Saturday, July 19, 2008

நீல.பத்மநாபன் அவர்களுடன் ஒரு சந்திப்பு.



மிழின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரும், நாவல், சிறுகதைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள் என்று பல துறைகளில் பல படைப்புகள் கொடுத்தவரும், சாகித்ய அகாதமி விருது வாங்கியவரும் ஆகிய திரு. நீல. பத்மநாபன் அவர்களை முதன்முதலில் இன்று சந்தித்தேன்.

ரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு சனிக்கிழமை காலை அவர் வீட்டைத் தொடர்பு கொண்டு 'சந்திக்க வரலாமா' என்று கேட்டேன். அவர் அன்றைய நாளில் அவர் ஒரு பயண ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தாலும் ஒரு பத்து நிமிடம் பேசினார்.

எனது புத்தகங்கள் எதையாவாது படித்திருக்கிறீர்களா? என்று கேட்டார். என்னவென்று சொல்வது? உண்மையே சொல்லி விடலாம் என்று, 'இல்லை சார்' என்றேன். சென்னையில் வானதி பதிப்பகத்தில் அனைத்து புத்தகங்களும் கிடைக்கின்றது என்றார். 'சரி சார். கிடைக்கின்ற புத்தகங்களைப் படித்து விட்டு அடுத்த வாரம் வருகிறேன்' என்று விடை பெற்றேன்.

சென்ற வாரம் ஊருக்குச் செல்ல வேண்டி இருந்தது. இரண்டு புத்தகங்கள் வாங்கி வரச் செய்தேன். 'தலைமுறைகள்' மற்றும் 'இலையுதிர் காலம்'. இரண்டையும் சென்ற வாரம் முழுக்க நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து வந்திருக்கிறேன்.

இன்று காலை மறுபடியும் ஃபோன் செய்து, டைம் கேட்டு ஒரு மாதிரி கால தாமதத்தோடு வீட்டைத் தேடி கண்டுபிடித்து ஒரு மாதிரி போய் விட்டேன்.

கோபப்பட்டார். அவரது சில வேலைகள் என் தாமதத்தால் தடைப்பட்டது. மன்னிப்பு கோரினேன். ஆனால் நன்றாகவே பேசினார். விளையாட்டு போல் நான் கேட்ட சிறுபிள்ளைத்தனமான கேள்விகளுக்கும் விரிவாகவே விடையிறுத்தார்.

ஒரு மணி நேரம் பேசினார். பத்து செகண்டுகள் நான் பேசினேன்.

பிறகு அவரைப் பற்றிய சாகித்ய அகாதமியின் ஆவணப்படத்தையும், பரிசு பெற்ற போது எடுத்த டி.வி.டி. வேண்டுமா? கேட்டார். யாராவது விடுவார்களா? உடனே வாங்கிக் கொண்டேன். டி.வி.டி. ஷாப்புக்குச் செல்ல வழி சொன்னார். இவனுக்குச் சொன்னால் புரியாது என்று தெரிந்து கொண்டதனால், ஒரு படம் வரைந்தே கட்டினார். அதன் படி எடுத்து வருவதாகச் சொல்லி வெளி வந்தேன்.

இது வரைக்கும் பார்த்தது அவரது ஒரு முகம். அமைதியான, தம் கருத்துக்களைச் சொல்லி நான் புரிந்து கொண்டேனா என்று உறுதிப்படுத்திக் கொண்ட அக்கறையான முகம்.

டி.வி.டி. ஷாப்புக்குப் போய், காபி எடுக்கச் சொல்லிக் கொடுத்து, நல்ல ஹோட்டல் ஒன்றில் உணவு உண்டு, ஷாப்புக்கு ரிடர்ன் போய், 'இன்னும் ரெடியாகலை சார். வெய்ட் பண்ணுங்க', உட்கார்ந்தவாறே கொஞ்சம் கண்ணசந்து, திடுக்கென விழித்து, வாங்கி , சார் வீட்டுக்குப் போய் மாஸ்டர் காபியைக் கொடுக்க மணி மூன்று அரையைத் தாண்டி இருந்தது.

அவரை குட்டித்தூக்கத்தில் இருந்து தொந்தரவு செய்து இன்னும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்த போது, அவரது கணிணி சில பிரச்னைகளைக் கொடுப்பதை சரி செய்ய உதவினேன். மகிழ்ந்தார். ஒரு குழந்தை போல் சந்தோஷப்பட்டார். இது அவருடைய மழலைத்தன முகத்தைக் காட்டியது.

அவருக்கென்று ஒரு வலைப்பக்கம் உருவாக்க உதவி செய்தேன். ஆனால் அதில் தொடர்ந்து எழுத நேரமின்மை ஒரு முக்கியமான காரணமாக இருக்கின்றது என்றார்.

கிளம்பும் போது அடுத்த முறை வரும் போது, கண்டிப்பாக உங்களது சில புத்தகங்களைப் படித்து விட்டு அதைப்பற்றி பேசலாம் என்றேன். வாசல் வரை வந்து, கணிணி பிரச்னை தீர உதவியதற்கு மறுபடியும் ஒரு முறை நன்றினார். எனக்கே கூச்சமாகிப் போனது.

எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருந்தால், வாசல் வரை வந்து கை கூப்பி விடை பெறும் போது மற்றுமொரு முறை பிரச்னை தீர உதவியதற்கு நன்றி சொல்வார்..?

பின் தம்பானூர் செல்வதற்கும் வழி சொன்னார். சரியாக அதை ஃபாலோ செய்து பஸ் ஸ்டேண்ட் வந்தேன்.

சில சின்னச் சின்ன நிகழ்வுகள் ::

*தம்பானூரில் இருந்து ஆட்டோவில் வந்து கல்யாண் ஹாஸ்பிடல் ரோடு தாண்டி வந்து விட்ட பின்பு. ஜங்ஷன் போய் நிறுத்தி இறங்கு என்றார். மீண்டும் திரும்பி கல்யாண் ஹாஸ்பிடல் ரோடு போக முடியுமா என்றால், அது வழியாகத் தான் வந்தோம். இனி முடியாது என்று சொல்ல, வேறு வழி இன்றி திரும்பி நடந்தேன்.

*ஒரு அரிசி மண்டிக்காரரைடம் கேட்க, அவர் எனக்காக் ரெண்டு கால் செய்து யார், யாரையோ கேட்க, அவர்களுக்கும் விலாசம் தெரியாமல் பிறகு நானே ஒரு வழியாக ஆட்டோமொபைல்ஸ் அருகில் இருந்த சாரின் வீட்டைக் கண்டறிந்தேன். வரும் போது மண்டிக்காரருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். மறந்தேன்.

*எனக்கு சாரைப் பார்க்க மகாசய ஸ்ரீஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி போல் இருக்கிறீர்கள் என்று சொல்ல நினைத்தேன். சொ.வில்லை.

* என்னுடன் தூய தமிழில் பேசிக் கொண்டிருக்கும் போதே, ஏதோ கால் வர டக்கென்று மலையாளத்தில் சம்ஸாரிக்கத் தொடங்கினார். எனக்கு ஆச்சரியமாகப் போய் விட்டது.

*நடு நாளில் போனதால், இங்கேயே சாப்பிடலாமே என்று பல முறைகள் கேட்டார். நான் தான் கூச்சப்பட்டு, வெளியேவே சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று வெளியே வந்தேன்.

*இந்த நாட்களில் நான் சாப்பிட்ட ஒரு நல்ல கேரள உணவகம் ஒன்று கண்டுபிடித்தேன். சும்மா அல்வா போல் சாதம் நழுவியது. அதன் பலனோ என்னவோ, டி.வி.டி. ஷாப்பில் உட்கார்ந்தவாறே கொஞ்சம் கண் செருகினேன்.

*டி.வி.டி. ஷாப்பில் ஒரு மலையாளப் படம் ஓடிக் கொண்டிருந்தது. காவ்யாவும் திலீப்பும் கொஞ்சம் இளையவர்கள் போல் தோன்றியதால், 'ஈ ஃபிலிம் பழசு அல்லே' என்று கேட்க, 'அதே, காவ்யாவிண்ட ஆத்யம் மூவி' என்றார். நேரம், கொஞ்ச நேரத்தில் கேபிளில் ஏதோ ப்ராப்ளம் வந்து சிக்னலில் கறுப்பு வெள்ளை யுத்தம் நடக்க, கண்ணயர்ந்தேன்.

*பேச்சு வாக்கில் சாரின் வீட்டம்மா, காபி கொடுத்தார்கள். ப்ரமாதம். தண்ணீரிலும் கேரள மணம் இருந்தது.

*சாரின் வீட்டு லைப்ரரி காட்டினார். பிரமித்துப் போனேன். எத்தனை புத்தகங்கள்!!!

மிக்க நன்றி சார். அடுத்த முறை போகும் போது, அவரது சில புத்தகங்களையாவது படித்து விட்டுப் போக வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.

அவருடன் பேசிய போது என் செல் போனில் ரெக்கார்ட் செய்தேன். அது ரோட்டின் ஆட்டோ சத்தம், ஹாரன் இரைச்சல், மாட்டு வண்டிகளின் டக் டக், என் இடையூறுக் குரல் போன்ற இரைச்சல்களுடன் பதிவாகி இருக்கின்றது. .amr ஃபார்மட்டில் இருப்பதால், ஏதாவது செய்து கன்வர்ட் பண்ணி, வலையேற்றுகிறேன்.

மெதட் தெரிந்த மக்கள் டிப்ஸ் கொடுத்தால் நலம்...!

Get this widget | Track details | eSnips Social DNA

Friday, July 18, 2008

கோலி!

வன் மிக கூராய் இருந்தான்.

கூட்டத்தின் இரைச்சல் அந்த பிரம்மாண்டமான மைதானம் முழுதும் அலையடித்துக் கொண்டிருந்தது. அவ்வப்போது கைகளைக் கோர்த்துக் கொண்டு மெக்ஸிகன் வேவ் காலரிகள் எங்கும் பரவிக் கொண்டேயிருந்தது. வெஸ்டர்ன் ராயல்ஸ் வீரர்கள் மற்றும் சதர்ன் ஷார்க்ஸ் வீரர்கள் கால்களுக்கிடையே பென்ஸீன் ஸ்ட்ரக்ச்சரின் இடைவெளிகளில் கருப்பு - வெள்ளை வர்ணங்கள் பூசப்பட்ட பந்து உதைபட்டுக் கொண்டிருந்தது.

அவன் கவனம் இதில் இல்லை. கோலியையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது பார்வை கோலியையே சுற்றிக் கொண்டிருந்தது. காதுகளில் பிஸினஸ் மேக்னெட் ஷா சொல்லியது நினைவில் மிதந்தது.

"லுக்..! எனக்கு ரொம்ப நேரம் இல்லை. ஒன் ஹவர்ல ஜெர்மன் ஃப்ளைட் பிடிச்சாகணும். நேரா விஷயத்துக்கே வந்திடறேன். இந்த காண்ட்ராக்ட் ஸ்டார்ட் பண்ணினப்ப இந்த கோலியை நம்பித் தான் சைன் பண்ணினேன். நான் பணம் பண்ணனும்னா திஸ் கோலி இஸ் இம்பார்ட்டண்ட். பட் இப்ப த பிஹேவியர் இஸ் நாட் குட். நிறைய நஷ்டம். வேற வழியே இல்லை. வி ஹேவ் டு ஃபைண்ட் அனதர் கோலி. இந்த கோலியை காலி பண்ணியாகணும்! அதுக்கு நீ வேணும். வாட் இஸ் யுவர் சார்ஜ்..?"

"சார்..! காலி பண்ணணும்னா எப்படி? உலகத்தை விட்டே காலி பண்ணணுமா?"

"இஸ் தேர் எனி அதர் மெதட்? சொல்லு பார்க்கலாம். விஷயம் யார் மூலமாகவோ இல்லை இந்த கோலி மூலமாகவோ வெளிய தெரிஞ்சிச்சுனா, பேர் கெட்டுப் போகும். நெக்ஸ்ட் அனதர் ட்ரைல சிக்கல் நிறைய வரும்..."

"ஓ.கே.சார். இனிஷியல் பேமெண்ட் த்ரீ சி... நெக்ஸ்ட் பார்ட், வேலையை முடிச்சப்புறம் வாங்கிக்கறேன். துபாய்க்கு டிக்கெட் புக் பண்ணிக் குடுத்திடுங்க. இங்கயே இருந்தா ரிஸ்க் அதிகம்..!"

"த்ரீ சி.. கொஞ்சம் அதிகமா இருக்கற மாதிரி இருக்கே..?"

"என்ன சார்..? விஷயம் அவ்ளோ சுலபமான ஒண்ணு இல்லையே..? அந்த கோலியை நெருங்கறது அவ்வளவு சுலபம் இல்லையே..!"

"ஓ.கே. அக்கவுண்ட் நம்பர் மாஸ்கிட்ட குடுத்திரு! பேமெண்ட் அங்க பாஸ் ஆகிடும். என்னிக்கு பண்ணப் போற..?"

"நெக்ஸ்ட் ஃப்ரைடே. அன்னிக்குத் தான் டபிள்யூ.ஆர்., எஸ்.எஸ் மேட்ச் இருக்கு..."

"அதை எல்லாம் கரெக்டா ஞாபகம் வெச்சுக்கோ..! என்ன தான் பெரிய டெரரா இருந்தாலும், ஒன்ஸ் ஃபுட்பால் கிங்கா இருந்திருக்கே இல்லையா..?"

