Monday, September 07, 2009
காவிரிக் கரையோரத்திலேயே...
திருவோணம் விடுமுறைகளின் போது என்ன செய்வது என்று போரடிக்க, ஏதோ ஒரு நினைப்பில் ஒரு ஜோசியரைச் சென்று பார்த்தேன். அவர் அலசி, ஆராய்ந்து, எல்லா பேப்பர்களையும் கணக்கிட்டுப் பார்த்து, எண்களையும், எழுத்துக்களையும் கலைத்து, நிறையப் பேசி, மூன்று மணி நேரத்தின் முடிவில் சில கோயில்களைச் சொன்னார். அங்கெல்லாம் போய் வந்தால், நினைப்பது கைகூடும் என்றார். என்ன நினைக்கின்றேன் என்றே தெரியவில்லை. எனினும் ஊர் சுற்றலாம் என்ற களிப்பில் அன்றிரவே கிளம்பினோம்.
பேருந்தின் மத்தியப் பிரதேசத்தில் மூன்று பேர் இருக்கும் இருக்கை ஒன்று பிடித்து வைத்துக் கொண்டோம். தலைக்கு மேல் பரண். கால் அருகில் பெட்டிக்குள் ஸ்பீக்கர்கள். கொண்டு வந்திருந்த சென்னை சில்க்ஸ் ப்ளாஸ்டிக் பைக்குள் அத்தனையும் அடங்கி விட்டதால், மடியிலேயே வைத்துக் கொண்டேன். அம்மாவும், தம்பியும் கொறிக்க ஏதேனும் வாங்கி வரச் சென்று விட்டர்கள். ஓட்டுநர் தலைக்கு மேல் தமிழ்ப்படம் முடிந்து கொண்டிருந்தது. ஓட்டுநர் தலை தான் இல்லை. அவர் 22.15க்குத் தான் வருவார்.
நாங்கள் ஏறும் போது யாருமே இல்லாமல் இருந்தது. கிளம்புவதற்குள் பஸ் நிரம்பி, நிற்கத் தொடங்கி விட்டார்கள். 'கரூரில் இறங்கிக் கொள்கிறேனே','ஏன் சார், ஊஞ்சலூரில் நிற்காதா..?' போன்ற உப தொந்தரவுகளை எல்லாம் நடத்துனர் மிகப் பொறுமையாகச் சமாளித்து, வண்டியை ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து நகர்த்துவதற்குள் 22.20 ஆகியிருந்தது. நாங்கள் மூன்று கும்பகோணங்கள் வாங்கிக் கொண்டோம்.
நகரத் தொடங்கியதும் டி.வி. அணைக்கப்பட்டு விட்டது. இரவும், குளிரும் எங்களை விடாமல் துரத்திக் கொண்டே வந்தன; இறுக்கச் சாத்திய கண்ணாடிகளின் மேல் மோதி உடைந்தன. மெல்லிய நீல ஒளி போர்த்திய சதுரப் பெட்டிக்குள், எங்கோ ஒரு துளை வழியாக சிலுசிலுப்பு மட்டும் யாருக்கும் தெரியாமல் நுழைந்து கொண்டிருந்தது. ரெயில்வே கேட்டில் சில நிமிடங்கள் தங்கி, அதிவிரைவாகக் கடந்த நீலப் பெட்டித் தொடரை வேடிக்கைப் பார்க்கையில், ஜன்னல்கள் தீற்றல்களாக மறைந்து, அதன் நீள ஒலி தேய்ந்து மறைவதைக் கேட்டோம்.
கரூரில் மேம்பாலம் இன்னும் நிறைவாகவில்லை. நிலையத்துக்குள் செல்லாமலேயே திருச்சி ஹைவேயில் நுழைந்து விட்டது. மடக்கியே வைத்திருந்த கால்களில் விரல்களுக்கிடையே நசநசத்தன. ஏதேதோ எழுதிக் கொண்டே வந்தேன். பின் மெல்ல மெல்ல உறக்கத்தின் மர்ம விரல்கள் தொட்டு, மெல்ல அவிழ ஏதோ ஒரு மாய கணத்தில் தூங்கிப் போனேன்.
சடக்கென ஒரு நேரத்தில் தூக்கம் என்னைக் கைவிட்டுவிட, நாளையப் பெளர்ணமிக்கு நிலா தயாராகிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். விசுக்கென கடந்த மஞ்சள் போர்ட், 'முத்தரசநல்லூர்' என்று சொல்லியது. திருச்சிக்கு இன்னும் ஏழு கி.மீ.க்கள் என்று அம்பு திசை சொல்லியது. அருகிலேயே ஒட்டி உருண்டோடிய வாய்க்கால் முழுக்க நிரம்பி, கரையில் தளும்பியது. ஸ்ரீரங்கக் கோபுரத்தில் மின் விளக்குகள் வரிசையாய்த் தெரிந்தன. மாநகரைச் சுற்றி வந்து, சத்திரம் பேருந்து நிலையம் வழியாகச் செல்லாமல், மெயின் கார்ட் கேட்டில் நுழைந்தது.
மலைக்கோட்டையின் படிக்கட்டுகள் புள்ளி புள்ளிகளாய்த் தெரிந்தன. தாயுமானவர் சன்னிதியின் தங்கக் கோபுரம் அதிமஞ்சளாய் ஜொலித்தது. ரிக்ஷாக்காரர்கள் அந்த பின்னிரவு இரண்டு மணிக்கும் சவாரி பார்த்தார்கள். இரவு நேரப் பேருந்துகள் ஸ்டாப்புகளில் காத்தன. ஹோட்டல்களின் வாசல்களில் கழுவிய நீர் தேங்கியிருந்தது. கே.ஏ.எஸ்.ராமதாஸ் எழுத்தின் கீழ் திருப்பதி கோபுரம். சென்னை ஏர்பஸ்கள் எசகுபிசகாய்ச் சிக்கிக் கொண்டிருந்தன. கொஞ்சமே தள்ளி இருக்கும் ஜங்ஷனில் இருந்து ஏதோ ஒரு இரயில் கிளம்பும் வீரிய ஹாரன் கேட்டது. ட்யூப்கள்ல் தொங்கிய எண்ணெய் காகிதத்தில் பூச்சிகள் இறந்து ஒட்டி இருந்தன. பத்து நிமிடங்களில் பஸ் மீண்டும் நகர்ந்து, ரெயில்வே மேம்பாலத்தில் ஏறி இறங்குவதற்குள்...மீண்டும் தூக்கம்.
தஞ்சாவூர் வந்ததே தெரியவில்லை. இன்னும் குளிர் குறையவில்லை. அங்கிருந்து கிளம்பி நெடுஞ்சாலைகள் குறுகிக் குறுகி ஒல்லியாகி ஒற்றைத் தார்ப் பட்டையாகும் போது, சுத்தமாக தூக்கம் ஓடி விட்டது. இருபுறமும் அத்தனையும் வயல்கள். அந்த அதிகாலை பூக்கும் அழகான நேரத்தில் இருள் மென்மையாகக் கரையத் தொடங்கியிருந்தது. இப்போது சில்லென்று காற்று தன் பெரும் ஆரவாரத்தோடு நுழைய ஜன்னலை முழுக்கத் திறந்து வைத்துக் கொண்டேன். ஆனாலும் முதலிரவுக்குப் பெண் போல் நாணம் தழுவிக் கொண்டு காற்று தத்தித் தத்தி ஓடும் பேருந்துக்குள் புகுந்து புகுந்து கலந்தது.
குடந்தை என்றும் குறிப்பிடப்படும் கும்பகோணத்தில் பேருந்து நுழைந்து, கிடைத்த இடத்தில் செருகிக் கொண்டு நின்ற போது விடிவதற்கான விளிம்பில் இருந்தது வானம். காலை ஐந்து தாண்டி ஐந்து நிமிடங்களைத் தொட்டுக் கொண்டிருந்தது. ஆண்கள் இலவசச் சிறுநீர்க் கழிப்பிடத்தின் அருகில் நகராட்சியின் பூக்கடை மார்க்கெட் விரிந்திருந்தது; பழ மார்க்கெட் கலந்திருந்தது. இருவருக்குமான பொதுக் கழிப்பிடத்தின் மத்தியில் ப்ளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்திருந்த லுங்கியர் முன்னால் நாணயங்கள் சிதறிக் கிடந்தன. தண்ணீர் வரவில்லை என உள்ளிருந்து யாரோ சொல்ல, விளக்குக் கம்பத்தின் கீழ் தூங்கிய ஒருவரைக் கத்தி எழுப்பி மோட்டர் போட வைத்து, பச்சைப் பாம்புச் சட்டைப் பைப்பினை தொட்டி வாயில் செருகினார். கல்லணை செல்லும் பேருந்தின் தலைவிளக்குகள் அணைந்து, எரிந்து, அணைந்தன. திருவையாறு போர்டைப் பார்த்ததும் தி.ஜானகிராமன் நினைவு வந்தது. 24 மணிநேர மருந்துக் கடையில் மூன்று பேர் பேசிக் கொண்டிருந்தனர். மன்னார்குடி செல்லும் பேருந்து ஒன்றில் ஊதுபர்த்தி செருகி வாசமாய் இருந்தது. குப்பைகள் இலக்கில்லாமல் கலைந்தன. மெட்டல் சேர்களில் குடும்பங்களாய்த் தூங்கிக் கொண்டிருந்தனர். ஸ்வீட் கடை, புத்தக கடை, ஆட்டோ ஸ்டாண்ட், பஸ் டிப்போ ஆபீஸ் அத்தனையும் மற்றுமொரு நாளுக்காகத் தயாராகிக் கொண்டிருக்க, பூச்சிகள் இறைந்த சோடியம் வேப்பர் மஞ்சளாய்க் கொட்டியது.
மன்னார்குடி செல்லும் பேருந்தில் ஏறி, நிலையத்திலிருந்து தப்பித்து பயணம் தொடங்கிய போது நாள் புலர்ந்தே விட்டது. செழித்த பழமாய் வயல்களின் உடலிலிருந்து மெல்ல எழும்பியது சூரியன். அதன் செவ்விதழ்கள் உறிஞ்சக் காத்துக் கிடந்தன பனித்துளிகளைச் சுமந்த கதிர்கள். வானம் தெள்ளென தெளிந்து, நீல மேலாடையில் நனைந்திருந்தது. புள்ளினங்கள் 'கீச்சு...கீச்சென' கத்திக் கொண்டே அங்குமிங்கும் உற்சாகமாய்ப் பறந்து திரிந்தன. காற்றில் குளிர் மெளனமாய் இறங்கி, மிக இலேசாக வெம்மை ஊடுறுவுவதை உணர முடிந்தது. எத்தனை குளங்கள்...! எத்தனை ஓடைகள்...! எத்தனை வாய்க்கால்கள்...! அத்தனையிலும் நுரைகள் குலுங்க, பச்சை நீரோட்டம் பாய்ந்து ஓடியது. வெளிச்சம் பரவப் பரவ, சேடிப் பெண்களாய்ப் புளியன்கள் வரிசையாய்ச் சாமரம் வீசினர். கிணறுகளிலும், அத்தனை நீர்நிலைகளிலும் யாரோ சிலர் குளித்துக் கொண்டிருந்ததனர். குடந்தையிலிருந்து 16 கி.மீ.யில், ஆலங்குடியில் இறங்கிக் கொண்டோம்.
சிவன் கோயில்களில், மூலவரைச் சுற்றி வரும் போது, தெற்கு பார்த்து, யோக வடிவில் அமர்ந்திருப்பவர் குருபகவான். தட்சிணாமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். வியாழக்கிழமைகளில் ஸ்பெஷல் வழிபாடுகள் இவருக்கு நடைபெறும், மஞ்சள் இவருக்குப் பிடித்த வண்ணம். சிவபெருமானின் மற்றொரு அவதாரமே இவர். நவக்கிரகங்களின் அத்தனை பிரசித்தி கோயில்களும் தஞ்சை மாவட்டத்திலேயே சுற்றிச் சுற்றி அமைந்திருக்கின்றன. ஆலங்குடி என்பது குருஸ்தலம்.
