Showing posts with label காதல் தொடாத கவிதை.. Show all posts
Showing posts with label காதல் தொடாத கவிதை.. Show all posts

Thursday, June 23, 2016

வெம்பாலை வாழ்வு.

பாலையில்
தனித்திருக்க
நேர்கையில்
வாளெடுத்து
நீ
சிரமறுத்துக்
கொள்ள மாட்டாயா?

***

வான் தீ
தின்னும்
முகிலின்
நிழல்கள்
நெளிந்தாடுகின்றன
கானலாய்!

***

பசி பிளக்கும்
ஓநாய்
பிணந்தேடும்
கழுகு
ஈரம் காய்க்கும்
வெக்கை
அடுக்கடுக்காய்
மணல்
நிழல் பதுக்கும்
என்னுடன்!

***

வெம்மை நிறைந்த
நீல ஆகாயம்
யாதுமற்ற
பாழ்வெளி
நச்சரவம் ஊறும்
செம்மணல்
விஷம் ததும்பும்
உயிர்க் குகை
தூரப்பச்சை
எங்கோ எனும் கனவு
வெம்பாலையில் தனித்த
வாழ்வு.

Saturday, May 30, 2015

அப்பாவாதல்.

தே முடி
அதே மூக்கு
அதே முகம்
அதே சொல்
அதே சர்க்கரை

யாரோ ஒருவனாகப்
பிறந்து
மெல்ல மெல்ல
அப்பாவாதல் தான்
வாழ்வாகின்றது.

Thursday, May 29, 2014

கருநீலப் பூனைகள் அடர்ந்த வெளியில்.

ரு பனிப் பொழிவுக்கு இந்தப்பக்கத்திலிருந்து வெளியே ஜன்னலில் எட்டிப் பார்க்கும் ஒரு சாம்பல் நிறப் பூனை, தன் கண்களில் ஆச்சரியத்துடன் இதில் இறங்கத் துணிந்துள்ளது. பனி இறங்கி மறைத்துள்ள அப்பிரதேசத்தில் என்ன இருக்கும் என்ற வியப்பு கலந்த கேள்வி பூனையின் மனதில் கேட்டுக் கொண்டிருக்கின்றது. அது தன் வட்டத்திற்குள்ளேயே வாழ்ந்திருந்தது. அதற்குள் யாரையும் நுழைய விட்டதில்லையாதலால், அதற்குத் தெரிந்திருக்கவில்லை.

நான்கு கரங்களைத் தரையில் ஊன்றிய பழுப்பு நாற்காலி, அதற்கு ஒரு குழந்தையைப் போல் தெரிந்தது. வாலை முன்னிழுத்துக் கொண்டு மொத்த உடலையும் கால்களில் தாங்கிக் கொண்டு, கணப்பின் அருகே பழைய புத்தகம் கவிழ்ந்த குறுமேசையின் அருகே நாற்காலியின் அடியே படுத்துக் கொண்டு கண் மூடியிருக்கும், சில இரவுகளில். கணப்பு மெல்ல மெல்ல அணைந்து வெம்மை அறையெங்கும் பரவும் பின்னிரவு வரை தரை விரிப்பின் உள்ளே புகுந்து, விரிப்பின் நுண் துளைகள் வழியே விழும் ஒளித்துளிகள் உள்ளிருண்மைக்குள் ஊசிகள் போடுவதை, பார்த்துக் கொண்டிருக்கும் சில இரவுகளில்.

யாருமே தேடி வந்திராத இந்த மர வீட்டிற்குத் தேவையற்ற சுமையான பொருத்தமில்லாத பெயர் கொண்ட வரவேற்பறையின் மையத்திற்கு மேலே, நான்கு மெழுகுவர்த்திகளை ஒரே சமயத்தில் தின்னும் அலங்கார விளக்கு ஒன்று தொங்கிக் கொண்டிருக்கின்றது. அதன் வயலெட் வர்ண கண்ணாடிக் குடுவைகளுள் மெழுகுகள் உருகிப் படிந்த புகை, உள்ளிருப்பை மறைக்கின்றது. இப்பூனை தன் மென்முடி படர்ந்த வாலைச் சுருட்டி, விளக்குகளைத் தாங்கும் உலோக உடலில் படுத்துக் கொள்ளும், சில தினங்களில்.

மெளனம் பூண்டுள்ள பியானோ, தன் மேலான வருடக்கணக்கான தூசுகளைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிராமால், தீண்டும் பூனையின் விரல்களுக்குத் தன் குரல்களில் பதிலளிக்க முயல்கையில், பூனை தன் வட்டமான சின்னஞ்சிறிய தலையில் ஓர் ஆச்சரியத் திடுக்கிடலைத் தெரிவித்து விட்டு, தன் ஆழ்ந்த மோன நிலைக்குத் திரும்பி விடுகின்றது.

வாசலில் இடப்பட்ட வரவேற்புக் காலடி, யாராலும் மிதிக்கப்படாமல் இருப்பதை பூனை காலப்போக்கில் கவனிப்பதை நிறுத்தி விட்டது. போரின் போது கொள்ளையிட்ட சருகுத்& துணிகளால் மறைக்கப்பட்ட அறைக் கதவுகளையும், கண்ணாடி ஜன்னல்களையும் பூனை நினைத்தும் பார்ப்பதில்லை.

தன் தனிமையின் அழுத்தத்தைச் செரித்துக் கொண்டு உயிர்த்திருந்த பூனைக்கு, சலிப்புத் தட்டி விட்ட வாழ்க்கையின் அப்புறம் என்ன இருக்கின்றது என்ற வினா எழுந்த பின்பு, அதனால் இந்த வீட்டிற்குள் இருக்க முடியவில்லை. ஜன்னலுக்கு அந்தப் பக்கம் பனி இறங்கியுள்ள வெளிக்குப் போக நினைத்துள்ளது.

அங்கே அதனைப் போன்ற பூனைகள் அடர்ந்திருப்பதாக ஓர் இரவில் கனவில் கண்டது. அப்பூனைகள் அதனைப் போன்று இல்லாமல், கருநீல நிறத்தில் மேலும் கீழுமாய், வந்தும் போயும், குதித்தும் அழுதும் அடர்ந்தும் அந்த வெளியில் இருப்பதாகக் கண்டது. அதன் கனவுக்காகக் காத்திருந்த அப்பூனைகள், கனவில் நுழைந்த இதை தத்தம் அத்தனைக் கண்களாலும் ஒரே பார்வையாய்ப் பார்த்தன. இதன் பார்வை சென்ற மொத்தப் பகுதியிலும் வால்களை மடித்துக் கொண்ட ஆயிரமாயிரம் லட்சோபலட்சம் கருநீலப் பூனைகள் மணி மணியாய்ச் சுடர்ந்த கண்களாலும் இதை உற்று நோக்கின. முன்னங்கால்களை நீட்டியவாறு அத்தனை பூனைகளும் இதை நோக்கி நடந்து வர, நெருங்கி வர, வர இப்பூனை விழித்துக் கொண்டு உறைந்து நின்று விட்டிருந்த மரக் கடிகாரத்தின் முட்களைப் பயத்துடன் பார்த்தது.

ஆனாலும் இன்று அந்த வெளியில் இறங்கிச் செல்லத் துணிந்தே விட்டது.

***

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த ஜெர்மானிய கவிஞர் வில்லியம் என்பவருடைய கவிதைத் தொகுப்பிலிருந்து.

Monday, July 01, 2013

ஏக்கர் நிலம் வேண்டும்.


க்கர் நிலம் வேண்டும் - சக்தி
ஏக்கர் நிலம் வேண்டும் - அங்கு
பாக்குத் தோட்டமும் கயல்
பாயும் குளிர்ச் சுனையும்
தேக்குத் தூண்களில் மாளிகை
தெள்ளிய நீர்க் கேணியும்
பூக்கும் ஆயிரம் பூக்களும்
பூமி மேலெலாம் பச்சையும்

ஆற்றங் கரையிலே வாயிலும்
ஆடிக் களித்திட ஓடமும்
போற்றி வாழ்த்திடப் பெண்டிரும்
போரை வென்றிட நண்பரும் - பூச்
சாற்றிக் கும்பிட சாமியும் - பால்
சாறு தந்திட ஆக்களும் - கொடும்
கூற்றம் வாரா வேலியும் - நல்
கூறல் கேட்கும் மக்களும்

மாடி மேலெழு சந்திரிகை
மாதம் முழுவதும் பறவைகள்
கூடி வாழ்ந்திடக் கூரையில்
கூவி அமைத்த அறைகளும்
ஓடி ஆடிட ஆற்றலும்
ஓய்வில் அருந்திட தென்னையும்
ஏடி உன்னைக் கேட்கிறேன்
எனக்குத் தருவ தெப்போது?

#பாரதியாருக்கு நன்றியுடன்.

(Pic Courtesy : flickr.com )

Wednesday, February 06, 2013

ஆகாயப் பொன்னே...

ரு மெலோடியான ராகபாட்டையில் தாலாட்டுப் பாடல் ஒன்றை முயற்சித்தேன். மெல்லப் பாடியதைக் கேட்டுத் தூங்கித் தன் ஆதரவைத் தெரிவித்தாள்.

ராகம் கீழே.

***

ஆகாயப் பொன்னே...
ஆனந்த ஊற்றே...
பூங்காற்று தீண்ட
நீ தூங்கு...

ஏகாந்த வேளை...
எல்லோரும் தூங்க...
பேசாது கண்ணே
நீ தூங்கு....

பூ...மடல்
நீ
கேட்கும் கர்ணமாய்...

தேன்....சுழல்
நீ
பேசும் சொற்களாய்..

முகில்கள் நீந்தும் வானம்
மாலை நேரம்
கொண்டு வந்து...

சுடரென ஒளிரும் மீன்கள்
ராவின் ராகம்
பாடும் போது... (ஆகாயப் பொன்னே)

பாலூறும்
நெஞ்சோடு
அணைத்திடும் போதும்

தோளோடு
மேல் சாய்த்து
தடவிடும் போதும்

விழிகளில்
மொழிகளில்
நீ ஒரு தோட்டமே...

அழுவதில்
சிரிப்பதில்
உன்னுடன் நானும்
சேர்ந்தேனே...

அழகே...அழகே...அழகே.... (ஆகாயப் பொன்னே)

எண்ணாத
முத்தங்கள்
உன் கன்னம் தாங்கும்

எழுதாத
பாடல்கள்
உன் முகம் காட்டும்

நாளிலும்
பொழுதிலும்
உன்னுடன் நானுமாய்

மண்ணிலே
விண்ணிலே
ஊர்வலம் போகும்
கதையெல்லாம்
சொல்வேன்
நாளை
இன்று...(ஆகாயப் பொன்னே)

***

Friday, February 01, 2013

அன்புள்ள மரணத்திற்கு

ன்புள்ள மரணத்திற்கு,

நீ இருப்பது உண்மையா? உன்னைக் கண்டடைவதில் நான் உவப்புறுவேன்.

பாய்ந்து கொண்டேயிருக்கும் குளிர்ந்த நீருக்குள் ஒரு நிர்வாண மீன் நீந்திக் கொண்டேயிருப்பது போல் நான் வாழ்வில் நனைந்து கொண்டிருக்கிறேன். முட்கள் நிரம்பிய ஒரு தூண்டில் கண் முன் தோன்றித் தோன்றி மறைகிறது. கவ்விக் கொள்ளப் பாய்வதற்குள் வெள்ளம் தள்ளிச் சென்று விடுகின்றது. மீண்டும் நடுக்கம்..!! எத்தனை தொலைவுக்கு நீர் என்னை இழுத்துச் சென்று விட்டாலும் தூண்டில் மட்டும் துரத்துவதை நிறுத்துவதில்லை. வசீகரமான அத் தூண்டிலின் கூர்முனையை ஒரு மர்மமான கணத்தில் என் சிறு வாய் திறந்து மேல் அண்ணத்தில் குத்தும் போது ஒரு கணத்தில் மரிப்பதில்லை. அது துளைத்துத் துளைத்து மூளையை முட்டிச் செருகி அள்ளும் போது சூடான செந்நிறத் திரவம், புயல் காற்றுக்கு வெண் முகில்கள் போல் விலகிப் பரவும்.

உனக்கு மட்டும் தான் எத்தனை ப்ரியம் மனிதர்கள் மீது? ஒரு தேவதூதனைப் போல மனிதர்களின் அத்தனை துயர்களையும் உன் கருணையால் உன் ஒரு பார்வையால் காணாமல் போக்கி விடுகின்றாய். ஒரு மஞ்சள் வெயில் படிவது போல் உன் சாயல் படிகையில் முகங்கள் தான் எத்தனை திருப்தி கொள்கின்றன! ஒரு பேரருவியை மென்மையான தீண்டலால் பகல் ஆவியாக்கி விடுவது போல் அத்தனை உணர்வுகளையும் நீ சமனப்படுத்தி விடுகிறாய்.

நீ எப்படி இருப்பாய்? உன் வயது என்ன? உன் நிறம் என்ன? நீ என்ன ஆடைகளை அணிவாய்?

குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டிக் கதை சொல்லித் தூங்க வைக்கும் தளர்ந்த ஒரு மூத்த தாத்தா போல் வந்து எங்களை உன் பொன்னுலகத்திற்கு அழைத்துச் செல்வாயா? பனி இறங்கிக் கொண்டிருக்கும் பின்னிரவில் தெரு விளக்குகளை ஏற்றி வைப்பதற்காக வரும் அந்த சுருட்டு பிடிப்பவனைப் போல் கோட் அணிந்து வருவாயா? சந்தையில் வாத்துக்களை விற்று விட்டுச் சிணுங்கும் சில்லறைகள் காதில் அறைய மெல்ல எட்டு வைத்துப் போகும் ஒரு கிழவியைப் போல் முணுமுணுத்துக் கொண்டு போவாயா?

உன் வயது என்ன?

நாங்கள் காலம் என்பதைக் கண்டுபிடிக்கும் முன்பாக எங்கே ஒளிந்திருந்தாய்? பால் வெளி பண்டலத்தில் நாங்கள் காணவே இயலாத ஏதோ ஒரு கிரகத்தில், ஒற்றை லாந்தர் விளக்கை ஏந்திக் கொண்டு தலையில் தொப்பியுடன் பனிக் குவியலில் கால்கள் புதையப் புருவங்கள் மேல் கை வைத்து தொலைவைப் பார்த்துத் தொலைந்து போன பேரனைப் தேடி நடக்கும் ஒரு கிழவனைப் போல் நீ நடந்து கொண்டிருக்கும் காட்சி சமீப காலங்களில் என் கனவுகளில் வந்து கொண்டிருக்கின்றது. உன் பழுப்பேறிய தாடியிலும் மீசையிலும் பனித் துகள்கள் படர்ந்து கிடக்கின்றன. உன் சட்டைப் பைக்குள் கணக்குச் சீட்டுகள், எங்களுக்கு என்றுமே புரியாத கணக்கீடுகளுடன்!

உன் உள்ளங்கையில் தான் எத்தனை ரேகைகள்! தானாகப் போகும் பாதையில் ஓடுகின்ற நதிகளைப் போல், அவற்றில் எத்தனை ரத்த நதிகள்! நாங்கள் இறைஞ்சிக் கொண்டே இருக்கிறோம். சில சமயங்களில், உன் வரவிற்காகத் தங்க ஜாடியில் நூற்றாண்டுகள் பழைய புளித்த ஒயினைப் பாதுகாக்க விழித்திருக்கும் கஞ்சனைப் போல் கூர்மையான கவனத்துடன் காத்திருப்போம். சில சமயங்களில், பள்ளிப் பாடம் செய்யாத மாணவன் ஆசிரியரின் வரவின்மையை விரும்புவது போல் உன் வாராமையை வேண்டுவோம்.

ஆனால், என்று நீ எங்கள் பிரார்த்தனைக்குப் பதில் சொல்லியிருக்கிறாய்? குடை இல்லாமல் பாலையைக் கடக்கும் போது மழையைப் போல் வருகிறாய். தாகத்தில் தவிப்பவனுக்கு அது இனிமை. காலையில் ஜன்னலைத் திறக்கும் போது, கூரையின் மேல் இரவெல்லாம் குளிர்ந்திருந்த பழுப்பு நிறச் சருகு கீழே விழுவது போல் சுழன்று சுழன்று வருகிறாய். நகரத்தின் ஆலைச் சங்கொலி கேட்க ஆரம்பிக்கும் போது, குயிலின் துயர்க் குரல் கரைந்து விடுவது போல் உன் வரவின் காலடிச் சத்தம் செவியில் விழத் துவங்குகையில், வாழ்வை எங்கோ தொலைவில் விட்டு விட்டு கடைசி ரயிலுக்காகக் காத்திருக்கும் கடிகாரத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டு தூரத்தில் வானோடு இணைகின்ற தண்டவாளத்தின் அதிர்வை எதிர்நோக்கும் குருட்டுப் பிச்சைக்காரனாய் நாங்கள் ஆகி விடுகின்றோம்.

உன் வீடு எதனால் ஆனது? கூரைகளில் என்றும் தீராத கண்ணீர்த்துளிகள் சொட்டிக் கொண்டிருக்குமா? புகை போக்கி வழியாக எத்தனை குரல்களை நீ அனுப்புவாய்? பூட் அணிந்து நீ நடமாடும் சமையலறையில் ஒரே ஒரு மெழுகுவர்த்தியின் நடுங்கும் சுடர் உன் முகத்தின் கொடூரத்தையோ அன்பையோ உன் நிழலில் எதிரொளிக்கையில், மூச்சுக் காற்றற்ற முகங்களின் கண்கள் இறுக்க மூடிக் கொள்கின்றனவா?

***

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஐரிஷ் கவிஞர் டபிள்யூ.ஆர்.வில்லியம் ப்ரை என்பவருடைய தலைப்பு அறியப்படாத கவிதையின் கிடைத்த பகுதி.

Friday, October 07, 2011

மஞ்சள் புல்வெளி நடனம்.

ரேயடியாக மஞ்சள் பூக்கள் பூத்திருந்தன. அந்த வெளி முழுக்க யாரோ சாயங்காலத்தைக் கொண்டு வந்து பரப்பியது போல. ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு விதமான மஞ்சளில் இருக்கலாமோ? பட்டு ஜரிகையில் பரவிய மஞ்சள், நதியின் நுரைகளில் பட்டுத் தெறிக்கும் ஆகாய மஞ்சள், ஒற்றைச் சுடரொளி விளிம்பில் மினுக்கும் மஞ்சள், மழைக் கோடுகளில் நனையும் சூரியகாந்தி மஞ்சள்...மூச். அத்தனைப் பூக்களும் சொல்லி வைத்துக் கொண்டாற்போல் துல்லியமான ஒரே மஞ்சளைக் கொண்டிருந்தன. 

பூக்கள் என்று சொல்லலாமோ? ரொம்பச் சின்னதாய் இருக்கும் செடிகளின் தலை அது. நான்கே நான்கு மடல்கள். ஒவ்வொரு மடலும் சுருண்டுச் சுருண்டு வடிவடைந்திருந்தன. மகரந்தக் கொத்து உள்ளே. காய்ந்த செங்குழம்பில் அடிவாரம். காம்பும் அதே நிறம். எண்ணி வைத்தால் ஒன்றரை விரல்களுக்கு மேல் தேவைப்படாத நீளம் அல்லது உயரம். அத்தனைச் செடிகளும் ஒன்று சேர்ந்து பூவெளியாக ஆக்கி வைத்திருந்தன.

நீல ராகத்தைப் பாடியபடி மேகங்கள் மிதந்து கொண்டிருந்த மாலையில், தெளிவாக அலைகளை நகர்த்திக் கொண்டிருந்தது ஒரு குளம். கரைகளில் பறவைகள் கொஞ்சம் வளர்ந்த அரிசித் துண்டுகளைப் போல் குதித்தன. மரங்களில் எங்கணும் பூச்சிகளின், புல்களின் பேராரவாரம். பசிய துகள்கள் படர்ந்த இருதய இலைகள் தங்களைச் சுமந்து கொண்டிருந்த தருக்களின் மிகப் பிரும்மாண்டங்களின் மீது தங்களது ஆழ்ந்த கருணையை அசைந்தாடிக் காட்டிக் கொண்டிருந்தன.

