Thursday, February 21, 2008

நதியலையின் பேரெழிலே!

பொங்கி வரும் நதியலையின் பேரெழிலே! தங்கு தடையின்றி தாவி வரும் பெருந்தமிழே! எங்கும் நிறைந்து யாவு நீயான பூங்காற்றே! அங்குமிங்கும் ஏன் அலைகிறாய், அமர்க என் உளத்துள்!

அந்திமேகம் பொழியும் மஞ்சள் மழையே! வந்திருந்து வாழ நெஞ்சத்துள் நுழையே! சுந்தர மொழியால் நனைக்கின்ற இதழே! எந்த கணத்தில் சிறைத்தாய் எனையே?

என்னோடு எட்டு வைத்து நடக்கின்ற போதுகளில் வெயிலின் கிரணங்கள் தீண்டத் தீண்டப் பொன்னிறம் மின்னும் சிலை போலும், மெளனமான நேரங்களில் காற்றின் சீண்டலுக்கும் கலையாத நிழல் தந்தாய்!

பொன்பேழையின் ஒளி உமிழும் பாதங்களின் விரல்களின் கிரீடங்கள், கூர் அன்ன நினது பெயர் தாங்கும் இதயத்தின் மேலேறி மிதித்துச் செல்லுமா?

காற்றோடு தூது விடும் மாயச் சொற்கள், உரைப்பதை விட மறைப்பது எத்தனை எத்தனை?

முகில் சிந்திடும் ஈரத் துளிகளென நனைக்கின்ற பார்வைகளில் பதுங்கிடும் சிறு முயல் குட்டியாய் மனம்! போதுமென எண்ணுகையில் என்னு கையில் கிடைக்கின்ற நினது நிழலின் கருமை என் கண்களைச் சுற்றிக் கரை கட்டுவதை மீறி, காலமென நில்லாது பாய்கின்றது கண்ணீர்!

பெரும் போதை, பெறும் போதைக் குறித்துக் கொள்ள கண்களைப் பிடுங்கி கல்லில் கிறுக்க, சிந்திச் சிதறியது ஊமைக் காற்றின் குரல்!

மலையுச்சியில் பூத்திருக்கும் ஒற்றை மலரென, எதிர்பாரா நேரங்களில் கிடைக்கின்ற புன்னகைப் பூக்கள் வாடுவதேயில்லை என் உளப் பூங்காவினில்! நிழல் நீண்டு செல்லும் மாலை நேரங்களில் நெஞ்சில் புதைத்துக் கொள்வதற்கென பார்வைகள் தந்து விட்டுப் போகின்றாய். அவை இரவின் கனவுகளுக்கும் இடம்பெயர்கின்றன.

புதிதாய் ஒரு வார்த்தை சொன்னாய், புரியாத பொருளைத் தேடிப் புதிது புதிதாய் அர்த்தம் கொள்கிறேன். மன மோகன ராவினில் எனைச் சுற்றும் மின்மினிகளாய் முத்தங்கள் பறக்க விட்டாய். உறங்க விடாமல் உள் நோக்கிப் பறந்து கொண்டேயிருக்கின்றன.

காலையில் விழிக்க கனவுகளைப் பலியிட்டு எழுந்து பார்க்க, சிவந்த துளிகளாய்ச் சிந்திக் கிடந்தன, பொழுதுகளின் ஈரம் பூத்திருந்த பனித் துளிகளென நனைந்த பச்சை இலைகள்.

வேறெங்காவது பிறந்திருக்கலாம் என திகைக்க வைக்கின்ற இனிய அழகே, துரத்திக் கொண்டு வருவாயா எங்கே நான் சென்றிடினும்? பெற்றுக் கொள்ள நிறையா பாத்திரமாக மனம் திறந்திருக்க இட்டுக் கொண்டேயிருக்கின்றாய், காதல் புதைந்த பார்வைகளின் வழி உயிர் வாழச் சொல்லும் ஒரு நம்பிக்கை...!!!!


Get Your Own Hindi Songs Player at Music Plugin

No comments: