Saturday, September 27, 2008

புத்தகமா... மின்னூலா?



ந்த படத்தைப் பார்த்தால் சட்டென்று உங்களுக்கு என்ன தோன்றுகிறது? எனக்குத் தோன்றியது கடைசியில்.

ன்று காலை 'உன் கதைகளைப் படிக்கையில் சில கதைகள் புரிகின்றன. சில ஒன்றும் புரிவதில்லை. கடைசியில் புரிகின்ற மாதிரி முடிக்க மாட்டாயா..?' என்று அம்மா கேட்டார்கள். அவர்களுக்கு சொன்னது இங்கே ::

ஆபிஸ் இன்ட்ராநெட் மேகஸினில் இரண்டு கதைகள் ஆங்கிலத்தில் பெயர்த்து வெளிவந்தது. சிலர் படித்து விட்டு 'இதில் நீ சொல்லும் மெஸேஜ் என்ன?' என்று கேட்டார்கள். நான் அவர்களுக்குச் சொன்னேன், 'மெஸேஜ் சொல்ல நான் மெஸையா அல்ல! ஜீஸஸ் அல்ல! மெஸேஜ் கொடுக்க தெனாலிராமன் கதைகள், மரியாதைராமன் கதைகள், ஈஸாப் கதைகள் இருக்கின்றன. அவற்றைத் தாண்டி மெஸேஜ் யாரும் சொல்ல முடியாது.'

சிறுகதை என்பது ஒரு நிகழ்ச்சி, ஒரு சம்பவத்தைச் சொல்லுதல்! அவ்வளவே!

நம் வாழ்வில் நிறைய சம்பவங்கள் ஒவ்வொரு தினமும் நடந்து கொண்டே இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் நம்மிடம் வந்து இந்த நிகழ்ச்சியின் மெஸேஜ் என்ன என்றால்.. என்று சொல்லிச் செல்வதில்லை. இதுவரை வாழ்ந்த நம் வாழ்வு, நாம் பெற்ற அனுபவங்கள், நம் மனப் பதிவுகள் துணை கொண்டு அவற்றில் இருந்து ஒரு கருத்தை உணர்கிறோம்.

உதாரணமாக, பைனான்ஸ் கம்பெனிக்காரன் ஏமாற்றி ஓடிப் போதல் என்பது ஒரு நிகழ்ச்சி. அவன் திரும்பி வந்து நம்மிடம் ' இந்த நிகழ்ச்சியில் இருந்து நீ கற்றுக் கொள்ள வேண்டியது என்னவென்றால், தெரியாத பைனான்ஸில் பணத்தைப் போடக் கூடாது என்பதே! வரட்டுமா?' என்ற் சொல்லிச் செல்வதில்லை. நாமே புரிந்து கொள்கிறோம்.

அது போல் சிறுகதை ஒரு நிகழ்ச்சியை சொல்லி முடிந்து விடும். அது வந்து உங்களிடம் எந்த கருத்தையும் சொல்லாது. நாமே நமது நிலைக்கு ஏற்றவாறு புரிந்து கொள்ள முயல்வோம்.

என்றேன்.

அம்மா ஃபோனில், 'ரம்ஜான் லீவுக்கு ஊருக்கு வருவ இல்ல..? தலைக்கு நல்லா எலுமிச்ச தேச்சு குளிப்பாட்டணும். என்னவோ ஆகிப் போச்சு என் புள்ளைக்கு' என்றார் கவலையுடன்!

நேற்று இந்திய இரவில், துபாயில் இருக்கும் நண்பர் வெங்கியுடன் சாட்டும் போது, 'ரொம்ப நாள் ஆகிற்று புத்தகங்கள் படித்து! நீ என்ன படிக்கறே?' என்று கேட்டார். பந்தாவாய் ஒரு லிஸ்ட் எடுத்து விட்டேன்.'அடேயப்பா! இவ்ளோ புக்ஸ் படிக்கறயா..?' என்று கேட்டார். நோக்கம் நிறைவேறிற்று..!

அவருக்கு ஈ புக்ஸ் படிக்க பிடிக்கவில்லையாம். புத்தகங்களை கையால் தொட்டு தான் படிக்க வேண்டுமாம்.

இதைப் பார்த்தவுடன் ரொம்ப நாளாக எழுத வேண்டும் என்று வைத்திருந்த விஷயம் ஞாபகம் வந்தது.

என்ன தான் மின் நூல்கள் வந்தாலும், புத்தகங்களை வாங்கிப் படிப்பதென்பது தனி தான்.

புத்தகம் என்பது மனைவி போல்! மின் நூல் என்பது பொது மகளிர் போல்!

புத்தகத்தை எங்கும் படிக்கலாம்! பெட்ரூமில், கிச்சனில், பாத்ரூமில்! நமக்கே நமக்கான ஒரு சொத்து! கையோடு எங்கும் கொண்டு போகலாம். நெஞ்சோடு மறைத்துக் கொள்ளலாம். புக் மார்க்ஸ் செய்து கொள்ளலாம். நமக்குத் தோன்றுவதாக குறிப்புகள் எழுதி வைத்துக் கொள்ளலாம், நம் கையால்! ஒரு மஞ்சள் கயிறு இருப்பது சிலாக்கியம். நம் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் இருக்கும். முடிந்தால் திருத்தலாம். இல்லாவிடில் அப்படியே படிக்கலாம். பொருள் மாறாது. புத்தகத்தை வாங்கியவுடன் அந்த புது வாசனையை முகர்ந்து பார்த்தல் பலரின் பழக்கம். கையில் இருக்கும் பைசாவுக்கு ஏற்றாற் போல் தடித்த, ஒல்லி, மீடியம் என்று எந்த வகையிலும் வாங்கலாம். அட்டையில் இருக்கும் தலைப்பைப் பார்த்து உள்ளே இருக்கும் மேட்டரை பெரும்பாலும் புரிந்து கொள்ள முடியும். இதை தான் பெரியவர்கள் 'அகத்தில் இருப்பது முகத்தில் தெரியும்' என்றிருக்கிறார்கள். ஆனால் எப்போதும் இது பொருந்தாது. உதாரணம் 'ஸ்கேரி மூவி' என்றே பேர் போட்டிருக்கும். ஆனால் உள்ளே ஒரே காமெடியாக இருக்கும். லக்கைப் ப்றுத்து, பி.ஜி.வுட்ஹவுஸும் கிடைக்கும்; ஜெஃப்ரி ஆர்ச்சரும் கிடைக்கும். நம் வாழ்க்கை முறையை புத்தகத்தில் பார்க்கலாம். சில பக்கங்களில் சாம்பார் கொட்டி இருக்கும். சோப்பு நுரைகள் தென்படலாம். பயன்படுத்தப்பட்ட இடத்தை இது சொல்லும்.

ஈ புக்ஸ் ஒன்று தான்! எல்லோர்க்கும் ஒரே மாதிரி காப்பி! நேராக கை வைக்க முடியாது! ஒரு இடைவெளி எப்போதும் இருக்கும். பயன்படுத்த ஓர் இடை ஆள் (கணிணி, செல்போன்) தேவை!

புத்தகத்தில் ஒரே பிரச்னை! வேறு யாருக்கும் கடன் கொடுக்கவே கூடாது. போனால் திரும்பி வருவது அரிது!

ரிச்மண்ட் தமிழ்ச் சங்கத்தின் ப்ளாக்கில் சுற்றிக் கொண்டிருந்த போது, இந்த இணைய வானொலி பற்றித் தெரிய வந்தது. சிறப்பாக இருக்கிறது. வரிசையாகப் பாடல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. பிற இணைய வானொலிகள் போல் விட்டு விட்டு buffering திணறி வருவதில்லை. சீராக வருகின்றது. வாழ்க்கையின் எதிர்பாரா கணங்கள் போல், ஆச்சர்ய பாடல்கள் அடுத்தடுத்து! கார்த்திக் பூவரசன் பாடி முடிந்தவுடன், டக்கென்று 'காற்றினிலே வரும் கீதம்' வர, ஸ்ரீதேவி 'காற்றில் எந்தன் கீதம்' என்று தொடர்கிறார்.

கலசம்!

னக்குத் தோன்றியது :: கால் வரை நீள் தாழ் சடை!

இப்போது இந்திய மதியம் மூன்று மணிக்கு குளிக்கச் சென்ற போது, பாத் ரூமில் படர்ந்திருந்த ஒரு நூலாம்படையின் தோற்றம். கொஞ்சம் ஊன்றி கவனிக்க, ஒரு சாமியார் நடந்து செல்வது போல் தோன்றியது. மேலுடல் கொஞ்சம் முன் வளைந்து, இடது காலை முன்னோக்கி வைத்து, வலது காலை எடுத்து வைக்க toes ஊன்றும் போது எடுத்த ஸ்நாப் போல் இருக்கிறது.

எனக்கு இதில் ஏதாவது செய்தி இருக்கிறதா?

உங்களுக்கு...?

Friday, September 26, 2008

பாட்டில் நிறைய உண்மை!

