
பெரும் சத்தத்தோடு பெய்கின்ற பெருமழை, பாறைகளை உருட்டித்தள்ளிப் பொழிகின்ற பேரருவி, வாடைக் காற்றுக்கு வளைந்தாடுகின்ற வயல், முன்னிரவுக் காற்றுக்குப் பேயாட்டம் ஆடுகின்ற தென்னை மரங்கள் தாண்டியும் மெளனப் பொழுதுகளால் நிரம்பி நகர்கிறது, வாழ்க்கை.
பள்ளி செல்கையில் வரப்பின் ஓரம், இரு பாம்புப் புணர்வைக் கண்டதில் துவங்கின என் மெளனக் கணங்கள்.
புத்தகங்களை மாற்றிக் கொள்கையில், உரசிய விரல்களை சடாரென விலக்கி , தோழி முகம் பார்க்கையில் எழுந்த மெளனம், வெட்கம் எனப் பெயர் கொண்டது.
வாத்தியார் மறைவுக்கு, வழிபாட்டுக் கூட்டத்தில் அஞ்சலி செலுத்துகையில் நிறைந்த மெளனம் மரியாதை என்றானது.
ஆசிரியர் வரும் வரை அமைதியாய் இருக்கச் சொல்ல்லி, வகுப்பில் தோன்றிய மெளனத்திற்கு பயமே மூலமானது.
இரு நாய்களின் உறவைக் காண நேர்ந்து, உடன் வந்த தம்பியின் முகம் காண எழுந்த சங்கடத்திற்கு, மெளனமே முலாம் பூசியது.
சில காதல்களை உளறி, இழந்த தோழிகளின் முகம் பார்க்க முடியாமல், பழகிய மெளனம் மட்டும் வலி என்றானது.
No comments:
Post a Comment