"அதுக்காக இல்லை. எல்லார் கவனமும் மேட்ச்ல தான் இருக்கும். கோலியை கொஞ்சம் ஈஸியா நெருங்கலாம்..!"

"டன். முடிச்சு ந்யூஸ் மாஸ்க்கு வந்திருச்சுனா, டிக்கெட் வழக்கமான பொருளா வந்து சேரும்..!"

நினைத்தது போல் அவ்வளவு சுலபமாக நெருங்க முடியவில்லை. கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் போனான். ஷாவின் செல்வாக்கு லேசர் ஒளிக்கீற்று போல் திசையெங்கும் பரவி இருந்தாலும் கோலிக்கு அருகில் வருவதற்குள், வியர்த்து தான் விட்டிருந்தான்.

கூட்டத்தில் ஆரவாரம் அதிகமாகவே எழுந்தது. டபிள்யூ.ஆர். இரண்டு கோல்கள் போட்டு விட்டதில், எஸ்.எஸ். கோலி பதற்றத்தின் உச்சியில் இருந்தான். ஆஃப் டைம் நெருங்கிக் கொண்டிருந்தது.

அவனது இலக்கு இந்த கோலியின் மீது தான்!

எங்கே..? ஓர் இடத்தில் இருந்தால் தானே..? அங்குமிங்கும் நகர்தல்; குதித்தல்; தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த எல்லைகளுக்குள் சென்று சென்று வருதல்.

அவனுக்கு ஆயாசமாக இருந்தது. எப்போது இந்த ஆட்டம் நிற்கும்? தகுந்த சமயம் எப்போது வரும்? சில சமயம் அந்த கோலி இவனையே பார்ப்பதாக தோன்றியது. ச்சீ..! பிரம்மை. கோலியாவது? தன்னை போய் பார்ப்பதாவது? சுற்றி இருக்கும் ஆயிரக்கணக்கான ஜீவன்களை விட்டு என்னை மட்டும் உற்றுப் பார்ப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

தனது பதற்றம் தான் தன்னை இப்படி எல்லாம் திங்க் பண்ண வைக்கின்றது என்று நினைத்துக் கொண்டான்.

நீண்ட விசில் அடிக்கப்பட்டது. லஞ்ச். அவன் ஓர் ஓரமாக ஒதுங்கிக் கொண்டான். சிலர் கலைந்து அவன் பக்கமும் வந்தார்கள்.

"என்ன சார்..? நீங்க கோலியை பார்க்க ஸ்பெஷல் பர்மிஷன் ஓனர் கிட்ட இருந்து வாங்கிட்டு வந்தவர் தான..?" ஓர் இளங்கிளி கேட்டாள்.

"எஸ்..! சரியா பார்க்க முடியல. அதுதான் கொஞ்ச நேரம் கழிச்சு பார்க்கணும்னு வெய்ட் பண்றேன்..!"

"நீங்க வெய்ட் பண்றதைப் பார்த்தா செகண்ட் ஆஃப் முடிஞ்சு தான் பார்க்க முடியும்னு நினைக்கிறேன்..!" சிவந்த ஈறுகள் தெரிய சொல்லிச் சிரித்தாள். "நாங்க எல்லாம் மேட்ச் பார்த்துக்கிட்டு இருப்போம். நீங்க மட்டும் கோலியைவே பார்த்துட்டு இருங்க..!" குலுங்கிச் சிரித்தாள்.

தான் செய்யப் போகும் காரியத்தை சொன்னால் இவள் என்ன நினைப்பாள்? 'சில்லி... டோண்ட் பி க்ரேஸி..' என்று சிணுங்குவாளா..?

நோ..! கண்ட்ரோல் செய். இது அதற்கான இடம் அல்ல.

மேட்ச் தொடர்ந்தது. அவள் மேட்ச் பார்க்க தனது இருக்கைக்குச் சென்றாள்.

அவன் சுறுசுறுப்பானான். தனது கோட்டில் இருந்து, லேஸர் எமிட்டரை எடுத்தான். செக் செய்தான். புல் சார்ஜ்.

அருகில் சென்றான். கோலியைக் குறி வைத்தான்.

ட்ரிக்கரைச் சுண்ட விரல்களை வைத்து அழுத்...

"ஸ்டாப்..!"

பார்த்தால், போலிஸ்.

பின்னால் அந்த இளங்கிளி.

"மிஸ்டர்..! உங்களுக்கு இந்த ஆர்டர் குடுத்த பிஸினஸ் மாக்னெட் ஷாவோட போன் கால்ஸை ட்ராக் பண்ணிட்டு இருக்கோம். அதில இந்த ப்ளானை பற்றி மாஸ்கிட்ட பேசிட்டு இருக்கறதை வெச்சு, இங்க இவங்களை வர வெச்சு, உங்களை மானிட்டர் பண்ணி.. டு யு வாண்ட் ஃபர்தர் ஸ்டோரி? கம் வித் அஸ்..!"

பெரிய இரைச்சல். காலரியின் மக்கள்.

அவள் ஈறுகள் தெரிய சிரித்தாள். அப்போதும் அழகாகவே தெரிந்தாள்.

பெண்.

***

இன்னும் கதை முடியவில்லை.

இரண்டு வகை கோலி Interpretation மக்களுக்காக கதையின் முடிவு இரண்டு கிளைகளாகப் பிரிகின்றது.

if( You_Recognize( கோலி == (தமிழ்) Goalie))
{
புட்பால் மாட்ச் பார்த்துக் கொண்டிருந்த மக்களின் கூட்டத்திற்குள் புகுந்து எப்படித் தப்பிப்பது என்று அவன் ஆழ்ந்து சிந்தித்தவாறே போலிஸுடன் நடந்தான். போவதற்கு முன் இந்த இளங்கிளியின் இரண்டு பற்களையாவது பெயர்த்தெடுப்பது என்ற துணைத் திட்டத்துடன்!
}

else if ( You_Recognize ( கோலி == (தமிழ்) Coli))
{
அவள் ரிமோட்டை எடுத்து சிகப்பு பட்டனை அழுத்தினாள். ஷா டிஸீஸ் அண்ட் ரிஸர்ச் ஃபவுண்டேஷனின் ரிஷப்ஷனில் ஃபுட்பால் லைவ் மாட்ச் காட்டிக் கொண்டிருந்த டி.வி உயிரை விட்டது.
}

To_தமிழறிஞர்கள்("யாராவது இந்த Gக்கு ஏதாவது புது ஸ்க்ரிப்ட் உருவாக்குங்களேன்!");

excite();

(தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகதை போட்டிக்காக.)

ஹைக்கூ முயற்சிகள்.

ன்று காலை டெக்னோபார்க் போக நடந்து போய்க் கொண்டிருக்கும் போது ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டே சென்றேன்.