ரும்புக்குதிரைகள் நாவல் படித்திருப்பீர்கள். பாலகுமாரன் அவர்களின் நாவல். விஸ்வநாதனையும், தாரிணியையும், அய்யரையும், ராவுத்தரையும், முதலியாரையும், மண்ணடியையும், ஹார்பரையும் 'குதிரைப் பேரரசன்' கவிதைகளையும் என்னால் இன்றும் நினைவில் வைத்துக் கொள்ள முடிகின்றது.

இந்த வீடியோவில் வருகின்ற ரோபாட்டைப் பார்த்தால், எனக்கு 'இரும்புக் குதிரைகள்' என்று தான் பெயர் வைக்கத் தோன்றுகிறது. பாஸ்டன் டைனமிக் சிஸ்டம்ஸால் உருவாக்கப்பட்ட இக்குதிரையை உதைத்தாலும் விழாமல் சமாளிக்கிறது. திருப்பி உதைக்க மட்டும் தான் செய்யவில்லை. அடுத்த வெர்ஷனில் அதையும் கொண்டு வந்து விடுவார்கள்.

உண்மையான ரோபோ!

பார்க்க. :: Boston Dynamics ரோபோ.

விக்கி Translation எப்படி செய்வது என்பதைப் பற்றி என்ன சொல்கிறான் என்று தெரிந்து கொள்ள ஒரு விசிட் அடித்தால், கிடைத்தது ஒரு முத்து!

Fidelity (or "faithfulness") and transparency are two qualities that, for millennia, have been regarded as ideals to be striven for in translation, particularly literary translation. These two ideals are often at odds. Thus a 17th-century French critic coined the phrase, "les belles infidèles," to suggest that translations, like women, could be either faithful or beautiful, but not both at the same time.

les belles infidèles என்பதை இவர்கள் சரியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்களா என்பதே இப்போது என் சந்தேகம்!

ரு பாட்டில் நிறைய உண்மை இருக்கிறது. அதில் இருந்து எந்த வகையில் முயன்றாலும் கொஞ்சம் உண்மை கீழே சிந்தி விடும். எனில் எப்படி அதில் இருந்து உண்மையை எடுப்பது? சிந்தும் இடைவெளியில் புகுவது உண்மை அல்லாத ஒன்றாகத் தான் இருக்கும். அந்த பொய் கலந்து போனால் பாட்டிலில் இருக்கும் மிச்ச உண்மை என்னவாகும்?

ஒரு சிந்தனை தான்.

காலையில் சென்ற பேருந்தில் வழக்கமாக ஒரு விதமான டெம்ப்ளேட் கூட்டமே வரும். கோலேஜ் ஆஃப் இஞ்சினியரிங் ஸ்டாப்பில் இறங்கி விடும் கவலையற்று மிதக்கும் இளைஞர்/ஞி கூட்டம். கசங்கிய காக்கி உடுப்பில் கண்டக்டர். பத்திரத் தனிமையில் டிரைவர். கழுத்துப்பட்டை அணிந்து தனி கிரக ஜந்துக்கள் போல் டக் இன் பண்ணிய லைன் ஷர்ட், அழுத்த பேண்ட், இறுக்க ஷூ என்று ஒரு கோஷ்டி, சில வயதானவர்கள், சில இல்லத்தரசிகள். இப்படி.

இன்று, ஒரு வித்தியாசம். ஒரு சிறுவர் கூட்டம்....என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. 15வயதிற்குள் தான் இருக்க வேண்டும்.

பூனை முடி மீசை. வெட வெட உடல். அங்கங்கே சாயம் கழிந்த ஜீன்ஸ். மடக்கி விடப்பட்ட ஷர்ட். பெரிய பக்கிள் போட்ட பெல்ட். தடித்த ஸ்ட்ராப்பிட்ட ரிஸ்ட் வாட்ச். கலைந்த தலை. 'சாம்ஸங் தான் இப்ப டாப்... N-சீரிஸ் வேஸ்ட்' என்று டெக்னிக்கல் பேச்சு.

சிலர் படிக்கட்டை விட்டு மேலே ஏறாத பயணம். ஒருவன் 'முதல் மழை என்னை அழைத்ததே' என்று சத்தமாக வைத்த கூட பாடிக் கொண்டே வந்தான். இருவர் அமரும் சீட்டின் கம்பியில் அரைவாசி அமர்ந்து ஒருவன். அழுக்கான ஜீன்ஸ் பைகள். உள்ளே எதுவும் இல்லாதது போல் ஒல்லியாக காற்றுக்கு ஆடிக் கொண்டிருந்தது. வாட்ச் இல்லாத கையில் ஒரு கயிறு. அல்லது மர உடுக்கைகள் கொண்ட ப்ரேஸ்லெட். பேண்ட் பாக்கெட்டில் குட்டியாகத் தேவையே இல்லாத சீப்.

யாரும் அவர்களை அதட்டவில்லை. அட்வைஸ் செய்யவில்லை. ஒரு மாதிரி ஒவ்வொருவரும் அவர்களில் தங்களைக் கண்டு வந்தார்களோ என்று தோன்றியது.

குளத்தூர் ஸ்டாப்பில் எல்லோரும் இறங்கிச் சென்று விட, பஸ்ஸே அமைதியாக ஆனது. அதற்கு வேறொரு பெயரும் சொல்லலாம். வெறுமை.

ன்று மாலை கம்பெனியில் இருந்து கிளம்பி வீட்டுக்கு வரும் போது கண்ட ஒரு நிகழ்ச்சி - விபத்தாக ஆகியிருக்க வேண்டிய நிகழ்வு - தவிர்க்கப்பட்டது. ஒரு சிறுகதைக்குத் தேவையான கருவாகத் தெரிந்தது. எனினும் வெண்பாவாக அதை இன்னும் குறுக்கிச் சொல்ல முடியும் எனப்பட்டது.

இண்டிகேட்டர் லெப்ட்காட்டி இந்தப்பக் கங்கைநீட்டி
வண்டியை நேராக ஓட்டினானுக்(கு) - முன்பல்ஸர்
ரைட்சிக்னல் கண்சிமிட்ட, 'ஹூம்!எனக்கே வா?'முந்த,
சைட்வெட் டினான்முன் னவன்.

பிறழ் இல்லாப் புலர்தல்! (A)



ச்சைப் பூவுடல்! முத்து முத்தாய்ப் படர்ந்திருக்கும் மொட்டுத் துளிகளாய் ஈரக் கணுக்கள்! பனிப் பூக்களாய் கடுங் காட்டுக்குள் முகிழ்த்திருக்கலாம். வியர்வைப் பருக்களாய் விழித்திருக்கலாம். மஞ்சள் போர்வையாய் உள் துடிக்கும் உயிரைப் போர்த்தியிருக்கும் மென் சூட்டுத் தேகம். நகக் கூர்மைகள் காற்றில் விசிறுகையில் கிழிபடும் இருள் அணுக்கள்.

புற்களின் விரிப்பில் மண் துகள்கள். முன்னிரவு மழையின் முத்தப் பதியல்கள். எங்கிருந்தோ பெருகி வரும் பழுப்புக் காட்டாறு பொங்கிக் களித்துப் பெருகி, ஆரவாரமாய் அகோரமாய் மேட்டிலிருந்து பள்ளம் தேடிப் பாயும் பேரொலி கேட்கிறது. கூர் முகடுகளில் இருந்து கலைந்து, கரைந்து சிறு சிறு துகள்களாய்த் துவங்கி, ஒன்றோடு ஒன்று சேர்ந்து, இணைந்து பல்கிப் பெருகி உச்சத்திலிருந்து அச்சம் விட்டு, பிரவாகித்து வருகிறது பனிமழை.

அடிமரத் தடம் போன்ற இறுக்கம் உருகுகிறது. குழைவாய், குளிர்வாய், தீச் சூட்டின் தீண்டலின் உரசலில் நெகிழ்ந்து பிரியும் வெண்ணெய் வெள்ளம் போல்!

குளிர் நிலவின் கிரணங்கள் தடவுகின்றன. கழுத்தணியும் தங்கச் சங்கிலி கோணங்கள் மாற்றி குழறுகின்றது. ஒவ்வொரு திரும்பலும் அதன் முகத்தின் முனையை முற்றிலும் மாற்றிப் போடுகின்றது. கூந்தலின் சிறு சிறு குச்சிப் பாம்புகள் சிக்கிக் கொள்கின்றன சங்கிலியின் கூர் நுனிகளில்! செவிக்குள் பாயும் இரு இதயத் துடிப்புகள். கிடுகிடுக்கும் காடே நடுநடுங்கும் பேரிடி வானில் தடம் பதிக்கும் போதும், படபட துடிப்புகள் இதயம் வழி ஆழ கேட்கும்.

மடல்கள் முழுதும் ஈரம் சரம் சரமாய்க் கோர்த்திருக்கும். பூனை முடிகள் சிலிர்த்து நின்றிருக்க, மழைத் துளிகள் இணைக்கும் இலைகள் உரசும் சிலீர் சத்தமும் கூசச் செய்கின்றது. பூவிதழ் அழுத்தம் தாங்கா மகரந்தப் புறாக்கள் மடங்கி விழுதல் போல், புருவக் கோடு கலைகின்றது. ஒற்றை வியர்வைத் துள்ளி உச்சிப் புள்ளியிலிருந்து நாசியின் நடுக்கோட்டில் நடை போடுகிறது. இறுதிக்கு வந்து சொட்டுகிறது, சிவந்த உதடுகள் மேல்!

