Saturday, January 02, 2010

பிலிப்ஸ் இரவில் ஜனித்த சிம்பொனி!



முன்னொரு நாளின் இரவில் மின்சாரத்தைத் தின்று மின்னல் வெளியிட்ட மழை ஒன்று இரவின் ராகத்தில் பெய்து கொண்டிருந்தது. சாலைகளில் ஈரம் சறுக்கிக் கொண்டு போனது.

ஒரே ஒரு பேருந்து மட்டும் நனைந்து கொண்டிருந்த புறநகர் நிலையத்தில் சக்கரத் தொப்பியின் மேல் கால்கள் வைத்து கம்பிகளில் நடக்கும் துளிகளை எண்ணிக் கொண்டிருந்தேன்.

தூரத்துப் பச்சை வயல்கள், அடித்துப் பெய்த ஈரச் சிதறல்களுக்குத் தலையாட்டிக் கொண்டிருந்தன. கொண்டல் சரங்களின் இடைவிடாத மறைப்புகளுக்கு இடையில், குளிர்ந்து கொண்டிருந்த தனியான ஒரு வீட்டில் மெழுகுத் தலைகள் ஜன்னல் கண்ணாடிகளில் படர்ந்தன.

குட்டி விளக்குகள் மின்னிக் கொண்டிருந்த இந்த கடைசிப் பேருந்தைத் தவிர, பிரதேசத்தை கறுப்பாய் இருள் கரைத்த மழை கழுவிக் கொண்டிருந்தது. வாகனர்கள் பாதிக்கதவு அடைத்திருந்த தேநீர்க் கடையில் பேசிக் கொண்டிருந்தனர். கடையின் ஆதி வானொலி ஒன்றிலிருந்து 'என் வானிலே ஒரே வெண்ணிலா...' மண்ணெண்ணெய் விளக்கின் திரியிலிருந்து கசியும் புகையோடு நழுவிக் கொண்டிருந்தது.

என் கைகளில் பாலிதீன் காகித உறையில் பத்திரமாய்ப் பதுக்கி வைத்திருந்த சான்றிதழ்கள். சட்டைக்குள் ஒளித்து வைத்தேன். ஜன்னல் கம்பிகளில் மழைத்துளிகள் தெறித்த கொலுசு மணிகள் போல் தனித்தனியாக நகர்ந்து, ஒன்றாகிச் சொட்டின.

படிக்கட்டுகள் பதற்றமாகும் அதிர்வில் அவள் ஓடி உள் ஏறி வந்தாள். கூட்டத்தை எதிர்பார்த்தாளோ, தனிமைக்குத் தயாராய் இருந்தாளோ, ஒற்றையனாய் என்னைக் கண்டதும் ஓர் அதிர்ச்சி அவளது அழகிய முகத்தில்!

நெற்றியிலிருந்து இறங்கிச் சுருண்டிருந்த மெல்லிய கொத்து ஒரு கன்னத்தை வளைத்திருந்தது. மஞ்சளில் பூக்கள் வரைந்த உடையில் கைப்பை சுமந்திருந்தாள். கண்ணாடி வளையல்கள் சிணுங்க முகத்தில் வந்து விழுந்த அடர்ந்த கற்றையை பின்னே ஒதுக்கி விட்டாள். எதிர் வரிசையில் ஒரு ஜன்னலோரத்தில் அமர்ந்து சுருட்டி வைத்து, முனைகளில் ஒட்டியிருந்த பத்திரிக்கையைப் பிரித்துப் படிக்கத் திடங்கினாள். அவள் ஜன்னல் சாத்தியிருந்தது.

எங்கிருந்தோ பிறந்த ஒரு துளி, அவள் பின்னங்கழுத்தில் பூத்து, மெல்ல நகர்ந்து, சுற்றி, தங்கப் பாள முதுகு இறக்கத்தின் நுனியில் கால் வைத்துச் சரேலென சரிந்தது. கைகளோடு முத்தமிட்ட பிஞ்சு முடிகள் ஒரு நவீன ஓவியம் போல் கலைந்திருந்தன. மென் மஞ்சள் முதுகோடு ஒட்டி மிக வெள்ளையாய் ஒரு பட்டை, புகை போல் தெரிவதை உற்றுப் பார்ப்பதற்குள், திரும்பிப் பார்த்தாள்.

அவள் இரு புருவங்களுக்கும் இடையே மிக மிக இலேசான கருப்பாய் ஓர் இணைப்புப் பாலம் தோன்றியிருந்தது. மூக்கின் நுனியில் சிவப்பாய் ஒரு கோபம் கிளம்பத் தயாராய் இருக்க, செழித்த உதடுகள் சூரியனைப் பிளந்தாற்போல் ஜொலித்தன. இமைகளின் ஒவ்வொரு கேசக் குட்டிகளிலும் ஒவ்வொரு மழைத்துளி ஒய்யாரமாய் உட்கார்ந்திருந்தது. கீழே உயிர்த் துடிப்போடு உருண்டு கொண்டிருந்த கறுப்பு குலோப் ஜாமூன்களாய் இரு விழிகள், என் மேல் கேள்விகள் எறிந்தன.

'தனிமையிலே... வெறுமையிலே... எத்தனை நாளடி இளமையிலே..!'

விரல் நீட்டி தலை சாய்த்து எச்சரித்தாள். துளிக் கொஞ்சமாய்த் தெரிந்த பொன் மார் பின்புலத்தில், அந்த விரலில் மருதாணி பூசியிருந்தாள். கவிழ்ந்த அந்த செந்தொப்பி கவ்விய விரல் நுனி ஜில்லென்று சுருண்டிருந்தது.

கண்ணாடி முகமூடிகள் கழண்டிருந்த சின்ன வெளிச்சங்கள் மட்டும் நிறைந்திருந்த பேருந்தின் வலது கன்னம் வைப்பரால் தேய்த்துத் தேய்த்துக் துடைக்கப்பட்டுக் கொண்டேயிருக்க, தளர்வுறா மாமழை தன் ஆயிரம் ஆயிரம் அம்புகளால் மீண்டும் மீண்டும் சேதப்படித்திக் கொண்டேயிருந்தது. அத்தனை ஜன்னல்களும், அழுக்கு படிந்த பச்சைத் துணிகளால் மறைக்கப்பட்டிருக்க, ஓர் அன்றலர்ந்த மஞ்சள் ரோஜா போல் அவள் பார்த்தாள்.

(...)

Friday, January 01, 2010

I see you....Avatar!



மாலை மங்கி மெல்லிய வசந்தத்தின் வாடைக்காற்று வீசிக் கொண்டிருந்த போது, அவதார் பார்த்தேன்.

அவதார் ஓர் அற்புதப் கனவுநிலம். பண்டோராவின் மின்னும் மரங்களும், ரேடியம் ஜொலிக்கும் பாதைகளும், ஹோலி கொண்டாடிய பறவைகளும், பஞ்சுப் பூக்களாய் மிதக்கும் ஒளிப் பூச்சிகளும் நீல 'நவி'களும் இந்த இரவின் கனவுகளில் என்னை ஆக்ரமிக்கின்றன.

மிதக்கும் மலைகளில் இருந்து சாரல் அருவிகள் முகில்களிலிருந்து நேரடியாகப் பொழிகின்றன. பிரார்த்தனை மரத்தின் பிசிறான வெள்ளி நார் இழைகள் மிருதுவாக மேனிகளில் ஊடுறுவுதல் எனக்குள் சுகமாய்ப் பிறக்கின்றது.

வெயில் கூட இலேசாகத் தான் பாய்கின்றது. தொட்டால் சிணுங்கும் சுழல் பிங்க் மலரிலைகளும், வானெங்கும் பிரம்மாண்டமாய் நிறைந்திருக்கும் மற்றொரு கோளும், சில சந்திரன்களும்.... துல்லிய பிரமிப்புகள்.

ஒவ்வொரு இழையையும் பார்த்துப் பார்த்து நெய்தெடுத்த பட்டுப் பிரளயம் போல் வந்திருக்கின்றது படம். தவறாமல் மூன்று பரிமாணத்தில் மட்டும் பாருங்கள். ஓர் உன்னத அனுபவம் பெறுவீர்கள்.

ஃபேண்டஸி எழுத்தாளர்களுக்கெல்லாம் கேமரூன் ஒரு வலுவான சவால் வைத்து விட்டார். இனி கற்பனை உலகத்தைச் சிருஷ்டிக்கும் போது, 'அவதாரை'த் தாண்டிச் செல்வது மட்டுமே இலக்காக வைத்துக் கொள்ள வேண்டும்.

Thursday, December 31, 2009

வாழ்த்திய வாழ்த்தொலி போய்...



புத்தம் புதிய ஆயிரம் ஆண்டுகளின் முதல் பத்தின் கடைசிப் பெளர்ணமியில் என்னைச் சுற்றி இலேசான குளிர் பறக்கிறது. பின்புறத் தோட்டத்தில் விரிந்த வாழை இலைகளில் நிலவொளி வெள்ளம் பாய்ந்துச் சேகரமாகி, நடுப் பட்டையில் ஓடி நுனியில் சொட்டுகின்றன. செதுக்கிய இலைகளில் ஒளிக் குளங்கள் தேங்கிக் காற்றுக்குத் தத்தளிக்கின்றன. தென்னங் கீற்றுக்கள் சரிந்த வாட்களாகிக் கூர்மைகளில் வெள்ளி பூசியிருக்கின்றன. கொஞ்சம் சாய்ந்த ஒற்றைப் பலா மரத்தின் ஒரு 'சிறு காம்பில் தொங்கும் பலாக்கனியை' எறும்புகள் கீறியிருக்க, வெடித்ததில் மெல்லிய இனிப்பு மணம் காற்றில் சுகமாய்ப் பரவுகின்றது. வாசலொட்டிய சிற்றோடையில் குளிர்ந்த நீர் சலசலத்து ஓடுகையில், அசைந்தாடும் காதல் வடிவ இலைகளில் நீர்ச் சுட்டிகள் உள்ளங்கையில் பாதரசத் துளிகள் போல் மின்னுகின்றன. மதில் பக்கத்தில் பூத்திருக்கும் செம்பருத்திப் பூக்களுக்கும், பெயர் தெரியாத அந்த மஞ்சள் மலர்களுக்கும், இரவின் கரும் இடுக்குகளுக்குள் ஒளிந்து கொண்டு 'ட்ரூச்சு..ட்ரூச்சு..' எனச் சத்தமிடும் பூச்சிகளுக்கும், மழை வாசம் உணர்ந்தாலே 'கொர்ரக்...கொர்ரக்...'காய் உற்சாகக் கூச்சலிடும் சின்னத் தவளைகளுக்கும், கம்பி வேலி மேல் நின்று கொண்டு சின்னத் தலையை இப்படியும் அப்படியுமாகத் திருப்பித் துளிக் கண்களை இமைத்து, தன் துயர் நனைந்த இராக்காலக் கனவுகளைக் கூவும் வயலட் நிற வெல்வெட் சிறகு மைனாவுக்கும் நாளை புத்தாண்டு என்பது தெரியுமா?

ஆனால், நமக்குத் தெரியும்.



தன் கடைசி மணிகளில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த கி.பி.2009 எனக்கு என்ன அர்த்தம் ஆகின்றது என்பதைக் கொஞ்சம் - கழுத்து வலித்தாலும் பரவாயில்லை என்று - திரும்பிப் பார்க்க விரும்புகிறேன்.

எழுதுவதைப் பொறுத்த வரை கொஞ்சம் வருத்தமும் நிறைய சந்தோஷங்களும் கலந்திருந்தன.

சென்ற வருடத்தை விட இந்த ஆண்டு பத்திக்குப் பாதி பதிவுகள் குறைந்து விட்டது என்பதில் வருத்தம் இருக்கின்றது. காரணமும் புரிகின்றது. கடந்த வருடத்தின் சந்தோஷ மனநிலை இந்த ஆண்டு முழுதுமே இல்லை. மென்பொருளாளனுகே ஆன பொருளாதாரப் பயங்கள், தனிக் கவலைகள் போன்றவை இருந்தன. எழுதுவதை முதன்மைப்படுத்தி, கவலைகளை நியூரான் குழப்பத்தின் இருளான பிரதேசங்களுக்கு அனுப்பி வைத்தேன்.


மகிழ்ச்சி பல காரணங்களால்!

செறிவான சில சிறுகதைகள் எழுத முடிந்தது.

மனையியல்.
கோடானு கோடி!
கிளி முற்றம்.
பொன்னி.
ஓர் உரையாடல்.
Blackhole..!

பயணக் கட்டுரைகள் எனக்கே பிடித்த மாதிரி நன்றாக வந்தன.

காவிரிக் கரையோரத்திலேயே...
சுதந்திர நாளில்...மதுரையில்..!
ஏப்ரலில் இருந்து மேக்கு ஒரு பயணம்!
பண்ணாரிக்குப் போனேன்.

உரையாடல் அமைப்பினர் நடத்திய சிறுகதைப் போட்டியில் இருபதில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்ட ஒரு கதையை எழுதியதில் மற்றொரு மகிழ்ச்சி. பாஸ்டன் பாலா அதை முதல் மூன்றுக்குள் வைத்தது எதிர்பாராத இனிப்பு.

