Saturday, February 14, 2009

காதல் தின வாழ்..!



காதலர்களுக்கு நாமும் ஏதாவது சொல்லி, காதல் தினத்தில் பங்கு பெறுவோம் என்ற எண்ணத்தில் தாத்தா சொன்ன ஒரு குறளை - அது சும்மா நச்சென்று இருக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு - தேடிப் பார்த்தேன். சிக்கியது ஒன்று.

வாராக்கால் துஞ்சா வரிந்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.

எந்த பால் என்று உங்களுக்கே தெரியும். கண் விதுப்பழிதல் என்ற அதிகாரத்தில் வருகின்ற 1179-வது பா. கண்களின் அழகழிதல் என்று பொருள் கொள்ளலாம்.

இப்படி பொருள் கூறலாம்.

"இந்தக் கண்கள் தாம் எத்தனை பரிதாபத்திற்குரியன? காதலர் வரவில்லை என்றால் அவன் வர வேண்டிய வழியைப் பார்த்துப் பார்த்து தூக்கம் வராமல் இருக்கும்; அவன் வந்து விட்டாலோ, அவன் அவற்றை (அந்தக் கண்களை) தூங்க விடுவதில்லை."

அப்படித் தானே..?

காதலின், பெருமூச்சுகளின், மெலியும் விரக வருத்த தலைவிகளின் பசலை தோய்ந்த பாடல்கள் கொண்ட குறுந்தொகையில் கைக்கு வந்த பாடலைப் பிரித்துப் படித்தேன்.

வைகல் வைகல் வைகவும் வாரார்;
எல்லா எல்லை எல்லையும் தோன்றார்;
யாண்டு உளர் கொல்லோ? - தோழி!- ஈண்டுஇவர்
சொல்லிய பருவமோ இதுவே; பல் ஊழ்
புன்புறப் பெடையொடு பயிரி, இன்புறவு
இமைக்கண் ஏதுஆ கின்றோ! - ஞெமைத்தலை
ஊன்நசைஇப் பருந்து இருந்து உகக்கும்
வானுயர் பிறங்கல் மலைஇறந் தோரே.

பாடல் எண்:285. பாடியவர் : பூதத் தேவன். திணை : பாலை. துறை : பருவம் கண்டு வேறுபட்ட இடத்து, வற்புறுத்தும் தோழிக்கு, வன்புறை எதிரழிந்து தலைமகள் சொல்லியது.

தோழி! இனிமைகொண்ட ஆண் புறாவானது, புல்லிய புறத்தைக் கொண்ட தன் பெடையோடு பன்முறை அழைத்துப் பழகியதாய், இமைப்பொழுதிலே எத்தகைய இன்பத்தை உடைத்தாகின்றது! ஞெமை மரத்தின் உச்சியிலே இருந்தவாறு, செத்து வீழ்வாரது ஊனைத் தின்கின்ற விருப்பத்தாலே, பருந்தானது ஆர்வத்தோடிருக்கின்ற தன்மையையுடைய, வானளவுயர்ந்த விளக்கத்தையுமுடைய மலிஅயைக் கடந்து சென்றோர் நம் தலைவர். அவரோ, நாள்தோறும் விடியல் நீங்கிப் பகல்காலம் வரவும் தாம் வந்திலர்! எல்லாப் பகற்கும் எல்லையாகிய இரவுப்பொழுதினும் வந்து தோன்றுதலைச் செய்திலார்! அவர் தாம் எவ்விடத்தே இருக்கின்றாரோ? இவ்விடத்தே, நம்மைத் தெளிவித்துப் பிரிந்த காலத்தில், அவர் மீள்வதாகச் சொல்லிச் சென்ற பருவமும் இதுவே ஆகும்!

கருத்து : 'சொன்னவாறு தலைவர் வந்திலரே' என்பதாம்.

விளக்கம் : 'வைகல் வைகல் வைகவும் வாரார்; எல்லா எல்லை எல்லையும் தோன்றார்' என்றது, நாள்தோறும் தலைவனது வரவை எதிர்பார்த்து ஏங்கியிருந்த தலைவியது ஏக்க மிகுதியை உணர்த்துவதாம். 'ஆண்புறா தன் பெடையைப் பன்முறை அழைத்தழைத்து இன்புறுதலைக் கண்டும், அவர் பால் நம்மீது விருப்பம் தோன்றாதது எதனாலோ?' என்று நோகின்றாள். 'சொல்லிய பருவமும் இதுவே' என்றது, பருவம் பொய்யாது வந்தது; அவர் தாம் சொன்ன சொற்களைப் பேணாது மறந்தார் என்றதாம். பயிர்தல் - அழைத்தல். பிறங்கல் மலை - விளக்கத்தையுடைய மலை.

விளக்கம் நன்றி : புலியூர்க் கேசிகனார்.

நாள் முடியும் நேரத்தில் இப்பதிவை எழுதக் காரணம், இன்றைய தினக் கொண்டாட்டங்கள் இரவில் தானே நடந்தேறும். ;-) எனவே!

No comments: