Thursday, March 12, 2009

ஆகாயக் கொன்றை. 1.

ஆகாயக் கொன்றை.2.
ஆகாயக் கொன்றை.3.



குளத்தின் கரையில் விதம் விதமாய்க் கற்கள் இருந்தன. சில பளிங்கு போல் பளபளப்பானவை. அலையாடும் நீர் வந்து வந்து காலகாலமும் மோதிக் கொண்டே இருக்க, வந்த பளபளப்பு அது. நுரை உரசும் கரையில் இருந்து கொஞ்சம் எட்டி நிற்கும் கற்கள் சொரசொரப்பாக இருந்தன. வெயிலின் கீறுகளைச் சுமந்திருக்கும் கோடுகளின் வழி எறும்புகள் ஊரத் தேய்ந்திருக்கும். இன்னும் காலைப் பதம் பார்க்கும் அழுத்தமாய் இடறல் கற்கள்; உருண்டையாய்ச் சில; வளைந்திருக்கும் சில. கரையோரப் பாறைகள் கரடுமுரடுப்படுத்தப் பட்டிருக்கும். நன்றாக அடித்துத் துவைக்கையில் அழுக்காய்ப் பழுப்பு கரைந்து போவதற்கென்றே அவை. மேற்குக் கரையில் இருந்த படித்துறையின் அருகேயான ஒரு சரிந்த பாறை மேலிருந்து கால்களைத் தொங்கப் போட்டு அமர்ந்திருந்த அருளின் கைகளிலும் சில கற்கள் இருந்தன.

இடது கையில் இருந்து வலக்கையால் ஒவ்வொன்றாக எடுத்து வீசிக் கொண்டிருந்தான். 'தொப்ளக்...தொப்ளக்' என்று நீரை முத்தமிட்டு அவை மூழ்கின. நனைந்த புள்ளியில் இருந்து கிளம்பும் குறுக்கலைகள் எழும்பி எழும்பித் தளும்பித் தளும்பிக் கரையில் முட்டிய பெருவட்டமாய் உடைந்தன. கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் நடு விரலுக்கும் இடையில் வசமாய் ஒரு பழுப்புக் கல்லைப் பிடித்துக் கையைப் பின்னிக்கிழுத்து, உடலை வாகாக்கி, குனிந்து ஒரு விசிறு விசிறினான். அது தண்ணீரின் மேல் நேர்கோட்டில் தவளைக் குதியல்கள் போட்டு, முதலைப் பாறையில் போய் மோதி, இடித்து, வெடித்து, துகள்களாய் வெடித்து, ஜலசமாதிகள் ஆகியது.

இன்னும் கற்களைத் தேடிக் குனிந்து பார்க்கும் போது தான் கவனித்தான். கொன்றை மரத்தின் கிளைகளில் மஞ்சள் பூக்கள் அவசரமாகப் பூக்கத் தொடங்கியிருப்பதன் பிம்பங்கள் கலைந்து கொண்டிருந்த குளத்தின் முகத்தின் மேல் விழுந்து அசைந்து கொண்டேயிருந்ததை! அசுத்தமாய் இல்லாத பரிபூர்ண, பரிசுத்த மஞ்சள் நிற மலர்கள். கொன்றைப் பூக்களைத் தான் கற்புள்ள மஞ்சள் என்று சொல்ல வேண்டும். மற்ற மஞ்சள் பூசிய பூக்களெல்லாம் சிவப்பு தின்ற அல்லது ஆரஞ்சைப் போர்த்திக் கொண்ட கள்ள மஞ்சள்கள்.

மேலைக்காற்று வீசத் தொடங்கியிருந்தது. அடிவாரத்தில் இருந்து குளிரைச் சுமந்து வந்த காற்று கிளைகளின் இடுக்குகளில் எல்லாம் புகுந்து புறப்பட்டது. இலைகள் எல்லாம் சலசலத்தன. செடிகளும், அவற்றின் கொண்டைகளில் ஒய்யாரமாய் உட்கார்ந்திருந்த பலவர்ணப் பூக்களெல்லாம் 'லபோ..திபோ..' என்று தலையாட்டின; உடலாட்டின. குளத்தின் மேனி மீதே இறக்கைகளால் மிதந்து கொண்டிருந்த வெள்ளை நாரைகளும் விசுக்கென்று வேறு திசையில் திரும்பி உற்சாகமாய்ப் பறந்தன. வடக்குப் படித்துறையில் அமர்ந்து சிவப்புக் கதர் துண்டால் வெற்று முதுகைத் தேய்த்துக் கொண்டிருந்தவர்கள் சிலிர்த்தார்கள்.

தண்ணீர்ப் பாம்பு போல் நீண்டு வளர்ந்திருந்த கொன்றைப் பழம் ஒன்று சதிராடியது; மரத்தின் அடிக்கிளையில் ஒரு காலை ஊன்றி எம்பி, அதைப் பறித்தே விட்டான். காற்றுக்கு மரத்தில் இருந்து பிரிந்து வந்த பூச்சரம் குளத்தின் மேல் விழுவதற்கு முன், பூ கசங்காமல் பிடித்தான். காயத்ரியிடம் காட்டுவதற்காக கோயிலை நோக்கி ஓடினான்.

குளத்திலிருந்தும், மரத்திலிருந்தும் இருநூறு அடி தொலைவில் கோயில் அமைந்திருந்தது. சிவன் கோயில். சின்ன கோயில். சிங்கிள் ரூமில் சிவன் அடைபட்டிருக்க, மாடம் போல இருபுறமும் பிள்ளைகள் அமர்ந்தும் நின்றும் இருக்க, மூஞ்சூறும், மயிலும் வெயிலிலும் மழையிலும் நனைய, நந்திபெருமானுக்கு மட்டும் ஒரு குடை. சுற்றுச்சுவர் ஏதும் இல்லாமல், சீந்துவார் யாரும் இல்லாமல், சுவர் பெயர்ந்த செங்கல் பற்கள் காட்டும் கிணறும், சரிந்த வில்வ மரமும், பெயர் தெரியா சின்னஞ்சிறு செடிகளும், கொடிகளும், கசமுசா கூட்டணியில் மரங்களுமாய் காலத்தோடு ஓடிக் கொண்டிருந்த கோயிலில் மாதமிரண்டு பிரதோஷங்களின் போது மட்டும் கொஞ்சம் கூட்டம் கூடுவதும், மற்ற நேரங்களில் துடிதுடிக்கும் மண் விளக்குகளின் ஒற்றைத் திரி வெளிச்சங்களில் உற்றுப் பார்த்தால் தெரியும் 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவனுக்கு' சந்தி கால பூஜை செய்து கொண்டிருந்தார் ஈஸ்வர ஐயர்.

குளிர் தாங்கும் செம்போர்வையை இடுப்பில் கட்டியிருந்தார். முகம் பளபளத்தது. நெற்றியில் புதிதாக அப்பியிருந்த பட்டைத் திருநீர் வெம்மை வியர்வையால் கசங்கியிருந்தது. வெள்ளை முடிகள் தாடியாய், முகமெங்கும் முட்களாய் முளைத்திருந்தன. பூணூல் கருவறை வாசம் ஏறியிருந்தது. வில்வ மாலை போட்டிருந்த சிவன் கற்பூர தகதகப்பில் நனைந்து கொண்டிருந்தார். வெண்கல மணியின் சத்ததோடு இசையாமல் அதுபாட்டுக்குத் தன் முனைப்பில் சப்தம் எழுப்பிக் கொண்டிருந்தது, கிணற்றில் சகடை ஓடும் ஒலி.

காயத்ரியின் கைகளில் இருந்து அவசர அவசரமாக ஈர்ப்பு விசை இழுக்க கிணற்றுக்குள் இறங்கிக் கொண்டிருந்தது அரை வட்ட கைப்பிடியில் கயிறு கட்டிய பக்கெட். ஓடி வந்த அருள் கிணற்றின் திட்டில் இரண்டு கைகளையும் ஊன்றி அழுத்திக் கொண்டு கொஞ்சம் எம்பி உள்ளே எட்டிப் பார்த்தான். அவள் சிரித்தாள்.

அவனுக்குக் கிணற்றுக்குள் பார்ப்பது பிடிக்கும். வட்டமான அதன் ஆழ வாய்க்குள் சலசலத்துக் கொண்டேயிருக்கும் கரும்பச்சை நீர் பிடிக்கும்; ஓரங்கள் முழுதும் எப்போதும் ஈரவாசத்தில் படர்ந்திருக்கும் பாசிகள் பிடிக்கும்; சகடை உருளுகின்ற 'கடகட' ஓசை பிடிக்கும்; குடை போல் அந்தரத்தில் பரவியிருக்கும் வேப்ப மர இலைகள் விழ, காற்றில் சுழன்று சுழன்று போய் மிதக்கும் காட்சி பிடிக்கும்; பக்கெட்டில் நீரை மொள்ளும் போது, அது அங்கே இங்கே ஆடிக் கொண்டே வருவதும், சமயங்களில் கிணற்றுப் பக்கங்களில் இடிப்பதும், அதன் அடிவாரத் துளையின் வழியாக தீர்ந்து கொண்டே வரும் நீர் கோட்டோவியங்கள் வரைந்து கொண்டே வருவதும் பிடிக்கும்.

கிணற்றின் வாய்க்கு வந்து தள்ளாடிய பக்கெட்டை இடது கையால் பிடித்து, திட்டின் மேல் வைத்தாள்.

"அக்கா...! அக்கா..! மஞ்சப்பூ..!" விரல்களைப் பிரித்துக் காட்டினான். "உன்ன மாதிரியே அழகா இருக்கு..!"

காயத்ரி புன்னகைத்தாள். பொன் மஞ்சள் நிறம் தான் காயத்ரி. லேசாக அழுத்தித் தொட நினைத்தாலே சிவந்து போகும் தேகப் பொலிவு. பளபளக்கும் கண்கள். ஏதோ சொல்ல முடியாத ஒளி அவள் கண்களில் மின்னியது. கட்டான உடல். சலிக்காத உழைப்பால் அமைந்த ஜில்லென்ற வில்லென்ற உடல். பறபறக்கின்ற கூந்தல். இளமையின் செழுமையான வனவனப்பு. ஏழ்மையின் ஏளனப்பூச்சு மேலே பூசியிருந்தாலும், ஒரு ஜ்வலிப்பு அவளைச் சுற்றிலும் ஜொலிஜொலித்துக் கொண்டிருக்கும். தான் அழகாய் இருப்பதை உணராத ஒரு அறியாமை அவளுக்கு மேலும் உண்மையின் எழிலைக் கூட்டியிருந்தது.

பூக்கற்றையை வாங்கிப் பார்த்தாள்.அருள் அவளையும் பூக்களையும் மாறி மாறிப் பார்த்தான்.

"எப்படிடா பறிச்சே..? கிட்டக்கவே இருந்துச்சா..?" வெளிர் ரோஸ் நிற தாவணியால் கைகளைத் துடைத்தாள்.

காயத்ரியின் குரலைப் பற்றிச் சொல்லவேயில்லை அல்லவா..? கல்கண்டை எடுத்துக் கொள்ளுங்கள். உடைத்து கண்ணாடித்துகள்கள் போல் தூள்களாக்குங்கள். பச்சைக் கற்பூரம் எடுத்து, அந்த வாசத்தை மட்டும் உருவிக் கொண்டு வந்து, பன்னீரில் கலந்து, கல்கண்டுப் பொடிகளைக் கரைத்து சாருகேசி ராகத்தில் ஒரு 'ச..ரி..க..' போட்டால் எப்படி இருக்கும்..? அப்படி ஒரு சுகந்த குளிர்க் குரல்.

