Friday, May 25, 2007

உன்கூட டூ...!


நெடுநாள் நண்பனே!

அருகில் இருந்தும் பேசா உன் இருப்பு, அணைந்த விளக்கின் மீதக் கருந்திரியை நினைவில் மிதக்க விடும்! நம் நெருங்கிய நினைவுகளின் சுருங்கிய கணங்கள் கண்களில் கூடு கட்டும்!

விழி மோதும் போதெல்லாம், விலகிச் செல்கிறாய்! என் மொழி கோதும் போதெல்லாம், முனகிச் செல்கிறாய்!

சென்ற நாட்களின் துளிகளை எல்லாம், நாம் சொற்களால் செதுக்கிச் சென்றோம். அந்தச் சொற்களைப் பொறுக்கி வந்து சொல்லிப் பார்க்கிறேன். அந்த வார்த்தைகளில் உன் வாசம் உணர்கிறேன்.

இருப்பிடம் தேடி வந்து, என் இயல்பை இயக்குகிறேன். மறுப்பு சொல்லா ஒரு மெளனத்தை மட்டுமே, மலரச் செய்கிறாய்!

நம் தொலைந்து போன நட்பை, உன் மெளன இருளின் மோன நிலையில் அறிகின்றேன். மூடிவிட்ட ஓர் இரும்புக் கதவின் பூட்டுகள், உன் அமைதியை உறையாகப் பூண்டுள்ளன, தவறாகப் பூட்டியிருக்கின்றன. உடைத்துச் செல்லக்கூடிய வார்த்தைகள் உன் உள்ளத்திலேயே உறங்குகின்றன.

வாய் திறந்து பேசுவாயானால், நம் நட்பில் நனைந்த உன் வார்த்தைகளை வழித்துக் கொள்கிறேன்.

சில வார்த்தைகளைச் சிதறினால், உன் குரலைக் குறித்துக் கொள்கிறேன்.
இனி வருங்காலத்தில்,

இனியன வரும் காலத்தில்,

உன் குரலால் என்னைக் குளிப்பாட்டிக் கொள்கிறேன். முகம் காட்ட மறுத்து, முகவரி காட்டாக் காலத்திலும், உன் குரல் என் கூடவே வரும்! உன்னுருவத்தை என் உள்ளத்தில் கூடு கட்டிக் கொள்ளும்!

இவை என்,

கற்பனையின் எச்சங்கள் அல்ல!

கனவுகளின் மிச்சங்கள்..!

தொலைத்து விட்ட ஒரு நண்பனுக்கு எழுதியது..!

No comments: