Wednesday, June 29, 2016

மனசின் நடையில் விரியா நீயும்... (A)

படிக்கட்டுகளில் மெளனமாக இறங்குகின்றது இரவு. வழியும் தென்றலில் உலவுகின்றது காதல். முகில் திரளில் கோடுகளாய் மின்னல். தொலைவுக் காற்றில் ஈரம்.

தோட்டத்தில் உறங்கும் குறும்பாடு. மதில் மேல் மதுக்குடுவை. இலைகளில் நழுவும் வெண்ணொளி. பனிச்சரங்கள் விளிம்பில் அரவம். வேர்களில் ஊடுறுவும் இளநீர். உறக்கத்தில் ஊர். வழி தவறும் மொழி. புலர்பொழுது யுகம். தடுக்கும் கிளை. கூர் கரை உடைப்பு.

ராக்கனவு. ரத்தம் சுவைக்கும் நடுக்கம். முதலை உண்ணும் இளம் கன்று. சிறை புகும் சிறுகுழல். பறை முழக்கம். பதியன் போடும் குருத்து.

விண் நிறை உயிர். சுருள் சுருள் அவிழ் தென்னை. இறைக்க ஊறும் கேணி. மறைந்தே கரையும் குயில். தூவும் மழைப்பன்னீர். குழையும் மண். குளிரும் இமை. மலை கிளரும் நிழல். பிணை கேட்கும் இணை.

புதிதாய் பூக்கும் புழு.

அசை. இசை. அசைக்கும் இசை. இசைக்கும் அசை. இசைக்கும் அசைக்கும் விழைவு.

பழைய விளக்கு. புதிய தீ. எரி குரல்.

புதரில் ஒளியும் மான்.  சிறகடிக்கும் கிளி. நடுங்கும் தொழுவம்.  தலைகீழ் பேரருவி. கடும்பாறை நனையும் கருமழை.  முழுநிலா நிழல்.

பொன் ஊறும் பழங்கள். தேன் விரவும் ரசம். காணா பயம். விழி ஒதுக்கும் நாணம். நாண் அதிரும் ஒலி. வினை நுட்பம். விருந்தில் பொங்கு தணல். மேல்மாட அன்னம். நுனி படர்க் கொடி.

மிகை நடத்தையில் மிளிரும் கர்வம். புனல் வழியில் நகரும் ஓடம். மிருதுவான முகத்தில் பதியும் முத்தம். மென்சூட்டில் பூக்கும் நாணம். நெற்றிக் கோட்டில் சொட்டும் வியர்வை. செவிமடல் சூட்டில் புருபுருக்கும்மென்மயிர். அனல் தீட்டும் ஓவியம்.

திரி கருக்கும் அகல் சுடர். சுடர் உமிழ் செம்மலர். மலர் நிறை ததும்பும் நுரை. நுரைத்துப் பொங்கும் வெண்பனி. பனி கரந்த நீள்விரல். விரல் தடவும் நாசி. நாசி நகரும் இருள். இருள் கொள்ளும் ஈருடல்.

பெருமூச்சு.

Thursday, June 23, 2016

விடுதளை நாள் விழா.










வெம்பாலை வாழ்வு.

பாலையில்
தனித்திருக்க
நேர்கையில்
வாளெடுத்து
நீ
சிரமறுத்துக்
கொள்ள மாட்டாயா?

***

வான் தீ
தின்னும்
முகிலின்
நிழல்கள்
நெளிந்தாடுகின்றன
கானலாய்!

***

பசி பிளக்கும்
ஓநாய்
பிணந்தேடும்
கழுகு
ஈரம் காய்க்கும்
வெக்கை
அடுக்கடுக்காய்
மணல்
நிழல் பதுக்கும்
என்னுடன்!

***

வெம்மை நிறைந்த
நீல ஆகாயம்
யாதுமற்ற
பாழ்வெளி
நச்சரவம் ஊறும்
செம்மணல்
விஷம் ததும்பும்
உயிர்க் குகை
தூரப்பச்சை
எங்கோ எனும் கனவு
வெம்பாலையில் தனித்த
வாழ்வு.

Thursday, March 31, 2016

கண்ணாடிச் சிறுமணிகள்.