புதுக்கவிதை இயக்கம் தோன்றி ஐம்பது ஆண்டுகள் ஆகியதைக் கொண்டாடிய 'நவீன விருட்சத்தின்' செப்டம்பர் மாதக் காலாண்டு இதழில், யோசிப்பவர் மற்றும் அனுஜன்யாவின் சிறுகதைகளுக்கு இடையே நெருக்கிக் கொண்டு 'மாமா எங்க' கதையும் அச்சில் வந்தது. யோசிப்பவரின் ஆலோசனையின் படி அனுப்பி வைத்ததால், 'யுகமாயினி'யில் 'முதல் அறிவியல் புனைகதை' வெளியானது.

மும்பையில் இருந்து 'எதைப் பற்றியும் பற்றாமலும்' நவீனக் கவிதை எழுதும் 'யூத்' அனுஜன்யா, 'சுவாரஸ்யப் பதிவர்களில்' ஒருவனாக என்னையும் டிக் செய்தது ஆச்சர்யக் களிப்பை அளித்தது.

வலைச்சரத்தில் அ.மு.செய்யது என்ற பதிவர் 'காலத்தை வென்றவர்கள்' என்று இந்தக் கதைகளை வைத்துச் சொல்லியிருந்தது கூச்சம் கொடுத்தது. இவர் படிக்கிறார் என்பதே இவர் சொல்லித் தான் தெரிந்தது. இது போன்று எத்தனை பேர் சைலண்டாகப் படிக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

பிறந்த நாளுக்கு முன்னாள், நீல.பத்மநாபன் அவர்களைச் சந்தித்து ஆசி பெற்று வந்ததையும், அடுத்த நாள் நாகர்கோயிலில் மீனாட்சிபுரத்திற்குப் போய் ஜெயமோகன் அவர்களைப் பார்த்து, ஒரு கிட்கேட் மட்டும் கொடுத்து, மதிய உணவுடன் ஆலோசனைகளையும் பெற்று வந்ததையும் மறக்க முடியாது.

தொழில்நுட்பக் கட்டுரைகள் எழுத வேண்டும் என்று மிக நாட்களாக விருப்பம் இருந்தது. இயற்பியல் கட்டுரைகள் எழுதி வந்தாலும், அவை அறிவியல் என்ற வகையின் கீழ் வரும். ஏற்றாற்போல் சிங்கைப் பதிவர்கள் அமைப்பு 'மணற்கேணி - 2009'ல் கட்டுரைகள் கேட்க, பணியாற்றும் துறையின் அடிப்படைகளை முடிந்த அளவுக்குத் தமிழ்ப் படுத்தி அனுப்பி வைத்தேன். முடிவுக்காகக் காத்திருக்கிறேன். தொடர்ந்து எழுத வேண்டும்.

இந்த ஆண்டின் மிகப் பெரிய சாதனையாக கருதுவது, நேனோரிமோ. முதன் முதலாக ஆங்கிலத்தில் ஒரு நாவல் எழுதும் சவாலை எனக்குள்ளேயே ஏற்படுத்திக் கொண்டு, எழுத உட்கார்ந்தேன். செப்டம்பர் மத்தியில் இருந்து ஆரம்பித்து, அக்டோபர் மாதம் முழுக்கவே ஒன்றும் க்ரியேட்டிவாகத் தோன்றவேயில்லை. ஜெயமோகன் அவர்களிடம் கேட்ட போது, 'அவ்வளவு தான். சரக்கு காலி' என்றார். 'சரிதான்' என்று கொஞ்சம் துக்கத்தோடு இருந்தேன். 'அது ஒரு பனித்திரை' என்று காட்டி மீண்டும் அடைத்திருந்த பாட்டில்களை நுரைகள் பீய்ச்சியடிக்கத் திறந்து விட்டது, நேனோ. என்.சி.சி. கேம்ப் அனுபவங்களைக் களமாக்கிக் கொண்டு எழுதத் துவங்க காதல்களும், மோதல்களும், கிண்டல்களும், சாகசங்களுமாக அந்த நாவல் அருமையாக வந்து கொண்டிருக்கின்றது.

Na-No-Wri-Mo.
NaNoWriMo.Update.1
NaNoWriMo.Update.2
NaNoWriMo.Update.3
NaNoWriMo.Update.4
NaNoWriMo.Update.5
NaNoWriMo.Update.6.Final

சில முயற்சிகள் குறைப்பட்டும் போயின. 'ஆகாயக் கொன்றை' என ஒரு குறுநாவல் எழுதத் துவங்கி மூன்று சேப்டர்களில் நிற்கின்றது. முடிக்க வேண்டும்.

என்னமோ நிறைய எழுதிக் கிழித்தவன் போல் சிறுகதை எழுதுவது பற்றிச் சில பதிவுகள் எழுதினேன். பாறைகளில் பதுங்கிய விதை போல் சில மனங்களில் ஒளிந்திருக்கலாம். மழை நுனி தொட்டதும் முளைக்கலாம். முதல் துளி விழும் நொடி தான் ரகசியம்.

சிறுகதைப் போட்டியாளர்களுக்கு ஓர் உதவி!
சிறுகதைப் போட்டியாளர்களுக்கு ஓர் உதவி!.2.
புதிய எழுத்தாளர்களுக்கு 11 யோசனைகள்.
நானும் எழுதுகிறேன் 10!

வருடக் கடைசியில் ஈரோடு பதிவர்கள் சங்கமம் மற்றுமொரு திருப்புமுனை. மேடையில் நூற்றுக்கும் மேலான இரட்டைக் கண்கள் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கையில் உள்ளங்கை வேர்க்காமல் பேச முடிகின்றது என்பதை அறிந்து கொண்டேன். அதற்கு முழுக் காரணமும், பேசுவதை முன்பே எழுதிக் கொண்டு சென்றது தான். எனவே பேட்டை மாறாமல் ஓட முடிந்தது. பேசிய உரையைப் படித்துப் பார்த்தால் ஒன்று தெரியும். அப்பட்டமான வாத்தியார் ஸ்டைல். அதற்காகவும் வாத்தியாருக்கு மேலும் சில நன்றிகள்.

இந்த ஆண்டு முழுதும் படித்தது என்று பார்த்தால் மிகக் குறைவு தான். வலைப்பக்கங்களைப் படிப்பதைத் தவிர, புத்தகங்கள் நிறைய படிக்கவில்லை. நம் நாட்டு விடுதலைப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு படைப்பு எழுதும் ஐடியா இருக்கின்றது. இது நம் எழுத்தாளர்கள் அனைவருக்குமே இருக்கும் என்று நினைக்கிறேன். பிரிவினை அத்தனை சம்பவங்கள் நிறைந்த உணர்ச்சிபூர்வமான வரலாறு. பதினெட்டாம் நுற்றாண்டின் மத்திய ஆண்டுகளில் பம்பாயின் எல்லைக் குடிசைகளில் வாழ்ந்த தமிழ்க் குடும்பத்தில் பிறக்கும் பையனின் வாழ்க்கையை, கூடவே பிறந்த இந்திய ரெயில்வேயுடன் பின்னிப் பிணைந்து 1947-ல் உச்சக் காட்சியுடன் நிறைவு செய்ய ஆசை.அதற்காக வாங்கிய புத்தகங்களை மட்டுமே படித்தேன். தோதாக, ஜெயமோகன் அவர்களும் காந்தியைப் பல கோணங்களில் எழுத, சேர்த்து வைத்து விட்டேன்.

