புலவர் தேர்மேகர் சிந்தித்துக் கொண்டிருந்தார்.
அதிகாலை. பொழுது புலர்ந்து புள்ளினங்கள் பறந்து கொண்டிருந்தன. காற்றில் இன்னும் குளிர் மிச்சம் இருந்தது. ஆற்றின் கரைகளை நதியலைகள் முத்தமிட்டு முத்தமிட்டு ஓடிக் கொண்டிருந்தன. தருக்களில் வர்ணமயமான மலர்களும், கனிகளும் காற்றில் ஆடின. கரையோரம் இருந்த சிறிய கோயிலில் விளக்கொளிகள் கண் சிமிட்டின.
தேர்மேகர் அரசவையின் ஒரு முக்கிய புலவர். பிரஜாபதியாகிய மாமன்னர் தமது இராஜாங்க விவகாரங்களை முடித்துக் கொண்டு மாலை வேளைகளில் ஓய்வெடுக்கும் போது கலைகளும், காவியங்களும் தர்பாரில் களை கட்டும்.
புலவர்களும், கவிஞர்களும், ஆடற் பெண்களும், நாட்டிய நங்கைகளும், இன்னிசைவாணர்களும் குழுமும் அச்சபைதனிலே, தேர்மேகருக்கு தனியொரு இருக்கை இருக்கும் எனில் அவரது பெருமை எங்ஙனம் இயம்ப?
தினம் தினமும் அவர் அரசரை விளித்துப் புகழும் கவிப் பேருரைகள் காற்றில் கலந்து, கரைந்து ஆங்கே குவிந்திருக்கும் கலைவாணர்களுக்கும், கலைதேவிகளுக்கும் தேன்மாரி பொழிவது அன்ன அமையும் எனில் அவர்தம் நாப் பெருமையையும், பாப் பெருமையையும் நவில்தல் நம்மால் தகுமா..?
தர்பார் துவங்குகையிலும், நிறைகையிலும் தேர்மேகர் அரசரைப் புகழ்ந்து வரவேற்புப் பாடலும், வழியனுப்புக் கவியும் இசைத்து நலம் கூறுவார்.
நேற்று நடந்தது என்ன? மாமன்னர் வருகிறார். இவர் மொழிவதைக் கேளுங்கள்.
"பஞ்சடைத்த படுக்கைகளில் வஞ்சியரின் வலுவான நெஞ்சமதை நெருங்கிக் கொண்டு, கொஞ்சிக் குதூகலித்து அவர்தம் பிஞ்சு விரல்களைப் பிடித்திழுத்து, மஞ்சமதில் மயக்கம் காட்டி விஞ்சிய விளையாட்டு ஆடுதலும்,
நாகர்
நஞ்சமதை ஒத்த வஞ்சகரின் வாளைத் தூள் தூளிட்டு, தஞ்சமென அவர் வர, வெஞ்சினம் தவிர்த்து மஞ்சு போல் ஈரத்தோடு அஞ்சற்க என்று அபயமளித்து, சஞ்சலம் அற்ற மனத்தோடு எஞ்சிய வாழ்நாளில் எம்மோடு இரும் என கருணை காட்டியும்,
பஞ்சமென வரும் பாணர்க்கும், கொஞ்சம் எனக் கேட்கும் கொலைப் பட்டினிகாரர்க்கும், மிஞ்சுமே என்ற கவலை தோன்ற, எடுத்தெடுத்து அருளும் எம் மன்னவா, நீ வாழி! நீ வருக...!"
மன்னர் வந்தமர்ந்தார். அனைத்து கலைகளும் அரங்கேறின. பின் தனிமையில் தேர்மேகர் மன்னரைச் சந்தித்தார்.
"புலவர் பெருமகனே! எமக்கு ஓர் ஆசை..!"
"பெரு மன்னவ! ஆணையிடுக..!"
"எப்போதும் நீர் என்னைப் புகழ்ந்து பாடுகிறீர்! நலம். அடுத்த முறை ஏதேனும் புதுமையாக முயற்சி செய்யுங்கள். பாடல் வரிகள் அலுப்படைந்து விட்டன. இரு நாட்களில் ஒரு சிறுகதை எழுதிக் கொண்டு வாரும். அறிவியல் சிறுகதையாக இருக்கட்டும்..!"
"அரசே! நாளையே எழுதிக் கொண்டு வருகிறேன்..!"
"வேண்டாம்..! நாளை முதல் இரு நாட்கள் நான் தெற்குப் பகுதிகளுக்கு விஜயம் செய்ய இருக்கிறேன். இரு நாட்கள் கழித்து நீர் அரண்மனைக்கு வந்து கூறும்..!"
"உத்தரவு தலைவ..!"
"சரி..! நீர் இப்போது செல்க..! உமது பாடல்கள் என்னை உசுப்பேற்றி விட்டிருக்கின்றன. யாரங்கே? அந்தப்புரத்தில் அம்பிகா இன்று இருக்கிறாளா என்று விசாரித்து விட்டு வா..!"
