Thursday, May 23, 2019

இன்னும் எவ்வளவு தொலைவு? (A)நிலவின் நுரை நிரம்பி வழியும் முன்னிரவு.  பசிய இலைகள் எல்லாம் இருளின் கரும் போதைக்குள் ஆழ்ந்து மெல்ல அசைந்து கொண்டிருந்த குளிரின் நேரம்.  பறவைக்கூடுகளில் நிறைந்த அமைதியின் கனம். வீதிகளில் சிதறியிருந்த தெருநாய்களின் சிறு முனகல்கள், பனியின் அழுத்தத்திற்குள் இறுகியிருந்தன. ஜன்னல்கள் அடைத்திருந்த வீடுகளின் வரிசைகளில் உறக்கங்களை உடுத்தி அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த வீட்டில் மஞ்சள் விளக்கொளியின் கீழே தனித்த அறைக்குள், நாமிருவர் செய்யப் போவது, செய்யக் கூடியது தான் என்ன?

கூர் நகங்களால் சுவற்றைக் கவ்வி மெல்ல நகரும் இந்த மரப்பல்லியின் சொரசொரப்பான முதுகின் மேல் தடவிக் கொடுத்தால் தான் என்ன? யாரும் தீண்டியிராத மின்விசிறியின் கரங்களை அழுத்திக் கொடுத்து, அதன் சுழலில் இறங்கினால் ஆகாதா என்ன? யாரிடமும் சொல்லி விடுமோ என மெல்லக் கீச்சிடும் முழுதாக மூட இயலாத கதவை, நிறுத்தக் கொடுத்திருக்கும் சிறு கல்லை மெல்ல நகர்த்தி, வெளியே பாயும் காற்றைக் கொஞ்சம், அனல் அடிக்கும் இச்சிறு அறைக்குள் வரவிட்டால் தான் என்ன? நிலவின் அமுதக் கிரணங்களை ஏந்தி, குறுகிய இடைவெளி வழியே சொட்டு சொட்டாய் இறக்கும் தென்னங் கீற்றுகளைச் சுழற்றி ஓடும் வாடைக் காற்றின் வாசனையை இங்கேயும் உள்ளே அனுமதிக்கலாமா?

கசங்காப் படுக்கையின் மேல் நவீன ஓவியம் போல் புரியா வரிகளை எழுதப் போகும் நம் அசைவுகள் தான் எத்தனை? திசைகளை சென்று அடையப் போகும் நம் ஆடைகளின் சுருண்ட மடிப்புகள், இப்போது அடைகாக்கும் அந்தரங்கங்களை இருளுக்கு காட்டப் போகும் நொடி தான் எது? ஒருவரும் தோண்டியிராத கிணற்றுக்குள் இருந்து, சூழ வளர்ந்திருக்கும் கருஞ்சருகுகளை விலக்கி, ஆழத்து நீரை இறைத்து இறைத்து தரையை நனைக்கப் போகும் காலம் தான் எத்தனை குறுகியது? பூமியெங்கும் ஊறியிருக்கும் ஈரத்தை ஈர்த்து வந்து, இழுத்து வந்து நுனிப்புள்ளியில் விண்ணைப் பார்த்து எழுப்பும் ஊற்றுப் புள்ளியை, எத்தனை நிமிடங்கள் தான் காத்து வைப்பது?

நீல மேகங்கள் குழுமிக் கொண்டிருக்கின்றன. அதற்குள் புதைந்து கொள்வதற்குள், அதன் மென்மைக்குள் தலை அமிழ்த்துக் கொள்ள, அதன் தீரா சுரப்புகளைச் சுவைத்துப் பெருமழை பெய்ய வைக்கும், வெம்மையின் நரம்போடும் இக்கைகளை, இச்சமயத்தில் எங்கு தான் வைத்துக் கொள்வது? அதன் விரல்கள், உள்ளங்கைகளுக்குள் வேர்த்து சொட்டும் வியர்வகளை நழுவ விடுகின்றன.

இந்த விழிகளை, இந்த நுனி நாசியை, இந்த செவ்விதழ்களை, இந்த பூமயிர் உலையும் பொன் கழுத்தை, இந்த அமுது நிறைத்து தளும்பும் நிறை மார்புக் குலைகளை, சரிவில் இறங்கும் கொப்பூழ்ப் பள்ளத்தை, உயிர் ஊறிச் சிலும்பும் பூமேடையை, செழும்தெழுந்துத் திமிறி நிற்கும் வலுத்தொடைகளை, தாங்கிப் பதிந்திருக்கும் பூம்பாதங்களை, மழைக்காலத்தில் பசுந்தோட்டங்களை வந்து வந்து மூடிக் குளிரில் நனைத்து, சிறுமழை பெய்து ஈரத்திலேயே வைத்திருக்கும் கருமுகில்களைப் போல், ஏன் இந்த வர்ண ஆடைகளுக்கும், மின்னும் நகைகளுக்குள்ளும் புதைத்து வௌத்திருக்கிறாய்?

ஒவ்வொரு திரையாக விலக்கி விலக்கி, ஸ்வர்ண சொரூபம் காணும் அந்த முதல் நொடிக்கு, இன்னும் எவ்வளவு தொலைவு செல்ல வேண்டும், நான்?

1 comment:

Anonymous said...

🌙