மேதினியில் மீதுலாவும் தென்றல் காற்றிடையே தொலைவில் ஒளி பாய்ச்சும் செங்கதிரின் சிகப்பான துளியமுதங்கள் நிரம்பிக் கொண்டிருந்தன. மலரடி ராகம் ஒன்று தன் மனதினிற்கினிய துளை மூங்கிலைத் தேடித் தேடி வன வனாந்திரங்களின் அத்தனை திக்குகளிலும் முட்டி மோதியது. விழுதுகளிலும், கிளைகளிலும், இலைக் காம்புகளிலும் சுரந்து சுரந்து வழிந்தோடுகின்ற இயற்கை விருப்பு, ஆதியில் கண் விழித்த முதல் தாவரத்தின் முந்தானை நூல் வாசனையை நினைவுபடுத்தியது.

சின்னஞ் சிற்றுயிர்களும் சில்லென இசை பாடும் வண்டுகளும் அமர்வதற்கு இடம் பார்க்க அங்குமிங்குமெங்கும் அலைந்து கொண்டிருக்கையில், பனைமரங்களும், தென்னை இலைக்கீற்றுகளும் கேலிக் கைகொட்டி எள்ளி நகையாடி இன்னும் ஏதேதோ செய்து, அப்படியுமிப்படியுமெப்படியும் அசைந்து கொண்டேயிருந்தன. முழவுகள் முழங்குமாறு கேட்ட ஒலி, ஏதோ ஒரு ஞாபகப் ப்ரியத்தை நெஞ்சத்தாழத்திலிருந்து எழுப்பி விட எத்தனிக்கையில் நுரை ததும்பும் கரையெங்கும் மொட்டு மொட்டாய் முளைத்தது நிகழ்.

Friday, February 11, 2011

ஙு.



பின்னொரு குரல் கேட்டது. இருள் பரவியது. மழை பெய்ததன் பின் ஈரம் உணரப்பட்டது. குதிரைகள் களைத்து விட்டிருந்தன. குளத்தில் அலைகள் நகர்ந்து கொண்டிருந்தன. உடுப்புகள் நனைந்து ஒட்டின. இலைகளில் துளிகள் தேங்கி விழுந்தன. மலைமுகடுகளில் புகை எழும்பியது. மேகங்கள் காத்திருக்கவில்லை. குளிர் தரித்திருந்த காற்றில் புழுக்கள் மிதந்தன. போர்வைகளின் மேல் எழுதிய ரோமானிய மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டன. பாதையில் புழுதி படர்ந்தது. குட்டைப் பாவாடைப் பெண்களின் சின்ன மார்புகள் ருசிக்கப்பட்டன. கிளைகளில் பட்டைகள் உரிந்தன. மையச்சதுரம் மஞ்சள் வர்ணமடிக்கப்பட்டது. புத்தத் துறவிகள் புன்னகைத்தனர். வெண்கல மணி அதிர்ந்தது. நீலப் பறவைகளின் குச்சிக் கால்களில் மோதிர வளையங்கள். ஏரி தளும்பியது. புதர்களில் முள். உச்சிக்கூடுகளை அசைத்தார்கள். மதுக்குப்பிகளில் நுரை பொங்கியது. சாலை மகளிரின் செயற்கை மேடுகளில் குளிர்ப்படலம். நதிக்கரை நாகரிகம். தெரு விளக்கின் ஓசையில் பூச்சிகள். மூன்றாம் மாடி ஐந்தாம் அறையில் ஒரு தற்கொலை. ஜன்னல் கம்பிகளில் ஈக்கள். கடைசி விளிம்பில் ஆழ்ந்த முத்தம். குப்பைக்கூடையில் கசங்கிய முகம். பூமி நிரம்பியிருந்தது.

வெகு தூரம் வந்து விட்டோம்.

***

pic coutesy :: http://dark.pozadia.org/wallpaper/Figure-in-the-Dark/

Tuesday, December 07, 2010

நானே



தேடிய பெருங்கவிதை ஒன்று நெடுங்காலமாய் ஒரு கல்லிடுக்கில் ஒளிந்து கொண்டிருந்தது. தடுக்கிக் கொண்டு கீழே விழுந்ததும் ஒரு சாரையைப் போல மெல்ல எட்டிப் பார்த்தது. அதன் நா நுனியில் வார்த்தைகளின் நஞ்சு தடவப்பட்டிருந்தது. மேனிமேல் ஒரு பளபளப்பான தோல் நிலவொளியில் மினுங்கியது. நாசி வழி வெங்காற்று வெளியே வந்து சுற்றுப்புறத்தைச் சூடாக்கியது. நீல விழிகள் பாரித்த ஒளி, உமிழ்ந்த வேகத்தில் சிறு கற்கள் பொசுங்கின. கைகள் அற்றுக் கால்களும் அற்று மெல்லத் தன்னை அசைத்து வெளியே வந்து நின்றது.

அள்ளி விழுங்கிக் கொள்ளும் யத்தனத்தில் மெல்ல அணுகினேன். செவ்வாய் மேல் காமம் பூசியிருக்க, முத்தமிட்டேன். தீ தீண்டும் சுகம். வழுவழு உடல் தரித்து ஈரம் பதித்த நல் வரிகளால் எழுதப்பட்டிருந்ததைக் கொஞ்சம் கொஞ்சமாய் விழுங்கினேன்.

நானே கவிதையானேன்.!!

Pic courtesy :: http://www.allarminda.com/wp-content/uploads/2010/10/poetry2.jpg

Saturday, April 17, 2010

17.Apr.2010 - காலை - 06 Hrs.



கா! இளம்பரிதி அடிவானில் ஜொலிக்குது! போதா அதன் ஒளிச்சிதறல்கள் மேகங்களை நனைக்குது; ஏதோ ஒரு புகைபோக்கி கரும்புகையை உமிழுது; மாதோ வளர் தூதோ என நீலம் சுமக்கும் வானம் பரந்து வரிந்த வனத்தின் கீழ் வருகுதடி வருடுதடி தென்றல்!

ஏதோ ஒரு பறவை எதையோ பாடுகிறது. காக்கைக் குடும்பத்தார் எதையோ கவ்விப் பறக்கின்றார். தென்னை இளஞ்சோலையில் மரங்கள் அசையா நிற்கின்றன. சிவந்த தன் பொன் அதரங்களால் நாரைகள் தேடுகின்றன.

காற்றில் இது என்ன சுகந்தம்? அதிகாலையின் ஒரு பூபாள வாசம்? மெல்லத் தன் குளிராடை விலக்கி மர்மப் பிரதேசங்களைத் தீண்டும் ஆரஞ்சுக் கதிர்க்கரங்களைக் கண்டு வெட்கி இந்த இளங்காலை பூத்ததோ?

செம்மணிப் பூந்தூறல்கள் ஆகாயத்திலே! செழும் பொழில் வயல்களிலே! ஒரே போல் வளர்ந்திருக்கும் பயிர்ச் சகோதரிகளுக்கு அப்படியென்ன பேரானந்தம்..? ஈரப் பூக்களை இறக்கிக் கொண்டே இருக்கின்றனவே?