"அண்ணே... இந்த மேட்ரிமோனியல்ல எல்லாம் சொல்லி வெச்ச மாதிரி எல்லாப் பொண்ணுங்களும் good looking, conventional அப்படின்னு எல்லாம் போட்டுக்கறாங்களே, அதெல்லாம் உண்மையாங்க அண்ணா...?"

"ஒவ்வொண்ணா சொல்றேன் பாரு. குட் லுக்கிங்னு போட்ட ப்ரொஃபைல்ல எல்லாம் போட்டோ இருந்திருக்காதே..?"

"ஆமாண்ணே...நெறைய அப்படித்தான் இருந்திச்சு.."

"இந்த ரெண்டு பராமீட்டரும் orthogonal vectors மாதிரி. ஒண்ணு இருந்தா இன்னொண்ணு இருக்கக் கூடாது, இருக்கது. அப்படி இருந்திச்சின்னா cos ப்ராடெக்ட் எடுத்து ஸீரோ ஆகிடும். பொண்ணு போட்டோ இருந்திச்சுன்னா, அந்த ஸ்டேட்மெண்டுக்கே தேவையில்லை. நாமளே ஓரளவுக்கு ஊகிச்சுக்கலாம். போட்டோ இல்லாம, ஸ்டேட்மெண்ட் மட்டும் இருந்திச்சுன்னா, கொஞ்சம் டவுட் தான் இல்லையா..? அடுத்தது நம்ம ஊர்ல எல்லாரும் கன்வென்ஷனல் தான். அதுல டவுட்டே இல்லை.."

"சரி தாண்ணே...!"

"இன்னொண்ணு முக்கியமான டெஸ்க்ரிப்ஷனை விட்டுட்ட..God fearing..!"

"ஆமாண்ணே... அதுக்கு என்னண்ணே அர்த்தம்? எல்லோரும் வெள்ளிக்கிழமையானா மஞ்சள் சேலையைக் கட்டிக்கிட்டு, புத்துக்கு பால்கிண்ணம் வெப்பாங்களோ..?"

"அது தான் எனக்கும் தெரியல..." என்றார் சோகமாக.

கொஞ்சம் யோசித்து விட்டு, "ஒரு வேளை God is fearing on meனு இருக்குமாண்ணே...?" கேட்டேன்.

அட்டகாசமாக சிரித்தார்.

"இருக்கலாம்..!" என்றார். அவருக்கு கொஞ்சம் சமீபத்தில் தான் மணம் ஆகியிருந்தது.

சிரிக்கறீங்களா..? இருங்க வத்தி வெக்கறேன். மேடம்.. மேடம்.. ப்ளாக் படிக்கறீங்கள்ல... உங்களுக்கு தான் இந்த மேட்டர்.

"ஆமா.. இதெல்லாம் எதுக்கு திடீர்னு நீ கேக்கற..?"

ஹி...ஹி... அவரிடமிருந்து அவசரமாக நகர்ந்தேன்.

ன்று யதேச்சையாக அருண் என்ற விஞ்ஞானி/ வாத்தியார் / எழுத்தரின் ப்ளாக்கைப் பார்க்க நேர்ந்தது. ஸ்ரீரங்கத்து வாசம் அவரது எழுத்துக்களில் அடித்தது. அவருடைய ஹைக்கூ பற்றிய ஒரு பக்கத்தைப் பார்த்ததும் , உடனே ரெண்டாவது எழுதி விட வேண்டும் என்று கீபோர்டு பரபரத்தது.

விக்கியில் தேடினால் எக்கச்சக்கச்சக்க தகவல்கள் கொட்டின. 'சரி... இதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். தோன்றுவதை முதலில் எழுதலாம்.' என்று முடிவு செய்து மோட்டுவளையைப் பார்க்க, கிடைத்தன கீழே.

தொட்டுப் பார்த்தேன்,
கொட்டாச்சி.
பெண் வேடப் பையன்.

கொட்டும் மழை
நனைந்தவள் சிலிர்த்தாள்.
பார்த்தவன் வியர்த்தான்.

வெறிநாய் கடித்து,
குழம்பி, வீறிட,
ஷ்Shoe என்றேன்.

கொக்கின்
ஒற்றைக்கால் அடியில்,
கால் இல்லாத மீன்.

மழை வருகிறது.
குடை பிடிக்கிறேன்,
காயப் போட்ட துணிகளுக்கு.

இந்த தினுசில் சிந்தித்துக் கொண்டே போக, நமது தினத்தந்தி பத்தித் தலைப்புகளும் ஹைக்கூ கேட்டகிரி தானோ என்ற சந்தேகம் வந்தது.

காதலன் மாயம்.
கன்னிப்பெண் தற்கொலை.
நடந்தது என்ன?

புளியமரத்தில்
வேப்பம்பால்.
அதிசயச் சாமியார்.

சென்ற பிப்ரவரி 14-ல் காதல் ப்ரோபஸல் லெட்டர் எழுதிக் கொண்டு வாருங்கள் என்று... யாரும் சொல்லவில்லை, அலுவலகத்தில் போட்டி வைத்தார்கள். நமக்குத் தான் போட்டி என்றாலே, பொங்கல் ஆயிற்றே. களத்தில் குதித்தேன்.

பாருங்கள் ::

Hai U,

As the tiny drops fall from the leaves, I fall in love and you into me. I always get confused among the four, which room you stay in my heart?

Wish - not only mine, i wish it shall be yours also - to share a four letters word, 'Hai's with 'L and 'Bye's with 'E', not only LovE, but also LifE.

I am waiting on the footpath which is getting bath by Yellow light rain of Love's Blessings.

Can you lend your hands which are crowned by pink polished nails, to me thro out the journey called life...?

- Me.

இவ்ளோ தாங்க எழுதினேன்.

பரிசு ஏதாவது கிடைத்ததா என்று கேட்கிறீர்களா..? நீங்க வேற. இந்த நிலைமை தான் ஆச்சு. ;-((



படம் நன்றி :: http://www.imagezoo.com/collections/haiau/public/samples/Dapl0025.jpg.

ரண்டு நாட்களாக காலையில் பளீரென்று வெயில் அடித்ததே என்று நம்பி, குடை எடுத்துக் கொண்டு போகாமல் செல்ல, மாலையும், இரவும் மழை பெய்து எல்லாவற்றையும் நனைத்து விடுகின்றது. இன்று குடை எடுத்துப் போனேன். இன்னும் மழை வரவில்லை.

இது ஒரு தத்துவத்தை நினைவுறுத்துகின்றது.

பகலில் வெளிச்சமாக இருக்கின்றதே என்று குடை எடுக்காமல் போகாதே. மாலை கவியும் நேரம், இரவில் மழை வந்து நீ நனைய நேரிடலாம். எனவே பகலுக்காக இல்லாவிடினும், இரவுக்காக குடையை பகலிலேயே எடுத்து வைத்துக் கொள்.

புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று தெரியும். எனவே நோ மோர் விளக்கம்ஸ்.

தினப் பொழுதே வாழ்க்கையின் மினியேச்சர் மாடல் போல் தோன்றுகிறது.

ற்கனவே மூன்று புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இன்னும் இரண்டு, கொஞ்சம் சரக்கு சேர்ந்தவுடன் இணைக்கப்படும்.

புதிய பகுதிகள் ::

அலையும் கரையும்.

நந்தனம் வெஜ் ஹோட்டல்.

குறுகுறு காதல்.

இரு நதி, இடை நகரம்.

ஒரு Chip காஃபி.


நேற்று ரஜினிஃபேன்ஸில் இருந்து பல பாடல்களை இறக்கிக் கொண்டிருந்தேன். சில பாடல்களைக் கேட்க, எங்கேயோ நினைவுகள் பறந்தன.


Get Your Own Hindi Songs Player at Music Plugin

அந்தச் சிறுவனிடமிருந்து வெகு தொலைவு வந்து விட்ட மாதிரி இருக்கின்றது.

Wednesday, July 16, 2008

நிழலாய் ஞான் கூட வரான்...

ஒரு நாய் இறந்து போனது.

செல்லும் வழியில் கிடைக்கின்ற சில கூழாங்கற்கள் கால்களை குத்தினாலும் வலிக்காது. அவற்றை எடுத்து பைக்குள் வைத்துக் கொள்ள மனம் வரும். அடிக்காலின் மென் பாகத்தில் மட்டும் ஓர் அழுத்தம் மிஞ்சி இருக்கும்.

காற்றின் தடங்களில் தவழ்ந்து வரும் பூவாசம் நிறைந்திருக்கும் ஒரு மாலை நேரத்தில் மெளனம் மட்டுமே நிறைந்திருக்கும் உடல் முழுதும்!

இரவில் பேருந்துப் பயணம் செய்கையில் கூடவே வரும் ஒற்றைத் துணையாய் நிலா. நடுக்காட்டில் நள்ளிரவில் முழுச் சத்தத்தில் அதிர்கின்ற கானா பாடல்களைச் சுமந்து நிற்கையில் , தன் ஒளி வட்டத்தில் பிரபஞ்சத்தின் மோனவெளியை நிறைக்கும்.

கட்டற்ற கணக்கற்ற பின்னல் வலையில் எங்கெங்கோ சென்று எவையெவையோ பார்த்து, அவ்வப்போது கிடைக்கின்ற கண்ணுக்குத் தட்டுப்படுகின்ற சில முத்துக்களை இந்த அலை கரையில் தள்ளுகின்றது.

இந்த அலையும் ஒரு நாள் கரையும்.

இந்த கரையும் சில நாள் அலையும்.

அலையும் கரையும் இன்றி தள்ளி விடவும், அள்ளிக் கொள்ளவும் வேறு ஆளேது?

***

ஒரு நாய் இறந்து போனது.

எனது நாய் இறந்து விட்டது.
தோட்டத்தில்
ஒரு துருப்பிடித்த பழைய
இயந்திரத்தின் அருகே
அவனைப் புதைத்தேன்.

ஒருநாள் நானும் அவனுடன் அங்கே
சேருவேன்.
ஆனால் இப்போது அவன் தன்னுடைய
மெத்தென்ற கோட்,
கெட்ட பழக்கங்கள்,
மற்றும் ஒழுகும் நாசியோடு சென்று விட்டான்.
வானில் எந்த மனிதனுக்கும்
உறுதிப்படுத்தப்பட்ட சொர்க்கம் இருக்கும்
என்று என்றுமே நம்பாத உலகாயதனான
நான்,
நான் என்றுமே நுழையாத
சொர்க்கத்தை நம்புகிறேன்.
ஆம், நட்பாக
விசிறி போன்ற தனது வாலை அசைத்து
எனது வரவிற்காக எனது நாய்
காத்திருக்கும்
நாய்களுக்கான சொர்க்கத்தை
நம்புகிறேன்.

இல்லை, புவியில் தன்னை முழுதும் ஒப்படைத்த
ஒரு துணையை இழந்த சோகத்தை
நான் பேசப் போவதில்லை.
எனக்கு அவனது நட்பானது,
ஒரு போர்குபின், விண்மீனோடு தான் கொண்ட
உரிமையை விடாதது போன்றது.
மிகையே இன்றி அதன் நெருக்கம்
பற்றி சொல்ல:
அவன் என்றுமே என் ஆடைகள்
மேல் தாவியதில்லை.
அவனது முடிகளாலோ,
என்னை நிரப்பியதில்லை.
உறவில் மயக்கம் கொண்ட பிற நாய்களைப் போல்
எனது முட்டிகளை உரசியதில்லை.

இல்லை,
என்னைப் போன்ற வலிமிக்க
மனிதன்,
அவன் நாயாய் இருந்து
காலத்தை வீண் செய்கின்றான்
எனப் புரிந்து கொள்ளும் வகையில்
தேவையான ஒரு பார்வை பார்ப்பான்.
தனியாக எனக்காகவென்றே ஒதுக்கப்பட்ட
பார்வையால் என்னைப் பார்த்துக் கொண்டே
இருப்பான்.
அவனது இனிய வாழ்க்கை முழுவதும்
எப்போதும் என் அருகிலேயே, என்னைத் தொல்லை
பண்ணாமலும், எதையும் வேண்டாமலும்!

குளிர்ப் பறவைகள் வானத்தை நிரப்பும்
ஐஸ்லா நெக்ராவின் தனிமையான குளிர்காலத்தில்
கடற்கரையோரமாக நாங்கள் நடக்கையில்
எத்தனை முறை அவனது வாலுக்காக
நான் பொறாமைப்பட்டிருக்கிறேன்
மற்றும் எனது முடி அடர்ந்த நாய்
கடலின் முழு அசைவிற்கும் ஆற்றலோடு குதிக்கும்:

தனது தங்கநிற வாலை உயர்த்திக் கொண்டு
கடலின் நுரைகளுக்கேற்ப துள்ளிச் செல்லும்
எனது அலைகின்ற நாய்.

மகிழ்வாய், மகிழ்வாய், மகிழ்வாய்,
கூச்சமே இல்லாத அமைப்பைக் கொண்டு
நாய்கள் மட்டுமே அறியக் கூடியவகையில்.

இறந்து விட்ட என் நாய்க்கு எந்த வழியனுபுதல்களும் இல்லை
மற்றும்
நாங்கள் இப்போதும், எப்போதும்
எங்களுக்குள் பொய் சொல்லிக் கொண்டதில்லை.

எனவே இப்போது அவன் சென்று விட்டான்
மற்றும் நான் அவனை புதைத்து விட்டேன்,
அவ்வளவு தான்.