தேர்மேகர் யோசித்துக் கொண்டிருந்தார். என்ன அறிவியல் சிறுகதை எழுத..? ஹ்ம்..!
மன்னரிடம் ஜம்பமாக சொல்லியாகி விட்டது. கவிதை எழுதுவதற்கே நூலக அகராதிப் புத்தகங்களைப் புரட்ட வேண்டியதாக இருக்கின்றது. கலிங்க மொழி, காச்மீர மொழி, வடமொழி நூல்கள் இருப்பதால் சமாளித்து வருகிறோம். இல்லாவிடில் நம் கதி? அறிவியல் சிறுகதைக்கு எங்கே செல்வது? தருமி நிலைக்கு கொண்டு வந்து விடுவார்கள் போல் இருக்கிறதே.
நாம் படித்த அறிவியல் எத்தகையது..? குருகுலத்தில் என்ன படித்தோம்..?
எங்கே படித்தோம்?
குருவின் மான் தோலில் கள்ளிச் செடி முள் வைத்தோம். தோட்டத்தில் மாங்காய்கள் அடித்துத் தின்றோம். குருபத்தினி குளிக்க, வெளியில் வைக்கும் பாத்திரத்தில் இறந்த பல்லியைப் போட்டோம். ஓலைச்சுவடியைச் சுருட்டி, அம்பு செய்து குருவின் கொண்டையில் வாகாகச் செருகச் செலுத்தினோம். தேர்வுக் காலங்களில் இடுப்பு வேட்டி மடிப்பில் எழுதிய ஓலைச் சுவடிகளை மறைத்து தேறினோம்.
எங்கே படித்தோம்?
கொஞ்சம் தொலைவில் இருக்கும் கோயிலைப் பார்த்தார்.
கோயில் கல்வெட்டு அவர் கண்ணில் பட்டது. 'மாமன்னர்...'.
எண்ணங்கள் வரிசையாக ஓடின. மன்னர் இன்று என்ன செய்வதாகச் சொன்னார்? தெற்குப் பகுதிகளுக்குப் பயணம். என்று திரும்புகிறார்? நாளை மறுநாளுக்கு நாளை. எவ்வளவு காலம்? இரண்டு நாட்கள். அதுவரை பயணம். காலம். பயணம். பயணக்காலம். காலப் பயணம்.
ஆம். காலப் பயணம். ஒருவன் காலப் பயணம் செய்தால், அவன் காலப் பயணி**. ஆஹா..! அருமையான சிந்தனை. இதுவரை புரட்டிய எந்த நூலிலும் இந்த சிந்தனை இல்லை. நாம் தான் முதல்..!
சரி. இது என்ன வருடம்? பார்த்திப வருடம். ஆனி மாதம் க நாள்.
இப்படி சிந்திப்போம். வெகு வெகு வெகு காலங்களுக்கு அப்பால் வசிக்கும் ஒருவன், ஒரு தேர் பிடித்து நம் காலத்திற்கு வருகிறான். காலத்தேர். மன்னரைக் கண்டு வியந்து புகழ்கிறான். மன்னரும் மகிழ்கிறார். ஓர் அபூர்வ பொருளைக் கொடுத்து விட்டு, மீண்டும் அவனது தேர் பிடித்து மறைகிறான்.
ஆஹா..! என்ன ஒரு அபூர்வமான சிந்தனை! தேர்மேகா! உனக்கு எங்கேயோ மச்சம் இருக்கின்றதடா..!
எழுதத் துவங்கினார்.
'காலத்தேரில் காளை ஒருவன் வந்தான். மார்பில் மர உரியும், இடையில் பெருந் துணியும் அணிந்து வந்தான்..'
"நெனச்சேன் வாத்யாரே..! நீ இப்டி தான் கரீட்டா ராங்கா எளுதுவேன்னு..!"
தடாலென நிமிர்ந்து பார்த்தார். அதிர்ந்து எழுந்தார்.
ஒரு மனிதன். தடித்த மீசை. கூராக இருந்தது. வலது கன்னத்தில் கருப்பாய் மரு. கழுத்தைச் சுற்றி பூக்கள் வரைந்த கைக்குட்டை. சுருள் சுருளான முடி. கிடைமட்ட கோடுகள் வரைந்த இறுக்கமான மேலாடை. நீல நிற கட்டங்கள் கொண்ட முழு கீழாடை மடித்துக் கட்டப்படிருந்தது. முட்டியை மறைத்து நெடு கோடுகள் வரையப்பட்ட அரையாடை.
திடுக்கிட்டுப் போய் விட்டார் தேர்மேகர். இது போன்ற ஓர் அலங்காரத்தை அவர் தம் வாழ்நாளில் கண்டதில்லை.
"யார் நீங்கள்..? உங்களுக்குத் தமிழ் தெரியுமா..?" திக்கித் திணறினார்.
"அட.. குந்து நைனா..! இன்னா நீ என்னவோ பேய் பிசாசை பாத்த கணக்கா பேஸ்தடிச்சுப் பாக்கற. நானும் மன்சன் தான்யா..! அட, குந்துப்பா..!"
"நீங்கள் பேசும் மொழியே புரியவில்லையே..! நீங்கள் யார்? எதிரி நாட்டின் ஒற்றரா..? உங்களைப் பார்த்தால் எனக்கு அச்சமாக இருக்கின்றது. முருகா..! முருகா..! ' அல்லல் படுத்தும் அடங்கா முனியும், ப்ரம்ம ராட்சதரும்...!"
"ஐய்ய...! சஸ்டி கவசம் தான சொல்ற..! எனக்கும் தெர்யும்யா..! இன்னா ராகம் இது? ரோசாப் பொண்ணு சொம்மா கிக்கா பாடுமே, அதான...?"
"தெய்வமே..! நீங்கள் பேசும் மொழி நான் அறிந்ததில்லை. இமயம் தாண்டி வருகின்றீர்களா..?"
அவன் சிரித்தான்.
"இன்னாடாது..? நாம பேசற பாஷ புரியலன்றாரு இந்தாளு..? யோவ் இதுவும் தமிளு தான்யா..?"
"தமிழா..? எந்தப் பிரதேசத்து தமிழ்..? நான் அறிந்ததில்லையே..?"
"இது மெட்ராசுல பேசறது. நீ கண்டுக்கனதே இல்லியா..?"
"இல்லை. நீர் எங்கிருந்து வருகின்றீர்..?"
"தோ பாரு. மொதல்ல குந்து நீ. நிக்க வெச்சே பேசினுகீற. டேசனுக்கு கூடிட்டு போனாக் கூட, ஏட்டு ஒக்கார வெச்சு தான் பேசுவாரு. நீ இன்னாடான்னா..?"
இருவரும் அமர்கின்றனர்.
"ஆமா...! ஒன் வூட்டுல யாரும் இல்லியா..? ஒனக்கொரு பொண்ணு இருக்கணுமே..? போய் அத்த இட்டாந்து ஒரு சொம்பு தண்ணி கொண்டு வரச் சொல்லு போ. மனுஷன் தொலோலிருந்து வந்திருக்கான்..."
தேர்மேகர் அவனைக் குழம்பிப் போய்ப் பார்க்கிறார்.
"இன்னாயா, நீ அப்டி பாத்துகினே கீற..? விருந்தோம்பல்னு எல்லாம் பட்ச்சதே இல்லியா நீ..? வூட்டுக்கு வர்ற கெஸ்டுக்கு ரெஸ்பெக்ட் குடுக்கணும்யா. அட்லீஸ்ட் ஒரு சொம்பு தண்ணியாவது குடுக்கணும். வள்ளுவர் கோட்டத்துப் பக்கம் போய்ப் பாரு. தூண்ல எளுதி வெச்சிருக்காங்க.."
"இல்லை. உங்களுக்கு எப்படி எனக்கு ஒரு பொண்ணு இருக்கின்ற விவரம் தெரியும் என்று யோசிக்கிறேன். நீங்கள் ஒற்றரா..?"
அவன் சிரித்தான்.
"பாத்தியா..! நீயும் பொண்ணுன்னு சொல்லிட்ட.."
"ஆம்..! எப்படி கூறினேன்? பெண் என்பதல்லவா அழகிய தமிழ் வார்த்தை..!"
"நீ ரொம்ப டென்சன் ஆயிக்காத. ஒரு நாலு தபா நம்ம கைல பேச சொல்ல அல்லார்க்கும் இந்த பாஷ தொத்திக்கிது. இன்னா பண்றது, சொல்லு..? யோவ்.. உன் ஜாதகமே எனக்குத் தெரியும்யா. நீ என்ன என்ன டேட்ல என்ன என்ன பண்ணிகினு இருந்த, இருக்க, இருக்கப் போற எல்லாம் தெர்யும், எனக்கு. யாருனு நெனச்ச என்னிய..! பூக்கடை டேசன்ல இருந்து, அடயாறு வரிக்கும் அல்லா டேசன்லயும் இந்த கபாலி போட்டோ இல்லாத எடமே கெடியாது, பாத்துக்கோ..!"
"என் மகள் அவளது தோழியரோடு கோயிலுக்குச் சென்றிருக்கிறாள். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்..? தயவு செய்து அதையாவது சொல்லுங்கள். தமிழில் சொல்லுங்கள்..."
"தமிள்ல சொல்றதா..? இவ்ளோ நேரம் நான் என்ன தெலுங்குலயா செப்பினு இருந்தேன். தமிள்ல சொல்றதாம். சரி சொல்றேன் கேட்டுக்கோ. நீ ஒரு கதை எழுத ஒக்காந்த இல்ல. அதுல வர்ற காளை நான் தான்.."
"என்ன..? குழப்புகிறீர்களே..! நான் இன்னும் கதையை எழுதவே துவங்கவில்லை. ஒரு வரி தான் எழுதினேன்.."
"அதான்யா. அந்த ஒத்த வரில வர்ற ஆளு நான் தான். இரு நடுவுல கொஸ்சீன் கேக்காத. அப்பால மொத்தமா கேட்டுக்கலாம். நான் ஃபுல்லா சொல்றேன். கேட்டு மெர்சலாயிடாத, என்ன? இந்த மாதிரி நீ ஒரு ஆளு. ஒரு கதை எளுதுவ. இல்ல எளுதின. அதுல ராங்கா நீ எளுதுவ. ஒர்த்தன் வர்றான். ஒங்க ஊரு ராசாவப் பாக்கறான். கிஃப்டு குடுக்கறான். அப்பால மறஞ்சு போறான்னு. அத்தினியும் தப்பு. நீ எளுதுற ட்ரெஸ்ஸெல்லாம் எங்க காலத்துல கடியாது. நான் எப்டி ட்ரெஸ் போட்டிருக்கேன் பாத்தியா? இது ஒரு டைப். அப்பால நெறைய டைப்புல இருக்கு. ஃபுல் ஏண்டு, ஆப் ஏன்டு, காக்கி ட்ரெளசர் அப்டி இப்டினு. ஆனா நீ எப்டி எளுதுவ? அது இன்னாது? மர உரியா..? மரத்தை உறிச்சு ட்ரெஸ் செஞ்சுக்கிவீங்களா..?"
"எனக்குத் தெரிந்ததை வைத்து தானே நான் எழுத முடியும்?"
"க்ரீட்டு தான். ஆனா உங்க ஊரு கதய எளுதுய்யா. அத்த வுட்டுட்டு அப்பால நடக்க போற மன்சன் இப்டி இருந்து வருவான்னு எளுதுனா, அந்த மன்சங்களுக்கு கோவம் வரும்ல? அதான் வந்திருச்சு. என்ன அனுப்பிருக்காங்க. வந்திட்டேன். ஒயுங்கா மாத்தி எளுது.."
"எனில் தாங்கள் பிற்காலத்தில் இருந்து வந்திருக்கிறீர்களா..?"
"ச்சட். அத்த தான்யா இவ்ளோ நேரம் சொல்லிகினு இருந்தேன். தோ பார். நான் வந்த வண்டி. எப்டி ஷோக்கா கீதா..?"
கபாலி கைகாட்டினான்.
டன்லப் டயர்களில் ரிஸ்ட் வாட்ச்கள் கட்டப்பட்டிருக்க, உள்ளே கன்னா பின்னா என்று எலெக்ட்ரானிக் சமாச்சாரங்கள் டிஜிட்டல் மீட்டர் காட்டிக் கொண்டிருக்க, க்ளாஸ் டாப்பின் உச்சியில் ஏரியல் ஒன்று நீட்டிக் கொண்டிருக்க, சுற்றுப்புறம் முழுதும் எல்.ஈ.டி.களால் மின்னிக் கொண்டிருந்தன.
ஆவென வாயைப் பிளந்து பார்த்தார் தேர்மேகர்.
"என்ன ஓர் அற்புதமான வாகனம். மன்னரின் தேர் கூட இவ்வளவு அலங்காரத்தோடு இருந்ததில்லையே. நீங்கள் என்னோடு சிறிது காலம் இருக்க முடியுமா? உங்களுக்கு மன்னரை அறிமுகப் படுத்தி வைக்கின்றேன்." என்றார் தேர்மேகர்.
"அதுக்கெல்லாம் டைம் இல்ல எனக்கு. அர்ஜெண்ட்டா கெளம்பணும் நான்!" என்றான் கபாலி.
அப்போது ஒரு சிறு பெண் உள்ளே வந்தாள்.
"ஆ...! தந்தையே யாரிது? அச்சமூட்டும் உருவத்தில்...!" அலறினாள்.
"பாப்பா யாரு..? ஒம் பொண்ணா..? என்னய்யா ஒன் ஜாடையே இல்ல. அம்மா ஜாடையா..?"
"ஆம். என் மகள் தான். மேகங்கள் கருத்திருக்க, மின்னல் நாட்டியங்கள் நடத்தும் மேடையாய் வானம் விளங்க, துளித் துளியாய் விண்ணும் மண்ணும் இணைத்துக் கொண்டு, பிணைத்துக் கொண்டு, அணைத்துக் கொன்ட ஓர் ஐப்பசி நாளில் அவதரித்த தேவ மங்கை இவள்..."
"மழ பெய்யச் சொல்ல பொண்ணு பொறந்துச்சு. இத்த தான சொல்ல வர்ற. அதுக்கு ஏன்யா, இவ்ளோ பெர்சா அடிச்சு வுடுற..? பாப்பா இன்னா க்ளாஸ்மா படிக்கிற நீ..?"
"அவள் படிக்கவில்லை. பெண்ணுக்கு எதற்கு படிப்பு? கணவனின் கை கொண்டு காலம் தள்ளவும், பிள்ளையைப் பெற்றெடுத்து பேணி வளர்க்கவும், சமையலறையில் புகுந்து சாப்பாடு வார்க்கவும், சாகும் வரை சளைத்திடாது உழைக்கவும் படிப்பெதற்கு..?"
"படிக்க வெக்கல. அவ்ளோ தான. இன்னாயா எத சொன்னாலும் பட்டிமன்றம் ரேஞ்சுல வுட்டு வெளாசற. பொண்ண படிக்க வெக்காம இருக்க. வெக்கமா இல்ல ஒனக்கு? ஒரு பொண்ணு பட்ச்சா ஒரு குடும்பத்தயே காப்பாத்துவாய்யா. ஒனக்கு பாரதியார எல்லாம் தெர்யுமா..? எப்டி தெர்யும்..? ஒன்னோட ஜாதி தான். பாட்டு எளுதறவர். அவரோட எல்லாம் கம்பேர் பண்ண சொல்ல, நீயெல்லாம் டுபாக்கூர்யா. மன்சன் இன்னா சொல்லி இருக்கார் தெர்யுமா..? 'அடுப்பூதற பொண்ணுக்கு படிப்பெதுக்குனு கேட்டவன்லாம் ஒயுஞ்சு போனான். கும்மியடி பொண்ணு'னு. ஒயுங்கா பொண்ண படிக்க வெய்யி..."
"மிக்க நன்றி ஐயா..! தாங்கள் வெகு தூரத்தில் இருந்து வந்திருப்பது போல் தெரிகின்றது. ஏதேனும் அருந்துகிறீர்களா..? இளநீர், நீர் மோர், பனங்கள்.." பயம் தெளிந்து அவள் கேட்டாள்.
"இதான்யா பொண்ணுன்றது. இவ்ளோ நேரம் கத கேட்டியே, ஒனக்கு தோணுச்சா ஏதாச்சும் சாப்புடக் குடுக்கணும்னு. இப்டி ஒரு மகாலச்சுமிய படிக்க வெக்கலன்றயே. கண்ணு..! கொஞ்சம் தண்ணி மட்டும் கொண்டாம்மா."
"இதோ, உடனே வருகிறேன்..!" சிட்டாகப் பறந்து போனாள்.
"தோ பார். சொம்மா டைம் மெஷின்ல மன்சன் வந்தான்.. அதான்யா காலப் பயணம்.. அத்த புட்ச்சிக்கினு கத, கித எளுதின அவ்ளோ தான். எளுது. ஆனா உண்மைய எளுது. நீ எளுதுற காலத்துல இருக்கச் சொல்ல மன்சங்கள போலவே ஃப்யூச்சர்ல இருக்கற மன்சங்களும் இருப்பாங்கன்னு செனச்சிகினு அப்டி இருந்தாங்கோனு எளுதாத. முடிஞ்சா அந்த ஃப்யூச்சருக்குப் போய் பாத்துனு வந்து எளுது. அது முடியாதுல்ல. அப்பால எப்டி எளுதுவ? அப்டி எளுதுனா அது பொய்யாயிடுதுல்ல. அப்றம் எப்டி அந்த மன்சன் வர முடியும்? என்ன தல சுத்துதா..? டைம் மெசினு, டைம் ட்ராவல்னாலே இப்டி கொயப்பம் தான். 'Grandfather Paradox'னு ஒண்ணு இருக்கு. அத்த விக்கிபீடியால போய்ப் பாரு. ஒனக்கு எங்க அத பாக்க முடியும்.? சரி.. நான் இப்ப கெளம்பணும்...!"
"கிளம்புங்கள் ஐயா..? அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்..?"
"ஒரே அடி. அப்டியே தாராந்துடுவ. நானாய்யா வந்தன் இங்க..? நீ எளுதின இல்ல. அதுனால வந்தேன். நீ இப்ப இன்னா பண்ணனும் தெர்யுமா..? கதையோட அடுத்த லைன்ல, அது இன்னாது... காளை.. அவன் போய்ட்டான்னு சொல்லி முடி. அப்ப தான்யா நான் போவ முடியும். லாஜிக்கலா அதான் க்ரீட்டு. இன்னா புர்யுதா..?"
தேர்மேகர் அவசரமாக ஓலைச் சுவடியை எடுத்தார். அடுத்த வரியில், 'அப்படி வந்த காளை வந்த வேலை முடிந்து மறைந்தான்.' என்று எழுதினார்.
பிறகு என்ன நினைத்தாரோ என்னவோ, அந்த வரிகளுக்கு இடையில் கொஞ்சம் மாற்றி எழுதினார்.
'அப்படி வந்த காளை, தேர்மேகரை வணங்கி, அவர் காலில் விழுந்து கும்பிட்டான். பின் அவரைப் பார்த்து, 'தவ சிரேஷ்டரே! கவிராசரே! கலைத் தாயின் செல்லக் குழந்தையே! நீரே பெரும் கனவான். புலவர்களில் நீரே பெரும் தெய்வம்! என்று வணங்கினான். பின் அவனது காலத் தேரில் ஏறி மறைந்தான்.'