நாங்கள் இறங்கிய ஸ்டாப்பின் அருகிலேயே 'தமிழரசி லாட்ஜ்' இருந்திருக்கின்றது. கவனிக்கவில்லை. கோயில் கொஞ்சம் நன்றாகவே உள் தள்ளி இருக்கின்றது. வரவேற்பு வளைவிற்குள் நுழைந்து, நடக்கிறோம்...நடக்கிறோம்...ந்து கொண்டே இருக்கிறோம். வளைவுகள், சந்துகளில் நடந்து குட்டி ஆடுகளையும், கைப் பம்ப்பில் தண்ணீர் அடிக்கும் பெண்களையும் பார்த்தோம்; பெருமாள் கோயில் ஒன்று இடையிலேயே கூப்பிடுகின்றது. தாண்டிப் போனால், ஒரு ரிட்டையர்ட் இண்டியன் அட்மின் ஆபீஸர் விட்டுச் சுவற்றில் நான்கு போர்டுகள் உருவாக்கப்பட்டு, இன்றைய திருக்குறளும், நல்லவனாய் இருக்க வழியும், ராமகிருஷ்ணரின் பொன்மொழியும் எழுதப்பட்டிருக்க, அவர் தொங்கும் தோட்டத்திற்கு நீரூற்றிக் கொண்டிருந்தார். வழி கேட்டு இன்னும் நடந்தோம். டீக்கடைகளில் பாய்லர்கள் அப்போது தான் கழுவப்பட்டுக் கொண்டிருக்க, சுப்ரபாதம் எங்கோ அருகில் கேட்டது.
ஒருவழியாகக் கோயிலைக் கண்டுபிடிக்க, வாசலிலேயே இருந்த அர்ச்சனைத் தட்டுக் கடைக்காரரைக் குளிக்க இடம் கேட்டோம். மீண்டும் வந்த வழியில் கொஞ்சம் சென்றால், அய்யர் ஒருவர் வீட்டில் கழிக்க, குளிக்க இடம் தருகிறார்கள். தலைக்கு பத்து ரூபாய் மட்டுமே! முடித்து விட்டு என்னிடமே அர்ச்சனைப் பொருட்கள் வாங்குங்கள் என்று சிரித்தார். நல்ல விசாலமான குளியல் தொட்டி, தோட்டத்திலேயே மேலே திறந்த பாத்ரூம். புத்துணர்வோடு மேக்கப் எல்லாம் முடித்து கோயிலுக்குள் புகுந்தோம்.
நல்ல தரிசனம்; விளக்கேற்றினோம்; பிரசாதம் உண்டோம்; காலையில் கொஞ்சம் சுற்றிச் சிற்றி நடந்தோம். அர்ச்சகர் தட்டுகளிலும், ஆளுயர உண்டியல்களிலும் காசுகள் போட்டோம். ஐந்து நிமிடங்கள் உட்கார்ந்து விட்டு, வெளியே வந்து வழியைப் பிடிக்கும் போது, ஒரு பெண். ஹூக்கு பிய்ந்த சட்டை. முட்டி வரை மட்டுமே எட்டி இருக்கும் பூப் பாவாடை. கிளர்ந்து நிற்கும் மஞ்சள் பரட்டைத் தலை. ஒரு காதில் மட்டும் கண்ணாடித் தோடு. அம்மணமாய் ஒரு பையக் குழந்தையுடன் பையப் பைய நடந்து வந்து, "அண்ணே...அண்ணே...! காசு குடுங்ணே..! சாப்புட்டு ரெண்டு நாளாச்சுண்ணே..!"
பெருமாள் கோயிலுக்குப் போகும் உத்தேசம் நெருக்கமான பயணத் திட்டத்தால் தவிர்க்கப் பட்டு, மீண்டும் பஸ் பிடித்து குடந்தைக்கே திரும்பினோம். வழியில் வயல்கள். தஞ்சை மாவட்டத்திற்கு இப்போது தான் முதன்முதலாக வருகிறேன். ஏனோ மோகமுள் நினைவில் பொங்கிப் பெருகியது. ஏனோ தி.ஜா.வின் சில சிறுகதைகள் கண்களுக்குள் மோதின. காற்றில் இசை தவழ்ந்து வருவது போல் ஓர் எண்ணம். வெய்யில் மெதுவாக ஏறத் துவங்கிவிட்டது. டீக்கடை முகங்களில் Y.S.Rரைத் தேடும் போஸ்டர்கள்.
கும்பகோணம் பஸ் ஸ்டேண்டில், கெளரிசங்கரில் தயிர்வடை, பொங்கல் சாப்பிட்டு மென் போதைக்குத் தயாரானேன். திரும்பிய திசையெல்லாம் கோயில்கள் கொண்ட நகரத்தில் எதையும் பார்க்கும் நேரம் இப்போதைக்கு இல்லாததால், மீண்டும் பஸ் ஏறி விரைந்தோம். கைகளில் சூடான பேப்பர்கள். தலைப்புச் செய்திகளில் தவறி விழுந்த ஹெலிகாப்டர்.
"...அக்கா! இதோ நமக்கு முன்னாலிருக்கும் நந்தி விக்கிரகத்தைப் பார்! எவ்வளவு சின்னஞ்சிறியதாயிருக்கிறது! அடியும் முடியும் காண முடியாத மகாதேவரின் வாகனமாகிய நந்தி இவ்வளவு சிறியதாகவா இருக்கும்? கைலாசத்தில் பரமசிவனுடைய பரிவாரங்களோ பூதகணங்கள். அந்தப் பூதகணங்கள் அடிக்கடி வந்து தொந்தரவு செய்யாமல் கைலாசத்தின் வாசலில் நின்று காவல் புரிகிறவர் நந்திதேவர். அவர் இவ்வளவு சிறிய உருவத்துடன் இருந்தால் பூத கணங்களை எப்படித் தடுத்து நிறுத்த முடியும்? அதோ பார் அக்கா! என் கண் முன்னால் இதோ இந்த நந்தி வளர்கிறது. வளர்ந்து, வளர்ந்து, வளர்ந்து பெரிதாகிறது. பிரம்மாண்ட வடிவம் பெற்று இம்மண்டபத்தின் மேற்கூரையை முட்டுகிறது. மேற்கூரை இப்போது போய் விட்டது. நந்திபகவான் வானமளாவி நிற்கிறார்; பூத கணங்கள் வருகிறார்கள்! நந்தி பகவானைப் பார்த்துப் பயபக்தியுடன் நின்று சிவனைத் தரிசிக்க அனுமதி கேட்கிறார்கள்; நந்திபகவான் அவ்வளவு பெரியவராயிருந்தால் சிவபெருமான் வீற்றிருக்கும் ஆலயம் எப்படியிருக்க வேண்டும்? தக்ஷிண மேரு என்று சொல்லும்படி வானை அளாவிய கோபுரம் அமைக்க வேண்டாமா? அதற்குத் தக்கபடி பிரகாரங்கள் இருக்க வேண்டாமா? இப்போது சோழநாட்டில் உள்ள கோயில்கள் அகஸ்திய முனிவர் கோயில் கொள்வதற்குத் தான் ஏற்றவை. சிவபெருமானுக்கு உகந்தவை அல்ல...."