பாப்லோ நெரூடாவின் A Dog has died என்ற கவிதையை நான் புரிந்து கொண்டபடி எழுதியுள்ளேன்.

நன்றி :: Poem Hunter

Tuesday, July 15, 2008

பட்டயமேதுக்கடி குதம்பாய்.

"கெதி செரியா வரலை போலிருக்கே... எலே. என்னடே செய்றீங்க..? கஸ்டமரு முக்கியமல்லோ...?" நான் எதிர்பார்க்கவேயில்லை. ஓனர் வந்து சாம்பிள் எடுத்து பார்ப்பார் என்று.

வழக்கமாக நான் அமரும் நான்காவது வரிசையில் கிழக்கு பார்த்து இருக்கும் கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்தேன். ஓனரின் சீட்டில் இருந்து பார்த்தால் பார்க்கச் சிரமமான இடம் தான்.

"அருணன்... இன்னிக்கு சாதம் கொஞ்சம் கொழஞ்சாப் போல இருக்கே... அரிசி வேறயோ..?"

வந்து பார்த்து விட்டு, "இல்ல... மார்க்கெட்டுல நம்ம ஊரு அரிசிக்கு கொஞ்சம் தட தான். அதான் கொஞ்சம் வெல கொறவான அரிசி போட வேண்டியதா போச்சு. நாளக்கு வாங்க. நல்ல அரிசி வந்துரும்.."

"என்னடே அங்கன சத்தம்...?" ஓனரே எழுந்து வந்து,

"ஒண்ணுமில்ல மொல்லாளி, சாதம் கொஞ்சம் கொழஞ்சுப் போயிருக்கு. அதான் சொல்லிட்டு இருந்தாரு..."

"அதான்... அருணன் சொல்லுச்சு இல்ல... இன்னிக்கு மட்டும் கொஞ்சம் பொறுத்து சாப்பிட்டுக்குங்க.. பின்ன நாளன்ன நல்ல அரிசி வந்திடும்..." சொல்லி கொஞ்சம் எடுத்து சாம்பாரில் பிரட்டி வாயில் போட்டு பார்த்தார்.

பின் முன் சொன்னதைச் சொல்லி விட்டு மீண்டும் தன் சீட்டில் பொருந்திக் கொண்டார்.

திருவனந்தபுரத்தின் சென்ட்ரல் ரெயில்வே ஸ்டேஷனும், சென்ட்ரல் பஸ் ஸ்டேண்டும் எதிரெதிரே இருக்கின்றன. நடுவில் ஒரு சாலை போகின்றது. அதன் ஓரங்கள் சுவர்களின் அவசர நீரின் நாற்றத்தோடும், மஞ்சள் நிறத்தோடும் கரை பட்டிருக்கும். ஸ்டேஷனின் சுவர்களில் குறுக்கும், நெடுக்குமாய் சினிமா போஸ்டர்கள். மலையாளம், இந்தி, தமிழ், ஆங்கிலம். ப்ளாஸ்டிக் வினைல் போர்டுகளில் தரையில் இருந்து நான்கு அல்லது ஐந்து அடி உயரத்தில் எதிர்காலக் கனவுகளோடு இளம் நாயகர்கள் இரத்தக் கீற்றுக் கண்களோடு அலறி இருப்பார்கள்.

தேங்காய் எண்ணெயின் பொன் வர்ணத்தில் பொறித்த மீன் துண்டுகள், முழுச் சிக்கன் தொடைகள், மட்டன் மசாலா வாசம், சீப்படும் சீப்பான பலப்பல வாழைப்பழங்கள், கருப்பு, பச்சை திராட்சைகள், ஸ்டிக்கர் ஒட்டிய ஆப்பிள்கள், நேத்திரங்கா சிப்ஸ், ரோஸ் சிறு வலைகளில் குடியிருக்கும் ஆரஞ்சுகள், நூற்றுக்கணக்கான மலையாளப் பத்திரிக்கைகள், ஆங்கில தினசரிகள், தமிழ் வாராந்தரிகள், இருளும், ஒளியும் தடவிச் செல்லும் வெற்று மேனியின் பிம்பங்கள் பதித்த அட்டைப் புத்தகங்கள், கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் டைம் கீப்பர், டிக்கெட் ரிஸ்ரவ் செய்யும் க்யூ, ஆங்காங்கே சுவர்த் தூண்களில் பதிந்த டி.வி.க்கள், கூல்ட்ரிங்ஸ், மிக்சர் கடைகள், கட்டக்காபி கிடைக்கும் பெட்டிக்கடை, ட்ரான்ஸ்போர்ட் தொழிலாளர்களுக்கென ஸ்பெஷல் ரேட் உணவகம், ஜனங்கள், கொஞ்சம் வெயில், அவ்வப்போது தூறும் மழை இவற்றோடு இருக்கும் நந்தனம் வெஜ் ஹோட்டல்.

ட்ரான்ஸ்போர்ட் பஸ்களுக்கான டயர் மாற்றுதல், ஸ்டெப்னி அட்டாச் அடித்தல், எரிபொருள் நிரப்புதல், ரெஸ்ட் ரூம்கள் என்று இருக்கும் ஒரு மூலையின் ஷெட்டில் இருந்து ஆரம்பிக்கும் ஒரு எஸ்.டி.டி. பூத் கடைக்கும், இன்ஷா அல்லா என்று உருதுவில் எழுதி ப்ரேம் செய்யப்பட்ட ஒரு பிரியாணி கடைக்கும் இடையில் செருகிக் கொண்டு இருந்தது நந்தனம்.

வாரா வாரம் வெள்ளிக்கிழமை பத்திரிக்கைகள் படிக்கா விட்டால் நகத்தைக் கடித்து, தலையைக் குழப்பி, 'இன்று என்ன நேரம் நான் கிடைத்தேன் என் பூனைக்குட்டியே சொல் டாமியிடம்?' என்ற நிலைக்கு கொண்டு வந்து விடும் போது, சனிக்கிழமை மதியம் தம்பானூர் விரைவேன். புத்தகங்கள் வாங்கி விட்டு, நந்தனம் சென்று லஞ்ச் முடிப்பது வழக்கமாயிற்று.

"பரமு சார்... நான் ஒரு விஷயம் கேட்டிருந்தேனே.. என்ன சார் ஆச்சு...? ஏதாவது கிடைச்சுதா..?" கை கழுவி விட்டு பில்லையும் பணத்தையும் கொடுத்தவாறே கேட்டேன் ஓனரிடம்.

"சொல்றேன்..!" எண்ணி ட்ராவை 'சரக்'கினார். பணத்தை வைத்து விட்டு சில்லறையை கொடுத்தார்.

