிதறினான்.

"அருள்! விளக்கமாகப் பேசக் காலமில்லை. நீங்கள் கண்டறிந்த உண்மைகளைச் சுருக்கமாகச் சொல்லுங்கள்..." என்றாள் எழில் நங்கை.

அருள் நல்லான் - க ஙஉ ங அதை ஆமோதித்து, கை விரல்களைப் பிரித்தான். ஆட்காட்டி விரலின் நகத்தை உருவினான். ஃபைபர் நார் நீளமாக வெளிவந்தது. அதை விரித்தான். 'சரசர'வென ஃபைபர் தொகுப்பாய் நீண்டது. நகத்தின் இடுக்கில் மறைத்திருந்த பழுப்பு நிறத் துகளை எடுத்தான். கீழேயுள்ள கடைசிக் குழாயின் சிறு துளையில் அத்துகளை விட்டான். படபடவென்று அந்த ஃபைபர் தொகுப்பு நீல நிற ஒளியடைந்தது.

"எழில்..! நாம் ஏற்கனவே மேற்கொண்ட முடிவின்படி, இந் நிலையில் நமது உறவு நிலையை முடித்துக் கொள்ளப் போகிறோம். அதனால் நான் கண்டறிந்தவற்றை இந்த நினைவகக் குப்பியில் நிறைத்துள்ளேன். பார்.." என்றான் அருள் நல்லான் - க ஙஉ ங.

"காலமும், தூரமும் சமமான அலகுகளைப் பெற்றிருக்கும் காலத்தில் வசிக்கும் மக்களே..! நீங்கள் வசிக்கும் காலத்தில் நீங்கள் மட்டும் வசிக்கவில்லை. உங்கள் முன்னோர்களும் வசிக்கிறார்கள். இருவரும் ஒரே காலத்தில் வாழ்கிறீர்கள்.அனால் பார்த்துக் கொள்ள முடியாது.ஏனென்றால் அவர்கள் நமது வாழ்விடக் கிரகத்தில் இருந்து 3ச#^ ஒளி ஆண்டுகள் தொலைவில் வசிக்கிறார்கள். அவர்களது பிற்காலச் சந்ததிகள் தான் நீங்கள். நம்முடைய வாழ்விடத்தில் வாழ்முறை நீவிர் அறிந்ததே.! இது எவ்வாறு வந்தது என்பதை அறிய, நீவிர் வாழும் காலத்திலேயே, ஆனால் 3ச#^ ஒளி ஆண்டுகள் தொலைவில் வாழ்கின்ற உமது முன்னோர்கள் செய்தவற்றை அறிய வேண்டும்.

அவர்களது இடத்தில் மனிதர்கள் , அவர்களாலேயே ஆளப்படுகிறார்கள். இயற்கை மனிதனுக்கு அளித்த எல்லா விதமான தவறுகளோடும் ஆள்கிறார்கள். அவர்களது இன்றைய காலக் கட்டத்திலிருந்து, 21%$ காலத்திற்குப் பிறகு, இயல்பான வாழ்வு மிகவும் கெட்டுப் போனது அல்லது கெட்டுப் போகும். அதனால் கண்டிப்பான விதிமுறைகளின் படி நடந்து கொள்ளும் இயந்திரங்களின் கையில் ஆட்சிப் பொறுப்பு மாற்றப்பட்டது. அவை தமக்குள் எழுதப்பட்ட நிரல்களின் வழி நடந்து கொள்வதால், உங்களால் உங்கள் மனம் போல் நடந்து கொள்ள முடியாது. மேலும் அன் நிரல்கள் மிக நெடுங்காலத்திற்கு முன்னால் எழுதப் பட்டதால், இன்றைய காலத்தில் அவை பொருந்தமாட்டா. அத்தகைய இயந்திரங்களுக்கு நிரல்கள் எழுத எளிய, மிக அனுகூலமான மொழியாக தமிழ் என்ற மொழி அமைந்தால், அனைத்து நிரல்கள், நீவிரது பெயர்கள் அனைத்தும் இயந்திரங்களால், தூய தமிழில் இயற்றப்பட்டன."