வலை மற்றும் அலுவலகம் தாண்டிய ஒரு குடும்ப வாழ்க்கை என்ற ஒன்றுமிருக்கின்றது. அதில் இவ்வாண்டின் பெருமகிழ்வாக ஒரு சொந்த வீடு வாங்க முடிந்தது. ஆறு வருடங்களுக்கு முன்பு ஐ.சி.எஃப். செல்லும் 47-டியில் இரண்டு நாட்கள் சாப்பிடாததால் மயங்கி விழுந்தவனுக்கு இன்று ஒரு அடர்ப் பச்சைப் பெய்ண்ட் அடித்த வீடு சொந்தம் என்பதற்கு ஆச்சரியப்படுவது இயல்பே என்றான் சீனி. எஸ்.பி.ஐ. கட்டிய ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருக்கிறோம் என்பதாகவே நான் உணர்கிறேன். என்ன, மாத வாடகை தான் கொஞ்சம் அதிகம்!

தமிழ்ப்பறவையுடன் ஏறத்தாழ வருடம் முழுக்க தினம் பேசினேன். யோசிப்பவர் அவர் முயற்சிகளில் என்னையும் இழுத்துக் கொள்கிறார். அதற்கு என்ன தவம் செய்தேன் என்று தெரியவில்லை.

அனலில் எரிந்த முத்துத் தமிழன் மறக்க முடியாமல் செய்து விட்டான். ஆஸ்கார்த் தமிழன் அன்பையும், அடக்கத்தையும் பறைசாற்றினான்.

மொத்தத்தில் 2009 கொஞ்சம் நடுக்கத்திலேயே வைத்திருந்தாகவும் எழுதுவதில் கொஞ்சம் தனித்த நடை வந்திருப்பதாக உணர்வதாகவும் கடந்து கொண்டிருக்கின்றது. வரும் ஆண்டிற்கென சில கனவுகள் வைத்திருக்கிறேன்.

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Cheeeeeerzzzzz and Rock U Buddiezzzzz.....!!!!!!

Wednesday, December 30, 2009

முரண் உணர்.(A)

ஸ்ட்ராபெர்ரி நிறம் விரும்புவாள்.
சீதாப்பழத்தைத் தோல் வரை தின்பான்.
பாயும் ரயிலுக்குள் பின்னே நடப்பாள்.
கடப்பாறை நீச்சல் தெரிவான்.
தோல் என்பதால் ஷூ வெறுப்பாள்.
தனியாய் மலையேற்றம் போவான்.
தோழியிடம் பிணக்கென்றால் நிலவுடன் சண்டையிடுவாள்.
ஹாங்காங் படப் பேய்களின் ரசிகன்.
பப்பி1, பப்பி2 என்று பூனைகள் வளர்க்கிறாள்.
கண்களைக் கட்டி ரேடியோ அஸெம்ப்ளிங் செய்வான்.
நகங்களை ரத்தம் வரை கடிப்பாள்.
வாட்ச் கட்ட மாட்டான்.
கணக்கில் எப்போதும் அவள் நூறு.
டாய்லெட்டில் புத்தகம் படிப்பான்.
ஊட்டியில் பாட்டி வீட்டுக்குப் பக்கத்தில் முதல் தற்கொலை பார்த்தாள்.
லாரிக்கடியில் பிராய்ந்ததில் வலதுகாலில் அவனுக்கு ஒரு தழும்பு.
வானம் பார்த்து மேகம் எண்ணுவாள்.
பஜ்ஜி படர்ந்த தந்தியை உதறிப் படிப்பான்.
45க்குள் ஒருமுறை அண்டார்ட்டிகா அவள் ஆசை.
டாம் சாயருக்கு ஒரு ஃபேன் ஃபிக்ஷன் அவன் கனவு.
மழையென்றால் அவளுக்கு ஆஹா.
மழையென்றால் அவனுக்கு ஆகா.
கார்த்திகை கடைசி முகூர்த்த முன்னிரவில்,
மண்டபத்தில் டெக்கெடுத்து
'சிங்கார வேலன்' ஓடுகையில்,
சாத்திய அறைக்குள்
பூக்கட்டில் நடுங்க,
அவர்கள்
வேகமாய்ப் புணர்ந்தனர்.

***

(உரையாடல் கவிதைப் போட்டிக்காக எழுதியது.)

Friday, December 25, 2009

ஈரோடு சங்கமம் - 2K9 - Cooooool!



"நாப்பது ரூபா ஆகும் சார்..!"என்றார் அந்த ஆட்டோக்காரர். பயணிகளின் சீட்டில் சரிந்து படுத்திருந்தார். மஃப்டியில் தான் இருந்தார்.

நான் சவிதாவில் நின்று கொண்டிருந்தேன். மதியம் மயங்கி வானம் மாலையைக் கவ்விக் கொண்டிருந்த 15:40. ஞாயிறு பிற்பகல் என்பதால், பிரஃப் ரோட்டில் மூன்று சைக்கிள்கள், ஓர் ஆட்டோ, பி.எஸ்.பார்க்குக்குத் திரும்பிய '5' தவிர ஐந்து ஈக்கள், எட்டு காக்கைகள் இருந்தன. ஷட்டர்கள் வளைந்த வாசல்களில் கடைகள் இறுக்க மூடியிருந்தன.

"கலெக்டரேட் போக அவ்வளவு ஆகுமா..?" இந்தா, இங்கிருந்து நாலு எட்டு வைத்தால், எம்.ஜி.ஆர். சிலை. அவர் முகம் பார்க்கும் பெருந்துறை ரோட்டில் ஒரு இருபது எட்டு வைத்தால், வந்து விடுகின்றது ஆட்சியர் அலுவலகம்.

திரும்பியே பார்க்காமல் நடக்கத் தொடங்கினேன்.

சாம்பாரில் தூள் போல் மேகங்கள் விரவியிருந்தன. சாலை மத்தியின் கம்பங்களில் சரடுகளில் தலைவர்கள் தொங்கினர். செங்கல் பத்திரங்களுக்குள் மரங்கள். கண்ணாடிக் கடைகள், சர்பத் ஸ்டால், மட்டன் ஷாப், மருந்துக் கடை, காலியாக இருந்த ஆட்டோ ஸ்டாண்ட். வெட்டிய பிரிவில் வளைந்து, சிவப்பு வட்டம் நிறுத்தியிருந்த டீசல் வாகனங்களுக்குள் புகுந்து பெருந்துறை ரோட்டைப் பிடித்தேன்.

