என் உடைமைகள் அனைத்தும் க்ரஷ் செய்யப்படுகின்றன.
அதிகமில்லை, இந்த சிட்டி கவுன்ஸில் அனுமதிக்கும் அளவிற்கு மேல் ஒரு தனி மனிதன் வைத்துக் கொள்வது இயலாத காரியம். நகரம் முழுதும், தெருக்களில் எங்கும், வீடுகளின் அத்தனை அறைகளிலும் ஃபைபர் நரம்புகளின் பேட்டரிக் கண்கள் எங்களைத் துரத்திக் கொண்டேயிருக்கும்.
என்னிடமும் அத்தனை பொருட்கள் இல்லை. சில மெமரி ஸ்டிக்குகள், ஒரு படுக்கை, பூமி நினைவாகச் சில புத்தகங்கள் (ஆர்க்கியாலஜி சொஸைட்டியிடம் இவற்றுக்கு இன்றைய மதிப்பு அரை லிட்டர் சூடான நீர்!), ஒரு மேகத் தலையணை மற்றும் இப்போது நான் அமர்ந்திருக்கும் லேசர் சுழலி.
எனக்கு நேற்றோடு இருநூற்றைந்து வயதாகின்றது. ஜி.௭.8.1.45ல் வாழ்ந்தது போதும் என்றாகி விட்டது. இதன் வசதிகள், வளமைகள், காற்றில் மிதக்கும் களிப்புகள், இங்கு கொஞ்சிய சிமுலேட்டட் கன்னிகள் அத்தனையும் அலுத்துப் போய் விட்டன. பூமிக்குத் திருபி விடலாமா என்று சில நாட்களாக தோன்றிக் கொண்டேயிருந்தது. மனித உரிமைக் குழுவிற்கு விண்ணப்பித்ததில், இன்று அனுப்பி வைக்கிறார்கள்.
"இன்னும் ஏழு நிலா மணிகளில் நான் ரிப்போர்ட் செய்தாக வேண்டும். இந்த வயதில் பூமிக்குப் போக வேண்டும் என்று என்ன அடம்..!" என் உத்தம புத்திரன் மகி தான்.
ப்ளேனட்டின் ஸிந்தட்டிக் வெயில் ஜெனரேட்டரின் க்ரூப் வைஸ் ஹெட். பிறக்கும் போதே, இவன் இதற்குத் தான் என்று வகைப்படுத்தப்பட்டு, அதற்கான டெக்னிக்கல் தகவல்கள் ஸிரப்புகளாகத் தரப்பட்டு... எதற்கு உங்களுக்கு டெக்னிக்கல் ஜார்கன்கள்..? அவன் அதற்கானவன்.
"பாவம் மாமாவுக்கு என்ன ஆசையோ..! கொஞ்ச காலம் போய்ட்டுத் தான் வரட்டுமே..!" என்றாள் என் மருமகள் நிசி. அவளுக்கு என் மேல் எப்போதும் கொஞ்சம் பிரியம் அதிகம். என் மகனுக்காக என் நண்பனின் மகளான இவளைத் தேர்ந்தெடுத்தது நான் தானே!
நான் அமைதியாகவே இருந்தேன். சுழலியை நகர்த்தி, வெளியே வந்து பார்த்தேன். வானம் அதிக வெண்மையாக இருந்தது. இன்று நிறைய ஐஸ் கட்டிகள் நிரம்பியிருந்தன. எங்கேயோ ஓர் எரிமலை இருமுவதை லேசான வெம்மைக் காற்று (வென்றல்!) வீசிச் சொல்லியது. இன்னும் ஐந்து பூமிநொடிகள் தான் இருக்கின்றன. என்னைக் கூட்டிச் செல்லும் வாகனம் வந்து விடும். ஒரு சிறப்பு ஆப்ஷனாக எம்.ஆர்.1432 கேட்டிருந்தேன். காரணம், அது எனக்குப் பிடித்தது. என் மகன் பிறந்த போதும், கவுன்ஸிலுக்கு அதுவே கூட்டிச் சென்றது.
என் இரட்டைப் பேரன்கள் மிது1, மிது2 இருவரும் வி.ஆர். விளையாட்டுகளில் கிலோபைட் எதிரிகளாகி, வெட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு என்னைக் கவனிக்க நேரமில்லை. நானும் அப்படித் தானே இருந்தேன். பூமியிலிருந்து இந்த துணைக் கிரகத்தில் காலனி அமைப்பதற்காகக் கிளம்பும் போது, அப்பா அழுதார். இதன் செல்வங்கள், அற்புத வாழ்க்கைக்கான வாய்ப்புகள் அவரை மறைத்தன.