"இல்லக்கா..! மேல தான் வந்திருந்திச்சு..! எட்டிப் பறிச்சுட்டேன். பழம் ஒண்ணு கொண்டு வந்திருக்கேன். பார்த்தியா..?" பழத்தையும் காட்டினான்.

"அத தூக்கிப் போட்டிடு..! அதோட விதை எல்லாம் விஷம்..!" சொன்னதுடன் அவளே வாங்கி அதனை தூரமாக வீசியெறிந்தாள்.

"என்னம்மா..? என்ன சொல்றான் தம்பி..?" சிவப்புப் போர்வையால் போர்த்திக் கொண்டே வந்தார் ஈஸ்வர ஐயர். மேற்குத் திசையில் பார்த்தார்."மழ வர்றாப்ல இருக்கு. சீக்கிரம் ஆத்துக்குப் போயிடணும்.."

"ஒண்ணும் இல்லப்பா..! கொன்றைப் பூவக் காட்டி என்ன போல் அழகாயிருக்குன்றான்..!"

"அதிலென்னம்மா சந்தேகம்..! எம் பொண்ணு அழகு தான்! அப்சரஸ் மாதிரி..! ரம்பை மாதிரி.." என்றவரின் குரலில் பெருமை ஒலித்தது. அதன் அடியில் கொஞ்சம் கவலையும் தொனித்தது.

"போங்கப்பா..! நீங்களும் இவன் கூடச் சேர்ந்துண்டு கிண்டல் பண்றீங்க...!" என்றவாறே பக்கெட்டைக் கிணற்றுக் கயிற்றின் பிடியிலிருந்து விடுவித்து, கொஞ்சம் தள்ளி இருந்த செம்பருத்திப்பூ, நந்தியாவட்டை, நாகப்பூ, கனகாம்பரம், மல்லிகைப் பூக்களுக்கெல்லாம் ஊற்ற ஆரம்பித்தாள்.

கோயிலுக்கு யாரும் அவ்வளவாக வருவதில்லை என்பதால், பூச்செடிகள் பிடுங்குவார் தொல்லையின்றி கலகலப்பாக இருந்தன. இந்த தோட்டம் காயத்ரியே அமைத்தது. பள்ளி சென்ற நாட்களில் இருந்து அவளே இதை உருவாக்கினாள். தேவி, சவுந்தர்யா, அழகுமணி... எல்லோர் வீட்டில் இருந்தும் வாங்கிக் கொண்டு வந்த செடிகள் வளர்ந்து, கிளைத்து, பல்கிப் பெருகிக் குடும்பமாகி அவளது சுதந்திரத் தோட்டமாக வளர்ந்திருந்தது. அவளுக்கு நெருங்கின தோழியும் இவையே!

தனியாக வந்து பேசுவாள். ஒவ்வொரு செடிக்கும் பெயர் வைத்திருக்கிறாள். சில டீச்சர் பெயர்கள். சில தோழிகள் பெயர்கள். ஒரே ஒரு கனகாம்பரம் செடிக்கு அவள் அம்மா பெயர் வைத்திருக்கிறாள். ரொம்ப மனம் கஷ்டமாக இருக்கும் போது 'பார்வதிம்மா' என்று தடவித் தடவிப் பேசுவாள்.

"ஏம்மா..! மழ வர்ற மாதிரி இருக்கு..? இப்ப போய் தண்ணி ஊத்தறியே..?"

"இல்லப்பா..! என்ன தான் மழ வந்தாலும், நான் தண்ணி ஊத்தினாத் தான் குடிப்பேன்னு என்கிட்ட சொல்லியிருக்காங்க இவங்க எல்லாம்..!" என்று சிரித்தவாறே சொல்லி, மீண்டும் கிணற்றுத் திட்டுக்கு வந்தாள்.

