Sunday, June 07, 2009

சிறுகதைப் போட்டியாளர்களுக்கு ஓர் உதவி!.2.

ண்மையில் வாங்கிய வாத்தியாரின் 'ஓரிரு எண்ணங்களில்' எழுதுவது பற்றி சில வரிகள் சொல்லியிருக்கிறார். தெரிந்து கொள்வது இன்னும் நம்மைக் கொஞ்சம் விசாலமாக்கும் என்பது என் நம்பிக்கை.

689 நல்ல கதைகள் படித்து அலசிய ஹெல்மட் பான்ஹைம் என்பவர் நல்ல சிறுகதை என்பதற்கு பன்னிரண்டு அடையாளங்கள் சொல்கிறார்,

1. என்ன சொல்லப்பட்டது என்பது எப்படி சொல்லப்பட்டது என்பதை விட முக்கியமாக இருக்கும்.

2. ஒரு சிறுகதையின் ஆரம்ப வாக்கியத்திற்கு முன் கதையின் தொண்ணூறு சதவிகிதம் நடந்து முடிந்திருக்கும். அதாவது சிறுகதை முடிவுக்கு மிக அருகில் ஆரம்பிக்கும் பெரிய கதை.

3. எல்லோருக்கும் எழுத வரும். ஆனால் அந்தக் காலகட்டத்திலும் சுமார் 10 பேர் தான் நல்ல சிறுகதை எழுத்தாளர்கள்.

4. சிறுகதைக்கான விஷயம் இருப்பதைக் கண்டுபிடிக்கும் திறமை, பிறவியில் ஏற்படுவது. அதை எந்தக் கல்லூரியிலும், புத்தகத்திலும் கற்க முடியாது.

5. எந்த நல்ல கதையிலும் எழுதியவரின் நினைவாற்றலின் நுட்பம் இருந்தே தீரும்.

6. உலகத்தில் எழுதப்பட்ட மொத்த கதைகளில் 85% பார்த்த, கேட்ட, உணர்ந்த, படித்த அனுபவத்தைச் சார்ந்ததாக இருக்கிறது. இது ஒரு .விவரம்.

7. எனவே, நல்ல சிறுகதை எழுத்தாளனுக்கு கண், காது, மூக்கு சரியாக இருக்கும்.

8. சிறுகதைக்கான விஷயம் தேர்ந்தெடுப்பதில் இரக்கமோ நாசூக்கோ மரியாதையோ இருக்காது. அதற்கு காப்பியடிப்பதைத் தவிர, மற்ற எந்தவிதமான பாவச்செயலும் செல்லுபடியாகும்.

9. நல்ல சிறுகதை எழுத்தாளர்கள் நிறையப் படித்திருக்கிறார்கள்.

10. உலகில் ஒவ்வொருவரிடமும் தவறாமல் ஒரு நல்ல சிறுகதை இருக்கிறது.

11. கதைக் கருத்து என்று புதுசாக ஏதும் இல்லை. எல்லாக் கதைகளும் சொல்லப்பட்டு விட்டன. புதிய இடங்களில், புதிய காலங்களில், புதிய வடிவமைப்புகளில் பழைய கதைகளைத் தான் சொல்கிறோம்.

12. கதைக்காக ஒரு 'இன்ஸ்பிரேஷன்' - ஒரு கற்பனைக் கன்னி வந்து பால் புகட்ட வேண்டும் என்று ஒரு கதாசிரியர் காத்திருந்தால், பட்டினியால் செத்துப் போவார். எல்லாக் கதைகளும் கொஞ்சம் அவசரமும், கொஞ்சம் உணர்ச்சி ஊற்றும் கலந்து எழுதப்பட்டவை.

சில பொன்மொழிகள் :

பெரும்பாலான கதைகள் ஒரு பேசப்பட்ட வாக்கியத்தில் முடிகின்றன.

வாழ்க்கையின் அபத்தத்தைச் சுட்டிக்காட்டி ஒரு கேள்விக்குறியில் முடிகின்றன.

ஃப்ராங் ஓ கானர், 'சிறுகதை சமூகத்தின் விளிம்பில் இருக்கும் மனிதர்களின் தனிமையைப் பற்றியது' என்றார்.

சிறுகதை ஒரு தனிப்பட்ட சுருக்கமான அனுபவத்தைப் பேசுகிறது.

அன்றாட அலுப்பு வாழ்க்கையில் உயிரின் புதிர் சட்டென்று புரியும் கணம் ஒன்றை அது சொல்லும். அந்தக் கணத்தை ரெவலேஷன் அல்லது வெளிப்பாடு அல்லது epiphany என்கிறார்கள். அவதாரம், அற்புதத் தோற்றம் என்று பலதும் சொல்கிறார்கள். இது zen தத்துவத்திலும் உண்டு. Satori என்பார்கள்.

'எப்போது கதை எழுதினாலும் சந்திரனை எட்டிப் பிடிக்க முயற்சி செய்கிறார்கள். அப்போதுதான் தெரு விளக்காவது; அல்பம் ஒரு மெழுகுவர்த்தியாவது கிடைக்கிறது.'

ராபர்ட் பென் வாரன் சொன்னது;

"THE IMAGE THAT FICTION PRESENTS IS PURGED OF THE DISTRACTIONS CONFESSIONS AND ACCIDENTS OF ORDINARY LIFE."

"தின வாழ்வின் அலுப்பான விவரங்கள் விலக்கிவிட்டு அதன் காலம் கடந்த சமாச்சாரப்க்களைக் கண்டுபிடிப்பதுதான் இதன் சூட்சுமம்".

ழுதுவது எப்படி என்று என்னைக் கேட்டு பல கடிதங்கள் வருகின்றன. என்னால் அதை விளக்கமாகச் சொல்ல முடியும் என்று தோன்றவில்லை. பதிலாக எழுத்துக் கலையைப் பற்றி சில நல்ல எழுத்தாளர்களும் அறிஞர்களும் சொன்னதை வாராவாரம் சொல்கிறேன்.

இந்த வாரம் அரிஸ்டாட்டில்:

"நன்றாக எழுதுவதற்கு அறிஞர்களைப் போல சிந்தித்து சாதாரண மக்களைப் போல வெளிப்படுத்து."

எர்னஸ்ட் ஹெமிங்வே:

"நான் பார்ப்பதை, உணர்வதை என்னால் முடிந்த வரை மிகச் சிறந்த, மிக எளிய முறையில் எழுதுவதே என் குறிக்கோள்."

ஜான் ஹெர்ஸே:

"எழுத்து என்பது தினம் உட்கார்ந்து கொண்டு தினம் கட்டாயமாக எழுதுவது; மார்புக்குள்ளிருந்து மேதைத்தனம் என்னும் அந்த நீல ஒளிக்குக் காத்திருப்பதல்ல-திரும்பத் திரும்ப எழுதுவது-மகிழ்ச்சியோ, வலியோ எழுதுவது! எழுத்து என்பது நிறைய கிழித்துப் போடுவது, நிறைய எழுதுவது, எழுதுவதில் திருப்திப்படாமல் இருப்பது... மீண்டும் எழுதுவது!"

வில்லியம் பாக்னர்:

"ஒரு கதைமாந்தனுடன் ஆரம்பிக்கிறேன். அவன் உருப்பெற்று நின்று நடக்கத் தொடங்கியதும் நான் செய்வதெல்லாம் பேப்பர் பென்சிலுடன் அவன் கூடவே ஓடி, அவன் செய்வதையும் சொல்வதையும் படி எடுக்கிறேன். அவ்வளவு தான்."

தாமஸ் ஹார்டி:

"உண்மையாக எழுத வேண்டுமானால், சாதாரண விஷயங்களைச் சொல்ல வேண்டும். சுவாரஸ்யமாக எழுத வேண்டுமானால், அசாதாரண விஷயங்களைச் சொல்ல வேண்டும். எழுத்தாளனின் பிரச்னை இவையிரண்டையும் சமனப்படுத்துவது தான்."

"மூன்று பேர் பஸ்ஸுக்காகக் காத்திருந்தார்கள். ஜானகி அப்போதுதான் கணவனுடன் போட்ட சண்டையை நினைத்துப் பார்த்தாள். ரமேஷ் தன் மூக்குக் கண்ணாடியை துடைத்துக் கொண்டு, போட்டுக் கொண்டான். திவாகரன் அந்த ஒட்டகத்தை எப்படியும் வாங்கிவிட வேண்டும் என்று தீர்மானித்தான்..."

