Friday, December 02, 2011

ஜனாதிபதியும், முதல்வரும் பின்னே பூனேயில் ஞானும்.

டாய்லெட்டில் கூட புல்லாங்குழல் ஒழுகும் பூனா விமான நிலையத்திலிருந்து எழுதுகிறேன். இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம்.

முதலாவது, ஐந்து வருடங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து பெங்களூருக்கு நிகழ்ந்தது. ஏறி அமர்ந்து காது அடைப்பைச் சரி செய்து 'ப்ஹா' என்று மூச்சு விடுவதற்குள் பெங்களூரே வந்து விட்டது. அப்போது ஹெச்.ஏ.எல். பழைய விமான நிலையம் இயக்கத்தில் இருந்தது. இப்போது ஹெபாலில் இருந்தே ரொம்ப நேரம் செல்ல வேண்டியதாய் இருக்கின்றது.

இன்று காலை நான்கு மணிக்கு ஊரே பனிக்காட்டில் உறங்கிக் கிடந்த போது எழுந்தேன். தூங்குவதற்கு முன்பே ஆடைகளைத் தேர்வு செய்து, அயர்ன் செய்து விட்டு, காலையில் குளிப்பதற்கு வெந்நீர் தயார் செய்து கொள்வதற்காக பக்கெட்டில் நீர் நிரப்பி, ஹீட்டரை ஊறப் போட்டு விட்டிருந்தேன். ஆன் செய்து விட்டுப் பல் துலக்கி விட்டுச் சூடாய்க் குளித்து விட்டு வந்தால், பற்கள் கடமுட என்றன. எவ்வளவு சாத்தி வைத்தாலும், ஏழை வயிற்றுப் பசி போல் எப்படியாவது புகுந்து விடுகின்றது குளிர்.

மாநகரப் பேருந்துக் கழகம் பெங்களூருவின் தேர்ந்தெடுக்கப்பட்ட மூலைகளில் இருந்து இண்டர்நேஷனல் விமான முனையத்திற்குச் சொகுசுப் பேருந்துகளை 24x7ல் இயக்குகின்றது. வீட்டுக்குப் பக்கத்தில் பார்த்தால் ஹெச்.ஏ.எல். முக்கியச் சந்திப்பிலிருந்து வெகுகாலை ஐந்து முப்பதுக்குக் கிளம்பும் பேருந்தைப் பிடித்தால், நேரமாய்ப் போய்ச் சேர்ந்து விடலாம் என்று தோன்றியது. எனக்கு உள்நாட்டு விமானம் காலை 8:10க்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மனைவி வந்து ட்ராப் செய்து பார்த்தால், நடத்துனர் பல் துலக்கிக் கொண்டிருந்தார். ஓட்டுநர் உள்ளே உறக்கத்தில். ஐந்து முப்பதுக்கு எப்படியோ கிளம்பி விட்டார்கள்.

வெள்ளிக்கிழமைக்குத் தயாராகிக் கொண்டிருந்தது பெங்களூரு. மஞ்சள் பூச்சிகள் எரிய தெருவெல்லாம் மின்சாரச் செண்பகப்பூக்கள். ரோட்டில் மாடுகள் சாவகாசமாய் மிதந்து கொண்டிருந்தன. எட்டாத உயரத்தில் சர்ஜாபூர் சாலை அடுக்கு மாளிகைகளின் ஃப்ளக்ஸ் தீற்றல்கள். மேகப் புதர்கள் அத்தனை அவசரமாய் நகர்ந்தன. பைத்தியக்காரர்கள் மட்டுமே பொறுத்துக் கொள்ளக்கூடிய ஈரக் காற்று. முன் கண்ணாடியில் விழுந்த பொட்டுத்துளிகளை இரக்கமேயின்றி வைப்பர்கள் வைத்த நோக்கத்திற்குக் குறையின்றி அழித்தன. சரக்கென்று கடந்த கோயிலின் ஸ்பீக்கர் கொண்டைகளில் கன்னட ஜதிகள்.

