தமிழ்த் தொலைக்காட்சிகளின் டெம்ப்ளேட் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் தொலைந்து போவதைத் தவிர்க்க, எங்காவது செல்லலாம் என்று திட்டம் போட்டோம். மீனாட்சி கோயில் சில முறை சென்று விட்டதால், இம்முறை காந்தி நினைவு நிலையம் போகலாம் என்று நானும், கார்த்திக்கும் கிளம்பினோம். தமுக்கம் மைதானத்தில் இறங்கி, எங்கோ தூரத்தில் தெரிந்த வெண் பங்களாவை நோக்கி நடக்கத் தொடங்கினோம். மைதானத்தில் பொருட்காட்சி போட்டிருந்தார்கள். ஸ்பீக்கர்களில் விளம்பரக் குரல்கள் தெறித்துக் கொண்டேயிருந்தன. கரும்பு ஜூஸ் தள்ளுவண்டியில் விற்கப்பட்டது. வறு கடலை, பட்டாணி புகையாய்ப் பரவியது. இராஜாஜி பூங்காவில் நிறைய ஆண்கள், பெண்கள், குழந்தைகள். ரோலர் கோஸ்டரில் வட்டமடித்த பெண் செல்லில் பேசிக் கொண்டேயிருந்தார். ஊஞ்சல்கள் நிரம்பியிருந்தன. டைனோசர் பொம்மைகளில் நுழையும் வாசல் முன் டிக்கெட் கவுண்ட்டர் இருந்தது.
காந்தியை மறக்காமலோ, சுதந்திர தின நினைவோ காந்தி மியூஸியத்தில்(?) வல்லிய கூட்டம் இருந்தது. தலை குனிந்து நின்ற மகாத்மாவை க்ளிக்கி விட்டு, உள்ளே செல்ல முயல, 'CLOSED' போர்ட் சங்கிலியில் தொங்கியது. அன்று அரசு விடுமுறை தினமென்பதால், மூடப்படிருக்கிறதாம். என்ன ஒரு சிந்தனை! ஆச்சரியமாய் அன்று மட்டுமாவது நாட்டை நினைக்கும் எங்களைப் போன்றவர்கள் வருத்தத்துடன் நகர்ந்தோம். நூலகம், நூல் விற்பனை நிலையம், ஓவியக் கண்காட்சி.. எல்லாவற்றிற்கும் விடுமுறை. சுற்றி வந்து, சபர்மதி ஆசிரம மாதிரியைப் பார்த்து, வியந்து, ராஜ்கோட்டில் இருக்கும் காந்தி சமாதியின் மாடலையும் பார்த்து விட்டு வெளியேறினோம். சமாதியின் வாசலில் 'செருப்புகளை இங்கே விடவும்' என்று சொல்லப்பட்ட போர்டின் மிக அருகிலேயே ஒரு ஜோடி செருப்பு இருந்தது.
இவ்வகன்ற கூடம் நாடகசாலை அல்லது நாட்டிய மண்டபம் என்றழைக்கப்பட்டது. இவ்விடத்தில் அரசர் தம் தேவியருடன் மாலை நேரங்களில் அழகிய நாட்டிய மகளிர் ஆடும் நாட்டியங்களைக் கண்டு களித்தார். இந்நடனங்கள் பல்வேறு இசைக்கருவிகள் முழங்க தீவர்த்தி வெளிச்சத்தில் நடைபெற்றன. இக்கூடத்தின் மேற்கு மூலையில் இரண்டு படிக்கட்டுகள் மேல் தளத்திற்குச் செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ளன. இம்மாளிகையின் வடபுறம் பூந்தோட்டம் ஒன்றிருந்தது. அரண்மனையின் ஒரு பகுதி இரங்கவிலாசம் என்றழைக்கப்பட்டது. வடகிழக்குப் பகுதியில் இராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் அமைந்திருந்தது. இவை அனைத்தும் இப்போது இல்லை.
ஒரு டிபிக்கல் சிறுகதை போன்ற திடுக் கடைசி வரியில் முடிகின்ற இப்பத்தி திருமலை நாயக்கர் மஹாலில் ஒரு போர்டில் எழுதப்பட்டிருக்கின்றது.
காந்தியைக் காண முடியாத கடுப்பில், மீண்டும் தமுக்கத்திற்கு நடந்து வந்தோம். கோரிப்பாளையம் நிறுத்தத்திற்கு நடக்கும் போது, அமெரிக்கன் காலேஜ் Washburn Gate அருகில் ஒரு பிச்சிக் கிழவி சுருண்டு படுத்திருந்தாள்.
மீண்டும் ஏர்பஸ்ஸில் ஏறி, மிஷன் ஆஸ்பத்திரி நிறுத்தத்தில் இறங்கி நடந்தால், மஹால். மிகுந்த பொருட்செலவில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. நாயக்கர் சிலையில் கம்பீரமாக நின்றார். எனக்குத் திருமலை நாயக்கர் என்றால் ஒரு கதை நினைவுக்கு வரும். எஸ்.பாலசுப்ரமணியம் எழுதிய 'சந்திரவதனா'. நாயக்கரின் வாரிசான மதுரைச் சொக்கநாத நாயக்கருக்கும், தஞ்சை இளவரசி சந்திரவதனாவுக்குமான ஓர் ஆத்மார்த்த காதல், எவ்வாறு தஞ்சை அரசராலும், இளவரசனாலும் பிய்த்தெறியப்பட்டது என்ற அருமையான நாவல். விறுவிறுப்பான திரைக்கதை வடிவில் செறிவான வேகத்தில் பாயும் கதை. எல்லாக் காதல்களையும் போல், கொடூரமாகப் பிரிக்கப்பட்ட காதலனைத் தேற்றி மணம் செய்து கொள்ளும் பெண் தான் பிற்காலத்தில் இராணி மங்கம்மாள் ஆகின்றாள்.
பிரம்மாண்டமான தூண்கள்; உச்சிகளில் செதுக்கப்பட்ட பொம்மைகள்; இந்து, இத்தாலிய, இஸ்லாமியக் கூட்டணியில் கட்டப்பட்ட அரண்மனை முற்றப்பகுதி; நாடக சாலையில் பழங்காலச் சிலைகள்; கல்வெட்டுகள். சொற்களை விட, படங்களில் பார்க்கலாமே!!!
தெற்குவாசலுக்குச் சென்று சில புத்தகங்களைத் துழாவிய போது, கிடைத்த கோபுரப் படம் ::
9 comments:
மஹாலுக்கு அருகிலேயே பல ஆணிகள் பிடிங்கியிருந்தாலும், இதுவரை உள்ளே செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை, இல்லை. ஏற்படுத்திக் கொள்ளவில்லை.
காந்தி மண்டபம் சிறுவயதில் கண்டது.
சுதந்திர நாளில் காந்தி உங்களை ஏமாற்றிவிட்டார். ;)
அடுத்தமுறை வரும்போது, சேர்ந்து சுற்றுவோம்.
வசந்த்...
மாட்டுத்தாவணியின் இரவு அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது
காந்தி நினைவு நிலையம் பார்க்காத ஆதங்கம் புரிகிறது
படங்கள் அருமை
நல்ல பதிவு. நல்ல படங்கள். எனக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை. :)
அன்பு பீர்...
நன்றிகள். கண்டிப்பாக நீங்களும், நானும் மதுரையில் சந்திக்க முடிந்தால், சுற்றுவோம்.
***
அன்பு கதிர்...
பின்ன என்னங்க..! அன்னிக்கு ஒரு நாளாவது தாத்தாவைப் பாத்துட்டு வரலாம், எப்டி இருக்கார்னு அப்டின்னு போனா கதவ சாத்திட்டு திறக்க மாட்டேன்னு அழிச்சாட்டியம் பண்றாய்ங்க..!!
***
அன்பு கார்த்திக்...
நீ இவ்ளோ எழுதினதே பெரிசு தான்...! :)
படங்கள் அருமை வசந்த்...
ரொம்ப நாளைக்கு அப்புறம் 'பயணம்' சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
படங்களும் அருமை.
நானே நேரில் சென்று பார்த்தது போல் உள்ளது.
நன்றி!
அடிக்கடி பயணியுங்கள்.
படங்கள் (நோக்கியா) செல் போனில் எடுத்திருந்தாலும் நன்றாகவே இருக்கிறது!
அன்பு தமிழ்ப்பறவை...
மிக்க நன்றிகள்.
***
அன்பு மெனக்கெட்டு...
நன்றிகள். கண்டிப்பாக வாய்ப்புக் கிடைக்கும் போது பயணிப்போம்...!
உங்களுக்கு முதல்நாள் காந்தியைக் கண்டேன் நான்.
http://jssekar.blogspot.com/2009/08/blog-post_23.html
Post a Comment