Thursday, July 27, 2017

நீலாம்பல் நெடுமலர். 18.பொன் விளை நிலத்தில் செம்மணிக்கல் போல் முளைத்த முத்துத்துளி. நீலவிண் பாதையில் உருண்டு வரும் வெண்ணுரைத்தேர். நிழல் கருமையை உண்டு வளர்ந்த குழல் கற்றை. மென்முகில் சுருள் நுரைத்த நீள் சாரல்.  மொழிச் செழுமை குளிர்ந்து வந்த சொல்வெளி.

பனிபொழி பார்வை. தினை உயர் கூர்மை. தனிநில் தளிர்மரம். நனிசுவை நல்லிமை. பசுமை துளிர்த்து நிறையும் இளமேனி. பசுங்கிளி அலகின் செம்மை இதழ்கள். ஐவிரல் அமுதூறும் பூங்கரங்கள். தொல்தமிழ் கரைந்த சொற்கள் வழியும் மூவா முத்தம்.

மென்முத்தங்கள் இடும் நீரிதழ்கள். மயக்குறு மணம். மருதோன்றி இலைச்சாறிட்டு குடுமிகளில் குருதிக்குளிர்மை சூடிய நீள்விரல்கள். பித்தெழுந்த மாயம். பின்னெழுந்த காயம். தத்திவிழும் கைப்பிள்ளை. முன்னிற்கும் கோபுரம்.

நில்லா வான்மழையில் நனைந்து நிற்கும் பூமரம். இலைநுனிகளில் சரியும் வெண்பனித்துளி. நிலாப்பாலில் குளிக்கும் வர்ணமலர்கள். அடிவேர் வாசம். மண் குழைந்த ஈரம் கோடையில் கனவுகளாய் எழும் இரவு.

pic: https://s-media-cache-ak0.pinimg.com/736x/24/91/3b/24913b86c74e90b034cbdb730db77420--divine-goddess-goddess-art.jpg

Sunday, July 16, 2017

சொல் ஆட்டம்.

வி, ம், ந, ர, வ, பா, தா, த, ள

மேற்கண்ட எழுத்துக்களைக் கொண்டு எத்தனை சொற்களை உருவாக்க முடியும் என்று தினத்தந்தியில் ஒரு முறை பார்த்து முயன்றதில் கிடைத்தவை கீழே.

தாவரம்
வனம்
தா
வரம்
வளம்
பாவி
பாதாம்
பானம்
பாரம்
பாவம்
பாளம்
தளம்
தாளம்
விதானம்
தரம்
ரதம்
பாதம்
வதனம்
வரதம்
தாரம்
பாதாளம்
தாம்
ரவி
தனம்
தம்
தாவி
தவி
விதம்
தவம்
வதம்
விவரம்
பா
பாரதம்
பாவதானம்
வரதா

மேலும் சொற்களை அமைக்க முயன்றால், சொல்லுங்கள்.

Thursday, March 23, 2017

அசோகமித்திரன் நினைவஞ்சலி.

மிழ் மொழியின் மிகச் சில பேரெழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்திரன், இன்று மறைந்து விட்டார்.

தினொன்றாம் வகுப்பில் அரையாண்டில் நடந்த ஒரு பேச்சுப்போட்டியில் வென்றதற்காக புத்தகப் பரிசு கொடுத்தார்கள். அதை நானே தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்பதால் ஒரு சனிக்கிழமையில் ஈரோடு வேலா புத்தக நிலையத்திற்குச் சென்றோம். அந்நாட்களில் நூல்கள் என்றால் ஈரோட்டில் வேலா மட்டும் தான். அவ்வளவு பிரபலம்.

அதிகம் விற்கின்ற பேனா, பென்சில், நோட்டுப் புத்தகம், சார்ட் பேப்பர், பாட புத்தகங்கள் என்று அடுக்கப்பட்டிருந்த தரைத்தளத்தின் மேலேறி முதல் தளத்திற்கு வந்தால் பொது நூல்கள். அலமாரிகளிலும் சுழல் அடுக்குகளிலும் நிரப்பப்பட்டிருந்தன. அங்கே இங்கே சுற்றிச் சுற்றி அலைந்து எதை எடுக்க எதை விடுக்க என்று ஆனந்தத்தில் திணறி, இறுதியாகத் தேர்ந்தெடுத்தது, ஒரு சிறுகதைத் தொகுப்பு.

70களில் வெளிவந்த சிறுகதைகளில் தமக்கு நன்றென பட்ட சிறுகதைகளைத் தொகுத்து ‘நவீனத் தமிழ் சிறுகதைகள்’என்று வெளியிட்டிருந்தார், அசோகமித்திரன். இன்றும் அப்புத்தகம் வீட்டில் இருக்கின்றது. நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியீடு என்று நினைக்கிறேன். சாம்பல் நிற அட்டையில், ஒயிலாய் ஒரு பூச்செடி நின்றிருக்கும்.  அதைத் தேர்வு செய்து, கூட வந்திருந்த ஆசிரியரிடம் கொடுத்து விட்டேன்.

அரை நாள் பள்ளி முடிந்து, நடந்த கலை விழா நிகழ்வில் அப்புத்தகம் பரிசாக எனக்குக் கொடுக்கப்பட்டது. பள்ளியிலிருந்து வீட்டுக்குப் பதினாறு கி.மீ. பேருந்தில் அமர்ந்து படிக்கத் தொடங்கினேன்.

உண்மையில் சொல்லப் போனால், வயதுக்கு வருதலைப் போன்ற நிகழ்வு அது. அந்நாள் வரை துப்பறியும் கொலைக் கதைகளில் மட்டுமே ஊறியிருந்த ( நன்றிகள் : ஜி.அசோகன், ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர்...) மனம் புது பரவசத்தைக் கண்டு கொண்டது.

’மருமகள் வாக்கு’ என்ற கிருஷ்ணன் நம்பி கதை தான் முதல் கதை. அங்கிருந்து துவங்கி, ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்’, ‘எஸ்தர் - வண்ணதாசன்’, ‘தனுமை - வண்ணநிலவன்’, ‘நகரம் - சுஜாதா’, ‘நாயனம் - ஆ.மாதவன்’, ’தவம் - அய்க்கண்’, இந்திரா பார்த்தசாரதியின் ஒரு டெல்லிக் கதை, இறுதியாக அசோகமித்திரனின் ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’. மேலும் பல கதைகள். நினைவிலிருந்து மீட்டு எழுதுவதால், சில கதைகள் விடுபட்டிருக்கும். ஒவ்வொரு கதையும் மன உலகின் வாசல்களை ஒவ்வொன்றாகத் திறந்து விட்டன.

இப்படியெல்லாம் கதைகள் இருக்கின்றன, தமிழில் எழுதுகிறார்கள் என்று தெரிய வந்த ஆச்சரிய அனுபவம் அது. வீட்டிற்கு வருவதற்குள்ளும் வந்தும் மொத்தக் கதைகளையும் படித்து முடித்து விட்டுத் தான் மறு வேலை பார்த்தேன். இவ்வகையில் தலைப்பே போல், நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு பரந்த அறிமுகத்தைக் கொடுத்த வகையில் அசோகமித்திரன், எனக்கு ஓர் காணா ஆசிரியர்.

18-வது அட்சக் கோடு’ என்ற நாவலை எதோ ஓராண்டு ஈரோடு நூல் அழகத்தில் வாங்கினேன். நீரொழுக்கு போன்ற கதை. அதிர்ச்சி சம்பவங்களோ, தடாலடி திருப்பங்களோ, உணர்ச்சிப் பிழம்பாறுகளோ எதுவுமே இல்லை. கதை, அது பாட்டுக்குப் போகின்றது. சந்திரசேகரனின் கதை. கடைசி நிகழ்வு வரை மெதுவாக, மிக மெதுவாக டெம்போ ஏறிக் கொண்டு சென்று, சந்திரசேகரன் தன்னைச் சூழ்ந்தெரியும் அரசியல் அனலை அறிந்து கொள்ளும் முடிவில், மனம் கனம் கொள்கின்றது. ஜெயமோகன் தன் தளத்தில் இந்நாவல் பற்றிய ஆர்.வி.யின் கேள்விக்கு அளித்த விளக்கமும், பதிலும் அட்சக்கோட்டை புதுப் பார்வையில் காண வைத்தது.

ற்றன் நாவலையும் ஒருமுறை சென்னை நூல் அழகத்தில் தான் வாங்கியிருந்தேன். அயோவா பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்கள் மாநாடு. தனித்தனிக் கதைகள் போல் தோன்றும் இக்குறுநாவல் அவ்வாறல்ல் என்றே தெரிந்தது.

ஜெயமோகனை அவரது இல்லத்தில் சந்திக்கச் சென்ற போதும், அவர் நினைவு கூர்ந்து சொன்ன கதையும் அசோகமித்திரனின் கதை தான். திருப்பம் என்று தலைப்பு என்று நினைக்கிறேன். கியர் மாற்றக் கற்றுக் கொள்ள முடியாமல் திணறும் க்ளீனர் பையன், சட்டென ஒரு கணத்தில் கிளட்ச் போடும் லாவகத்தைக் கற்றுக் கொள்கிறான். ஓர் அறிதல். இனி அவன் பழைய ஆள் அல்ல. ஒரு புது அறிதல் அவனுக்கு கிடைத்து விடுகின்றது.

இப்படி, ஓர் கண நேர அறிதலை அளித்த ஆசிரியர் அசோகமித்திரன் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தங்கள்.

தமிழுக்குத் தொண்டு செய்வோன் மறைவதில்லை;

வாழிய நீர் என்றும்,  எம் மொழியில், எம் சொல்லில், எம் நினைவில்!

Saturday, March 11, 2017

தேவி நின் புகழ்

தேவி

செஞ்சுடரோ செம்மலரோ செவ்விதழோ செய்தவம்
பஞ்சிணையோ பால்கலமோ பற்றெரியோ உய்நலம்
வஞ்சினமோ வாய்நலமோ வன்வழியோ பெய்புலம்
அஞ்சுவனை ஆதரிக்கும் தாள்.

கோடானு கோடிகோள் ஓயா வெளியிடை
ஓடாநின்ற ஒற்றைப் புவிதனில் - பாடாத
பாடுபடும் பிள்ளையைப் பாராட்டத் தாலாட்டப்
பீடுடன் தோன்றியதுன் தாள்.

நெய்யகல் பூமுகம் பொய்யகல் தீநிறம்
கையகல் பொன்னொளி மையகல் கூர்விழி
தையலுக்குத் தேந்தனம் வையலுக்குத் தீங்குரல்
மையலுக்கு நீர்மணம், நீ.

அனல்பூ முகமே தணல்தேன் விழியே
புனலாழ் மனமே புதுஆ - மணற்றுளி
முத்தே மரகதச் சொத்தே மதுரசப்
பித்தாக்கும் பின்னும் நடை.

Tuesday, March 07, 2017

புதுப் பிள்ளையார்.

பல்லவி:

மூத்தபிள்ளை சுந்தரா...
முழுமதிநிறை மந்திரா...

கனிகொண்ட கள்வனே - மாங்
கனிகொண்ட கள்வனே - என்மேல்
கனிவாய்நீ கணபதியே...


அனுபல்லவி:

தந்தைக்குத் துணைவன்நீ
தம்பிக்கு நண்பன்நீ
அன்னைக்கு அன்பன்நீ
அன்பர்க்கோ யாவும்நீ... (மூத்தபிள்ளை)சரணம் 1:

அவ்வைக்குத் தமிழைத் தந்து,
அவள்தமிழில் குளுமை கொண்டு,
அழகனுக்குக் கன்னி தந்து,
அரசடியிலே அமர்ந்த.. (மூத்தபிள்ளை)சரணம் 2:

எல்லோர்க்கும் செல்லப்பிள்ளை
எவரிடத்தும் மறுப்புமில்லை
பொல்லார்க்கும் பொறுமைகாட்டி
நல்லார்க்கு நலமூட்டும்... (மூத்தபிள்ளை)


புது ஊர்வசி.


ஊர்வசி, ஊர்வசி, you just do it ஊர்வசி,
ஊக்கமின்றி ஓய்ந்திருந்தும், you just do it ஊர்வசி,

வாய்ப்புகள் கொட்டவே, you just do it ஊர்வசி,
வாசலைத் தட்டவே, you just do it ஊர்வசி,

கேளடி ஒளியே, ஒயிலே உலகில் வாய்ப்புகள் நூறு லட்சம்
நீயடி உளியே, சிலையே கொண்டு செல்லடி உனது பக்கம்

வாழ்க்கையில் வெல்லவே, you just do it ஊர்வசி,
வானவில் வாழ்க்கையில் வெற்றி என்பதே கான்ஸ்டன்ஸி

(ஊர்வசி)

நாலு பேரு மறுத்து சொன்னா, you just do it ஊர்வசி,
நூறு பேரு எதிர்த்து நின்னா, you just do it ஊர்வசி,
வெட்டி வேலைன்னு யாரும் சொன்னா, you just do it ஊர்வசி,
பொறுப்பே இல்லன்னு ஊரும் சொன்னா, you just do it ஊர்வசி,

கேளடி இன்றே, இங்கே உழைக்கும் கைகள் ஊரை வெல்லும்
நீயடி நின்றால், வென்றால், இமய மலையும் குனிந்து செல்லும

வாழ்க்கையில் வெல்லவே, you just do it ஊர்வசி,
வானவில் வாழ்க்கையில் வெற்றி என்பதே கான்ஸ்டன்ஸி

(ஊர்வசி)

தொட்டதும் வீணை மீட்டாது
தொல்லைகள் இருக்கும் போகாது
பூக்களால் பாதை அமையாது
புதையலோ எளிதில் கிட்டாது

வேர்களில் நீரே தங்காது
வேர்வையில் வீணே கிடையாது
இடையிலே நில்லா துழைத்தாலே
இறுதியில் தோல்வி கிடையாது.

இலக்கு ஒன்றை இருத்திக் கொண்டு, you just do it ஊர்வசி,
அதற்கும் மேலே ஆசைப் பட்டு, you just try it ஊர்வசி,
முட்டி நிற்கும் குட்டி சுவரை, you just break it ஊர்வசி,
முயற்சி செய்து முழுமை கொள்ள, you just live it ஊர்வசி,

(ஊர்வசி)

இளமையில் உழைப்பே இல்லாமல்
இருந்திட வாழ்ந்தும் என்ன பயன்?
இதயத்தில் துடிப்பே இல்லாமல்
இருப்பவர்க் குலகில் என்ன பெயர்?
விளக்குகள் சுடரே ஏந்தாமல்
விலகுமா அறையைச் சூழ்ந்த இருள்?
விடியலை நோக்கிப் போகாமல்
விழுந்துமே கிடந்தால் என்ன பொருள்?


நன் இனிப் பால்.

குனிந்த முகத்தின் கனிந்த இதழைத்
துணிந்து மலர்த்திப் புரள்.

கனியே உனையே இனியே நினையேன்,
தனியே படுப்பின் துயர்.

உம்மைக் கருதினேன் வெம்மை பெருகினேன்.
நம்மை எரிப்பது தீ.

விரல்தொடு வில்லாய் விழிதொடு விண்நீர்க்
குரலெடு, குன்றுது நாள்.

தளிரிலை அங்கே கனியிணை இங்கே
களித்திடு என்றது யார்?

குவிமலை மையம் குவிந்தது எண்ணம்
கவிழ்ந்தது வாயென்ற நா.

Friday, February 24, 2017

நீலாம்பல் நெடுமலர்.17.


ழிலியே! மெல்லெழும் தென்றல் நறுமண மயில் தோகையே! மல்லிச்செடி இலையே! கெழு உடல் தேக்கென நிற்கும் செம்பொன் மேனித் தேவியே! கருவன் குழலென குரலிழையும் தேன் வழித் தேவதையே!

என் படுக்கை முட்கள் மேல் குளிர்ப் போர்வையாய் மூடுக! போர்வைக்குள் பொத்தி வைத்துக் கொள்க கொல்க என்னையே! கூர்நுனிக் கத்தி முனைகளைத் தீட்டிக் கொண்டு வெந்தசையில் மெல்ல இறக்கிக் ரத்தத் தீற்றல் ஊற்றலாகி உருகி ஊற்றுகையில் நூல் கற்றைகள் செந்தீ பரவு வான் போல் சிவக்கையில், என்னுயிர் உன்னுடன் கலக்கட்டும்.

தகதிமி..! தகதிமி..!

உன் பாதங்கள் என் இதயத்தை ஆளட்டும்! உன் கூந்தல் என் உதயத்தில் விரியட்டும். உன் இடை என் இருப்பை இறுக்கட்டும்! உன் விரல்கள் என் கர்வத்தைக் கலைக்கட்டும்! உன் செவ்வதரங்கள் என் செங்குருதித் தீயை அணைக்கட்டும்!

தகதிமி..! தகதிமி..!

சொல் களைந்து மெளனம் அணிவோம்; மெளனம் கலைந்து உளறல் புகுவோம்; பொய் கலைத்து மெய் தெரிவோம்; பகல் தவிர்த்து இரவணைவோம்; காற்றுலைந்து கரு புனைவோம்; இரு தொலைத்து ஒன்றாவோம்;


Sunday, February 19, 2017

செஞ்சுடராழித்துளி.ப்ரியவதனி,

தேன் துளிர்த்திருக்கும் பல்லாயிரம் மலர்களில் எம்மலர் உன்னைச் சுமந்து கொணர்ந்து சேர்க்கும் என்னிடம்? ஈரம் குளிர்ந்திருக்கும் பலநூறு மேகங்களில் எவ்வொன்று உன்னைக் குளிர்விக்கும்? மனதேவதையே, உன் சிறகுகளில் பொத்தி வைத்திருக்கும் மெல்லிய கதகதப்பில் என்னை இழுத்தணைத்துக் கொள்வது எப்போது? மதுர மொழி பேசும் உன் அதரங்களில் ஆழ்ந்து அணைவது என்று?

தண்ணூறும் கேணியில் நீர் சேர்ந்து விளிம்பில் தளும்பும் சரத்கால முகில்களில் மென் மின்னலைக் கோர்த்து நீ உதறும் வெள்ளித்துளிகளில் நனைவது எந்நாள்?

பொன்மான் கொம்புகளில் சிக்கிக் கொள்ளும் மல்லிகைக் கொடியில் நிறைந்திருக்கும் சிறுமொக்கு மலர்களின் மணம், கொம்பு துழாவும் திசைகளெல்லாம் தன்னைப் பரப்பித் தானும் நிறையும் போல், உன் சொற்களில் என்னை அழைத்து பெயருக்குப் பொருள் தருதல் எக்காலம்?

இல்லையென ஒரு நாளும் உள்ளதென ஓர் இரவும் இப்புடவியைத் திருப்பித் திருப்பி விளையாடல் போல், பார்வையைத் திருப்பியும், பார்த்தலைத் தவிர்த்தும் புரட்டிப் போடுகிறாய். குளிர்க் குருதியில் குறுமுட்கள் குத்திக் கிழிக்கும் பொழுதுகளில் உன் படுக்கையில் நீ கவலையின்றி உறங்குகின்றாய்.

நதியின் ஆழிருளில் பாசிகள் வளரும் பாறைகள் யுகயுகமாய்க் கிடத்தல் போல், மனக்குடிலின் கூரை மேல் உன் விழிகள் பதியன் போடும் புள்ளிகளில் எல்லாம் தேன்பூச்சிகள் சுற்றுகின்றன.

பெய்யும் பெருமழைக்கு கரும்பாறைக்கடியில் குடைபிடித்து அமர்ந்து கொண்டு, வெறுங்கை நீட்டிக் குவித்துச் சிறு துளிகளைச் சேகரித்து தாகம் தணிக்கிறேன்.

பனிக்காற்றுக்குப் பதுங்கிக் கொள்கின்ற வெண்கரடி உள்ளம் உனது; தேடித் தேடிக் கொணர்ந்த வர்ணக் குடையை விரித்துக் கொண்டு நீர்க்கரைகளில் காத்திருக்கிறேன், உன் காலடித்தடங்களை மஞ்சள் பூக்களால் அலங்கரித்து.

(PIC: http://data.whicdn.com/images/22354922/original.jpg)

Saturday, February 18, 2017

ராத்திரியின் பயணி.


தேங்கிய நீரோடையின் கரையில் ஒரு பாறை யுக யுகமாய்க் காத்திருக்கின்றது, ராத்திரியில் மட்டும் வரும் ஒரு பயணிக்காக.

தனிமையில் இருளில் நிழல் கூட அறியாது வருகின்ற அந்த ஒரு பயணிக்காக மட்டும், இறுகிய பாறையின் உள்ளிடுக்குகளுக்கு இடையிலே ஊறிக் கொண்டிருக்கும் வெந்நீர்த் துளிகளுக்காக, மேற்கே உலர்பாலைப் பெருநிலத்திலிருந்து கசங்கிய குடையை விரித்து, புழுதியில் அலைந்த சிக்கெடுத்த தாடியைச் சிதற விட்டுக் கொண்டு வருகின்ற அந்த ஒரு பயணிக்காக.

சூரியன் தினம் சிந்தும் துளி விந்துவைத் தேக்கிக் கொண்டு அழுகின்ற நிலவைத் தலையில் தாங்கிக் கொண்டு கால்களைத் தேய்த்துத் தேய்த்து இழுத்துக் கொண்டு வருகின்ற, உருளும் கண்களில் கரை கட்டியிருக்கும் நீர்த்தேக்கத்தில் பிம்பங்களைப் பதிக்கும் மணல் பாதையின் முடிவில் அமர்ந்து ஓய்வெடுக்கின்ற வயதான அந்த பயணிக்காக.

