Wednesday, September 02, 2009

பொன்னி.

ஃபேக்டரியில் ரெண்டாவது ஷிப்ட் முடிய ஒரு மணி நேரம் இருந்தது. அதிகாலை ஆறு மணிப் பனியில் பார்க்க கட்டம் கட்டமாய் மின் விளக்குகள் தெரிந்தன. சிமெண்ட் கூரைகளின் உச்சியில் போக்கிகளிலிருந்து அழுக்காய்ப் புகைகள் மொத்தமாய் மேலேறிக் கலைந்து கலைந்து மறைந்தன. க்வார்ட்டர்ஸின் மெய்ன் கேட் சாத்தப்பட்டு, குட்டிக் கதவு திறந்திருந்தது. தொட்டாற்சிணுங்கியும், தாத்தாப்பூச் செடிகளும் மறைத்திருந்த கம்பி வேலியைத் தாவி பத்ரி உள்ளே நுழைந்து விட்டது. வாசல் ஆரம்பத்திலேயே இருந்த பிள்ளையார் கோயில் சுவற்றில் மறைந்து நின்றது. பொன்னி சைக்கிள் மணி அடித்துக் கொண்டேயிருந்தாள். கூண்டுக்குள்ளிருந்து செக்யூரிட்டி எட்டிப் பார்த்தான்.

பொன்னி கறுப்பு ரிப்பன்களால் தலை பின்னியிருந்தாள். கருகமணி மாலை போட்டிருந்தாள். ப்ளாஸ்டிக் வளையல்கள் சுற்றியிருந்தாள். கண்ணாடி மூக்குத்தி பளிச்சென்றிருந்தது. சின்னதாகப் பொட்டு. தோடுகள் கறுத்திருந்தன. சட்டை, கழுத்தில் கொஞ்சம் கிழிந்திருந்தது. பூக்கள் பதித்த பாவாடை கால் வரை நீண்டிருந்தது. சைக்கிள் கேரியரில் ஒரு மெளத் ஆர்கான் செருகியிருந்தாள்.

"என்ன..?"

"இஞ்சினியர் சார் வீட்டுக்குப் போகணும்..!"

"உங்கம்மா வரலையா..?"

"பாட்டிக்கு உடம்பு சரியில்லை. புன்னம் போயிருக்காங்க.."

"சரி..சரி..! இதுக்குள்ளயே வா..! ஸார் வீடு தெரியும்ல..? நேராப் போய், ரெண்டாவது ரைட்ல..."

"...நாலாவது வீடு! தெரியும். அம்மா சொல்லிட்டாங்க..!" குட்டிக் கதவுக்குள் சைக்கிளை நுழைத்து, தாவித் தாவி பெடல் போட்டு, ஏறி ஓட்டினாள். பதுங்கியிருந்த பத்ரி உற்சாகமாய்க் குலைத்து சைக்கிள் பின்னாலேயே ஓடியது.

"ஹ! இது எப்ப வந்துச்சு...!!" செக்யூரிட்டி கத்தினான்.

ஃபேக்டரியையும் க்வார்ட்டர்ஸையும் இணைக்கும் முதன்மைச் சாலையில் சில மாருதிகள் பனிப்புள்ளிகளுடன் நின்றிருந்தன. மான்டிசோரி பள்ளி சாத்தியிருந்தது. மையப் பூங்காவில் ஸ்வெட்டர், துண்டுகள் சகிதம் வாக்கிங் போய்க் கொண்டிருந்தனர். மஞ்சள் சோடியம் விளக்குகள் காற்றைச் சோகையாய் நனைத்தன. டென்னிஸ் கோர்ட்டில் அங்கிள்கள் வேர்த்தனர். ஓரப் பசுமைகளில் பூச்சிகள் சுற்றின. ஒரு கீரி சரக்கென்று இங்கிருந்து அங்கு ஓடியது. பத்ரி குலைத்தது.