மே.எம்.சி.ஹெச். கிளை போர்டு பெரிதாய்த் தெரிந்தது; இரவில் எரியும். சாலைத் தடுப்பின் கம்பிகளில் ஜூவல்லர்ஸ் விளம்பரங்கள். கீழே ஒதுக்கிய மணல் சிறு குன்றுகள். குப்பைகள். ஸ்கூட்டியில் 'U' அடித்த பெண்ணுக்கு வயது பத்தா..? எதிர்த்த ஆட்டோவில் கிரைண்டரை மனைவி போல் கட்டிக் கொண்டு ஒருவர் போனார். சைக்கிள் கேரியரில் பேட் செருகிப் பறந்த சிறுவன் சட்டையில் மூன்று பட்டன்கள் திறந்திருந்தன. டீ ஸ்டால் வாசலில் கண்ணாடிகள் ஏற்றிய ஸ்கார்பியோ நின்றிருந்தது. தூரத்தில் 'தீரன் சின்னமலை மாளிகை' பொடிமாஸ் எழுத்துக்களில் தெரிந்தது. பொதுப்பணித் துறை அலுவலகமான காலிங்கராயன் இல்லத்தில் 'அனுமதி இல்லாமல் யாரும் வரக் கூடாது' போர்டின் கீழ் ஒரு சட்டை கிழிந்த பைத்தியக்காரன் படுத்திருந்தான். அவன் தாடி மேல் ஓர் பூச்சி ஊர்ந்தது. ஷேர் ஆட்டோ ஒன்று கடந்து லேசாகத் தயங்கிப் பின் விரைந்தது. கத்திரிப்பூ நிறத்தில் ஒரு மாருதியின் பின் கண்ணாடியில், 'Santhosh','Shalini' காமிக் சான்ஸ் முறையில் ஒட்டியிருக்க, ஜன்னலில் முன்னங்கால்களைத் தொங்க விட்டு புஸுபுஸு நாய்க்குட்டி எட்டிப் பார்த்தது.

ரண்டாவது வளைவு திரும்பியதும், லோட்டஸ் ஷாப்பிங் ஷோரூம் தெரிந்தது. மூடப்பட்டிருந்தது. ஒட்டி ஒரு சந்து போனது. அதன் நுழைவாயிலில் இருந்து பார்த்தால், கடைசி முனையில் ஈரோடு பதிவர்கள் சங்கமம் எம்ப்ளம் காற்றில் கலைய, நோக்கி நடந்தேன். அங்கிருந்து எவ்வித அம்புக்குறியோ, டேக் டைவர்ஷனோ இல்லாததால், ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட ஓர் எதிர் அரங்கத்தில் தான் சங்கமமாகிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்தேன்.

நல்லவேளை, கொஞ்சம் பேர் நின்று கொண்டிருந்த மற்றொரு கட்டிடத்தில், 'The Builder Association of India' என்ற மெட்டல் போர்டு தெரிய அங்கு சென்றேன்.

மாடத்தில் நின்ற பதிவர்களுக்கு நிச்சயமாய் என்னைத் தெரிந்திருக்காது. 'யாரோ ஓர் ஆசாமி வெளியூரில் இருந்து வருகிறான் போலிருக்கிறது.' என்று ஒரு ஷார்ட் டெர்ம் விரோதப் பார்வை பார்த்தார்கள். நானும் நிகழ்வை முடித்து விட்டு அப்படியே அனந்தபுரம் ரயில் பிடிப்பதாக இருந்ததால், ஒரு துணி மூட்டை முதுகில் சுமந்திருந்தேன். நானும் அவர்களை பதிலுக்கு சந்தேகப் பார்வை பார்த்து விட்டே, மரக்கதவைத் திறந்து ஏ.ஸி. அறைக்குள் சென்றால், ஏ.ஸி.இல்லை.

வழக்கம் போல் கடைசி வரிசைக்கு போய் ஓர் ஓரமாய் ஒதுங்கி உட்கார்ந்து கொள்ளலாம்; கூப்பிடும் போது போய் எழுதிக்கொண்டு வந்ததை ஒப்பித்து விட்டு வந்து விடலாம் என்று கடை வரிசையில் மூட்டையைச் சாத்தினேன். உப்புசமாக இருந்தது. சும்மாவா, ஒன்றரை மைல் இதோ இந்த லேப்டாப்பையும், வீட்டுச் சாப்பாட்டு உடம்பையும் தூக்கிக் கொண்டு வந்ததில் வேர்த்தது. வெளியே சென்று காத்தாட நிற்க வெளிச் சென்றால், ஒரு வண்டி வந்தது.

புத்தகங்கள் இறக்கினார்கள். நானும் 'உபசரிப்புக் குழுவில்' இருக்கும் ஒருவன் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக, ஒரு கட்டு புத்தகங்களை ஆம்னியிலிருந்து எடுத்து வைக்கும் போது, பெயர் பார்த்தால், 'ஈரோடு மாவட்ட வரலாறு' என்றிருந்தது. அட்டையில் தந்தை பெரியார், ம.செ. வரைந்த தீரன் சின்னமலை, பவானிசாகர் அணை மற்றும் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் ஆலயக்கோபுரம் (ஹைய்யா! நம்ம ஊரு!) கண்டதும் மகிழ்ச்சி வந்தது.

கொஞ்சம் கொஞ்சமாகப் பதிவர்கள் வந்தனர். தெரிந்தவர்கள் கட்டிக் கொள்ள, சிரித்துப் பேசிக் கொள்ள, எப்போதும் போல் கூச்ச சுபாவியான நான், ஒரு திட்டில் உட்கார்ந்து கொண்டு எப்போதும் போல் எல்லோரையும் கவனிக்கத் தொடங்கினேன்.

கதிர் வந்தார். கூட்டத்தில் கரைந்தார். சட்டையில் குத்திக் கொள்ள பெயர்ப் பேப்பர் தந்தார். தங்க பின்னூக்கு. குத்திக் கொண்டேன். நவீன மாட்டு மடி போல் திருகியதும், டேப்பில் டீ சுரந்தது. டிஸ்போஸ்பிள் தம்ளரில் பிடித்துக் குடித்தோம். புகைப்படக் கலைஞர் நந்து மாடத்தில் எல்லோரையும் தெலுங்கு வில்லன்கள் போல் கைதூக்கி நிற்க வைத்துப் படம் பிடித்தார். ஒரு போட்டோகிராபர் BAI போர்டைப் படம் பிடிக்க என்னை நகரச் சொல்ல, நான் என்னைத் தான் படம் பிடிக்க விரும்புகிறார் என்று இன்னும் கெத்தாய் அதை மறைக்க, அவர் தலையில் அடித்துக் கொண்டார். (யோவ்..! நகருய்யா அந்தாண்ட..!)