இந்த கதை ஆரம்பத்தில் என்ன தப்பு? வ்யூபாய்ண்ட் தான்! யாருடைய கதை இது? ஜானகியா, ரமேஷா, திவாகரனா? யாராவது ஒருத்தர்தான் மையமாக இருக்க வேண்டும். மற்ற பாத்திரங்கள் வரக்கூடாது என்றில்லை. ஓர் ஆசாமியின் பேரில் "emotional focus" என்பார்கள். அது வேண்டும். ஒரு பாத்திரத்தின் வெளி உலக மன சஞ்சலங்களை விட்டு கதை விலகக் கூடாது. உங்களுக்குப் பிடித்தமான நல்ல கதைகளைத் திருப்பிப் படித்துப் பாருங்கள், வ்யூபாய்ண்ட் மாறுகிறதா என்று மாறினால் உடனே கதையின் பெயர் குறிப்பிட்டு ஒரு கார்டு எழுதவும். நிரூபிக்கப்பட்டால் பரிசு ரூ 4.95, ஒன்றுக்கு மேற்பட்ட விடை வந்தால் பரிசு பகிர்ந்தளிக்கப்படும்.

"ன்றி வாத்யாரே!" என்று சொன்னால் க்ளிஷே என்பாய். இருப்பினும் மற்றும் ஒருமுறை சொல்வேன்.

"நன்றி வாத்யாரே!!"


***

புத்தகம் : ஓரிரு எண்ணங்கள்.

புத்தக வகை : கட்டுரைகள்.

ஆசிரியர் : சுஜாதா.

கிடைக்குமிடம் : விசா பதிப்பகம்.

பதிப்பகம் : திருமகள் நிலையம், தி.நகர்.(044 - 24342899, 24327696), நூற்கடைகள்.

விலை : 115 ரூ.

9 comments:

சரவணகுமரன் said...

நல்ல பதிவு

Raju said...

Nalla TIMING post..

thamizhparavai said...

நன்றி வாத்யாரே...

அன்புடன் அருணா said...

கதை எழுதும் போது நினைவில் வைத்துக் கொள்கிறேன்....

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பகிர்வு..

நன்றி நண்பா

Karthik said...

ரொம்ப நல்ல பதிவு.

//"ஒரு கதைமாந்தனுடன் ஆரம்பிக்கிறேன். அவன் உருப்பெற்று நின்று நடக்கத் தொடங்கியதும் நான் செய்வதெல்லாம் பேப்பர் பென்சிலுடன் அவன் கூடவே ஓடி, அவன் செய்வதையும் சொல்வதையும் படி எடுக்கிறேன். அவ்வளவு தான்."

:-)

மெனக்கெட்டு said...

கதை சொல்வதைப் பற்றி :

கலாப்ரியாவின் 'வனம் புகுதல்' தொகுப்பில் இருந்து ஒரு கவிதை

தூங்கும் முன்
கழுத்தைக் கட்டிக்கொண்டு
கதைகேட்ட
குழந்தைக்கு
கதை முடிந்ததும்
நீதியைச்
சொல்ல ஆரம்பித்தேன்
தூக்க சுவாரஸ்யமோ
போதனையின் அசுவாரஸ்யமோ
உன் கதையை நீயே வைத்துக்கொள் போ
திரும்பிப் படுத்துக்கொண்டது
சொன்னபின்
யாருக்குச் சொந்தம் கதை?
சொன்ன கதையை
திரும்பிவாங்கிப்
புலனுக்குள் பூட்டக்
கதைசொல்லிக்கு
முடியுமோ?

-----------
சுஜாதா : "என் அனுபவத்தில் முடியாதுதான்! கதை சொன்னபின், அது உலகுக்கு சொந்தமாகி, ஸ்ட்ரக்சரிலஸ்டுகள் பந்தாடுவார்கள்."
-----

கதை எழுதுவதிலிருந்து பலரின் பின் வாங்கலுக்கு இதுவும் ஒரு காரணமோ?
----------
சுவாரசியமாக கதை சொல்வது ஒரு கலை. பலருக்கு அது இயற்கையாகவே வருகிறது. சிலர் மிகுந்த பிரயாசைப் படவேண்டியிருக்கிறது.

உங்களின் இது போன்ற குறிப்புகள் கதை எழுதுவதில் ஒரு புதிய அணுகுமுறையைக் கொடுக்கும்.

நன்றி.

இரா. வசந்த குமார். said...

அன்பு சரவணகுமரன், டக்ளஸ், தமிழ்ப்பறவை, அன்புடன் அருணா, ஆ.ஞானசேகரன், Karthik, மெனக்கெட்டு...

மிக்க நன்றிகள்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

Good one!

-priyamudan
sEral