"ஏஞ்சாமி...இன்னும் வயிரு நோகுதா..?"
"ஆமாம்மா..."
"ஏனுங்க..குழந்தைக்கு ஒடம்பு சரியில்ல பாருங்க... வைத்தியர்கிட்ட கூட்டிட்டுப் போங்க...இன்னிக்கு பள்ளிக்கோடத்தோக்கு விடுப்பு எடுத்துக்கட்டுங்க..."
"அம்மணி..அவன் நல்லா ஏமாத்தறான்..எல்லாம் கொரத்தனம்.."
"இல்லீங்பா.. நெசமாலும் வயிரு வலிக்குதுங்பா..."
" நேத்து என்னடா சாப்பிட்ட...அம்மணி, நேத்து என்ன போட்ட..?"
"முந்தானேத்து பழைய சாதம், நாந்தாங்க புழிஞ்சு சாப்பிட்டேன்...புள்ளைக்கு தோசை தான் கொடுத்தேங்க.."
"பின்ன எப்படி இவனுக்கு நோக்காடு வந்திச்சு..?"
"அம்மா..."
"ஏனுங்க..பையனே நோவுல கிடக்கான்..அவனப் போய் கேள்வி கேட்டு நோண்டிக்கிட்டு..?"
"சரி..சரி.. நான் வைத்தியர்கிட்ட கூட்டிட்டுப் போறேன்..இன்னிக்கு மட்டும் விடுப்பு எடுத்துக்கிட்டும்.."
***
"அம்மா.. நான் குமரேசன் வீட்டுக்கு போய் கொஞ்சம் கணக்கு எழுதிட்டு வர்றேன்.."
"கண்ணு..பதினோரு மணி வெயில் இப்படி அடிக்குது..சூடு தாங்க மாட்டியேப்பா..."
"பரவாயில்லமா..படிப்பு தான முக்கியம்.."
"என் ராசா..உன்னை போய் அய்யன் தப்பா நெனைசிடுச்சே..ஏங்கண்ணு மத்தியானம் சாப்பாட்டுக்கு வந்துருவல..?"
"இல்லமா.. குமரேசன் வீட்டுலயே சாப்பிட்டுக்கிறேம்மா.."
"சீக்கிரம் வந்திடு கண்ணு.."
***
"டேய்..ஏண்டா இவ்ளோ லேட்டு..?"
"எங்கய்யன் காட்டுக்குப் போக நேரமாயிடுச்சு... நீங்க எல்லாம் என்னடா வீட்டுலச் சொன்னீங்க.."
" நான் காச்சல்... நீ என்ன சொன்ன..?"
" நான் வயித்து வலினு சொன்னேன்டா..சரி ஆரம்பிச்சிட்டீங்களாடா..எப்ப ஆரம்பிச்சீங்க...எத்தன ஓவர் ஆச்சு..?"
"ஆமா.. நீ வர்ற வரைக்கும் காத்திருந்தா, வெளங்கனாப்ல தான்..பத்தரை மணிக்கே ஆரம்பிச்சிட்டோம்..எட்டு ஓவர் ஆச்சு..."
"சரி.. நான் இப்ப எங்க நிக்கறது..?"
"லெக் அம்பயருக்குப் பின்னாடி போய், அந்த புதர் தெரியுதுல்ல... அங்க போய் நில்லு.."
"இந்த அசிங்கம் எல்லாம் எப்படா சுத்தம் பண்ணுவாங்க... நாமளாம் இங்க வெளயாடுவோம்னு தெரியாதா அவனுங்களுக்கு..?"
"போய் நில்லுடா..வர்றதே லேட்டு..வெட்டிக்கதை பேசிக்கிட்டு..."
"டேய்.. நீ போய் ஒழுங்கா பேட் பண்ணு..ஓவராப் பேசாத...உன் அவுட் எங்கைல தாண்டே..."
"பாத்திருவம்டா.."
****
"மச்சான் எழுந்திரு..ஏந்திரு மச்சான் ஏந்திரு.."
"டேய்..மணி என்ன ஆச்சு..?"
"ஒன்பதே கால் ஆகுது...பர்ஸ்ட் அவர் சர்க்யூட்ஸ்2 டா..ப்ராக்ஸி எல்லாம் குடுக்க முடியாது..கண்டுபிடிச்சுடுவார்டா.."
"என் கண்ணுள்ள...எப்படியாவது குடுத்திடுடா.."
" நீ வரலையா அப்ப..?"
"டேய்.. நான் வந்து படுத்ததே நைட் மூன்றரைக்குடா..."
"பாவி..என்னடா பண்ணே, அவ்ளோ நேரம்..?"
"வெட்டி மொக்கை தான்... சிக்ஸ்த் ப்ளாக்ல போய் பாரு..38லயும், 40லயும் இன்னும் நாலு பேரு தூங்கிட்டு இருப்பாங்க.."
"சரி, அடுத்த பீரியடாவது வந்திடுவயில்ல..?"
"மச்சான்..ஒண்ணு பண்றியா..?"
"என்ன..?"
"கரெக்டா 12 40க்கு வந்து எழுப்பி வுடறியா..?"
"எதுக்கு சாப்படறதுக்கா?. நீ திருந்தவே மாட்டே.."
"ரொம்ப நன்றி மாமா.."
****
"Anu..getup..It's time to go to school.."
"mummy...."
"what..?"
"i feel small pain in stomach.."
"really...?"
"yes mom...aah...!!"
"Dear..come here and see your child...she refuses to go to school.."
"anumma..whats the problem..?"
"daddy...i feel uneasy...stomach pain.."
"ஏஞ்சாமி...இன்னும் வயிரு நோகுதா..?"
*************