"இதிலிருந்து நாம் தப்பிக்க வழியே இல்லையா..?" கேட்டாள் எழில் நங்கை - க உ ங.

"வழியுள்ளது. நீங்கள் உங்களது முன்னோர்களுடன் தொடர்பு கொள்ள முயல வேண்டும். தங்களது பிற்கால சந்ததிகள், தாம் வாழும் காலத்திலேயே, ஆனால் தொடர்பு கொள்ளமுடியாத மிக நெடுந்தொலைவில் உள்ளனர் என்பதை அறியாத, அம்மனிதர்கள், வெளி உலகத்தில் இருந்து ஏதாவது அலை கிடைக்குமா என்று தேடுகின்றனர். நீவிர் அவர்களைத் தொடர்பு கொள்ள, உமது கிரகத்தின் பொருட்களை இயந்திரங்களின் கவனத்திற்குப் படாமல், அவர்களது கிரகத்திற்கு அனுப்ப வேண்டும்..."

"இந்த கிரகத்தின் பெயர் என்ன? அவர்கள் வாழும் கிரகத்தின் பெயர் என்ன...?"

"இரண்டும் ஒன்று தான். பூமி... நினைவில் கொள்ளுங்கள். காலமும் தூரமும் ஒன்று என்ற கோட்பாட்டின் காலத்தில் வாழ்கிறீர்கள் நீவிர். எனவே தூரத்தால் பிரிபட்டிருப்போர், காலத்தாலும் பிரிபட்டு இருப்பவர்கள் ஆகின்றீர். மற்றபடி நீரே அவர், அவரே நீர். இதுவும் அதுவே, அதுவும் இதுவே..."

பழுப்பு நிறத்துகள் கரைந்து "டுக்"கென்று வெடித்தது. ஃபைபர் குழாய்களைச் சுருக்கி, சுருட்டி பழையபடி விரலிடுக்கில் வைத்தான் அருள் நல்லான் - க ஙஉ ங.!

எழில் நங்கை - க உ ங, தன் கையில் கிடைத்த கற்களை எடுத்து மறைத்துக் கொண்டாள்.

"தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காலம் முடிந்து விட்டதால், நீவிர் உங்கள் பகுதிகளுக்குச் செல்ல அறிவுறுத்தப் படுகிறீர்கள். தங்களது இந் நிலையின் மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டக் காலத்தில் வழங்கப்படும்" எங்கிருந்தோ வந்த செந்நிறத்துகள்கள் கூறின. விளிம்பு முனைக்கு நகர்ந்த எழில் நங்கை - க உ ங, தன் கையில் இருந்த கற்களை வீசி எறிந்தாள்.

"ந்தக் கற்கள் வான வெளியின் வழக்கமான கற்கள் என்று எடுத்துக் கொள்ள முடியாது. இதில், வேறெந்த வான் பொருட்களிலும் காண முடியாத வகையில் பூமியில் இருக்கும் கற்களைப் போன்ற பண்புகளைக் கொண்டிருக்கிறது. பூமியில் உள்ள கற்கள், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கந்தகக் காற்றுப் பட்ட பின் என்ன நிலையை அடைந்திருக்குமோ, அது போல இவை உள்ளன. எனவே வான்வெளியில், பூமியைப் போன்ற வேறு கிரகம் இருக்க வேண்டும்..." கூறிக் கொண்டிருந்தார் நாசா ஆராய்ச்சி நிபுணர் Dr. வில்லியம்ஸ்.

"சட்.." என்று சேனலை மாற்றி, மும்தாஜின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களைப் பற்றி விசாரிக்கின்ற விவேக் காமெடியைப் பார்த்து சிரித்துக் கொண்டே, இன்று யாருடைய வலைப் பதிவில் அனானியாகப் போய்த் தாக்கலாம் என்று யோசிக்கலானேன்.

Thursday, January 25, 2007

நான் சென்ற நூல் அழகம்.