தூறல் விழ ஆரம்பித்தது. இருள் கவ்வ ஆரம்பித்தது. பூவை வாங்கி வைத்திருந்த அருள் நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். நேராக அவன் கண்களுக்குளேயே சில மழைத்துளிகள் பாய, 'சிமிட்'டென்று கண்களை மூடிக் கொண்டான்.

"அக்கா.! மழ வருதுக்கா..! போலாங்கா..! அம்மா தேடுவா..!"

"ஆமாம்மா..! ஆத்துக்குப் போகவே பதினஞ்சு நிமிஷம் ஆகிடும்..! போதும்மா தண்ணி ஊத்தறது. அதான் மழயே வர்றதே..!"

"சரிப்பா..!"

அவர் பாதையின் மரத்தடியில் சென்று நிற்க, காயத்ரி பக்கெட்டைக் கழட்டி, சிவன் கோயின் பின்புறம் சென்று வைத்தாள். அருளும் அவளும் முன்வந்து, கருவறைக் கதவின் முன் வந்து கொஞ்ச நேரம் கும்பிட்டு விட்டு, சரியாகப் பூட்டி இருக்கிறதா என்று பார்த்து, அவருடன் சேர்ந்து நடக்க ஆரம்பிக்கும் போது, மேற்கில் நின்றிருந்த மலையின் மேல் ஒரு மின்னல் வெட்டியதைப் பார்த்தார்கள். அவசர அவசரமாகக் காதுகளைப் பொத்திக் கொண்டு 'அர்ஜுனா.. அர்ஜூனா' என்று சத்தமாகச் சொல்ல, அவர்களது வேண்டுதலைக் கண்டு கொள்ளாது பெருத்த ஒலியோடு இடிகள் இரைய, பிள்ளையார் கோயிலின் விளக்குச் சுடர் நடுங்கியது.

ருக்குள் மழை நன்றாகப் பெய்து கொண்டிருந்தது. எல்லாக் கடைகளின் முன் டேபிள்களும் பெட்ரோமாக்ஸ் புகை வெளிச்சத்தில் உயிர்த்திருந்தன. டீக்கடைகள் பாலிதீன் கவர் தொப்பிகள் நீட்டிக் கொண்டிருக்க, சூடான பஜ்ஜி வியாபாரங்கள் நடந்து கொண்டிருந்தன. சாலையின் புழுதிகள் செம்மையாய்க் கலந்து, கரைந்து ஓரச் சாக்கடை தேடி சரிந்து ஓடின. அவ்வப்போது கடக்கும் நனைந்த ஒளிக் கோடுகள் சாலையை கண வெளிச்சப்படுத்த, மீண்டும் மீண்டும் இருள் கவ்வியது. தகரக் கூரைகள் 'சடசட' வென சலிப்பேயின்றி அடித்துக் கொண்டேயிருந்தன.

எம்.எஸ்.கே. டீ, காபி பாரில் சதுரக் கிழிசல் தினத்தந்திகள் எண்ணெயில் ஊற ஊற கைமாறிக் கொண்டிருந்தன. உள்லே அரசியல்கள் கிழிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. லிங்கம் தான் முதலில் கவனித்தார்.

"அய்யிரே..! வாங்க..! டீ சாபிட்டுட்டுப் போங்க..! அய்யருக்கு ஸ்ட்ராங்கா ஒரு டீ போடு. பொண்ணுக்கும் சேர்த்து. அது யாரு கூட..? நல்லசாமி பையனா..?"

ஒற்றைக் குடைக்குள் ஒண்டிக் கொண்டு வந்தாலும், அவ்வப்போது காயத்ரியும், அருளும் வட்டக் கட்டுப்பாட்டுக் கோட்டை மீறி மழைக்குள் சென்று விளையாடி விட்டும், நீர்த் துளிகளைச் சேகரித்து ஒருவர் மேல் ஒருவர் வீசிக் கொண்டே வருவதுமாய் இருந்ததால், நன்றாகவே நனைந்திருந்தனர். குரல் கேட்டு நிற்க, அவள் மேல் அத்தனை பார்வைகளும் பதிய, லிங்கத்தின் பார்வையில் கூடுதல் வெப்பம்.

"இல்லப்பா..! ஒண்ணும் வேண்டாம்..."

"அட.. சொம்மா வா அய்யிரே..! ஏண்டா மணி, டீயில எதுனா கறித்துண்டு போடறியா என்ன..?.."

மணி என்றழைக்கப்பட்டவர் கை பனியன் போட்டிருந்தார். லுங்கியை மடித்துக் கட்டியிருக்க, கொஞ்சம் பல் வெளியே எடுப்பாகத் தெரிய, சுருண்டிருந்த தலைமுடி விலகி விலகி ஆட, சிரித்தார். லிங்கம் புதிதாக அந்தப் அந்தப்பகுதிகளில் உருவாகியிருந்த கட்சியின் பகுதிச் செயலாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்படும் ஆள். கட்சிக்காரர் என்றதும் ஒரு தனி அவசர மரியாதை கிடைத்து விடுகிறது எங்கும்!

"என்ன கொஞ்சம் ஈ, எறும்பு மெதக்கும். தட்டிப் போட்டுட்டு குடிங்க அய்யிரே..!" வார்த்தைகள் அவரை நோக்கி இருந்தாலும், கண்கள் அவளை நோக்கி அலைபாய்ந்தன. அவள் இப்போது அப்பாவின் பின் ஒண்டிக் கொண்டிருந்தாள்.

"அம்மா..! நீயும் அருளும் ஆத்துக்குப் போங்கோ. அவன் அம்மா தேடுவாங்க. இந்தா இந்த கொட எடுத்திண்டு போங்கோ. நான் இங்க கடயில இருந்திண்டு மழ நின்னாப்ல வர்றன்..!" என்று குடையைக் கொடுத்தார். அவர்கள் இருவரும் வாங்கிக் கொண்டு விலக, எதிரிப்பார்வை பார்த்தான் லிங்கம்.

ரோட்டின் ஓரங்களாகவே இருவரும் சென்றனர். குடைக் கம்பிகளில் இருந்து அருவியின் மெல்லிய நகலாய் மழைத்தாரைகள் ஊற்றிக் கொண்டேயிருந்தன. கைகளை நீட்டி நீட்டி உள்ளங்கையில் பிறந்த சிதறல்களைத் தெறித்தனர்.

"அக்கா..! குளிருதுக்கா..!"

"எனக்கும் தான்..! ஆத்துக்குப் போனவுடனே உங்க அம்மாகிட்ட சொல்லி ஆவி பிடி, என்னா..?"

"நீ என்னக்கா பண்ணுவ..?"

"எனக்குத் தான் அம்மா இல்லியே..! நானே தான் சூடான ஜலம் வெச்சி குடிக்கணும்..!"

"உங்க அம்மா எங்க அக்கா போயிருக்காங்க..?"

"ம்....! எனக்கும் தெரியாதுடா..! சின்ன வயசுல அப்பா சொல்லியிருக்கா..! நான் பிறந்ததை பாட்டிகிட்ட சொல்லப் போயிருக்கான்னு..! அப்புறம் எனக்குப் புரிஞ்சுடுத்து..!"

"என்ன..?"

"ஷ்..! அதெல்லாம் உனக்கு சொல்ல மாட்டேன்..!"

"போக்கா...! என்கிட்ட சொல்ல மாட்டியா..? உன் கூட டூ..!!" பொய்க் கோபத்தில் திரும்பிக் கொண்டவனை சமாதானப் படுத்த,

"சரி..! உங்க அப்பா உனக்கு சைக்கிள் வாங்கித் தர்றேன்னு சொல்லி இருக்கார்ல..? எப்ப சைக்கிள் வரும்..?"

சைக்கிள் ஞாபகம் வந்தவுடன் கோபம் மறந்தவன்,

"க்வார்ட்டர்லி முடிஞ்சப்பறம் வாங்கித் தர்றேன்னு சொல்லி இருக்கார்.."

