அப்பாவும் ஸ்ரீகுட்டியும் கடைவீதிக்குப் போனார்கள். சமையல் செய்வதற்காகத் தக்காளியும் வெங்காயமும் வாங்கி வரச் சொல்லி அம்மா அவர்களை அனுப்பியிருந்தார்.
கடைவீதியில் நிறைய கடைகள் இருந்தன. துணிக்கடைகள், பாத்திரக் கடைகள், டிவி கடை, பொரிகடலைக் கடை என இருந்தன. காய்கறிக்கடைக்குப் போய் அப்பாவும் ஸ்ரீகுட்டியும் அம்மா சொன்னதை எல்லாம் வாங்கிக் கொண்டு திரும்பி வந்தார்கள்.
அப்போது வழியில் பலகாரக்கடை இருப்பதை ஸ்ரீகுட்டி பார்த்தாள். அப்பாவைப் பார்த்து ”அப்பா, அங்க பாத்தீங்களா..?” என்று கேட்டாள். அவள் பலகாரக்கடையைத் தான் கேட்கிறாள் என்று தெரிந்தும் , அப்பா தெரியாததைப் போல் “ஆமா, அங்க ஒரு வண்டி நின்னுட்டு இருக்கு. மாடு படுத்திருக்கு. போஸ்டர் பக்கத்துல நாய் ஒண்ணு வேடிக்க பாக்குது..” என்றார்.
ஸ்ரீகுட்டி கொஞ்சமாய் கோபப்பட்டு “அப்பா...நான் ஸ்வீட் கடையைச் சொன்னேன். ஸ்வீட் வாங்கிட்டுப் போகலாம்பா..” என்று அப்பாவுடைய கையைப் பிடித்து இழுத்தாள். அப்பாவும் சிரித்துக் கொண்டே “சரி வா, போகலாம்..” என்றார். இருவரும் ஸ்வீட் கடைக்குப் போனார்கள்.
ஸ்வீட் கடையில் நிறைய இனிப்புப் பலகாரங்கள், காரப் பலகாரங்கள் இருந்தன. குளிர்பதனப் பெட்டிக்குள் குளிர்பானங்கள் இருந்தன. ஸ்ரீகுட்டி மேலே இருந்த கண்ணாடியைத் தொட்டுப் பார்த்தாள். ஜில்லென்று இருந்தது. கண்ணாடிப் பெட்டிகளுக்குள் லட்டுகள், ஜிலேபிகள், மைசூர்பாகுகள், குலாப் ஜாமூன்கள், ரசகுல்லாகள் இருந்தன. முறுக்குகள், சிப்ஸுகள், மிக்சர், பூந்தி இருந்தன. ஸ்வீட் பன், தேங்காய் பன் பப்ஸூகள் இருந்தன.
ஆனால் ஸ்ரீகுட்டி கண்கள் விரிய ஆச்சரியமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தது லட்டுகளைத் தான். லட்டுகள் உருண்டையாக இருந்தன. ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. ஸ்ரீகுட்டி எல்லாப் பலகாரங்களையும் பார்த்தாள். லட்டுகள் மட்டும் மலை போல் அடுக்கப்பட்டிருந்தன. மற்றதெல்லாம் பரவலாய் இருந்தன.
“அப்பா, லட்டு மட்டும் ஏன்பா மலை மாதிரி குவிச்சு வெச்சிருக்காங்க..?” என்று கேட்டாள். அப்பாவும் அப்போது தான் அதை கவனித்தார். “அட, ஆமால..” என்று ஆச்சரியப்பட்டார். “ சரி, இப்போ ஸ்வீட்ஸ் வாங்குவோம். வீட்டுக்கு போகும் போது நான் சொல்றேன்..” என்றார்.
“ஓகேபா..” என்றாள் ஸ்ரீகுட்டி.
அரை கிலோ முறுக்கும் அரை கிலோ லட்டும் அரை கிலோ குலோப் ஜாமூனும் வாங்கி விட்டு இருவரும் கடையிலிருந்து வெளியே வந்தார்கள். இருவரும் வீட்டுக்கு நடக்கத் தொடங்கினார்கள்.
“அப்பா லட்டு கதை சொல்லுங்கப்பா.. “ என்று ஞாபகப்படுத்தினாள் ஸ்ரீகுட்டி.
“சரி சொல்றேன்.” என்று அப்பா சொல்லத் தொடங்கினார்.
***
முன்பு ஒரு காலத்தில் சூரியனும் பூமியும் மிகவும் பக்கத்தில் இருந்தன. சூரியன் அதிக வெப்பமாக இருந்ததால், பூமியும் வெப்பமாக இருந்தது. அப்போது பூமியில் தண்ணீரே இல்லை. பூமியில் குளிரே இருக்காது. எப்போதும் வெயில் காலம் போல சூடாகவே இருந்தது.
பிறகு மெல்ல மெல்ல சூரியன் தள்ளித் தள்ளிப் போனது. பூமியில் கொஞ்சம் வெப்பம் குறைந்தது. கொஞ்சம் குளிரும் வந்தது. அதனால் தண்ணீரும் உண்டானது. அப்படியே சூரியன் தூரமாய்ப் போய்க் கொண்டேயிருந்தது. அதனால் பூமியில் குளிர் அதிகமானது. தண்ணீரும் நிறைய உண்டானது.
பிரகு பூமியில் உயிர்கள் தோன்றி மனிதர்களும் உண்டானார்கள். அப்போது மக்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. மலைகளில், காடுகளில் மக்கள் வாழ்ந்தார்கள். அப்படி வாழ்ந்த ஒரு குழுவுக்கு ஒரு தலைவி இருந்தார்கள். அவர் பெயர் ஜூஜூலாமா பாட்டி.
சூரியன் கொஞ்சம் கொஞ்சமாய் தூரம் தூரமாய்ப் போய் ஒரு காலத்தில் காணாமலே போனது. அதனால் பூமி முழுவதும் இருட்டாய் ஆனது. குளிரும் மிக அதிகமாகி விட்டது. மனிதர்களால் வாழவே முடியவில்லை.
அவர்களும் ஜூஜூலாமா பாட்டியும் ஆலோசனை செய்தார்கள். அப்போது குளிராகவும் இருந்தது. இருட்டாகவும் இருந்தது. எல்லோரும் கனமான போர்வைகளைப் போர்த்திக் கொண்டார்கள். கற்களை உரசி தீ வரச்செய்து அதில் சருகுகளை எரித்து வெளிச்சம் உண்டாக்கினார்கள்.
உலகத்திற்கு சூரியனை எப்படி மீண்டும் கொண்டு வருவது என்று யோசித்தார்கள். அப்போது ஜூஜூலாமா பாட்டி சொன்னார்கள். 'சூரியன் பக்கத்தில் இருக்கும் போது கொஞ்சம் கொஞ்சம் ஒளியைச் சிந்தியிருந்தது. அதை எல்லாம் ஒன்றாகிச் சேர்த்தால் பெரிய ஒளி உருண்டை கிடைக்கும். அதை வானத்தில் எறிந்தால் சூரியனாகி விடும்’ என்று சொன்னார்கள். அதை எல்லோரும் ஒப்புக் கொண்டார்கள்.
ஆனால் அதை ஒருமுறை எறியும் போது எங்காவது போய் விழுந்து விட்டால் என்ன செய்வது என்று யோசித்தார்கள். கடைசியாக அவர்கள் ஒரு முடிவு செய்தார்கள். பூமியில் ஓரிடத்தில் இருந்து சூரியனை ஒருவர் எறிய வேண்டும். தூரமாய்ப் போய் இன்னொருவர் அதைப் பிடித்துக் கொள்ள வேண்டும். பிறகு, அவர் அங்கிருந்து சூரியனை எறிய வேண்டும். இவர் இங்கே சூரியனைப் பிடித்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்தால், சூரியன் எங்கும் தொலைந்து போய் விடாது, மேலும் அது பூமிக்குப் பக்கத்திலேயே இருக்கும் என முடிவு செய்தார்கள்.
அதன்படி ஜூஜூலாமா பாட்டி கீழே சிந்தியிருந்த ஒளியை எல்லாம் சேர்த்து உருண்டையாக்கினார்கள். அது மஞ்சள் நிறத்தில் வெளிச்சம் தந்தது. அங்கிருந்த மனிதர்கள் ஜூஜூலாமா பாட்டிக்கு வணக்கம் சொல்லி விட்டு, அங்கிருந்து கிளம்பினார்கள். அவர்கள் நிறைய தூரம் பயணம் செய்தார்கள். மலைகளைத் தாண்டினார்கள். ஆறுகளில் நீந்தினார்கள். கடைசியாகப் பெரிய கடலையும் தாண்டி அந்தப்பக்கம் போனார்கள்.
ஜூஜூலாமா பாட்டி அந்த ஒளி உருண்டையுடன் மலை உச்சிக்குப் போனார்கள். வானம் இருட்டாய் இருந்தது. நூறு நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன. ஜூஜூலாமா பாட்டி மலை உச்சியிலிருந்து சூரியன் என்று பெயர் வைத்த அந்த ஒளி உருண்டையை வானத்தில் தூக்கி வீசினார்கள். சூரியன் உயரமாய்ப் பறந்து போனது. பிறகு அங்கிருந்து கீழே விழத் தொடங்கியது. சூரியன் கடலுக்கு அந்தப்பக்கம் விழுந்தது.
அங்கிருந்த மனிதர்கள் அதைப் பிடித்துக் கொண்டார்கள். கடலில் பெரிய அலைகளும் சிறிய அலைகளும் வந்தன. அவர்கள் பெரிய அலையின் மேல் அமர்ந்து கொண்டார்கள். பெரிய அலை உயரமாய் இருந்தது. அது இன்னும் உயரமாய் எழும் போது, அவர்கள் சூரியனை மறுபடியும் வானத்தில் எறிந்தார்கள். சூரியன் வானத்திற்குப் போய் மறுபடியும் மலை உச்சியில் விழுந்தது. அங்கே இருந்த ஜூஜூலாமா பாட்டி சூரியனைப் பிடித்துக் கொண்டார்கள்.
இப்படி ஒவ்வொரு நாளும் ஜூஜூலாமா பாட்டியும் அவருடைய குழு மனிதர்களும் சூரியனை வானத்தில் வீசினார்கள். இன்னமும் அவர்கள் ஒருவர் சூரியனை வீசி இன்னொருவர் பிடித்துக் கொள்கிறார்கள். மீண்டும் வீசுகிறார்கள். மீண்டும் பிடித்துக் கொள்கிறார்கள்.
தினமும் நாம் பார்க்கும் சூரியன், ஜூஜூலாமா பாட்டி சேர்த்து வைத்த ஒளி உருண்டை தான். ஜூஜூலாமா பாட்டிக்கு நன்றி சொல்வதற்காகத் தான் நாம் சூரியனைப் போன்ற வடிவத்தில் லட்டு செய்கிறோம். ஜூஜூலாமா பாட்டி மலை மேலிருந்து சூரியனை வீசத் தொடங்கியதால், லட்டுகளையும் மலை போல் அடுக்கி வைக்கின்றோம்.
***
அப்பா கையில் இருந்த இனிப்பு டப்பாவில் இருந்து ஸ்ரீகுட்டி, கொஞ்சம் லட்டைப் பிய்த்து எடுத்தாள்.
“அப்பா, நான் கொஞ்சம் சூரியனை சாப்பிடறேன்..” என்று சொல்லி லட்டு சாப்பிட்டாள்.
“சூரியன் இனிப்பா இருக்குப்பா..” என்று ஸ்ரீகுட்டி சிரித்தாள். அப்பாவும் சிரித்தார்.
ஃஃஃ