முட்புதர்களுக்குள் பதுங்கிய எலிகளுக்கும் ஏதேனும் கொண்டு வருகின்ற பயணியின் ராத்திரிக் கதைகளில் ஏதேனும் மிஞ்சியிருக்குமா முந்தைய ஊரின் நிழல்கள்?

(PIC: http://farm3.static.flickr.com/2017/2116909026_f90dba8d16.jpg)

Tuesday, February 14, 2017

நீலாம்பல் நெடுமலர்.16.


நீள்மணிக் கழுத்தில் மென் முத்தங்கள் பதித்திடும் இவ்வேளையில், உன் வெட்கத்தைக் கொஞ்சம் வெளியே போகச் சொன்னாலென்ன?

சிறு கற்றைகள் சரிந்திருக்கும் நெற்றியில் ஒதுக்கி மணம் நுகர்கையில், பின் நகர்ந்து நீ மறைப்பது தான் என்ன?

முகமெழும் கோபத்தைக் கொஞ்சிக் கொஞ்சி ஆற்றிவிட்டபின் ஆழிதழ்த் திறந்து நாசுவைக்கையில் நீ கொள்ளும் மகிழ் தான் என்ன?

பூவாகும் வாழ்வில் தேனாகும் பாவம் போல் தேவி நீ கொள்ளும் ஆறாக் கனவில் நானுமொரு தேனீ போல் வனமெங்கும் உலாவி, உன் பல்வர்ண மலர்களில் சொட்டுச் சொட்டாய் இனிப்பள்ளி சேகரித்து வைக்கும் கூட்டில் மெல்ல உள் நுழையும் பொன்விரல் உன் பார்வை என்கையில் நாணம் களைந்து நீ அணைத்திடுவாய் என்றால் என் சொல்வாய்?

நறுமலர் புனையும் நெடுங்கூந்தலில் விரல் விரவி அளைந்து பின்னிரவின் வான்சரடு போன்ற ஒற்றைக் கற்றையைக் கட்டிச்சுருட்டிப் பின்னிழுத்து மேனோக்கும் விழிகளில் மென்பற்கள் பதித்து ஈரமிழக்கையில், மனமெண்ணுவது எது என்று கேட்டால் என் சொல்வாய்?

வெம்மை அலையடிக்கும் செவிமடல்களை நாசியால் வருடி செம்மையாக்குகையில், துளியாய்த் துவங்கி பனிப்பாறையாய்ச் சரிந்து பாய்ந்து பின்னெழிலில் மறையும் வியர்வைத் துளியைச் செய்கையில், இமைப்பீலி நுனிகளில் விடிகாலை இலைநுனிப் பனித்துளிகள் போல் கண்ணீர் சுமந்திருக்கையில், மாங்கதுப்புக் கன்னங்களில் மாறிமாறி இதழுரசுகையில்... மோகினி, நீ சூரிய ஒளிக் கதிர்க்கிரணம் போல் பொலிகிறாய் என்றால், பின்னிரவில் மலைமேல் விண்ணொளி விரவுப் புலத்தில் அசையும் காட்டுமரங்கள் போன்ற மயிர்கள் மண்டிய என் மார்பில் முகம் புதைத்து இதயத்திற்கு செவிகேளாமல் ஏதோ சொல்கிறாய்...

என்ன..?

Sunday, February 05, 2017

நீலாம்பல் நெடுமலர்.15.
னமே விழி; கனவே ஒழி; தினமே பொழி;

நகும் முகம் தெரியும் வேளையில் கடல் நுனியில் கதிரெழும் கணம்.

நீலத்தாமரையைச் சுற்றும் பொன்வண்டு என் எண்ணம். வேறெங்கே மழை பொழிகின்றது என்றறியாது நனையத் துடிக்கின்ற நீர்த்தவளை என் நினைவு. தீந்தழல் நடமிடும் சுடுவெளியைச் சுட்டிச் சுட்டி விழுகின்ற சிறு பூச்சி என் சொல். கனவிலும் நடிக்கின்ற நிழல் என் தவிர்ப்பு. கனவோ கற்பனையோ உன் விரல்நுனிகளைக் குளிர்விக்கின்ற இந்நதியின் அலைகளில் சுழல்கின்றது என் இருப்பு.

நீ வருகின்ற பாதைகளின் விளிம்புகளில் அடர்த்தியாய்ப் பூத்திருக்கும் செவ்விதழ் ரோஜாக்கள், என் முத்தங்கள். நீ உணர்கின்ற சுகந்தத்தின் சுரப்பு மையங்களாய் மஞ்சள் சம்பங்கிகளை என் சொற்களில் பூசி அனுப்புகிறேன். நீ மெல்லிய வெண்விரல் கொண்டு கோதுகையில் விலகி விடுபடும் ஒற்றை முடி உறங்குகின்றது என் மனவிருளின் ஆழங்களில்.

எழிலொளி வீசி வரும் பசுமுகிலே! ஈரக்கொத்துகளை சுமந்து நிலவு மறைத்து நீ மிதக்கின்ற வானவெளியில் வெண்புறாவென உனைத்தீண்டி நனைய இரு சிறகுகளை இறைஞ்சுகிறேன்.