ஆகா! என்ன இது! எந்த மரத்தின் எந்த இருண்ட கிளையின் மீதமர்ந்து ஒரு குயில் சரத்தின் ஒற்றை ராகம் என்னை மோதுகின்றதே! சிட்டுக்குருவிகள் செல்லாமல் என்ன சொல்கின்றன? அவர்றின் சின்னத் தொண்டைகளில் யாரது சிந்தசைஸர் அமைத்தது?

’காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்று அரிசி தூவிய எம் கவிராஜனே! இதோ, உன் பெயர் சொல்லி என் வீட்டு உணவைத் தட்டில் திட்டில் வைத்தேன்.

பாய்ந்தன காகங்கள்! மோந்தன எம் சாதத்தை! அதன் கண்கள் சொல்லும் ஆகாயப் பசியை நான் கண்டதில்லையே இதுவரை!

எங்கிருந்து வந்தன இத்தனை பஞ்சு முடிச்சுகள்? சுருள் சுருளாய்... மிதக்கின்ற இந்தச் சொர்க்கத் துண்டுகளை ஏவியது யார்? விளிம்புகளில் மஞ்சள் கலந்த ஆரஞ்சை அள்ளி அள்ளிப் பூசிக் கொண்ட விரல்களை அவை எங்கிருந்து பெற்றுக் கொண்டன?

எருமைகள் எவற்றை உண்கின்றன? அதோ, அந்தப் பெரிய எருமைத் தாத்தாவின் கொம்பின் மேல் அமர்ந்து அந்தச் சின்னக் குருவி என்ன ரகசியம் சொல்கின்றது? அது அவற்றுக்கு ஏற்புடை அல்லனவா? ஏன் கயிறு கட்டிய மணி ஒலிக்கக் கழுத்தை இப்படி ஆட்டுகின்றன?

ஆ..! அந்தச் சின்னக் கன்றுக் குட்டியின் குட்டி வாலில் வெண் முடிகளை வளர்த்தது யார்?

யாரங்கே, ‘ட்ரூட்...ட்ரூட்...’ என்று சொல்லுவது? பேரண்டத்தின் எந்தத் திசையில் நிற்கின்றாள் அந்தக் குரல்காரி? அவள் கொண்டையில் ஊதாச்சிறகு இருக்குமா? அவள் அலகு எத்தனை கூர்? அவள் வாலில் எவ்வளவு இறகுகள் இருக்கும்?

அதோ ஒரு வேப்பமரம்! ஏன் ஐயா, இங்கே இத்தனை பேர் உன் இனத்தார் இருக்கையிலே அதென்ன நீர் அருகினிலே ஒரு பனைமரத்துடன் இத்தனை நெருக்கமாய் நிற்கின்றீர்? மஞ்சள் பழங்களை உதிர்க்கும் வேம்போடு நீ ரொம்ப வைத்துக் கொள்ளாதே பனையே! உன் நுங்கெல்லாம் கசப்பாகும்; ஆனால் நல் மருந்தாகும்.

அந்த ‘ட்ரூட்...ட்ரூட்...’ பறவை ஏதேனும் அந்தப்புரத்து ராஜகுமாரியா? ஒற்றையாய் ஒலித்துக் கொண்டிருக்கிறாளே..!!!

பம்ப்செட் போட்டு நீரிறைக்கும் பெரிய கிணற்றைச் சுற்றி யாரது வேலிக்காத்தானை விதைத்தது? என் பார்வை கேணிக்குள் பதியாமல் தடுக்கவா? முகக்கண்ணை யாரும் தடுக்கலாம்? என் மனக்கண்ணை நீர் என் செய்வீர்?

இதோ... பகலின் பேரரசன் கிளம்பி விட்டான். அவன் பொன் தேரில் புறப்படும் கிழக்கில் பிரகாசம் தான் எத்தனை! இரவில் பனிப் போர்வைக்குள் மூடி அவன் சேர்த்து வைத்த ஒளிப்பேழையை திறந்து விட்டிருக்கின்றான்.

ஆகா..! அதில் தான் எத்தனை ரத்தினங்கள்! எத்தனை வைரத் துணுக்குகள்! அவைதான் எப்படித் துள்ளித் துள்ளித் துளித்துளியாய் ஓடிப் பின் பிரவாகமாய்க் கிழக்கை நிறைக்கின்றன..! ஏ..! ஈரக் கர்ப்பிணி மேகங்களே! எங்கே செல்கின்றீர்கள்? ஓ..! குளிர் தேடி நகர்கிறீர்களா..? சரிதான். எங்கள் வெயில் சுரக்கும் வேங்கை வந்து விட்டானே! உங்கள் வெட்கத்தில் சிவந்த முனைகளை சுருட்டிக் கொண்டு வழி விடுங்கள்.

ஒருபக்கம் சரியும் ஓட்டு வீட்டிலிருந்து ‘கருத்த மானுடம்’ ஒன்று வரப்போரம் நடக்கின்றது. எந்தத் தெருவின் நாய் ஒன்று குரல் எழுப்புகின்றது..? அதோ அந்தத் தெருவில் கேட்பது, இதன் எதிரொலியா இல்லை, எதிராளியா..?

தூரத்துச் சாலையை அவ்வப்போது நினைவுறுத்தும் ஹாரன் சப்தங்களும், சிவப்பு மாருதிகளும் கடக்காவிடில் அங்கென்ன தார்நதியா? என்றன்றோ கேட்டிருப்பேன்...!

காகங்களே! மின் கம்பிகளின் மேல் எத்தனை ஒய்யாரமாய் நிற்கின்றீர்..! எத்தனை லாவகமாய் நடக்கின்றீர்..! எப்படி கம்பின்றி உங்கலால் சமன் செய்ய முடிகின்றது?

இதோ, வீட்டுத் தோட்டச் சின்னச் செடிகள் மேல் வெயில் பூச்சுகள் படியத் தொடங்கி விட்டன. இரவில் சுமந்த ஈரத் துளிகளை அவன் உறிஞ்சி விட்டு, தங்க முலாமை அல்லவா அந்த மகராஜன் ஈடாய்த் தருகின்றான்.

எத்தனை ஏகாந்தம்..! எத்தனை பறவைகள்..! அவற்றின் எத்தனை குரல்கள்..!

இதோ, இந்தச் சின்னச் சிற்றெறும்புகளைக் காண்கிறேன். வரிசை தவறாது எங்கே அத்தனை அவசரமாய்ப் போகின்றன..? அவற்றின் இராணுவ ஒழுங்குக் குழுமத்திலும் ஒரு புத்தன் இருப்பானா? ஒரு பாரதி பிறந்திருப்பானா..? ஓர் எறும்பு கவிதை எழுதினால் அது என்னவாய் இருக்கும்? ஒரு லட்டை, ஓர் எறும்பு உலகை நிறைந்த மஞ்சள் சொர்க்கம் என்று நினைத்தால், ஏ சூரியனே..உன் சூட்டுக் கரங்களால் இவற்றைத் அன்பால் கூட தடவி விடாதே! ஏதென்று அறியும் முன்னே, இந்தத் துளிப் பிராணிகளின் துயர் வாழ்வு தீர்ந்து போகும்.