எம்.ஆர். 1432 வந்து விட்டது. நான் என் சொத்துகளோடு பின்புறம் ஏறிக் கொண்டேன். மகன் முன்புறம் அமர்ந்து கொண்டான். மையக் கட்டுப்பாட்டு அறை மூலம் இயக்கப்படும் இந்த வாகனத்தில் இருவரும் அமர்ந்து கொள்ள, கிளம்பி விட்டது. ஒரே ஓர் ஐஸ்கட்டி பக்கத்தில் விழுந்தது.
ஜன்னல்கள் வழியாகப் பார்த்துக் கொண்டே வந்தேன். காலம் தான் எத்தனை வேகமாக மாறிக் கொண்டே வருகின்றது..! முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் இங்கு முதன் முறையாக வந்த போது, கே.ஓ. 187, ரி.ஜெ.65-டி, போ.ஜி.09௩எ அத்தனையும் பனிக் காடுகள். முழுக்க முழுக்க பனிப் போர்வையால் மூடப்பட்டிருந்தன.
"எஸ் நிரு..! நீங்கள் வரும் போது அப்படித் தான் இருந்தன. இன்று நீங்கள் பார்ப்பது நமது தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு சிறு கூறு! இவற்றைச் சூழ்ந்திருந்த பனிப்பாளங்கள் உடைக்கப்பட்டு, செயற்கை வெயில் ரிஸீவர் ஆண்டெனாக்கள் நடப்பட்டு, நமது கிரகத்திலிருந்து வெப்பக் கற்றைகள் ட்ரான்ஸ்மிட் செய்யப்பட்டு... அத்தனை 'பட்டு'க்களின் பயனாக இப்போது சில கரப்பன்பூச்சிகளைச் சில பல்லிகளைச் சோதனைக்காகப் பூமிலிருந்து கொண்டு வந்திருக்கிறோம். அவற்றால் வாழ முடிகின்றதா என்ற சோதனைக்காக..!" புன்னகைத்தது ஸ்பீக்கர்.
என் எண்ணங்கள் உடனடியாகச் சோதனை செய்யப்பட்டு, ஆச்சரியங்களுக்கான விடை உடனடியாக எனக்குத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தனை கிரகங்களிலும் ஒளித்தூறல்கள்..! எத்தனை வர்ணங்கள்..! எத்தனை குதூகலங்கள்..! பால்வீதி முழுதும் விழாக் கொண்டாட்டங்கள். எத்தனை ஜ்வலிப்பு..! எத்தனை பிரகாசம்..!சில நட்சத்திரங்கள் சாகின்றன; சில பிறக்கின்றன; சில வெள்ளைக் குள்ளர்களாகி அழுகின்றன; சில சிவப்பு ராட்சதர்களாகிப் பயமுறுத்துகின்றன.
சலார்...புலார் என்று வாகனங்கள் இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் பயணப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. ஆங்காங்கே காந்தப் புலக் கட்டுப்பாடுகளுக்காக ஆட்டோமேட்டிக் திசை திருப்பான்கள் திருப்பி விடுகின்றன. ஐ.ஆர். சாலைகள் நேர்க்கோட்டில் போடப்பட்டுள்ளதால், கிரகங்களுக்குத் திரும்பாமல், நேராகச் செல்ல முடிகின்றது. ஜி.ஈ. (ஜி டு எர்த் வரை) நெடுஞ்சாலை வழுக்கிக் கொண்டு செல்கின்றது. அதில் தான் சென்று கொண்டிருந்தோம்.
"பயணிகளின் கனிவான கவனத்திற்கு..! சாலையில் தற்போது ஒரு கருந்துளை புதிதாக ஏற்பட்டுள்ளதால், இருபத்தேழு ஒளி ஆண்டுகள் தூரத்திற்கு வளைந்து செல்ல வேண்டியுள்ளது..! தயாராக இருக்கவும்..! நன்றி..!" ஸ்பீக்கர் கரகரப்பின் பின் எனக்கு ஆர்வமாக இருந்தது.
நான் இதுவரை கருந்துளைகளைப் பார்த்தில்லை. மகி காது நோண்டிக் கொண்டிருந்தான்.
"மகி..! நீ ப்ளாக்ஹோல்ஸ் பார்த்திருக்கியா..?"
"பல தடவை..! என் பயணங்களில் பலமுறை அவற்றைக் கடந்து போயிருக்கிறேன்..!"
"அதுல என்ன இருக்கும்..?"
"இதுவரை தெரியல..! நாம நிறைய வளர்ந்திருக்கோம். பல கிரகங்களை ஆக்குபை பண்ணி, அங்கே எல்லாம் சுக வாழ்விற்கு ஏற்ற மாதிரி வடிவமைக்கிறோம்..! பட், இன்னும் ப்ளாக்ஹோல் பத்தி ஒண்ணுமே தெரிஞ்சுக்க முடியல..! வர வர நாங்களும் அதைப் பற்றி ஒண்ணும் கண்டுக்கறதில்லை. நம்மைத் தொந்தரவு பண்ணாம அதுபாட்டுக்கு ஒரு மூலையில இருந்தாச் சரின்னு விட்டாச்சு..!"
நான் சிரித்துக் கொண்டேன்.
"கருந்துளை அருகில்..! மாற்றுப் பாதையில் செல்லவும்..!" லேஸர் போர்டு மிதந்து திசை காட்டியது.
சாலை அங்கே கொஞ்சம் வளைந்து, சுற்றிச் சென்றது. கருப்பாய்த் தெரிந்தது. ஒரு பெரும் கறுப்பு வட்டம். அது ஒரு குழியாய் இருக்குமா, சமதளமா ஒன்றும் தெரியவில்லை.
திடீரென நெஞ்சு வலி போல் உணர்ந்தேன். குப்பென்று வியர்த்து விட்டது. கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. "பயணி எண் 2 இறந்து கொண்டிருக்கி..." அவ்வளவுதான் என்னால் கேட்க முடிந்தது. அப்படியே சரிந்தேன். மகி ஏதோ கத்த, என் அருகின் ஜன்னல் விலகி விட, அப்படியே கருந்துளைக்கு மேல் விழுந்தேன்.
விழித்த போது இருட்டாய் இருந்தது. சுத்தமான கறுப்பு. கொஞ்சம் தொலைவில் ஓர் ஒளிப்புள்ளி தெரிந்தது. அதை நோக்கி நடந்தேன். மிதப்பது போல் இருந்தது. அருகில் செல்லும் போது, அந்த ஒளி ஃபோட்டான்களை ஒரு கை பிடித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. தொட்டி மீன்கள் போல் அந்த ஒளித் துகள்கள் அந்தக் கைகளுக்குள் நீந்திக் கொண்டிருந்தன. யாருடைய கை என்று தெரியவில்லை.
"நான் எங்கே இருக்கிறேன்..?" கேட்டேன்.
மிக மென்மையான குரல் அங்கிருந்து வந்தது.
"relax..!
We are programmed to receive.
You can checkout any time you like,
But you can never leave!"
மெல்ல அந்த ஒளிகளை கை விசிறியடிக்க, அந்தப் பிரதேசம் தெரிய, அவன் தெரிந்தான். தலையில் கொம்புள்ள க்ரீடமும், பெரிய மீசையும் தெரிய அவன் புன்னகைத்த போது, எங்கோ எண்ணெய் கொதிக்கின்ற வாசம் வந்தது.
***
(சர்வேசன் 'நச்' சிறுகதைப் போட்டி - 2009க்கு எழுதியது.)
ஆங்கிலம் நன்றி :: Hotel California - Eagles.
6 comments:
இப்ப படிக்க நேரமில்லை. நாளைக்குள் படித்து விடுகிறேன். இப்போதைக்கு ப்ரெஸெண்ட் போட்டுக்கறேன்!!;-)
நல்லாருக்கு...
மற்றபடி ப்ளாக் ஹோல் பத்தித் தெரியாது. அதுதான் நரகமா...?
அப்ப சொர்க்கம் ‘ஒயிட் ஹோலா’
நேற்றே முடிவு படிச்ச போதே கதை புரிந்து விட்டாலும், இன்றுதான் முழுமையாகப் படித்தேன். AWESOME!!
வலைச்சரம் பாருங்கள்.நீங்களும் இருக்கிறீர்கள் இன்று.
சூப்பர்.
நல்லாருக்குஙக
- நேசமித்ரன்
Post a Comment