புது மொழியொன்றின் பரவசத்தில் நீ சிந்தும் சொற்களை அள்ளிக் கொண்டு என் பெட்டிகளில் பதுக்கிக் கொண்டபின், மயில்குட்டிகளாய் அவை பெருகுவதை ஒவ்வொரு இரவும் ரகசியமாய்த் திறந்து பார்த்து மகிழ்கிறேன்.

Friday, February 03, 2017

நீலாம்பல் நெடுமலர்.14.மீண்டும் ஒரு மழைக்காலத்தில் சந்திப்போம்.

மென்மலராய் நீ விலகிச் செல்கிறாய். நதியின் மேலிருந்து வீசிக் கொண்டிருக்கும் மாலைக் காற்றில் கரையோர நாணல் செடியிலிருந்து பறந்து செல்லும் வெண்பிசிறிலை போல. மடிப்புள்ள மலைகளின் இடுக்குகளிலிருந்து வழிந்து கொண்டிருக்கும் காட்டின் மணம் போல, நீ நகர்ந்து கொண்டிருக்கின்றாய்.

நேற்று நாமிருந்தோம் சொர்க்க வெளியில். இன்று நாம் பிரிந்தோம் தர்க்க வெளியில்.

பெய்யு மழை அறிவதில்லை, செம்மண் பூமியிலா, செங்காந்தள் மலர்மேலே, கருங்கல் பாறையிலா, காதல் மனதிலா என்று.

எதிர் நோக்குகையில் கடக்கின்ற இரண்டு நொடிகளுக்குள் புன்னகைப்பதா, வேண்டாமா என்று முடிவெடுக்குமுன் துளியினும் துளியாகச் சின்னஞ்சிறு இதழ் அசைப்பாய். காலப் பிரம்மாண்டம்.

நெய்நிறை சுடர்முகம் சொட்டுகின்ற பார்வை ஒளி மனவிருளை ஒருகணம் விலக்கி அணைகின்றது.

நீள்விரல்கள் நீள் திசைகளில் எல்லாம் நீர் போல் நீயே குளிர்ந்திருக்கிறாய்.

கண்களைக் கற்று கொண்டு விட்டாய் எளிதில். நடிக்க முடியாத நொடிகளைத் தருகின்றாய்.

மனக்கோட்டை இடையில் நிற்கின்றது. கடக்கவியலா அகழியில் கொடுமுதலைகள். மென்புற்களாலான பரிசலை ஏந்திக் கொண்டு, நாணல் துடுப்பால் கடக்கத் தெரியாமல் அக்கரையில் நிற்கின்றேன்.

Thursday, January 26, 2017

நீலாம்பல் நெடுமலர்.13.நீ என் முடிவுறாத மெளனம்
நான் உன் முடிவிலாத நாணம்

கனவுகளில் ஓராயிரம் கணங்கள்
காண்கையில் மோதிடும் எண்ணங்கள்

பாதைகளில் பதியன் போடும் பூக்கள்
பதிகையில் குருதி வழியும் முட்கள்

வர்ணமழிந்த ஓவியத்தின் நகல்
வாசமிழந்த மலரின் நிழல்

இரவுகளில் நிழல்களின் பயணம்
இருக்கையில் தனிமையின் சலனம்

இதயமே வலியின் இருப்பிடம்
இருக்கும்வரை துயரத்தின் வசிப்பிடம்

போரிடும் களத்தின் விதிகள்
பொம்மைக் கரங்களில் வாட்கள்

வேனில் மரத்தினடி விழுகனி
கானல் நதியினுள் களிமனம்.....

Friday, January 13, 2017

பொங்கல் வெண்பா.

'கரம் வெண்பா அரங்கம்'  ஃபேஸ்புக்கில் முதன்முறையாகப் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெண்பா இயற்றும் போட்டியை அறிவித்தது.
அதற்கு எழுதிய வெண்பாக்கள் ::

முதல்வன் துதி!
**********
முந்திவரும் மூத்தோனே! முன்னிற்கும் முற்றருளே!
தொந்திபெரும் தோழமையே! தொல்லெழிலே! - தந்திடுவாய்க்
கந்தனுக்குக் காதலிபோல் காவியமாய்ச் சொல்லாட
வந்தருளை வாரித்தா நீ.

கலைமகள் காப்பு.
************
வெண்கமல வேதவல்லி! நல்வீணை நாதமல்லி!
பெண்ணுருவில் பேரறிவே! பெற்றுனைநான் - எண்ணியசொல்
இங்கிவனே சொல்வதன்முன் இன்றென்று மெப்பொழுதுந்
தங்கிடுவாய்த் தாயேயென் னுள்.

குரு வணக்கம்.
**********
எங்குமிருப் பேரொலியை எண்ணென்றும் சொல்லென்றும்
எங்களுக்குக் கற்பிக்கும் எல்லோர்க்கும் - எங்கெங்கும்
தாழ்பணிந்துக் கீழமர்ந்துத் தானிறங்கிக் கும்பிட்டால்
தாழ்வில்லை வாழ்வினிலே பார்.

கண்ணன் முத்தம்.
****************
மதுரநாத வேய்ங்குழல் மாலைநேரக் காற்றில்
மதுக்குடம் வீழ்ந்த எறும்பா - யதுவுமூறித்
தேனாடும் மாய்வது போலாகும் காதலி
நானாடும் கண்ணன் இதழ்.


பழம்பொருள் அகற்று நாள்.
******************
இல்லத்தின் உள்நிறைத் தூசடைத் தொல்பொருள்
உள்ளத்தின் உள்ளுறைத் துர்க்குணங்கள் - வெள்ளத்
தழுக்கென நீங்க புதுப்பொருள் தேங்க
செழுந்தீ துடிக்கின்ற நாள்.

