Friday, July 31, 2009

முயல் மருதாணி.(A)



பூஞ்சிவப்புக் கழுத்தைத் தடவும் காற்றின் கரங்கள். மேகம் கறுக்கும் நிறம் கழுவும் விழிப் புருவங்கள். நிழல் சுரக்கும் பெருமரத்தின் அடியில் ஊரும் துளி எறும்பு நுணுக்க திறங்கள். கைகள் துழாவும் போதும் நிரம்பாத பொன் பாத்திரங்கள். ஜ்வலிக்கும் சிறு தூறல் சிதறடிக்கும் மின்னல் பாய்ச்சல்கள். ரகம் ரகமாய்ப் பிரியும் மெளனம் தீராத பதறல்கள். மரகத மொட்டுக்கள் மறைந்து மறைந்து தலையாட்டும் மர்ம விலகல்கள். சிக்காத சிறு நடுக்கம் பற்றிக் கொள்ளாத போதும் ஏற்றுக் கொண்டதாய் ஓர் ஒப்புதல்.

நெருப்பாய் ஓடும் நீராவிக் கதிர்கள் நுரை பொங்கிப் பொங்கிப் பாய்ந்து கரைகளில் மோதி மோதிச் சிதறும். அலையாடும் நனைந்த கற்றைகள் புரளும் போது, விசிறியடிக்கும் அணுக்களில் அகலாத குளிர். பளிங்குப் பொழுதுகளில் பரவசம் நிரந்தரமாய்க் காலக் குடுவையில் நிரம்புகையில் தீப்பந்தம் மேலே துடித்து எரியும். சந்தம் கொண்ட பேரிரைச்சல் அத்தனை திசைகளிலும் திமிறிக் கொண்டு வீச, முட்களில் முத்து முத்தாய் வெப்பக் கரைசல் வெளுப்பாய் முனகும்.

மணல் துளிகளைப் பிசையும் நக நுனிகளில், விரல் கணுக்களில் கதகதப்பான எரிச்சலில் தன்னிடத்தைக் கண்டு கொண்டு ஆர்ப்பரிக்கும் சிறு கற்கள். புரண்டெழும் ஒரு போர்வை சொட்டுச் சொட்டாய் வீழும் முத்த மதில்களைக் கடந்து, திறக்காத ஒரு கோட்டை கோபுரங்களைத் தகர்க்கும் நேரம் வானம் மருதாணி பூசிக் கொள்ளும். வெப்பம் மிரளும் பார்வைகளில் வேண்டுமட்டும் சாயம் பூசிக் கொண்ட காதல், மூடியைக் கழட்டி தன் ஆர்வமுகம் காட்டும் போது இதழோரங்களில் நேர்க்கோடுகளாய் ஓடும் பருவம். மளுக்கென்று முறியும் மூங்கில் காடுகளுக்குள் சரக்கொன்றை மலர்கள் சரிந்து ஒரு வெம்மை நனைந்த மகரந்த உச்சங்களை உதறும்.

கீற்று இடைவெளிகளில் கொட்டிக் கிடக்கும் நிலவொளி. பனி நனைக்கும் ஒரு பல்லாக்கில் பவனி வரும் மோகன இசை, மூங்கில் முந்தானையைத் தழுவும். மதுக்குப்பிகளின் முனைகளில் ரசம் நிரம்பி நிரம்பித் தளும்பித் தளும்பிச் சுழன்று கனிந்து சரியும் போது காரமான ஒரு வாசம் காற்றில் பரவும். கிறங்கும் கீழிதழ் ரத்தப் பாய்ச்சலில் சிவந்து, கிளைத்த பரு மெட்டுக்களில் புதிதாய் ஒரு வெப்பத்தை ஏற்றும்.

பேயாட்டம் போட்ட மூங்கில் புதர்கள் பெய்யும் வெப்பம் சுருக்கும் தீயிலைகள் நிழல் போலும், நிழலின் நிஜம் போலும் பூவர்ணத்தில் பொறிகின்ற மின்சார ஆச்சரியங்கள். பிரமிப்பான போதையில் நகங்கள் நடும் கூற்றுக்கள் நடுக்கத்தில் கோணலாய்க் குளம் வெட்டுகையில் செந்துளிகள் காதுகள் விடைத்த முயல்களாய் எட்டிப் பார்க்கும்.

Monday, July 27, 2009

அச்சு.

பிறகு நாங்கள் எழுந்து கொண்டோம். எனக்கு கைகள் கோர்த்துக் கொண்டால் கொஞ்சம் வலி குறைந்தாற்போல் இருக்கும் என்று தோன்றியது. அவள் என் கைகளை எடுத்துப் புதைத்துக் கொண்டாள். என் மனதில் இருப்பதை உணர்ந்து கொள்ளும் ஒரு ரகசிய புலனை இன்னும் அவள் இழந்து விடவில்லை; இழக்க விரும்பவில்லை என்ற எண்ணமே எனக்குள் கொஞ்சம் அமைதியைத் தெளித்தது. அவள் அழுகிறாளா என்று பார்க்க விரும்பினேன். அவள் என் கண்களைத் துடைத்து விட்டாள். அவள் கைக்குட்டையின் ஸ்பரிசம் என் மூக்கின் மேல் தடவிய போது, அதில் அவள் வாசம் நிரம்பியிருப்பதை முகர்ந்து உடலுக்குள் எங்கோ பதுக்கிக் கொண்டேன்.

பூங்காவில் பறவைகளின் இரைச்சல் குறுக்கும் நெடுக்குமாக திரிந்து கொண்டிருந்தது. கொஞ்சம் தள்ளி உட்கார்ந்திருக்கும் பெரியவரை ஒரு வாரமாகப் பார்த்து வருகிறேன். இலகுவான சட்டை, கசங்கிய வேட்டியில் கைத்தடியில் தாடையை அழுத்தி, எங்கோ தொலைவை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பார். அவர் கண்ணாடி மிகப் பழையதாக இருக்கும். காது கொக்கியில் கயிறு வைத்துக் கட்டியிருப்பார். சிலசமயம் அவர் காலடியில் பந்து வந்து விழும் போது, குனிந்து எடுத்து வீசுவார். அப்போது மட்டும் அவர் முகத்தில் லேசான ஒரு சிரிப்பு வரும்.

பையன்கள் ஒரு ஓரமாக கால்பந்து விளையாடத் தொடங்கி, இப்போது பாதி வரை ஆக்ரமித்து விட்டார்கள். போதாக்குறைக்கு அவ்வப்போது எண்திசைகளிலும் எல்லாப் பக்கமும் பாய்ந்து பாய்ந்து வர, 'அங்கிள்...பால்..' என்று அங்கிருந்தே கத்துவார்கள். என்னிடம் வந்தால் கைகளால் தர மாட்டேன். உதைப்பேன். சில சமயம் மைதானத்திற்குப் போகும். சில சமயம் ஏதோ ஒரு மரத்தில் பட்டு, திரும்பி என்னையே வந்து மோதும். அஞ்சலி சிரிப்பாள்.

அஞ்சலி சிரிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு ஐஸ்க்ரீம் வாங்கித் தந்தால் சிரிப்பாள்; லேட்டாக வந்து புதிதாக என்ன காரணம் செல்லலாம் என்று யோசிக்கும் போது சிரிப்பாள். கடற்கரையில் அலைகளோடு நடத்தும் பந்தயத்தில், அலை வென்று, கால்களை நனைத்து விட்டால் சிரிப்பாள். நடைபாதையில் நடந்து கொண்டிருக்கும் போது, கைகள் கோர்த்துக் கொண்டால் சிரித்துக் கொண்டே வருவாள். அஞ்சலி போன்ற அழகான பெண்ணைப் புன்னகைக்க வைக்க எந்தவித தந்திரோபயங்களையும் உபயோகிக்கலாம். லேசான கன்னம்; குளிரான கண்கள்; ஈரமான உதடுகள்; சுழிவான கூந்தல்; மேலாக, அன்பான மனம். காதலிக்க மாட்டீர்கள்..? நான் செய்தேன்.