நடுவே கொஞ்ச நேரம் தூங்கி விட்டேன். சட்டென்று விழிப்பு தட்ட கண் விரித்தால், இரவெல்லாம் மெனக்கெட்டு யாரோ பனித்துகள்களைப் பொடித்து வழிக்காற்றில் நிரப்பி வைத்தாற்போல் வெள்ளை மெத்தைகள். புறநகரின் புறமெங்கும் பூத்த குளிர்தேசக் குத்தூசிகள். முன்னே வருவது மெளனமா இல்லை மயக்கமா என்று கண்டறிய இயலாவண்ணம் தடித்துக் கவிழ்ந்திருந்தன பனித்திரைகள். வன்ம எண்ணம் தோன்ற உடலெங்கும் ஊடுறுவும் சூட்டைப் போல, செம்பேருந்து செருகிக் கொண்டு சென்றது.

பெங்களூருப் பன்னாட்டு முனையத்திற்கு வருவது இது தான் முதன்முறை. பளிங்கு போட்டு வழித்தாற்போல் வெள்ளை மினுக்கத்தின் உள்ளே இயங்கிக் கொண்டிருந்தது. ஓர் ஓரமாய் நிறுத்தி செம்பேருந்து பூங்கதவுகளைத் தாழ்திறந்து விட, சில்லென்று ஓர் ஊதல் உள்ளே புகுந்து உற்சாகமாய் அலைபாய்ந்தது. கேரிபேக்கை எடுத்துக் கொண்டு உள்ளங்கைகளை உரசிக் கொஞ்சம் சூடு பறக்கத் தேய்த்துக் கொண்டு என்ட்ரியை நோக்கி நடந்தேன். நடுவே கடக்கும் சாலையில் ரேடியம் பட்டைகளை அணிந்த காவலர்கள் நமக்கு வழி செய்து கொடுக்க, காத்திருக்கும் டாக்ஸிகளின் மின்னொளி முன் விளக்குகளில் நனைந்து நுழைந்தேன்.

வலப்புறம் வருபவர்கள். இடப்புறம் செல்பவர்கள். கீப் லெஃப்ட் என்ற முன்னோர்களின் வாக்கிற்கிணங்க அமைத்திருக்கும் வடிவமைப்பைக் கொண்டுத் திறம் வியந்து செயல் மறக்காமல் வாழ்த்தி, ஏர் இந்தியாவின் கெளண்டருக்குச் சென்றேன். ஈ-டிக்கெட்டைச் சரிபார்த்து ஒரு ப்ரிண்ட் அவுட்டைக் கொடுத்து 'உள்ளே செல்லுங்கள். போர்டிங் பாஸ் கொடுப்பார்கள்'. எண்ட்ரியில் செண்ட்ரி பிடித்து மறுபடியும் டிக்கெட்டை ஒருமுறை சரிபார்த்து அல்லோவினார்.

பளிங்கினாலான ஒரு மாளிகையில் உயரத்தில் கோபுரங்கள் அமைத்திருந்தனர். எனக்கான கெள்ண்டரில் செக் செய்து விட்டு போர்டிங் பாஸில் ஸீல் குத்தி இருக்கை எண்ணைச் சுழித்துக் காண்பித்து முதல் தளத்திற்குச் செல்லுமாறு சொன்னர். இன்னும் நேரமிருந்ததால் x போல இணைந்திருந்தா காஃபி ஷாப்பில் ஒரு கீமா மசால பப்ஸை ஆர்டர் செய்தேன். அலுத்திருந்த அது மைக்ரோ ஓவனில் உயிர் பெற்று, வெட்டுப்பட்டுப் பின் எனக்குத் தரப்பட்டது. கெட்ச் அப் கிழித்து மேலே பூசி கடித்துப் பார்த்தேன்.

தத்தம் மடிக்கணிணிகளில் தலை புதைத்திருந்தனர் சிலர். நான்கு மத்திய வயது பிராமணத் தமிழ் மங்கைகள் நாளைத் தாங்கள் சந்திக்கப் போகும் யாரோ ஒரு மிஸஸ் ஸ்ரீனிவாசனைப் பற்றியும் அவர் வாங்கியிருக்கும் ஃபேன்ஸி ஸாரிகளைப் பற்றியும் பேசிக் கொண்டனர். ஜெர்மன் மொழியில் ஒருவர் ஆண் கழிவறையைக் கேட்க, பெங்களூர்க் காவலர் சுட்டிக் காட்டினார், தன் சுண்டு விரலால். மென் கரடியைக் கட்டிப் பிடித்து பெதும்பை ஒருத்தியின் ஜீன்ஸ் கவ்விய இடையைச் சுற்றி சங்கிலி இறுக்கியது. நரைத் தலையர் ஒருவர் செல்ல, அந்தக் காலத்து கட்டிய மனைவி போல ரோலிங் பெட்டி மெளனமாய்ச் சென்றது.

நகரும் படிக்கட்டுகளைப் புறக்கணித்து நடுவில் இருந்த நிலைப் படிகளை ஒன்று விட்டு ஒன்று தாவி முதல் தளமடைந்தேன். வரிசைகளில் மாந்தர்கள். செக்-இன் நேரம் வந்ததும் திறந்து விட்டார்கள். லேப்டாப்பை மணப்பெண் போல் தனித்தட்டில் வைத்துத் துணையாக கேரிபேக்கைத் தனியறையில் அனுப்பினால் வெளியிலிருந்து ஒருவர் சோம்பலாய் வாயேயர் செய்தார். அகமும் புறமும் ஆபத்தற்றவை என்று உறுதியளிப்பார் போல் கொட்டாவி விட்டார். அந்தப்புரத்திலிருந்து நகர்ந்து அந்தப்புறம் சென்றடைந்தார்கள் இருவரும். தள்ளி ஒரு வரிசையில் காத்திருந்தால், ஒவ்வொருவராக மெட்டல் டிடெக்டரில் தடவி அப்பிராணி என்று சான்றளித்து போர்டிங் பாஸில் ஒரு சீல் குத்தி, மீட்டெடுத்துக் கொண்டு வந்த கேரி பேக்கில் ஒரு சீல் அடித்த தோடு மாட்டி விட்டார்கள். அதில் ஸ்பைஸ் ஜெட்டில் மீல்ஸ் கிடைக்க ஆர்டர் செய்யுங்கள் என்று விளம்பரம்.

கண்ணாடிச் சுவர்களுக்கு வெளியே வானம் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சூரியனை அனுமதித்த சுவடுகளில் காலை வெளிச்சம் 'மே ஐ கம் இன்?' கேட்டு நுழைய ரன்வே குறித்த பாதையில் ஜெட் ஏர்வேஸ் ஒன்று தத்திக் கொண்டிருந்தது. இன்னும் சில விமானங்கள் இளைப்பாறிக் கொண்டிருக்க, ஏணிப் படிகள் விரைந்து கொண்டிருந்தன. ஏர்பஸ் ஒன்று பறந்து விழுந்தவர்களை அள்ளிக் கொண்டு அரைவல் வாசலுக்கு நகர்ந்தது.

டி.ஸி., டைம்ஸ் ஆஃப் இந்தியாவைக் காத்திருந்துக் கைப்பற்றிக் காலியான ஒரு சீட்டில் அமர்ந்து காக்கத் தொடங்கினேன். ஐந்தாம் எண் வரிசைக்கு ஏர் இந்தியா நிறுவனம் செக்-இன்னுக்கான பூர்வாங்கப் பணிகளை அப்போது தான் மேற்கொள்ளத் தொடங்கித் தன் தாவர ஜங்கம சொத்துக்களை எடுத்து வைத்தனர். வாக்கி டாக்கிக் குரல்கள் பிறந்து கொஞ்ச தூரத்திலேயே செத்து விழுந்தன.

to be filled later


பூனே முனையம் மாநிலத்தின் இரண்டாம் பெரும் நகரினுடையது என்று சொல்லத்தக்க வகையில் இல்லை. சுகாதார வசதிகளும், கால் நழுவும் டைல்ஸ் தளங்களும், மையப்படுத்தப்பட்ட குளிர்விப்பான்களும் இருந்தாலும் காலையில் கண்ட பெங்களூருக்கு முன் இது ஒன்றுமே இல்லை.

விமான முனையத்திற்கு வெளியே வெயில் பரத்திக் கொண்டிருந்தது. முன்பண டாக்ஸி ஒன்றில் ஏறிக் கொண்டுச் செல்ல வேண்டிய இடத்திற்குக் கிளம்பினேன். "ப்ஹோபோடி..!"

நடு மதிய நேரமாதலால், மரங்கள் கூட அனலடித்துக் கொண்டிருந்தன. சாலைகள் அதி துல்லிய ஒளியில் காட்சிகளைக் காண்பித்தன. விமான நிலையத்திற்குக் கொஞ்சம் வெளியே வரை காய்ந்த நிலங்களும், முட்செடிகளும் வந்தன. பின்பு கிட்டத்தட்ட 16 கி.மீ.க்களுக்குப் பின் நகரம் துவங்கி விட்டது. வாய்க்கால்கள். பயிர்கள். ரயில் தண்டவாளத்தின் அடியில் கடக்கும் பேருந்துகள். சாலை ஓரங்களை நெறிக்கும் பேனர்கள். மராட்டியிலும் இந்தியிலும் எழுதப்பட்டிருக்கும் கடை போர்டுகள். நடு ரோட்டில் தடுப்பான்கள்; அவற்றைத் தாவிக் குதிக்கும் மாணவர்கள். மர நிழல்களில் சாவகாசமாக அசை போடும் மாடுகள். சமிக்ஞை விளக்குகள். தேசியப் பாதுகாப்புச் சம்பந்தமான ஒரு கல்வி நிறுவன வளாகத்தையும் கண்டேன். பெயர் மறந்து விட்டது.

பள்ளிக் காலத்தில் சனிக்கிழமை மாலைகளில் பார்த்த இந்திப் படங்கள் மற்றும் எழுதிய இரு பரிட்சைகள் வழியாகக் கொஞ்சம் கற்று வைத்திருந்த இந்தி, டாக்ஸி ஓட்டுநரிடம் கதை பேசும் அளவுக்கு உதவி செய்தது ஆச்சரியமாக இருந்தது. நடைமுறை வாழ்வில் ஒரு புதிய மொழியைப் பழகிக் கொள்வதில் எனக்கிருந்த ஒரு கருத்து மீண்டும் வலுப்பட்டது. தாய்மொழியைத் தவிர வேறு மொழி பெரும்பான்மையாகப் புழங்கும் ஊருக்குப் பிழைக்கச் செல்லும் போது, அப்புது மொழி தெரியவில்லையே என்று வருந்தத் தேவையில்லை. நாம் ஒன்றும் அப்புதுமொழியில் காலத்தை வென்று நிற்கும் இலக்கியம் படைக்கப் போவதில்லை. எனவே அதில் இருக்கும் இலக்கணச் சூத்திரங்கள், வார்த்தை ஜாலங்களை அறிந்திருக்க வேண்டியதில்லை. தினசரி வாழ்வுக்கு கிட்டத்தட்ட முன்னூறு வார்த்தைகள் தெரிந்து வைத்திருந்தாலே வாழ்வை ஓட்டி விடலாம். அவை போதும். ஒரு மூன்று மாதங்கள் இருந்தால் எந்த ஊரிலும் பிழைத்து விடும் அளவுக்கு மொழி வல்லமை வந்து விடும். ஆனால் அதற்கு அம்மொழி பயன்படுத்தப்படும் தளங்களில் சிறிதளவாவது செயல்பாடுகள் இருக்க வேண்டும். கிழக்கில் எழுந்து மேற்கில் சூரியன் கரையும் வரை கணிப்பொறியின் திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தால், பிறகு 'கன்னடா பர்தில்லா..' தான்.

செல்ல வேண்டிய இடத்தை அடைந்து விட்டு, பாதி வேலையை முடித்தேன். மதிய உணவு உண்ண வெளியே வந்தேன்.

கட்டிடத்தின் அடித்தளத்திலேயே உணவகங்கள் இருந்தன. சைவமும் அசைவமும். எவரையும் தெரியாத ஊரில் எதையாவது தின்று வைத்து என்னவாவது ஆகி விட்டால் எப்படி ஊருக்குத் திரும்புவது? எனவே கல்லாவில் உட்கார்ந்திருந்த அந்த குண்டு அம்மணியிடம் எலுமிச்சை சாதம் மட்டும் வாங்கிக் கொண்டேன். கூடவே ஆலு பஜ்ஜியும். மராட்டிய ஸ்பெஷல் ஏதாவது கிடைக்குமா என்று பட்டியலில் தேடிப் பார்த்தால், ஓர் ஓட்டலின் சராசரி ஐட்டங்களே கண்ணில் பட்டன. உண்டவை நன்றாகவே இருந்தன. ஆனால் அப்பெண்மணி தான் உர்ரென்று இருந்தார். அவருக்கு என்ன பிரச்னையோ தெரியவில்லை.

வேலை முடிந்து வெளியே வர இரவு ஏழு ஆகி விட்டது. எனக்கு திரும்புதல் விமானம் இரவு 10:30க்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுவரை எங்காவது ஊர் சுற்றலாமா என்று யோசித்தேன். இப்போது கண்ணில் பட்ட ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்டதில் விவரம் கிடைத்து விட்டது. புனேவுக்கு ஜனாதிபதியும் அவர் வந்திருப்பதால் முதல்வரும் வந்திருக்கிறார்களாம். எனவே ஆங்காங்கே பாதைகள் மாற்றி அமைக்கப்பட்டிருப்பதால், வாகனங்கள் சுற்றலில் விடப்பட்டிருக்கின்றன என்றார்.

நேரம் இருப்பதால் பேருந்தில் விமான நிலையம் செல்லலாம் என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். ஒரு புதிய இடத்திற்குச் செல்கையில் பேருந்துப் பயணம் மட்டுமே அந்த நிலத்தின் பொது மக்களைப் பற்றிய ஒரு சித்திரத்தை அளிக்கும் என்பது என் அனுபவம். புனேவில் அது கைகூடவில்லை. எனவே பேருந்து நிறுத்தத்தைத் தேடி அலைவதை விட ஆட்டோவே சாலச் சிறந்தது என்று முடிவு செய்து கொண்டேன்.

ஒரு புது ஊருக்குச் சென்று வீட்டுக்குத் திரும்புகையில் அவ்வூரின் நினைவாக ஏதேனும் கொண்டு வருவது என்ற பழக்கம் முன்பொரு காலத்தில் எனக்கு இருந்தது. கோயம்புத்தூர் செல்வதே ஒரு பெரிய சாகசமாக இருந்த போது எடுத்து வந்த மருதமலை கற்களும் வடவள்ளி மணலும் இன்னும் வீட்டு பீரோவில் வைத்துள்ளேன். கூடவே முதன்முறை சென்னைக்குச் சென்று வந்த போது கொண்டு வந்த கையளவு மெரீனாவும்.

பூனேவில் அத்தகைய ஒரு நற்காரியத்தைக் குனிந்துச் செய்யாமலிருந்ததற்கு, வயதாகி விட்டது என்பது மட்டுமின்றி ஏழூர் எருமை கணக்காக வளர்த்து விட்ட வயிறும் தான் காரணம் என்பதைப் பொதுவில் வைத்தால், நகுதல் சரி அன்று.

வெளியே, ராத்திரி நேரத் தள்ளு வண்டிகளில் காய்கறிகளை விற்றுக் கொண்டிருந்தார்கள். கேஸ் லைட் புகை, நளினமான ஒரு கஜல் நங்கை நடனமாடுகையில் சுற்றும் பாவாடை போல் தெரிந்தும் தெரியாமலும் கரைந்தது. ஹஸாரே தொப்பிகளும், பஞ்சகச்ச வேட்டிகளும் கொண்ட தாத்தாகள் கேள்விக்குறிக் கைத்தடிகளுடன் நடந்தார்கள். வானம் இருட்டிக் கொண்டு வந்தது. பள்ளி முடிந்த சிறுவர்கள் கைகளைக் கோர்த்துக் கொண்டு, நாம் தாண்டி வந்த ஒரு பொற்கால இளமையை நினைவுபடுத்திச் சாலையைக் கடந்து சென்றனர். மாடிகளில் நிறுத்தப்பட்டிருந்த பேனர்களை மின் விளக்குகள் ஒளிப்படுத்தின. மரங்களின் அடியில் மாடுகளுக்குப் பதில் இப்போது சைக்கிள்கள்.

ஓர் இனிப்புக் கடையில் பூனே ஸ்பெஷல் என்று கேட்டு லட்டு போன்ற ஓர் இனிப்பு வஸ்துவை வாங்கிக் கொண்டேன். நம்மூர் லட்டுகளில் பூந்திகள் பெரியனவாக இருக்கும். இங்கே ரவா சைஸில் இருந்தன. உடனே "அது ரவா லட்டா இருக்கும்.." என்று உங்கள் அடுப்பு ஞானத்தைப் பிரஸ்தாபிக்க வேண்டாம், ஐயன்மீரே! இவை வேறு!

தராசின் தட்டுகள் சமநிலையில் இருக்க வேண்டுமே! எனவே கார முறுக்கு ஒரு பொட்டலமும் வாங்கிக் கொண்டேன்.

முன்பு விசாரித்த ஆட்டோவிலேயே ஏறிக் கொண்டு விமான நிலையத்திற்குப் போனது ஒரு பிழையான காரியமாகப் போனது. ஏனோ முதல்வரும் ஜனாதிபதியும் வந்துள்ளதால் சாலைகள் மிக்க நெரிசலாக இருக்கும், எனவே நேரமாகச் சென்று விடுவது நன்று என்ற நடைமுறை ஞானம் அன்று பொய்த்துப் போனது. ஆம்! மிக நேரமாகவே சென்று சேர்ந்தேன். எவ்வளவு எனில் இரண்டரை மணி நேரங்கள் முன்னதாகவே!

அந்த அத்துவானக் காட்டில் முனையத்தைச் சேர்ந்த ஓட்டல் மட்டுமே இருந்தது. அங்கே சிக்கன் பிரியாணி ஒரு தட்டு வாங்கி அதையும் எவ்வளவு மெதுவாகத் தின்றாலும் இருபது நிமிடங்களிலேயே தீர்ந்து விட்டது. கையில் ஏதும் புத்தகங்களும் கொண்டு வரவில்லை. பூனே போன்ற ஒரு வேற்று மாநில இரண்டாம் நகரப் பொட்டல் காட்டு விமான நிலையத்தில் தமிழ்ப் பத்திரிக்கைகள் விற்கப்படும் என்று எதிர்பார்ப்பது, முற்றிய இளநிக்குள் இனிப்பு நீரைத் தேடுவது போன்றது.

பிரமுகர்கள் வருகையால் ஆங்காங்கே காக்கிச் சட்டையர்கள் நடந்து கொண்டிருக்க அவர்களைச் சட்டை செய்யாமல் satire-ம் செய்யாமல் நான் பாட்டுக்கு நிலையத்தின் உள்ளே போய் உட்கார்ந்து கொண்டேன். கொஞ்சமாய்ச் சோதனை செய்து விட்டு அனுமதித்தார்கள். மடிக்கணிணியையும் காற்றலை இணையத் தொடர்பியையும் கொண்டு போயிருந்ததால், இந்தக் கட்டுரையின் முதல் பத்திகளை தட்டச்சத் தொடங்கினேன்.

கொஞ்ச நேரம் சென்றதும் மிகக் கொஞ்சமாய்ச் சலசலப்பு ஏற்பட்டது. நிமிர்ந்து பார்த்தால், மராட்டிய முதல்வரும் அவருடன் சிலரும் உள் நுழைந்தார்கள். போலீஸார் எவ்வித கட்டுப்பாடும் செய்யவில்லை. லவுஞ்சில் காத்துக் கொண்டிருந்த மிகச் சில பேரை உட்கார மட்டும் சொன்னார்கள். பொது இடத்தில் ஒரு முதல்வரின் வருகை எந்தளவுக்கு ஆர்ப்பாட்டமாக இருக்கும் என்பதை அறிந்த, அனுபவித்த ஒரு தமிழனாக எனக்கு ஆச்சரியம் தாள முடியவில்லை. பக்கத்தில் கிடைத்த ஒரு கோட்டு- சூட்டுக் கனவானிடம் கேட்டேன்.

"இவர் யாருங்க..?"

"முதல்வர்."

"பதவி போனவரா..?"

"இல்லை. தற்போதைய."

செளகானும் அவரது கூட்டத்தினரும் நேராக முக்கிய மனிதர்களின் தனி அறைக்குச் சென்று விட, இருந்த கொஞ்ச நஞ்சக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன. சஃபாரிகளும், காக்கிகளும் மட்டும் அந்த காத்திருக்கும் அறைக்கு வெளியே நடை போட்டார்கள்.

செல்ல வேண்டிய விமானத்திற்கான செக்கின் நேரம் வந்து விட்டதால், கிங்பிஷர் கெளண்டருக்குச் சென்று டிக்கெட் பெற்று சீல் வாங்கிக் கொண்டேன். கடமை இருக்குமா, கம்பெனி பிழைக்குமா, கடன் தீருமா, காசு கிடைக்குமா என்ற அந்த நேரத் தவிப்பு நிலையிலும் அந்த செஞ்சீருடைப் பணியாளர்கள் புன்சிரிப்பு சிந்தினர்.

மேலே மாடிக்குச் சென்றால், அங்கே வேறொரு ஒளி உலகு காத்திருந்தது. வாசனைத் திரவியக் கடைகளும், குளிர்பானக் கடைகளும், ஆடைக் கடைகளும், கைக்கடிகாரக் கடைகளும். புத்தக நிலையம் ஒன்று சாத்தி வைக்கப்பட்டிருந்தது. அழகான இரு இளம் சிறுமிகள் வந்து கதவைத் தள்ளிப் பார்த்து விட்டு, திறக்காததால் உதடுகளைப் பிதுக்கி விட்டு, கண்ணாடிச் சுவரின் உள்ளே சாய்த்து வைக்கப்பட்டிருந்த நூல் பெயர்களைத் தலை சாய்த்துப் படித்தபடியே நகர்ந்தது, அருகருகே வளர்ந்த இரு செந்தாமரை மலர்கள் காற்றுக்கு தலை சாய்த்துக் குளத்துக் குளிர் நீரில் நகர்வது போல் இருந்தது என்று வர்ணித்தால், அழகின் வர்ணிப்பு என்று மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

சற்று நேரத்தில் புத்தகக் கடை திறக்கப்பட்டதும், கொழுமரம் கண்ட கொடி போல, முழுமதி கண்ட மலர் போல, கொழுநனைக் கண்ட தலைவி போல, கொம்பனைக் கண்ட பிடி போல (ஆகா..! ஆரம்பிச்சுட்டானே!) நூலார்வலர்கள் உள்ளே படையெடுத்தனர். நானும் கூட. நூல்களின் பெயர்களைப் பார்த்தப் பார்வைகளில் பிரகாசமும், விலைகளைப் பார்த்த விழிகளில் பெருமூச்சும் கலந்து வெளிப்படுவது, ஊர்த்திருவிழாவில் தொங்க விடப்படும் மின் விளக்குச் சரத்தில் உருண்ட விளக்குகள் எரிவதும் அணைவதுமாக இருக்கும் காட்சியை நினைவுறுத்தியது.

விமானத்திற்கான அறைகூவல் வந்தது. வழக்கமான வேலைகளை வரிசையாகச் செய்து முடித்தனர் அதிகாரிகள். கடந்து, வெளிப்பட்டு, ஓர விளக்குகளில் மின்னிக் கொண்டிருந்த விமானத்தை அடைந்து இருக்கையில் அமர்ந்தேன். நேரமானதும் உதவியாளர் பாதுகாப்பு முறைகளை கைச் சைகையால் செய்து காட்டினார். அடிக்கடி பறப்பவர்கள் அதைக் கண்டு கொள்ளவேயில்லை. காலையில் ஒருமுறை பார்த்தது தான் என்றாலும், முட்டாய் அலுக்கும் வரை பட்டிக்காட்டான் விடுவதில்லையே! நான் கவனித்துப் பார்த்தேன். பார்த்தது சைகைகளை மட்டும் தான் என்றால் நீர் நம்பித் தானாக வேண்டும்.

நேரம் ஆனதும், முதல்வரையும் ஜனாதிபதியையும் அலட்சியப்படுத்தி விட்டு அவ்விமானம் ரன்வேயில் ஊர்ந்தது. காற்று வெளியிடைக் கம்பி விளிம்பு வரை சென்று விட்டுத் திரும்பி வேகம் எடுத்து, விர்ரென்று காற்றில் ஏறியது. அந்த நொடி அடி வயிற்றுக் கவ்வுதல் சரியாகவே நடந்தது.

என் ஜன்னலுக்கு வெளியே பூனே நகரம் மஞ்சள் விளக்குகளில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அத்தனை தெருக்களும், சாலைகளும், வாகனங்களும், கட்டிடங்களும் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன. இது வரைக்குமான வாழ்நாளில் மகாராஷ்டிர மண்ணைத் தொட்டு விட்டது மனதுக்கு ஒரு மகிழ்வைத் தந்தது.

நிமிர்ந்து பார்த்தால், ஆகாயமெங்கும் மேகப் புதர்கள். அத்தனை முகில் மூட்டைகளை எந்த வண்டியில் நிரப்பி வந்து யார் இங்கே கொட்டி வைத்தார்கள்? சுருள் சுருளாய் உருண்டு திரண்டிருக்கும் இந்த மோகன சொரூபங்களைச் செதுக்கி வைத்த அந்தச் சிற்பிக்குத் தான் எத்தனை ஆயிரம் கரங்கள்? ராஜ அலங்காரத் தேர்கள் இந்த வானமெனும் வீதியிலே இந்த கொண்டல்களைத் தான் பாதையாக்கி ஓடியிருக்குமோ?

வான முகட்டில் குழைத்து வைத்த வெண்ணெய் உருண்டை ஒன்று வெண் பட்டொளி வீசிக் கொண்டிருந்தது. ஆகா! பேரெழிலின் மொத்த ஜ்வலிப்பு இந்த முழு நிலவின் மேனியெங்கும் திட்டுத் திட்டாய் விளைந்து, காணும் திக்குகளெங்கும் படர்ந்து தகதக்கின்றதே! மிதந்து கொண்டிருக்கும் எழினிகளின் கரு நிறத்தைக் கரைத்து விட்டு சாம்பல் வர்ணமாக்குகின்றனவே இந்த ஒளிக் கிரணங்கள்! மின்னல்கள் தம் பாட்டுக்கு சந்திரக் கரைசலுக்கு எதிரொலி எழுப்பிக் கொண்டிருந்தன.

சட்டென்று அப்பா ஞாபகம் வந்து விட்டது.

இதே போன்ற மோகன இரவுப் பொழுதுகளில் காவிரி ஆற்றங்கரைப் பாலத்தில் அப்பாவுடன் சைக்கிளில் வந்த காலங்கள். போதை போன்ற வெண்ணொளிப் பிரகாசத்தில் அப்பாவுடன் பேசிக் க்கொண்டிருந்த நாட்கள். விடியற்காலை நேரங்களில் மாரியப்பச் செட்டியார் கடைக்குச் சென்று செம்பில் தேநீர் வாங்கிச் சூடு ஆறாமல் இருக்க, பேப்பர் வைத்து மூடிக் கொண்டு வந்த தருணங்கள். விமானத்தின் உள்லே விளக்குகளை அணைத்து விட்ட படியால், மெளனமாக அழுதது யாருக்கும் தெரிந்திருக்காது அல்லவா?

அரை மணி நேரம் தாமதமாக பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது உலோகப் பறவை. மற்றுமொரு ஏர் பஸ் பிடித்து, தொம்லூர் வந்து இறங்கிக் கொள்ள மனைவி வண்டியில் வந்து சேர, இல்லம் புகுந்த போது அடுத்த நாள் அதிகாலை மூன்று மணி ஆகியிருந்தது. யாரோ ஓர் அப்பா படிக்க வேண்டிய பையனை எழுப்பி விட்டு, டீ வாங்க சொம்புடன் வெளியே வந்திருக்கலாம்.

***