Monday, June 01, 2009

மனையியல்.

டெய்ஸி ராகவன் விடாமல் அழுதுகொண்டே வந்தாள்.

எர்ணாகுளம் எஸ்.எஃப் எக்ஸ்ப்ரஸ் ஓசூரின் மேடுகளில் இருந்து சமவெளிச் சரிவுகளில் பாய்ந்து கொண்டிருந்தது. ப்ரின்ஸி, குழந்தையை எடுத்து முதுகில் தட்டிக் கொடுத்தாள். தொலைவில் வட்டமாய்ச் சுழலும் மலைமுகடுகளை ஜன்னல் வழி விரல் நீட்டிக் காட்டி, "இல்லி நோடு.." என்றாள். "ஸீ! யூ ஷுட் நாட் க்ரை லைக் திஸ்!" என்று அச்சுறுத்தினாள். மொழிகள் புரியாத டெய்ஸி இன்னும் வீறிட்டாள். காய்ச்சலா என்று தொட்டுப் பார்த்தாள். நார்மல். வேறு என்ன காரணமாய் இருக்கும் என்று புரியவில்லை. முதல் குழந்தை. தாய் அனுபவ அறிமுகங்கள் இல்லை. திணறினாள்.

பிஸ்னஸ்லைன் எக்ஸ்க்ளூஸிவ் காலமில் ஆழ்ந்திருந்த என்னிடமிருந்து, க்ரூட் ஆயில் விலைச் சரிவு விவாதம் விலக்கப்பட்டு, குழந்தை திணிக்கப்பட்டது. "ராகவ்..! இட்ஸ் யுவர் சைல்ட் டூ. டேக் கேர்..!"

நானும் தட்டிக் கொடுத்தேன். பயன் இல்லை. "ஹனி! இப்படி எல்லாம் அழக் கூடாது. லுக்! எல்லாரும் பாக்கறாங்க பார்!" என்றேன். பேச்சுவார்த்தை படுதோல்வி. அவள் அழுகை தண்டவாளத் தடதடவுடன் ஒரு ரெசனன்ஸில் இல்லாமல், தனியாக ஒலித்தது.

சைட் பெர்த்தில் இருந்து கவனம் இடையூறப்பட்ட நவயுக இளைஞன், "ப்ச்..!" என்று ஓர் எரிச்சல் கலந்த முகச் சுளிப்பு செய்தான். பார் பையா..! நாளை உனக்கும் இந்நிலை வரும். அதிலும், காதல் மணம் செய்து கொண்டு, ஆரம்ப தேன் நிகழ்வுகள் கரைந்த பின் டயாஃபரும், செரலாக்ஸும் தூக்கிக் கொண்டு, பாப்பா பின் அலைந்து, முன்னிரவு, பின்னிரவு முறையில்லாமல் தூக்கங்கள் கலைந்து, களைத்து தந்தைமையில் திணறும் வரை, மெட்டாலிகா நனைக்க செவிகளில் ஐ-பாட் வால் செருகி, ஒற்றை ருத்ராட்ச சன்னக் கயிற்றுக் கழுத்தோடு, I am Stupid. Read Loud. அழுத்த வாசகங்கள் பதித்த சிவப்பு டி-ஷர்ட் கலைத்து, எம்.எம்.எஸ்ஸில் வரும் பதினைந்து செகண்ட் படங்களைப் பார்த்து...அனுபவி இளமையை!

"கொளந்தைய இப்படி கொஞ்சம் குடுங்க..!" என்று அந்த எதிர் பெர்த் அம்மா கைநீட்டினார். அப்போது தான் அவர்களை முழுமையாக கவனித்தேன். வயதானவர். பக்கத்தில் முழு சீருடையோடு ஓர் எக்ஸிக்யூடிவ் ஆசாமி. நடுவில் ஒரு சிறு பெண். அந்த அம்மா மடியில் தலை வைத்திருந்தாள். மேல் பெர்த்தில் ஒரு பருமனான ஆள் நெளிந்து கொண்டிருந்தார். அவை எவ்வளவு எடையை அதிகம் தாங்கும் என்ற எப்போதுமான சந்தேகம் இப்போதைக்குமானது.

"நீங்க இத்தன சின்னக் குழந்தையை பிடிக்கற முறையே தப்பு. சின்னப் புள்ளைங்க தானே. கத்துக்குவீங்க..!" என்றார். புது வெப்பம், புது ஸ்பரிசம் உணர்ந்த டெய்ஸி அவரை உற்றுப் பார்த்தாள். அவர் அவளைக் கொஞ்சம் உதறி, ஆடைகளை நீக்கிப் பார்க்க, ஒரு சிற்றெறும்பு தொடையில் கடித்து, செத்துப் போயிருந்தது. தள்ளி விட்டு தேய்த்து விட அழுகை குறைய ஆரம்பித்தது.

காலை ரயிலேறிக்
கல்கத்தா போயிறங்கி
கடைக்குக் கடைபார்த்து
கல்லிழைத்தச் சங்கெடுத்துச்
சுத்திச் சிகப்பிழைத்துத்
தூருக்கே பச்சைவைத்து
வாய்க்கு வயிரம் வைத்து
வாங்கி வந்தார் தாய்மாமன்!
கண்ணே உறங்கு!
கண்மணியே உறங்கு!

பூ போல் மடியில் அவளைக் கிடத்தி, மென் வயிற்றில் தட்டிக் கொண்டே பாடினார்.

"ட்லி..பூரி..!"

பின்னால் இருந்து குரல் வந்து ஒவ்வொரு வரிசையாகத் தாவியது. என்னால் வாங்க முடியாது. ப்ரின்ஸி திட்டுவாள். 'அதெல்லாம் சுத்தமாய் இருக்காது. உனக்கு ஒத்துக்காது. ஆசையாய்க் காரமாய்த் தின்று விட்டு, இரண்டு நாட்கள் லீவ் போட்டு, படுத்துக் கொள்வாய். கூட என்னையும் படுத்துக் கொள்ளச் சொல்வாய்..!' என்று பொய்யாய்ச் சலிப்பாள். இந்தப் பயணத்திற்காகவும், நேற்றே தயார் செய்து வைத்திருந்த தட்டை இட்லிகளும், வெல்ல வாசம் வீசும் இனிப்புச் சாம்பாரும், மினரல் பாட்டில்களில் தமிழ் பூசாத காவிரியும் எங்களுடன் வருகின்றன.

அவளைப் பார்த்தேன். எதிர்பார்த்தது போல் அவளும் பார்த்து, "வாங்கினாயோ, அப்புறம் பார்..!" என்று விரலால் செல்லமாய் மிரட்டினாள்.

நெற்றிச் சுருக்கங்களோடு வியர்வையில் கலைந்த திருநீற்றுப் பட்டைகள். முதலிரண்டு பட்டன்கள் களவாடப்பட்டிருந்த கட்டங்கள் பதிந்த அரைக்கை கசங்கிய சட்டை. 'விண்..விண்'ணென்று தெறிக்கும் அழுத்தமான நரம்புகள் கிளைத்திருக்கும் குச்சிக் கைகள். கூன் விழுந்த முதுகோடு, குனிந்து வந்தவரின் வயதை எஸ்டிமேட் செய்வது கடினம்.

எனக்குள் பரிதாப உணர்ச்சி எழுந்தது. அவசியம் எனப்படுவதாக இல்லாவிட்டாலும், ரெண்டு பாக்கெட்டுகள் வாங்கலாமா என்று யோசித்தேன். என் போன்ற மனைவிக் கட்டுப்பாடுகள் தற்போதைக்கு இல்லாத எதிர்சீட் எக்ஸிக்யூட்டிவ் ஒரு பாக்கெட் கேட்க, ப்ளாஸ்டிக் நார்ப்பையைப் பிரித்து, வெள்ளைப் பாவு ஒல்லி நூலால் கட்டியிருந்த பாக்கெட்டைக் கொடுத்து விட்டு, என்னைப் பார்த்தார். ஏதும் சொல்லாமல், உள் நகர்ந்தார்.

எக்ஸிக்யூட்டிவ் 'இன்று லாரி ஸ்ட்ரைக்' மேல் பாலிதீன் பேப்பர் பிரிக்க, ரப்பர் பேண்ட் இறுக்கிய கழுத்தின் கீழ் சாம்பார் வயிற்றுக் குப்பிப் பாக்கெட்டுடன், மேனி மேல் கலந்திருந்த சட்னிக் கட்டிகளோடு, சிவப்பாக இட்லிப் பொடி பரவி, ஒரு 'கப..கப..' வாசம் காற்றில் மிதந்தது.

Yogi B அண்ணன் போல் இருந்த ஒருவன், எங்களைக் கடந்து சென்று, அவரிடம் பாக்கெட்டுகள் வாங்கி வந்து, எங்களை எதிர்த் திசையில் தாண்டும் போது, "இன்னிக்கு இருந்தா எங்கப்பா இவர் மாதிரி தான் இருந்திருப்பார் சார்..!" என்று சொல்லிக் கடந்தான்.

திடுக்கென ஒரு நினப்பு வந்தது. இளமையின் இனிமைகளில் தோய்ந்திருக்கும் போது கால வாய்க்கால் பாத்தி கட்டிய நெற்றி விரிசல்கள் எச்சரிக்கும் முதுமை நினைப்பு பயமுறுத்தியது. அதையும் மீறி, ஒரு கேள்வி.

'இவருக்கு இந்த வயதில் ஏன் இந்த நிலை?'

