Wednesday, September 16, 2009

ஓர் உரையாடல்.

ரையாடல் சிறுகதைப் போட்டியில் அறிவித்திருந்த நிபந்தனையின் காரணமாக ஒரு சிறுகதையை மற்றொரு வலைத்தளத்தில் பதிந்திருந்தேன். அதனை இங்கே இப்போது நகர்த்தி வைத்து விடுகிறேன். (உழக்கிற்குள் கிழக்கு மேற்கு..!!)


"ரொம்ப வலிக்குமா..?"

"நாட் தட் மச். ஒரே வலி தான். மொத்த வலியும் அந்த ஒத்த வலிதான். ஆனா, கால்கள் மட்டும் கொஞ்ச நேரம் துடிச்சிட்டு இருக்கும்.."

"கேட்கும் போதே பயமா இருக்கு. இதுல இருந்து தப்பிச்சுப் போயிட முடியாதானு இருக்கு..!"

"இம்பாஸிபிள். எங்க போனாலும் இது தான் உனக்கு. இது உன் விதி. மாற்ற முடியாது..! இருக்கும் இன்னும் கொஞ்ச நேரத்திற்கு உன் சந்தோஷக் கணங்கள் எதையாவது நினைத்துக் கொள்ளேன். பச்சைப் புல்வெளி, பாயும் அருவிநீர், விடியல் வெளி, காற்றில் அலையும் தாடி...! இப்படி எதையாவது. நான் சந்திப்பவர்களிடம் இப்படித் தான் சொல்வேன்.."

"ம்ம்..! அப்படி எனக்கு எதுவும் ஞாபகத்திற்கு வரலை. வந்தாலும், இந்த மரண பயம் ஒரு சல்லாத் துணி மாதிரி வந்து போர்த்திடுது..! ஒரு துக்கம் கவிந்த கடைசி நொடி இவ்வளவு பக்கத்திலன்னு நினைக்கும் போது முழுக்க சிலிர்ப்பா இருக்கு..!"

"அது எல்லார்க்கும் இருக்கு..! உனக்கு, எனக்கு, அந்த மரத்திற்கு, இந்த புழுவுக்கு, சூரியனுக்கு... எல்லார்க்கும்..! கால அளவுகள்ல தான் மாற்றம். எல்லோரும் ஒரே வேலையைத் தான் செய்றோம். பட், ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு செயல்கள் நீட்சியா இருக்கு. இந்த ஈசலைப் பாரு. மழை பேஞ்சா பிறக்குது. பறவோ பறன்னு பறக்குது. சில மணிகள்ல செத்துப் போய்டுது. அதே தான எல்லோரும் செய்றோம்...! உனக்கு ஒரு அனுமதிக்கப்பட்ட காலம். எனக்கு வேறு ஒன்று..! கடைசியில, அற்பமா காணாம போயிடறோம்..!"

"அது எல்லார்க்கும் இருந்தாலும், அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்ற வாய்ப்பு அவரவர்க்குத் தானே இருக்கணும்..? என் கடைசியை முடிவு செய்யும் அதிகாரம் இவனுக்கு எப்படி வந்தது..? யார் கொடுத்தது..?"

"சிலர் கடவுள்னு சொல்றாங்க. சிலர் இயற்கை. சிலர் எவால்யுஷன். எனக்கு என்ன தோணுதுன்னா, நத்திங். அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. உடல் முழுக்க எலெக்ட்ரிக் கரண்ட்கள் பொட்டுப் பொட்டா துடிச்சுக்கிட்டு ஓடிட்டு இருக்கு. அதெல்லாம் அதிர்ந்து போகற மாதிரி நிகழும் போது எல்லாம் முடிஞ்சிடுது. ஒரு ஸ்விட்ச் போடறாங்க; லைட் எரியுது; ஸ்விட்ச் அணைக்கறாங்க; லைட் அணைஞ்சிடுது; எங்கிருந்து ஒளி வந்திச்சு? எங்க ஒளி போச்சு? தெரியாது. இது என்ன வகையான ஸ்ட்ரக்சர்ல அமைக்கப்பட விதிகள்? தெரியாது. தெரிஞ்சுக்காம இருக்கறதுல தான் நமது மின்னல் துளி வாழ்க்கையோட இருப்பு இருக்குன்னு எனக்குத் தோணுது. ஒன்ஸ் தெரிஞ்சுக்கிட்டோம்னா, அந்த வாழ்க்கையே மறைஞ்சுடும்னு நினைக்கறேன். மனிதர்கள் முட்டி மோதித் தெரிஞ்சுக்கத் துடிக்கற கடைசி பூட்டு இந்த ரகசியமாத் தான் இருக்கணும். ஏதேதோ சாவி போட்டு முயற்சி பண்ணிக்கிட்டே இருக்காங்க. எப்பவாவது திறந்து பார்த்தாங்கன்னா என்ன இருக்கும்? வெறும் வெட்ட வெளி தான் இருக்குங்கறது என் அனுமானம்..."

"இவ்ளோ தத்துவங்கள் எனக்கு வேணாம். என்னை இன்னும் குழப்புது. நான் ரொம்ப எளிய ஆசாமி..! அந்த நொடிகள்ல என்ன நினைச்சுக்கலாம்? வலி குறைய. வலி மறைய. ஏதாவது சொல்லேன்."

"புரியுது. உன் வாழ்க்கையில் என்றும் நினைவில் வைத்துக் கொள்ள விரும்புகின்ற ஏதாவது ஒன்றை நினைத்துக் கொள்ளப் பார். உன் காதலிகள், கயிறு இறுக்கும் முடிச்சுகள், அம்மாவிடம் முட்டிப் பால் குடித்தது, சகோதரர்களுடன் சண்டைகள், இப்படி...!"

"நீ நிறைய பேரைப் பார்த்திருக்கியா..?"

"நிறைய..! வெகு நிறைய..! பல பேர் உன்னை மாதிரி தான் நடுங்குவாங்க.."

"நான் நடுங்கலை..!"

"பொய். உன் குரலே வேர்த்திருக்கு. கால்களைப் பார்க்கிறேன். இப்படியும் அப்படியுமா தடுமாறுது. பெரும்பாலும் இப்படித் தான். அவங்களைக் கொஞ்ச நேரம் இந்த மரணத்திற்காக காத்திருக்கும் துளி நொடிகள்ல சந்திச்சுப் பேசுவேன். ஆசுவாசப்படுத்துவேன். அப்படி ஒண்ணும் நடுங்கக் கூடிய அனுபவம் அல்ல. நாம் இல்லாம போற அந்த நொடி உங்க எல்லாருக்கும் அச்சுறுத்தல் தரக்கூடிய ஒண்ணா இருக்கு. வொய் நாட்? எனக்கும் அப்படித் தான் இருக்கும். தேங்க் காட், நான் மேடைக்கு இந்தப்புறம் இருக்கேன். என் வேஷம் வேற. உங்களிடமிருந்து மாறுபட்டது. எனக்கான முடிவு வேறு ஏதாவது வகையில் நிச்சயம் செய்யப்பட்டிருக்கும். எல்லோரும் அந்த முடிவுக் கணத்தை நோக்கித் தான் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.."

"இன்னும் எனக்கு முன்னாடி எத்தனை பேர் காத்திட்டு இருக்காங்க..?"

"அப்படி பிக்ஸ் பண்ணி சொல்ல முடியாது. ரேண்டம்னஸ் தான். அந்த எதிர்பாராத் தன்மை ஒரு வித நிச்சயமின்மையைச் சொல்லுது. மாறாக நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாக இருந்தால் நாம் அதற்காக காத்திருந்து எண்ணிக் கொண்டிருப்போம். நெருப்பு வேதனையா இருக்கும். சொல்லப் போனால், அந்த திடீர்த் தகவல் - 'நீ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாய்' - நம்மைத் தயார் செய்து கொள்ளக் கூட அவகாசம் தரப்படாத நிலை கொஞ்சம் நல்லது தான் என்றே எனக்குப் படுகின்றது. சட்டுனு எல்லாம் முடிஞ்சிடும்..."