விழிகளின் கோட்டைக் கதவுகள் இறுக மூடியிருக்கும். காவல் வீரர்களாய்த் தனித்தனியாக காவல் காத்திருக்கும் இமை முடிகளின் வழியே கசிவது கண்ணீரா, மழைத்துளியா, வியர்வையா?

கல்வெட்டுப் பாறைகளின் மேலான அர்த்தம் கொள்ள இயலா ஆதி எழுத்துக்கள் போன்று வரிகள் வளைந்திருக்கும் உதடுகளின் மேல் வெப்பம் அனலடிக்கிறது. பொருள் அறிந்து உச்சரிக்க நெருங்க, ஒவ்வொரு வரியின் மேலும் ஏதோ சில காந்தத் பிசிறுகள். ஒட்டிக் கொண்ட துருவங்கள் பிரியும் முயற்சிகள் அனர்த்தமாகின்றன.

வெட்க நூலாடை மெல்ல மெல்ல விலகிப் பறந்தோட, படர்கிறது ஒரு போர்வையாய் பதற்றம். கரையைத் தாண்டி கரையத் துடிக்கும் பளிங்கு கரங்கள் மர்ம தேசங்களில் வெற்றி உலா போகின்றன. தடுப்பார் இல்லை. தடுப்பினும் விடுப்பார் இல்லை. விளிம்புகளின் நிறங்கள் மாறும் போது, பருந்துக் கொத்தலில் பரிதவிக்கிறது பகல் தெரியாப் பழுதிலா எழில்.

கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் பூத்திருக்கும் வானப் பெருவெளி போல் உடலெங்கும் சிலிர்ப்புப் பருக்கள். கரு மேகங்களாய் மறைத்திருக்கும் கடுங்கூந்தல். சுடுங்கூந்தல். மலரென மணமா, விழுந்த மண்ணின் மணமா, தகிக்கும் நெருப்பின் பூசல் நிறமா..?

நிறம் கழிந்த சங்கிலிகள் உரசும் தடாகம். குளக்கரையில் உரசும் அலைகள். தாமரை மொட்டுகள் காற்றின் கரங்களின் தீண்டல்களுக்கெல்லாம் தலையாட்டும். இலைகள் மறைக்கும் மலரின் கால்கள் ஒற்றையாய் நிற்கும். மீன்கள் துள்ளும். தேன் சுரக்கும் இதழ்கள் மெல்லத் திறக்கும் போது வண்டுகள் வாசம் செய்யும் பின்னிரவு நேரத்தில்...

பெரும் அமைதியில் அமிழ்கிறது சூழல்!!!


Get Your Own Hindi Songs Player at Music Plugin

படம் நன்றி :: iaolvz

***

குட்டிக் கதைகள் எழுதி தமிழ்ப் பரப்பை சுத்தப்படுத்தும் ஜென் குருஜிக்கு சமர்ப்பணம்.

Thursday, September 25, 2008

இரண்டாம் சத்தம்!

ங்கள் வீட்டு பாத்ரூம்,
வெளியே
கொஞ்சம் தள்ளி!

தென்னை இலைகள்
சரசரக்கும்.
தகடுக் கதவுகள்
மேல்
பூரான்கள்
வழுக்கி விழும்.

பாசி பழகிய
தொட்டியில்
ஈர நிலவு நடனமிடும்.

பச்சை செடிகள்
பாத்தி கட்டி
படர்ந்திருக்கும்.

சில சமயம்
பெருச்சாளி வரும்.
பல சமயம்
பாம்பு வரும்.

யாரும் பயப்பட்டதில்லை.
அவை பாட்டுக்கு
அங்கு போகும்.
நாங்கள்
இங்கு!

குளத்தங்கரை
கொன்றை மரத்தில்
இறந்து போன
பழனிக்குத்
தவிர!

அவன் ஆவி
அகால நேரங்களில்
அம்மணமாய்ச்
சுற்றுவதாய்
எங்கும் பேச்சு!

சாயந்திரம்
வயலுக்குச் சென்ற
வேலப்பன்
வாந்தியெடுத்துச்
செத்தான்.

பட்டணத்துக்குச் சென்று
ராத்திரி
ஒன்பது மணிக்கு
மயானம் வழி வந்த
மருது
ரத்தங்கக்கி
போனான்.

தோப்புக்கு மாங்காயடிக்க
சென்ற
ஒரு கூட்டம்
ஒரு வாரம்
பேய்க் காய்ச்சலில்
புரண்டது.

'சாக்கிரதை..!
சாக்கிரதை!'
கோடங்கி
குறி
சொல்லி நகர்ந்தான்.

பூம்பூம் மாடு
மிரண்டு
ஊர் எல்லையிலேயே
மடங்கி விழுந்ததென
கீரை விற்கும்
குப்பம்மா
சொன்னாள்.

எல்லாம் சேர்ந்து
எங்கள் வீட்டிலும்
எதிரொலித்தது.

பாத்ரூமுக்கு
லைட்
வைக்கப்பட்டது.

எட்டரை மணிக்குள்
புழக்கடை
உலரத் தொடங்கியது.

துணி துவைக்கும் கல்லும்,
வலை மூடிய கிணறும்
விரிசல் கண்ட பாதையும்
நிலவுக்குத்
துணையாக காய்ந்தன.

ஒரு மழை
நாள்
இரவு வரை!

மின்னல்
இடி
மேகம்
காற்று
இருள்
ஈரம்

வெட்டித் தள்ளியது
மின்னல்

கொட்டி முழக்கியது
இடி

மோதித் திரண்டது
மேகம்

வீசிப் பறந்த்து
காற்று

ஆளைத் தின்றது
இருள்

சுருட்டிக் குளிர்த்தது
ஈரம்!

அவசரமாய் முட்டிக்கொண்டு
வந்ததற்கு
ஓடித்
தாழிட்டுக் கொண்டு
நனைந்தான்
அவன்.

வியர்வையில்,
மழையில்!

வீட்டைப் பார்த்து
ஓடி வரும் போது
ஆடிக் கொண்டிருந்த
கல்லில்
தடுக்கி
விழுந்தான்.

கல்லும் காலும்
மோதியதால் எழும்
முதல் சத்தம்
கேட்டது!

வீட்டுக் கதவை
எட்டித்
திறக்கையில்
இரண்டாம் சத்தம் கேட்டது!

இன்னும் அவன்
அதை
முதல் சத்தத்தின்
நிலவொளி நிழல்
என்றே
நம்புகிறான்!

வழியில் சில எறும்புகள்!

காஃபியில் சர்க்கரை கம்மி
என்று
கலங்கிக் கொண்டே
தாய் வீட்டுக்கு ஓடினாள்
தர்மபத்தினி!

மீண்டும் கூட்டி வர
செல்கிறேன் நான்.

வழியில்
சில எறும்புகள்!

குனிந்து பார்த்த
முதல் எறும்பு
வயதானது!
நரை விழுந்து,
கண்களில் திரை விழுந்து,
நடை தடவி
கடந்து போனது.

எனக்குப் பேசத் தோன்றினும்
அதற்கு
கேடகத் தோன்றுமா
என்ற சந்தேகத்தில்
அதை
நழுவ விட்டேன்.

அடுத்து ஒன்று
விசிலடித்து வந்தது.
இளம்.
கொஞ்சம் கிறக்கம்,
கொஞ்சம் மயக்கம்,
கொஞ்சம் சிரிப்பு,
கொஞ்சம் காதல்
கலந்து கிறங்கி
கலைந்து
கிடந்தன
அதன் கண்கள்!

முதல் காதலாக
இருக்கலாம்.

தொந்தரவு செய்ய
விரும்பவில்லை.
தொலைந்து போனது
அது!

தொடர்ந்து வந்தது
ஒரு பெண்!

எத்தனை நளினம்!
எத்தனை கவனம்!
எத்தனை நெளிவு!
எத்தனை கர்வம்!
வேலைக்குச் செல்பவளாக
இருக்கலாம்!

ஓர் அவசரம்
அவளது
சின்னக் கால்களில்
தெரிந்தது.

விரைந்து நடந்தேன்.

வழியெங்கும்
எறும்பு ஊர்வலங்கள்.

முத்தமிட்டும்,
பக்கத்தில் நகர்ந்தும்,
வளைந்தும்,
நேராகவும்,
திரும்பியும்,

எத்தனை பாதைகள்!

ஒரு துறவியைப்
பார்த்தேன்.

கண்களில் ஓர் அமைதி.
கைக்கால்களில்
சில மண்வளையங்கள்.

ஏதோ முணுமுத்தவாறு!

மெல்ல
உற்று கவனித்தேன்.

கண்கள் திறந்தார்.

கொஞ்சம் தள்ளி காண்பித்தார்.

ஒரு பிண ஊர்வலம்.

எறும்புகள் தூக்கிக் கொண்டு
வந்தன.