டிக்கட்டுகளில் வந்து நின்று கொண்டு பேய்க் காற்றைச் சுவாசிக்க, அவர் குனிந்தபடியே வந்தார். வாசல் ஒட்டிய சுவரில் ஒட்டி உட்கார்ந்தார். அவர் கழுத்தோரங்கள் ஈரமாய்க் கசங்கியிருந்தன. கையில் பையில் இருந்து கதர்த்துண்டால் துடைத்துக் கொண்டார். நானும் அங்கேயே அமர்ந்தேன். ஏதாவது பேச வேண்டும், கேட்க வேண்டும் என்று தோன்றியும், 'விர்..விர்'ரென்று அடித்த காற்றைத் தவிரவும், ட்ராக் மாற்றும் 'தடக்' தவிரவும் எங்களுக்கிடையில் பூரண மெளனம் இருந்தது.

"சேலத்துக்கா போறீங்க..?" அவராகவே கேட்டார்.

"ம்..!" தலையாட்டினேன்.

"அங்க பழனிச்சாமின்னு என் பையன் இருப்பான். பாத்தீங்கனா நான் கேட்டதா சொல்றீங்களா..?"

எனக்கு குழப்பமாயிற்று. அவ்வளவு பெரிய நகரில்... எந்தப் பழனிச்சாமியை.. எப்படி...

"சரிங்க. சொல்றேங்க..! உங்க உறவா..?"

"ஆமா..! மூத்த பையன். அடுத்தது ஒரு பொண்ணு பொறந்திச்சு. தேமொளின்னு பேரு. வீரபாண்டில தான் கட்டிக் குடுத்திருக்கு..!"

"ஓ..! உங்க பையன் கூட நீங்க இல்லீங்களா..?" யார், எவரென்றே தெரியாத ஒருவரிடம் தன் தோள் பாரங்களைப் பரிமாறும் அவரைப் பிடித்திருந்தது.

"இல்லப்பா..! என்ன சேத்துக்க மாட்டேனுட்டான்..! அவனுக்கு நான் பண்ண ஒரு காரியம் புடிக்கல..! இனிமே என்ன பாக்க வராதன்னு சொல்லிப்போட்டான். பேரன் பேத்தியக் கூட ஊருக்கு அனுப்ப மாட்டேனுட்டான். என்ற ஊரு சீலநாய்க்கன்பட்டி. வந்திருக்கீங்களா..?"

"இல்லீங்க..!" எனக்கு அவர் என்ன காரியம் செய்தார் என்பதில் ஒரு சுவாரஸ்யம் வந்திருந்தது.

சட்டைப் பாக்கெட்டில் இருந்து ஒரு போட்டோ எடுத்துக் காண்பித்தார். பழைய கறுப்பு-வெள்ளைப் படம். போலராய்டு ஜாதி. கால்களை மடித்துப் போட்டு பூ போட்ட ஸாரி, 'பஜ்' வைத்த ஜாக்கெட், ஒற்றைச் சங்கிலி, நிறைய மல்லிகைப்பூ, மை கண்கள், வலது கன்ன அடிவார மச்சம், கைகளில் ஒரு சூர்யகாந்தியைச் சுழற்றிச் கொண்டிருக்கும் போது ஒரு பார்க்கில் எடுக்கப்பட்டிருக்க வேண்டிய படம்.

"யாருங்க இவங்க..? உங்க சம்சாரமா..?"

"இல்லீங்க...காதலி..!" என்றார்.

ர்மபுரி தாண்டிக் கொண்டிருந்தது. மலைகளில் வெய்யில் சரசரவென இறங்கும் போது, கூடு திரும்பும் பறவைகள் சப்தம் ப்ராட் கேஜ் ரயிலை விட எக்கச்சக்கமாய் எழும்பியது. தூர தூர ஊர்களில் பல்புகள் புள்ளிகளாய்க் கடந்தன. காற்றில் கொஞ்சம் கொஞ்சமாய்க் குளிர் குறைந்து மெல்லிய ஒரு சோகம் போல் இறக்கும் நாளின் கடைசி சூடுகள் பரவுவதை உணர முடிந்தது.

"காதலியா..?" சுத்தமான அதிர்ச்சி.

"ஏங்க.. நம்ப முடியலீங்களா..? என்னோட காதலிகூட நான் இப்ப வாழ்றது புடிக்காம தான் பையன் பேசறதே இல்ல. ஊர்ல எல்லாம் சிரிக்கறாங்கப்பாம்பான். கட்டைல போற வயசுக்கு கெளவனுக்கு கட்டிக்க பொம்பள கேக்குது பாருன்னு ஊருக்குள்ள அவன் காதுபடவே பேசுறதக் கேட்டிருக்கான். வந்து கத்துனான் ஒரு நாளு! 'சரிப்பா, என்னால உன் வீட்டு கவுரதைக்கு கொறச்சல் வேணாம்னு' நான் இவ கூட தனியா வந்துட்டேன், ஓமலூர் பக்கத்துல! பொண்ணு மட்டும் அப்பப்ப வந்து இருக்கனா, போய்ட்டனான்னுட்டு பாத்துட்டுப் போவும்..."