சென்னையில் இந்த ஆண்டு 30-வது நூல் அழகம் நல்ல முறையில் நடந்து நிறைவுற்றது. ஒரு நாளாவது போய் நூல்கள் அள்ளி வர வேண்டும் என்று நினைத்து, நினைத்து நாட்கள் ஓடிப்போயின. கடைசி நாள்(21.ஜன.2007) தான் போக முடிந்தது. அதைப் பற்றிய ஒரு சிறு பதிவு.

இம்முறை திடல் மிக நன்றாக பரந்து விரிந்து இருந்தது. மேலும் நிறைய ஸ்டால்கள் இருந்தன. எனவே நடந்து முடிக்கையில் கால்கள் போதும், போதும் எனக் கதறியன. விடுவோமா..? வாங்குகிறோமோ, இல்லையோ எல்லா ஸ்டால்களிலும் நுழைந்து விடுவது என்று முடிவு செய்து, அதன் படியே நடந்து கொண்டேன்.

சென்றாண்டு போலவே எல்லாக் கடைகளிலும் இருந்த சில நூல்கள். பொன்னியின் செல்வன், கல்கியின் வரலாற்றுப் புதினங்கள் தொகுப்பு, அக்னிச் சிறகுகள், பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா, சேவாஸ் புத்தகங்கள், கவிதை நூல்கள் போன்றன.

இவ்வாண்டு நூல் அழகத்தில் நிறைய பொதுவுடைமை நூல்கள் கண்ணில் பட்டன. சென்றாண்டு நூல் அழகத்திற்கும் சென்றிருந்தேன். அப்போதெல்லாம் அவை கவனம் பெறாமல் இருந்திருக்கலாம். காரணம் சென்றாண்டு இறுதியில் தான் வலையுலகத்திற்கு வந்ததாய் இருக்கலாம்.

எழுத்தாளர்கள் மனுஷ்யபுத்திரன், சாரு நிவேதிதா (இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்), திலகவதி, தாமரை, 'நக்கீரன்' கோபால் ஆகியோரை வெவ்வேறு ஸ்டால்களில் காண முடிந்தது.

நான் வழக்கம் போல் சில தன் வரலாற்றுப் புத்தகங்களும், சுய முன்னேற்ற நூல்களும் வாங்கினேன். படிப்போமா இல்லையா என்பது வேறு. வாங்கி வைத்துக் கொள்வோம். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று.

வழக்கத்திற்கு மாறாக பார்க்க முடிந்தவை சில. கலைஞர் கூடம். நன்றாக இருந்தது. அறிவியல் கூடம். பெரம்பூரில் உள்ள 'மாண்ட்போர்டு' பள்ளிக் குழந்தைகள் ஒவ்வொருவரையும் கூப்பிட்டுக் கூப்பிட்டு விளக்கம் கொடுத்தது நன்றாக இருந்தது. ஆனாலும் கொஞ்சம் நன்றாக கவனித்திருக்கலாம் குழந்தைகளை! மிகவும் களைத்துப் போயிருந்தார்கள். அங்கு எடுத்த சில நிழற்படங்கள் இங்கே:

Sunday, January 14, 2007

உன் முகம் தொட்டு...!


உன் முகம் தொட்டு வழித்துக் கொண்ட வெட்கம் நிறைந்த என் கைகளை என்ன செய்வது? முத்தமிட்டு ஒற்றிக் கொள்! உன் உதடுகள் இன்னும் கொஞ்சம் சிவக்கட்டும்!

உன் வழி பார்த்துக் கருத்த என் விழிகளை நான் என்ன செய்வது? எடுத்துப் பூசிக் கொள்! உன் கூந்தல் இன்னும் கொஞ்சம் கருக்கட்டும்!

காற்றோடு தேடிப் போய், என் காற்சட்டையில் நான் சேர்த்து வைத்திருக்கும் உன் கொலுசொலிகளை நான் என்ன செய்வது? உன் வார்த்தைகளுக்கு வர்ணமிட்டுக் கொள்! உன் குரல் இன்னும் கொஞ்சம் இனிக்கட்டும்!