மெளனமாய் நகர்ந்தார்.

"கவனம்...! கவனம்..!
மனிதனின் கால்கள்...!
அருகில்..!"
கூச்சல் எழுப்பியது
ஓர் எறும்பு!

ஒற்றனாக இருக்குமோ..?
என்ற எண்ணத்துடன்,

ஓடோடி மறைந்தோம்!

Wednesday, September 24, 2008

Tele................Vision.

ந்த கவிதையை தமிழ்ப்படுத்தி கொடுமைப்படுத்துவதை விட, அப்படியே படிப்பது எளிதாக இருக்கும். கவிதைகளுக்கு இருக்க வேண்டிய சர்வதேசத் தன்மை இதில் பளிச்சிடுகிறது. ப்ரிட்டனிலும் படிக்கலாம்; ஜப்பானிலும் தையல் கோர்த்துக் கொண்டே படிக்கலாம்.

பேரண்ட்ஸ் களப் மெம்பர்கள் அவசியம் வாசிக்க வேண்டியது. Roald Dahl எழுதிய இக்கவி பெற்றோரின் கவலைகளின் முதல் பிரச்னையைப் பேசுகிறது.

ச்சின்னப் பையனின் ப்ரச்னையுடன் ஒத்துப் போகிறது!

Television


The most important thing we've learned,
So far as children are concerned,
Is never, NEVER, NEVER let
Them near your television set --
Or better still, just don't install
The idiotic thing at all.
In almost every house we've been,
We've watched them gaping at the screen.
They loll and slop and lounge about,
And stare until their eyes pop out.
(Last week in someone's place we saw
A dozen eyeballs on the floor.)
They sit and stare and stare and sit
Until they're hypnotised by it,
Until they're absolutely drunk
With all that shocking ghastly junk.
Oh yes, we know it keeps them still,
They don't climb out the window sill,
They never fight or kick or punch,
They leave you free to cook the lunch
And wash the dishes in the sink --
But did you ever stop to think,
To wonder just exactly what
This does to your beloved tot?
IT ROTS THE SENSE IN THE HEAD!
IT KILLS IMAGINATION DEAD!
IT CLOGS AND CLUTTERS UP THE MIND!
IT MAKES A CHILD SO DULL AND BLIND
HE CAN NO LONGER UNDERSTAND
A FANTASY, A FAIRYLAND!
HIS BRAIN BECOMES AS SOFT AS CHEESE!
HIS POWERS OF THINKING RUST AND FREEZE!
HE CANNOT THINK -- HE ONLY SEES!
'All right!' you'll cry. 'All right!' you'll say,
'But if we take the set away,
What shall we do to entertain
Our darling children? Please explain!'
We'll answer this by asking you,
'What used the darling ones to do?
'How used they keep themselves contented
Before this monster was invented?'
Have you forgotten? Don't you know?
We'll say it very loud and slow:
THEY ... USED ... TO ... READ! They'd READ and READ,
AND READ and READ, and then proceed
To READ some more. Great Scott! Gadzooks!
One half their lives was reading books!
The nursery shelves held books galore!
Books cluttered up the nursery floor!
And in the bedroom, by the bed,
More books were waiting to be read!
Such wondrous, fine, fantastic tales
Of dragons, gypsies, queens, and whales
And treasure isles, and distant shores
Where smugglers rowed with muffled oars,
And pirates wearing purple pants,
And sailing ships and elephants,
And cannibals crouching 'round the pot,
Stirring away at something hot.
(It smells so good, what can it be?
Good gracious, it's Penelope.)
The younger ones had Beatrix Potter
With Mr. Tod, the dirty rotter,
And Squirrel Nutkin, Pigling Bland,
And Mrs. Tiggy-Winkle and-
Just How The Camel Got His Hump,
And How the Monkey Lost His Rump,
And Mr. Toad, and bless my soul,
There's Mr. Rate and Mr. Mole-
Oh, books, what books they used to know,
Those children living long ago!
So please, oh please, we beg, we pray,
Go throw your TV set away,
And in its place you can install
A lovely bookshelf on the wall.
Then fill the shelves with lots of books,
Ignoring all the dirty looks,
The screams and yells, the bites and kicks,
And children hitting you with sticks-
Fear not, because we promise you
That, in about a week or two
Of having nothing else to do,
They'll now begin to feel the need
Of having something to read.
And once they start -- oh boy, oh boy!
You watch the slowly growing joy
That fills their hearts. They'll grow so keen
They'll wonder what they'd ever seen
In that ridiculous machine,
That nauseating, foul, unclean,
Repulsive television screen!
And later, each and every kid
Will love you more for what you did.

Roald Dahl.

நான் பத்தாம் வகுப்பு வரும் வரை தொலைக்காட்சியை எங்கள் வீட்டில் புக வைக்க விடாத வறுமைக்கு நன்றி!

***

அவருடைய மற்றும் ஒரு குட்டிப்பா!

சூடும் குளிரும்.

என் அம்மாவிற்குத் தெரிந்த பெண் அவள்.
உள்ளே வந்தாள்.
அவளது அத்தனை ஆடைகளயும்
அவிழ்த்தாள்.

வயதானவன் இல்லை நான்.
சொன்னேன்.
'கடவுளே! உங்களுக்கு
கண்டிப்பாக
குளிராக இருக்கும்!'

'இல்லை, இல்லை!'
அவள் சிணுங்கினாள்.
'சத்தியமாக இல்லை.
உண்மையில் நான்
பேய்த்தனமாக
சூடாக உணர்கிறேன்!'

Monday, September 22, 2008

வெண்பா முயற்சிகள் - 3.

'தீயிற் கொடியதோ தீ' என்ற் ஈற்றடிக்கு மீண்டும் முயன்றதில், மேலும் சில வெண்பாக்கள் கிடைத்தன. ::

உணவுண்ணத் தோன்றா உடுப்பணிய எண்ணா
கனவிலுங் கூடலின்பங் கவ்வும் - தினமிரா
பாயிற் படுத்திளைக்கப் பற்றும் பசலைநோய்த்
தீயிற் கொடியதோ தீ!

"கலங்காதே வைதேகி! காற்றுமகன் கோபம்
நிலம்முழுதும் ஏற்றும் நெருப்பால், இலங்கையின்
கோஇல் எரிகிறது! கொள்அமைதி சீதைநீ
தீஇல் கொடி!...அதோ தீ...!"

'சோம்புவதால் உய்வுண்டோ சொல்' என்ற ஈற்றடிக்கு எழுத முயன்றதில் ::

சும்மா இருந்திட்டால் சோறு வருமாநீ
கம்மாக் கரையில் கடிதுழை - நம்மபூமி
சொம்பு நிறையுமாறு சொர்ணரி தந்திடுவாள்
சோம்புவதால் உய்வுண்டா சொல்?

ஈரத்தில் ஓர்விறகாய்ச் சும்மாயி ருந்தவன்மேல்
பாரமாய்ப் பாய்ந்தவள் கேட்டாள் - "விரகத்தில்
காம்பும் கனியும்! கசங்காப் படுக்கையில்
சோம்புவதால் உய்வுண்டா சொல்?

கிராமத்து வெண்பா எழுத முயன்றதில் ::

ஆத்துதண்ணி அய்ரமீனு அத்தமவ அள்ளிவந்து
சோத்துமேல சூடாச் செவச்செவன்னு - ஊத்திவிட்டா!
மென்னுதின்னு கிட்டபோயி முத்தம்வைக் கப்பார்த்தா
பொண்ணொதடே துள்ளுதுமீ னாட்டம்!

***

சேர்க்கப்பட்டது ::

இங்கு குறிப்பிட்டிருக்கும் வெண்பாக்களில் எக்கச்சக்கத் தவறுகள் இருப்பதாக ஆசிரியர் சொல்லி இருக்கிறார். மேல் விவரங்களுக்கு காண்க, கமெண்ட் செக்ஷன் ஆஃப் உயர்வு நவிற்சியணி!

***
வெண்பா முயற்சிகள் - 2.

வெண்பா முயற்சிகள் - 1.

Sunday, September 21, 2008

சென்ற சனிக்கிழமை எங்கிருந்தேன்?

ங்கு வந்து பத்து மாதங்கள் ஆகப் போகின்றது. இருந்தும், இன்னமும் பத்மநாபசுவாமி கோயிலுக்குச் செல்லவில்லை. எந்தெந்த ஊர்களுக்கோ போய் சுற்றி விட்டு வந்து கதை எழுதுகிறாய். ஆனால் உள்ளூர் கோயிலுக்குப் போகவில்லை. என்ன பையன்டா நீ? என்று, மனசாட்சியோடு, அலுவலக நண்பர் கார்த்திக் கேட்டுக் கொண்டே இருந்ததால், இந்த வாரம் சனிக்கிழமை சென்றேன்.

திகாலை 09.30 மணி அளவில் மஞ்சள் வேட்டி சரசரக்க, வெள்ளை டீஷர்ட்டுடன் கிழக்கு கோட்டை பேருந்து பிடித்து, பத்து மணிக்கு கோயிலை அடைந்தேன்.

கிழக்கு வாசலின் முன் சில டூரிஸ்ட் பேருந்துகள். கல்லூரி மாணவர்கள். குடும்பங்கள். தமிழ், இந்தி, மலையாளக் குரல்கள்.

ஒரு ஷாப்புக்குச் சென்று துண்டு ஒன்று வாங்கிக் கொண்டேன். ஐம்பது ரூபாயாம். பாலியெஸ்டர் ரகம் என்பதால் இது! காட்டன் என்றால் 150.

க்ளோக் ரூமில் வேஷ்டி, துண்டு கொடுக்கிறார்கள். பைசா தான். பெண்களும் ஜீன்ஸ் போன்ற உடைகளை உடுத்தி வந்தால் வேஷ்டியை எடுத்து ஒரு சுற்று சுற்றிக் கொள்ள வேண்டும். செல்போன், டீஷர்ட், வீட்டுச் சாவி ஆகியவற்றை பத்திரமாகப் பார்த்துக் கொள்ள 18 ரூபாய் வாங்கினார்கள். கோயிலுக்குள் நுழையும் முன்பே கொடுத்து விட வேண்டும்.

கோயிலுக்குள் நுழைந்தேன்.

ஏழு சுற்றுகள் கருவறையைச் சுற்றிலும் என்று சொல்லப்படுகிறது. திருவரங்கம் போலவே! இரண்டிலும் கிடந்த கோலம் என்ற நிலையில் பெருமாள் இருப்பினும், கொஞ்சம் வேறு. அரங்கத்தில் வலதுகையை தலைக்கு அண்டக் கொடுத்து இருக்கிறார். இங்கே வலது கையை அப்படியே தொங்க விட்டுள்ளார். அவர் அரங்கநாதர். இவர் பத்மநாபசுவாமி. நாபியில் தாமரை கொண்டவர் எனலாம்.

சென்னை அடையாறிலும் ஒரு அனந்த பத்மநாபசாமி கோயில் உள்ளது. அடையாறு ஃப்ளை ஓவர் ப்ரிட்ஜ் இரண்டாகப் பிரிகின்ற சிக்னல் அருகே தான் உள்ளது. கேட்டால் சொல்வார்கள். காலேஜ் படிக்கும் போது ஒரு முறை சென்றிருக்கிறேன். மொசைக் தரைகள், தொங்கும் ஷேண்ட்லியர் விளக்குகள், ரவிவர்மா ஓவிய வர்ண ஜெராக்ஸ்கள், பளிங்குத் தூண்கள், அலங்கார நகைகள் என்று கொஞ்சம் போஷாக்கான கோயிலாகத் தான் அது தெரிந்தது. மாமிகளும், அய்யர் அழகுப் பெண்களுமாக அது வேறொரு லோகம் போல் காட்டியது.

இங்கே அவ்வாறான நவீன செயற்கைகள் ஏதும் இல்லாமல், பழமையின் அடையாளமாகத் தான் இருக்கிறது.

உள்ளே நுழையும் முன்பே கையில் அர்ச்சனைத் தட்டைக் கொடுத்து விடுகிறார்கள், என்னவோ அது must என்பது போல்! ஆனால் 30 ரூபாய்! கொஞ்சம் தாண்டியவுடன், நான்கு எண்ணெய் நிரம்பிய சிமிழ்க் கிண்ணங்களைக் கொடுத்து, தள்ளி இருக்கின்ற விளக்கில் 'பேர், கோத்திரம் மனசில நெனச்சிண்டு ஊத்துங்கோ' என்று ஊற்ற சிமிழுக்கு ஐந்து ரூபாய் என, இருபது ரூபாய் கறக்கிறார்கள்.

இவர்களை எல்லாம் கடந்து உள்ளே நுழைந்தவுடன் கொஞ்சம் குழப்பம் வந்தது. முதலில் சுற்றுவதா, மூலவரைப் பார்த்து விட்டு சுற்றுவதா என்று. அப்போது நேரம் 11 நெருங்கியது. 11.30 மணிக்கு தான் உள்ளே அனுமதிப்பார்கள். காத்திருங்கள் என்றார்கள். ஏனெனில் இதற்கு ஒரு காரணம் சொல்கிறார்கள். சில நேரங்கள் மஹாராஜா வம்சத்தினர் தரிசனம் பெற வெரும் நேரமாம். நம்மைப் போன்ற சாமான்யர்களுக்கு அனுமதி இல்லை.

வரிசை நீண்டது. அழகழகான குழந்தைகள். பெண்கள். ஆண்கள். இந்தி வாலாக்கள். தமிழ்க் கல்லூரியர்கள். கிழவர்கள். பாட்டிமார்கள்.

நடை திறக்கப்பட்டதும், வரிசை நகர்ந்து, கொஞ்சம் அடுத்த வட்டத்திற்குள் போனதும் இந்த்யத்தனம் வேலையைக் காட்டியது. வரிசை கலைந்து, கும்பலாக ஆனது. தடார், புடாரென ஆளாளுக்கு கலந்து, இடித்துக் கொண்டோம்.

வெளியே முப்பது ரூபாய் அர்ச்சனைத் தட்டு வாங்கினோம் இல்லையா? அது போதாதாம். அர்ர்ச்சனை செய்ய வேண்டுமெனில் இங்கே அர்ச்சனைச் 'சீட்டு' வாங்க வேண்டும். அது தனியாக பத்து ரூபாய். இங்கே வாங்கா விட்டால், அர்ச்சனைத் தட்டை அர்ச்சனைக்கு கொடுக்க வேண்டியதில்லை. வெளியே போனதும் அவர்களே வாங்கிக் கொள்வார்கள். நல்லது. ஆனால், முப்பது ரூபாய் திருப்பித் தர மாட்டாது. எனவே இங்கே ஒரு பத்து ரூபாய் பழுத்தாக வேண்டும்.

பைசா என்னிடம் காலியாகி, மர்பிஸ் லா போல் சரியாக ஒன்பது ரூபாய் தான் இருந்தது. மர்பிஸ் லாவும் இன்ஃப்ளேஷனுக்குத் தப்பவில்லை போலும். பள்ளியில் படிக்கும் போது, பஸ் டிக்கெட்டுக்கு சரியாக ஐந்து பைசா இல்லாமல் அதிர்ச்சி கொடுத்தது. இப்போது அந்த gap ஒரு ரூபாய் ஆகி விட்டது. தமிழ் நாட்டில் இருந்தல் ஒரு கிலோ அரிசி வாங்கி இருக்கலாம்.

அர்ச்சனைச் சீட்டு கொடுப்பவர் 'ஏ அற்பப் புழுவே!' என்பது போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, நக்கலாய்ச் சிரித்தார்கள். போய்த் தொலைகிறார்கள்.

இப்படி இவர்களிடம் வாங்கி, கொஞ்சம் ஒருமாதிரி வரிசையில் நின்று கருவறைக்கு அருகில் சென்றேன். அர்ச்சனைக்கு வாங்கியவர்களுக்கு மட்டுமே முதல் ரவுண்ட் தரிசனம். வாங்காதவர்களுக்கு இரண்டாம் ரவுண்ட். அது கொஞ்சம் தள்ளி.

அப்படி ஒன்றும் இரண்டு இஞ்ச் வித்தியாச தொலைவில் பெருமாள் வித்தியாசமாகத் தெரியவில்லை. இரண்டு இடங்களிலும் ஒரே மாதிரி கன்னங்கரியராகத் தான் தெரிகிறார்.

நமக்கு ஒரே சிலாரூபமாகப் பார்த்துப் பழக்கம். இங்கே மூன்று பார்ட்டாக தலை, உடல், கால் என்று பார்ப்பது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை. உடல் பகுதியின் முன், உற்சவர்கள் குட்டி சிலைகளாக இருந்தனர். தீபாராதனைகள் அவர்களுக்கே!

தேங்காய் உடைத்து கொடுத்தனர். கொஞ்சம் சந்தனம் தெளிக்கப்பட்டது. வெளியே வந்து விழுந்தேன்.

அடுத்த சுற்று சென்று குட்டித் தேவதைகள் கண்டேன். தூன்களில் எல்லாம் தமிழ் வாசம். எல்லா சிலைகளும் மதுரையிலும், நெல்லையிலும் கண்டது போலவே இருந்தன. யாழிகள். விளக்கேந்திய, ததும்பும் கொய்யா மார்க் கன்னிகள்.

நம் மக்களின் கூர்மையான பார்வைக்கு ஓர் உதாரணம் கோயில்களில் காணலாம். இருக்கும் ஆயிரக்கணக்கான தூண்களில், சரியாக முருகனைக் கண்டுபிடித்து, அவன் கால்களைக் கற்பூரங்களால் தீய்த்திருந்தனர்; அனுமரைக் கண்டுபிடித்து, கண்ணனைப் போல் 'வெண்ணெய் உண்ட வாயன்' ஆக்கியிருந்தனர். எப்படி கண்ணனுக்கும், அனுமாருக்கும் வெண்ணெய் பிடித்துப் போனது? கண்ணன் கதை தெரியும். ஆஞ்சநேயர்?

முந்தின நாள் தான் 'இங்கேயும் வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது' என்று சொல்லி இருந்தேன். பார்த்தால், சனிக்கிழமை முழுதும் கருக்கலிட்டு, இருள் விலகத் தொடங்கிய அதிகாலையில் மழை பெய்திருந்தது. கோயிலில் இருந்த போதும், தூறிக் கொண்டே இருந்தது.

சுற்றி வரும் போது, அம்மன் கோயில் போலும் ஒரு கோயிலின் முன் பல அம்மாக்க்ள் ஸ்தோத்திரங்கள் சொல்லிக் கொண்டிருந்தனர். புரட்டாசி முதல் சனிக்கிழமை அல்லவா?

தூண்களைத் தவிர்த்து, சுவரோவியங்கள் கேரள பாணியில் இருந்தன.

மதிய உணவு கோயிலிலேயே போடுகிறார்கள் என்று ஒரு வரிசை நின்றது. இணைந்து கொண்டேன்.

பாயசம். ஒரு பொறியல். ஊறுகாய் போன்று ஒரு பதார்த்தம். குண்டு அரிசியில் சாதம். ரசம்.

இருந்த களைப்புக்கும், பசிக்கும் சாப்பிட்டு முடித்தேன். 'பந்திக்கு முந்து' என்கிறார்களே அது எல்லா சமயங்களிலும் ஒத்து வரும் என்று தோன்றவில்லை. நான் சாப்பிடும் போது, எனக்கு முன் 80 பேர்களாவது முடித்திருப்பர். ஆனால் பிறகு தான் வேறொரு வகை பாயசம் வந்திறங்கியது.

பாயசமா, அடுத்த ரவுண்ட் மோர் வாங்குவோமா என்ற ஆர்க்யுமெண்ட்டில் பாயசம் வென்றது. (Ofcourse!)

வெளியே வந்து விட்டேன்.

ரி, கோயில் தரிசனம் முடிந்தது. நெக்ஸ்ட்..?

தம்பானூர் ஜங்ஷன் போய் கொஞ்சம் ஏ.டி.எம்.மில் காசு எடுத்த பின் தான் கொஞ்சம் மூச்சு வந்தது.

நீல. பத்மநாபன் அவர்களின் வீட்டுக்குச் சென்று பேசி விட்டு வரலாமா என்று எண்ணம் வந்தது. கால் அடித்தேன். வழக்கமாக அவர் வீட்டம்மா தான் முதலில் எடுத்துப் பேசுவார். எனவே 'சார் இருக்காருங்களா?' என்ற வசனத்தை மனதிற்குள் கோர்த்து, ரெடியாக இருந்தேன்.

கால் எடுக்கப்பட்டது. 'ஹலோ..!'. இது சார் குரல்.

கொஞ்சம் தடுமாறினேன்.'சார்..! நீங்க இருக்கீங்களா?' என்று கேட்க வந்து விட்டேன். டக்கென்று டயலாக் யோசித்து மாற்றி பேசினேன். மதியம் மூன்று மணிக்கு மேல் வந்து பார்க்கச் சொன்னார்.

மணி இப்போது 12:42. இனி வீட்டுக்குச் சென்று திரும்பலாம் என்றால் லேட்டாகி விடும். ஏற்கனவே லேட்டாகப் போய் திட்டு வாங்கியாகி விட்டது. இந்த முறை சரியாகப் போய் விட வேண்டும். மேலும் ரூமிற்குப் போனால் கண்டிப்பாகத் தூக்கம் வந்து விடும். எனவே அந்த ஐடியா கைவிடப்பட்டது.

ஊருக்குச் செல்ல பேருந்தில் வரும் போதெல்லாம், பி.எம்.ஜி.யில் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ம்யூஸியம் ஒன்றைப் பார்ப்பேன். ஒரு நாளாவது அங்கு போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தது நினைவுக்கு வந்தது. சரி! இரண்டு மணி நேரம் ஓட்ட அதுவே சிறந்த இடம்.

ஆட்டோ பிடித்து முப்பது ரூபாய் செலவில், அடைந்தேன்.

அங்கே கொஞ்சம் கூட்டம் இருந்தது. மனைவி, குழந்தைகளுடன் கல்லூரி மச்சினிகளைக் கூட்டி வந்திருந்தது போல் சில குடும்பஸ்தர்கள். யாருக்காகவோ காத்திருந்தார் போல் இருந்தனர்.

நான் பாட்டுக்குச் சென்று டிக்கெட் வாங்க கவுண்ட்டருக்குச் சென்றேன். '3டி ஷோவா, கேலரியா?' என்று கேட்டார்கள். ஏதோ ஒன்று என்று கேட்க நினைப்பதற்குள், ஒரு குடும்பஸ்தர் அருகில் வந்து, 'சார்! 3டி ஷோ வாங்குங்க! கூட்டம் இல்லாததால் வெய்ட் செய்றாங்க!' என்றார். அதற்குள் காத்திருந்த சிலர் என்னைத் தள்ளிக் கொண்டு கவுண்ட்டர் பக்கத்தில் நிற்க வைத்தன்ர்.

டிக்கெட் கொடுக்கும் அம்மணியும் 3டி ஷோவுக்கு டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார். டிக்கெட்டில் 'Welcome to Travel to Technolohy'. ரசிக்க முடிந்தது.

எனக்கு ஒரு தகுதியில்லாத பெருமை வந்தது. 'ஆஹா! நமக்காக அன்றோ இவர்களைனைவரும் காத்திருந்தனர்' என்று! சடாரென மற்றொரு மனம், 'நீ வந்த பிறகு தான் கூட்டம் சேர்ந்திருக்கிறது என்று தோன்றுகின்றதெனில் என்ன அர்த்தம்? ஒத்தையில நீ நடந்தா ஊர்வலம் போகுதுன்னு ஊருக்குள் பேச்சிருக்கு, போகாதே ரோட்டில்' என்று பாடியது.

3டி ஷோ நன்றாகவே இருந்தது. எல்லோரும் பசுபதிகளாய் கருப்புக் கண்ணாடிகளை அணிந்து கொண்டு, திரையைத் தவிர அத்தனை சுவர்களும் டிஸ்ட்ராக்ஷனைத் தவிர்ப்பதற்காக கருப்புப் பெயிண்ட்டால் நிரம்பியிருக்க, அலுமினியம் போல் மினுத்த திரையின் மேல் ஒளிப் பூச்சு அடித்து, பாப் இசை ஸ்பீக்கர்கள் அடங்க, மல்டி டைமன்ஷனல் ஸ்டூடியோஸ் என்ற எழுத்துக்கள் ஊர்ந்து வந்தன.

முதலில் கடல் வெளிப் பயணம். மீன்கள் முகத்தின் மேல் விழுந்தன; ஆக்டோபஸ்களின் அஷ்டக் கரங்கள் நீண்டன; டைனோசர் வாய பிளந்து காட்டியது. சறுக்கி, சறுக்கி பயணம் போனோம்; நீரில் விழுந்தோம்; வானில் எழுந்தோம்; தலைகீழாய் உருண்டோம்; குட்டி டைனோசர் தலைக்குப் பின்னால் இருந்து எட்டிப் பார்த்தது.

அடுத்தது, அலிபாபா.

அவனோடு கம்பளப் பயணம் செய்தோம்; ஜாஸ்மினை கிஸ் செய்ய அவன் முயல்கையில் எட்டிப் பார்த்த நண்டின் கொடுக்குகள் நம் மேல்! தப்பிக்க முயல்கையில் ஆணிகள் மேலே விழுந்தன. நட்சத்திரங்கள் தெறித்தன; வாட்டர் பவுண்டைன் ஆடல் பெண் சிலை தண்ணீரை வீசியது. தப்பித்தான்.

கடைசியாக, மேஜிக் அங்கிள்.

சயின்டிஸ்ட்டின் வினோத மேஜிக் விளைவுகளாக, எலும்பு மண்டையோடுகள் முகம் முன் வந்தன; பாம்புகள் நாக்கை வீசி வீசி பாய்ந்தன; நூற்றுக்கணக்கான பெருச்சாளிகள் எங்கள் மேல் பாய்ந்தன; பறக்கும் தட்டுகள் சுற்றி சுற்றி வந்தன.

முடிந்தது.

குழந்தைகளின் அலறல் சத்தமும், பய அழுகைகளும் மட்டுமே பின்னணி இசையாக கேட்டது. ஓரளவிற்கு மேல் டெக்னாலஜி தெரிந்து கொண்டதற்கு கொடுத்த விலை, இந்த இன்னொசென்ஸை இழந்தது தான்!

பத்து ரூபாய்க்கு மதிப்புடையது. மற்றுமொரு முறை இதன் தந்திரங்களை கண்ணாடியை ரிமூவி விட்டுப் பார்க்க வேண்டும்.

வெளியே வந்தேன்.

மற்றுமொரு பதினைந்து ரூபாய்க்கு கேலரிகள் பக்கம் போனேன். மணி 13:40 தான்.