வேறொரு வேனில் திருப்பூர்ப் பதிவர்கள் வந்தார்கள். யாரிடமோ நான் கேட்க, 'ஆமாம்..! வால்பையன் மட்டையாகி விட்டார் தான்!' என்றார். நந்துவிடம் 'நிலா ஏன் வரவில்லை?' என்று கேட்டதற்கு, குழந்தைதனமான காரணம் சொன்னார். அவருடன் பேசும் போது, ஒரு பதிவர் வந்து, 'நீங்கள் கொங்கு வாசலில் எழுதும் வசந்தா..?' என்று கேட்டார். '..லிலும் எழுதுகிறேன்..' என்றேன். 'நீங்கள் எந்த வசந்த்..?' வினவினார் வேறொருவர். 'சாதா வசந்த் தான்..!' பதிலுறுத்தேன். டீ குடித்தேன்.

'தமிழ்மணம்' காசி ஆறுமுகம், லதானந்த் போன்ற பெரியவர்கள் வந்தனர். கை கொடுத்துத் திருப்பி வாங்கிக் கொண்டேன்.

பழமைபேசி தன் ப்ளாக்கர் ப்ரொஃபைலிலிருந்து நேரடியாக வந்திருந்தார்.

கல்வெட்டாளர் செ.இராசு அவர்கள் எழுதிய புத்தகங்களை டேபிளில் அடுக்கும் போது, ஆரூரன் அவர்களிடம் 'வானம் கறுத்து கனமாய் எப்போது வேண்டுமானாலும் அழத் தயாராய் இருக்கிறது' என்று சொன்னதை மதித்து, வேறு பக்கமாய் வைத்துக் கொண்டார். ஆயிரம் ரூபாய் கொடுத்தது தவிர ஈரோடு வலைப்பதிவர் சங்கமத்திற்கு என்னுடைய மூன்றாவது பங்களிப்பு இது என்பதை, ஏ.ஸி. இருந்தும் இல்லாததுமான ஹாலுக்குள்ளே வெட்டிப் பேச்சு, அதாவது அனானிகள் பற்றிய சூடான பேச்சு நடந்து கொண்டிருந்த போது வெளியே மழை கொட்டியதே உறுதிப்படுத்தியது.

அனைவரும் டீ குடித்து முடித்ததும், சரியாக நான்கு மணிக்குத் துவங்குவதாக இருந்த சங்கமம் நிகழ்வு, சற்று அரைவட்டம் சரிந்து நான்கு இருபதுக்குத் துவங்கியது.

கதிர் மேடையில் அமர்பவர்களைக் கூப்பிட்ட போது, என்னையும் கூப்பிட்டு விட்டார். கொஞ்சம் பேர் சோகையாகக் கைதட்டினார்கள். பாக்கெட்டில் எழுதி வைத்த காகிதத்தைத் தொட்டுப் பார்த்து அதன் இருப்பை உறுதி செய்து கொண்டு, ஜிப் எல்லாம் சரியாகப் போட்டிருக்கிறேனா என்று பார்த்துக் கொண்டு (அதாவது தலை குனிந்து) முன் வரிசையில் ஒரு ஸீட் காலியாக இருந்தாலும், பின் வரிசைச் சீட்டில் உட்கார்ந்து கொண்டேன். பக்கத்தில் 'செந்திலின் பக்கங்கள்'.

அமீரகத்தில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் பூசியே குளிப்பார் போலிருந்தது. செவப்புன்னா செவப்பு அப்படி ஒரு செவப்பு. போதாக்குறைக்கு மஞ்சள் சட்டை வேறு அணிந்திருந்தார். கொஞ்சம் தள்ளியே உட்கார்ந்து கொண்டேன். இடது பக்கம் ஒரு சீட் காலி விட்டு, பதிவர் ரம்யா மற்றும் கடைசியாகப் பதிவர் சுமஜ்லா.

முன் வரிசையில் பதிவர் 'வலைச்சரம்' சீனா அவர்கள், கல்வெட்டாளர் செ.இராசு அவர்கள், பதிவர் ஆரூரன், தமிழ்மணம் காசி மற்றும் பழமைபேசி.

கதிர் எல்லோரையும் வரவேற்று விட்டு, ஆரூரன் தலைமையேற்று நடத்துவார் என்று சொல்லி விட்டு கீழேயே முன் குழுமத்தில் உட்கார்ந்து கொண்டார். அதை யாராவது முன் மொழிந்தால், நான் வழிமொழிவதற்குத் தயாராகத் தான் இருந்தேன். ஆனால் யாரும் முன் வராததால், நானும் வழி வரவில்லை.

அரூரன் எழுந்து முதலில் தமிழ் வாழ்த்துப் பாட அழைக்க, ஓர் அம்மணி வந்து மைக் பிடித்தார். 'நீராரும் கடலுடுக்க' நினைத்தால், அவர் வேறு ஒரு பாடலைப் பாடினார். கட்டுடைப்பு அப்போதே துவங்கி விட்டது. (பின் வால்பையன் தொடர்ந்தார்!) எல்லோரும் எழுந்து நின்று என்னவோ 'பாவம் போல்' தலை குனிந்து நின்றதைப் பார்த்தால், the so called தமிழன்னை மனம் வருந்தியிருப்பாள்.

நன்றாகவே பாடினார் அவர். முடிந்து எல்லோரும் அமர்ந்த பின், ஆரூரன் தலைமை உரை பேசினார். காலிங்கராயன் வாய்க்கால் பற்றியும், அந்த மன்னரைப் பற்றியும் பேசி விட்டு, அந்தக் காலத்தில் பதிவுகள் இல்லாததால், அவர் பெயர் Calling-கரையான் என்றாகி விட்டதால், எல்லோரும் அன்றாட வாழ்க்கையைப் பதிவு செய்வதன் மூலம் 'வரலாறு மிக முக்கியம் அமைச்சரே' என்று அறிவுறுத்தினார்.

பிறகு ஒவ்வொருவரையும் ஒரிஜினல் தலைப் பெயரையும், வலைப் பெயரையும், தத்தம் வலை முகவரியையும் சொன்னார்கள். தலைக்குத் தலை காமிரா காட்டி வீடியோவில் விழுங்கிக் கொண்டார்கள். நானும் அவசரமாக எழுந்து யாருக்கும் தெரிந்து விடக் கூடாதே என்பதே லட்சியம் போல், கடகடவெனச் சொல்லி விட்டு உட்கார்ந்தேன்.