என் கனவுகளில் வந்து கையசைத்துப் போன, உன் வளையொலிகளை நான் என்ன செய்வது? வந்து வாங்கிக் கொள்! என் கனவுப்பை காலியாகட்டும்!

உருத் தெரியா முன்னிரவில், உன் உள்ளங்கை ரேகைகளில், ஒளிந்து கொண்ட என் விரல்களை என்ன செய்வது? ஒடித்துக் கொள்! என் கைகளின் கொம்புகள் உடைந்துப் போகட்டும்!

உனக்காகப் பூத்திருக்கும் மலர்களைப் பூஜைக்கு அனுப்பாதே! தெய்வங்களும் துயர்படட்டும்!

வெயில் சாயுங்கால வேளையில், வானத்தின் சாயமாலையில், வர்ணங்களை எடுத்து, பூசிக் கொள்! மழையும் கொஞ்சம் நிறமிழக்கட்டும்!

உன் சிரிப்புகளால் நிறைந்திருக்கும் என் இதயத்தை வாங்கிக் கொள்! அது துடிப்பதிலிருந்து விடுதலை பெறட்டும்!

உனக்காகத் தள்ளி வைத்திருக்கும் என் இறப்பை, உடனடியாக உணர்ந்து கொள்! எது மறந்து போய் விடினும், என் நினைவாவது கொஞ்சம் இருக்கட்டும்...!

எழுதியது : 27.Sep.2004

உடைக்கின்ற செய்தி!


அழகுக் குயில் ஐஸ், Big B குடும்பத்தில் இணையப் போவதாக சில நாட்களாக வந்து கொண்டிருந்த செய்தி தற்போது உண்மையானது. ஆம்.. இன்று Big B இதை உறுதி செய்தார்.



நம்ம ஊர்ப் பெண் ஐஸ் பேபி, நல்ல முறையில் குடும்பம் நடத்தி பல குட்டி ஐஸ்களைத் தர வேண்டும் என்பதே ஒரு ரசிகனாகப் பலரது வாழ்த்தாக இருக்கும் என்று கேள்வி (!!).


காண்க.

Friday, January 12, 2007

குமுதம் - சிம்பு


"இந்த வாரம் குமுதம் இதழைப் பார்த்தீர்களா..?"

"என்ன ஸார்.. என்ன ஆச்சு..?"

"இதோ.. நீங்களே நல்லாப் பாருங்க..இது அநியாயம்..? அக்கிரமம்..?"

"என்ன சார்.. ஒண்ணுமே போடல.."

"உங்க புத்தி போற போக்க பாரு.. குமுதம் கையில எடுத்த உடனே நடுப்பக்கத்துக்கு பாஞ்சிடுவீங்களே..? அட்டையில பாருங்க.."

"அட... ஆமாம்.."

"கேட்க ஆளில்லைனு நெனச்சிட்டாங்களா....இல்ல.. நாம பாத்து வளர்ந்த பையன் தானேனு நெனச்சிட்டாங்களா..?"

"சரி விடுங்க ஸார்.."

நீங்களும் இதைப் பாருங்க.. கீழ சிம்பு படத்தைப் போட்டுட்டு, மேல தமிழ் நாட்டைக் குறிவைக்கும் தீவிரவாதிகள்'னு போட்டிருக்காங்க...



"ஏதோ கொழந்த அமெரிக்க எல்லாம் போயிட்டு வந்திருக்கு..."



"நயன் தாராவைப் பிரிஞ்ச சோகம் இருக்கும் தான்.. அதனால கொஞ்சம் கோக்கு-மாக்கா தலைக்கு எல்லாம் ப்ளீச்சிங் எல்லாம் பண்ணிட்டு வந்திருக்கு போல... அதை இந்த குமுதம் பயலுக இப்படியா நக்கலடிக்கிறது... பாவம்யா.. அவன் பச்ச மண்ணுய்யா... அதைப் போயி... என்னமோ போங்க மனசுக்கு தாங்கல.."