என் நிழலின் நீள, அகலங்களை அளப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அது, இருளின் பேரானந்த வெளியில் கரைந்து விடுகையில், தளையிலிருந்து விடுபட்டதாய் உணர்கிறேன்.
என் தனிமையின் தலை துவட்ட விடாமல், தன்னோடு என்னையும் இழுத்துக் கொண்டு ஓடுகின்ற இந்த வாழ்க்கையின் நிழல், வெளிச்சத்தின் விளிம்புகளோடு உலவும் போதெல்லாம், உரசும் பாத்திரத்தின் தீப்பொறி போல் எட்டிப் பார்க்கின்றது.
தன்னை மறைத்துக் கொள்வதில், என் நிழலுக்கும் தனிப் பிரியம் போலும்! கண்ணுக்குப் புலனாகாத கணங்களில் காணாமல் போய் விட்டது என்று நான் எண்ணி, சிறு விளக்கின் ஒளித்துளிகளைச் சிந்திப் பார்த்தால், நிழல் அங்கேயே இருக்கின்றது. தன்னைக் காட்டிக் கொடுத்த ஒளியின் மேல் பகைமை கொண்டு, ஒட்டாமல் எதிரியாய் எண்ணி எதிரில் நிற்கின்றது.
அதிகாலையில் பிறந்து வளர்கின்ற என் நிழல், நடுப்பகலில் காலடியில் பூமியைத் துளைத்துக் கொண்டு செல்கின்றது. எதுவரை என்பதை யாரறிவர்? எனில் என் காலடியில் ஒளி வருகையில், என் தலைமேல் ஏறி, காற்றையும், விண்ணையும் கிழித்துக் கொண்டு செல்லுமோ?
மனதின் கருமையை நிழலாக வெளிக்கொண்டு வருகின்ற ஒளியின் கரங்கள் என்னைத் தீண்டும் போதெல்லாம், நிரம்பியிருக்கும் உள் கருமை உடலின் மேலும் ஒரு தேமலைப் போல் படர்கின்றது.
அது கூறும் பொருள் என்ன?
ஒளி ஆக்ரமித்திருக்கும் இருளின் தேசத்தில் நாம் கடக்கையில், நாம் நடக்கையில், நம் தேக விளிம்புகளின் எல்லைக்குள் பதுங்கியபடி இருள் பிதுங்கி வழிகின்றது நிழலாய்!
ஒளியும் இருளும் துரத்தி விளையாடுகின்ற விளையாட்டில் இடைப்பட்ட பொருளாய் நாம் மாட்டிக் கொண்டோம்.
எனக்கான தனிப்பட்ட அடையாளமாக நிழலைத்தவிர என்ன நான் கூற முடியும்?
என்னைத் துடிக்கத் துடிக்கக் கவ்விக் கொண்டு இறுக்குகின்ற ஒளி துப்புவது என்னவோ, என் நிழலைத் தான்! இருளிடம் நான் அகப்படுகையிலோ, எனக்கான ஒளியையும் சேர்த்தே அது விழுங்கி விடுகின்றது!
அகண்ட, முடிவில்லாத பிரபஞ்சத்தின் பேரிருளில் இருந்து நான் வந்தவன் என்பதால், தன் பிரதிநிதியாய் என் பிரதியாய் இருள், நிழலாய்க் கூடவே வருகின்றதோ?
சுற்றியிருக்கும் ஆழம் காண முடியாத கரிய இருள் சிரிக்கையில் வரும் ஒளியில், தெரியும் என் நிழலைக் கண்டு நான் சிரிக்கின்றேன்.
உண்மையில் என் நிழல் தான் சிரிக்க வேண்டும். அதன் நிழலாய் நான் சிரிக்கின்றேன். நான் என் நிழலின் நிழலா? எப்படி?
கரிய பேரிருள் காலக் கணக்கின்றி, சாஸ்வதமாய் நிலைத்திருக்கின்றது. நான் இருப்பதோ, நீர்க்குமிழியின் காலம் மட்டுமே! என்றும் உள்ள இருளின் பிம்பமாய் என் நிழல் உள்ளது. நான் இல்லையென்றதும் என் நிழல் பழையபடி இருளோடு கலந்து விடப் போகின்றது.
என்றுமுள்ள நிழலின், குறுகிய நேர பிம்பமாகவே நான் வருகின்றேன். எனவே என் நிழலின் நிழலே நான்!
யாரறிவர்?
என் நிழல் மேல் ஒளி விழுகின்ற போது அல்லது என் நிழலின் மேல் மட்டும் ஒளி படாமல் போகின்ற போது விழுகின்ற நிழலாக நான் இருக்கலாம்...!