Wednesday, July 22, 2009
நானும் எழுதுகிறேன் 10!
இப்போது பத்து விஷயங்களை எழுதுவது தான் தமிழ் வலைக்களத்தில் பிரசித்தி பெற்றிருக்கின்றதாகத் தெரிகின்றது. எனவே நானும் ஒரு பத்து எழுதுகிறேன்.
ஆங்கில எழுத்தாளர் Alex Keegan இளம் புனைவு எழுத்தாளர்களுக்குச் சொல்லும் பத்து ஆலோசனைகள்.
a. நீங்கள் எழுத விரும்பும் கதையின் ஆதாரக் கருத்து உங்களை ஏதேனும் செய்திருக்க வேண்டும். கோபப்பட, வருத்தப்பட, ஊக்கப்பட இப்படி எதுவும் செய்யாதவற்றை தொட வேண்டாம். தேய்வழக்குகளையோ, உங்களுக்கே சலிப்பேற்படுத்துவதையோ எழுதவே வேண்டாம். அஸிமோவையோ, ஷாண்ட்லியரையோ மீண்டும் எழுத முயலாதீர்கள். நீங்களாகவே எழுதுங்கள். உங்களது மில்லியன் வார்த்தைகளை எழுதுகையில், எவரையும் போல் எழுத வேண்டும் என்று நினைக்க வேண்டாம். நீங்கள் சுயமானவர். உங்கள் உண்மையாக எழுதுங்கள்.
b. உங்களை நான் நம்ப வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், படம் வரைந்து காட்டுங்கள். வர்ணிப்புகள் இல்லாமல் என்னை வலி உணரச் செய்யுங்கள். எல்லோரும் சொல்லிய, 'சொல்லாதே; காட்டு' என்பதை புரிந்து கொள்ளுங்கள். புரிந்து கொள்ளும் வரை செப்பனிடுங்கள்.
c. கதைத் தளத்தை மறங்கள். கதாபாத்திரங்களை நினையுங்கள். அவர்கள் கதைத் தளத்தை நிர்ணயித்துக் கொள்ளட்டும். இளம் எழுத்தாளர்கள் முதலில் தடுமாறுவது இங்கே தான். அவர்கள் முதலில் கதையின் வகையை முடிவு செய்து கொண்டு (உதா : நான் காபி குடித்து விட்டு, அறிவியல் புனைகதை எழுதப் போகிறேன்!) ஆரம்பிக்கிறார்கள். அது வேண்டாம். படிப்பவர்கள் நம் பாத்திரங்களையும், சூழல்களையும், உணர்ச்சிகளையும் தான் நினைவில் வைத்துக் கொள்கிறார்களே தவிர்த்து, கதை சரித்திரமா, பேய்க்கதையா என்பது பற்றி அல்ல; பாத்திரங்களை உருவாக்குங்கள்; அவர்களை எங்காவது சிக்க வையுங்கள்; அவர்கள் தாமாக வெளிவரட்டும்.
d. உங்கள் மொழிப்பிரயோகம், நடை மற்றும் கவித்துவம் ஆகியவற்றில் கவனம் வையுங்கள். மிகவும் சுவாரஸ்யமற்று எழுதும் சிறந்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்; தமக்கான பிரமாத நடையில் நம்மை மயக்கிச் சுழல வைப்பவர்களும் இருக்கிறார்கள். வார்த்தைகளை ரம்மியமாகவும், கவித்துவ கலாப்பூர்வமாகவும் கையாளப் பழக்கப்படுத்திக் கொள்வது உங்களை தனித்துக் காட்டும்.
e. ஒரு சிறந்த உரையாடல் என்பது உண்மையான பேச்சு போல் இல்லாமல், ஆனால் தினப்படி சம்பாஷணை போன்ற ஒரு மாயத் தோற்றம் ஏற்படுத்தும். அதை கற்றுக் கொள்ளுங்கள். சிறந்த உரையாடல் எழுத்தாளர்களைப் படியுங்கள். நான் Elmore Leonard சிபாரிசிக்கிறேன்.
f. இப்போது ஒரு பழைய அறிவுரை. ஒரு நாவலை எழுதுவதற்கு முன் குறைந்தது ஐம்பது சிறுகதைகளாவது எழுதி விடுங்கள்; பரிட்சை செய்யுங்கள்; சிறந்த கதைகளை அல்லது ஒரு நாவலின் துவக்க வரிகளை மாற்றி எழுதிப் பாருங்கள்; கவிதைகள் எழுத முடிகிறதா என்று சோதியுங்கள்; சிறுசிறுகதைகளை முயலுங்கள்; வார்த்தை எல்லைகளுக்குள் ஒரு கதை முடிக்க முடிகின்றதா என்று வெட்டுங்கள். இதெல்லாம் எதற்காகவெனில், தெரிந்தவற்றை எரித்து விடுவதற்கும், பொதுக் களங்களைக் கழற்றி விடவும், கிட்டத்தட்ட சுயசரிதையாக கதை சொல்லும் ஆர்வத்தை தீர்த்துக் கொள்ளவும் தான் (நிறைய சிறுகதைகள் எழுதுவது இவற்றிற்குத் தான்!). பலன், நீங்கள் நிறையக் கற்றுக் கொள்வீர்கள் மற்றும் இன்னும் மதிப்புள்ளதாக உங்களிடமிருந்து கதைகள் வெளிப்படும்.
g. வாழ்வைச் சொல்லும் கதைகளைச் சொல்லுங்கள். 'எழுத்தாளர்' போல் சொல்ல முயல வேண்டாம். நேர்மையாக எழுதுவது போதும். (Try to tell stories that illuminate life: be honest. Don't try to "be a writer," because that's the quickest way to dreadful purple prose and pretentiousness. )
h. படியுங்கள்; படியுங்கள்; படியுங்கள்; படியுங்கள்; மற்றும் எழுதுங்கள்; எழுதுங்கள்; எழுதுங்கள்; ஆனால் பிறகு அவற்றை வெளியிட மறக்காதீர்கள். மீண்டும் மீண்டும் திருத்தி வெளியிடுவது என்பது எழுத்தாளர் ஆவதற்கான ஒரு முக்கிய செயற்பாடு. படிப்பதற்காகத் தான் எழுதுகிறீர்கள். யாரும் படிக்கத் தேவையில்லை என்பது உங்கள் எண்ணமாக இருக்குமானால், எழுதுவதை நிறுத்தி விட்டு, எழுந்து செல்லுங்கள்; வேறு ஏதேனும் செய்யுங்கள். வேறு யாராவது படிப்பது என்றால், அவை வெளியிடப்பட வேண்டும்; பிரசுரிகப்பட வேண்டும். பிரசுரிக்கப்பட வேண்டும் எனில் நீங்கள் நிராகரிக்கப்படுவீர்கள்; பத்து முறை, நூறு முறை ஏன் ஆயிரம் தடவைகளும்!
i. புறக்கணிக்கப்படுவதற்கு தயாராக இருங்கள். எடுத்தவுடனே நியூயார்க்கருக்கு குறி வைக்காதீர்கள். அதற்காக ஓர் அற்புத படைப்பை நாலாந்தர பத்திரிக்கைக்கும் தந்து விடாதீர்கள். சந்தையைப் புரிந்து கொள்ளுங்கள் (அதாவது பத்திரிக்கைகளை!) நீங்கள் எந்த பத்திரிக்கைக்கு அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதைத் தொடர்ந்து படித்து, கவனித்து எழுதிய கதை அதற்கு ஏற்றது தானா என்று அலசி அனுப்புங்கள்.
j. இறுதியாக, நீங்கள் நினைத்ததை எழுதுங்கள். பின்வாங்க வேண்டாம். எழுதுவது என்பது அப்படியொன்றும் சுலபமான வேலை இல்லை என்றாலும், நீங்கள் பாதி எழுதினாலும் அதில் உங்கள் உழைப்பு இருக்கின்றது. வீரமாய் உணருங்கள். எழுத்தாளர்கள் வீரர்கள்.
நன்றி அலெக்ஸ் கீகன் Sir..!
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
Kalakal Vasanth :-)
சூப்பர்-10!
மீண்டும் ஒரு நல்ல பதிவு. உங்கள் தளத்திற்கு வருகையிலெல்லாம் எப்படியோ ஒரு புன்னகை வந்துவிடுகிறது!
அட்டகாச 10 வசந்த குமார்.. பகிர்விற்கு மிக்க நன்றி.
10ம் அருமையாக இருக்கிறது.
இதுபோல் இன்னும் பல பத்துக்கள் எழுதவும்.
அன்பு வெட்டிஜி...
நன்றிகள்.
***
அன்பு ஆப்ரஹாம்...
நன்றிகள்.
***
அன்பு வெங்கிராஜா...
நன்றிகள். :)
***
அன்பு சென்ஷி...
நன்றிகள்.
***
அன்பு மெனக்கெட்டு...
நன்றிகள். இன்னும் 10-களா..? முயற்சிப்போம்.
என்ன ஒரு கம்பீரம் இந்த வார்த்தைகளில்! மிக நல்ல பதிவு. நன்றி!
-ப்ரியமுடன்
சேரல்
நன்றிகள்!!
அன்பு கார்த்திக்...
நன்றிகள். :))
Post a Comment