Saturday, May 02, 2009

ஏப்ரலில் இருந்து மேக்கு ஒரு பயணம்!

னோ இருள் கடிக்கும் இந்த ராத்திரிப் பயணத்தில் குளிரக்குளிர ரஹ்மானைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றியது. மொபைலின் மெமரி வயிற்றுக்குள் 45 பாடல்கள் திணத்திருந்தேன். எனிமா கொடுத்த குழாய் சட்டென பிரிந்து ஸ்டீரியோ கரங்கள் வழியாக காதுகளுடன் இணைத்து, தட்ட, முதல் பாடலில் 'வானம் இடிக்க எகிறிக் குதித்தார்கள்'.

ரவிக்கை தேவையற்றதாகச் செய்த வறுமை கரைத்த மனைவியை அர்த்தநாரி போல் தன் இடப்புறம் வைத்து, என் இடப்புறம் உட்கார்ந்திருந்த அந்த மத்திய வயதினர் ஐந்து நொடிகளுக்கொரு முறை சாய்ந்து கொள்ள என் தோள் கேட்கிறார். 'தள்ளி விடு' என்று ஒரு குரலும், 'பாவம்! உழைத்த களைப்பாய் இருக்கலாம்' என்றூ மறு குரலுமாய் அலையடித்தது.

வண்ணதாசன் சொல்வது போல் ஒரு நாவல் கதாபாத்திரங்களாய், எங்கெங்கோ பிறந்தவர்களையும், எப்படி எப்படியோ வாழ்பவர்களையும் ஓர் ஏப்ரல் இறந்து, மே பிறக்கும் அர்த்த ராத்திரியில், ஓர் இரண்டு மணி நேரம் நாகர்கோயில் - தின்னவேலி வரை இழுத்துச் செல்கின்ற கைகளின் பெயர் என்ன? விதியா? இயற்கையா? நெல்லை அடைந்தவுடன் அவரவர் வெவ்வேறு திசைகளில் சிதறிப் போவதற்கு முன் ஓர் ஒற்றை முடிவை நோக்கி எங்களை சுமந்து போவது எந்த விளையாட்டின் எத்தனையாவது விதி?

எதிர்ப்படும் லாரிகள், பேருந்துகளில் ஒளிப்பற்களை நீட்டிக் கொண்டு, வாய் திறந்து, இரண்டு கண்களில் ஒன்றில் டிரைவர் இயங்கிக் கொண்டிருக்க, மூச்சு முட்டிக் கொள்ளும் சுமை அடைத்து புயலாய்க் கடப்பவற்றுள் எத்தனையை சரிந்த கோலத்தில் நாளை தினத்தந்தியில் பார்ப்பேன்?

முன்னாள் வயல்களில் நட்டு வைத்திருந்த இராட்சஸ மின் காற்றாடிகள், அசுரத்தனமாய் சுற்ற முயலும் போது, சில கொண்டையில் செருகிய பூவாக, சிலவற்றின் மூக்குத்தியாக ஆரஞ்சு மின்விளக்குகள் தெரிந்தன; எரிந்தன. செல்போன் டவர்களில் சிகப்பு புள்ளிகள் துளிர்க்கும் போது, அந்தரத்தில் அமைதியாக கண் சிமிட்டிக் கொண்டிருக்கிறது ஒன்றே ஒரு நட்சத்திரம்.

அத்தனை வைக்கோல்களையும் சுமந்து, திணித்து, சத்தியமாய் அடையாளம் மறைத்து, அழுத்தி அழுத்திச் சென்று கொண்டிருந்த அந்த லாரி, ஒரு பிடரி சிலிர்க்கும் சிங்கமாய்த் தோன்றுகிறது.

'வெண்ணிலவே.. வெண்ணிலவே.. விண்ணைத் தாண்டி வருவாயா..'

நெல்லை புது பஸ் ஸ்டேண்டை ஒட்டிப் போகும் பரந்த நீர்த் தாம்பாளத்தின் மேல், ஓரங்களில் குத்தி வைக்கப்பட்டிருந்த சோடியம் வேப்பர் கம்பங்களில் இருந்து பாயும் மஞ்சள் ஃபோட்டான்களின் பிம்பங்கள் காற்றில் களி பாடிக் கொண்டிருக்கின்றன.

நொறுக்கிய எழுத்துக்களில் ஏதோ பேர் கிறுக்கி விட்டு, 'சாந்தி ஸ்வீட்ஸ்' வரைந்த பெரிய போர்டுகளின் நெற்றியில் ஆணியடித்துக் கொண்ட கடைகளில் அல்வாக்கள், பால்கோவாக்கள் ஒன்றாம் தேதி சம்பளக் கவர்களுக்காகக் காத்திருக்கின்றன. ஒரு சின்னச் செவ்வக ஓட்டல் முன் பாத்திரங்களைக் கவிழ்த்துப் போட்டுக் கழுவிக் கொண்டிருந்தவனுக்கு இன்னும் அக்குளில் கூட முடி முளைக்கவில்லை. மெளனம் தாளிக்கும் இந்த இரவில், வெட்கம் பார்க்காத சனம் தரையோடும் உட்கார்ந்து, கதை பேசி அரைத்தூக்கத்தில் சரிந்திருக்கின்றது.

'போறாளே பொன்னுத்தாயி...பொல பொலவென்று கண்ணீர் விட்டு...'

அனந்தபுரத்தில் இருந்து என்னை நானே கடத்திக் கொண்டு வந்து சேர்ந்த போது, தம்பானூரில் 22:20 ஆகியிருந்தது. பஸ் (அ) ரயில். இரண்டே தேர்வுகள். ரயில் நிலையத்தில் அடை மேல் ஒட்டிய ஈக்களாய்க் கூட்டம் இருந்து. நானும் சென்று சேர்ந்து நின்றால், என் முறை வரும் முன் வெள்ளி பிறந்து விடும் அபாயம் இருந்ததால், இம்முறை பஸ் டிக் செய்தேன். இரவு 22:30க்கு கிளம்பும் திருச்சி செல்லும் பேருந்து நிறுத்தப்ப்ட்டு விட்டதால், தவளைக் குதியல் பயணம் துவங்கியது.

நாகர்கோயில் வண்டி தயாராக உறுமிக் கொண்டிருந்தது. எல்லை தாண்டி, மார்த்தாண்டம் நெருங்கும் போது, எப்போதும் குளிர்வூட்டும் ஒரு நதியின் ஒரு பாலத்தில் செல்கையில் தெரியும் ஒரு கடக்கும் கரையின் படிக்கட்டுகளில் அந்நேரத்திற்கு யாரோ குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர் மேல் மஞ்சள் வெளிச்சம் விழுந்து கரைந்து ஆற்றோடு சென்று கொண்டிருந்தது. அதே போன்றதொரு காட்சியை நெல்லை வரும் போதும் கண்டேன்.

ஒரு சாலை விளக்கின் அடியில் இருவர் மயங்கி/தூங்கி கிடந்தனர். பக்கத்தில் சைக்கிள் ஒன்று ஸ்டாண்டில் இருந்தது. அந்த சைக்கிளும் தூங்குமா? அதுவும் நின்று கொண்டு? ஏன் தூங்கக் கூடாது? குதிரைகள் மட்டும் தான் நின்று கொண்டே தூங்குமா? குதிரைப் பேரரசன் ஓட்டும் லாரிகள் எல்லாம் 'இரும்புக் குதிரைகள்' எனில், அவற்றின் கீழ்ப் பரிமாண வஸ்துவான சைக்கிளை என்னவென்று சொல்லலாம்? 'இரும்புக் குளவிகள்...?'

'மதுர பஸ் எங்கிட்டுணே நிக்கும்?'

'அங்கன போங்க!'

மற்றொரு எல்லைக்கு நடக்கையில் தினகரன் கட்டு ஒன்று இறங்கி இருந்தது. மைக் குரல் ஒலிக்கும் மேலிரண்டு பட்டன்கள் திறந்த நீலச் சட்டை நேரக் கண்காணிப்பாளர் டேபிள் மேல் ஜூ.வி., ரிப்போர்ட்டர் இருந்தன.

தமிழ் நெடுஞ்சாலையின் நடுவிலெல்லாம் அசைந்தாடிச் சென்ற நடை பழகிய மாடு, திக்கித் திக்கிப் பெய்த மூத்திரம் போல் வெள்ளைப் பட்டைகள்.

'நேற்று உன் நினைவில் நித்தியப் பூமணியில்
காற்று நுழைவது போல்...'

நீல விளக்குகள் மட்டும் பரவுகின்ற இந்த ஜன்னல் ஜரிகை நகர்வில், அத்தனை பேரும் சரிந்து, சாய்ந்து, தூங்கிக் கொண்டே இருக்க, விழித்திருக்க காக்கிச் சட்டையினர் இருவரோடு எனக்கு மட்டும் ஏன் விருப்பம்? எழுதுவது ஓர் அப்ஸஷனாக மாறிக் கொண்டிருக்கின்றது. என்ன இந்த மயக்கம்? இதில் ஒரு சுகம் இருப்பதாகத் தோன்றுகிறதே, அது மாயமா? எழுதுவதில் ஏதோ ஒரு கிளர்ச்சியை, கிளுகிளுப்பை உணர்வதாய்ப் படுகின்றதே? அது உண்மை..?

'வாழ்வின் எல்லை வரை வேண்டும்..வேண்டுமே!'

ரோட்டை இரண்டாகக் கிழித்து, 'இந்தா இது உனக்கு', 'இது உனக்கு' என்று பிரித்துக் கொடுத்த பின்னர், பட்டாடை பளபளப்புச் சாலையில் சறுக்கிக் கொண்டு செல்லாமல், சவலைப் பிள்ளையாய் நகர்ந்து சென்று கொண்டிருக்கிறதே..? ட்ரைவர் காதில் குச்சி விடலாமா..?

'என் வீட்டுத் தோட்டத்தில்.. பூவெல்லாம் கேட்டுப் பார்..'

'புத்தம் புது பூமி வேண்டும்...'

நல்ல பாடல்! பாட்டு ஆரம்பத்தில் வரும் ஃப்ளூட் இசை இசைத்தது யார்? யமஹாவா..? தோஷிபாவா..? பின் ஏதோ சொல்கிறார்களே..? என்ன மொழி?

இந்த பஸ்ஸில் நெல்லை - மதுரை செல்கிறேன், 56 ரூபாயில்! ஒரு திருக்குறள் ட்ரைவர் முதுகில் தெரிகின்றது. 'அடக்கம் அமரருள் உய்க்கும். அடங்காமை அண்டர்ட்ரா.. இல்லை...இல்லை.. ஆரிருள் உய்த்து விடும்'. வேறு எங்கும் 'நான், நீ, நாம்', 'வெள்ளி, சனி, ஞாயிறு' வகையறா குரல்களில் முதல்வரைக் காணோம். ஆச்சரியமாக இருக்கிறது.

ஜன்னலோரம் உட்கார்ந்திருந்தவன், தானே அதற்கு முழுப்பாத்தியவான் போல், கீழே இழுத்து ஜன்னலை அடைக்கிறான். இது என்ன நியாயம்? என்னைக் கேட்பதில்லையா? எனக்கும் பாதி உரிமையாவது இருக்கிறதா, இல்லையா? எல்லா ஜன்னல்களையும் அடைத்த பின்னும், எங்கிருந்தோ லேசாக வரிசையாக காற்று விழுகின்றது.

தற்காலிக குபேரபுரியான திருமங்கலத்தை அடைந்த போது, 'ஆரப்பாளையம் போக இங்கேயே இறங்கலாம்' என்ற நடத்துனர் குரலுக்கு மதிப்பளித்து, நிலைய வெளியில் இறங்கும் போது, சாக்கடை தேங்கி இருந்தது; அருகின் டீக்கடையில் இருவர் பேசிக் கொண்டிருக்க, கால்களுக்கிடையில் வால் போஸ்டரில் தேர்தல் நிலவரங்கள்.

சொகுசுப் பேருந்தில் ஏறிக் கொண்டு சென்று 7.15 சுமாருக்கு, சுமாரான விழிப்பில் ஆரப்பாளையம் அடைந்தேன். வழக்கமாக சாப்பிடும் 'ப' அறை ஓட்டலுக்குள் சென்று எதுவும் இன்னமும் தயாராகத் துவங்கியில்லாமலிருக்க, 'வெண் பொங்கல்' உதிரி உதிரியாய்த் தட்டில் கொட்டி, 15ரூ. வாங்கிக் கொண்டார்கள்.

ஈரோடு பேருந்தில் ஏறி அமர்ந்தால், முடிவை சட்டென மாற்றிக் கொள்ளும் வகையில் திருமலை ஓடிக் கொண்டிருந்தது. கலங்காமல் விஜயிடமிருந்து தப்பிக்க, காவ்யாவின் வெங்கட் சாமிநாதன் எழுதிய 'சில இலக்கிய ஆளுமைகளில்' கண்கள் பதித்து, காதுகளில் ரஹ்மானை அடைத்துக் கொள்ள முயன்றேன். செல் சக்தி இழந்திருந்தது. வழியின்றி காதுகளை திருமலைக்கு சமர்ப்பித்து விட்டு, நூலில் கவனம் பதிக்க நிம்மதி!

மதுரைப் பொங்கல், வாடிப்பட்டி(வாடிவாசல்?) தாண்டியவுடன் வீச்சைக் காட்டி விட்டது. மீண்டும் விழித்துப் பார்க்கும் போது, திண்டுக்கல்லை நெருங்கிக் கொண்டிருந்தது. கரூர் அடையும் வரை நிலம் தான் எத்தனை மொட்டையாக இருக்கின்றது! பெருக்கின்ற நெடுஞ்சாலைகளுக்காக வழியோரப் புளியமரங்கள் சுத்தமாக விரவப்பட்டிருக்க, தூரத்து மலைகள் கூட பளிச்செனத் தெரிந்தன. வழியில் ரெயில்வே ட்ராக்குகளில் இரண்டு ரயில்கள் கடந்தது, பொம்மையாய் அழகாய்த் தெரிந்தன. சன்னல் வழி பொங்கிப் பொங்கிப் பாய்ந்து கொண்டிருந்த ஆரம்ப பகல் நேரத்து அனல் காற்று, மே மாதத்தின் வருகையை வேர்வை அறைந்து தெரிவித்தது.

துரை - ஈரோடு என்ற பேருந்தில் செல்லக் கூடியதான ஐந்து மணி நேர அமர்வை, க.மு., க.பி., என்று பிரிக்க விரும்புகிறேன். (க.பி. - கரூருக்குப் பின்.) திட்டப்படி கரூர் அடைய மூன்றரை மணி நேரமும், அங்கிருந்து ஈரோடு அடைய ஒன்றரை மணி நேரமும் எடுத்துக் கொள்ளும்.

கரூருக்கு முன், பொட்டல் காடுகள், செம்மண் நிலங்கள், உடைக்கப்படும் மலைகள், மரமின்மையால் உதிக்க மறந்த நிழல்கள், காற்றை உஷ்ணப்படுத்தி ஜன்னல் கம்பிகள் அத்தனையையும் தொடப் பயமுறுத்தும் வெம்மை மிதக்கும், ஒற்றை ரெயில்வே ட்ராக்குகளையும், தூரத்து நிழல் மலைகளையும், கொப்பளிக்கும் தார் சிதறும் புதிய, பழைய நெடுஞ்சாலைகளும், அங்கங்கே அவ்வப்போது உதிரியாய்த் தட்டுப்படும் ஊர்களுமாய், நம்மோடு ஊடுறுவி வருகின்றன வெட்ட வெளிகளும், மொட்டை வெயில்களும்..!

கருவூர் என்ற முன்னாள் சோழ நகரம், இன்று கரூராகி வினைல் போர்டுகளிலும், காகங்கள் உட்கார்ந்த சிலைகளாலும் திணறுகிறது. மேம்பால பணிகள் இன்னும், இன்றும் ந..ட..க்..கி..ன்..ற..ன.. கொங்கு மண்டலத்தின் ஓர் எல்லையில் இருக்கும் இவ்வூர், காவிரி மற்றும் துனை நதிகளின் தடங்கள் பற்றி பச்சை காட்டுகிறது. நிலையம் சென்று, ஒரே ஒரு 'U' டர்ன். அவ்வளவு தான். வெளியே வந்தாயிற்று. மீண்டும் பாலத்தின் அடியில் புகுந்து, 'ஈரோடு - 65' போர்டைப் பார்த்து, வெளியேறும் ரோட்டில், அத்துவான மொட்டை இடங்களில் திடீர் நகர்கள் தோன்ற முயல்கின்றன. வெள்ளைக் கற்கள் நட்டு, சதுர அடிகள் பிரிகப்பட்டிருக்கின்றன. அப்படி ஒரு நகரின் வாசலில் மட்டும் அலங்காரமாய்த் தூண்கள் அழகுபடுத்த, உள்ளே வெகு தூரத்தில் ஒரே ஒரு வீடு மட்டும் தெரிகின்றது.

சாலைகளில் இன்னும் புளியன்கள் இருக்கின்றன. வெயில் எறத் தொடங்கி இருக்கின்றது. அனலும், நிழலும் மாறிமாறிப் பூசிக் கொள்ளும் காற்று எட்டிப் பார்க்கிறது. பஸ் டி.வி.யில் 'வேல்' எறிகிறார்கள். துப்பட்டாவைக் கழுத்துக்கு கீழ் இழுத்தே விடாத அசினையும், அழகான அந்த தாவணித் தங்கையையும் தவிர வேறு யாரையும் என்னால் பார்க்க முடியவில்லை.

அரிவாள்களும், அலறிப் பறந்து சறுக்கிட்டு நிற்கும் டாடா சுமோக்களும், அழுது வடியும் ஒரு வெள்ளைப் புடவை பாட்டியையும், மீசை முறுக்கிய ஹீரோவையும், பழி வாங்குவதே பிறவிப்பயன் என்று கர்ஜிக்கும் வில்லனையும், சாதிப் பெருமை பேசும் வசனங்களும், க்ரேன் ஷாட்டில் ரோலர் கோஸ்டர் துவக்கப் பாடல்களையும் காட்டாத ஹரி படம் சொல்லுங்கள். மே மாதத்திற்கு மட்டும் மதுரைக்கோ, இராமநாதபுரத்திற்கோ உங்கள் ஓட்டர் ஐ.டி. மாற்ற வேண்டிக் கொள்கிறேன்.

கொஞ்சம் கொஞ்சம் பச்சை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த சாலைகள், துளித்துளியாய் உக்கிரம் பெற்று, வயல்கள், நிழல்கள், மரங்கள் என்று அதிகரித்துக் கொண்டே வந்து கொண்டிருக்கும் ஒரு நேர்ச் சாலை, ஒரு ரைட் டர்ன் அடித்து நகரும் போது (ஊஞ்சலூர்..?) பசுமை ஒரு பரிபூரணத்தை அடைகின்றது.

சரேல் சரேலென கடக்கின்ற வயல்களில் நெல்லோ, கரும்போ, மஞ்சளோ போட்டிருக்கிறார்கள். கிணற்று பம்ப் செட்டில் நுரை நீர் பாய்கின்றது. வரப்பில் பழுப்புத் தண்ணீர் ஓடுகின்றது. சாலையை ஒட்டியே வெட்டப்பட்டுள்ள மழை ஓடையில் சலசலக்கும் ஈரம், விஷுக் விஷுக் என கடக்கும் புளிய மரங்கள், அவ்வப்போது தாண்டி போகும் ஒற்றை அறை கிராமத்துக் கோயில்கள்....எங்கேயும், எப்போதும் குளுகுளு பசுமை தான்.

வெய்யிலே கொஞ்சம் வெட்கப்பட்டு, இலைகளின் ஊடாகத் தெரியாமல் வந்து போகின்றது. மதுரை மொழி குறைந்து, குறைந்து, கொங்குத் தமிழ் அதிகரிப்பதைக் கேட்பது, அந்த சூழல் மாறுதல்களை அவதானிப்பது சுவாரஸ்யமாய் இருக்கின்றது. செழித்து வளரும் நிலத்தில் காற்றுக்கு ஒரு மணம் இருக்கும். உணர்ந்திருக்கிறீர்களா? நான் முகர்ந்தேன். குளுமை தடவிய காற்று!

வேல் முடிந்து, டி.வி. நிறுத்தப்பட்டிருக்க, அந்த ஈரப் பச்சைப் பிரதேசம் மெல்ல மெல்ல கலைந்து, நெருங்கும் ஒரு மாநகரின் நிழல்கள், எல்லைப்பூ வீடுகள் தோன்றி, மறைந்து, தோன்றி, மறைந்து, தோன்றி, தோன்றி, தோன்றி... ஈரோடு பேருந்து நிலையத்தை அடைந்த போது, மதியம் ஜனித்து 12:30 ஆகி விட்டிருந்தது.

கடைசியாக ஒரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன்.

அனந்தபுரம் - நாகர்கோயில் - நெல்லை - திருமங்கலம் - ஆரப்பாளையம் - ஈரோடு - பவானி. இத்தனை பஸ்கள் மாறி மாறி வந்தும், என்னோடு துணைக்கு வந்தது இரண்டே இரண்டு! அழுக்குத் துணிகளையும், புத்தகங்களையும் தன் வயிற்றில் அடக்கிய பயணப்பை. அனந்தபுரம் - நா.கோ., பஸ் தவிர்த்து, மற்ற அத்தனை பஸ்களிலும் 'அடக்கம் அமரருள் உய்க்கும்' குறளே கூட வந்தது.

'நம்புங்கள் நடந்தது, 'அதிசயம் ஆனால் உண்மை' போன்ற excitement வகையறாக்களைத் தவிர்த்து, இதன் காரணத்தை ஆராய்ந்தால், என்னென்ன காரணங்கள் தோன்றுகின்றன. அடக்கம்' போஸ்டர் தான் பெரும்பாலான அரசுத் தொலைவுப் பேருந்துகளில் இருக்கலாம். அதுதான் அதிக அளவில் ஒட்டப்படும் ஒன்றாக இருக்கலாம். ஆனாலும்... 5 பஸ்களில் என்னை விடாமல் தொடர்ந்து வந்ததை அறிவியல் பூர்வமாக என்னதான் ஸ்டாடிஸ்க்ஸ், ப்ராபலிட்டி என்றெல்லாம் அலசினாலும், அதில் ஒரு மர்மம் இருப்பதாக எண்ணிக் கொள்வதில் ஒரு 'குறுகுறு' இருக்கத் தான் செய்கின்றது.

Wednesday, April 29, 2009

உண்மை சொன்னால் நேசிப்பாயா?

ஞ்சு மிதந்த வீதியொன்றில் நடந்து வந்த போது காதல் தடுக்கி விழுந்தேன். விழுந்த போது அடிபடாமலிருக்க மேகங்கள் சிந்தியிருந்தன. உடலின் மேலான மெல்லிய சிராய்ப்புகளில் ரோஜாக்கள் முளைத்தன.

யார் கூந்தலில் இருந்து தடுமாறி கொட்டியிருக்கும் என்று சிந்தித்துக் கொண்டே கைப்பைக்குள் அந்த காதலை மறைத்து கொண்டேன். பூதம் மறைக்கும் வெளியில் அந்த வீதிப் பாதை என்னை கைவிட்டது.

ராத்தங்கலில் விருந்துண்டு விட்டு, பகல் பொழுதில் பறந்து சென்று விடும் ஒரு ராகத்தை காவலுக்கு வைத்திருந்து விட்டு காணாமல் போயிருந்தது காற்று. ஊதினால் திறக்கும், உசுப்பினால் விழிக்கும், முத்தமிட்டால் உன்மத்தம் அடையும் இரு கண்களைக் கழட்டி ஜன்னல் கம்பிகளுக்கிடையில் செருகி, இமைகளைச் சுருட்டி மென்று கொண்டு நடந்து போகிறாள் அவள்.

பாவம் கண்கள்! தூங்கவே முடியாமல் துடித்துக் கொண்டிருந்தன. கம்பிகளின் மேலும் கீழும் ஏறி இறங்கி தடுமாறி பின் விழுந்தன. ரகசியமான ஒரு உச்சரிப்பைச் சொன்னால் வாசமான ஒரு வனம் திறக்கும் என்று இறகுகளை இழுத்துத் தின்று கொண்டே ஒரு கிளி சொன்னது.

மெல்ல கவிழ்ந்து கொண்டே வந்தது கறுப்பு. ஒவ்வொரு துகளிலும், ஒவ்வொரு அணுவிலும் ஒரே வர்ணத்தை கலந்து விட்டு, என் மேலும் அந்த கையை அழுத்தமாய் வைக்கத் துணியும் போது, ஒரு பெயரை வெளிச்சமாய்ச் சொன்னேன். நகர்ந்து சென்று விட்டது என்னை விட்டு இருள். ரகசியமாய் ஒரு ராஜாங்கம் பழக நினைக்கும் போது ஒற்றை விரல் தனியாக வந்து என் புருவங்களை இழுத்துப் போனது. நரை பூத்தவுடன் கூட வரும் நிழல் போல், கூட நானும் போனேன்.

சிவப்பாய் பூசிக் கொண்ட சுவர்கள் சூழ்ந்த வெளி. மேலும் கீழும் அந்தகார அழுத்த செவ்வெளி. இடமும், வலதும் சுவர் சூழ்ந்திருக்க, அவளது இதழ்கள் எங்கிருந்தும் எடுத்துப் பூசிக் கொண்ட செவ்விளநியாய் ஜொலித்தன. இரு புள்ளிகளாய் சில கூர்மைகள் அலையலையாய் வந்து தட்டி விட்டுப் போன போது, வெற்று நிழல்கள் என மாறிப் போயினோம். ஒளியற்ற பிரபஞ்சப் பிரதேசத்தில், மொழியில்லாத மெளனப் பாடல் மிதந்தது. பின்னும் ஒரு வரியைச் சொல்ல ஆசைப்பட்டு விலக்க முயல்கையில், ஏற்காது இறுக்க கவ்விக் கொண்டன.

நூற்கண்டுகள் உருண்டு வருகின்றன. சிக்கல் சிக்கலாய்ச் சிக்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு கயிறும் பிரட்டை பிரட்டையாய்ப் பிரியப் பிரிய, உடைய உடைய, துளித்துளியாகி, அணுத்துளியாகி, துளியணுவாகி, ஒரே வழியில் சிலிர்த்து மறைந்தன. நட்சத்திரங்கள் ஒழுகும் மேனியில் இருந்து சறுக்கிச் சரிந்து பாய்ந்து வழிந்து கரைகிறது மழை.

மிச்சம் இருக்கும் மறுமுறை நகர்ந்து போகும் நிகழ்வுக் கண்ணாடிகள். எட்டிப் பார்க்கும் போது என்னைப் போல் ஒருவன் தானும் எட்டிப் பார்த்து, என்னைப் போலவே சிந்திக்கிறான். ராத்திரியில் ரெளத்திரம் பழகும் விறகுகள், தத்தம் தங்க ஜரிகைப் பூக்களை மினுக்கும் போது வெட்கநெருப்பை வாரி இறைக்கிறாள்.

அவள் நிழலை அசையும் இனிப்பில் தோய்த்துக் கடித்துத் தின்னும் போது, சொர்க்கமாய் ஒரு சூடு தெரிகின்றது. அதன் வெம்மையில் சதுரமாய், வட்டமாய் ஊடுறுவுகின்றது பனி பிறக்கும் குளிர். மலைகளைத் தடவும் போகும், சருகுகள் மிதக்கும் குளத்தில் மிதக்கும் போதும் ஆகாயத்தின் உச்சியில் இருந்து சலனமின்றி இறங்குகின்றன சவாலான சந்தோஷங்கள்.

ஒரு பொய்யும், மெய்யும் கலந்து பெய்யும் போது நனைந்திட நனைந்திட ஜாலங்கள் காட்டும் நொடிகள் கண்களில் ஒன்றன் மேல் ஒன்றாகப் படிகின்றன. கூந்தல் கரைசல்களில் நடந்து போகும் போது தலைகீழாய்க் கதிர் காய்கின்றது. செம்மை வெம்மையில் சுத்தமான சுகிர்த்த நிலை வரும் போது ராஜ மனோகரம் ஒன்று தன் இறக்கைகளை விரித்து, தனக்குள் ஒடுக்கிக் கொள்கின்றது.

வார்த்தைகள் ஒன்றுக்கொன்று முட்டிக் கொண்டு சுழன்று, கழன்று எழுத்துக்களாய் கலந்து, பின் சப்தங்களாய்க் கரைந்து, பின்னர் அதுவுமற்ற, எதுவுமற்ற, நானுமற்ற, நீயுமற்ற, அவனுமற்ற, அவளுமற்ற, அதுவுமற்ற, அவர்களுமற்ற, இவர்களுமற்ற, இவைகளுமற்ற புள்ளிகளாய்......

Tuesday, April 28, 2009

ஒரு சிப் காபி, பிறகு எழுதுவோம்.



Cogito ergo sum.

நான் சிந்திக்கிறேன், எனவே நான் இருக்கிறேன்.

-René Descartes.

லைப்பதிவுலகில் இதற்கு மாற்றாக, 'நான் எழுதுகிறேன். எனவே நான் இருக்கிறேன்.' என்று சொல்லலாம்.

சிறுவர்மலர், அம்புலிமாமா, பூந்தளிரில் துவங்கி, பதின்வயதில் இராஜேஷ்குமார் மூலம் கதைகள் உலகில் நுழைந்து, அத்தளத்தில் பலரைப் படித்து, பாலகுமாரன், சுஜாதா என்ற மற்றொரு தளத்திற்குத் தாவி, அவர்கள் காட்டிய திசைகளில் குதித்தோடி, காலச்சுவடு, உயிமை, தீராநதிகளில் கலந்திருப்பவர்கள் ஒரு பகுதி.

பள்ளி, கல்லூரிகளில் பாட புத்தகங்களிலேயே முழு படிப்பும் படித்து, விளையாட்டு, தியேட்டர்கள், ஊர் சுற்றல்கள் என்றெல்லாம் அனுபவித்து விட்டு, இப்போது வலைப்பதிவு பக்கம் வந்திருப்பவர்கள் ஒரு பகுதி.

இரு வகை மக்களும் எழுதுகிறோம். ஆனால், கண்டிப்பாக வித்தியாசங்கள் தெரியும்.

சுண்டல் சுற்றிக் கட்டிய கசங்கிய தாளில் இருந்து, சுற்றி ப்ளாஸ்டிக் கவர் போட்ட தலையணை புத்தகங்கள் வரை படித்து விட்டு எழுத வரும் போது, கண்டிப்பாக அவற்றின் தடங்கள் அந்த எழுத்துக்களில் தெரியும். அந்த செழுமை, அந்த நளினம், அந்த நடை சொல்லி விடும்.

புதிதாக எழுத வருபவர்களுக்கு அத்தகைய வளம் ஆரம்பத்தில் இருக்காது. நிறைய எழுதுவதன் மூலமும், அதை விட நிறைய நிறைய படிப்பதன் மூலமும் மட்டுமே, மொழிநடை, அதன் கவர்ச்சியான சிடுக்குகள் வழி உணர்ந்து எழுத முடியும்.

புதிதாக எழுத வருபவர்களை 'ஊக்குவிக்கிறேன் பேர்வழி' என்று வெறும் பாராட்டு வார்த்தைகளையோ, புகழ்ச் சொற்களையோ மட்டும் சிந்தும் போது, அவர்கள் அங்கேயே, தாம் எழுதும் தரத்திலேயே தேங்கிப் போய் விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பாராட்டுவது தவறில்லை, ஆனால் அதே சமயம் குறைகளையும் தவறாமல் சொல்லி, மேலும் அவர்கள் தம்மை அகலப்படுத்திக் கொள்வதற்கான வழிகளைச் சொல்லுதல் தேவை என்று நினைக்கிறேன்.

நாம் எழுதுவதற்கென ஒதுக்கும் நேரத்தில் மூன்றில் இரண்டு பங்கை படிப்பதற்கும், மிச்ச ஒன்றை மட்டும் எழுதுவதற்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

தமிழில் புதிதாக எழுத வருபவர்கள் எந்தெந்த நூல்களைப் படித்தால் நல்லது என்பதை என் பார்வையில் இருந்து சொல்லவும், படைப்பு பணியில் ஈடுபடுதல் என்பதைப் பற்றி படித்த அனுபவங்களில் இருந்தும், சொந்த அனுபவங்களில் இருந்தும் கூறவும் ஆசை; அச்சு எழுத்துக்கள் மட்டுமின்றி, இணைய எழுத்துக்களிலும் எவற்றைப் படிக்கலாம், எவற்றை புரிந்து கொள்வது எப்படி என்பதைப் பற்றி எழுத நினைக்கிறேன்.

தமிழ் வலையுலகில் பெரும் பெரும் பெரியவர்கள் இன்னும் சிறப்பாக சொல்ல முடியும்; புதியவர்களுக்கு வழிகாட்ட முடியும். தேடிப் பார்த்தவரைக்கும் அப்படி ஒரு முயற்சி கண்ணில் படவில்லை. எனவே நானே துவக்குகிறேன். இது ஓர் ஆரம்பம் மட்டுமே; படிக்கும் பலரது தொடர்ச்சியான கருத்துகளும், எதிரெதிர் திசைகளில் பாய்கின்ற விமர்சனங்களும் மேலும் மேலும் இந்த முயற்சியை மெருகூட்டி, புத்தம் புதிதாகத் தமிழில் எழுத நினைப்பவர்களுக்கு ஒரு முழுமையான கையேடாக பரிமளிக்க வேண்டும் என்பதே இம்முயற்சியின் இலக்கு!

ஆரம்பம் ::



இப்போது நாம் புத்தம் புதிதாக எழுத வந்திருக்கிறோம். மொழியின் உபயோகம் இதுவரை நமது பேச்சில் இருந்து வந்திருக்கின்றது. மற்றப்டி கடிதம் எழுதுதல் என்ற அளவோடு மட்டுமே நமது எழுதுதல் முடிந்து விட்டது.

இப்போது வலைப்பதிவு எழுத வந்திருக்கும் போது, முதன் முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று இலக்கணம். 'இலக்கணத்தை முழுக்க தெரிந்து கண்டு இலக்கணத்தை மீறலாம்' என்கிறார் ஜெயகாந்தன்.

இலக்கணம் என்றால் பள்ளியில் படித்த அத்தனையையும் படிக்கத் தேவையில்லை.

இணையம் என்ற சாஸ்வத மாய வெளியில் என்றும் நிலைத்தன்மை கொண்டிருக்கப் போகின்ற நமது எழுத்துக்கள், சொற்பிழைகள் இல்லாமல் இருக்க வேண்டியது மிக முக்கியம் என்றே எனக்குப் படுகின்றது.

'ஓர் - ஒரு' உபயோகங்கள், 'சோமுவும், எருமையும்.. வருகின்றார்களா, வருகின்றனவா..?' சந்தேகங்கள் போன்ற எளிமையான தவறுகள் நிறைய இடங்களில் பார்க்கிறேன். சிந்தனை அவசரங்கள், கால அவகாசமின்மை போன்ற பல காரணங்களினால் இந்த தவறுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. நாளடைவில் இவை இயல்பானவை என்றே ஏற்றுக் கொள்ளப்படும் நிலைமை ஏற்பட்டு விடுகின்றது.

- தொடரும்.

படங்கள் நன்றி :: http://hotfile.files.wordpress.com/2009/03/ist2_3965048-back-to-school-colorful-child-writing.jpg

http://www.life123.com/bm.pix/child_writing_on_board.s600x600.jpg

Sunday, April 26, 2009

பள்ளிகொண்டபுரம்,தமிழ்ச்சங்கம்,நீலபத்மம்,தலைமுறைகள்.

ன்று எழுபத்தோராவது பிறந்ததினம் காணும் தமிழ் எழுத்தாளரான திரு.நீல.பத்மநாபன் அவர்கள் தமது அறக்கட்டளை மூலமாக வருடம் தோறும் கொடுக்கின்ற சிறந்த கவிதைக்கான நீலபத்மம் மற்றும் சிறந்த சிறுகதைக்கான தலைமுறைகள் விருதுகள் கொடுக்கும் விழா, இன்று திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்தின் பி.ஆர்.எஸ். அரங்கில் மாலை 5.30-ல் இருந்து 8.30 வரை நடைபெற்றது.

இந்த முறை தனியாகப் போகக் கூடாது என்று தீர்மானித்து, சுந்தரையும் கூப்பிட, தனது அலுவலக மற்றும் தனி வேலை இறுக்கங்கள் இடையிலும் இன்று மாலை 4.30க்கு செல் செய்து, 'போகலாமா' என்று கேட்டார். நான் அப்போது தான் குளித்து விட்டு, எத்துணி குறைவான அழுக்கோடு இருக்கிறது என்று தேடிக் கொண்டிருந்தேன்.

அவரை நேரடியாக கிள்ளிப்பாலம் நிறுத்தத்திற்கு வரச் சொல்லி விட்டு, நான் தம்பானூர் பஸ்ஸில் ஏறிக் கொண்டேன். வழியில் நேரம் வீணாகப் போகின்றதே என்று, கால்வாசியில் தொங்கலில் விட்டிருந்த, 'சாயத்திரை'யை (சுப்ரபாரதிமணியன்) விரித்தேன். ஐந்தாம் அத்தியாயத்திற்கு மேல் படிக்க முடியாமல் திணறி, மூடி வைத்து விட்டு, ரோட்டில் நிற்கும் மரங்களைப் பார்க்க ஆரம்பித்து விட்டேன்.

கண்டிப்பாக அது நாவலின் குறையாக இருக்க முடியாது. பின்னட்டையில், 'கையெழுத்துப் பிரதியிலேயே திருப்பூர் கலை இலக்கியப்பேரவையின் பரிசினைப் பெற்றுள்ளது' என்று சொல்கிறார்கள். எனது அப்போதைய மனநிலை நாவலோடு ரெசனன்ஸில் இல்லாமல் இருந்திருக்கலாம். நீல.பத்மனாபன் அவர்களின் 'பள்ளிகொண்டபுரம்' நாவலையும் முதலில் படிக்கும் போது, ஆரம்பத்திலேயே உற்சாகம் சரிந்து மூடி வைத்து விட்டு, பின் சில மாதங்கள் கழித்து இரண்டு மணியில் முடித்து, அவரிடமும் சொல்லி பாராட்டினேன்.

தம்பானூர் போய், பத்திரிக்கைகள் வாங்கி விட்டு, தோசை, சப்பாத்தி முடித்து, ஆட்டோவில் சங்கம் சொல்லிச் செல்ல, வழியில் சுந்தர் மசாலா கடலை வாங்கிக் கொண்டிருந்தார். அங்கேயே கையும் கடலையுமாய் அவரை மடக்கி, ஆட்டோவிற்குள் திணித்து, அவர் ரெண்டு ஸ்பூன் சாப்பிடுவதற்குள் சங்கம் வந்து விட, அவசரமாக இறங்கியவுடன் கீழே கொட்டிவிட்டார்.

கூர்மையாக மாலை 5.30க்கு நிகழ்ச்சி துவங்கும் என்று சொல்லி இருந்தபடியால், 5.40க்கு அரங்கில் நுழைந்தால், இசை விருந்து நடந்து கொண்டிருந்தது. டாக்டர் வேலாயுதன் வாய்ப்பாட்டில் மிருதங்கம், வயலின் குழுவுடன் பாடிக் கொண்டிருந்தார். உண்மையான மருத்துவரான இவர், வலிமையான குரலில் தியாகராஜர் கீர்த்தனைகள், 'பாட்டும் நானே பாவமும் நானே', கெளரி மனோகரி ராகம், காம்போதி ராகங்கள் விரிவு செய்தல் என்று அசத்தினார். அவ்வப்போது குரல் விரிசல் விட, ஈரமாய் குடித்தார். டாக்டரிடம் கேட்க வேண்டும், அது என்ன?

6.30க்கு இசை விருந்து மங்களம் (நாளென் செய்யும்?கோளென் செய்யும்?) பாடி முடித்தார். முடிந்ததும் எல்லோரும் சென்று பாராட்டினார்கள். 'கடவுள் எனக்குத் தர வேண்டும் ஆயுஸ்; நான் தர வேண்டும் வாய்ஸ்; நீங்கள் தர வேண்டும் எனக்கு சான்ஸ்;' என்றெல்லாம் டி.ஆரினார்.

பின் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தது. எல்லோரும் எழுந்து நின்று 'செயல் மறந்து வாழ்த்தும்' போது, ஒரு குட்டிப் பையன் குறுக்கே ஓடினான். சங்கத்தலைவரான கா.பாலசுப்ரமனியன் வரவேற்புரை நிகழ்த்தி, நெல்லை தூய சவரியார் கல்லூரி தமிழியல் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர்.சிவசுப்ரமணியம் விருதுகள் பெற்ற்வர்களுக்கு பரிசுகள் வழங்கினார். 2008-ம் ஆண்டிற்கான நீலபத்மம் விருது திருமதி.சூரியகுமாரி இராதாகிருஷ்ணன் மற்றும் தலைமுறைகள் விருது திரு.மு.இரவீந்திரனுக்கு கொடுக்கப்பட்டது.

சிவசு அவர்கள் பதம்னாபன் அவர்களைப் பற்றியும், பொதுவாகத் தற்போதைய தமிழ் நிலவரம், கலவரங்கள் (ஏழைகள் நண்பன்; உங்கள் தொண்டன்; என் சொத்து வெறும் பத்து கோடி தான், எனக்கே ஓட்டு!), இலங்கை கவலைகள் என்று பேசினார். அவர் லயன்ஸ் ஷேர் எடுத்துக் கொள்ள, பிற்பாடு வந்தவர்கள் திண்டாட வேண்டியதாயிற்று. பள்ளிகொண்டபுரம் பற்றியும், புதிய சிறுகதைத் தொகுதியான 'பிறவிப்பெருங்கடல்' பற்றியும் தனது கருத்துக்களைச் சொன்னார்.

பிரபலமான மலையாள எழுத்தாளர் ஜி.என்.பணிக்கர், பதமநாபன் அவர்களின் மலையாள நாவலான 'குருஷேத்ரம்' மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு நாவலான 'Birds in the Cage' (தமிழில் கூண்டினுள் பக்ஷிகள்) பற்றி பேசிவிட்டு, வாழ்த்தி, தமிழன் நிலை மட்டும் அல்ல, மலையாளத்தான் நிலையும் கூட அதே கேவலமானது தான் என்று சொல்லி ஆறுதல்படுத்தினார். மேடையில் அவ்வப்போது கண்கள் செருகினாலும், பேசும் போது சிரித்தவாறே பேசினார். இவர் என்ன எழுதி இருக்கிறார் என்று தேடிப் பார்க்க முடிவு செய்திருக்கிறேன். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறார், மல்லு சூப்பர் ஸ்டார் சாரு!

காலச்சுவட்டின் க்ளாஸிக் வரிசையில் பள்ளிகொண்டபுரம், அம்ருதா வெளியீடான திலகவதி தொகுத்த பத்து சிறுகதைகள் கொண்ட 'முத்துக்கள் பத்து', புதிய சிறுகதைத் தொகுப்பான 'பிறவிப்பெருங்கடல்', ஆகியவற்றை பேராசிரியர் சிவசு வெளியிட, சாகிதய அகாடமி வெளியீடான 'Neela Padmanabhan - A Reader', Birds in the Cage மற்றும் குருஷேத்ரம் (Malayalam) ஆகியவற்றை பணிக்கர் வெளியிட்டார்.

முதல் பிரதிகளைச் சங்கத் தலைவர் பெற்றுக் கொண்டார். வெளியிடுவது என்றால் இங்கே, அந்நூல்களை சங்க நூலகத்தில் சேர்க்கச் செய்தல் என்று பொருள் படும்.

கவிதை விருது நடுவர் முனைவர் ராஜேந்திரன் மற்றும் கதை விருது நடுவர் முனைவர் சரிகா தேவி தாம் தேர்ந்தெடுத்த காரணத்தை விளக்கினார்கள். ராஜேந்திரன் கடல் தாண்டி இருக்கும் தலைவனைக் குறிப்பிடாமல் குறிப்பிட்டு ஓர் உணர்ச்சிக் கவிதை வாசித்து விட, எல்லோரையும் எழுந்து நின்று கைதட்டச் சொன்னார்கள். செய்தோம். விருது பெற்ற சூரியகுமாரி மற்றும் இரவீந்திரனும் இரண்டு நிமிடங்கள் பேசி நன்றி சொன்னார்கள். பேராசிரியர் பாலசுப்ரமணியம் (இவர் வேறு பா.), பத்மனாபன் அவர்கள் சிபாரிசில் சாகித்ய அகாடமி சார்பில் கவிஞர் கண்ணதாசனின் மோனோகிராஃப் எழுத முடிந்து, முதல் பதிப்பு நெருப்பாய் விற்றுத்தீர்ந்து, அடுத்த பதிப்பிற்கு ஆர்டர் கொடுத்திருப்பதாகத் தகவல் சொல்லி விழா நாயகருக்கு நன்றி கூறி, இறங்கினார்.

நன்றியுரை சொல்ல செயலாளர் மு.முத்துராமன் வந்து, அவர் பங்கிற்கு ஒரு கவிதையை எடுத்துப் போட்டார். அவர் நன்றி என்று சொல்வதற்குள், இன்னோர் அம்மா (பெயர் தெரியவில்லை!), மைக்கைக் கைப்பற்றி தானும் ஒரு கவிதையைச் சோகமாய்ச் சொல்லி விட்டு, நகர்ந்து விட, செயலாளர் உஷாராகி இனி வேறு யாரும் கவிதை என்று முழங்கக் கூடாது என்று அடுத்த செயற்குழுவில் தீர்மானம் போட்டு விடலாமா என்று யோசித்துக் கொண்டே நன்றி சொல்லி விட, தலைவர், 'கூட்டம் முடிந்தது' என்று சொல்வதற்குள் கலைந்தோம்.

*தமிழ்த்தாய் வாழ்த்து பாடித் துவங்கிய கூட்டம், ஜனகனமன இல்லாமல் முடிந்தது.

*டீ எனக்கு கிடைத்தது. ஸ்நாக்ஸ் என்ன என்று எனக்குத் தெரியவில்லை.

* சிவசு அவர்கள் பேசி முடித்தவுடனே, சுந்தர் எஸ்கேப் ஆனார்.

* நல்ல கூட்டம். நிறைய பேர் குடும்பத்துடன் வந்திருக்க, சின்னப் பசங்கள், பெண்கள் அங்கே இங்கே ரேண்டமாய் குதித்து விளையாட ஏதோ கல்யாணத்திற்கு வந்தாற் போல் இருந்தது. பந்தி எங்கே என்று கேட்காத குறை!

* யோசித்துப் பார்த்தால், எல்லோர்க்கும் கவிதை எழுதும் இச்சை இருக்கின்றது என்பது தெரிந்தது. இலங்கை கொடுமைகள் கிடைத்திரா விட்டால், உருளைக்கிழங்கு விலை ஏற்றத்தைப் பற்றியும் இன்று கொதித்து முழங்கி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். பிரபாகரன் வாழ்க என்றும், நாங்கள் இருக்கின்றோம் என்று லாங் சைஸ் நோட் பேப்பர் இரண்டு பக்கத்திற்கு உணர்ச்சியாய்க் கவிதை ஒன்று எழுதி வந்து கிடைத்த மைக்கில் முழங்கி விட்டுப் போகும் போது, 'ரிட்டர்ன் டிக்கெட்டிற்கு பெர்த் கன்ஃபார்ம் ஆகியிருக்குமா?' என்ற கவலையில் போவது, எந்த வகையில், ஈழத் தமிழர்களின் பிரச்னை தீர உதவும் என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கின்றது. நாம் செய்ய வேண்டியது, வேறு வகைப் பணிகள். மற்றபடி அறைக்குள் கவிதை படித்துக் கொண்டிருப்பதால், விளைவில்லை என்பது என் எண்ணம்.

* சென்ற வருடம் ஒரே ஒரு முறை மட்டும், கவியரங்கு ஒன்றுக்கு கலந்து விட்டு, 'நிலவொளி நிழல்' கவிதை கொடுத்தேன். காட்டில் பெய்த மழையாய்க் கவனிப்பாரற்று போய் விட்டது. :(

* நன்றியுரை சொல்லும் போது, ஜன்னலுக்கு வெளியே வெள்ளை நிறத்தொரு பூனை, மீட்டிங் கேட்டுக் கொண்டிருந்தது, சுவாரஸ்யமாக இருந்தது. உளவுத்துறை பூனைப்படையில் இருந்து ஆள் அனுப்பி இருப்பார்களோ என்றோர் எண்ணம் வந்தது.

* சில செல் நிழல்கள் :