தைத்திருநாள்.
*********
வானிலிருள் போகுமுன்னே வீசுபனி தீருமுன்னே
கேணிநீரைச் சேந்தியெடுத் தூற்றிமேலுன் - மேனிமுழு
நீராட்டிப் புத்தாடைத் தானணிந்துப் பெற்றோரைப்
பாராட்டிப் பாதத்தில் சேர்.

தெய்வந் தொழுது மலர்தூவிக் கும்பிட்டுப்
பெய்கப் பெறுக திருவாழ்த்து - செய்க
புதுப்பானை செங்கரும்பு பொன்னரிசி வெல்லம்
எதுவேண்டு மென்றறிந் தால்.

கதிருக்குத் தீகாட்டி வெம்பானை நீரில்
கதிரள்ளி இட்டுக் கலக்கி - அதிசுவை
எங்கும் பரவ இனிப்பிட்டுக் கூவுக
பொங்கலோ பொங்கல் என.

கீழ்வானில் செவ்வாடை மேலுறையும் வெண்ணிலவு
தாழ்வாரப் பூவாடை தாவணிப்பூ - வாழ்வூறும்
பொற்பானைப் பொங்கலிட செங்கரும்புச் சாறுடனே
நற்பாடல் கூவிக் களி.

நற்சொல் வளருதல் நண்பர்க்கும் சொல்வதால்
நற்பேர் வருதலோ உற்றாரால் - உற்றநற்
பொங்கலைப் புத்துணவை எல்லோர்க்கும் தந்திட
பொங்குமாம் இன்பமே நாள்.

அன்னைக்கைப் பொங்கலில் அக்காக்கைச் சட்னியில்
கன்னல்நீர்ச் செங்கரும்பில் சேற்றுக்கை - நன்றாய்ச்
சுவைத்து மகிழ்ந்து இனிப்பூறுஞ் சொல்லால்
அவையில் இயம்பு "நலம்!"

கரும்பைக் கடித்து வழிசாற்றை உண்டு
அரும்பும் அனைவரோடும் அன்னைப் - பெருமூத்தோர்
சேர்த்து உரையாடு! பேசு மகிழ்வோடு!
தீர்த்து கசப்பை மற.

வீதியெலாம் கொண்டாட்டம் ஊரிலெலாம் உற்சாகம்
ஆதிநாள் ஆர்ப்பாட்டம் ஆட்டத்தில் - மோதிநீ
சேர்ந்தாடு வென்றாடு தோற்றாடு வெள்ளமாய்
வேர்த்தாடு ஆண்டிலிந் நாள்.

ஏறு தழுவுதல்
**********
துடுக்கான பிள்ளையைத் தாமடக்கல் போலே
விடுக்கின்ற காளையரை வீழா - தடுத்திடும்
பாய்வீரம் கொண்டு தழுவி அணைத்துப்பின்
சேய்போலே கட்டியணை வோம்.

Thursday, January 12, 2017

நீலாம்பல் நெடுமலர்.12.


குறுவாளின் நுனிநாணும் விழிகொண்டு வந்தாய்!
குறுந்தோகை நனிகாணும் நிறம்கொண்டு வந்தாய்!

சிறுமுருங்கை மரம்போலே தோள்கொண்டு வந்தாய்!
சிவப்பான பழம்போலே முகம்கொண்டு வந்தாய்!

வளைந்தாடும் மலைபோலே இருபுருவம் கொண்டாய்!
வளையாத வாள்போலே ஒருநாசி கொண்டாய்!

கலையாத கனிபோலே இருகன்னம் கொண்டாய்!
களியூறும் செழிப்பாலே இருவிதழ்கள் கொண்டாய்!

சறுக்காத வழிபோலே பனிக்கழுத்து கொண்டாய்!
சலிக்காத மதயானை இருமார்பு கொண்டாய்!

முளைக்காத கொழுந்தாக இருகூர்மை கொண்டாய்!
முழுதாகச் சுவைக்காத இருவமுது கொண்டாய்!

(வேறு)

சரியாத பெரும்பாறைச் சிலையொட்டி நிற்க
சரியாகக் குறும்பாறை அதன்மேலே நிற்க
வரையாத இருவட்டக் குமிழ்நுனியோ நிற்க
வனையாத தழல்மூச்சு அதைச்சுற்றி நிற்க

இணையாத ஒருபாதை இடையினிலே ஓட
இணையான இருமதலை இறுக்கங்கள் கூட
இனிமைத்தீ அனலோடு அருகினிலே வாட
இனிக்காத எச்சில்நதி தீராது நாட

(தொடர்)பிறக்காத நிழல்களுக்குள் பதுங்கி வந்த இருள் நீ!
பிதற்றாத மொழிகளுக்குள் மிதந்து வந்த பொருள் நீ!

திறக்காத கதவுகளைத் திறக்க வந்த கரம் நீ!
திகட்டாத உதடுகளைச் சுரக்க வந்த சுரம் நீ!

இமையாத இரவுகளில் இணைக்க வந்து படர் நீ!
அமையாத உறவுகளில் அணைக்க வந்த சுடர் நீ!

மதுப்பார்வை உருக்க வந்த ஒரு கள்ளிமலர் நீ! என்
மனப்பாறை பிளக்க வந்த சிறு மல்லிச்செடி நீ!


Thursday, January 05, 2017

நீலாம்பல் நெடுமலர்.11.