ஓ..இரு பச்சைக் கிளிகள்! எங்கே பறந்து செல்கின்றீர்? வாருங்கள் என்னிடம்..! இதுவரை யாரும் கொய்யாக் கவிகளை உங்களுக்குக் கூறாக்கிக் கூராக்கித் தருகிறேன்.

தூரத்து மேற்கு மலைத்தொடர்களைச் சொகுசாய்க் கட்டிப் பிடித்துப் படர்ந்திருந்த இரவில் மட்டுமே வரும் கள்ளப் பனிக் காதலர்கள் சுருட்டியடித்துக் கொண்டு ஓடி மறைகின்றார்கள். இதோ வெப்ப வேந்தன் வந்து கொண்டிருக்கிறான்...!

தங்க மகன் அவன் வான் அதிர நடந்து வரும் போது, ரோஜா வனம் போல் இந்த வானமே, பூமியே, உங்களது பொருளிலா உறக்கத்திலிருந்து எழுந்து கொள்ளுங்கள்.

மஞ்சள் முகட்டு நேரங்களே! உங்கள் வள்ளல் பெரும்பசு வந்து விட்டான். கிழக்கு தேசத்தையே தன் கைப்பிடிக்குள் இழுத்து வைத்து, பரந்த நீல மண்டலமே ஜொலிக்க வந்து கொண்டிருக்கிறான். நானும் என் குறிப்புகளை நிறுத்தி விட்டு, இதோ செல்கிறேன், என் இன்றையக் கடமைகளுக்கு..!

ஆனாலும்... அந்த ‘ட்ரூச்சு...ட்ரூச்சு...’ தனிமை இளவரசிக்கு யாரையேனும் அனுப்பி வையும் ஆகாயம் ஆளவந்தாரே..! அவளின் சோகக் குரலைக் கேட்கக் கேட்க, என் கண்கள் துயரம் சொரிகின்றனவே, என் செய்வேன்...!!!

***

17.ஏப்ரல்.2010 காலை ஆறு மணிக்கு எழுதியது.

Monday, July 27, 2009

எழுவிழுதல்.



நீலப்
பனித்துகள்கள்
காலத்தின் போக்கில்
உறைந்து
சிவக்கின்றன
ரத்தமாய்.

சுழன்றுச் சுழன்று
கழன்று
விழுந்த
புரவியின் வால்
கரைந்த இடத்தில்
முளைக்கின்றது
ஒரு
மரங்கொத்தி.

தீயைப் புகட்டி
வாயில்
அடக்கிக் கொண்ட
அசுரன் முகம்
பூப்பூவாய்
வெடிக்கும்
போது
ஈரமாய் வானம்
மலர்கின்றது.

சிம்னியிலிருந்து
கசியும் புகை,
மஸ்லின்
மாராப்பை
நழுவ விடும்
நாட்டியக்காரி
மார்புகளைப் போல்
பொய்யாய்க்
கரைந்து
காணாமல் போகிறது.

வெண்குழல் திரவம்
ராட்சஸ வேகத்தில்
நகர்ந்து
உள்ளிழுக்கும்
வெட்டவெளியில்
துளித்துளியாய்ச்
சேகரமாகிறது.

புதிய நிழலைத்
திணிக்கும்
ஒரு ரகஸ்ய
வெய்யில்,
மந்தாரமாய்ப்
பெருகுகையில்,
இலைகளில் தேங்கும்
இரவின் இளமைத்துளி
பஸ்பமாகிறது.

அனலாய்
அடித்துக் கொள்ளும்
வண்டின் சிறகுகள்
கூசும் வகையில்
தொடையில்
துளைத்து
தலைநுழைக்கும் போது,

விழிப்பிலிருந்து
எழுந்து
கனவுக்குள்
விழுந்தேன்.

***

படம் நன்றி :: http://th06.deviantart.com/fs9/300W/i/2006/149/0/b/Fizzy_Water_by_shadow_kat_ana.jpg

Wednesday, August 20, 2008

சென்னை - நல்லா இரு கண்ணு!

கஸ்ட் 22 - சென்னை மாநகரின் 369-வது (3 + 6 = 9!) பிறந்த நாள். ஆகவே கொண்டாட ஒரு கவிதை...!

ஐஸு ஹவுஸு ட்ராக்காண்ட நிக்குற ஃபிகரு கில்மா வய்ஸு!
பாக்க சொல்ல பளக சொல்ல அது பாடி ரொம்ப நைஸு!

டாவடிக்குற பொண்ணுக்கெல்லாம் டைசன் மாரி அப்பன்! அது
பாவம் போல பாக்க சொல்ல பத்திக்குறானே குப்பன்!

தள்ளினு வர பொண்ணிருந்தா ஜில்லுங்குது பீச்சு வெயிலு!
அள்ளினு போ ஆத்து தண்ணினு அசத்துது அந்த குயிலு!

ஈ.ஸி.ஆரு தோப்புக்குள்ள ஒதுங்கும் ஜோடி வேஸ்டு!
ஏ.ஸி. போட்ட தேட்டருக்குள்ள இருக்குது நம்ம டேஸ்டு!

ஸ்பென்ஸரு, சிட்டி சென்டருக்குள்ள லுங்கி கட்டினு போனா,
பாக்கறதில்ல, பாயா ஊத்தற ஆயா போலி ருக்கற மீனா!

கோயம்பேட்டுக்கு போனதால கொறயுது கார்னர் மவுஸு!
கோலி தண்டு காலந் தொட்டு கொறயல எங்க ரவுஸு!

ட்ரிப்ளிகேன் மெட்ரோ ட்ரூப்பு, ஐலண்ட் குப்பம் கானா க்ரூப்பு மோதிக்கிட்டா வாடா!
க்ரிப்பில்லாம பாட சொல்லோ காது கிளிஞ்சு போனா, எறியலான்டா சோடா!

மோதிப் புட்ச்ச கறுத்த மீன வறுத்து விக்கப் பாத்தா,
பாதி வெலைக்கு கேக்க றான்டா, சொல்லு 'போடாங் ***'!

ரிச்சா, ஆட்டோ, டாக்ஸி, ட்ரெயினு எத்து வேணா உண்டு!
ரிச்சா போக ஆசப்பட்டா இருக்கு ஏர்போர்ட் ரெண்டு!

கானா, டிஸ்கோ, பாப்பு, ராப்பு, சல்ஸா, ஜிம்மு, தாச்சி,
போனா ஃபிட்டாகும், அல்லாம் துட்டாகும், பர்ஸு பணமா காச்சி!

கூவமிருக்கு கோட்டயிருக்கு தில்லிருந்தா போலாம் மன்சா!
பாவம் செய்ய பயமில்லனா எப்பயும் வாளலாம் குன்ஸா!