பிறகு ஈரோடு பதிவர்களின் கருத்துக்களில் முதலாவதாக என்னைக் கூப்பிட்டு விட, மடித்து வைத்திருந்த சீட்டை எடுத்து, அத்தனை வோல்டேஜ் சாப்பிடும் ஃப்ளாஷ்ஷின் போட்டான்கள் மேலே பாய மைக் முகத்தில் 'வணக்கம்' சொன்னால், அது இருமியது. ஒருவர் பின்னால் ஆம்ப்ளிஃபயரைத் திருகி விட்டுத் தலையாட்ட, 'மற்றொரு வணக்கம்' என்றேன். இன்னும் சீராகவில்லை.திரும்பிப் பார்த்தேன். கொஞ்சம் குமிழ்களைச் சுற்றினார். சரி செய்து விட்ட நம்பிக்கையில், உற்சாகமாய் 'இன்னொரு முறை சொல்லுங்க' என்றார். 'கடைசியாய் ஒரு வணக்கம்' என்றேன். சக்ஸஸ்.

மேடைப் பயம் வருமோ என்ற கவலை இருந்தது. சுத்தமாக இல்லை. அவ்வப்போது எழுதி வைத்துப் படித்ததன் இடையில் உடனே தோன்றியதையும் சொன்னேன். பாரதியைப் பற்றிய ஆசிரியப்பாவைப் படித்து முடித்த போது எல்லோருக்கும் பிடித்திருந்தது போல் தெரிந்தது. நிறைய கைதட்டல்கள் கேட்டன. காரணம், அந்தக் கடைசி வரி அதிர்ச்சியில் இருக்கின்றது. இடையே வால் இரண்டு கேள்விகள் கேட்டார். அவரைப் பற்றி ஏற்கனவே தெரிந்திருந்த காரணத்தால், எனக்கு அவரது குறுக்கீடுகள் எவ்வித உணர்வையும் தரவில்லை. சிலர் பொது வெளியில் நடந்து கொள்ளும் முறையை மீறி விட்டார் என்கிறார்கள்; சிலர் நிகழ்ச்சியைக் கலகலப்பாக்கினார் என்றார்கள். அவை அவரவர் ஃபீலிங்; மொத்த அவையின் அல்ல.

கரெக்டாக நான் பேசி முடித்து அரை நிமிடத்தில் என் அம்மா வந்தார்கள். மகன் பேசியதை மிஸ் செய்து விட்டார்கள். வீடியோ இருக்கின்றது என்று சொல்லி இருக்கிறேன்.

பதிவர் சீனா அவர்கள் வாசகர்களின் எதிர்பார்ப்பையும், பதிவர்களின் எதிர்பார்ப்பையும் பற்றி அவர் வீட்டம்மா எழுதிக் கொடுத்தது என்று ஒப்புக் கொண்டு படித்துப் பேசினார்.

பதிவர் சுமஜ்லா, பதிவுகளை அழகாகவும், நிறைய விட்ஜெட்டுகளையும் இணைத்து பதிவின் பக்கங்களைச் செம்மைப்படுத்துவது எப்படி என்று நிறைய பேச நினைத்திருந்தாலும், காலம் ஐந்து நிமிடங்களே கொடுக்கப்பட்டதால், சுருக்கமாகச் சொல்வதாகச் சொன்னார்.

பழமைபேசி 'சுருக்'காகப் பேசி, நறுக்காக முடித்தார். அவர் பேச்சில் அயல்தேசப் பனி படர்ந்திருந்தது. கொஞ்சம் கொங்கும் மணந்தது.

உலகத் திரைப்படங்கள் பற்றிப் பேசிய வண்ணத்துப்பூச்சி சூர்யா, 'வேட்டைக்காரன்' ரிலீஸைப் புயல் என வர்ணித்தது வருத்தம் தந்தது. புயலாவது வருவதாகப் பயம் காட்டி, பிறகு ஆந்திராவுக்கோ, ஒரிஸாவுக்கோ திசை மாறி விடும்.

செந்தில்வேலன் விக்கியில் தமிழ்க் கட்டுரைகளின் போதாமையைப் பின்னிஷ் மொழிக் கட்டுரைகளின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டு வருந்தினார். அமீரகத்தில் நடந்த கணிணிப் பயிலரங்கம் பற்றிச் சொன்னார்.

மதியமே ஈரோடு வந்து விட்ட சென்னைப் பதிவர்கள் சங்கம நிகழ்வுக்கு வந்த போது, மணி நாலரையைத் தாண்டி விட்டது.

பதிவர் ரம்யா அவர்கள் சமூகத்தில் நமக்கு என்ன பங்கு என்று பேசினார். நன்றாகவே இருந்தது. (இப்படிச் சொன்னால் இப்போது எதுவும் ஞாபகம் இல்லை என்று அர்த்தம்!)

கதவைத் திறந்து 'அகநாழிகை' வாசுதேவன் வந்த போது,அவர் பெயரைக் கூப்பிட்டு விட, வலைப்பதிவு எழுத்தாளர்கள் அச்சு ஊடகத்திற்கு வர வேண்டும் என்று வரவேற்றார்.

சிறப்பு உரையாற்றிய கல்வெட்டாளர் செ.இராசு அவர்கள் வலைப்பதிவு எழுதுவதால், இவற்றை எழுத வேண்டிய பேப்பர்கள் மிச்சமாகி மரங்கள் காப்பாற்றப்படுகின்றன என்றார். கோபன் ஹேகனில் 'அவர்கள்' அடித்துக் கொண்டதை விட, ஈரோடு சங்கமத்தில் இயற்கையைக் கொஞ்சம் காப்பாற்றி விட்டோம் என்று பெருமிதம் அடைந்தேன். அவரது 'ஈரோடு மாவட்ட வரலாறு' நூலை ஊருக்குப் போகும் போது படித்தேன். நிறைய தகவல்களோடும், கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் இருந்தது.

'தமிழ்மணம்' காசி, வலைப்பதிவின் அவசியத்தை ஆட்சியாளர்களும் கூட இப்போது உணரத் தலைப்பட்டு விட்டார்கள் என்பதால் உஷாராக இருக்கவும் என்றார். நாமக்கல்லில் அன்று காலையில் ஆட்சியருடன் சென்று கிராம மக்கள் வலைப்பதிவு மூலம் எப்படி அரசு நிர்வாகத்தைத் தொடர்பு கொள்வது என்பதைப் பற்றி விளக்கம் கொடுத்ததாகச் சொல்ல, ஒரிச்சேரிப் புதூர் கருப்புசாமி, கட்டற்ற சுதந்திரத்தின் இணையத்தைக் கையில் கொடுத்து, 'எதை வேண்டுமானாலும் தேடலாம்; கிடைக்கும்' என்று சொல்லி விட்டு ஒதுங்கினால், எதை முதலில் தேடுவான் என்று யோசித்துப் பார்த்தேன்.

பிறகு நிறைய பதிவர்கள், 'ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்' என்று அச்சடித்த துணியின் காதுகளையும் கால்களையும் பிடித்துக் கொள்ள, 'க்ளிக்'குகள் சாட்சியாக, குழுமம் துவக்கப்பட்டு விட்டதை அறிவித்தார்கள்.