கொஞ்சம் கவிழ்க்கப்பட்ட சதுரங்களாய் வெட்டப்பட்டுக் கோர்த்த சிறு கண்ணாடிச் சரங்களின் கீழே நிர்வாணமாய்க் காத்திருக்கிறாள் அவள். சிறு நெருப்புத் துண்டங்களாய் ஜ்வலிக்கும் அவற்றைத் தடவிக் கொண்டு செல்கின்றன வானப் பேரரசனின் ஒளிநகங்கள். அவளுடைய திரண்ட வனப்புகளின் மேல் பற்றியெரிகின்றன பார்வைகள். அவளை அணுகுகையில் தம் வேட்கையை, வெப்பத்தை, வியர்வையை தாமே காணும் யாரும் வியந்து பயந்து உடன் விலகுகின்றனர்.

அவள் நகங்களின் மேல் அரைத்துப் பூசியிருந்த கண்ணாடித் துகள்களைத் தம் கழுத்தின் அடிப்பாகத்தில் செருகிக் கொண்டு செந்நீரை வடிக்கத் துணிபவன் ஒருவனை எதிர்நோக்கிக் காத்திருக்கிறாள் அவள். வளைந்திளகும் செழித்திடையைச் சுழற்றிக் கோர்த்திருந்த கூர்நுனி மாவிலைத் தோரணங்களில் தம் சிலிர்த்துச் சீறும் நாகத்தை சிவப்பித்துக் கொள்ளும் முடிவினனைக் காணக் காத்திருக்கிறாள் அவள். இமை நுனிகளில் செருகி வைத்த துளிக் கூர்மைகளை மூச்சுக் காற்றில் உருக்கி வீழ்த்தி வீழ்பவனை, அனலாடிய ஓர் இரவின் மையத்தில் கண்ட கனவின் நினைவில் காத்திருக்கிறாள் அவள். தன்னை இறுக்கிச் சுழன்றிருக்கும் கண்ணாடி மணிகளைக் கவ்விக் கவ்விக் களைந்து, தன் மின்மேனி மேல் நில்லா நெடும்பயணம் செல்லும் பெரும்பயணியைத் தொலை வானின் பின்புறம் இருந்து வரும் நிறைந்த கருமுகில் கொண்டு வந்து சேர்க்கும் என்று காத்திருக்கிறாள் அவள்.

தற்கொலைக் குருவி.


ஒரு சிட்டுக்குருவி தன்னைத் தானே இழப்பதற்கு முன் என்ன சிந்திக்கும்? தன் துளி அலகால் நெடும் பனையைக் கொத்திக் கொத்தி அலகுடைந்து சுழன்று வீழும் போது, மண்ணில் அது தின்ற நெளியும் புழுக்களை நினையுமா? சிறு தலையை, எதில் கொண்டு போய் மோதிச் சிதறடிக்கும்? பனித்தூவல்களாலான செம்பழுப்புச் சிறகுகளை எந்த நெருப்பின் பசியில் எரித்தடக்கும்? தனித்திருக்கையில் திரும்பித் திரும்பி நீவிக்கொண்ட முதுகை எக்கூர்முனை கிழித்துப் பின் பிளக்கும் என்பதை என்றேனும் ஒரு கனவில் கண்டிருக்குமா? சிறு குருவியின் சுற்றம் மென்புழுதி வயலில் அதற்கென ஒரு குறுநிலம் கணடு வைத்திருப்பரா?

'எடுத்ததொரு கோலம்; கொண்டதொரு வாழ்வு; தின்றதொரு தீ' என்று பாடிக் கலைந்த பின் அந்த வெறும் வெளியில் விளையும் மாயக்கனிகளில் ஒன்றென அக்குருவி மீண்டும் உயிர்த்து, தன் பொய்க்கூட்டைக் களைந்த திசையிலிருந்து விடுபட்டுத் திரும்புமா தன் மெய்யிடம்?

தோழியரும் தோழர்களும் உதிரத்தின் வெம்மைத்துளி வழி உறவில் தொடர்ந்தவரும் தீண்டாத் திக்கில் நிழல் சிறகுகளை உதறிக் கொண்டு, மணிக்கண்களை மின்னிக் கொண்டு பறந்து சென்று மறையுமா இச்சிறுகுருவி?