"என்ன மாடல் வாங்கப் போற..?"

"நெறய ப்ராண்ட் இருக்கு. எத வாங்கறதுன்னு தெரியல..! எல்லாத்துலயும் ஒண்ணொண்ணு வாங்கி வாசல்ல நிக்க வெக்கணும்னு ஆசயா இருக்குக்கா..!"

அதற்குள் மழையும் கொஞ்சம் குறைந்து தூறல்களாய்த் தன்னைக் குறுக்கிக் கொண்டிருக்க, விலகிப் போயிருந்த மின்சாரம் வெள்ளமென மீண்டும் பாய்ந்து எலெக்ட்ரான் அதிசயங்கள் ஒளிர்ந்தன.

"அருள்..! வா, அந்த சைக்கிள் கடைக்குப் போய் மாடல் பார்ப்போமா..?"

ஆர்வமடைந்த அருள், "சரிக்கா..!"

மம்மி & டாடி சைக்கிள் கடை போர்டு டயர்களாகத் தொங்க விட்டிருந்தது.

ஸ்டாண்டுகளில் சாய்ந்து குதிரைகள் போல் பல உயரங்களில் சைக்கிள்கள் நின்று கொண்டிருந்தன. பாப்பா சைக்கிள்கள் காதைப் பிடித்துத் தூக்கிய முகங்கள் போல் கம்பி கட்டி காற்றில் ஆடின. ப்ளாஸ்டிக் கவர்கள் சரசரக்கும் புது டயர்கள், ட்யூப் லைட்கள் கிடந்தன. பால் பேரிங்குகள், ட்யூப் வாசர்கள் நிரம்பிய டேபிள் முன் உட்கார்ந்திருந்தார் பலராமன்.

"அடடே..! அய்யிரு பொண்ணா..? வாம்மா..! என்ன சைக்கிள் வாங்க வந்தியா..? கூட... அட அருள் தம்பி..! உனக்கு சைக்கிள் சொல்லிட்டுப் போயிருக்காரு உங்கப்பாரு. உன்கிட்ட சொல்ல வேணாம்னு சொன்னாரு. பரவால்ல. மாட்ல எதுனா பாக்கறியா..?"

"அக்கா..! நீயும் வாக்கா..!" என்று அவள் கைப்பிடித்து இழுத்தான்.

"நீ போய்ப் பாருடா..! நான் இங்கயே நிக்கறேன்..!" கைகளைக் கட்டிக் கொண்டு வாசல் படிக்கட்டுகளிலேயே நின்று கொண்டாள். குடையை மடக்கி விட்டு சுற்றிப் பார்த்தாள். கடை முதலாளி ஏதோ கணக்குகளில் ஆழ்ந்து விட, அருள் உள்ளே சென்று ஒவ்வொரு சைக்கிளாக ப்ரேக், 'ட்ரிங்...ட்ரிங்..', டயர்கள், சீட், லோகோக்கள் எல்லாம் செக் செய்து கொண்டிருக்க...

துரை சைக்கிள் ஷாப் என்று ஓரங்களில் துருப்பிடித்திருந்த போர்டின் மேல் ஒற்றை குண்டு பல்பு ஒன்று சரிந்திருந்தது. வயதான சைக்கிள்கள் ஓர் ஓரமாய்ச் சரிந்திருந்தன. எட்டுக்கு பத்து அறையில் சில அடுக்குகள் இருந்தன. ஏதோ ஒரு கெமிக்கல் வாசம் வந்தது. அங்கங்கே கரி பிடித்திருந்தது. வாசலில் ஒரு மண்ணள்ளும் தகரத் தட்டில் நீர் நிரம்பியிருக்க, அதன் அடியில் கருப்பாய் சில பொடிகள் ஆழ்ந்திருந்தன. டயரிழந்த சைக்கிள் ஒன்று செயின் மூலம் தூக்கி நிறுத்தப்பட்டிருக்க, அதன் ட்யூப் ஒன்றை தண்ணீருக்குள் அழுத்திப் பிடித்து புஸ் புஸ் மூச்சு வெளிப்பாட்டுப் புள்ளியைக் கைகளால் தேடிக் கொண்டே சுற்றிய சரவணன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

'ஷ்..! அப்படி எல்லாம் பார்த்துண்டே இருக்கக் கூடாது..'