சப்பாத்தி எட்த்து சால்னா தொட்டு நாஷ்டா துன்னா போதும்!
அப்பால பாக்கலாம், டயர்டானேன், ஹாயா தூங்கப் போணும்!

Advanced Birthday Wishes, Chennai...!!!

Tuesday, April 22, 2008

நன்று என்று ஆன பின்!



நீலக்கடலில் இருந்து
உறிந்து கொண்டதா
தனது அலங்காரத்தை
வானம்?
இல்லை,
வானின் நிறத்தில்
இருந்து
தனக்கான ஆடையை
அணிந்து கொண்டதா
கடல்?

அசைந்தாடும் காற்றில்
இருந்து
அறிந்து கொண்டதா
மஞ்சள் நிறத்தை
வெயில்?
இல்லை,
கொதிக்கும்
கதிரிலிருந்து
கற்றுக் கொண்டதா
பகலின் நிறத்தைக்
காற்று?

பனியின்
மினுமினுப்பில் இருந்து
பறித்துக் கொண்டதா
வெண்மையின் அழகை
நிலா?
இல்லை,
வெண்ணிலவின்
அமுதிலிருந்து
பகிர்ந்து கொண்டதா
குளிர்மையை
பனித்துளி?

பச்சைக்
குளிர் நீரைப்
பார்த்து
பசியல் ஆனதோ
தாவரம்?
இல்லை,
பச்சையம் கரைந்து
பாசிகளால்
ஆனதோ
பாயும் நீர்?

பெண்மையின்
மென்மையில்
பதுங்கிக் கொண்டதோ
ஆண்?
இல்லை
ஆணின்
வன்மையில்
வழுவிக் கொண்டதோ
காதலின் பெண்?

இரண்டென்று
ஏதுள?
எல்லாம்
ஒன்று
என்று
ஆன
பின்!

சேர்தலே
நன்று
என்று
ஆன பின்!

***

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை

Friday, November 16, 2007

பழி.




ரு கன்னத்தை
அறைந்தால்
மற்றதைக் காட்டு
என்ற எண்ணத்தை
மிதித்துத்
தேய்த்து விடுகின்றன
கால்கள்,
அடுத்தவர் தன்னை மிதிக்கையில்!
கால்கள்
அறிவதில்லை
கன்னங்களின்
பெருந்தன்மை...!

Monday, July 09, 2007

வாழ்த்து மடல்!


ரிசாய் என் தமிழ் தான் தரமுடியும்,
தரிசாய் என் கரங்கள் தற்போதைக்கிருப்பதால்!

புகழொளி பட்டுத் திருமேவும் கதிரின்
திகழொளி பட்டுத் திரை வானெங்கும் தித்தித்திட,
வள்ளித் தலைவன் வாசமலர் சூடிநிற்ப,
வெள்ளிக்கிழமை துணை சேர்ந்தாய், வாழி!

நாதசுரம் மேளமெல்லாம் நல்லோர்தம் ஊதிநிற்ப,
வேதமுறை பட்டரெல்லாம் வேண்டும் முறை ஓதிநிற்ப,
கூதலுற்ற காற்றுவந்து கூரையெங்கும் கூடுகட்ட,
பாதவிரல் தரைதேய்ப்ப பாங்குடன் நிற்கின்றாய், வாழி!

சுற்றி நிற்கும் பேரதனால் சுற்றமாயினர்,
உற்ற நண்பர் உறவினர் உவந்து நிற்பனர்,
பெற்ற நேரமெண்ணி அம்மை வாழ்த்திநிற்ப,
உற்றவனின் மணிவிரலில் விரல் கோர்த்தாய், வாழி!

தீவலம் வரும்போது திருமகனின் விரல் பிரியாய்,
நீவலம் வருகின்ற மாமாவின் மனம் பிரியாய்,
சேர்வளம் சேர்கின்ற செழும்வாழ்வு பிரியாய், உங்கள்
பேர்வலம் வரச்செய்யும் பிள்ளைகள் பெறுவாய், வாழி!

ஒருபாதி பெற்று, ஓருயிராய் நின்றாள் அன்னை,
திருமகளோ நாரணனின் துணையாய் நின்றாள்!
தருவாய் உன் அன்பையெல்லம் கற்பகத்
தருவாய் மனம் சேர் மன்னன் மேல், வாழி!

'வாழ்த்துதற்கு வயது வேண்டும்', வயதாகிப் போன மொழி!
வாழ்த்துதற்கு மனம் போதும், வந்து நிற்க மாட்டாமல்,
வாழ்த்த வந்துள்ளேன், வாழி வாழி பல்லாண்டு,
வாழையடி வாழையென்று வாழி வாழி பல்லாண்டு!

எழுதியது : 05 - DEC - 2003.

ன் இருள் காலங்களில் ஓர் அக்காவின் திருமணம் நடந்தது. வெட்கத்தினால் நான் மண விழாவிற்குச் செல்லவில்லை. பின் ஒரு நாள் அவர்களைப் பார்க்கச் சென்று, அப்போதும் அவர்களுக்கு அன்பளிக்க ஒன்றும் கையில் இல்லாததால், வற்றாத அன்னை நதியாய்த் தமிழில் எழுதிக் கொடுத்தக் கவிதையிது!

இப்போதும் படிக்கையில்... ஏதேதோ நினைவுகள்...!

Sunday, June 10, 2007

கொஞ்ச நேரம் இருக்கட்டுமா, அப்பா?




கொஞ்ச நேரம் இருக்கட்டுமா, அப்பா?

உருக்கும் வெயில்,

அரசுக் கோப்புகள் போல்
மெதுவாய் நகர்கின்ற
வாகனங்களால் நெருக்குறும்
நகரச் சாலை,

அருகு இல்லத்தின்
அடையாளம் தெரியாத
அட்டைப் பெட்டி வீடுகள்,

தாத்தா,பாட்டி
இல்லாத
தனித்த நேரங்கள்,

குடைமிளகாய்
காயப்போட்ட
மாடிகளில்,
வலைக்குடை
விரித்த
புறாக்குண்டு மாளிகைகள்,

அலை நனைக்கின்ற
கரை சென்றும்
அனல் கரைக்கின்ற
மாலை நேரங்கள்,

யாவும் இல்லாத
இடம் கண்டேன்.

மஞ்சள் வெயில்
மலர்கின்ற காலம்,

மயக்கும்
தென்றல் தொடுகின்ற காடு.

கிளை கிளையாய்,
அலை அலையாய்,
பரப்பி நிற்கின்ற
நெடு மரங்கள்
நிறைந்த காடு.

சலசலவென நீரோடை
பாய்ந்து,

ஜலஜலவென தலையாட்டும்
பூக்கள் நிறைந்த
இந்தக் காடு.

போதுமப்பா எனக்கு,

ஓவியமாய் இருந்த போதிலும்
ஒரு பொழுது
இருந்து விட்டு
வருகிறேன்,
இன்றைக்கெல்லாம்...!

Thursday, May 31, 2007

துணை நீயே.


ள்ளானா,
இல்லானா..?