"இருந்தாலும் பெரியவரே, நீங்க பண்ணினது எனக்கே கொஞ்சம் ஒருமாதிரியா தான் இருக்குங்க. தப்பா நெனச்சுக்காதீங்க. உங்க பையன் சத்தம் போட்டது சரிதான்னு எனக்கு படுதுங்க..!" எனக்கு இதற்குப் பின் ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று தோன்றியது.

"தம்பி..! என்னோட பையன் படிக்காதவங்க. நீங்க படிச்சவங்க. அவனுக்குப் புரியாது. உங்களுக்குப் புரியும். யாருகிட்டயும் சொன்னதில்லைங்க. உங்களுக்கு மட்டும் சொல்றேன்.

நீங்க போட்டோல பாத்தீங்கள்ல, அவ பேரு மாலதி. நான் பி.யூ.ஸி. படிச்சப்ப காதலிச்ச பொண்ணுங்க. அப்படியே தேவத மாதிரி இருப்பா. இந்த போட்டோ கூட மலம்புழா டேமுக்கு டூர் போனப்போ அவளுக்கே தெரியாம சிநேகிதன வுட்டு எடுத்தது. இத ராவெல்லாம் தலகாணி உறைக்குள்ள மறைச்சு வெச்சுக்கிட்டு என்னென்னவோ கற்பன பண்ணிக்கிட்டு இருப்பேன். அவ்ளோ ஆச வெச்சிருந்தும் அவகிட்ட சொல்றதுக்கு தெகிரியம் மட்டும் வரவேயில்ல. அப்புறம் அவளுக்கும் எனக்கும் கல்யாணம் நடந்துச்சு, தனித்தனியா! நானும் தினசரி கவலைகள்லயும், ப்ரச்னைகள்லயும் அவளை மறந்து, வாழ்க்கையை ஓட்டினேன். அவளும் கோயமுத்தூர்ல பகுமானமா தான் வாள்றான்னு கேள்விப்பட்டேன்.

தம்பி..! காலம் இருக்கே, அத சும்மா சொல்லக் கூடாது. யாரை எங்க, எப்படி ஆக்கணும்னு அது ஒரு கணக்கு வெச்சிருக்கு. மனுசப் பயலுக்கு அது தெரியாம, அத தெரிஞ்சுக்க ஒவ்வொருத்தனும் பறக்கறோம். மறுக்கா அவள எங்க பாத்தேன் தெரியுமா..? திருப்பூர் டேசன்ல. புருசனும் இல்லாம, ரெண்டு பசங்களும் வந்தவ பேச்சக் கேட்டு இவள தொரத்திட்டாங்க.

நான் கூட்டிட்டு வந்தேன் தம்பி. என் பொண்டாட்டியும் ஆஸ்துமால இல்லாம போக... ஊர்ப்பய நாக்குக்கு தேன் தடவுன மாரி ஆச்சு. சொளட்டி சொளட்டி எங்கதையச் சப்பிச் சாப்டாங்க..!

நாம நேசிச்ச பொண்ணு இன்னிக்கு காப்பாத்த துணையில்லாம, ஒரு வேள சாப்பாட்டுக்கு வழியில்லாம இருக்கான்னு தெரிஞ்சப்புறமும் நாம இந்த ஊருக்கும், சமூகத்துக்கும் பயந்து ஒரு போலி மரியாதையோட வாழணுமான்னு யோசிச்சேன். அப்படி இருந்தா ஒரு காலத்துல அவ மேல வெச்சிருந்த அப்பழுக்கில்லாத காதலுக்கு என்ன அர்த்தமின்னு நெனச்சுப் பார்த்தேன். அவள, அவ விருப்பத்தோட கூட்டிட்டு வந்தேன். அதுனால என் சம்சாரம் மேல நான் வெச்ச பாசமோ, அவ சாகற முட்டும் வாழ்ந்த வாழ்க்கையோ பொய்யின்னு போகல.

பையன், உன்ன வெச்சுக் காப்பாத்தறதே பெருசு, இதுல இன்னொண்ணானு கேட்டான். அவன் நல்லவன் தான். ஆனா ஊர்ல எல்லாரும் இப்படி பேசறாங்களேன்னு உள்ளுக்குள்ள கோபம். 'போடா, உங்கப்பன் உசுரு இருக்கற வரைக்கும் ஒழச்சு வாழுவான்'ன்னு கெளம்பி வந்துட்டேன். இப்ப அவ இட்லி, பூரி சுட்டுத்தர நானும் இந்த மாதிரி ரயில்ல வித்துட்டு சம்பாதிச்சு பொழைக்கறோம். வயசாச்சு. கூன் போட்டிருச்சு. கஷ்டம் தான். ஆனா நாம கஷ்டப்படறது நாம அன்பு வெச்சிருக்கற, நம்ம மேல அன்பு வெச்சிருக்கற ஒரு ஜீவனுக்காகத் தான்னு நெனச்சுப் பண்ணும் போது, கஷ்டமெல்லாம் தெரியாதுப்பா..! நான் வர்றேன்..! அடுத்த ஸ்டேஷன்ல இறங்கி, ஒரு டாக்டர பாக்க வேண்டியிருக்கு..! அவளுக்காகத் தான்...!"

மறக்காமல் அவரது காதலி புகைப்படத்தை வாங்கி கொஞ்ச நேரம் பார்த்தார். அவர் கண்கள் மினுமினுத்தன. சட்டைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.

நீண்ட ஹாரன் சத்தம் எல்லா கம்பார்ட்மெண்ட்டையும் தடவிச் சென்றது. எக்ஸ்ப்ரஸ் மெல்லத் தள்ளாடித் தடுமாறி நின்றது. துண்டை கழுத்தில் சுருட்டிக் கொண்டு, காலியான பையை கைக்குள் அடக்கிக் கொண்டு, ஒவ்வொரு படிக்கட்டாய் இறங்கிக் காணாமல் போனார்.

ன் சீட்டில் வந்து அமர்ந்தேன். டெய்ஸி எதிர் சீட் அம்மா மடியிலேயே தூங்கிப் போயிருக்க, அவர் எங்கோ தொலைவில் பார்த்துக் கொண்டிருந்தார். ப்ரின்ஸி ஒருமாதிரி ஜன்னலோடு ஒட்டிக் கொண்டு, 'சேஸிங் தி மான்சூனை' ஐந்தாவது சேப்டரில் சென்னையில் சந்தித்துக் கொண்டிருந்தாள்.

'ப்ரின்ஸி..!!'

'ம்...!' புத்தகத்தில் இருந்து கண் விலக்கவில்லை.

'கேன் ஐ டூ ஒன் திங்...?'

'வாட்..?'

சட்டென்று நெருங்கி, அப்படியே இறுக்கி அணைத்து, வலது கன்னத்தில் அழுத்தி உதடு பதித்து, காதில், 'ஐ லவ் யூ புஜ்ஜிக்குட்டி' என்று கிசுகிசுக்க, எதிர் சீட் அம்மா சிரிக்க, டை கட்டிய எக்ஸிக்யூடிவ் அவுட்லுக்கால் எங்களைத் தவிர்க்க, மேல் பெர்த் ஆசாமி குறட்டை கலைந்து திரும்பிப் படுக்க, ப்ரின்ஸி விநோதமாய் லேசான மருண்ட பார்வை பார்த்தாள்.

***

உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பின் சிறுகதைப் போட்டிக்காக எழுதியது.

41 comments:

thamizhparavai said...

வாழ்த்துக்கள் வசந்த்...
பிரியத்தை அழகுடன் உணரவைத்து விட்டீர்கள்..கூட்டவும் தேவையில்லை, குறைக்கவும் தேவையில்லை. அழகான சிறுகதை..

ஆயில்யன் said...

//நாம நேசிச்ச பொண்ணு இன்னிக்கு காப்பாத்த துணையில்லாம, ஒரு வேள சாப்பாட்டுக்கு வழியில்லாம இருக்கான்னு தெரிஞ்சப்புறமும் நாம இந்த ஊருக்கும், சமூகத்துக்கும் பயந்து ஒரு போலி மரியாதையோட வாழணுமான்னு யோசிச்சேன். அப்படி இருந்தா ஒரு காலத்துல அவ மேல வெச்சிருந்த அப்பழுக்கில்லாத காதலுக்கு என்ன அர்த்தமின்னு நெனச்சுப் பார்த்தேன். அவள, அவ விருப்பத்தோட கூட்டிடு வந்தேன். அதுனால என் சம்சாரம் மேல நான் வெச்ச பாசமோ, அவ சாகற முட்டும் வாழ்ந்த வாழ்க்கையோ பொய்யின்னு போகல.//

ரயில் நிகழ்வுகள் & வயதான விற்பனையாளர் வரும் காட்சிகளை நான் சென்ற ஒரு ரயில் பயணத்திலும்,மணப்பாறையில் நான் கண்ட காட்சிகளோடு பொருத்தி,பார்த்து படித்துக்கொண்டே வந்த எனக்கு இவ்வரிகளில் மனம் சற்று உணர்ச்சி வசப்பட்டது முடிவில் கண்கள் பனித்திருந்த நிலையில்...!

வாழ்த்துக்கள் வசந்த குமார் போட்டியில் வெற்றிப்பெற...!

:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துக்கள் வசந்த குமார் அழகான சிறுகதை..

வெண்பூ said...

முற்றிலும் வித்தியாசமான தளம், அழகான விவரணைகள், நல்ல கரு.. அருமை வசந்த்..

வெற்றி பெற வாழ்த்துகள்

மெனக்கெட்டு said...

மனையியல்?

மிகுநத் அனுபவசாலி போல் எப்பிடிங்க இப்படியெல்லாம் எழுத முடியுது? (profile ல் age - 27 என்று காட்டுகிறதே?)

(மேலும் உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று (உங்கள் பதிவில்) சொன்னதாக ஞாபகம்!)

மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள்!

வெற்றி பெற வாழ்த்துக்கள்!

Thamiz Priyan said...

நல்லா ரசிச்சு எழுதி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்!

யோசிப்பவர் said...

ஃபோன்ல சொல்றேன்!;-)

கிருஷ்ணா said...

வசந்தகுமார்

இதுதாங்க காதல்

நான் உணர்ந்த காதலும் இதுதான்.

ஆனால் உலகம் காதலுக்கும் காமத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் உண்மையான காதலர்களை நகையாடிக் கொண்டிருக்கிறது.

வாழ்த்துக்கள்

வெட்டிப்பயல் said...

அழகான கவிதை :)

வாழ்த்துகள் வசந்தகுமார். நிச்சயம் வெற்றி பெரும் கதை :)

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

நன்றிகள்.

***

அன்பு ஆயில்யன்...

நன்றிகள். கொஞ்சம் எமோஷனாலாகவே கதை ஆகியிருக்கிறது என்று நினைக்கிறேன். உங்களுக்கு மென்மையான மனம் என்று தெரிந்து விட்டது. :) இந்தக் கதை பிறந்த கதையை போட்டி முடிந்த பின் எழுதலாம் என்றிருக்கின்றேன். அப்போது தெளிவாக விளக்கப்படும்.

***

அன்பு T.V.Radhakrishnan...

நன்றிகள் சார்.

***

அன்பு வெண்பூ...

நன்றிகள். சயின்ஸ் பிக்ஷன் இல்லாம எழுதணும்னு வித்தியாசமா எழுதிட்டோமே..!! :) உங்களிடமிருந்தும் இந்தப் போட்டிக்கு வெரைட்டி எதிர்பார்க்கிறேன்.

***

அன்பு மெனக்கெட்டு...

டேங்ஸுப்பா..!

மெய்யாலுமே நான் ஒரிஜினல் பேச்சிலர்ப்பா..! அட, இன்னா நீ நம்ப மாட்ட போல கீதே...! ப்ராமிஸா ஏஜூ 27 தாம்பா ஆறது..! பின்ன எப்டி இப்டி எழுத முடியுதுன்னா, இன்னா சொல்றது..? அதான் சுத்தி முத்தியும் நடக்கற கதயெல்லாம் பாத்துகினு தான் கீறோம். அப்பால அந்தக் கதைங்களத் தான் நாம இஸ்டோரியா எழுதறோம்..! சப்போஸு மேரேஜ் ஆனாக் கண்டி இந்த மேரி ஃபீலிங்ஸு எல்லாம் வராம டபாய்ச்சிக்கினு போய்டுமோ இன்னாவோ..? கண்ணாலம் கட்டிகின பெர்சுங்கோ தான் சொல்லோணும்..!

இன்னாபா கரீட்டா..? :)

***

அன்பு தமிழ் பிரியன்...

நன்றிகள்.

***

அன்பு யோசிப்பவர்...

சரிங்க, போன்லயே திட்டறேங்கறீங்க..! நடத்துங்க..! நடத்துங்க..!!

***

அன்பு கிருஷ்ணா...

நன்றிகள். உடம்பு காலியான பிறகு மனதுக்கு பிடித்ததை மட்டும் செய்யும் போது யாருக்காக கவலைப்பட வேண்டும்..? சந்தோஷம் தாங்க முக்கியம் (வாத்தியார் சொன்னது தான்..!). :)

***

அன்பு வெட்டிஜி...

என்னது கவிதையா..? அவ்வ்வ்...! சும்மா சொன்னேன். பாராட்டிற்கு ரொம்ப நன்றிங்க..! வெற்றி 'பெரும்' கதைன்னே வாழ்த்தியிருக்கீங்களே.! ரொம்ப நீளமா போய்டுச்சுங்கறதை சூசகமா சொல்லியிருக்கீங்களே..!!

நாமக்கல் சிபி said...

கதை அருமையா வந்திருக்கு வசந்த்!

வாழ்த்துக்கள்!

நேசத்தை அழகாக வரிகளாக்கி இருக்கிறீர்கள்!

நாமக்கல் சிபி said...

//இந்தக் கதை பிறந்த கதையை போட்டி முடிந்த பின் எழுதலாம் என்றிருக்கின்றேன்.//

இந்தக் கதைக்குப் பின்னால் இன்னொரு கதை வேற இருக்கா! கலக்குங்க!

MADCOVI said...

konjam varnanaigal adhigam endralum kadhai romba nalla irukku...unmayil unnai nanraga therindha enakke aachchariyama irukku un ezhuthukkal...wish you to get the prize.

Karthik said...

நான் தான் சொன்னேனே சூப்பர்பா இருக்குன்னு. வாழ்த்துக்கள்! :)

இரா. வசந்த குமார். said...

அன்பு நாமக்கல் சிபி...

கேட்டுக் கொண்டதற்கிணங்கி கதையை சிரமம் பாராது படித்து, கருத்துச் சொல்லி வாழ்த்தியமைக்கு நன்றிகள் சார்...!

***

அன்பு MADCOVI...

Thanks 4 de wishes..!! Actually I cant recognize u..! hoo is dis...? nalla theriyumnu vera solliirukkeenga..!! thalaiyaip pichukkaren..!!!

***

அன்பு Karthik...

தேங்ஸுபா..! நீ சொன்னப்றம் முதல் மகிழ்ச்சியாக இருந்தது..!

கோபிநாத் said...

அருமையான பயணம்...ரயில் போகும் போது வீசும் காற்றை கூட உணர முடிந்தது.

நீங்க வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் படிச்சியிருக்கிங்களா! அதுல கூட இப்படி ஒரு பெரியவர் வருவாரு ;)

உங்க எழுத்துநடைக்கு ஒரு ஸ்பெசல் வாழ்த்து ;)

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;)

இரா. வசந்த குமார். said...

அன்பு கோபிநாத்...

நன்றிகள்ங்க. ஒவ்வொரு வரிக்கும் கண்ணடிச்சு சிரிக்கிறீங்க...! சந்தோஷமா இருக்குங்க..!

கள்ளிக்காட்டு இதிகாசத்துல வர்ற 'பேயத்தேவரை' மறக்க முடியுங்களா..?

ஆறு பொங்கி ஊருக்குள்ள பாயும் போது, போறதுக்கு முன்னாடி ஆட்டுக்குட்டிகளப் பத்தி நெனச்சு அழுவாரே, அப்பெல்லாம் கண்ணுல தண்ணி பொலபொலன்னு வந்திருச்சுங்க..! விகடன்ல படிக்கும் போது..!!

எங்க ஊரு பக்கமும் மேட்டூர் டேம் கட்டும் போது மூழ்கிப்போன கிராமங்கள் நெனப்பெல்லாம் வந்திரும். இப்ப கூட தண்ணி வத்தும் போது ஒரு சிவன் கோயில் எட்டிப் பார்க்குமே, நியூஸ்ல பாத்திருக்கீங்களா..?

கோயிலில்லாத ஊருல குடியிருக்காதீஙகன்னு சொல்லியிருக்காங்க.! இங்க கோயில் இருக்கு தண்ணிக்குள்ள..! ஊரு இல்லையே..!!!

anujanya said...

நல்லா இருக்கு வசந்த். உங்க நடை பத்தி முன்பே தெரிந்தது தான். அசத்தல்!

எவ்வளவு முயன்றாலும் வாத்தியார் எழுத்தில் வருகிறார் :)

போட்டியில் பரிசு வெல்ல வாழ்த்துகள்.

அனுஜன்யா

இரா. வசந்த குமார். said...

அன்பு அனுஜன்யா...

மிக்க நன்றிகள். வாத்தியார் வருகையைத் தவிர்ப்பது இப்போதைக்குச் சாத்தியம் என்று தோன்றவில்லை. :)

Thamira said...

நல்ல வாசிக்கத்தூண்டும் தேர்ந்த நடை. இனிமையான இறுதிபாகம் அழகு. வெற்றிக்கான வாழ்த்துகள் வசந்தகுமார்.!

இரா. வசந்த குமார். said...

அன்பு ஆதி (அ) x.தாமிரா...

நன்றிகள்.

விநாயக முருகன் said...

வாழ்த்துகள் வசந்தகுமார்.!
அழகான சிறுகதை..

இரா. வசந்த குமார். said...

அன்பு என்.விநாயகமுருகன்...

நன்றிகள்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நல்ல சிறுகதை! தெளிவான கதையோடு, நல்ல ஓட்டமும் அமைந்திருக்கிறது. சொல்லியிருக்கும் கருத்தும், கதையைக் கொண்டு போகும் விதமும் அருமை; நேர்த்தியானதும் கூட. வெற்றி பெற வாழ்த்துகள்.

இரண்டு இடங்களில் ஆங்கில வார்த்தைகள் மட்டும் நெருடின. ரெஸனன்ஸ், எஸ்டிமேட் :)

-ப்ரியமுடன்
சேரல்

இரா. வசந்த குமார். said...

அன்பு சேரல்...

மிக்க நன்றிகள். ஆங்கில வார்த்தைகள் இல்லாமல் எழுதுவது எப்போதும் சாத்தியமான ஒன்றாகத் தெரியவில்லை.

'கண்ணன் என் காதலன்' பதிவுகளில் ஆங்கில வார்த்தைகள் இருக்காது. :)

அகரம் அமுதா said...

அழகான கதை அமைப்பு. காட்சிக்குக் காட்சிக் கண்முன் நடப்பது போன்ற உணர்வு. உணர்வைக் கதாப்பாத்திரத்தின்முலமாக அழாகாக வெளிப்படுத்துகிறீர்கள். வெற்றிபெற வாழ்த்துக்கள்.

இரா. வசந்த குமார். said...

அன்பு அகரம் அமுதா...

