Friday, May 23, 2014

இருப்பிலிருந்து இன்மைக்கு.

நேற்று ஜெயநகர் நான்காம் பகுதிக்குப் போயிருந்த போது ஒரு கோல விரிப்பைப் பார்த்தேன். அழகழகான பரிபூர்ண வடிவங்கள். இது போன்ற கோலங்களை ஒருவர் விரலெடுத்து வரைய வேண்டுமெனில், அக்கரங்கள் வருடக்கணக்கான பயிற்சியும் விரல் நுனிகளில் துல்லியமும் கைக்கொண்டிருக்க வேண்டும். இங்கே சிறு வடிவத் தட்டுகள் அப்பணியை நொடிகளில் செய்து விடுகின்றன. கோலமாவை அள்ளிப் பரப்பத்தெரிந்தால் போதும்.

கைகளால் கோலம் போடுகையில் இன்மையிலிருந்து ஓர் இருப்பை - கோலம் என்ற இருப்பை - உண்டாக்குகின்றோம். இத்தட்டுகள் இந்த தடத்தின் தலைகீழியைத் தம் நுட்பமாகக் கொண்டுள்ளன. தட்டு முழுதும் நிரம்பி, வர வேண்டிய வடிவப் பகுதி மட்டும் இன்மையாகத் துளைகளால் உள்ளது. இந்த சார்ந்த இன்மை வழியாக மூலப்பொருள் இடப்பட்டு ஓர் இருப்பு உண்டாகின்றது.

பிரபஞ்சத்தின் ஓர் உண்மை எளிமையாக இங்கே.

லட்சக்கணக்கில் வீடு கட்டுகிறோம். அங்கே பயன்படுத்துவது என்னவோ, உள்ளிருக்கும் காலி இடத்தைத் தான். தங்கச் செம்பில் அள்ளிப் பால் அருந்துகிறோம், உள்ளே இருக்கும் வெற்றிடத்தில் நிரப்பி.

இன்மையும் இருப்பும் தனக்குள் தன்னை நிரப்பிக் கொண்டுள்ளன. இரண்டு நிலைகளிலிருந்தும் நழுவிக் கொண்டிருப்பதாக நாம் நினைப்பதெல்லாம் மற்றொரு நிலையில் தான் சென்று சேர்கின்றது.