மனதின் இருண்ட மூலைகளில் சிறைத்திருக்கும் எண்ணங்களின் நிறங்களை யாரறிவர்?
ஒரு மூலையில் கிளைத்திருக்கும் சின்னச் செடியின் முளைத்தலின் பின் இருக்கும் நம்பிக்கையின் வலு என்ன?
கற்களை உருட்டி விளையாடும் நதியலையின் கரங்களைப் பிடித்து அழைத்துச் செல்வது யார்?
பகலின் வெம்மையைப் பதிந்து கொண்ட பாறையைப் பிளக்கின்ற ஆயுதத்தின் கூர் உணருமா அதன் வெம்மையை?
நாள் பொழுதில் மெதுவாய் நகர்கின்ற முட்களைச் சுமக்கின்ற கடிகாரத்தின் கோபம் யாருக்குத் தெரியும்?
அனல் வீசுகின்ற காற்றின் பிரவாகத்தில் பூக்கின்ற அரளிப்பூ பால் அறிவதில்லை அதன் விஷம்!
பெரும் அமைதிக்கு முன் எடுத்து வீசிய களிமண் பொம்மையை, எங்கே கரைத்திருக்கும் புயல்?
காலத்தின் கைகளில் தாங்க இயலா வலியோடு நகர்கின்ற வாழ்வின் கூறுகளை நினைவில் வைத்துக் கொண்டு எழுதிக் கொண்டிருப்பவன் யார்?
பூ பூத்த பின் சொல்லிச் சென்று தேன் அருந்தும் வண்டுக்கு யார் சொல்லுவர், பூ பூப்பெய்தியதை?
காற்றின் கரங்களில் அகப்பட்டுக் கொண்ட சருகைப் போல் நகர்ந்து கொண்டிருக்கும் வாழ்வின் தூறல்களில் நனைகின்ற கணங்களில் யார் போய் பொய் சொல்லி வந்தனர் நம் கனவுகளில்...?
No comments:
Post a Comment