சீஃப் இஞ்சினியர் என்பதால் தனி வீடு கொடுத்திருந்தார்கள். ஜொலித்த ரெண்டு விளக்குகள் தவிர தெருவில் யாரும் இல்லை. மறு முனையில் கிணறும், பாய்லர் பைப்லைன்களும் தெரிந்தன. பொன்னி காம்பவுண்ட் சுவற்றிலேயே சைக்கிளைச் சாய்த்து நிறுத்தினாள். க்ரில் கேட்டில் கவரில் பால் பாக்கெட்டுகள் தொங்கின. மோட்டார் போடப்பட்டிருந்தது. ஒரு லேடிஸ் சைக்கிள் புறா போல் நின்றிருந்தது. அருகிலேயே ஸ்கார்ப்பியோ.

காலிங் பெல் அடித்தாள். உள்ளே சங்கீதம் ஒலித்தது. இரண்டாம் முறையின் பின், போர்டிகோ லைட் எரிந்தது. நிஷா நைட்டியில் வந்தாள். முடியில் க்ளிப் குத்திக் கொண்டே,

"யாரு வேணும்..?"

"அம்மாவால வர முடியல. பாட்டிக்கு ஒடம்பு சரியில்லன்னு புன்னத்துக்குப் போயிருக்காங்க. வீட்டு வேலைக்கு என்னைய அனுப்பியிருக்காங்க..!"

"பரிமளம் பொண்ணா நீ..?"

"ஆமாங்க..!"

"சரி..! பால் பாக்கெட் எடுத்திட்டு, இந்த வழியா பின்னாடி வா..!" பக்க வழியைக் காட்டி, மறுபடியும் உள்ளே புகுந்து, கதவடைத்துக் கொண்டாள். போர்டிகோ வெளிச்சம் அணைந்தது.

"ஷ்..! நீ இங்கயே இரு. சத்தம் போடாத, என்ன!"

பத்ரி மெல்லமாய் ஒலித்து விட்டு, வாலை விசிறியது. சைக்கிள் முன்பேயே கால்களை நீட்டி முகத்தைப் பதுக்கிப் படுத்துக் கொண்டது. ஓர் ஈ அதன் மூக்கைச் சுற்றியதை உற்றுப் பார்த்தது.

கேட்டைத் திறந்து, பால் பாக்கெட்டுகளை எடுத்துக் கொண்டாள். ஜில்லென்றிருந்தது. கன்னத்தில் வைத்து சிலிர்த்துக் கொண்டே, கம்பிக் கதவை இழுத்துச் சாத்தி, கொக்கியை மாட்டினாள். லேடிபேர்டைத் தடவினாள். பக்க வழியில் நிறையத் தொட்டிகளில் நிறைய செடிகள் இருந்தன. ஒரு ரோஜா அடர் ரோஸாகப் பூத்திருந்தது. சுவர்களில் பச்சையாய் இருந்தது. பின்கட்டுக்கு வந்து விட்டாள். அதற்குள் நிஷா பின் கதவைத் திறந்து வைத்திருந்தாள். நைட்டியை ஒழுங்குபடுத்தியிருந்தாள். கசமுசாவென கூந்தல் சுருட்டப்பட்டு செருகப்பட்டிருந்தது.

"உன் பேர் என்ன..?"

"பொன்னி..!"

"நல்ல பேர்..! பொன்னி! முதல்ல கிச்சன் ஸிங்க்ல இருக்கற பாத்திரம் எல்லாத்தையும் விளக்கி வெச்சிடு. அப்புறம் பால் காச்சி வெச்சு, நாலு டம்ளர் பூஸ்ட் போட்டு வெச்சிடு..! என்ன..!"

"சரிங்மா..!"

உள்ளே நுழைந்தவுடனே கிச்சன். ஸிங்க்கில் அத்தனை பாத்திரங்கள் இருந்தன. ஸ்டவ் அருகே ஊதுவர்த்தி ஒன்று சுத்தமாக காலியாகி, சாம்பல்களாய் ஆகி இருந்தது. பாவாடையை கொஞ்சமாக எடுத்து லேசாக செருகிக் கொண்டாள். குழாயைத் திருப்ப, இருமிக் கொண்டே தண்ணீர் பாய்ந்தது. நாரை நனைத்து, நடுவில் குழி விழுந்திருந்த சோப்பில் அழுத்தினாள்.

ழாவது பாத்திரம் விளக்கும் போது, ஸ்க்ரீனுக்குப் பின்னாலிருந்து டோரா கேள்வி கேட்டாள். பிறகு நிஷா கேள்வி கேட்டாள்.

"ஸ்ருதி..! காலைல எழுந்தவுடனே டி.வி.யா..? பாத்ரூம் போனியா..?"

"விடு..! இன்னிக்கு சாட்டர்டே தான. பாத்துட்டுப் போகட்டும்..!" ஒரு வயதான குரல் கேட்டது.

"அம்மா..! நீங்க செல்லம் குடுத்து தான் பொண்ணு ரொம்ப கெட்டுப் போறா. பாருங்க, எழுந்து இன்னும் ப்ரஷ் பண்ணல. ஃபேஸ் வாஷ் கூட பண்ணல. அதுக்குள்ள டோராவப் பாக்க உக்காந்திட்டா..! ஸ்ருதி..! கெட் அப்..! கோ டு பாத்ரூம்..!"

"மம்மி..! ப்ளீஸ் மம்மி!" ஒரு குட்டிப் பெண்.

"நோ! நான் டாடிட்ட ஸ்ட்ரிக்டா சொல்லிடப் போறேன். ஐ காண்ட் இக்னோர் தி இர்ரெஸ்பான்ஸிப்ளிட்டிஸ். எங்க டாடி..?"

"இன்னும் தூங்கறான். ஆமா, பரிமளம் வந்துட்டாளா..?"

"இல்லம்மா. ஊருக்குப் போயிருக்காங்களாம். அவங்க பொண்ண அனுப்பியிருக்காங்க. அவ தான் பாத்திரம் விளக்கிட்டு இருக்கா..!"

"அப்படியா..? ஆயுர்வேத தைலம் வாங்கிட்டு வரச் சொல்லலாம்னு இருந்தேன். பாழாப் போன மூட்டு வலி இருக்கே..!"

மாடியிலிருந்து குரல் இறங்கி வந்தது.

"எங்க என் டார்லிங்..?"

"மம்மி இங்க தான் இருக்காங்க. பேட் மம்மி. சேட்டர்டே கூட ஃப்ரீயா இருக்க விடாம டென்ஷன் பண்ணுறாங்க.."

"என்ன நிஷா அப்படியா சொன்ன..? நீ பாருடா செல்லம்..! நானும் வர்றேன்..!"

"ஆமா உட்கார்ந்து டோரா பாருங்க. உங்களுக்கு பத்து மணிக்கு மீட்டிங் இருக்கு. மேடத்துக்கு எட்டு மணிக்கு ம்யூஸிக் க்ளாஸ் இருக்கு. அப்புறம்..."

"அடுத்த வாரம் அஸோஷியேஷன்ல ம்யூஸிக் காம்படீஷன் இருக்கு. போதும்மா..! த்வுஸண்ட் டைம்ஸ் நீ சொல்லிட்ட..!"

"அதெல்லாம் என் பொண்ணு அசத்திடுவா..! நீ பாருடா..!"

"எப்படியோ போங்க..!"

நிஷா கிச்சனுக்கு வந்தாள். பொன்னி ஸ்டவ் பக்கத்தில் கையில் துணியோடு நின்றாள். நீல விரிவில், பால் பொங்க யோசித்துக் கொண்டிருந்தது.

"பொன்னி..! படிக்கறயா..?"

"ஆமாம்மா! எட்டாவது..!"

"படிக்கற பொண்ணு இப்படி வேலை செய்ய வரலாமா..?"

"இல்லம்மா! எப்பவும் செய்ய மாட்டேன். அம்மாவுக்கு முடியலைன்னா தான் நான் வேலை செய்யப் போவேன். சிலசமயம் வேலை செய்யறது நல்லது தான். தெரிஞ்சுக்கோன்னு அம்மாவே அனுப்புவாங்க.."

"ஸ்ருதீ...! இங்க வந்து பாரு..!"

உள்ளிருந்து அரவிந்தும், ஸ்ருதியும் கிச்சனுக்குள் வந்தார்கள். டீ.வி. சத்தம் குறைக்கப்பட்டது.

"ஹாய்..! யார் இந்த குட்டிப் பொண்ணு..?"

"பரிமளம் பொண்ணு.பேரு பொன்னி. ஸ்ருதி..! பாத்தியா? உன் வயசு தான் ஆகறது. எவ்ளோ நல்லா வேலை செய்யறா தெரியுமா? நீ என்னிக்காவது செஞ்சிருக்கியா..? சாப்ட்ட தட்டைக் கூட கழுவ மாட்ட..!"

உடனே ஸ்ருதி ஒரு விரோதப் பார்வை பார்த்தாள்.

"டியர்..! எல்லாரும் அவங்கவங்க வீட்ல அப்படித் தான். ஏய் பொன்னிப் பொண்ணு, நீயும் சாப்ட்ட தட்ட கழுவ மாட்ட தான..?" நிஷாவுக்குத் தெரியாமல் கண்ணடித்தான்.

"ஆமாங்க. எங்கம்மா தான் கழுவி வெப்பாங்க. அப்ப இதே மாதிரி தான் திட்டுவாங்க..!" பொய் சொன்னாள்.

"தட்ஸ் இட்..! டேங்க் நிரம்பிடுச்சுனு நினைக்கிறேன்..!" அரவிந்த் பின் வெளியே போனான். நிஷா குக்கரில் அரிசியைக் கழுவிப் போட்டாள். "இந்த கேஸ்கட்டை மாத்த மாட்டீங்களா..? வழு வழுன்னு ஆயிடுச்சு..!"

"ஹாய்! என் பேர் ஸ்ருதி. நீ எந்த ஸ்கூல் படிக்கற..?" சட்டென சிநேகமானாள் ஸ்ருதி.

நெற்றியைப் புறங்கையால் துடைத்துக் கொண்டே, "ராமகிருஷ்ணால..! நீ..?"

"எஸ்.எம்.எஸ்.ல..! வேலையெல்லாம் முடிச்சிட்டு வர்றியா? டோரா பாக்கலாம். டெய்லி இந்த பாட்டிகூட பாத்து ஒரே போர்..!"

"ம்..! வர்றேன்..!"

நிஷா குளிப்பதற்குப் போய்விட்டாள். பொன்னி நாலு டம்ளர்களில் பூஸ்ட் கலக்கி வைத்து விட்டு, ஒன்றை மூடியால் மூடி வைத்தாள். மூன்றை தட்டில் எடுத்துக் கொண்டு ஸ்க்ரீனைத் திறந்தாள்.

ஜில்லென்றிருந்தது. ஏ.ஸி.போட்டிருந்தார்கள். கண்ணாடி ஷோகேஸ் பளிச்சென்றிருந்தது. அதில் குட்டிக் குட்டியாய் நிறைய கரடி பொம்மைகள் இருந்தன. ஒட்டியதாய் ஒரு டி.வி. அதில் டோரா, குரங்குடன் நடந்து கொண்டிருந்தாள். மேலே போட்டோவில் ஒரு குழந்தையை முத்தமிடும் இளம் அரவிந்த். ஸ்ருதி ஒரு குட்டி சோபாவில் உட்கார்ந்திருந்தாள். ஒரு பாட்டி சோபாவில் அமர்ந்து, கால்களைத் தடவிக் கொண்டிருந்தார். அரவிந்த் ஒரு மர நாற்காலியில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தான்.

ஒவ்வொருவரிடமும் டம்ளரைக் கொடுத்தாள். அங்கேயே நின்று சுற்றிச் சுற்றிப் பார்த்தாள். மாடிக்குச் செல்லும் படிக்கட்டு வளைந்து வளைந்து சென்றது. அதன் எல்லையில் ஒரு ரோமானியப் போர் வீரன் சிலை கையில் வேலோடு நின்றது. அதன் நுனியில் ஒரு மஞ்சள் பை தொங்கியது. டீப்பாய் மேல் மூன்று செல்ஃபோன்கள் இருந்தன. மூலைகளில் தொட்டிச் செடிகள். ஒரு டிஜிட்டல் கடிகாரம். அவளது ஏழ்மைத் தோற்றம் அந்த ஸீனில் அவளுக்கு ஒருவித கான்ட்ராஸ்ட்டாகத் தோன்றியது.

"வா..! நாம டோரா பாக்கலாம்..!" ஸ்ருதி அவளைக் கைப்பிடித்து பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டாள். மெத்தென்றிருந்தது. ஸ்ருதி கை ஸாஃப்ட்டாக இருந்தது.

"ஸ்ருதிக்குட்டி! டைம் ஆச்சும்மா! ம்யூஸிக் க்ளாஸ் போகணும். எழுந்திரு. மாடிக்குப் போய்க் குளிச்சிட்டு வா..!" அரவிந்த் சொன்னவுடனே பொன்னி எழுந்து நின்று கொண்டாள். அவளுக்கு திடீரென ஏதோ ஒரு கூச்ச உணர்வு வந்து ஒட்டிக் கொண்டது. காலி டம்ளர்களை எடுத்துக் கொண்டு ஸ்க்ரீனை விலக்கி விட்டு வெளியேறினாள்.

விசிலடிக்கவா வேண்டாமா என்று யோசித்த குக்கரைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நிஷா குளித்து விட்டு புத்துணர்ச்சியுடன் வந்தாள். இட்லி குக்கரில் மாவு ஊற்றும் போது,

"அம்மா..! பாத்திரம் எல்லாம் விளக்கி வெச்சுட்டேன். வேறு ஏதாச்சும் வேல இருக்கா..?"

"துணி துவைக்கணும். வாஷிங் மெஷின் ரிப்பேர். நீ துவைச்சிருவியா..?"

"துவைச்சிருவேம்மா..!"

"சரி! வெளிய கல்லு இருக்கும். பக்கத்துலயே பக்கெட்ல ஊற வெச்சிருக்கு பாரு. துவைச்சிடு..! அரவிந்த், உங்க பொண்ணு ரெடியா..? ம்யூஸிக் க்ளாஸ் போகணும்..!"

பொன்னி ம்யூஸிக் க்ளாஸ் பற்றி விசாரிக்க விரும்பினாள். அங்க மெளத் ஆர்கான் நல்லா வாசிக்கச் சொல்லித் தருவாங்களா? அவளுக்கு சடாரென சைக்கிள், பத்ரி ஞாபகம் வந்தது. பக்க வழியாகவே சென்று பார்த்தாள். இளம் வெயில் வியாபித்திருந்தது. தெரு விளக்குகள் தூங்கப் போயிருந்தன. பத்ரி, செடிகளுக்குள் சுற்றிச் சுற்றி வந்தது. பொன்னியைப் பார்த்ததும் செல்லமாய்க் குலைத்து மேலே தாவியது.

"இங்கயே இரு..! சின்ன வேலை ஒண்ணு இருக்கு. முடிச்சிட்டு வந்திடறேன். அப்புறம் போலாம். என்ன..?" புரிந்து கொண்டது போல் பத்ரி வாலாட்டி விட்டு, மீண்டும் செடிகளுக்குள் விளையாடப் போய் விட்டது. விரலை ஆட்டிச் சொல்லும் போது தான் கவனித்தாள். அடர் பழுப்பாய்ச் சில கட்டிகள் ஒட்டியிருந்தன. நெருக்கமாக முகர்ந்து பார்த்து, சுரண்டி நாக்கில் நனைத்தாள். பூஸ்ட் கசப்பாக இருந்தது.

மெளத் ஆர்கானை எடுத்துக் கொண்டு பின்கட்டுக்கு வந்து துவைக்கும் கல்லுக்குப் பக்கத்தில் சென்று பார்த்தாள். நிறைய புடவைகள். கண்ணாடி வைத்தது. ஜிகினா பதித்தது. வாஷிங் பவுடர்களின் மாயாஜால புசுபுசு நுரைகளுக்கு நடுவே வெயில் ஒளியில் மின்னின. பொன்னி துணிகளை எடுப்பதற்கு முன், மெளத் ஆர்கானில் தூசி போக 'உஃப்..உஃப்..' என்று ஊதினாள். பின் உதடுகள் மேல் வைத்து மிக இனிமையாக ஊதத் தொடங்கும் போது, ஃபேக்டரியிலிருந்து, ஷிஃப்ட் மாறுவதற்கான சைரன் ஒலி பிரம்மாண்டமாய்க் கிளம்பி, அவளைக் கரைத்தது.

1 comment:

தமிழ்ப்பறவை said...

மற்றவர்கள் கருத்தறிய இப்பின்னூட்டம்...