இல்லாள்,
இல்லான்,

ஏதும்
அல்லான்,

ஒரு போதும்
பொய் சொல்லான்,

உள்ளே
சூது இல்லான்,

தீவழி
செல்லான்

உள்ளத்தில்
உள்ளானா,
இல்லானா..?

உருவு கொண்டானா,
அருவு என்றானா.

அருவிலிருந்து
கருவாகி,

கருவிலிருந்து
உருவாகி,

உருவிலிருந்து
எருவாகி,

எருவிலிருந்து
அருவானானா..?

ஒருபோதும்
முடியாத சக்கரமாய்
உருள்கின்ற நேரங்களில்,

ஒருநாளும்
அடையாத கதவுகள்
கொண்டவனா?

மனம் வெதும்பி,
மெளனம் பூசிக் கொள்ளும்
போதும்,

தினம் போராடும்
கணங்கள் நிறைந்து
கலங்கிடும் போதும்,

துணை நானே,
உனைக் காக்க,
நினை எனையே
என்பவனா...?

Sunday, May 27, 2007

அன்புடன் - படங்களும், படைப்புகளும்!

ன்புடன் இணையக் குழுமத்தின் இரண்டாம் ஆண்டுக்கான கவிதைப் போட்டிகள், இனிதாக நிறைவுற்று, முடிவுகளும் அறிவிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. நான் கலந்து கொண்ட போட்டியின் முடிவுகள் அறிவிக்கப் பட்டு விட்டதால், நிபந்தனைகளுக்கு உடபட்டு, இப்போது அக் கவிதைகளை இப்பதிவில் இடுகிறேன்.

போட்டியில் வென்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

படம் 1 :



படைப்பு 1 :

ருளின் விரல்கள் நீண்டு
எடுத்துக் கொள்கிறது
ஒளியின் கைகளில்,
நிறைந்திருக்கும் நம்பிக்கை வெளிச்சத்தை!

இதயத்தின் இடுக்குகளிலிருந்து
எண்ணம் நீளுகிறது,
உன் இதமான புன்னகையின்
கதகதப்பைத் தேடி.

படம் 2 :
படைப்பு 2 :

ழையோடும்,
என் மனதோடும்
நான்
மகிழ்ந்திருந்த
பொழுதுகள் சொல்லவா?

முதல் நாள்
பள்ளியில் சேர்கையில்
பெய்த மழை
சீருடையில்
வழுக்கிச் சென்றதில்
ஈரமானது
உள்ளங்கை!

சபித்த
மழை நாளில்
நிறுத்தப்பட்ட
இறுதிப் போட்டியின் வலி
கண்கள் வழி
கசிந்ததை
உணர்வாயா..?

கைக்கெட்டா
கொய்யாக் கனிகளை,
வெயில் பெய்த
ஒரு
மதியத்தின் மழை
பறித்துக் கொடுத்ததை
அறிவாயா..?

வெள்ளமெனத் திரளும்
இருட்டில்,
மழைத்துளிகள் படிந்த
இரு இதழ்களின்
அருகாமையில்
இனித்தது
அந்த இரவு
என்பதை
புரிந்தாயா?

ஈரத்தில்
ஒட்டிப் போன இறகுகளோடு
கூண்டுக்குள்
இறந்து கிடந்த
குருவி கண்டு
திட்டிய
மழை நாள்,
நீ கண்டதுண்டா..?

வெயில் எழுதிய
வலி நிரம்பிய
எழுத்துக்களை
நெஞ்சில்
சுமந்து நடக்கும்
நீ அறிவாயா..?

எங்கள் மனம்
போல்,
விரிசல் கண்ட
நிலம் மேல்
நீ நடந்து
தேடுவது
பானை நீரா?
எங்கள் கண்ணீரா?
வருந்தாதே!
கிடைக்கலாம்
இரண்டும் எப்போதாவது!

எங்கள்
நீராதாரங்களும்
வற்றிப் போய்,
நாங்களும்
உன் போல் ஆகும் வரை
மை ஈரம் தீர்க்க
எழுதிக் கொண்டிருப்போம் உனக்காக,
உடைந்த பானையும்,
உடையாத நம்பிக்கைகளுமாய்
தேடிக் கொண்டேயிரு
ஈரத்தை,
நிலத்திலோ,
எங்கள் நெஞ்சத்திலோ..!


படம் 3 :



படைப்பு 3 :

செந்நிற
ஆடையினால்
கிழக்கில் ஆழி,
நனைகையில்
சொல்வோம்
செம்மொழிப்
புத்தாண்டு வாழி..!

செந்துணி விலக்கி
சிறுமுகம் காட்டும்
சிறுபெண்!
வந்தனை கூறி
வரவேற்போம்,
இன்னாளில்
வெறுப்பேன்?

வெட்கம் பூசிய
மஞ்சள் அடிக்கும்,
முகமெங்கும்
இந்திய வாடை!
அக்கம்பக்கம் பார்க்க
திரை விலக்கும்
துணிவு
இன்று
பெண்ணின் ஆடை..!

அலைகடல்
உள்ளிருந்து
எழும் கதிர் போல்,
அம்மா ஆடையின்
நிழல் தாண்டி
வரும் குழந்தை போல்,
வரும் சர்வஜித்து,
கவலைகள் களைந்து,
நோய்கள் நசிவுற்று,
கைபடும் நல்காரியம்
யாவும்
நன்றாய் நிறைவுற,
சுபமஸ்து...!

http://groups.google.com/group/anbudan

Friday, May 25, 2007

ஹைக்கூவாம்..!

து College!

இங்கே இருப்பது நாலு Age!

இப்ப கத்துக்கிட்டா தான் Knowledge!


பாட்டி

வடை சுட்டாள்!

காக்கையும்!


ன் இதழ்களில்

பிஸ்கட் துகள்கள்!

துடைத்து விடவா

என் உதடுகளால்!


வெற்றியில்

இற்றுப் போய் விட்டால்,

வெற்றி, வெறியாகி விடும்!

Wednesday, May 09, 2007

சொல்!

ரு
சொல்லைச்
சொல்லச்
சொல்!

சொல்லச்
சொல்லச்
சொல்லப் பிடிக்கிறது
உன்
சொல்!

உன்
சொல்லைச்,
சொல்கையில்
சொல்வேனோ
மறு சொல்?

சொல்கின்ற
ஒரு சொல்
சொல்லாத
ஒரு சொல்லைச்
சொல்லாமலேயே,
சொல்கிறது!

சொல்லாத
ஒரு சொல்,
சொல்கின்ற
ஒரு சொல்லைச்
சொல்வதால்,
சொல்லப் படுகின்ற
விந்தையைச்
சொல்!

சொல்கின்ற
ஒரு சொல்
சொல்லிய
ஒரு சொல்லைச்
சொல்லாததாக்கச்
சொல்கிறதா,
சொல்!

என்ன
சொல்கிறேன்,
சொன்னால்,
சொல்வேன்,
என் பெயர்ச்சொல்!