நேற்று நடந்த ஈரோடு தமிழ்ப் பதிவர்கள் சங்கமத்தில் பேசிய
பேச்சு. முழுக்க முழுக்க இங்கு இருப்பது போல் பேசவில்லை. எனினும் நிறைய இதில் இருப்பவை தாம்.
கதையெழுதி.
இது ஓர் அழகிய இனிய மாலை.
தமிழின் பெயரால் இணையத்தில் எழுதும், வாசிக்கும் சிலர் இங்கே குளிர் சிதறும் அரங்கத்தில் குழுமியிருக்கிறோம். எனக்கு முன்னால், பக்கத்தில், பின்னால் அமர்ந்திருக்கும் உங்களில் பலர் வலைத்தளங்களில், வலைப்பூக்களில் அழகாக, ஆழமாக, இயல்பாக, ஈரமாக எழுதுபவர்கள். உங்களுக்கு 'கதையெழுதுதலைப்' பற்றிச் சொல்வதற்கு எனக்கு தயக்கம் இருக்கிறது. ஆயினும் ஈரோட்டிலிருந்து கிளம்பிய வலைப்பதிவர்களில் ஒருவன் என்ற சிறு சலுகையைப் பய்ன்படுத்தி, என் மீச்சிறு அனுபவங்களைப் பகிர்வதில் உவப்புறுகிறேன்.
கதையெழுதுவதில் பல வகைகள். கவிதை, சிறுகதை, குறுநாவல், நாவல் என. இங்கே சிறுகதை என்பதை மட்டும் பேச விரும்புகிறேன். அது மேற்சொன்ன வரிசையில் கவிதைக்கும், குறுநாவலுக்கும் இடையே கொஞ்சம் சொகுசாக அமர்ந்திருக்கின்றது. என் அனுபவத்தில், சிறுகதை என்பது ஒரு குறிப்பிட்ட உணர்வை வாசகர்களுக்கு ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டு வரிசையாகக் கோர்க்கப்படும் சம்பவங்களின் சீரான தொகுப்பு.
கவிதை என்பது நேரடியாக இதுதான் என்று சுருக்கமாகச் சொல்லிவிடுவது. நாவலில் மெதுவாக வாசகரைத் தயார்படுத்திக் கூட்டிச் சென்று முடிவில் ஆழ்த்தலாம். சிறுகதை இரண்டுக்கும் இடையில். நிறைய சமயம் இல்லை, அதற்கு! ஆரம்பத்திலேயே படிப்பவரைக் கவ்விச் சென்று,கடைசியில் தொப்பென்று போட்டு விட வேண்டும். எனவே பெரும்பாலான சிறுகதை எழுத்தாளர்கள் 'ஆரம்ப வரியிலேயே கதையைத் துவக்கி விடு' என்கிறார்கள்.
சிறுகதைக்கான கருவை எங்கிருந்து பெறுவது? எங்கிருந்தும்! ஒருமுறை திருவனந்தபுரத்தில் இருந்து மதுரைக்கு அனந்தபுரி எக்ஸ்ப்ரஸில் சென்றேன். நெல்லை தாண்டி மாலை ஆறு இருக்கும். மணியாச்சி என்று நினைக்கிறேன். அங்கே நின்ற போது ஒரு கிழவர் ஏறினார். தலை முழுக்க வெள்ளி நார்; உடல் முழுக்கச் சுருக்கங்கள். காதுகளில் முடி. சட்டையைச் சுருட்டி விட்டிருந்தார். பழுப்பேறிய வேட்டி. இவர் போன்ற கிழவர்களை, நாம் அவ்வப்போதைய எப்போதாவதுகளில் சந்திக்கிறோம். இவர் கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தார். அவர் கைகளில் ஒரு நார்ப்பை இருந்தது. அதில் இட்லி, பூரிப் பொட்டலங்கள் இருந்தன. ஒவ்வொருவராய்க் கேட்டுக் கொண்டே வந்தார். அவர் கைகள் நடுங்கிக் கொண்டேயிருந்தன.
அவரைக் கவனித்த போது, மனதில் ஒரே ஒரு கேள்வி ஒலிக்கத் தொடங்கியது. 'இந்த வயதில் இவருக்கு ஏன் இந்த நிலைமை?' அவரைக் கேட்கவில்லை. அந்தக் கேள்வி வைக்கோல் போருக்குள் ஒளிந்து கொண்ட மின்மினியைப் போல் எங்கோ உள்ளுக்குள் மின்னிக் கொண்டே இருந்தது.
உரையாடல் அமைப்பினர் சிறுகதைப் போட்டி நடத்திய போது, அந்தக் கிழவர் மேலே எழும்பி வந்தார். அவர் கண்களில் இருந்த வெறுமையை என்னால் மறக்க முடியவில்லை.
'இவருக்கு இந்த வயதில் ஏன் இந்த நிலைமை?' என்ற கேள்விக்கு நானாகவே ஒரு பதிலைத் தேடினேன். இத்தனை வருட வாழ்க்கையில் ஒரு விடையை உருவாக்க முடிந்தது.
மணியாச்சிக் கிழவரை பெங்களூருக்கு மாற்றினேன்; அனந்தபுரி எக்ஸ்ப்ரஸ், சேலம் மெயில் ஆனது. மதுரைக்குச் செல்லும் தனியான மென்பொருளன் நான், கன்னடக் கிறித்துவப் பெண்ணைக் காதல் செய்து, மணம் செய்து, 'டெய்ஸி' என்ற ஒரு வயதுக் குழந்தை பெற்று, கொஞ்சம் சலிப்பு ஏற்படத் துவங்கிய இளம் தகப்பன் 'ராகவன்' ஆனேன்.
இத்தகைய ஸ்தல, கால, பொருள் மாற்றங்கள் அவசியத் தேவை என்கிறார்கள். இல்லாவிடில் வக்கில் நோட்டீஸ் போன்ற உபத்திரவங்கள் வரலாம் என்று பயமுறுத்துகிறார்கள். அந்தக் கதை சிறப்பாக வந்தது; பரிசும் கிடைத்தது.
கதை எழுதுவதில் மற்றோர் அல்ப சந்தோஷம், கூடு விட்டுக் கூடு பாய்தல். இந்த குறுகிய வாழ்க்கையில் நம் எல்லைகள் தீர்மானிக்கப்பட்டு விட்டன. உதாரணமாக இனி என்னால் என் ஏழாம் வகுப்புக்குச் சென்று தெற்றுப்பல் இருந்த ஒரு சக மாணவனைப் 'பல்லன்' என்று கேலி செய்து நட்பைத் தொலைத்ததை அழிக்க முடியாது. ஆனால் ஒரு கதையில் அவனாக மாறி என்னை நானே அவனாய் மன்னித்துக் கொள்ள முடியும்.
ஓர் எலியாக மாறி பூனைத் தொந்தரவுகளை எழுத முடியும்; எலிகளுக்கும் பெருச்சாளிகளுக்குமான வர்க்கப் போராட்டங்களைச் சொல்ல முடியும்; ஒரு போலிசாக, ஒரு விவசாயியாக, பாத்திரத்திற்குப் பெயர் பொறிப்பவராக, ஒரு ஜி.எம்.மின் செகரெட்டரியாக, ஆறு வயதுப் பெண்ணாக மாறி மாறிச் சிந்திக்கும்மனம் பெறும் மகிழ்ச்சியிலேயே எழுதுவதன் நோக்கம் எழுதுபவனுக்கு நிறைவேறி விடுகின்றது.
வார்த்தைகள் முக்கியமா? ஆம். நாம் உபயோகப்படுத்தும் வார்த்தைகளே நாம் இலக்காக வைத்திருக்கும் இறுதி உணர்ச்சிக்கு வாசகரைத் தயார் செய்யும் மந்திரங்கள்.
விஜய் டி.வி.யில் விவேக் கவிஞர் வைரமுத்து போல் பேசிக் காட்டுகிறார். பாட்டி வடை சுட்ட கதை தான். 'ஒரே ஒரு ஊரில்'என்று ப்ரியதர்ஷினி படிக்க, விவேக், 'புழுதி படிந்த ஒரு கிராமத்தில்' என்கிறார். இந்த இரண்டு துவக்கங்களும் நம் மன உணர்வில் ஏற்படுத்தும் வித்தியாசங்கள் சில. அதுவே 'சூரியக் கதிர் வெளிச்சமாய் எழும்பி வந்தது; பச்சை மரங்கள் உற்சாகமாய்த் தலையாட்டின; சின்னச் சின்ன அழகிய பறவைகள் கீச்சு கீச்சென்று கத்திக் கொண்டே இங்குமங்கும் உல்லாசமாகத் திரிந்தன; அந்த வளமான கிராமத்தில்...'என்று
ஆரம்பிக்கும் போது அது எழுப்பும் மனநிலையைச் சிந்தியுங்கள்.
எனவே ஒரு கதை எழுதும் நாம் பயன்படுத்தும் வார்த்தைகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.
சுஜாதா 'ஓரிரு எண்ணங்கள்' என்ற கட்டுரைத் தொகுப்பில் கதை எழுதுவதைப் பற்றி மற்றும் சில எழுத்தாளர்களின் கூற்றுக்களைச் சொல்லி இருக்கிறார்.அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிட்டால் நம் எல்லோர்க்கும் உதவும் என்பதால்!
ஹெல்மட் பாந்கைம் என்பவர் 689 நல்ல சிறுகதைகளைப் படித்து,'நல்ல சிறுகதை' என்பதற்குச் சில அடையாளங்களைச் சொல்கிறார்.
1. என்ன சொல்லப்பட்டது என்பது எப்படி சொல்லப்பட்டது என்பதை விட முக்கியம்.
2. சிறுகதை என்பது முடிவுக்கு மிக அருகில் துவங்கும் பெரிய கதை.
3. நல்ல கதையில் எழுதுபவரின் நினைவாற்றலின் நுட்பம் இருந்தே தீரும்.
4. 85 விழுக்காடு கதைகள் பார்த்த, கேட்ட, உணர்ந்த, படித்த அனுபவத்தைச் சார்ந்ததாக உள்ளது.
5. நல்ல சிறுகதை எழுத்தாளர்கள் நிறையப் படித்திருக்கிறார்கள்.
6. எல்லாக் கதைகளும் கொஞ்சம் அவசரமும், கொஞ்சம் உணர்ச்சி ஊற்றும் கலந்து எழுதப்பட்டவை.
மற்றும் சில வாக்கியங்கள்.
பெரும்பாலான கதைகள் ஒரு பேசப்பட்ட வாக்கியத்தில் முடிகின்றன. வாழ்க்கையின் அபத்தத்தைச் சுட்டிக்காட்டி ஒரு கேள்விக்குறியில் முடிகின்றன. சிறுகதை ஒரு தனிப்பட்ட சுருக்கமான அனுபவத்தைப் பேசுகிறது.
என் தனிப்பட்ட அனுபவத்தில் சிறுகதை எழுத ஆர்வமுள்ளவர்கள், வெண்பா இலக்கணம் படிப்பது மிக உதவிகரமாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.
வெண்பா, யாப்பின் அத்தனை சிக்கலான விதிகளுக்குள், அதன் எதுகை, மோனை, முதலடி முதலாம் மற்றும் மூன்றாம் சீர்கள், குறில் நெடில் கூட்டணிகள் போன்ற கட்டுப்பாடுகளுக்குள் ஒரு நல்ல வெண்பா எழுத முயல்வது, ஒரு சிறுகதையின் வடிவம் பற்றிய ஒரு பிரக்ஞை, ஒரு கவனம் தரும் என்பது தெரிய வருகின்றது.