ஸ்பேஸ் படங்கள், மெக்கானிக்கல் எஞ்சின்கள், பயோ இஞ்சினியரிங் மெஷின்கள் என்று பார்த்து விட்டு, கீழே செல்ல எலெட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் கேலரி. கொஞ்சம் பழையா ஞாபகங்களை எழுப்பி விட்ட அம்மீட்டர், வோல்ட் மீட்டர், ட்ரையோடு, எல்.சி.டி... ஏதோ டிப்பார்ட்மெண்ட் லேபுக்குப் வந்த மாதிரி இருந்தது.

மேலே சென்றால், மேதமேடிக்ஸ் கேலரி. இருபது பஸில்களில் ஒன்றில் மட்டுமே கெலிக்க முடிந்தது. ஒரு கேள்வி : மூன்று ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பனியன்களில் மூன்று, ஆறு, ஒன்று என்ற எண்கள் உள்ளன. அவர்களை ஏதோ ஓர் ஆர்டரில் நிற்க வைத்து ஏழால் வகுக்கப்படும் எண்ணாக்குங்கள். விடை பின்னூட்டத்தில் கொடுங்கள்.

எலெக்ட்ரிக்கல் எஞ்சின் கேலரி, கண்ணாடி பிம்ப விளையாட்டுகள் என்று கொஞ்ச நேரம் போனது.

மூன்று மணியை நெருங்கியது. ஸ்பேஸ் ஷோ மூன்று மணிக்கு ஆரம்பிக்கும். நமக்குத் தான் டைம் இல்லையே.

ட்டோ பிடித்து, தைகாடு சென்று திரு. நீல. பத்மநாபன் அவர்களைச் சந்தித்துப் பேசினேன்.

Excerpts ::

* தனது நாவலின் தலைப்பான 'பள்ளி கொண்ட புரம்' என்ற பெயரில் தமிழ்த் திரைப்படம் உருவாகுவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருப்பதையும், நோட்டிஸை வாங்கிக் கொள்வதை எதிர்த் தரப்பு செய்யவில்லை என்று கோபமும் வருத்தமும் கொண்டிருந்தார். தமிழ் எழுத்தாளர் சங்கங்களும் இதில் எதிர்பார்த்ததைப் போல் ஆதரவு கொடுக்கவில்லை என்றார். பேச்சு பதிப்பகங்கள் நடந்து கொள்ளும் முறை பற்றி திரும்பியது. காண்க :: பள்ளிகொண்டபுரம்:நீலபத்மநாபன் கடிதம்.

சரியான ராயல்டி தொகை கொடுக்காமல் இருப்பது, ஒரு மொழிக்கு அனுமதி வாங்கி பிற மொழிகளிலும் சந்தடி இல்லாமல் வெளியிடுவது, ஸ்டாக் தீர்ந்து போனால் சொல்லாமல் இருப்பது இப்படி ஏகப்பட்ட தகிடுதத்தங்கள். எழுதுவதை மட்டுமே தொழிலாக வைத்திருப்பவனின் கதி என்ன ஆகும்?

இவ்வளவு அவஸ்தைகளுக்கு இடையில் எழுத்தாளனாக இருப்பது அவசியமா என்ற கேள்வி எனக்குத் தோன்றியது.

* அவரது புத்தகங்களை இன்னும் முழுதாகப் படிக்கவில்லை என்று சொன்ன போது சிரித்தார். அதில் எரிச்சல் இருந்தது எனக்குப் புரிந்தது. 'இவன் ஒரு புத்தகத்தையும் படிக்காமல் வந்து பேசுகிறானே? போன முறையே எழுதியவற்றை படித்து விட்டுப் பின் வாருங்கள் என்று சொல்லி இருந்தோம்' என்று நினைத்திருப்பார்.

* அவரது எழுத்துக்களில் எனக்கு கொஞ்சம் ஜெனரேஷன் கேப் இருக்கிறது. ஆனால் அவரிடம் பேசுவதில் அது இல்லை. சும்மாவா, என்னை விட கிட்டத்தட்ட 50 வயது மூத்தவர். ஆனால் 'பொடியனிடம் பேசுகிறோம்' என்ற ஏளனம் அவரிடம் இல்லை.

* சரளமாக சில பெயர்களை உச்சரித்துச் சென்றார். சில பெயர்கள் மட்டும் தெரிந்தது. சு.ரா.கண்ணன். இரா.சுகுமாரன்.ஆ.மாதவன். மற்ற பெயர்கள் கமர்ஷியல் புத்தக சூழல் வாசகனுக்கு தெரியவில்லை. ஆனாலும் குறித்துக் கொண்டேன்.

* 'உன் ப்ளாக்கைப் பார்த்தேன். அபவ் ஆவரேஜ்' என்றார். பயங்கர மகிழ்ச்சியாக இருந்தது.

* திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தில் முதல் ஞாயிறு கதையரங்கம். கடை ஞாயிறு கவியரங்கம் நடக்கும். கதையையும், கவிதையையும் படித்துக் காட்டலாம். விவாதம் செய்யலாம். போன முறை சந்திப்பிலேயே என்னிடம் சொன்னார். 'வசந்த் என்று ஒருவர். வந்தாரா?' என்று கேட்டிருக்கிறாராம், சங்கத்தில். 'இல்லை' என்றிருக்கிறார்கள். சொன்னவுடன் உண்மையில் வெட்கிப் போனேன். என்னையெல்லாம் ஞாபகத்தில் வைத்திருந்து கேட்டிருக்கிறார் என்றால்... என்ன சொல்வது... மேன்மக்கள் மேன்மக்களே! என்னைப் போல் சோம்பேறிகள் சோம்பேறிகளே!

* 'வரும் ஞாயிறு கவியரங்கம். கவிதை எழுதிக் கொண்டு வா' என்று சொல்லி இருக்கிறார். பயமாக இருக்கிறது.

* இவரைப் பார்க்கையில் ஒரு கண்டிப்பான வாழ்க்கை வாழும், அடர்த்தியான கொள்கைகளோடு வாழ்கின்றார் என்று தோன்றுகிறது. அவர் அருகில் அமர்ந்து அவர் பேசுவதைக் கேட்கையில், நான் எவ்வளவு தளர்ந்து போன வாழ்க்கை வாழ்கிறேன் என்று புரிந்தது. ஒரு கமிட்மெண்ட் இல்லை. 8.30க்கு அலுவலக நேரம் என்றால், 9.30க்கு போய்க் கொண்டிருக்கிறேன். முதலில் இதைச் சரி செய்தாக வேண்டும் என்று ஒரு முடிவு எடுத்திருக்கிறேன்.

* 'வடக்கு வாசல்'என்ற இலக்கியப் பத்திரிக்கையின் ஆண்டு மலரில் வந்திருந்த இவருடைய 'இன்னொரு நாள்' என்ற சிறுகதையைப் படித்து கருத்து கேட்டார். நான் ஒரு மாதிரி புரிந்து கொண்டிருந்ததைச் சொன்னேன். அவரது கோணத்தைச் சொன்னார்.

* அவரது கணிப்பொறியில் இருந்து சில கவிதைகளை அவரது வலைப்பதிவுக்கு ஏற்றுவதில் உதவினேன்.கவனம். உதவினேன். அவரே தான் அனைத்தையும் செய்தார். கற்றுக் கொள்ளும் மனதிற்கு வயது தடையன்று என்பதைக் காட்டினார்.

* தமது உடல் நில்லை சற்று சரி இல்லை என்ற போதும், எனக்காக ரொம்ப நேரம் பேசினார். மிக்க நன்றி ஐயா.

பின் வழக்கம் போல் புத்தகங்கள் வாங்கிக் கொண்டு, இண்டியன் காபி ஹவுஸில் பராத்தா சாப்பிட்டு விட்டு ரூமுக்கு வந்து களைப்பில் தூங்கிப் போனேன்.

பி.கு.:: காலப்பயணியின் வாழ்க்கைப் பயணத்தில் மற்றுமொரு முழுச் சுற்று நிறைந்து, அடுத்த ஆண்டு துவங்கிய நாள் சனிக்கிழமை. எனவே கோயிலில் கடவுளையும், சிறந்த எழுத்தாளர் ஒருவரையும் பார்த்து விட்டு வந்ததில் மகிழ்ச்சி.

***

குமுறும் வானம் ::







ஞாபகம் வருதே ::



பா.ரா. அவர்கள் டைப்-ரைட்டிங் பயின்ற மெஷின் ::



இந்த மெஷின்ல என்ன பண்ணியிருப்பாங்க? ::



சயின்ஸ் ம்யூஸியம் ::

பல்லி.

ன்னியுங்கள். கதை இன்னும் தொடங்கவில்லை. இன்னும் சில வரிகளுக்கு அப்பால் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுவரையில் நாம் ஏதாவது பேசுவோமே?

உங்கள் பையனுக்கோ, பெண்ணுக்கோ ஸ்கூல் அட்மிஷனுக்கு வெயிலில் நின்றது, கல்யாணமாகிப் போகும் பெண்ணுக்காக கான்சுலேட்டில் விசாவுக்காக காத்திருந்தது, மேனேஜரைப் பார்க்க ஹாஸ்பிட்டல் போனது, மழை நின்ற ஒரு சண்டே மாலை பீச்சுக்கு ஃபேமிலியோடு போனது, பார்பர் ஷாப் போனது, மச்சினிக்காக மனைவியுடன் ஷாப்பிங் போனது, உத்தமனாகவே இருந்தாலும் சென்ட்ரல் மெட்டல் டிடெக்டரைக் கடக்கும் போது 'பீப்'படித்து விடுமோ என்ற பயத்தோடு கடந்து போனது, சபித்துக் கொண்டே ஆட்டோ டிரைவரிடம் பைசா கொடுத்தது...

கதை ஆரம்பிக்கப் போகிறது என்று நினைக்கி...

வன் திடுக்கென விழித்துக் கொண்டான். காதுகளில் விழுந்த மெல்லிய தொடர்ச் சத்தம் தூக்கத்திலிருந்து அவனை மீட்டுக் கொண்டு வந்திருந்தது. பெரிய வெடிச் சத்தம் ஏதும் இல்லை. சுவரைத் தாண்டி ஓடும் ரயிலின் சத்தமும் இல்லை. ஒரு பல்லியின் கீச்சுக் குரல்.

க்றீச்...க்றீச்...

அவன் திரும்பிப் படுத்தான். காதுகளைப் பொத்திக் கொண்டான். ஒருக்களித்துப் படுத்து, தோளால் ஒரு காதையும், விரல்களால் மற்றொன்றையும் பொத்தினான். ம்ஹூம்.

க்றீச்...க்றீச்...

எழுந்து சுவர்களில் தேடினான். நான்கு மூலைகளிலும் உற்றுப் பார்த்தான். வளைந்து வளைந்து சென்று கொண்டிருந்த எறும்பு வரிசை ஒன்று, ஏதோ ஓர் இருட்டில் இருந்து கிளம்பி, மற்றுமொரு இருட்டுக்குச் சென்று கொண்டிருந்தது. பல்லியை மட்டும் கண்டு பிடிக்க முடியவில்லை.

அவனுக்கு தூக்கத்தின் போது சிறு சத்தம் கேட்டாலும் விழிப்பு வந்து விடும். காற்றில் உருண்டு பாட்டில் சுவற்றில் இடிப்பது, கதவின் தாழ் திருகுவது, ஓர் இருமல், மெல்லிய நடை எதுவும் அவனது தூக்கத்தைக் கலைத்து விடும். இன்று பல்லியின் முறை.

சென்ற முறை குணா வீட்டுக்குச் சென்றிருந்த போது, இந்த வேலையை ஓர் ஆடு மேற்கொண்டிருந்தது. கயிற்றுக் கட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த அவனது ஓர் இரவை சிவந்த கண்களால் நிரப்பியது அந்த ஆட்டின் குளிரில் நனைந்த தொடர் 'ம்மே...ம்மே..'

அடுத்த நாள் மதியம் பிரியாணியோடு பரிமாறப்பட்ட அதன் குரல், இரவில் கேட்ட அதன் கடைசிக் கேவல்களை, சேலம் சென்று சேரும் வரைக்கும் மினிபஸ்ஸின் பாடல்களோடு அவன் வயிற்றில் கேட்டுக் கொண்டே இருந்தது. அவனுக்கு அப்போது ஒரு பெரியவரின் இளம் வாழ்க்கையிலும் இதே போன்று நடந்த நிகழ்ச்சி நடந்ததாய் எப்போதோ படித்தது அகஸ்மத்தாய் நினைவுக்கு வந்தது.

அவனுக்கு சின்ன ஆச்சரியம் கூட! தன்னை காந்தியோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டதில்! தனக்கும் அவருக்கும் எத்தனை வித்தியாசங்கள்..? அவர் அஹிம்ஸை என்பவர்.

சன்னல் போன்ற குல்லாய், வெள்ளை முடிகள் படர்ந்த நெஞ்சை மறைக்கும் பனியன், வயிற்றோடு இழுத்துக் கட்டிய லுங்கி, அதில் தெறித்திருக்கும் இரத்தத் துளிகள், குடல் பிசிறுகளோடு கரீம்பாய். கொத்து அரிவாளோடு உரசி உரசி, கீறுகள் விழுந்துப் பள்ளமான அடிமரத் துண்டு. எத்தனை ஆட்டுத் தலைகளைப் பார்த்திருக்கும்! எத்தனை உயிர்த் துடிப்புகளைக் கேட்டிருக்கும்! சிறு பாத்திரத்தில் ரத்தத் தேக்கம். தோல் கிழித்து, குடல் வெளிவந்து, வாலின் நுனி ஆணியில் தொங்க விடும் கரீம்பாயைக் கேட்டால் சிரிப்பார்."இது தான் என்னுடைய அஹிம்சை..!" என்றும் சொல்லலாம் அவர்.

இவருக்கும், நெடுஞ்சாலையின் புளியமரங்களின் அடியில் ப்ளாஸ்டிக் கவரில் கலர் கலர் ஸ்ட்ராக்களைத் தொங்க விட்டு, சாக்கின் மேல் பச்சை இளநிகளைக் குவித்து, கழுத்தைச் சீவித் தள்ளும் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்?

இரண்டு இடங்களிலும் அரிவாளின் வேலை ஒன்று தானே? கழுத்தறுபடும் போது கண்களில் தெறிக்கும் பயம், துடிக்கும் கால்கள், குரலில் எழும்பும் வேதனை... ஆட்டுக்கு இருக்கும் இதே வலி தான் இளநீர்க் காய்க்கும் ஏற்படுமா? நமக்கு கேட்கவில்லை என்பதற்காக இளநீர்க்கு வலிக்கவில்லை என்று எடுத்துக் கொள்ள முடியுமா...?

அவனுக்கு அந்த அரிவாளின் உருவம் நினைவுக்கு வந்தது. முனையில் சற்றே வளைந்திருக்கும். மரத்தாலான கைப்பிடி. கூர் தீட்டப்பட்டிருக்கும். அவ்வப்போது கொஞ்சம் ஓய்வெடுக்கும். ஆனால் பெரும்பாலும் கோடை நிலவும் வறண்ட பிரதேசங்களின் நெடுஞ்சாலைகளில் இளநீர் சீவிச் சீவி அதன் வெட்டும் நுனிகளில் லேசான வழுவழுப்பும், ஈரமும், காய்த்த வாசமுமாக இருக்கும்.

ஆனால் பழனனின் கழுத்தில் வெட்டும் போது, அதன் உடலில் படர்ந்த சிவப்பு இன்றும் கழுவப்படாமல், காய்ந்து போயிருக்கக் கூடும்.

அந்த சிவப்பு அவனது கழுத்தில் இருந்து பீறிட்டடித்த குருதியில் இருந்தும் எழும்பி இருக்கலாம். அல்லது உயிர்ப்பயம் கிளைத்த, நரம்புகள் விறைத்துக் கொண்டு நின்ற, விரல்கள் நடுங்கிய கடைசி கணங்களில் அவனது கண்களில் கொழித்த சிவப்பில் இருந்தும் தொற்றி இருக்கலாம்.

அந்த கண்கள்! அந்த கண்கள்!

அவை தான் எத்தனை செய்தன? ஆபீஸுக்கு செல்லும் தன் மனைவியைக் கவ்வும் பார்வையைப் பொழிந்தது அந்த கண்கள் தானே? அவள் செல்லும் வழியெங்கும் வழிந்தது அந்த கண்கள் தானே? ஆபிஸ் விட்டு மாறினாலும் பின் தொடர்ந்த பாதையைக் கண்டு கொண்டதும் அவை தானே? டூரில் தான் வெளியூர் சென்றிருந்த போது, கதவை உடைத்துச் சென்று அவள் மேலே கை வைத்ததும் அவன் தானே?

எத்தனை பெரிய கட்சி ஆளாக இருந்தால் தான் என்ன? அவன் கைகளை உடைத்து, கழுத்தை வெட்டிய போதும், அதே ரத்தம் தானே சீறியது.

அதே ரத்தம்.

தூக்கில் தொங்கிய அவளின் கடைவாயில் நேர்க்கோடாய்க் கசிந்திருந்த அதே சிவப்புச் சாயம்.

அவனது தலையைப் பிடித்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு வந்த போது, வழியெங்கும் இரவின் நிலவோடு சொட்டிக் கொண்டே வந்ததும் அதே சிவப்பு தானே!

வன் திடுக்கென விழித்துக் கொண்டான். பல்லியின் சத்தம் வெகு நேரத்திற்கு முன்பேயே நின்றிருந்தது. இனி அவன் இன்றிரவு மட்டும் தூங்கப் போக வேண்டும்.

நாளை அவனுக்குத் தூக்கு...!

ன்ன கதையைப் படித்து விட்டீர்களா..? நல்லது.

அப்படியே, எஸ்.எம்.எஸ்., ஈ-மெயில், போஸ்டர், விளம்பரம் எதுவும் இல்லாமல், ஒரு கார்டு வாங்கி உங்கள் கருத்தை எழுதி அனுப்பி விடுங்களேன். புண்ணியமாகப் போகும்...போஸ்டல் டிப்பார்ட்மெண்டுக்கு!