மெரீனாவில் மத்தியான வெயிலில் ஒற்றைக் குடைக்குள் தப்புகள் செய்ததில்லை; அந்த சமயம் சிட்டி சென்டரில் லேண்ட் மார்க்கில் ஆளுக்கொரு பக்கம் புத்தகங்களுக்குள் தொலைந்திருப்போம். அவளுடைய லிஸ்டுக்கும், நான் சேகரிப்பவர்களுக்கும் எந்த தொடர்பும் இருக்காது. அவள் 'ஜே.கே' என்று அள்ளி வரும் போது, நான் 'ஜே.கே.ரெளலிங்' வாங்கி வருவேன். 'சின்ன பப்பாவா நீ?' என்று கேட்பாள். எதுவும் சொல்லாமல் மெளனமாகி விட்டால், உடனே 'ஸாரி' கேட்பாள். 'ஓ.கே. இது எத்தனாவது பார்ட்?' என்று பேச்சை மாற்றிவிட்டு பொம்மை செக்ஷனுக்குப் போவோம். சி.டி. ஷாப் போவோம். ப்ளாஸ்டிக் கவர்களில் எல்லாரையும் நிரப்பி விட்டு வந்த ஒரு நாளில்தான் நாங்கள் முதன்முதலில் முத்தமிட்டுக் கொண்டோம்.

அதற்குமுன் ஒன்றரை வருடங்களாக பழகி வந்தாலும் ஏனோ அவளைத் தொட்டுப் பார்க்க வேண்டும் என்று தோன்றியதேயில்லை. மிக யதேச்சையாக மேலே படும் போதும், சில அயதார்த்த கணங்களில் மின்னலாய்த் தோன்றி மறையும் சில அழகுகளைக் காணும் போதும் மெல்லிய ஜவ்வு போல் சூடு பரவி காதுகள் ஜிவுஜிவுப்பது தோன்றும்தான். ஆனால் அடுத்த நொடியே என்னை ஒரு விளையாட்டுப் பொம்மையாக்கி இருக்கிறாள் என்று உணர்ந்து கொள்ளும்படி சிரிப்பாள். ஆனால் அன்று நடந்து கொண்டது ஒரு முழு அர்ப்பணிப்பில் தான் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

ஐநாக்ஸின் கடைசி இருட்டில் பதுங்கிக் கொண்டு, வீரர்களும், குதிரைகளும் தூசு கிளப்பி பறந்து கொண்டிருந்த போது, மிக யதேச்சையாக அவளைப் பார்த்த போது, என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். என் முகத்தையே! மெல்லிய குரலில் 'ஐ லவ் யூ...' என்றாள். என் காதுக்குள் ஐஸ் குளிராய்ப் பாய்ந்தது. சத்தியமாய், தியேட்டர் ஏ.ஸி. காரணம் அல்ல. இதற்கு என்ன மாதிரி ரியாக்ட் பண்ணுவது என்று எதுவும் எனக்குத் தோன்றவில்லை. கையில் வைத்திருந்த பாப்கார்னை நீட்டினேன். நுனிவிரலால் தள்ளிவிட்டு நெருங்கி வந்தாள். எனக்கு 'ஏதோ நடக்கப் போகின்றது' என்று தெரிந்து விட்டது. அந்த 'ஏதோ' என்னவாக இருக்கும் என்பதும் தெரிந்து விட்டது. ஆனால் அது இவ்வளவு கிட்டத்தில், இன்னும் சில நொடிகளில் நடக்கப் போகின்றது என்று நினைக்கும் பொது, காதுகளுக்குப் பின்னால் ஒரு குறுகுறுத்தது. உதறிக் கொள்ளும் முன், ஒற்றிக் கொண்டாள், உதடுகளால், உதடுகளை...!

கடைசி வரியை மறுபடியும் ஒருமுறை படித்துப் பாருங்கள். இதுவரை ஒழுங்காக வாக்கியங்கள் அமைத்துக் கொண்டு வந்தவன், சட்டென நிலைகுலைந்த தடுமாறும் ஒரு வாக்கியம் சொல்கிறேன் என்றால், அந்த கணத்தின் நிகழ்வு என்ன மாதிரியான விளைவை எனக்குள் ஏற்படுத்தி இருக்கின்றது.. பாருங்கள்..! ஆனால் அந்த நொடிகள் எத்தகைய ஒரு அனுபவம் என்பதை என்னால் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

ஒரு ஈரப் பிரதேசத்தின் உச்சியில் நின்று கொட்டும் மழையில் நனையும் பரவசம், சுருண்டு சுருண்டு விழுகின்ற இலைச் சுருள்களின் மேலே படுத்துக் கொள்வது போன்ற கூசல், தலைக்குள்ளே ரகசியமாய் நூறு வண்டுகள் இரைவது போல் கூச்சல்....

'கோல்...' என்று சத்தம் கேட்டது. கலைந்து பார்த்தேன். ஒரு பையன் ஓடிக் கொண்டு வர, மற்றவர்கள் அவன் மேல் விழுந்து புரண்டார்கள். அந்த கோல் விட்ட கீப்பர் தலை கவிழ்ந்து ஒரு ஓரமாய் நின்றிருந்தான். அஞ்சலி பாவமாய்ப் பார்த்தபடி கூடவந்தாள். அவளுக்கு கால்பந்தும் பிடிக்கும். ஜிடேன் செய்தது சரிதான் என்று ஒருநாள் மதியம் முழுதும் தேனாம்பேட்டை பஸ் ஸ்டாப்பில் நிற்க வைத்து விவாதித்தாள். யாருடன்..? என்னுடன். நான் இந்த விஷயத்தில் புதிய ஜீரோ வாங்கியிருந்தேன். 'ம்...ம்...' கொட்டுவதைத் தவிர எனக்கு வேறு வாய்ப்பு இல்லை.

இதில் மட்டும் அல்ல. இன்னும் பல விஷயங்களில் அவள் மட்டுமே பேசிக் கொண்டிருப்பாள். நான் ஒரு சதுக்கபூதத்தின் வயிற்றைப் போல், அவள் வார்த்தைகளை விழுங்கிக் கொண்டேயிருப்பேன். உண்மையில் அவள் குரலைக் கேட்பதற்காகவே நான் முட்டாளாக இருக்க விரும்புகிறேனா இல்லை நான் முட்டாளேதானா என்பது இன்னும் எனக்கு தெளிவில்லை.

இவள் என்ன விதமான கலவை என்பது பல சமயங்களில் யோசித்துப் பார்க்கும் போது எனக்கு குழப்பமே மிஞ்சும். ஜே.கே.படிக்கிறாள். 'வன்முறைக்கு அப்பால்' என்று பேசுவாள். ஆனால் அதைப் பற்றி துளியும் தெரியாத, தெரிந்து கொள்வதில் எந்த வித அக்கறையும் காட்டாத ஒருவனிடம் திணிப்பது ஒருவகையில் வன்முறை தான் என்பது அவளுக்குத் தெரியுமா, தெரியாதா? இல்லை, தெரிந்தும் காதலில் வன்முறைகள் அவசியம் என்று நினைக்கிறாளா?

இரவு பத்து மணிக்கு மேல் கேளம்பாக்கம் போகும் கடைசி பேருந்தில் தான் வருவேன் என்று அடம்பிடிப்பாள். அதில் அந்நேரத்திலும் தேன்கூடாய்க் கூட்டம் அள்ள, கிட்டத்தட்ட ராணித்தேனீ போல் அவள் மட்டும் ஒரு பெண்ணாய் இருப்பாள். அத்தனை கண்களிடம் இருந்தும் அவளைக் காப்பாற்ற வேண்டிய ஒரு சேவகன் போல் நான் வளைத்திருக்க வேண்டும். அங்கங்கே உதிர்ந்து கொண்டே வரும் கூட்டம், சிப்காட் தாண்டிய பின் காணாமல் போய், நான்கு பேர் மட்டும் ஜன்னல் வாய்களுக்குள் புகுந்து புகுந்து வெளியேறும் குளிர்க்காற்றில் நனைவோம்.

சாந்தோம் சர்ச்சில் மண்டியிட்டு ஜெபிப்பாள். நான் எதிர் பள்ளியின் போர்டைப் பார்த்துக் கொண்டு, அலுப்பேயில்லாமல் எழும்பிக் கொண்டேயிருக்கும் அலைகளின் பேரிரைச்சலை...

கூட்டுக்குள் ஒடுங்கிக் கொண்ட பறவைகளின் கீச்சுகீச்சுக் குரல்கள் இந்த மாலை நேரத்திற்கு ஒரு வித குளிரைக் கொண்டு வந்திருந்தன. மஞ்சள் வானம் வேகமாக கருப்பை அள்ளி பூசிக் கொண்டிருந்தது. பூங்கா அவசரமாக காலியாகிக் கொண்டிருந்தது. அந்த கிழவர் முன்பே கிளம்பிப் போயிருந்திருக்க வேண்டும். மைதானமும் ஷூ அச்சக்களோடு மட்டும் இருந்தது. விளையாட்டின் ஆரம்ப உற்சாகமும், வேகமும், போட்டியில் வென்றாக வேண்டிய அவசரங்களும், வெற்றிகளின் அபாரக் கோலாகலங்களும், முத்தமிடல்களும், ஒருவர் மேல் ஒருவர் விழுந்து புரண்டு எழுந்த பெருமிதமும்.... எல்லாம் ஒரு கனவாகிப் போய், மைதானத்தில் அந்த நிகழ்வுகளின் பதிவுகள் மட்டும் இருந்தன.

பூங்காவை ஒட்டிய நகரின் முக்கிய சாலை முழுக்க முழுக்க நியான் போர்டுகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது. சுருக்குப்பை போல் கிடைத்த இடங்களில் எல்லாம் விதவித வண்டிகள் செருகப்பட்டிருந்தன. பிடிவாதமாய் சில கடைகளின் வாசல்களில் கம்பி வாசல் போட்டிருக்க, தலை வகிடைச் சுற்றிச் செல்லும் பேன்கள் போல் அதைச் சுற்றிலும் சைக்கிள்கள் திமிறிக் கொண்டு நின்றிருந்தன.

பூங்காவை விட்டு வெளியே வந்து விட்டோம். சுவரில் கைக்குட்டை அளவு போஸ்டர்கள் நிரம்பியிருந்தன. யாரோ ஒரு சிறுவன் மும்மரமாய் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தவன், எங்களைக் கண்டு பயந்து நிறுத்தி விட்டு ஓடினான். இன்னும் கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்திருக்கலாம் என்று தோன்றியது. மெல்ல நடந்தோம். விரல்களைப் பிடித்திருந்த அவள் கைகள் இப்போது முழுக்க கோர்த்துக் கொண்டன. விரல்கள் ஒன்றுக்குள் ஒன்றாக நெரிபட்டன. அவளது வலது கைவிரலில் போட்டிருந்த தங்கமோதிரம் என் உள்ளங்கையில் குத்தியது. வலிக்கச் செய்தது. ஆனால் 'உன் நிச்சயதார்த்த மோதிரம் என் கைகளைக் குத்துகிறது' என்று நான் உண்மையைச் சொல்லப் போக, அவள் இதில் கவித்துவமாக நான் ஏதேனும் உணர்த்துகிறேனா என்று யோசித்து அழத் தொடங்கி விடுவாள். அவள் அப்படி நினைக்கக் கூடியவள் தான். அவள் படிக்கும் இலக்கியங்கள், கலந்து கொள்ளும் கூட்டங்கள், பேசுகின்ற பேச்சின் வீச்சுக்களிலிருந்து அவள் மன அமைப்பைக் கணிப்பது என்பது எளிதான ஒன்றாக இருந்தாலும், அப்படிப்பட்ட பெண் என்னை ஏன் விரும்பினாள் (விரும்புகிறாள் என்று சொல்லலாமா..?) என்பது பெரும் குழப்பம் தரும். எந்த தர்க்கவியல் அல்லது தத்துவவியல் அல்லது மனோதத்துவவியல் பேராசிரியர்களாலும் இதனை விளக்க முடியுமா என்பது சந்தேகமே!

அவளுக்கு அழவும் தெரியும் என்பது எனக்கு மிகச் சமீபத்தில்தான் தெரிய வந்தது. காரண நிகழ்வு என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான் என்ற போதும், அதை எதிர்கொள்ளும் கணம் என்பது நாம் எத்தனை முன்னேற்பாடுகளுடன் இருந்தாலும், நம்மை அசைத்து தூக்கிப் போட்டு விடுகின்றது. அழுது கொண்டு பேசும் போதும் நான் மெளனமாகவே கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அவள் கீட்ஸையோ, ஃப்ரோஸ்ட்டையோ மேற்கோள் காட்டி அழுதாள். குறித்து வைத்துக் கொள்ள மறந்து விட்டேன். இப்போது கேட்டால் என்ன சொல்வாள் என்று யோசித்தேன்.

கருஞ்சிவப்பு மாருதி நின்று கொண்டிருந்தது. அருகில் ஒரு குப்பைத் தொட்டி பாதி நிறைந்திருந்தது. உள்ளே சீன எழுத்துத்தகடு ஒன்று சிவப்புக் கயிறால் நடுவில் தொங்கிக் கொண்டிருந்தது. ஹெட் லைட் எரிந்து கொண்டிருந்தது. முன் சீட்டில் வெளிச்சம் விரவியிருந்தது. ஸ்டீரிங்கில் கைகள் வைத்து, கண்ணாடி போட்டுக் கொண்டு அவள் அப்பா உட்கார்ந்து கொண்டிருந்தார்.

நாங்கள் அதன் அருகில் சென்ற பிறகு, மெல்ல அவள் கைகளை விடுவித்துக் கொண்டாள். இப்போது கை இன்னும் கொஞ்சம் வலிக்கிறது போல் தோன்றியது. பக்கத்து கதவைத் திறந்து விட்டார். அவள் அமர்ந்து கொண்டாள். 'பேசியாச்சில்ல..?' என்பது போல் என்னைப் பார்த்தார். மெல்ல தலையசைத்தேன். காரைத் துவக்கி விட்டார். அவள் கண்ணாடிப் பார்வை பார்த்தாள். எனக்குள் சிரிக்கலாமா என்று கேட்டுக் கொண்டேன். 'வேண்டாம். இப்போது சிரித்தால், கண்களுக்குள் முட்டிக் கொண்டிருக்கும் கண்ணீர் திறந்து விடலாம்' என்ற ஜாக்கிரதை தோன்றியது. ஆனால் யாருக்கு என்று நான் சொல்ல மாட்டேன். ரிவர்ஸ் கீர் அடித்து, குப்பைத்தொட்டி சந்துக்குள் கொஞ்சம் போய், வலது பக்கம் வெட்டி, முன்னே சென்று, முக்கிய சாலையில் கலப்பதற்காக இடது இண்டிகேட்டரைத் துடிக்கச் செய்தார்.

இடது இண்டிகேட்டர் துடிக்கத் துடிக்க, திரும்பி நடந்தேன். நியான் போர்டில் எழுத்துக்கள் ஒவ்வொன்றாக தோன்றி மறைந்தன.

எழுவிழுதல்.



நீலப்
பனித்துகள்கள்
காலத்தின் போக்கில்
உறைந்து
சிவக்கின்றன
ரத்தமாய்.

சுழன்றுச் சுழன்று
கழன்று
விழுந்த
புரவியின் வால்
கரைந்த இடத்தில்
முளைக்கின்றது
ஒரு
மரங்கொத்தி.

தீயைப் புகட்டி
வாயில்
அடக்கிக் கொண்ட
அசுரன் முகம்
பூப்பூவாய்
வெடிக்கும்
போது
ஈரமாய் வானம்
மலர்கின்றது.

சிம்னியிலிருந்து
கசியும் புகை,
மஸ்லின்
மாராப்பை
நழுவ விடும்
நாட்டியக்காரி
மார்புகளைப் போல்
பொய்யாய்க்
கரைந்து
காணாமல் போகிறது.

வெண்குழல் திரவம்
ராட்சஸ வேகத்தில்
நகர்ந்து
உள்ளிழுக்கும்
வெட்டவெளியில்
துளித்துளியாய்ச்
சேகரமாகிறது.

புதிய நிழலைத்
திணிக்கும்
ஒரு ரகஸ்ய
வெய்யில்,
மந்தாரமாய்ப்
பெருகுகையில்,
இலைகளில் தேங்கும்
இரவின் இளமைத்துளி
பஸ்பமாகிறது.

அனலாய்
அடித்துக் கொள்ளும்
வண்டின் சிறகுகள்
கூசும் வகையில்
தொடையில்
துளைத்து
தலைநுழைக்கும் போது,

விழிப்பிலிருந்து
எழுந்து
கனவுக்குள்
விழுந்தேன்.

***

படம் நன்றி :: http://th06.deviantart.com/fs9/300W/i/2006/149/0/b/Fizzy_Water_by_shadow_kat_ana.jpg