கபாலி," யோவ் பெருசு..! படா ஆளுய்யா நீ..! நைசா ஒன்னிய நல்லா ஏத்தி வுடற மாரி எளுதிக்கினே இல்ல. இந்த கபாலி கட்சிக் கூட்டத்துல கூட இப்டி எல்லாம் யாரையும் ஐஸ் வெச்சது இல்லய்யா..! நீ எளுதீட்ட. வேற வளியே இல்ல. இல்லாங்காட்டி, நான் போவ முடியாது..!" என்றான்.
அவர் எழுதியபடியே செய்தான். பின் டைம் மெஷினில் ஏறி மறைந்தான்.
தேர்மேகரின் மகள் வந்தாள். கையில் சூடான பால்.
"தத்தையே! எங்கே அந்த மனிதர்..?"
"எந்த மனிதர் அம்மா..?"
"இங்கே நின்று கொண்டிருந்தாரே..! அவருக்காகத் தான் இந்த சூடான பால் கொண்டு வந்தேன்..!"
"யாரும் இல்லையே இங்கே..! ஏதோ உனக்கு பிரம்மை போல் இருக்கின்றது. அந்தப் பாலை நீயே குடித்துக் கொள்ளம்மா..! நாணல் புதர்கள் ஈரக்காற்றில் தலையசைக்க, நுரை ததும்ப ஓடி வரும் நதியலைகள் சிந்திச் செல்லும் வண்டல் மண் சேர்ந்த வயல் காட்டில் விளைந்த நெற்பயிர்கள் போரடிக்கையில் தெறிக்கின்ற உமி பாண்டிய நாட்டில் சென்று விழும் அளவிற்கு காற்று வீசுகின்ற இக்காலத்தில் வெகு நேரம் வெளியே நிற்பது உடலுக்கு நன்றன்று. உள்ளே செல்லம்மா..."
அவள் உள்ளே சென்றாள்.
தேர்மேகர் அவரது முதல் அறிவியல் புனைகதை ஓலைச் சுவடியைக் கிழித்தார்.
யோசித்தார்.
மன்னரிடம் அறிவியல் புனை கதை என்று இரு நாட்களில் எதைக் கொடுப்பது..? வேறு வழியே இல்லை. மன்னரது படுக்கையறை பராபரித்தனங்களையும், போர்க்கள் போராட்டங்களையும் படுக்கையறை பராக்கிரமங்களாகவும், போர்க்கள ப்ரசன்னமாகவும் மாற்றி எழுத வேண்டியது தான். இதனை மிஞ்சின அறிவியல் உண்டா என்ன..?
'மெல்லிய இடை வல்லிய மார் வில்லின் விழி கள்ளில் இதழ்
அள்ளிய கரம் கிள்ளிய கன்னம் கொல்லும் கூந்தல் சொல்லிட வந்தேன்...'
எழுதத் தொடங்கினார்.
(தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகதை போட்டிக்காக.)
***
** எல்லாம் ஒரு விளம்பரம் தான். ;-)
29 comments:
கலக்கல்... அசத்தல்..
இது தொடரும் என்று.. நென்கிறேன் நைனா.. இன்னா சொல்ற?
அக்காங்பா... ஷோக்கா இருக்குல்ல கத.. எனிக்கு கூட சோக்கா எளுத வரும் போல இருக்கு.. அப்பால, புபட்டியன் சார், ரொம்ப டாங்ஸு உனிக்கு...!
இதுக்குண்ணே கடை வச்சிருக்கீங்க போல. நல்ல ஐடியாக்கள்.
சிறில் அலெக்ஸ் சார்.. மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கு...!
நல்லா வித்தியாசமா இருக்குங்க கதை :)
அன்பு சென்ஷி... மிக்க நன்றிகள் தங்கள் வாழ்த்துக்கும் , வருகைக்கும்...!
தேர்வுக் காலங்களில் இடுப்பு வேட்டி மடிப்பில் எழுதிய ஓலைச் சுவடிகளை மறைத்து தேறினோம்.
நடந்ததை எழுதியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்
/*
தேர்வுக் காலங்களில் இடுப்பு வேட்டி மடிப்பில் எழுதிய ஓலைச் சுவடிகளை மறைத்து தேறினோம்.
நடந்ததை எழுதியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்
*/
ஹி...ஹி... எப்படித் தான் கண்டுபிடிக்கறாய்ங்களோ....
காளை வரும்வரை மிக நன்றாக இருந்தது :-).
அதற்கப்புறம் கதையை வேறு மாதிரி கொண்டு போயிருக்கலாம் என்பது எனது கருத்து. ஏனென்றால் அதற்கப்புறம், துக்ளக் ஜாம்பஜார் ஜக்கு போல் ஆகிவிட்டது கதை.:-(
அன்பு யோசிப்பவர்...
இரண்டு வகையான செந்தமிழைப் பயன்படுத்தி எழுதினால் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என்று நினைத்திருந்தேன்.
நாம் இன்று எதிர்கால மனிதன் டைம் மெஷினில் வருகிறான் என்று கற்பனை செய்து கதை எழுதுகிறோம். ஆனல் அவன் நம்மைப் போல் தான் இருக்க வேண்டிய அவசியமில்லை அல்லவா? மூன்று கண்கள், ஒரு வாலோடும் இருக்கலாம் அல்லவா..?
அதே வாய்ப்பை வைத்து தான் நமக்கு முன் இருந்தவர்கள் சிந்தித்திருந்தால் எப்படி இருக்கும் என்று எழுதப்பட்ட கதை இது..!
எனவே தற்கால மற்றும் எதிர்கால மனிதர்களுக்கு இடையே எவ்வளவு தூரம் வித்தியாசம் காட்ட முடியுமோ அவ்வளவு தூரம் காட்ட வேண்டியதாக ஆனது.
எழுத்தில் மாறு வேடம் எல்லாம் போட முடியாது அல்லவா..? ;-)
எனவே பேசும் மொழியில் மட்டும் தான் வித்தியாசம் காட்ட முடியும்.
எனக்கு நன்றாக வரும் இரண்டு தமிழ்கள்(?) உண்மை செந்தமிழ் மற்றும் சென்னை செந்தமிழ். எனவே அவற்றை பயன்படுத்தி இருக்கிறேன்.
நீங்கள் சொன்ன பிறகு பார்த்தால், 'சோ' அந்த காரெக்டருக்கு பொருத்தமாக இருப்பார் போல் தோன்றவும் செய்கிறது..;-)
இந்தக் கதையில் சுஜாதா ஸ்டைல் பற்றி நீங்கள் எதுவும் கூறவில்லை.. நன்றி..!
//இரண்டு வகையான செந்தமிழைப் பயன்படுத்தி எழுதினால் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என்று நினைத்திருந்தேன்.
நாம் இன்று எதிர்கால மனிதன் டைம் மெஷினில் வருகிறான் என்று கற்பனை செய்து கதை எழுதுகிறோம். ஆனல் அவன் நம்மைப் போல் தான் இருக்க வேண்டிய அவசியமில்லை அல்லவா? மூன்று கண்கள், ஒரு வாலோடும் இருக்கலாம் அல்லவா..?
அதே வாய்ப்பை வைத்து தான் நமக்கு முன் இருந்தவர்கள் சிந்தித்திருந்தால் எப்படி இருக்கும் என்று எழுதப்பட்ட கதை இது..!
எனவே தற்கால மற்றும் எதிர்கால மனிதர்களுக்கு இடையே எவ்வளவு தூரம் வித்தியாசம் காட்ட முடியுமோ அவ்வளவு தூரம் காட்ட வேண்டியதாக ஆனது.
எழுத்தில் மாறு வேடம் எல்லாம் போட முடியாது அல்லவா..? ;-)
எனவே பேசும் மொழியில் மட்டும் தான் வித்தியாசம் காட்ட முடியும்.
//
;-))
இதுவெல்லாம் சரிதான். நான் மறுக்கவில்லை. ஆனால் காளை எப்படி வந்தான் என்றோ, எதற்காக வந்தான் என்றோ நீங்கள் விளக்கவில்லை. இதனால்தான் கதையின் விஞ்ஞானத்தன்மை அடிபட்டுபோய், சோ, எஸ்.வி.சேகர் நாடகங்கள் போல் ஆகிவிட்டது.
நான் சொல்லவும் வேண்டுமா?!;-))
முந்தய கமெண்ட்டில் "நான் சொல்லவும் வேண்டுமா?!;-))"வுக்கு முன்பு கீழேயுள்ளதை சேர்த்துப் படிக்கவும்;-)
//இந்தக் கதையில் சுஜாதா ஸ்டைல் பற்றி நீங்கள் எதுவும் கூறவில்லை//
அன்பு யோசிப்பவர்...
என்னங்க இப்படி எழுதினால், விஞ்ஞானத் தன்மை குறைந்து காமெடி ட்ராமா ரேஞ்சுக்கு வந்திடுச்சுங்கறீங்க...
கொஞ்சம் சேர்த்து எழுதினா, ஒரே கதையில எக்கச்சக்கமா கான்செப்ட்ஸ் இருக்குனு சொல்றீங்க...
கன்பீஸ் பண்றீங்களே....! ;-()
/*
முந்தய கமெண்ட்டில் "நான் சொல்லவும் வேண்டுமா?!;-))"வுக்கு முன்பு கீழேயுள்ளதை சேர்த்துப் படிக்கவும்;-)
//இந்தக் கதையில் சுஜாதா ஸ்டைல் பற்றி நீங்கள் எதுவும் கூறவில்லை//
*/
ஹி..! ஹி..! புரிஞ்சிடுச்சு...!
அன்பு யோசிப்பவர்...
போட்டிக்கு ரெண்டு நாளுக்கு முன்னாடி ஒரு போஸ்ட் எழுதினேன். சாரு - ஜெ சண்டையை வைத்து..! அதில் கடைசில ஒரு ஃபிக்ஷன் வருது பாருங்க..!
http://kaalapayani.blogspot.com/2008/06/blog-post_24.html
ஸாரி... லிங்க் ::
http://kaalapayani.blogspot.com/2008/06/blog-post_24.html
//அன்பு யோசிப்பவர்...
