
மெள்ள, மெள்ள.. நம்மை மெல்ல, மெல்ல இரவு பெரும் பசியோடு வருகின்றது. வெப்பம் ஏறிய மாலையின் மேற்றிசைக் கரங்கள் கொதிக்கின்ற சிவப்பின் குருதியின் அடையாளங்களைப் பதித்துச் செல்கின்றன, வானின் பெரும் பரப்பெங்கும்..!
புதுத் துளிகளைத் தெளித்துச் செல்லும் குளிர் நிரம்பிய காற்றின் பயணம், தினம் தினம் ஒரே தடத்தில் பதித்துச் செல்கையிலும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் புதிதாய்க் குளிர்கிறது.
இரகசிய ஓசையில் ஒரு குரல் நகர்த்திச் செல்லும் இடங்கள், புது இருளில் குளிக்கின்ற பறவையின் சிறகை சிலிர்க்கச் செய்து அனுப்புகின்றது. வியர்க்கின்ற வெப்பம் பரவுகின்ற யுகம் போல் பரவி நிற்கின்ற தொடல், ஒரு நிலையில் உறையச் செய்யும் இதயத் துடிப்பை!
உஷ்...! என்று ஒரு மெளனத்தைப் பரப்பச் சொல்கின்ற மதம், இரவுகளில் மட்டும் இயக்கம் பெறும் அதிசயம் என்ன என்று, யாரிடம் கேட்பது? புள்ளிகளைப் பதித்து, பொழிகின்ற பனியின் கரங்களில் நனைகையில், இருளின் வேகம் கண்களின் வெம்மையில் பதுங்கிப் பின்பாய்வதென்ன?
சின்னச் சின்ன மொட்டுகளைத் தாண்டி, பெருங் கள்ளைப் பெறுங் காலம் கண நேரமாயினும், வெறுங் கனவாய்ப் பின் மறக்காமல், பரு பூக்கச் செய்தும் ஊருக்குக் காட்டுகின்றது, ஒரு நாடகத்தின் திரை விழுந்ததை அல்லது திரை விலக்கப்பட்டதை...!

No comments:
Post a Comment