'அப்படி தான் பார்ப்பேன்..! சரி, அடுத்து எப்ப பேசறது...?'

'அடிக்கடி எல்லாம் பேசக் கூடாது. எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்..'

'செவ்வாக்கிழம டவுனுக்கு வர்றேன். அங்க படத்துக்குப் போலாமா..?'

'ஆசய பாரு! காலேஜ் முடிஞ்சு ஆத்துக்கு வரணும். இது அப்பாவோட ஆர்டர்..'

'மாமாவ....! அவர பழி வாங்க ஒரு ஐடியா வெச்சிருக்கேன்..'

'என்ன..?'

'உங்க கல்யாணத்துல தலயில அப்பளம் உடைப்பீங்க இல்ல..! அப்ப நான் கண்டிசனா சொல்லிடப் போறேன். 'இதப் பாருங்க மாமா..! எனக்கு நம்ம ஊரு அப்பளம் எல்லாம் பத்தாது. ஊர்ப் பண்டிகைக்கு வடக்குல இருந்து டெண்ட் அடிச்சு வருவாங்க இல்ல..? அவங்க செஞ்சு தர்ற டெல்லி அப்பளம் தான் வேணும். டெல்லிக்குப் போய் வாங்கிட்டு வாங்க'னு சொல்லிடுவேன்.'

"என்னம்மா..? தனியா சிரிச்சுக்கிட்டு இருக்க..?" பலராமன் கேட்க,

"ஒண்ணுமில்லங்க.."

'பாரு..! உன்னால எல்லாரும் வேடிக்க பாக்கற மாதிரி ஆயிட்டுது..! நீ அப்டி சொன்னா, நான் என்ன சொல்லுவேன் தெரியுமா..?'

'என்ன சொல்லுவ..?'

'இந்த மாதிரி, 'அப்பா..! மாப்பிள்ளைய காசி யாத்திரைக்கு அனுப்புவோம் இல்லியா..? காசியில இருந்து டெல்லி பக்கம் தான். அப்படியே போய் வாங்கிட்டு வரச் சொல்லுங்கோ'ம்பேன்..'

'அடிப்பாவி..!'

"அக்கா..! அக்கா..!" அவள் கைகளைப் பிடித்து உதறினான் அருள். சட்டென தெளிந்த அவள்,

"என்னடா போலாமா..?"

"அந்த சைக்கிள் எப்படி இருக்குன்னு வந்து பார்த்துச் சொல்லு..!" பிடித்து இழுத்தான்.

"உனக்குப் பிடிச்சிருந்தா சரிடா..! வா, வீட்டுக்குப் போலாம். நாழியாயிட்டுது..! வர்றோம் சார்..!"

இருவரும் கடையிலிருந்து விலகி நடக்க ஆரம்பித்தனர். கொஞ்ச தூரம் சென்றவுடன், காயத்ரி திரும்பி சரவணனைப் பார்த்தாள். அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். லேசாக டாட்டா காட்டினாள். அவனும்!

யதேச்சையாக திரும்பிப் பார்த்தான் அருள். மஞ்சள் பெட்ரோமாக்ஸ் வெளிச்சங்கள் குறைந்து, எல்லைகளில் கருப்பு பிடித்திருந்த ட்யூப் லைட்டின் கீழ் அமர்ந்திருந்த சரவணன் அணிந்திருந்த சட்டையின் நீலம், மாலையில் கோயில் குளத்தில் அவன் கண்ட வானத்தின் பிம்ப நிறம் போலவே இருந்தது.

-தொடரும்.