போட்டிக்கு ரெண்டு நாளுக்கு முன்னாடி ஒரு போஸ்ட் எழுதினேன். சாரு - ஜெ சண்டையை வைத்து..! அதில் கடைசில ஒரு ஃபிக்ஷன் வருது பாருங்க..!
//
அதை நேற்றே படித்துவிட்டேன். எதற்கு அவர்களுக்கு தேவையில்லாத விளம்பரம் என்று விட்டுவிட்டேன்!!;-)
வசந்த்,
Awesome writing style. யோசிப்பவர் சொல்வது போல் கொஞ்சம் காமெடி வந்து விட்டது. என்ன பண்ணுவது. சென்னை தமிழ் என்றாலே நகைச்சுவை இல்லாமலா? எனக்குப் பிடித்தது. ஆயினும் பரிசுக்கதை என்றால் இன்னும் தீவிரம் வேண்டும். வாழ்த்துக்கள்.
அனுஜன்யா
அன்பு அனுஜன்யா...
மிக்க நன்றி தங்கள் வாழ்த்துக்கும், வருகைக்கும்...!
இன்னும் தீவிரமாக எழுத உங்கள் வார்த்தைகளை ஊக்கமாக எடுத்துக் கொள்கிறேன்.
அசத்திட்டீங்க போங்க :) அமர்க்களமான கற்பனை.
அன்பு சேவியர் சார்...
மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்...!
விழுந்து விழுந்து சிரிக்கவைத்து(கவிதை எழுதுவதற்கே நூலக அகராதிகளை புரட்ட வேண்டியதாயிற்று,குருகுலத்தில் படித்துக்கிழித்தது).. பெண்கல்வியின் முக்கியத்துவத்தைத்தொட்டு, கொஞ்சம் வசந்த் பாணி , நிறைய செந்தமிழ் வர்ணனை- எப்படி இவ்வளவு வர்ணனை செய்யறீங்க, கலக்கும் சென்னைத் தமிழ்,வருங்கால மனிதன் தன் கவித்திறனைப்புகழ்ந்ததாக புலவர் எழுதுவது
சுவையாரமா இருக்கு கதை வாழ்த்துகள்
அன்பு மாதங்கி மேடம்...
மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும்...!
Creative thinking vasanth, as other said need little bit depth is required like: you could have bring the topic of "Female Education and other forward thinking" inside the "THERMEGAR's" Scientific Fiction story.
Probably that may add still more conceptual.
Hope you will take this in right sense.
Thanks for your time
/*
Creative thinking vasanth, as other said need little bit depth is required like: you could have bring the topic of "Female Education and other forward thinking" inside the "THERMEGAR's" Scientific Fiction story.
Probably that may add still more conceptual.
Hope you will take this in right sense.
Thanks for your time
*/
Dear Raghunathan,
Thanks for your great comments and suggestions.
I am writing for my satisfaction and lots of stories write themselves. I am not a writer to advice the society. I always believe that a story writes itself by using us as a pen. So along with you ppl, i also wonder how some stories are good.
If i try to write a story within a time period, it never gives me complete satisfaction. At a time the story starts itself and going and gets completed itself.
so if u want to blame someone or praise someone for the stories i wrote, please do that to the story itself.
I am just a pen.
Thanks for your kind visit. ;-)
loved the theme and presentation! Cheers!
Dear OSAI Chella...
Thanks for the visit and wishes...!!!!!
நல்லாயிருக்கு
வசந்த்.. எக்ஸலண்ட்... எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது....
என்ன ஆனாலும் தன் புகழ்ச்சியையும், புகழும் தன்மையையும் மாறாத புலவரின் இயல்பு அருமை...
கொஞ்சம் காமெடி தெளித்திருந்தாலும் இதுதான் உண்மையான அறிவியல் புனை கதை...
‘காலப் பயணத்தில்’ அறிவியலையும், யோசிப்பவர் கேட்ட லாஜிக்கைச் சொல்லாமல் விட்டதில் புனைவையும் கொண்டு வந்துள்ளீர்கள்..
இதுவரை படித்த தங்களின் அறிவியல் புனைகதைகளில் என் பார்வையில் இதற்குத்தான் முதலிடம்.
நல்ல கதைக்களன்.. வித்தியாசமான பார்வை..
ஒரு உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், தாங்கள் பழைய காலத்தையும், செந்தமிழையும் பயன் படுத்தியதில், உங்களை ஆட்கொண்ட சுஜாதா தமிழ் வரவில்லை என நான் எண்ணுகிறேன். யோசித்துப் பாருங்கள். இல்லை யோசிப்பவரைக் கேளுங்கள்.
இன்னொரு சிறப்பு இதில் கூட நகைச்சுவை வாயிலாக பெண் கல்வியை வலியுறுத்திவிட்டீர்கள்....
அருமை வசந்த்.....
அன்பு தமிழ்ப்பறவை...
நீங்கள் இக்கதையை இவ்வளவு நாள் படிக்கவில்லை என்பதே எனக்கு ஆச்சர்யம். தங்களது வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்.
Post a Comment