பாக்யாவின் புண்ணியத்தில் கேரள வசியங்களையும், பில்லி, சூனியம், மை வைத்தல், பெண்ணை மயக்குதல், மயிர், காலடி மண் கொண்டு அடிமைப்படுத்துதல், பேயோட்டுதல், மரத்தில் ஆணி அடித்து முடி சிக்கச் செய்தல், இரத்தப் பலி கொடுத்தல் பற்றி எல்லாம் அறிந்திருந்ததால் அவற்றையெல்லாம் நேரில் பார்க்க ஆசை.

"நீங்க கேக்கறதெல்லாம் இப்ப யாரும் பண்றதில்ல. இங்க பண்றதில்ல. அதெல்லாம் கிராமத்துப் பக்கமா போனீங்கன்னா பார்க்க கிடைக்கலாம். அதெல்லாம் ரொம்ப தரவு புடிச்ச வேலை. உங்களுக்கு எதுக்கு அதெல்லாம்..? இங்க வந்தீங்களா..? பணியைப் பார்த்து காலாகாலத்துல ஊரு போய் சேர்ந்தீங்களானு இருங்க..!" என்றார்.

சோர்வை அப்பிய முகத்தோடு வெளியே வந்தேன்.

நகரின் அத்தனை கழிவுகளோடு பெட்ரோல் வாசனை, டயர் கொளுத்தும் நாற்றம், அசைவ உணவுகளின் மிச்சங்கள் நிறைந்த கொஞ்சம் பெரிய சாக்கடையைக் கடந்து வெளி வந்தேன்.

விதுர, நெடுமங்காடு, மலப்புரம், கொல்லம், எர்ணாகுளம், குருவாயூர், கோயம்புத்தூர் செல்லும் வித விதமான பேருந்துகள் நின்று கொண்டிருந்தன. நாகர்கோயில், திற்பரப்பு, குளச்சல், திருநெல்வேலி, வேளாங்கன்னி, மதுரை செல்லும் தமிழ்நாட்டுப் பேருந்துகள் வேண்டா மருமாள் போல் ஓர் ஓரமாய் ஒதுங்கி நின்று கொண்டிருந்தன. நான் ஆட்டிங்கல் செல்லும் பேருந்துக்காக...!

"தம்பி இவிட வரு..!"

திரும்பிப் பார்த்தேன்.

ஒரு சாந்தமான் முகம். வெள்ளை சட்டை. மஞ்சள் கேரள வேட்டி. பாக்கெட்டில் ஒரு சிவப்பு துணித்துண்டை குத்தியிருந்தார். கம்யூனிஸ்ட் என்ற அடையாளம் சொன்னது. ஒரு புன்னகை. அது என்னை வசீகரித்தது.

"நிங்கள் தமிழோ..? அல்லங்கில்.."

"அல்லா.. அல்லா..! ஞான் தமிழே..! நிங்கள் தமிழ் அறியுமோ...?" ஆர்வமாய்க் கேட்டேன்.

"மானாட மழுவாட மதியாட புனலாட மங்கைசிவ காமியாட, மாலாட நூலாட மறையாட திரையாட மறைதந்த பிரம்மனாட, கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட குஞ்சரமுகத்தனாட, குண்டலமிரண்டாட தண்டைபுலி யுடையாட குழந்தை முருகேசனாட ஞானசம்பந்தரொடு இந்திரர் பதினெட்டு முனியட்ட பாலகருமாட, நரை தும்பை யருகாட, நந்திவாகனமாட, நாட்டியப்பெண்களாட, வினையோடே உனைபாட, யெனைநாடி யிதுவேளை விருதோடு ஆடிவருவாய் யீசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே...! இது நடராசப் பத்தில் வரும் ரெண்டாவது பாடல். எனக்கும் கொஞ்சம் தமிழ் அறியும்..." சிரித்தார்.

பிரமித்துப் போனேன். சிவந்த ஈறுகளோடு புன்னகைத்த இந்த கேரள கம்யூனிஸ்ட் தமிழில் நடராஜப் பத்து சொல்கிறார். Amazing.

"இட்ஸ் ரியலி வொண்டர்ஃபுல். எப்படி உங்களுக்கு இந்தப் பாடல்கள் எல்லாம் தெரியும்?"

"கோயம்புத்தூரில் இருந்தேன். அங்கே தமிழ் கற்றுக் கொண்டேன். மருதமலைக்குப் பின்னால் ஒரு ஆசிரமம் கண்டேன். அங்கே இந்தப் பாடல்கள் எல்லாம் படித்தேன். என்ன ஓர் அற்புதமான இடம்..! குமரன் கோயிலுக்கு பின்னால் குன்றின் பச்சை மலைகளில் இறைவனைத் தேடி தவ வாழ்க்கை..! சரி..! அது போகட்டும். நீங்கள் அந்த ஹோட்டலில் விசாரித்ததை நானும் கேட்டேன். உங்களுக்கு வசியம் வைப்பதை நேரில் காண ஆசையா..?"

"நான் உங்களை பார்க்கவேயில்லையே..?"

"ஹா... ஹா..! நீங்கள் எங்கே என்னை கவனித்திருக்க முடியும்? நான் என்ன ரோஸ் துப்பட்டாவும், வெளிர் மஞ்சள் சுடிதாரும் அணிந்த மங்கை அல்லவே..?" அட்டகாசமாய் சிரித்தார்.

ஆச்சரியப்பட்டுப் போனேன். எனில் அருகிலேயே இருந்திருக்கிறார்.

"வெங்காயமுண்டு மிளகுண்டுசுக்குண்டு உன்காயமேதுக்கடி குதம்பாய் உன்காயமேதுக்கடி" மெல்லிய குரலில் பாடினார்.

"சரி...! எப்போது அவற்றை பார்க்க முடியும் நான்..?"

"நான் உங்களை அழைத்துச் செல்கிறேன். இன்று வேண்டாம். வரும் வெள்ளிக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு இங்கு வாருங்கள். தென்மலைக் குன்றுகளுக்கு செல்ல வேண்டும். அங்கிருக்கும் சில கிராமங்களில் தான் இவற்றை இப்போது காண முடியும். பாலருவிக்கு பின்புறமாய் சில அடர் கிராமங்கள் இருக்கின்றன. அங்கே தான் நாம் வசியம் செய்யும் சில மனிதர்களை காணலாம். வருகிறீர்கள் தானே..?"

வெள்ளிகிழமை. மதியம் 2 மணி. எப்படியும் பயணம் செய்வதற்கே ஆறு மணி நேரம் ஆகி விடும். பின் இராத்தங்கல். கொஞ்சம் பயம் வந்தது. இந்த மனிதரை எனக்கு சில பாராக்களுக்கு முன் தான் தெரியும். இவரை நம்பி சென்று பார்க்க வேண்டுமா..?