கல் விளக்கின் சுடர் நிலையாக நின்றிருக்கின்றது. பொன் கல்லால் செதுக்கி வைத்த ஒற்றை விரல் போல் குவிந்து கீழகன்று மேல் குறுகிக் கூர் நுனி கொண்டு வானோக்கி ஒரு சிகரம் போல். செழும் செவ்வண்ணம் அடிவானின் சிவப்பு போல் அடியில் தேங்கி குவிகின்றது. புதுக்காலை கீழ் ஆகாயம் போல் இளமஞ்சள் நிறம் பரவிய மேல் பகுதியைத் தாங்கி நிற்கும் சுடர் ஓர் அற்புதம்.

சுடரைத் தீண்டும் எண்ணம் கிளரச் செய்யும் இளமனதை. சுடர் எப்போதும் எரிந்து கொண்டிருப்பதில்லை. விளக்கின் உள்ளே உறங்கிக் கொண்டிருக்கையில் தூண்டும் எரி அகம் கிளறிப் புறம் ஏகப் பற்றி எரியும் செந்தீ. சிறியதாய்த் தெரியும் திரியை வெம்மை தின்று கொண்டிருக்கும்.

அணையாச் சுடர் ஆளும் புடவியை பலகோடி சிறு சுடர்கள் காக்கின்றன. அவ்வெம்மை தீராதிருக்கும் வரை ஜீவ செழுமை நிறைத்துக் கொண்டிருக்கும் இவ்வெளியை.

Wednesday, January 04, 2017

நீலாம்பல் நெடுமலர்.10.

தேவி..!

இருள் கவியும் இலைகளின் அடியில் கவிழ்ந்துறங்கும் புழுவைப் போல் உறங்கிக் கிடந்தேன். பொன்னொளிர்க் கன்னிமையில் என்னுள் மஞ்சள் கதிரென நுழைந்தாய். விண்ணிலிறங்கும் வெண்ணிறகுகளுடன் ஒரு தேவதையாய் வந்தருகணைந்து மெல்லத் தீண்டினாய். பெரும்பாறை அடைத்துக் கிடந்த மனதின் பாதையில் உன் தொடுகை, நெய்யென உருகி ஒளி பாய்ச்சியது. கருணை பொழியும் கண்களால் என்னுள் நிறைந்தாய். உதிரமொட்டுகளை உன் தண்விரல்களால் மெல்லத் தட்டியெழுப்பினாய். நறுமணம் படர்க் காற்றை என்னைச் சுற்றிலும் நிரப்பினாய். சுகந்தம் திகழும் ஸ்வர்ணமாய்ப் பரவினாய்.

தேவி..!

இனிமை சுமக்கும் உன் இதழ்களில் ஒரு புன்னகை கொடுத்தாய். இமயத்தின் கருவறைக்குள் இருத்திக் கொண்ட குளுமையில் அமர்த்தினாய். ஒரு சொல் சொன்னாய். பைங்கிளிப் பேச்சின் பசுமையில் மறந்தேன். வெண்மணி வரிசையில் தத்தித் தத்தித் தாவிச் செல்லும் சிறு பிள்ளையாக மாற்றினாய்.

தேவி..!

மதுவே! மலரே! மலர் கொள் மணமே! புகழே! சிறுவிளக்கின் அகலே! மெய்யகல் நெய்ச்சுடரே! நெய்யகல் சுடர்முகமே! திருமகளே! துளிகர்வம் கொண்டு என்னை அள்ளிக் கொள்ளாயோ? அணைக்கும் இருகரங்களால் முழுதுடலை உனக்குள் இறுக்கிக் கொண்டாய். இன்னும் எஞ்சியிருப்பது சிறு வாழ்வே! தடுமாறி அலைபாயும் நாட்களில் பற்றிக் கொள்ள ஒரு வேங்கைமரக் கொம்பு போல கிடைத்தாய். மண் விலகி விண்ணேகும் பொழுதில் எண்ணிக் கொள்ள சில புன்னகைகளை விட்டுச் சென்றாய். இன்னும் கிடைக்கின்றது வாழ சில காரணங்கள்.

தேவி..!

முகில் கொழுத்த மாலை வானில் எட்டுத் திக்குகளும் அதிரக் கிளம்பும் வெண்மின்னல் போல் பேரொலி எழுப்பி நீ உள் நுழைந்தாய். குகைகளில் பதுங்கிக் கிடக்கும் மலை எலி போல சுருண்டு கிடந்தேன். பெருமழை புகுந்து தனதாக்கிக் கொண்ட பின் அலைகளில் அலைப்புண்ட மெல்லிலை போல் தத்தளிக்கிறேன்.

தேவி..!

உனக்கே என் நாட்களெலாம் அர்ப்பணம். உனக்கே என் இரவுகளெலாம் சமர்ப்பணம். சிரம் மேல் தாள் பதித்து நீ நடனமிடும் ஆனந்த நர்த்தனத்தில் என் குருதி உடைந்து பெருகி நின் கழலிணைகளைச் சூழும்.  அருளுடன் ஒரு கரம். அபயமென ஒரு கரம். பயங்கரத்துடன் ஒரு கரம். பயப்படேலென ஒரு கரம். ஆயிரம் பல்லாயிரம் சிரங்கள் காட்டி மாயத்தில் ஆழ்த்தும் மகாசக்தி, உன் செவ்விழி சினத்தில் எரிந்து தூசாகுமுன் மடி மேல் வைத்து உன் அமுதில் எனைக் குளிப்பாட்டு.