Tuesday, January 13, 2015

தனித்து ஒரு பாடல்.

ழை நகர்ந்த பின் வந்த மாலையில் அவன் மட்டும் பூங்காவில் அமர்ந்திருந்தான். விளையாடிய பையன்கள் வீடு திரும்பியிருந்தனர். அவர்களுடைய சின்னஞ்சிறு கூச்சல்கள் மட்டும் இன்னும் சுற்றி வந்தன. நகரம் செயற்கை ஜொலிஜொலிப்புகளால் போர்த்தப்பட்டிருந்தது. இருண்டு கொண்டு வந்த வானத்திற்கு மேலே அகண்டாகாரமான இருள்வெளி மெளனமாய் உறைந்திருந்தது. மேலிருந்து ஒரு தேவன் பார்த்தாலும் தனித்துத் தெரியுமளவுக்கு பூங்காவில் கழுவப்பட்டிருந்த பசிய இலைகளின் நடுவே, சேற்றுமணம் நிரம்பிய காட்டுக்குள் தனித்திருந்தான்.

சின்னச் சின்னப் பூச்சிகள் கிளம்பி, அந்தக் குளிர் இரவை நிரப்பத் தொடங்கியபின் அவன் சட்டைப்பையில் கொண்டிருந்த மவுத் ஆர்கனை வாய்க்குச் சூடினான். அவன் நெஞ்சில் கெட்டிப்பட்டிருந்த சோகக் கதுப்புகளை, மூச்சின் வெப்பத்தால் கரைத்து, உருக்கிக் கரைத்து, மென்னீராக்கி, இன்னும் வெப்பம் கொடுத்து ஆவியாக்கி, வெளித்தள்ளிய அனல்காற்றின் ஜதி, ஆர்கன் வழியாக மென்சூட்டில் துயரப்பாடல்களாகி வெளிவந்தன.

"மரங்களோ புதர்களோ பறவைகளோ பூக்களோ
மறந்திடாதீர் என்னையே...

பனிகளோ குளிர்களோ தளிர்களோ இலைகளோ
புதைத்திடாதீர் என்னையே..."

என்று அவன் பாடிக் கொண்டே பூங்காவை விட்டு வெளியேறினான். இனி அவன் அங்கு திரும்பப் போவதில்லை.

நகரம் தன் விருப்பங்களை மர்மங்களின் மேடையின் படுதாவுக்குள் நிகழ்த்தி இரவின் புதைகுழிக்குள் அமிழ்ந்து கொண்டிருக்க, மஞ்சள் தெரு விளக்குகள் கவிழ்ந்த நீர்த் தேக்கங்களைக் கலைக்காமல் அவன் செல்லத் துவங்கினான்.

அவனை அந்நகரம் அறிந்ததில்லை. அல்லது, அவனைப் போன்ற பல்லாயிரம் பேரை அது அறிந்திருந்தது; அழித்திருந்தது; மறந்திருந்தது. அவன் இருமை சரிந்திருக்கும் குறுக்குச் சந்துகளிலும், மேம்பாலங்களின் திரட்சியான பாதங்களிலும் சாய்ந்து நிற்கவில்லை. அவன் பாதை அவன்முன் செல்கின்றது. அவன் தன் வாத்தியத்தையும், வாத்தியமான உடலையும் சுமந்து கொண்டு நகரின் இரா வீதிகளில் இறுதி உயிராய் உலா சென்றான்.

அவனை யாரும் தடுப்பதில்லை; அவனால் யாருக்கும் தொல்லையுமில்லை. அவன் தன் பாட்டுக்குப் பாடுகின்றான். பனி வந்து போர்த்திக் கொண்டபின் அடைக்கப்பட்ட ஜன்னல்களுக்குள், சாத்தப்பட்ட கதவுகளுக்குள், மூடப்பட்ட கூரைகளுக்குள் அணைப்பின் சூட்டுக்குள் சுருண்டு கொள்ளும் நகரத்தில் அவன் பாடலை யாரும் கேட்பதுமில்லை. அவன் கேளாக் காதுகளை நம்பி நிறுத்தவுமில்லை. அவனுக்குத் திறந்திருக்கும் சாலைகளையும் காலியான தெருக்களையும் கொடுத்து விட்டு, நகரம் ஒதுங்கி வழிவிட்டபின், அவன் யாரையும் நினைத்துக் கொள்ளாமல் தன் பாடலை இசைத்துக் கொண்டு வெளிரிய வீதிகளில் சென்றான்.