நன்றிகள்.

வெண்பூ said...

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்
வசந்த்... மீ த பஷ்டூ????

நான் படித்தவைகளில் டாப் 10 கதைகளில் உங்களுடையதும் ஒன்று, அதனால் உங்கள் வெற்றி எனக்கு ஆச்சர்யம் இல்லை :)))

ரெஜோ said...

வாழ்த்துகள் நண்பரே ! :-)

RV said...

உரையாடல் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!

Karthik said...

சென்னைக்கு 100 கிலோ மீட்டர் தொலைவுக்குள் வந்தால் கூட தெரியப்படுத்தவும். :))

யாத்ரா said...

மிகவும் ரசித்தேன், அருமையான கதை.

வாழ்த்துகள்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

வெற்றிக்கு வாழ்த்துகள் நண்பரே!

வெற்றி பெறும் என நான் நினைத்திருந்த வெகு சில கதைகளில் ஒன்று உங்களுடையது. அது பொய்க்கவில்லை.

-ப்ரியமுடன்
சேரல்

ஆயில்யன் said...

//நன்றிகள். கொஞ்சம் எமோஷனாலாகவே கதை ஆகியிருக்கிறது என்று நினைக்கிறேன். உங்களுக்கு மென்மையான மனம் என்று தெரிந்து விட்டது. :) இந்தக் கதை பிறந்த கதையை போட்டி முடிந்த பின் எழுதலாம் என்றிருக்கின்றேன். அப்போது தெளிவாக விளக்கப்படும்.//

எப்ப ரீலிசு ?

:)

இரவுப்பறவை said...

கதை அருமை,
வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!

இரா. வசந்த குமார். said...

அன்பு வெண்பூ...

எல்லார் பதிவிலும் முதல் குத்து குத்திட்டு வந்திட்டீங்க போல..! ரொம்ப நன்றிகள்ங்க. ஆனாலும் வாத்தியார் ஸ்டைல்ல கடைசி லைன்ல ட்விஸ்ட்ட போட்டுட்டீங்களே..! :)

***

அன்பு ரெஜோ...

மிக்க நன்றிகள். தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

***

அன்பு ஆர்.வி...

நன்றிகள். உங்களுக்கும் என் வாழ்த்துக்கள். எப்படியோ, நான் சுவாரஸ்ய பதிவர் விருது கொடுத்தது தப்பா போகல..! :)

***

அன்பு கார்த்திக்...

மாட்டேன். கல்லூரி வாசலுக்கு வந்தப்புறம் தான் தெரியப்படுத்துவேன். உங்க ட்ரீட் ஒண்ணு பாக்கி இருக்கே..! அத குடுக்கத் தானே பாசமா கூப்பிடறீங்க..!!!:)

***

அன்பு யாத்ரா...

மிக்க நன்றிகள்.

***

அன்பு சேரல்...

நன்றிகள். கவிஞர் வாழ்த்து கட்டாயம் பலிக்கும். உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

***

அன்பு ஆயில்யன்...

நன்றிகள். என்னங்க, சொன்ன மாதிரியே கதைகள் வந்த கதையை எழுதிட்டேங்க. நாமெல்லாம் தலைவர் மாதிரி...! சொல்றத தான் செய்வோம் & vice versa..!! :)

***

அன்பு இரவுப்பறவை...

மிக்க நன்றிகள்..!

பாலகுமார் said...

மிக அழகான கதை .. :) வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் !

நானும், திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷன்ல இதே மாதிரி ஒரு பெரியவர் இட்லி விக்கிறதை பார்த்திருக்கேன்... அவர்கிட்ட கூட இதே மாதிரி வேற ஒரு நெகிழ்விக்கும் கதை இருந்திருக்கும்...

இரா. வசந்த குமார். said...

அன்பு பாலகுமார்...

நன்றிகள்.

இந்த கண்ணியைத் தொடருங்கள். அங்கே இந்த கதை வந்த கதை சொல்லப்பட்டிருக்கின்றது. :) நீங்கள் சந்தித்த அதே தாத்தாவாகவும் இருக்கலாம்..! :)

பாலகுமார் said...

அன்பு வசந்த்,
அட, நான் பார்த்த பெரியவர், உங்க கதை நாயகன் தான் போல...

//'இவருக்கு ஏன் இந்த வயதில் இந்த நிலைமை?'//

என்னையும் உறுத்திக் கொண்டிருந்தது இந்த கேள்வி, அந்த பெரியவரின் மனவோட்டத்தை படித்ததும் (கற்பனையானாலும்...) ,கொஞ்சம் நிம்மதியா இருக்கு... மீண்டும் வாழ்த்துக்கள் !

"உழவன்" "Uzhavan" said...

பரிசு பெற்றமைக்கு என் இனிய வாழ்த்துக்கள் :-)

இரா. வசந்த குமார். said...

அன்பு பாலகுமார்...

நன்றிகள்.

***

அன்பு உழவன்...

நன்றிகள்.