"கண்ணேறுவராது பிணியொன்றும்நேராது கவலைப்படாது நெஞ்சங் கவியாது சலியாது, நலியாதுமெலியாது, கலியென்ற பேயடாது, விண்ணேறுமணுகாது, கன்மவினை தொடராது, விஷமச்சுரம் வராது, வெய்ய பூதம்பில்லி வஞ்சனைக டொடரா, விஷம் பரவி செத்துமடரா, எண்ணேறுசனனங்கள் கிடையாது, சாலபயமெள்ளளவு மேயிவராகிவ்...."

"போதும். நான் அம்பேல். வருகிறேன். இந்த வெள்ளிக்கிழமை. இதே இடத்தில்...!"

அவர் மற்றுமொரு மெளனப் புன்னகை சிந்தி திரும்பி நடந்தார். அந்தப் புன்னகைக்கே நான் வசியம் செய்யப்பட்டது போல் உணர்ந்தேன்.

ந்த வெள்ளிக்கிழமை சுத்தமாக பளிச்சென்று இருந்தது. ஈரக் கூந்தல் பெண்கள் இறுக்க சட்டை, பாவாடையில் கோயில்களுக்குச் சென்றனர். புதுப்படங்கள் ரிலீஸ் போஸ்டர். அடுத்த ஹர்த்தாலுக்கான அழைப்புகள் ஆங்காங்கே. அம்மன் கோயில்களின் பொங்கல் பண்டிகைக்கு பல இடங்களில் அழைப்பு. புதிய விளம்பரங்கள். சின்னச் சின்ன இளமங்கையர் அரையாடைகளில் புன்னகைத்து போட்டி போட்டு வாங்கச் சொல்லும் கன்ஸ்யூமர் ஐட்டங்கள். சில்லறை சிணுக்கமின்றி டிக்கெட் தந்த நடத்துனர்கள். எளிதாக கிடைத்த சீட். கூட்டம் குறைவான பேருந்து. ட்ராஃபிக் அவ்வளவாக அற்ற சாலைகள். அனந்தபுரம் இன்னும் ஈரமாய், அழகாய்த் தெரிந்தது.

எனக்கு ஏனோ மகிழ்ச்சியாக இருந்தது. அகஸ்மத்தாய் ஒரு போஸ்டரும் கண்ணில் படும் வரை!

'கண்ணீர் அஞ்சலி. பத்தாண்டுகளுக்கு முன் கண்ணூர் கலவரத்தில் மறைந்த தோழர் நம்பிக்கு அஞ்சலி. புரட்சி ஓங்குக..!'

ஒரு பொட்டு துக்கம் வந்து மறைந்தது. அருகில் அமர்ந்து கொண்டு ஏதோ சிந்தித்து கொண்டிருந்த அவரைக் கேட்டேன்.

"என்ன இது கலவரம்.. அது இது என்று..?"

"அது அவ்வப்போது நடக்கின்ற ஒன்று. மறங்கள்." என்றார்.

"உங்கள் பெயர் என்ன..?"

"என்ன..? பெயரா..? ஈசன்..!".

பாலருவி செல்லும் புள்ளியில் இறங்கிக் கொண்டோம்.

இருட்டு களை கட்டத் தொடங்கி இருந்தது.

"சரியான பாதை வழி சென்றால் ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்ட் ஆசாமிகளிடம் சிக்கிக் கொள்வோம். அவர்களுக்கு இந்த வசியம் செய்கின்ற கிராமங்கள் எல்லாம் தெரியாது. மிக டீப் ஃபாரஸ்ட்.எனவே நாம் குறுக்கு வழியில் செல்வோம்...!"

"எங்கே அது..?"

"காட்டில் எல்லாமே குறுக்கு வழி தான். காற்றையும், காட்டையும் முழுதாக அடைத்து வைக்க முடியுமா..?"

இறங்கினோம். புதர்களை ஒதுக்கினோம். ஆயிரமாயிரம், லட்சோபலட்சம் பறவைகளின் கீச்சுக் குரல்கள் சிதறடித்தன. இரவுக் கதிர் சுத்தமாய் மறைந்து போயிருந்தது. ஈரம் சூழ்ந்தது. பனிப்புகையாய் படர்ந்தது. பூரான்கள் மேய்வது கால்கலை உரசியது. டார்ச்சின் ஒளிக்கீற்றுகளை கிளைகள் வெட்டின.

சரக்... சரக்... புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....

வழியெங்கும் பாம்புகளின் சைன் வடிவ ஊர்தல்கள். எங்களை ஒரு பொருட்டாய் மதிக்காததன் அடையாளங்கள்.

இருளின் அடர்க்கரங்கள் எங்களை தழுவிக் கொண்டே வர, ஒரு நிலையில் அருகில் இருப்பவரைக் காண முடியா நிலை. டார்ச் மெல்ல மெல்ல இறக்கத் தொடங்கியது.

"ஈசன் சார்...! ஈசன் சார்..!"

பதிலே இல்லை. திடுக்குண்டு போனேன். காற்றில் டார்ச் ஒளிக்கோடை விசிற எங்கும் இருட்டின் பிரம்மாண்ட கனம் என்னை அழுத்தியது. கைகளை வீசினேன். தட்டுப்படவேயில்லை அவர். ஒரு பயம் பெரிதாய் என்னைக் கவ்வியது. சுற்றுமுற்றும் பார்த்து கால் வந்த திக்கில் ஓடினேன். செடிகளை ஒடித்து, மடக்கி, எதையெதையோ மிதித்து!

தூரத்தில் ஒரு சிகப்புப் புள்ளி நகர்ந்து கொண்டிருந்தது. ஓடினேன்.

தோல் துளைகள் வியர்வை பூத்திருக்க, அட்ரீனலின் ஆட்சியில் நெஞ்சுக்குள் துடிப்பு கோடி மடங்காகி இருக்க.. அது ஈசன் சார்.

"ஈசன் சார்...! ஈசன் சார்..!" அவரைப் பிடிக்க முயல, கைகள் புகையில் பட்டாற்போல் பிசைந்தன. குழம்பினேன்.

"வெட்டவெளிதன்னை மெய்யென்றிருப்பார்க்கு பட்டயமேதுக்கடி குதம்பாய் பட்டயமேதுக்கடி...! என் பெயர் நம்பீசன்...!" அதிர்ந்த குரலில் பேய்ச்சிரிப்பு சிரித்தார்.

அந்த கண்கள்...! போஸ்டரில் பார்த்த நம்பியின் கண்கள்.

அதிர்ந்து விலகி திரும்பி ஓட எத்தனித்தேன். எனக்கு பின்னால் 'புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்' என்ற பெரு மூச்சு சத்தம் கேட்டது. பயத்தில் விழுந்தேன். இரட்டை நாக்கின் தீண்டல் மூளை வர ஏறிப்பரவ, நுரை தள்ளி, நினைவு தப்ப சில நொடிகள் இருக்கையில் யோசித்துப் பார்த்தேன்.

'என்னை ஏன்...?'