மழையில் ஊறிப் போன காகிதங்கள் நகரத்தின் சுவர்களில் அழுக்காய் ஒட்டிக் கொண்டிருந்தன. கருப்புநதிச் சாலைகள் குளிர்ந்திருந்தன. பெருநகரத்தில் எங்கோ ஓரிடத்தில் பாதாளம் செல்லும் வழியைக் காவல் காத்திருக்கும் மூடி ஒன்று யாராலோ திறக்கப்பட்டிருக்கும். அவன் அதை நோக்கியே தான் பாடலைப் பாடிக் கொண்டு சென்றான். கீழ்மையின் அத்தனை அழுக்குகளும், கழிவுகளும் கொடும் நாற்றத்துடன் சீறிப் பாய்ந்து ஆக்ரோஷமாய் அடித்து ஓடும். அந்த பாதாள அனல்நதியின் படித்துறையில் அவன் தன் பாடலுடன் இறங்கினான். அடியாழத்தில் அவன் மூழ்கிப் போனான். அவனுடைய பாடல் மட்டும் நறுமண சுகந்தத்துடன், அந்த இருள் பாதையில் தன்னை நிகழ்த்திக் கொண்டேயிருக்கும்.

Monday, January 12, 2015

மரணத்தின் பனிமலர்.

தியொன்றின் இடைவிடாப் பெருக்கில் மூழ்கியே இருக்கும் வழுவழுப்பான வடிவமற்ற கல்லொன்றை எடுத்து முகர்ந்து பார்த்தது போன்ற வாசத்தில் மரணம் என் அருகிலேயே அமர்ந்திருக்கின்றது. துயரையும் கண்ணீரையும் போல் என்னைப் பிரியாது என்னுடனே அலைகின்றது. சுவர்க்குருவியின் நள்ளிரவுக் கூவலைப் போல, யாரும் எதிர்பாராத கணமொன்றுக்காகக் காத்திருக்கின்றது, என்னைத் தொட. அதன் குளிர் ஸ்பரிசம் தோல் மேலே பனிக்கட்டியின் பாரம் போல் மெல்ல ஊடுறுவும். வெளியே கரைந்து கொண்டே இருந்து, உள்ளே ஒரு கூர்நுனி ஊசி போல் இறங்கிக் கொண்டே நரம்புகளில் படர்ந்து உள்ளுருக்கும்.

சுருண்ட இலைச் சருகுகள் மிதக்கும் நதி உடல் மேலே. அடியாழத்தில் காலத்தின் கூழாங்கற்களைப் போல அசைவிலாது அமிழ்ந்திருக்கும் மரணத்தின் காலடிச் சுவடுகள். ஈரமான மண்ணில் பிடித்து வைத்த உருவங்களை அக்காலச் சுழல் தன்னுள் கரைத்துக் கொள்ள அனுப்பும் நுரையிதழ்களே இறப்பின் கண்ணிகள்.

கரைகளில் படியும் குளிரின் பொழுதுகளில் கால்களைச் சுருக்கிக் கொண்டு அமர்ந்து நதி போகும் பாதையைப் பார்த்திருக்கிறேன். நிறைந்த பெருங்காமத்தில் நிரம்பி வழிந்த மதுரம் போல பெரும் ஆவேசத்துடனும் பெரும் வியப்புடனும் பேரிரைச்சலுடனும் நீராழி பொங்கிப் பிரவாகித்து ஓடும் பேராறு அடங்காப் புரவிகளின் கட்டற்ற கூட்டத்தின் தழுவல்களாகவே எனக்குத் தோன்றுகின்றது. பிடரிமயிர் சிலிர்க்கப் புணரும் நீலக் குதிரைகள் பீய்ச்சும் வெண்ணுரைகள் கரைகளெங்கும் படிந்து படிந்து ஓதம் பரப்பும் மணல்வெளிகளில் மரணம் தன் விஷக்கைகளில் வலை ஒன்றைப் பின்னிப் பின்னி வைத்துக் கொண்டிருக்கின்றது.

