
படபடவென அடித்துக் கொள்ளும் இறக்கைகளில் இருந்து சிறகொன்று மெல்ல கழன்று விழுகின்றது. அலகால் கோதிக் கொண்டிருக்கையில் மற்றுமொன்றும் விலகி மிதக்கின்றது. உயரே பறக்கையிலும் சில சிறகுகள் வானின் பிரம்மாண்டத்தில் பயந்து கீழே பாய்கின்றன.
நீர் கொண்ட கண்களின் மீது ஈரப் பிம்பமாய்ப் படிகின்றன அவற்றின் கதைகள்.
தத்தித் தத்தி நடக்கப் பழகுகையில் ஒரு சிறகு மெல்ல எட்டிப் பார்த்தது. வியப்பில் ஆழ்ந்து கலையும் முன், வளர்ந்து உடலை மூடுமாறு தெரிந்தது. வளர்கின்ற காலத்தில் கொத்திக் கொத்தி, கீறிக் கீறி, குத்திக் குத்திச் சிதைக்க, மெல்ல மெல்ல காற்றின் போக்கிற்கோ, காலத்தின் போக்கிற்கோ தன்னைக் கொடுத்து மெல்ல மாயமாகி மறைந்தது அச்சிறகு..!
மெல்ல இழப்பின் வலி புரிகையில் நெடுங்காலம் முளைக்கவேயில்லை சிறகுகள்.
பறக்க முயல்கையில் சிறகுகளின் இல்லாமை கால்களில் வலியைக் கொட்டியது. பறக்கவும் இன்றி, நடக்கவும் இன்றி போகும் திசையின் வழிகளில் எல்லாம் பதித்துச் சென்றது தன் பயணத்தை!
காலத்தின் மற்றொரு கனவு ஓவியத்தில், மற்றொரு சிறகு முளைத்தது.
போன ஒரு சிறகின் வலி மிஞ்சியிருக்க, பொன்னிறத்தின் இச்சிறகை கவனிக்கவில்லை. அச்சத்தால் ஆகிப் போன காலங்களில் பறக்க பயந்த நேரங்களில் ஜ்வலித்த சிறகின் ஒளிக்கு கண் மூடிக் கிடந்தது. சற்று தூரம் பறக்கும். பின் விலகும். பின் பயத்தின் விரல்களைப் பிடித்துக் கொண்டு கீழே வேகமாக இறங்கும்.
வேகமான ஒரு சக்கரத்தில் இறங்கி ஏறுகையில் ஏதோ ஒரு ஆரம் பட்டு வலியோடு விலகிக் கொண்டது. மெல்ல மெல்ல கண் பார்வையின் எல்லைகளுக்குள் இருந்து மறைந்து போனது, அச்சிறகு...!
வர்ணங்களால் நிரப்பப்பட்ட வானவில்லின் மேல் பயணம் செய்கையில் பல நிறங்களை எடுத்து மேலே விசிறி அடித்து, விளைந்தது ஒரு சிறகு. ஆச்சரியமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கையில் ஆயிரம் கதைகள் சொல்லி மனதின் ஓரங்களில் இருந்து , பிரம்மாண்டமாய்ப் படர்கின்றது முழு இதயத்தின் பரப்பிற்கும்!
கூறவே விடாமல், மொழிந்து கொண்டே இருக்கின்றது சிறகு, படபடவென சிரித்துக் கொண்டே! மெளனத்தால் நனைக்கின்ற அலைகளில் முழுக்கடித்தாலும், சிறகு சிலிர்த்துக் கொண்டு கதைகள் பேசும்.
எப்போது இச்சிறகு விலகிப் போம் என்ற துயரக் கேள்வியோடு அமைதியாய கவனித்துக் கொண்டிருந்தாலும், நிறுத்துவதே இல்லை மலரம்புகளின் வழி விளைவித்துக் கொண்டே இருக்கும் சிறகுகளின் விதைப்பை, மதன்...!
No comments:
Post a Comment