"நான் பிறந்து எதுவும் சாதிச்ச மாதிரி தெரியல. நிறைய சகோதரர்களோட பிறந்தேன்; பாலுக்கு சண்டை போட்டேன்; ஒரு இடத்தில இல்லாம திரிஞ்சேன்; ஓடினேன்; வெயில அலைஞ்சேன்; கொட்டற மழைல ஒவ்வொரு முடியும் கம்பி மாதிரி சிலிர்த்துக்கிட்டு நிக்க, நனைஞ்சேன். தாடிகளை வளர்த்தேன்; ஜோடிகளைப் பிடிச்சேன்; ஒரே கொண்டாட்டம் தான்; இப்ப அத்தனையும் வெறும் நினைவுகளா, எனக்கு மட்டும் தெரிஞ்ச அனுபவங்களா என்னோடு மறைஞ்சு போகப் போகுது. நத்திங் ரிமைன்ஸ் ஃபார் எவர்...!"

"தட்ஸ் ட்ரூ..! ஆனா அந்த அனுபவங்கள்ல நீ திளைக்கும் போது, களைக்கும் போது உணர்வுகளின் உச்சத்தில இருந்த இல்ல...? எல்லா சந்தர்ப்பங்கள்லயும் நாம அந்த நேரத்து எலெக்ட்ரான்களின் பாய்ச்சல்கள்ல முழுமையா சிக்கிக் கொள்கிறோம். அப்புறமா நினைச்சுப்பார்த்தா சிரிப்பாக் கூட வரும்..."

"அப்ப, நான் அந்த கெமிக்கல் ஃப்ளூய்டுகளின் அடிமை தானா..?"

"அப்படி இல்ல. நான்னு தனியா எதுவும் இல்ல. நான், அப்படிங்கறதே அந்த கெமிக்கல்களும், அவற்றின் ந்யூரான் செய்திகளும் தான். நாம் தான் அவை; அவை தான் நாம்; இதுல அடிமைங்கறதெல்லாம் எங்க வந்திச்சு..?"

"அப்படின்னா இந்த வாழ்க்கையோட தாத்பரியம் தான் என்ன? நான் எதுக்காக இங்க வரணும்? ஏன் இப்படி வாழணும்? ஏன் என் விதி இப்படி ஒருவன் கைகள்ல முடியணும்..?"

"தேடறோம். எல்லோரும் இதைத் தான் தேடறோம். வி கேம் பேக் எகெய்ன் டு த கொஷன். ஏன் இதெல்லாம்..? தெரியாது."

"உயிர் போன பிறகு நான் எப்படி இருப்பேன். கொஞ்சம் சொல்லு.."

"வேணாம். ரொம்ப வருத்தப்படுவ.."

"பரவாயில்ல. ஐ வாண்ட் டு நோ தட். என்ன ஒரு வேடிக்கை பாரேன். எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டோம் அப்டின்னு ஆணவமா இருக்கோம். ஆனா, சிம்பிள்... மரணத்திற்குப் பின் நம்ம உடல், நம்ம கூடவே இருந்த உடல், இன்ஃபாக்ட் அது தான் நாமன்னு நினைச்சுக்கற உடல், எப்படி இருக்கும்னு கூட தெரியாத அப்பிராணிகளா இருக்கோம். வாட் எ ஸ்ட்ரேஞ் ரூல்ஸ் ஆல் திஸ்..?"

"தட்ஸ் த ஸ்ப்ரிட். நீ இதை ஒரு வேடிக்கையா எடுத்துக்கும் போது வலி உடல்ல மட்டும் தான் இருக்கும். உன் மனசுக்கு வராது. இதையும் நீ ஒரு எறும்பு கடிக்கற மாதிரி, எங்கயோ இடிச்சுகிட்ட மாதிரி எடுத்துக்கிட்டயினா இதுவும் ஒரு சம்பவமா கடந்து போயிடும். எனி ஹவ், நீ விரும்பற. நான் சொல்றேன். முடிந்தவுடன் குரல் வளைல காத்து சிவப்பு மொட்டுகளாய் 'கொப்ளக்..கொப்ளக்..'னு வெடிக்கும். கால்கள் மட்டும் உயிர் இருக்கோன்னு ஒரு வித சந்தேகத்துல அப்பப்போ துடிக்கும். காதுகள் விறைச்சுக்கிட்டு நிக்கும். தொடைகளுக்கிடையில் நெரிபடறதால் விரைகள் ரொம்ப கலங்கிப் போய்டும். முக்கியமா உன் வால்...!"

