Monday, July 09, 2007

இவன்..!



ழை என்பது அவனுக்குக் கழுத்து வரை இறுக்கிக் கொள்ளும் போர்வை போல ! அடித்துப் புரட்டி, அசைத்துப் பார்த்து, சூறாவளியாகச் சூறையாடி விட்டு, இடியால் உடுக்கடித்து விட்டு, மின்னலால் மிரட்டி விட்டு, அமிழ்ந்தோடும் அட்டகாச மழையைத் தான் அவன் சொல்கிறான்!

சுழித்தோடும் நதியின் நுரைகளில் எல்லாம் தூரக் கவிஞர்களின் ஓலைகளின் ஓசைகளை அவன் கேட்கிறான்!

அழுக்குகளை அகற்றி விட்டு, அழகாக்கிச் செல்லும் அமிழ்து மழையின் மடியில் அமர்ந்து கொள்ள, அவன் விரும்புவான்! வெயில் புழுக்கத்தில் வெந்து போகும் அவன், மழையின் மடியிலேயே மடிய விரும்புவான்! நரம்புகளை எல்லாம் நனைத்துச் செல்லும் மழையின் கரங்களைப் பிடிக்கத் துழாவுவான்!

சாரல்களின் ஸ்பரிசங்களில் சங்கமிக்கத் துடிப்பான்! சப்தங்களின் சாரங்களிலும், சகதிகளின் ஈரங்களிலும் அவன் சங்கீத சஞ்சரிப்பை உணர்வான்! குடை நனைத்து, உடல் நனைக்கா மனிதர்க்காகப் பரிதாபப்படுவான்!

பூந்தூறல் தூவும் புதுமழையைப் போற்றுவான்! பேய்மழையின் பெய்தலுக்கு நனைந்து கொண்டே நன்றி நவில்வான்! உளறல்களின் உச்சத்திலேயே உரையாடும், உறவாடும் அவன் உதடுகளுக்கு உறை போடும் மழையை மெளனத்தாலேயே மதிப்பான்!

பூமி தழுவிப் புதிதாக்கும் மழை நேரங்களில் தான் அவன் உயிர்ப்பான்! வெயில் கண்ட போதெல்லாம் வெறுப்பான்! பொங்கிப் பெருகும் புது வெள்ளத்தின் மஞ்சள் மாலைகளில் மனம் தொலைப்பான்!

மெளனமாக அதன் பார்வைப் பொழிவில் நனைவான்! நனைந்து, அதில் கரைந்து, கரைந்து காற்றில் கலப்பான்! சிதறிச் செல்லும் சிறுதுளிக்குச் சிறகசைத்துச் சிலிர்க்கும் சிட்டுக் குருவியாய் உடல் நினைப்பான்! சந்தோஷ மழை நேரங்களில் சண்டைகளை வெறுப்பான்!

புகைவண்டிகளால் புண்பட்ட சாலைகளின் புன்னகைத் தோழி மழையே! பாதைகளின் கண்ணீரைப் புகையாக்கித் தீர்ப்பாள்!

சாலைகளைத் தழுவிக் கொள்வாள்! கழுவிக் கொள்வாள்! பின் நழுவிச் செல்வாள்!

அவனது வேனில் நேர உளறல்களுக்கும் நிறமூட்டும் நிறமி மழை! சிரிப்பூட்டும் சிறுமி! அவன் எழுத்துக்கெல்லாம் மழையே தாய்!

மழை அணுகும் போதெல்லாம், அவன் மனதுக்குள்ளே மசக்கை! பிரசவிக்கின்றது பேனா, இதைப் போல்!

அவன் கனவுகளில் மழை வரும்! மழை வருகையிலெல்லாம் அவன் கனவு காண்கிறான்!

அவன் - இவன்...!




எழுதியது : 04 - JUNE - 2003.


No comments: