கோவை நகரின் இரைச்சலில் இருந்து விலகி நீலக் கார், ஊட்டி சாலையில் போய்க் கொண்டிருந்தது. லேசாகத் திறந்திருந்த ஜன்னலின் இடுக்குகள் வழியே பேரார்வத்துடன் குளிர் புகுந்து கொண்டிருந்தது.
"அருண்..! ஏஸியைக் கொஞ்சம் குறைச்சு வையுங்களேன். ஆஃப் பண்ணிட்டா பெட்டர்.." கழுத்து வரை ஸ்வெட்டரை இழுத்து விட்டுக் கொண்டு சொன்னாள் ரம்யா.
ரம்யா. இருபத்து மூன்று வயது மட்டுமே நிரம்பிய இளமை ஆப்பிள். வெடவெடக்கும் குளிரோடு, படபடக்கும் கண்களோடு, காண்பவர் உள்ளத்தை படபடக்கச் செய்யும், ஜில்ஜில் ஜிகர்தண்டா. இளங்கலை முடித்து விட்டு, முதுகலை வகுப்பில் சேரப் போனவளை, கல்லூரி முதல்வரே, 'நீயா.. முதுகலைக்கா.. ஸாரி.. குழந்தைகளை எல்லாம் முதுகலையில் சேர்ப்பதில்லை.." என்று சொல்லி விட்டதாகக் கேள்வி. அப்படியொரு குழந்தைத் தனமான முகம்.
ஏஸியை அணைத்து விட்டு, இன்னும் வேகத்தைக் கூட்டினான் அருண்.
"கொஞ்சம் ஸ்லோவாப் போங்க, அருண்.." என்றாள் ரம்யா.
"என்ன ரம்யா.. இன்னும் கொஞ்ச நாள்ல நமக்கு மேரேஜ் ஆகப் போகுது. இன்னும் என்னைப் புரிஞ்சுக்க மாட்டேங்கறியே.. இந்த வேகம் எல்லாம் ரொம்ப கம்மி.. பைபாஸ்ல நான் போய் நீ பார்த்ததில்லையே.." என்றான் அருண்.
"ம்ம்ம்... எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் தான். அப்புறம் பாருங்க..." என்றாள் குறும்புச் சிரிப்போடு. அந்தச் சிரிப்பில் அருணும் கலந்து கொண்டான்.
"இருந்தாலும் நீங்க பண்றது சரியாப் படலை எனக்கு... க்ளைமேட் சரியில்லைனு அப்பா அவ்ளோ சொல்லியும், குன்னூர்ல இருக்கற உங்க கெஸ்ட் ஹவுஸ்க்கு அவசியம் இன்னிக்கு போகணுமா..?"
"என்ன ரம்யா.. இன்னும் சின்னக் குழந்தையாட்டமே பேசற.. கல்யணத்துக்கு முன்னாடி இருக்கற இந்த கேப்பில உன்கூட ஊர் சுத்தற த்ரில் இருக்கே... அதுக்காக தான் இப்படி.. ஏன், உனக்குப் பிடிக்கலையா..?"
"பிடிக்கலைனு இல்ல.. இருந்தாலும்..."
"மூச்... இனி இதைப் பத்தி பேசக் கூடாது.." குறும்பாக மிரட்டினான் அருண்.
"ஓ.கே.ஸார்.." பொய்ப் பயத்துடன் வாய் மேல் கை வைத்துக் கொண்டாள் ரம்யா.
சாலையின் வெறிச்சோடிய அமைதியை அவ்வப்போது கடந்த பேருந்துகள் கிழித்துச் சென்றன. பொட்டு, பொட்டாகத் தூறல் விழத் தொடங்கியது. வைப்பர்கள் விளையாட ஆரம்பித்தன.
"அருண்.. உள்ள ஒரே சைலண்டா இருக்கு. ஜன்னல் எல்லாம் வேற க்ளோஸ் பண்ணிட்டீங்க. ஏதாவது பாட்டு பாடுங்களேன்..."
"நான் பாடிடுவேன். ஆனா அப்புறம் நீதான் ரொம்ப கஷ்டப்படுவே. அவ்ளோ கர்ணகடூரமா இருக்கும்... கேளேன்...ஆ..ஆ..ஆ..."
"கவலையே படாதீங்க. மலையேறதால காது ரெண்டும் அடைக்க ஆரம்பிக்குது. அதை மறுபடியும் ஓபன் பண்ணத் தான் உங்களை பாடச் சொன்னேன். காதுகிட்ட வந்து யாராவது கத்தினா, காது அடைப்பு எல்லாம் சரியாயிடும் தான..." என்று சிரித்தாள் ரம்யா.
"அடிப் பாவி... சரி, நீ பாடு, கேட்கலாம்... எனக்கும் காது அடைக்கற மாதிரி இருக்கு.." என்றான் அருண்.
"ஐ... ஆசை தான். நான் பாட மாட்டேன். ஏதாவது கேசட் போடுங்க.. அதையாவது கேட்போம்.." என்றாள் ரம்யா.
டேஷ் போர்டைத் திறந்து தேடினான். கையில் கிடைத்த ஒரு கேஸட்டைப் ப்ளேயரில் கொடுத்து ஓடச் செய்தான்.
காதல் குரலில் எஸ்.பி.பி. பாடத் தொடங்கினார்.
Get Your Own Music Player at Music Plugin
ரம்யாவிற்குத் தூக்கிவாரிப்போட்டது. தலை சுற்றுவது போல் இருந்தது. அருணைப் பார்த்தாள். அவனது முகம் சற்றே இறுகிப் போகத் தொடங்கியது.
'சடாரென' காரை நிறுத்தினான். கார் கட்டுப்பாடு இல்லாமல், சுற்றியது. பின், அமைதியாகி நடுரோட்டில் நின்றது. ரம்யா அதிர்ந்து போனாள். அருணை ஏறிட்டாள்.
அருண் அமைதியாக ரம்யாவைப் பார்த்தான்.
"அருண்.. அருண்.. என்ன ஆச்சு உங்களுக்கு..?" அருண் தோளைப் பிடித்தாள்.
அமைதியாக, மிக அமைதியாக அவளைப் பார்த்த அருண்,"என்னை யார்னு தெரியலயா உனக்கு..?" என்று கேட்டான்.
வானம் வேகமாகக் கருத்துக் கொண்டிருந்தது. இருட்டான சவுக்குத் தோப்புகளின் மரங்கள் பேயாட்டம் ஆடின. மழை பெரிதாகப் பெய்யத் தொடங்கியது. வைப்பர்கள் வேகமாக இயங்கின. காரின் ஹெட்லைட்டின் கீற்றுகள் மழைக் கற்றைகளில் நனைந்தன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆள் அரவமே இல்லை.
"அருண், என்ன பண்றீங்க..? விளையாடாதீங்க. எனக்குப் பயமாயிருக்கு..." என்று லேசாக கண்ணீர் விடத் தொடங்கினாள் ரம்யா.
வேகமாகப் பாய்ந்து, அவளின் தோள்களைப் பிடித்து, ரம்யாவின் கண்களையே பார்த்துக் கேட்டான் அருண்," நெஜமாவே என்னை யார்னு உனக்குத் தெரியலயா..? இந்தப் பாட்டைக் கேட்டும் ஞாபகம் வரலையா உனக்கு..?" என்று ப்ளேயரைப் பார்த்தான்.
கண்களில் குற்ற உணர்வு பாய, குரல் நடுங்கியவாறே, ரம்யா கூறினாள்,"ச..ந்...தோ...ஷ்..".
"ரம்யா.. இங்க பாரேன்.."
"சந்தோஷ்.. எனக்கு பயமாயிருக்கு..?"
"என்ன பயம்..?"
"இப்படி.. தேர்ட் செமஸ்டர் ஃபைனல்க்கு படிக்கப் போறேன்ட்டு, மருதமலை படிக்கட்டுல உட்கார்ந்துட்டு இருக்கேன். பயமாயிருக்காதா..?"
"ரம்யா.. நீ என்ன சின்னக் குழந்தையா... அவனவன் லவ்வரைக் கூட்டிக்கிட்டு எங்கெல்லாமோ போறான். நான் உன்ன கோயிலுக்கு தான கூட்டிட்டு வந்திருக்கேன். முருகா, நீ தான் இவளை மாத்தணும்.."
"ஆமா, முருகனுக்கு இது தான் வேலை..கிட்ட வராதீங்க.. இதெல்லாம் அப்புறம் தான்.. அப்பு..."
"...."
"ஹேய்.. ரம்யா.. என்ன கெளம்பிட்டே.."
"நான் கிளம்பறேன்.. லேட்டாயிடுச்சு... வீட்டுல தேடுவாங்க... அப்புறம், இது கோயில். விட்டா அதை மறந்திடுவீங்க.."
"இரு., நானும் வரேன்.."
"ரம்யா., காந்திபுரம் வர்றவரைக்கும் என்ன பண்றது..?"
"ம்ம்... எத்தனை லேம்ப்போஸ்டை க்ராஸ் பண்றோம்னு கணக்கு எடுக்கலாம். மருதமலைல எத்தனை மயில் பார்த்தோம்னு யோசிக்கலாம். போன வாரம் கீதாஞ்சலில படம் பார்க்கும் போது, எத்தனை தடவை நான் 'சும்மா இருங்க'னு சொன்னேனு யோசிக்கலாம். அதெல்லாம் விட.."
"விட..."
"'முருகா.. ரம்யாவும் நானும் எந்த பிரச்னையும் இல்லாம ஒண்ணு சேரணும்'னு வேண்டிக்கிட்டே வரலாம்.."
"ரம்யா.."
"ச்சீ.. என்ன இது பஸ்ல கண் கலங்கிட்டு..."
"ரம்யாக் கண்ணு..! எங்கம்மா போய்ட்டு வர்ற..?"
"சுகன்யா வீட்டுக்குப்பா. எக்ஸாம்க்கு படிச்சிட்டு வர.."
"சாய்பாபா காலனி சுகன்யா வீட்டுக்கா..?"
"ஆமாப்பா.."
"அவங்க வீடு, காலனியில தான. மருதமலையில இல்லையே..?"
"அப்பா...."
"நம்ம பார்ட்னர் வீட்டுக்குப் போய்ட்டு வரும்போது, உன்னைக் கூட்டிட்டு வரலாம்னு அங்க போய்ட்டு தான் வந்தேன். நீ அங்க இல்லையேம்மா. அவளைக் கேட்டப்போ அவ எல்லாம் சொல்லிட்டா.."
"..."
"உன்னை எந்தளவு வளர்க்கணும்னு நெனச்சிருக்கேன் தெரியுமா? நீ இப்படி பண்ணலாமா..? இந்தப் பழக்கம் எல்லாம் வேணாம்மா. அப்பா சொல்றதக் கேளு..."
"அப்பா.. சந்தோஷ் ரொம்ப நல்லவர்பா.."
"எதுவும் பேசாத. இந்த டிகிரி முடிச்சதும் உனக்குக் கல்யாணம். மாப்பிள்ளை நம்ம பார்ட்னர் மகன் அருண் தான். லண்டன்ல மாஸ்டர் பண்ணிட்டு இருக்கான். அடுத்த வருஷம் படிப்பு முடிச்சிட்டு, நம்ம ஃபாக்டரில டைரக்டரா ஜாய்ன் பண்ணப் போறான். நாங்க முடிவு பண்ணிட்டோம். உனக்கு அவனை கல்யாணம் பண்ணி வைக்கிறதா. இந்த ஒன்றரை வருஷம் ஒழுங்கா படிச்சிட்டு வந்தயினா, உன்னை காலேஜுக்கு அனுப்பறேன். இல்லைனா, இன்னிலிருந்து நீ வீட்டுலயே இருக்கணும்.என்ன சொல்ற..?"
"இல்லப்பா.. நான் காலேஜுக்குப் போறேன்.."
'அப்பா.. சாரிப்பா. நீங்க என்ன நெனச்சாலும் எங்க காதலைப் பிரிக்க முடியாது.."
'ரம்யா.. நான் உன் அப்பாடா.. நீ என்ன நெனைக்கிறேன்னு எனக்குத் தெரியாதா.. அந்தப் பய கதையை முடிச்சிடறேன்.. அப்ப தான் நீ என் வழிக்கு வருவே..'
"ரம்யா.. ரம்யா.."
"என்ன சுகன்யா.. ஏன் இவ்ளோ அவசரமா ஓடி வரே.."
"ரம்யா.. சந்தோஷ் கே.எம்.சி.ஹெச்.கிட்ட வரும்போது, கார் மோதி பெரிய ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சு. கே.எம்.சி.ஹெச்.க்கு தான் எடுத்திக்கிட்டு போயிருக்காங்க.. நீ உடனே போய்ப்பாரு... உன் பேரைச் சொல்லித் தான் முனகிட்டு இருக்கான்.."
"சந்தோஷ்..."
'வா பொன்மயிலே' என்று எங்கேயோ பாடிக் கொண்டிருந்த ஓசை கேட்டுக் கொண்டிருந்தது.
"சந்தோஷ்.. நான் தான் உங்க ரம்யா வந்திருக்கேன்.. கண்ணைத் திறந்து பாருங்க சந்தோஷ்.."
"ரம்யா.. வந்திட்டியா.. உன்ன பார்க்காம போய்டுவேனோனு பயந்துட்டு இருந்தேன்.."
"அப்படி எல்லாம் பேசாதீங்க சந்தோஷ்.. உங்களுக்கு ஒண்ணும் இல்ல.. நீங்க நல்லபடியா வந்திடுவீங்க பாருங்க.."
"பொய் சொல்ற... பொய்... பொ..."
"சந்தோஷ்..."
'திடுக்'கென தலையை உலுக்கிக் கொண்டாள் ரம்யா. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நடந்தது, நேற்று நடந்தது போல் இருக்கிறது. சுற்றுமுற்றும் பார்த்தாள். இன்னும் பெரிதாக மழை பெய்து கொண்டிருந்தது. அருண் ஸ்டீயரிங் மீதே தலை வைத்து மயங்கியிருந்தான்.
ரம்யா அவசரமாக செல்போனை எடுத்தாள்.
"அப்பா. ரம்யா பேசறேன். இங்க குன்னூர் மெயின் ரோட்டில, அருண் திடீர்னு மயங்கிட்டார். ஆமாப்பா.. அஞ்சாவது பெண்ட்.."
"நத்திங் டு ஒர்ரி, மிஸ்டர் ராஜகோபால். உங்க வருங்கால மாப்பிள்ளைக்கு கொஞ்சம் மூளைல சின்னப் பிராப்ளம். ஏதோ ஒரு நிகழ்ச்சி அவர் மனதை ரொம்ப பாதிச்சிருக்கு. அந்த நிகழ்ச்சிக்கும் நீங்க சொல்ற பாட்டுக்கும் ஏதோ நெருக்கமான தொடர்பு இருக்கணும். நோ பிராப்ளம். அதை ஈஸியாக் கண்டுபிடிச்சு சால்வ் பண்ணிடலாம். நீங்களும், உங்க பொண்ணும் நாளைக்கு வாங்க. அவர் வாயாலயே அந்த நிகழ்ச்சி என்னனு கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்." என்றார் மனவியல் மருத்துவர் ரத்னம்.
"டாக்டர். என் பொண்ணும் கண்டிப்பா வரணுமா?" என்று கேட்டார் ராஜகோபால்.
"அஃப் கோர்ஸ். நாளைக்கு ஒண்ணா சேர்ந்து வாழப் போறவங்க. கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்." என்றார் டாக்டர்.
டாக்டர் ரத்னம் சில சிகிச்சைகளைக் கொடுத்து, கேள்விகளைக் கேட்டு முடித்தவுடன், அருண் பேசத் தொடங்கினான், மயக்க நிலையிலேயே.
"ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி, ஒரு வெகேஷனுக்கு நான் ஊருக்கு வந்திருந்தேன். அப்ப ஒருநாள், காரை வேகமா ஓட்டிக்கிட்டு வரும் போது, கே.எம்.ஸி.ஹெச்.க்குப் பக்கத்தில ஒரு ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சு. ஒருத்தன் மேல மோதிட்டேன். ஸ்பாட் டெத் ஆகியிருக்க வேண்டியவன். ஆனா அவனைத் தூக்கிட்டு போய், கே.எம்.ஸி.ஹெச்லயே சேர்த்துட்டேன். இருந்தாலும் போலிஸ், கேஸ்க்குப் பயந்திட்டு காருக்குள்ள போய் உட்கார்ந்துக்கிட்டேன். அவனோட சொந்தக்காரங்க யாராவது வந்தாங்கன்னா அவங்க கையில, கால்ல விழுந்தாவது நான் தப்பிச்சுக்கணும்னும், அவங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் கொடுத்துடலாம்னு அங்கயே இருந்தேன். அப்ப என் டென்ஷன் குறைவதற்கு எனக்குப் பிடித்த பாடலான இந்தப் பாடலைக் கேட்டுக்கிட்டு இருந்தேன். அப்புறம் எனக்குப் பயம் வந்திடுச்சு. ஸோ, ஸீன்லயே இருக்கக் கூடாதுனு காரை ஓட்டிட்டு வந்திட்டேன். அப்புறம் அந்த ஆள் செத்துட்டான்னு தெரிய வந்துச்சு. அதுக்கப்புறம் இந்தப் பாட்டை எப்பக் கேட்டாலும், அந்த ஆளோட ஆவி என்னை கேள்வி கேக்கற மாதிரியே தோண ஆரம்பிச்சுது. கொஞ்ச நாள்ல, அந்த ஆவி, எனக்குள்ளயே புகுந்துட்ட மாதிரியே ஆகிட்டது.
அன்னியில இருந்து இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் நான் நானா இருக்கறது இல்ல. அந்தா ஆவி தான் என்னை இயக்குது. அந்த ஆளாகவே மாறிடுறேன்.. என்னைக் காப்பாத்துங்க டாக்டர்.." என்று கூறி, அழுதான் அருண்.
'தடார்' என்று மயங்கி விழுந்தாள், ரம்யா.