"வால்...? அதையும் சொல்லிடு..!"

"நத்திங். வால் விடைச்சுப் போய் நிக்கும். மெல்ல மெல்ல உன் உடல் ஒரு இறந்த கால உடலா மாறும் போது, தோல்கள் உறிக்கப்பட்டு, குடல் சுத்திகரிக்கப்பட்டு, ரத்தங்கள் சேகரிக்கப்பட்டு, ஒவ்வொரு துண்டாக நீ விற்பனையாகும் போது தனியான உன் தலையில் கண்கள் மட்டும் வெளிறிப் போய், எல்லாத்தையும் பார்த்துட்டு இருக்கற மாதிரி திறந்திருக்கும். சின்னக் கொம்புகள் மேல் ஈக்கள் சுத்தும்."

"ஓ..! என்ன ஒரு கோரம். பட், நான் இப்ப தயாரா இருக்கேன்."

"அவன் வர்றான். எல்லார்கிட்டயும் நான் ஒரு கடைசி கேள்வி கேப்பேன். உன்கிட்டயும் கேட்டுடறேன். உன் உடல்ல உனக்கு ரொம்ப பிடிச்ச பாகம் எது? முன்னங்கால்கள்? பின்னங்கால்கள்? ஈரல்? குடல்? ரத்தம்? எலும்புகள்...? தொடைகள்..?"

"எதுக்கு கேக்கற?"

"ஜஸ்ட் ஃபார் மை சேக். சொல்லேன்.."

"ம்...! என் ரத்தம் எனக்குப் பிடிக்கும். என் இரவுகள்ல அத்தனை சூடா பாயும் அந்த சிவப்பு வெள்ளம் எனக்கு ரொம்ப பிடிக்கும்..!"

"வெல். எனக்கு எதுக்குத் தேவைன்னா, உன்னை வெட்டும் போது நிறைய சதைத் துணுக்குகள் சுத்தியும் சிதறும். அதுல உனக்கு எது பிடிச்சிருக்குன்னு சொல்றியோ அதை மட்டும் அவனுக்குத் தெரியாம கவ்விட்டுப் போய் மண்ணைக் கிளறிப் புதைச்சிடுவேன். இது ஒரு மாதிரி உங்களுக்கு நான் செய்ற மரியாதைன்னு நினைச்சுக்கறேன். மத்த பார்ட்ஸை எல்லாம் சாப்பிடுவேன். அதை மட்டும் சாப்பிட மாட்டேன்."

"...."

"ஓ.கே. தேங்க்ஸ் ஃபார் எ நைஸ் கன்வர்ஸேஷன். பை. ஸீ யூ லேட்டர், சம்வேர். என்னைத் துரத்த கல்லை எடுக்கறான்.."

"ஓ.கே. பை. என்னை வெட்ட கத்தியோட வர்றான்.."

4 comments:

Karthik said...

பரிசுக்கதையை விட எனக்கு பிடிச்சது இதான். :)

இரா. வசந்த குமார். said...

dear karthik...

நன்றிகள்.

'மனையியல்' நன்றாகப் பிடிக்க, நீங்கள் கொஞ்சம் இளமையைக் கடந்திருக்க வேண்டும்..! :)

தமிழ்ப்பறவை said...

//'மனையியல்' நன்றாகப் பிடிக்க, நீங்கள் கொஞ்சம் இளமையைக் கடந்திருக்க வேண்டும்..! ://
அப்படியெல்லாம் இல்லை கார்த்தி.. சும்மா உதார் விடுறார்..
எனக்கு ‘மனையியல்’ பிடிச்சிருந்தது..அதுக்காக நான் ....?????

இரா. வசந்த குமார். said...

அன்ப் தமிழ்ப்பறவை...

Y...Y...Y...?

ஏன் இப்டி சின்னப் பையன்கிட்ட பொய் சொல்றீங்க...?