Monday, February 08, 2010

பூவிலோர் நாணமெனக் காத்திருந்தேன்...



ரங்கள் கனிந்திருந்த வனமொன்றில் முந்தைய நாட்களில் ஒரு ஜன்னலற்ற வீடு தனித்திருந்தது. அதன் அலமாரிகளில் புத்தகங்கள் கலைந்திருந்தன. ஒரு மஞ்சள் விளக்கு தலைகீழாய்த் தொங்கியது. ஒரு பச்சைச் செடித் தொட்டியில் ஆரஞ்சுப் பூக்கள் பூத்திருந்தன. அவற்றின் மேல் ரகசியமாய் ஒரு பாம்பு சுருண்டிருந்தது. தடவிக் கொண்டிருந்தேன்.

கூரை மேல் ஒரு புகைப்போக்கி. மெல்லிய பனிப்புகைப் பேரரசு அதன் வழியே கசியும் போது சில தேவதைகள் சில நாட்களில் வருவார்கள். அதற்கானச் சின்னச் சின்னத் தங்கக் குச்சிகளைச் சேகரிக்க வேண்டும்.

காட்டின் மையத்தில் ஒரு குளம் இருந்தது. அதன் வெள்ளித் தாரைகள் படிந்து படிந்து கரைகள் வெண்மை நுரை தேசமாக ஆகியிருந்தன. அவற்றின் ஊடாகக் குட்டி எறும்புகள் வரிசையாகச் செல்லும்.

ஓர் இரவில் குளிர்ப் படையெடுத்துக் கொட்டிக் கொண்டிருந்த போது, வாசலை யாரோ தட்டினார்கள். மினுக்கிக் கொண்டிருந்த கண்ணாடி கவிந்த விளக்கை எடுத்துக் கொண்டு கதவைத் திறந்து பார்த்தால், வெண்பனிக் குவியல்களுக்கு மத்தியில் ஒரே ஒரு தங்கச் சாவி. வரிசையாகக் குளம்படித் தடங்கள்.

குதிரை வீரன் செல்லும் ஓவியத்தின் பின்புறம் ஒரு கதவு இருந்தது. அதற்கான சாவியை மேகம் பொறிந்த ஒரு முன்னிரவில் ஒரு வைரம் பதித்த குளம்புக் குதிரை வந்து வைத்து விட்டுப் போகும் என்று பாட்டி சொல்லியிருந்தாள்.

ஓவியத்தை நகர்த்தும் போது அந்தக் குதிரை கனைத்தது. விளக்கின் சில பொறிகளை ஏந்தி வந்து கொடுத்தவுடன் கடித்து விட்டுத் தெற்கை நோக்கி ஓடியது. அதன் மேலிருந்த வீரன் தன் சாட்டையால் சொடுக்கியதும் மீண்டும் ஓவியமாய் நின்றது. தொலைவிற்குச் சென்று விட்டதால், ஓவியம் எடை குறைய, நகர்த்திப் பார்த்தால், நொண்டிச் சிலந்தி ஒன்று அந்தச் அந்தக் கதவின் துளையில் கூடு கட்டியிருந்தது. முத்துக்களால் கோர்த்திருந்த அதன் இழைகளில் ஒரே ஒரு பூ பூத்திருந்தது. சிலந்தி அதன் மூன்றாம் இதழைப் பாதியைக் கடிக்கும் போது, நுரை தள்ளி கீழ்ழ் விழுந்தது. ஒவ்வொரு முத்தாய்க் கழன்று விழ, வலை சுருண்டு சுருண்டு சிலந்தியின் மேல் ஒரு படுக்கையாய்ப் படர்ந்தது.

தங்கச் சாவியைக் கொண்டு இரண்டு சுற்றுக்கள் சுற்ற கதவு தோன்றியது. அதன் விளிம்புகள் முழுதும் பட்டுச் சருகுகள் நிரம்பியிருந்தன. மேஜை மேல் நின்றிருந்த புறா இறகுகளாலான விசிறியை எடுத்து அவற்றின் மேல் பூச மறைந்தன.

கதவு திறந்தது. பின்னால் கடல் அலைகளில் நிலா மிதக்க, மெளனம் போல் மெல்லிய பெண் அங்கே படுத்துக் கொண்டிருந்தாள், ஆடைகளற்று..!!

(தொட...ரும்)

***

Image Courtesy :: http://www.utahands.com/artists/miles/images/paintings_files/castaways_dream2.jpg