நான் சென்று வால்பையன் அருகில் அமர்ந்து கொள்ள,கலந்துரையாடல் துவங்கியது.

அனானி பற்றிய கேள்விகள் தாறுமாறாகப் பாய்ந்தன. ஓர் ஓரமாக உட்கார்ந்து அனானியும் கேட்டுக் கொண்டிருந்தால், மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்ற அளவில் அரை மணிக்கும் மேலாக அவரைப் பற்றியே பேசிக் கொண்டிருந்ததில், உண்மையில் 'பிரபல' பதிவர் அவராகத் தான் இருக்குமோ என்ற ஐயம் வந்தது.

கருத்துச் சுதந்திரம் பற்றிக் வருத்தப்பட்டோம்; உளவுத் துறையால் நாம் கவனிக்கப்படுகிறோம் என்று கிலியூட்டப்பட்டதும், 'ஏன் அவர்கள் கமெண்ட் போடுவதில்லை?' என்ற நியாயமான கவலைப்பட்டோம்; வலைப்பதிவு எழுதி மட்டுமே பிழைத்துக் கொண்டிருக்கும் சில அதிர்ஷ்டசாலிகளைப் பற்றிப் பேசி ரகசியப் பெருமூச்சு விட்டோம்; வலைப்பதிவுகளைப் ப்ராடெக்ட் அனலிசிஸ் பண்ணும் ஒரு கருவியாகப் பாவிப்பதாகச் சொல்லி, அதனால் ப்ளாக் படிப்பதே தமக்கு வேலை என்று ஒருவர் சொல்ல, அவரிடம் 'ஓபனிங் இருக்கா..?' என்று சிலர் கேட்டோம்;

வால்பையன் ஒவ்வொருவரின் பேச்சுக்கு நடுவிலும் இடையே புகுந்து தன் கருத்தைச் சொல்ல முயன்றார். பிறரால் அது ஒரு மாதிரிக் 'காசியில் பிராமணனை வெட்டிய பாவம்' போல் பார்க்கப்பட்டது. வலைப்பதிவில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் வேட்டைக்காரனை வேட்டையாடுபவர்கள், நிஜ வெளிக்கு வந்தவுடன், சமூகம் எதிர்பார்க்கின்ற படி தான் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது :).

நன்றியுரையில் கதிர் எல்லோருக்கும் - வந்த பதிவர்கள், வராத நல்லவர்கள், கொஞ்ச வாசகர்கள், தொலைதூரத்தில் இருந்து வாழ்த்தியவர்கள், ..த்தியதுடன் பைசாவும் அனுப்பியவர்கள், தமிழ்மணம் முகப்பில் வைத்திருந்தது, ஹால் கொடுத்த கட்டிட சங்கத்தினர், வீடியோ பிடித்த பவானிக்காரர்கள் - எல்லோருக்கும் நன்றி சொன்னார்.

தேசிய கீதம் பாடும் எண்ணமே யாருக்கும் வராமல், உணவுக் கூடத்தை வெற்றி கொள்ள விரைந்தேன். அங்கங்கே முடிச்சு முடிச்சாய் நின்று பேசிக் கொள்ள ஆரம்பிக்க, நானும் அம்மாவும் சாப்பாட்டுக்குச் சென்று அசைவம் பகுதியில் உண்டோம். கே.எஸ்.ஆரில் பணிபுரியும் இருவர் பதிவர்களாய் அறிமுகம் செய்து கொண்டு பேசி விடை பெறும்போது நண்பர்களாகிப் போயினர். முனைவர் இரா.குணசீலன் அவர்கள் இளமையாய் இருந்து, அவர் மட்டும் முடிந்த அளவுக்குத் தூய தமிழ் பேச, அசைவத் தமிழ் பேசினேன். மதுரை ஸ்ரீ, கார்த்திகைப் பாண்டியன் ஆகியோரிடமும் பேசினேன். அஸ்ஸாம் ஆர்மிக்காரர் விட்டலன் அவரது கவிதைத் தொகுப்பைக் கொடுத்தார். சுவையான டிட்பிட்ஸ் அவற்றின் சில பக்கங்களில் கிடைத்தன. வாழ்த்துக்கள் இராணுவக் கவிஞரே!

உபசரிப்புக் குழுவின் அடிப்படையாகப் பைசா கொடுத்து விட்டு, கதிரிடமும், வால்பையனிடமும் விடை பெற்று விட்டுக் கிளம்பினோம்.

பஸ்ஸே வரவில்லை. இருபது நிமிடங்கள் கழித்து வந்த ஓர் ஆட்டோவில் முப்பத்தைந்து ரூபாய்க்கு ஈரோடு ஜங்ஷன் சென்றால், கூட்டமே இல்லாத, ஆச்சரிய ஞாயிறு இரவு அது. பதிலுக்குச் சென்னையிலிருந்தே மாலை போட்ட அன்பர்களை நிரப்பி அனந்தபுரம் வாரச் சிறப்பு ரயில் வந்தது. அம்மா வீட்டுக்குக் கிளம்பி விட்டார்கள்.

ரயிலின் முன்பு மூன்று ஜெனரல் கோச்சுகளைச் சேர்த்தவர்கள், கடைசியில் வைத்திருந்தது ஒன்றே ஒன்று தான். வழக்கம் போல் அடித்துப் பிடித்து ஏறி, சிங்கிள் விண்டோ சீட்டில் கிடைத்த தக்கிணியூண்டு இடத்தில் உட்கார்ந்து 'ஈரோடு மாவட்ட வரலாற்றை'ப் பிரித்தால், எதிரில் தொங்கியவாறு உட்கார்ந்திருந்தவர் 'நிங்ஙள் வஸந்த்குமார் தன்னே..?' என்றார்.

'அதே' என்றேன். மலையாளிகள் வரை என் எழுத்துப் பரவியிருப்பது பெருமகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் கொடுத்தது.

'நிங்ஙள் எங்ஙனம் எண்ட பேர் அறிஞ்சது..?' என்று சோதித்தேன்.

'ஒண்ணுமில்லா..! நிங்ஙள் பாக்கெட் சீட் பறஞ்சுது..! எனிக்கு கொறச்சு தமிழ் படிக்கான் அறியும்' என்று காட்டினார்.

அப்போது தான் கவனித்தேன். டீ-ஷர்ட் பாக்கெட்டில் தங்கப் பின்னூக்கில் குத்தியிருந்த 'ஈரோடு தமிழ்ப் பதிவர்கள் சங்கமம் - உபசரிப்புக் குழு' கார்டை கழட்டாமல் வைத்திருந்தேன்.

'ஆரானு க்ரூப் அது..?' என்று கேட்டார்.

'எண்ட க்ரூப்பாக்கும்..!' என்று சொன்னேன். அதில் ஏதோ ஒரு சந்தோஷம் இருந்தது.

ரயில் வேகம் எடுத்துப் பாய்ந்தது.