Thursday, July 27, 2017

நீலாம்பல் நெடுமலர். 18.



பொன் விளை நிலத்தில் செம்மணிக்கல் போல் முளைத்த முத்துத்துளி. நீலவிண் பாதையில் உருண்டு வரும் வெண்ணுரைத்தேர். நிழல் கருமையை உண்டு வளர்ந்த குழல் கற்றை. மென்முகில் சுருள் நுரைத்த நீள் சாரல்.  மொழிச் செழுமை குளிர்ந்து வந்த சொல்வெளி.

பனிபொழி பார்வை. தினை உயர் கூர்மை. தனிநில் தளிர்மரம். நனிசுவை நல்லிமை. பசுமை துளிர்த்து நிறையும் இளமேனி. பசுங்கிளி அலகின் செம்மை இதழ்கள். ஐவிரல் அமுதூறும் பூங்கரங்கள். தொல்தமிழ் கரைந்த சொற்கள் வழியும் மூவா முத்தம்.

மென்முத்தங்கள் இடும் நீரிதழ்கள். மயக்குறு மணம். மருதோன்றி இலைச்சாறிட்டு குடுமிகளில் குருதிக்குளிர்மை சூடிய நீள்விரல்கள். பித்தெழுந்த மாயம். பின்னெழுந்த காயம். தத்திவிழும் கைப்பிள்ளை. முன்னிற்கும் கோபுரம்.

நில்லா வான்மழையில் நனைந்து நிற்கும் பூமரம். இலைநுனிகளில் சரியும் வெண்பனித்துளி. நிலாப்பாலில் குளிக்கும் வர்ணமலர்கள். அடிவேர் வாசம். மண் குழைந்த ஈரம் கோடையில் கனவுகளாய் எழும் இரவு.

pic: https://s-media-cache-ak0.pinimg.com/736x/24/91/3b/24913b86c74e90b034cbdb730db77420--divine-goddess-goddess-art.jpg