Tuesday, December 18, 2007

திருப்பாவை :: பாடல் ஆ.


வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.


யர்பாடி அமைதியாக இருக்கின்றது.

மேற்றிசையில் திரண்டிருந்த கரும் முகில்கள், குளிர்மழையைப் பொழிவதற்குத் தயாராக இருந்தன. சிறு சிறு தாமரை மொட்டுகளும், மலரத் தயாராக உள்ள அல்லி மொட்டுகளும், குவிந்து நிற்கின்ற குவளை மலர் முகத்தின் பிம்பங்களும் தெரிகின்ற, நீர்க் குளத்தில் தேங்கியிருக்கின்ற குளிர்ந்த நீரைக் குழப்பி விடுகையில், அடியிலிருந்து தெளிந்து வருகின்ற மண்ணின் கரைசல் போல், வீசுகின்ற தென்றல் காற்றில் அசைந்து அசைந்து, கலைந்து கொண்டிருந்தன மேகங்கள்.

இணை இணையாகப் பறந்து கொண்டிருக்கும் சிட்டுக் குருவிகளும், வெண் புறாக்களும், நீர் நாரைகளும் அம்மேகங்களின் மேனியெங்கும் உரசி, உரசிப் பறப்பதைக் காண்கையில், கூட்டமாக உள்ள காகங்களின் கூட்டத்தில் வெண்மணி அரிசித் துகள்களை அள்ளித் தெறிப்பது போல் இருக்கும் அல்லவா?

அத்தகைய கரிய மேகத் தொகுதியைக் கிழித்துக் கொண்டு , அண்ட சராசரங்களும் கிடுகிடுக்க, கிளைகிளைத்துப் பாய்கின்ற ஒரு மின்னல் போல், இராதையின் குரல் ஆயர்பாடியுள் பாய்கின்றது.

குளிரில் தலையசைத்தவாறே தூங்கிக் கொண்டிருந்த , மஞ்சள் பூக்கள், படபடப்பாக அவள் இருந்த திக்கை நோக்குகின்றன. பின்னே அவற்றால் என்ன செய்ய முடியும்? அமைதியாக வீசிக் கொண்டிருக்கின்ற தென்றல் காற்று அவளைப் பார்க்க அவசரமாக வேகமாக ஓடி வருகையில், பூக்களும் அந்தத் திக்கைக் கொஞ்சம் திரும்பித் தான் பார்த்தாக வேண்டும் அல்லவா?

ன்னும் கண்கள் மூடிப் படுத்திருக்கின்ற தம் தோழியரிடம் தாங்கள் செய்ய வேண்டியவற்றை அவள் கூறுகின்றாள்.

ஆகா..! அவளுக்குத் தான் கோபம் யார் மீது..? பாவை நோன்பு இருக்கலாம் என்று சொல்லி இன்னும் உறங்கிக் கொண்டு இருக்கின்ற தம் தோழியர் மீதா? இல்லை, அந்த மாயக் கண்ணன் புகழைப் பாடாமல், அவனது நினைவை மறந்து உலக நினைவுகளில் மூழ்கி விட்டு, தம் உண்மை நிலையை அறியாமல், உணராமல் உறங்குகின்ற இந்த உலகத்தில் உள்ளோர் மீதா?

" உலகத்தில் வாழ்வீரே..! கேளுங்கள்..! நாங்கள் நம் பாவைக்குச் எய்யும் வழிபாட்டின் முறைகளைக் கேளுங்கள்.

பாற்கடலில் இலகுவாக உறங்குகின்ற அந்தப் பரந்தாமன் புகழ்பாடியபடி நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா?

இந்த ஆயர்பாடியுள் மிகவும் எளிதாகக் கிடைக்கின்ற நெய்யும், பாலும் எடுத்துக் கொள்ள மாட்டோம். பிரம்ஹ முகூர்த்தத்தில் நீராடுவோம்.

கண்களுக்கு மையிட்டு எழுத மாட்டோம். ஏனெனில் அந்தக் கார்வண்ணக் கண்ணனே நமது கண்ணில் உள்ளதால், அந்த வண்ணமே நம் கண்களுக்கு மையிட்டெழுதியது போல் இருக்கும்.

ஈரக் கூந்தலில் மலரிட்டு நாங்கள் முடிய மாட்டோம். ஏன் வைக்க வேண்டும்? அந்த மாயவன் தானே எங்கள் நெஞ்சமெனு மலரை மலர வைத்து விட்டானே? இன்னும் இந்த ' காலை அரும்பாகி, பகலெல்லாம் போதாகி, மாலை' உதிர்கின்ற இந்த நிலையற்ற சிற்றின்பம் தரும் மலரை நாங்கள் ஏன் அணிந்து கொள்ள வேண்டும்?

செய்யக் கூடாத காரியங்களைச் செய்ய மாட்டோம். எவையெல்லாம் செய்யக் கூடாதன தெரியுமா? அந்தப் பரந்தாமன் புகழ்பாடாத செயல்கள் அனைத்தும் தாம். தீயன சொல்ல மாட்டோம். அவையாவன யாவையெனில் கண்ணன் புகழ் கூறா மொழிகள் தாம்.

இவ்வாறு செய்து உய்யுவோம், வாருங்கள்.."

அடர்ந்த காட்டின் இருளுக்குள், ஒற்றைக் குரல் போல் ஊர்ந்து நகர்கின்ற குழலின் நாதம் போல், அவளது குரல் ஒற்றையாய் பரவுகின்றது.

DISC ::

இந்த விளக்கங்கள் அனைத்தும் ஆண்டாளின் காதலை நான் அறிந்த வரையில் கூறுவதாகும். நடத்துவது நாராயணன் கைகள். நடப்பது நமது பாதம்.

No comments: