" நான் கொஞ்சம் புகை பிடிக்க விரும்புகிறேன். எனக்கு ஒரு சிகரெட் கிடைக்குமா..?" என்று நிமிர்ந்து பார்த்து கேட்டான் ஜெர்ரி.
அறையில் கனமான அமைதி நிலவியது. தூய வெண்மையான அறை. இரும்பு நாற்காலிகளில் எதிர் எதிராய், அமர்ந்திருந்தனர் ஜெர்ரியும், வில்லியம்ஸும். பெர்னாண்ட் கதவின் அருகில் கைகளைக் கட்டி நின்று கொண்டிருந்தார்.
வில்லியம்ஸ் திரும்பிப் பார்த்தார். பெர்னாண்ட் தன் கோட் பாக்கெட்டில் இருந்து, மார்ல்பரோ சிகரெட் எடுத்துப் பற்ற வைத்துக் கொடுத்தார். ஜெர்ரி அதை வாங்கி நன்றாக இரண்டு முறை இழுத்தான். நுரையீரல் வரை சென்று நிரம்பியதன் நிறைவைக் கண்கள் மூடி, அவன் அனுபவித்ததை இருவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மெல்ல கண் திறந்து பார்த்தான்.
"இப்போது கேளுங்கள்.." என்றான்.
வில்லியம்ஸ் மேசை மேல் இருந்த புகைபடத்தை அவன் பக்கம் தள்ளினார்.
"மிஸ்டர் ஜெர்ரி! இந்தப் புகைப்படத்தில் இருக்கும் பெண்ணை உங்களுக்கு நினைவிருக்கிறதா..?" கேட்டார் வில்லியம்ஸ்.
ஜெர்ரி அந்தப் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தான். ஒரு இளம்பெண் சிரித்துக் கொண்டிருந்தாள். கல்லூரிப் பெண் போல் இருந்தாள். பொன்னிற முடி காற்றில் அலைபாய, சிகப்பு நிற சட்டை அணிந்திருந்தாள். பொதுவில் வசீகரமான முகத்தோற்றம்.
"ம்..! இவள் என்னுடன் கல்லூரியில் படித்தவள்."
"பெயர்..?"
"ரோசி..!"
" நல்லது. இவளைப் பற்றிய தகவல்கள் எங்களுக்கு வேண்டும். இவள் கல்லூரியில் உங்களுடன் தான் நெருக்கமான பழக்கம் என்று விசாரணையில் அறிந்தோம். தற்போது இவள் எங்கே இருக்கிறாள், என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம்."
சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டான் ஜெர்ரி. பின் கண் திறந்து பார்த்தான்.
"மன்னிக்கவும். கல்லூரியோடு இவளுடன் என் பழக்கம் முடிந்து விட்டது. இப்போது இவளைப் பற்றி எதுவும் தெரியாது."
"பொய் சொல்வதைக் கொஞ்ச நேரம் மறப்பது உங்களுக்கு நல்லது. நேற்று இரவு முழுவதும் இவள் உங்களுடன் தங்கியிருந்தாள் என்று நான் கூறுவதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்"
"இல்லை.கல்லூரி முடிந்து இவளை நான் பார்க்கவேயில்லை. நேற்று நான் இண்டர்னெட் மூலம் பிடித்த ஒரு கால் கேர்ளுடன் தான் இரவைக் கழித்தேன்."
கொஞ்ச நேரம் மெளனம் நிலவியது.
"சரி. நீங்கள் போகலாம். ஏதாவது தகவல் கிடைத்தால் உடனடியாகத் தெரிவிக்கவும்."
ஜெர்ரி எழுந்து, இருவரையும் பார்த்து விட்டு, கதவைத் திறந்து விட்டு வெளியேறினான்.
வில்லியம்ஸ் பெர்னாண்ட்டைப் பார்த்தார். பெர்னாண்ட் உடனடியாக தன் வாக்கி-டாக்கியை எடுத்துக் கண்ட்ரோல் அறையைத் தொடர்பு கொண்டார்.
ஜெர்ரி மெதுவாக தனது வீட்டுக் கதவை மூடினான். பின் வரவேற்பறையில் இருந்த சிகரெட் பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டான். ஏதோ நெடி பரவுவது போல் உணர்ந்தான். உதாசீனத்தான்.
அவசரமே இல்லாமல் ஒவ்வொரு அறையாகச் சென்றான். ஜன்னல், வெண்டிலேட்டர்களின் முன்பிருந்த கர்டைன்களால் அவற்றை முழுதும் மறைத்தான். பாத்ரூமிற்குச் சென்று மெதுவாக, மிக மெதுவாக வெண்டிலேட்டர் வழியாக வெளியே எட்டிப் பார்த்தான். தூரத்தில் கருப்பு நிற கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.
மெல்லப் புன்னகைத்தான்.
என்னை என்னவென்று நினைத்து விட்டார்கள். என்னை வெளியே விட்டு விட்டபின் தொடர்வார்கள் என்பது கூட தெரியாதவனா நான்?
படுக்கையறைக்கு சென்று பார்த்தான்.
படுக்கையின் அருகில் இருந்த மேஜையின் மேல் ஒரு காகிதம் படபடத்துக் கொக்ண்டிருந்தது. எடுத்துப் படிக்க ஆரம்பித்தான்.
இனிய ஜெர்ரி,
உன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் விடை பெற்றுச் செலவதற்கு மன்னித்து விடு. என்னுடன் நீ இருப்பதால், போலிஸ் உன்னையும் துரத்தத் தொடங்கும். அதை நான் விரும்பவில்லை. நீ இப்போது கொஞ்சம் குழப்பம் அடைந்திருப்பாய் என்பதை உணர்கிறேன். எந்த இரகசியத்தை உன்னிடம் சொல்லாமல் வைத்திருந்தேனோ, அதை சொல்லப் போகிறேன்.
கல்லூரிக் காலத்தில் நாம் இருவரும் சேர்ந்தே சுற்றி வந்தோம். எளிதில் எவருடனும் பழகியிராத நானும் உன்னுடன் நன்றாகப் பழகினேன். யாரையும் நம்பாத என் அம்மாவும் உன்னை மட்டும் வீட்டிற்குள் அனுமதித்தார்கள். என் வீட்டிற்கு வந்திருக்கையிலேயே நீ உணர்ந்திருப்பாய். பிரிவினைப் பிரச்னைகளின் படுக்கையில் தான் நாங்கள் தினம் தூங்குகிறோம் என்று.
அதையெல்லாம் மீறித் தான் லண்டன் வரை வந்து நான் படிக்க முடிந்தது. கல்லாய் போன மனதோடு தான் வாழ வேண்டும் என்று நான் நினைத்து வந்தேன். ஆனால் உன்னைக் கண்ட பின்பு, உன்னுடன் பழகிய பின்பு, என் கல் மனதிற்குள்ளும் பூ பூத்தது.
இலையுதிர் காலத்தில் மஞ்சள் நிறப் பூக்கள் சிந்திச் சிதறிய சாலைகளின் வழியே நாம் பலமுறை நடந்திருக்கிறோம். வெண் பனித்துகள்கள் தூவிக் கொண்டிருக்கும் மாலை நேரங்களில் உன் கோட்டுக்குள் நுழைந்து, கண் மூடி நடந்து கொண்டிருக்கையில் நான் மெல்ல, மெல்ல என் மனதையே உன்னிடம் இழந்து விட்டேன்.
கல்லூரிக் கடைசியில் நாம் பிரிந்து விட்டோம். என் தாயிடம் சொல்லி விட்டு நம் மணம் என்று நினைத்தேன்.
பிரிவினையின் எல்லைப் போர்களில், பிரிவினைவாதிகளின் மீதான போர்களில் எங்கள் ஊர் மீது தாக்குதல் நடந்திருந்ததில், என் குடும்பமும் அழிந்திருந்தது. என்ன கொடுமை, பார்த்தாயா..? இரண்டு வருடங்கள் பைத்தியம் போல் அலைந்தேன்.
பின் லண்டன் வந்தேன். இங்கு தான் அறிந்து கொண்டேன். இப்போது இந்த ஆபரேஷனுக்கு நீயும் ஒரு ஜோனுக்கான இயக்குனர் என்று.
நீ அறிவாயா?
பிரிவினை கேட்பதெல்லாம் ஒரு சில இயக்கங்கள் தான் என்று. பெரும் பகுதி மக்கள் அமைதியைத் தான் விரும்புகிறோம். அதை உன்னைப் போன்ற அதிகார மைய மக்கள் அறிவதில்லை. அல்ல, அறிந்தாலும் கண்களை இறுக மூடிக் கொள்கிறீர்.
நீங்கள் கண்களை மூடிக் கொள்வதால் உலகம் இருண்டு போவதில்லை. நாங்கள் விழித்து எழுந்து விட்டோம். பிரிவினைவாதிகல் மீது தொடுக்கும் உங்கள் தாக்குதலில் எங்களைப் போன்ற அப்பாவிகளை அழிப்பீர்கள். அதற்கு '' collateral damage" என்று பெயரும் இட்டுக் கொள்வீர்கள்.
நானும் விடுதலை இயக்கத்தில் சேர்ந்து விட்டேன். எங்களுக்கு விடுதலை. உங்களிடமிருந்து விடுதலை.
எங்கள் இயக்கத்தில் ஒவ்வொருவருக்கும் பணிகள் இருக்கின்றன. எனக்கான பணி உன்னைப் போன்ற தள்பதிகளை அழிப்பது.
அதற்காகவே நேற்று இரவு வந்தேன். ஒரு மரம் போல், உன் செய்கைகளுக்கு எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காமல் கிடந்தேன். நீ களைப்புற்று உறங்குகையில், உன் வீட்டின் அறைகள் அனைத்திலும், விஷவாயுக் கலன்கள் பொருத்தி விட்டேன்.
நீ இதைப் படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், வாயு பரவத் தொடங்கியிருக்கும்.
குட்பை.
காதலுடன்,ரோசி.
நீ அந்த அளவு முட்டாளில்லை என்பதால், நாங்கள் விலைக்கு வாங்கிய போலிஸ் தான் உன்னை விசாரணை செய்தார்கள் என்பதை நீ உணர்ந்திருப்பாய்.
காற்றில் மெல்ல மெல்ல நீல நிறம் பரவியது.
(தேன்கூடு - அக்டோபர் 06 - போட்டிக்கான பதிவு.)