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் நெரிசலாய் இருந்தது. சாலையை அடைத்துக் கொண்ட சைக்கிள் தள்ளுவண்டிகள்; கவிழ்த்த கூடைகளின் முதுகுகளில் சுற்றிய சரம் சரமாய் ஈரம் தெளிக்கப்பட்ட பூக்கள்; போஸ்டர்களில் பல வண்ண எழுத்துக்களில் அண்ணன்கள், தளபதிகள் அலைகடலென வந்து குமிய்மாறு அழைக்கிறார்கள்; சிக்கன போஸ்டர்களில், அதை விடச் சிக்கனமாய்ப் பெண்கள் 'A' முத்திரைக் கீழ் சிணுங்குகிறார்கள்; வெம்மை உக்கிரத்துடன் அணைக்கிறது; நடைபாதையின் சுவரெங்கும் சிறுநீர்த் தடங்கள். ட்ராபிக் விதிகளை மதிக்காது கலக்கும் வாகனங்கள்; ஆம்புலன்ஸ் விரைகின்றது; வல்லம், தேனி பேருந்துகள் லேசாய் நிரம்பிக் கடக்கின்றன; கறுப்புக் கண்ணீரில் ரெட்டிக்காகத் தட்டிகள் எலெக்ட்ரிக் கம்பங்களில் தொங்குகின்றன; விதவிதமான சினிமா அறிவிப்புகள், நாலு சக்கரக் கூரை வண்டியில் ஐஸ்மோர், குளிர்பானக்கள்; கர்ச்சீப்பில் மறைந்த முகம் விற்கும் பொம்மைகள் வெயிலுக்குத் தலையாட்டுகின்றன; ட்ராவல்ஸ் பஸ்கள் இடம் பார்த்துச் செருக, பள்ளிக் குழந்தைகள் இரண்டிரண்டாய் நகர, எப்போதோ உயிர்த்திருந்த அகழியில் குப்பைகள் சேர்ந்து, பிறவிப்பயன் இழந்து பேருக்கு வெற்றுக்குழியாகியிருக்கையில், கனவான ஒரு பொற்காலத்தின் மிஞ்சிய ஒரு பெரும் அடையாளமாய் வெளியுலகப் பரபரப்பிற்குச் சற்றும் சம்பந்தமின்றி விரிந்திருக்கின்றது தஞ்சைப் பெருவுடையார் பிரகதீஸ்வரர் திருக்கோயில்.
வானத்தில் யாரோ தம் வலுக்கரங்களின் கூர்நகங்களால் கீறி விட்டதைப் போல் மேகப் புகைகள் நீலப் படுதாவில் விசிறியடிக்கப்பட்டிருந்தன. வெய்யில் செம்மையாக வெம்மையாக ஊற்றிக் கொண்டேயிருந்தது. சாக்குப் பாதையினை எட்டுவதற்குள் கற்பாதைகளில் கால்கள் சுட்டுக் கொண்டன. இங்கு இதோடு மூன்றாவது முறை என்றாலும், மூலவரைப் பார்ப்பது இதுவே முதல் முறை. 'அம்மையே அப்பா ஒப்பிலா மணியே... அன்பினில் விளைந்த ஆரமுதே... இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்... எங்கெழுந்தருளுவது இனியே...!' மனதின் ஒரு துணுக்கு அரற்றிக் கொண்டே வந்தாலும் ஆதார ஆர்வக் கண்கள் 'கல்லிலே கலை வண்ணங்களைக்' கண்டு கொண்டே வந்தன. கூரை தாங்கும் தூண்களையும், தலைகீழாய்த் தோங்கும் வெளவால் படைகளையும், துவாரபாலகர்களையும், எங்கெங்கு கண்டாலும் செதுக்கிய தமிழ் எழுத்துக்களையும், பனியன், மடித்துக் கட்டிய வேட்டியில் வரிசையில் நகர்ந்த தெலுங்குக் கிழவர்களையும், ஜீன்ஸ் முறுக்கிய இளம் மார்புகளையும் தாண்டினால், பிரம்மாண்டமாய் இருக்கிறது லிங்கம். தீபாராதனை; திருநீறு; தூணிலேயே மிச்சத்தைக் கொட்டுதல்;
வெளி வந்தோம். தொடங்கியது கேமிரா வேட்டை..!
ஒவ்வொரு பகுதியிலும் செதுக்கியிருக்கும் சிற்பங்களைக் கண்டு களிக்க ஒரு நாள் போதாது. முடிந்தவரை நோக்கியா செல் வழி நோக்கிய படங்களைச் சிறைப்பிடித்தோம். சுற்றுச்சுவரில் வரைந்த தஞ்சாவூர் பெயிண்டுங்குகள் மேல் எம் இனியத் தமிழர்கள் தம் கைவரிசைகளைக் காட்டியதில், ஆக்ரோஷ மகிஷாசுரமர்த்தினி காலுக்கருகில், 'ரமேஷ் - கவிதா'! சுப்ரம்ணியர் கோயில் தூணில் பாதி குதிரை வடிவம்; மீதி குழம்பிய உருவம். நந்தி சிலை அருகில் ஒரு பள்ளி மாணவ மாணவிகள் கூட்டம். தோழிகள் மாறி மாறி போட்டோ எடுத்துக் கொண்டிருக்க, நந்தி நாவைச் சுழட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. கோயிலின் வெட்டவெளிக்குள் காற்று பிய்த்துக் கொண்டு போனது. முதல் கோபுரத்தில் கெமிக்கல் பூச்சு நிறைந்து, இரண்டாம் கோபுரத்தில் கட்டை போட்டிருந்தார்கள். முன்பக்கப் பூங்காவில் படுத்துப் பார்த்தால் சுகமாய்த் தூக்கம் வரும் போது, வாசலில் நின்றிருந்த கோயில் யானை, அசைந்தசைந்து மணியோசை எழுப்பித் தன் கொட்டடிக்குக் கொண்டு செல்லப்பட்டது.
கிளம்பும் போது வானம் தேக்கி வைத்திருந்த அத்தனை மேகங்களையும் கொண்டு வந்து நிறுத்தி தஞ்சையின் வெளியெங்கும் குழுமித்திருந்தது. குமுறிக் கொள்ளும் முகில்கள்; கொத்துக் கொத்தாய்க் கருமைகள்; எப்போது வேண்டுமெனிலும் பெய்யத் தயாராய்! ஆனால் நாங்கள் திருச்சிக்குத் திரும்பும் வரை ஒரு சொட்டு கூட விழவில்லை.
திருச்சியிலிருந்து இரவு பதினொரு மணிக்கு ஈரோடு கிளம்பி, கரூர் வரும் வரைத் தூங்கித் திடுமென விழித்துக் கண்ட ஆகாயத்தில் ஒற்றையாய்த் தேங்கி நின்ற வெள்ளை உருண்டைத் துளியின் துயரை நினைத்த போது சில வரிகள் தோன்றின. எழுதி வைத்துக் கொண்டு மீண்டும் நித்திரையில் மூழ்கினேன்.
'கொஞ்சம் அலட்சியத்துடன் தீட்டப்பட்டிருந்த மேகத் தீற்றல்கள் திட்டுத் திட்டாய் மிதக்கின்றன. ஒரே ஒரு கொண்டல் கிழிசல் பெளர்ணமியைத் தின்ன முயற்சிக்கின்றது. இரவின் அத்தனைக் குளிர்ப் பிரதேசங்களையும் வெண்ணிலா தன் பாதரசப் பனி ஒளியின் கீழ்ப் பதுக்கிக் கொள்கின்றது. காலம் முத்தமிட்டுக் கிறங்கி நிற்கும் இந்த இருள் பொழுதில் மகரந்தம் எந்தப் பூவிலிருந்து எந்த பூமிக்குப் பாய்கின்றது? தன் பொன் கரங்களால் எதை நீட்டிப் பிடிக்க சிவப்பாய் முத்தமிட்டுக் கதிர் கிளம்புகின்றது? கூட்டுக்குள் ஒளிந்திருக்கும் குட்டிச் சிறகுகளால் மூடப்பட்டிருக்கும் எந்தப் பறவை விடியலை முதலில் அறிவிக்கின்றது?'
Subscribe to:
Posts (Atom)