எழுதிய ஒரு வெண்பாவைச் சொல்கிறேன்.
குரங்குதான் முன்னோர் குறிப்பிட்டார் டார்வின்
அரங்கை நிறைத்தது கைதட்டல் - அடங்கியபின்
எல்லாம் அறிவேன் எழுந்துஒருவர் சொல்லியது
இல்லாளால் முன்பே யான்!
இந்த வெண்பாவில் ஒரு காட்சி சொல்லப்படுகிறது. நான்கு வரிகளுக்குள் ஓர் அரங்கம், ஒரு விஞ்ஞானி, அவரது புரட்சிக் கருத்து, அனானி ஒருவரின் வாழ்க்கை.இத்தனையும்.
இப்படி எழுதி எழுதிப் பயிற்சி பெற்ற மனம், சிறுகதையிலும் அந்தச் சுருங்கச் சொல்லி விரித்துப் பொருள் கூறும் வித்தையைக் கைக் கொள்வது எளிதாகிறது.
மற்றோர் ஆசிரியப்பா.
பாரதி கவனமாய்ப் பாஞ்சாலி சபதத்தில்
சாரதி உடைநல்கும் செய்யுளைச் செதுக்குகையில்
செல்லம்மாள் சமையலறை இருட்டுள்
மெல்லமாய்ச் சொன்னார், "மதியத்திற்கு அரிசியில்லை!"
இதிலும் மகாகவியின் வாழ்வின் ஒரு காட்சி இருக்கிறது.
எனவே நம் கவனத்தைப் பாதிக்கின்ற, கவர்கின்ற சம்பவங்களைக் கூர்ந்து நோக்குவதன் மூலம் நம் மனம் நிகழ விரும்புகின்ற முடிவைச் சிறுகதையாகத் தொகுத்துக் கொள்ளமுடியும் என்று நம்புகிறேன்.
முடிப்பதற்கு முன்பாக,நேற்று நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்ல விரும்புகிறேன். வீட்டில் இணையம் இல்லை. எழுதியாக வேண்டிய வேலை ஒன்று இருந்தது. எனவே இணைய மையம் சென்று விட்டு, அது முதல் மாடியில் இருந்தது. கீழே வந்து சைக்கிளை எடுக்கும் போது தான் கவனித்தேன். தரைத்தளத்தில் நிறைய கடைகள் இருந்தன. மோட்டர் கடை, டி.வி. ஷோரூம், சலூன், போட்டோ ஸ்டுடியோ, பேன்ஸி ஷாப். அந்த ஷாப்பில் இரண்டு கூண்டு எஸ்.டி.டி பூத்கள் இருந்தன. வாசலில் ஓர் ஒரு ரூபாய் காயின் தொலைபேசிப் பெட்டி. ஷாப்பின் இன்சார்ஜ் ஒரு பதினைந்து வயதுப் பெண். நான் சைக்கிளை எடுக்கும் போது, ஒரு மனநிலை சரியில்லாதவர் நடந்து வந்தார். இளம் வயது தான் இருக்க வேண்டும். அந்த ஷாப்பை நோக்கிச் சிரித்துக் கொண்டே போனார். அந்த பெண் பயந்து போட்டோ ஸ்டுடியோவுக்கு ஓடி, அங்கிருந்த ஒருவரை, "அண்ணா... பைத்தியம் வருது..!
தொரத்துங்ணா..!" என்றாள். அவர் எதுவும் சொல்வதற்குள், அவர் 'ஃபோன்....ஃபோன்....' என்று சொல்லிக் கொண்டே மஞ்சள் டெலிபோனை நெருங்கி விட்டார். அந்தப் பெண் தைரியம் பெற்று, "ஃபோன் ஒர்க் பண்ணலை..' என்று கத்தினாள். அவர் அதைப் பொருட்படுத்தாமல், சிரித்துக் கொண்டே, ரிஸீவரை எடுத்து, ஏதோ எண்களை அழுத்தி, "ஹலோ..!" என்றார்.
அவர் யாருக்கு கால் செய்திருப்பார் என்ற கேள்வியில் ஒரு சிறுகதை இருக்கின்றது.
நன்றி.
15 comments:
அருமை!
அருமையான 'க்ளாஸ்'. நேர்ல கேட்க மிஸ் பண்ணிட்டேன்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
அருமை நண்பரே..
ரொம்ப நல்லா இருக்கு. :)
வீடியோ கிடைக்கும்ல?
//சிறுகதை ஒரு தனிப்பட்ட சுருக்கமான அனுபவத்தைப் பேசுகிறது.
இவ்வளவுதானா? சிறுகதைக்குள் பல வித்தைகள் செய்றாங்களே, தல?
கலக்கல்...
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் ஸ்டோரி(கடைசிப் பாராவில் சொன்னது)
அருமை வசந்த்..
நேரில் என்னால் சரியாக கவனிக்க முடியவில்லை
அருமை. அருமை. அருமை. அடி பின்னி நகத்திட்டீங்க சகா. திருப்பி ஒருதரம் படிச்சுக்கறேன் பாடத்தை.
அருமைங்க.
-வித்யா
அருமை
அன்பு சென்ஷி...
நன்றிகள்.
***
அன்பு பைத்தியக்காரன்ஜி...
ஹைய்யா...! நீங்களே பாராட்டிச் சொல்லியிருக்கிறீர்களே..!!! மகிழ்வாய் இருக்கின்றது. நன்றிகள் ஐயா..!!
***
அன்பு தண்டோரா...
நன்றிகள் ஐயா..!!
***
அன்பு கார்த்திக்...
நன்றிகள்.வீடியோ யூட்யூபில் ஏற்றப்படும் என்று தகவல்.
/*
இவ்வளவுதானா? சிறுகதைக்குள் பல வித்தைகள் செய்றாங்களே, தல?*/
இந்த உரையில் சிறுகதை பற்றி 'எனக்குத் தெரிந்த அளவில்' அறிமுகம் செய்ய விழைந்திருக்கிறேன். நுட்பங்களை நான் முதலில் கற்று விட்டுப் பிறகுச் சொல்கிறேன்..!:)
***
அன்பு தமிழ்ப்பறவை...
நன்றிகள். கடசிப் பாரா கரு எல்லோருக்கும் பொதுவாகச் சொல்லி விட்ட படியால், இனிமேல் எழுதுவது சரியாக வராது. நீங்கள் முயலுங்களேன்..!!
***
அன்பு கதிர்...
நன்றிகள். நேரில் என்னாலும் சரியாக கவனிக்க முடியவில்லை. எப்போ ஸார் வீடியோ வரும்..??? :)
***
அன்பு விதூஷ்...
நன்றிங்க..! மறுக்கா ஒருக்கா நன்றிங்க..!!
***
அன்பு திகழ்...
மிக்க நன்றிகள். வெண்பாக்கள் எல்லாம் தொடர்ந்து எழுதுகிறீர்களா..??
சிறுகதை பற்றிய ஒரு சிறப்பான பார்வையை உங்களிடம் காண முடிந்தது. நிகழ்வுகளில் கவனம் போனதால் உங்களோடு அதிகம் பேச முடியவில்லை. சிறப்பான பணிக்கு வாழ்த்துக்கள்
ரொம்ப அழகா பேசியிருக்கீங்க, எழுதியுமிருக்கிறீர்கள். உண்மைதான். வாழ்த்துக்கள்.
அன்பு ஆரூரன்...
நன்றிகள்.
***
அன்பு உமா...
நன்றிகள்.
அட வசந்தா இது? அருமை அருமை ! வேற ஒண்ணும் சொல்லமுடியவில்லை!
அன்பு ஷைலஜா அக்கா...
நன்றிகள். :)
Post a Comment