நதியின் மேலே நடனமிடும் பொற்கதிரின் புலரிக் கணங்கள் வானெங்கும் பிரகாசிக்கும் கோடி கோடி பொன்னூசிகளால் நதியைத் துளித்துளிகளாக உறிஞ்சி உறிஞ்சி தன்னை நிரப்பிக் கொண்டு மாலைகளில் உதிரமுகில்களாக விட்டுச் செல்கின்றன. கருஞ்சிமிழைத் திறந்து வெளிவரும் வெள்ளித்துளி நறுவாடை புனைந்து நகரந்து செல்லும் இரா நேரங்களில் குளிர் வரும் தெருவில் முக்காடு போட்டுக் கொண்டு அவன் காத்திருக்கிறான்.

அவர்கள் இருக்கிறார்கள்.


வர்கள் நம் தலைகளுக்கு மேலேயே அடர்ந்திருக்கிறார்கள். உறங்கும் போது மெல்ல கைதூக்கினால் தொட்டு விடலாம். ஆனால் அவர்கள் உறங்குவதேயில்லை. அவர்கள் இமைப்பதுமில்லை. அவர்களுடைய உடல்கள் ’உடல்கள்’ என்ற நம் வரையறைக்குள்ளேயே வருவதில்லை. மிக மெல்லிய நூல்களைப் பிரித்துச் சேர்த்தவர்கள் போல அல்லது ஒளிக்கம்பிகள் போல பிரகாசமாய் மென்மையாய், இதுவரை பூமிப்பிரதேசத்தின் மீது விழுந்து வாழ்ந்திறந்த அத்தனை கோடானுகோடி லட்சம் கோடி ஜீவன்களும் ஒருவரையொருவர் நெருக்கிக்கொண்டு அங்கே தான் நெளிந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் நம்மைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள். நமக்கென்று அந்தரங்கம் என்று ஒன்றையும் அவர்கள் விட்டு வைப்பதாயில்லை. நாம் கழிவிறக்குவதிலிருந்து காமமிறக்குவது வரை நம் இடது கழுத்தின் மிக அருகிலிருந்து, அவர்களுடைய குளிர்ந்த கைகள் நம்மைத் தொட்டு விடும் அருகாமையில் நின்று கொண்டு கவலையுடன் பார்க்கிறார்கள்.

ஒரு பொதுவான வகைப்பாட்டில் அவர்களை தன் விருப்பில், தன் விருப்பின்றி வந்தவர்கள் என்று வகைப்படுத்தலாம். தன் விருப்பில் என்பதன் கீழ் நோய்த் தீவிரம் தாங்க இயலாமல் போய் நீங்குவதை விரும்பி வந்தவர்கள், துயரம் நிறைந்த நினைவின் உச்சத்தில் நீங்கியவர்கள் என்று மேலும் சில வகைகள். தன் விருப்பின்றி என்பதன் கீழ் வாழ விரும்பியும் நோய் தின்றவர்கள், எதிர்பாரா விபத்தை எதிர்கொண்டவர்கள் என்று மேலும் சில வகைகள்.

அவர்களுடைய முகங்கள் வெண் மெழுகைப் போல் வழுவழுவென்றிருக்கின்றன. பிற உடல் முழுதும் சாம்பல் நிறத்தில் சன்னமான நிலாக்கிரணங்கள் போல மிதக்கின்றன. அவர்களுக்கு பசிப்பது இல்லை; தாகம் எடுப்பது இல்லை; வேறெந்த உடல் தேவைகளும் அவர்களை மயக்குவதும் இல்லை.

நிலாக்கால இரவுகளில் தொலைதூர மலை முகடுகளில் அமர்ந்து கொண்டு நட்சத்திரங்களின் பனி ஒளியின் கீழே தங்கள் பொன் நாட்களை நினைவு கூர முயல்கிறார்கள். ஆனால் பிரேதத்துடன் நினைவுகளும் நீங்கி விடுவதால், அவர்கள் தம்மைப் பற்றி மீட்டுக் கொண்டு வரத் திணறித் தவிக்கிறார்கள். பின்னிரவில் பிரயாணம் செய்வோர் ஒவ்வொருவரையும் நிலா, மேகத் தடாகத்திலிருந்து ஈரமாய் எழுந்து மறைந்து தொடர்ந்து வந்து பார்ப்பது போல், அவர்கள் தம் வாரிசுகள் அத்தனை பேரையும் ஒரே சமயத்தில் பார்க்கிறார்கள். அப்படிக் கூர்ந்து பார்ப்பதன் மூலம் தம்மை மீண்டும் நிகழ்த்திக் கொள்ளும் விழைவை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.

இராக்காலப் பொந்துகளில் நெருப்பை மட்டும் தின்று வந்த பழமூதாதையருக்கு இளமூதாதையர் சக்கரங்களைச் சொல்லிச் சொல்லி விளங்க வைக்கப் பார்த்தும் முடியாமல் திகைக்கிறார்கள். இவர்களுக்கு கற்கருவிகளை அடுத்த இளமூதாதையர் விளங்கச் சொல்லத் தோற்கிறார்கள். அவர்கள் இறந்த கால வரிசையில் நிரப்பப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் ஒதுக்கப்பட்ட புள்ளிகளில் வசிப்பதில்லை. திரிந்து கொண்டேயிருக்கிறார்கள். என்றாலும் நம்மைப் பார்ப்பதை அவர்கள் விடுவதேயில்லை.

நான்கு வகைக் கனவுகளைத் தினம் காண்கின்றவர்களை அவர்களுக்கு மிகப் பிடிக்கின்றது. ஒவ்வொன்றிலும் அவர்கள் ஒரு பாத்திரமாகி விடப் பிரயத்தனம் செய்கிறார்கள். ஆனால் அதன் நிகழ் மணித்துளிகள் குறைவு என்று அவர்கள் குறை பட்டுக் கொண்டாலும் கிடைத்தவரை தம்மை அந்த மனங்களில் நிகழ்த்திக் கொள்கிறார்கள். விழித்தெழுந்து சில நிமிடங்கள் நாம் குழம்பி, மன ஆடி அசைந்து சமநிலைக்கு வரும் போது அவர்கள் மெல்ல வெளியேறித் தலைக்கு மேலே இடித்துப் பிடித்து நின்று விட்டு குனிந்து பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள்.

நம் வன்மங்களை, துரோகங்களை, சிரிப்புகளை, முகமூடிகளை, நாடகங்களை வேறெவரையும் விட அவர்கள் நன்கறிவார்கள். நம் தெய்வங்களை எல்லாம் நாம் நீக்கி விட்டு அங்கே அமர்த்தி வைத்து விட்ட நம் தர்க்கக் கருவிகளைத் தவிர்த்து இறுதி தினங்களில் நாம் பொய் சொல்லித் தப்பிக்கவே முடியாமல் நேர்கொண்டு பார்க்கவே இயலாத கண்கள் கொண்டவர்கள் அவர்கள்.

அவர்கள் இருக்கிறார்கள், நம்மைப் பார்த்துக் கொண்டு.

பணிமையச் சேவகன்,
ழழ. மிக்.

பெருமரியாதைக்கு உரிய உயர்நிலைப் பனிரெண்டாம் அடுக்கு முன்னவருக்கு,

அயல் தளத் தொடர்பு வளர்ச்சிகளுக்கான ஆராய்ச்சித் திட்டத்தின்படி இறந்துபட்ட ஆத்மாக்களின் உலகுக்குச் சென்று வந்த ‘தொடர்பியல், உள்வாங்கல் மற்றும் நீக்கல்’ பணிமையச் சேவகர் ழழ.மிக் கொடுத்த குறிப்புக் கட்டுரையை இத்துடன் இணைத்துள்ளேன். தங்கள் பணிச்சுமைகளின் கனத்துக்கிடையில் இதை ஒரு பார்வை பார்த்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பின்குறிப்பு: கவிதைகளில் ஆர்வம் கொண்ட தேசாசேவகர்களைத் தகவல் ஆராய்ச்சிப் பணிகளுக்கு அனுப்புவதைப் பற்றி மற்றுமொரு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

ழஸ. மன்.
துணை நிர்வாகர்,
தொடர்பியல், உள்வாங்கல் மற்றும் நீக்கல் பணிமையம்,
மிஸை துணைநகரம், ழான்.

(சொல்வனம் இணைய இதழில் வெளிவந்தது.)