மேதகு குடியரசுத் தலைவர் ஆ.பெ.ஜ.அப்துல் கலாம் அவர்கள் இன்று நாட்டின் உயர்ந்த பதவியில் இருந்து, ஐந்தாண்டு காலம் சிறப்பாகப் பணியாற்றி, மீண்டும் தன் தாய்மண்ணிற்குத் திரும்புகிறார். அண்ணா பல்கலைக்கழகத்தில் தாம் விட்டுச் சென்ற பணியைத் தொடர வருகிறார்.
முதன்முதலில் அவரைச் சந்தித்ததைப் பற்றி இங்கே கூறுகிறேன்.
பொக்ரானில் வெற்றிகரமாக அணுச் சோதனையை நிறைவேற்றி, பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராகிப் பணியாற்றி விட்டு, பின் எங்கள் கல்லூரிக்கு பேராசிரியப் பணியாற்ற வந்தார். கணிப்பிறி ஆய்வகத்தில் இரு அறைகள் அவருக்காக ஒதுக்கப்பட்டன. அவர் அதைத் தம் பணியறையாக வைத்துக் கொண்டார்.
வார இறுதிகளில் ஊருக்குப் போய்விட்டு அதிகாலையில் விடுதிக்குத் திரும்பும் மாணவர்கள், மைதானத்தின் வழியாக வருகையில், இவர் ஒரு பாதுகாவலரோடு காலைநடை போவதைப் பார்த்து வணக்கம் செலுத்துவர். (மற்ற நாட்களில் எங்கே அத்தனை அதிகாலையில் யார் எழுவர்? அதுவும் விடுதியில்?)
அவரும் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் செலுத்துவாராம்.
இப்படி ஒருவர் பெரிய மனிதர் நம் கல்லூரியில் இருக்கும் போது, அவரை எப்படியாவது சந்தித்திட வேண்டும் என்று விருப்பம் இருந்தது. எப்படிச் சந்திப்பது என்று தயக்கம் வேறு!
அவ்வப்போது கணிப்பொறி ஆய்வகத்திற்குச் செல்கையில், அவரது அறையை எட்டிப் பார்ப்பதுண்டு.
ஒரு வாசல். அதன் அருகில் ஒருவர் அமர்ந்திருப்பார். அவரிடம் சந்திக்க விரும்புவதின் நோக்கத்தைக் கூறினால், அவர் கலாமிடம் கூறி அவரது விருப்பத்தை அறிவார். பின் நேரம் ஒதுக்கப்படும். அக்குறிப்பிட்ட நேரத்தில் அவரைச் சந்தித்துத் திரும்பி விட வேண்டும். இது தான் முறை என்பதை அறிந்தேன்.
அப்போதே அவர் கல்லூரி மாணவர்கள் என்றால், எந்த தயக்கமும் இன்றி, அனுமதிக்கச் சொல்லி இருந்தார் என்று கேள்விப்பட்டு இருந்தேன். எப்படி, என்ன சொல்லி அவரைச் சந்திக்கலாம் என்று யோசித்தேன்.
ஏதாவது சொல்ல வேண்டும் அல்லவா?
சிறு வயதில் இருந்தே ஒரு பழக்கம்.
பத்திரிகைகளில் ஏதேனும் அருமையான ஓவியம் கண்ணில் பட்டு விட்டால், கை அரிப்பெடுக்க ஆரம்பித்து விடும். நானும் தான் வரைவேன் என்று சொல்லிக் கொண்டு, சாட் பேப்பரில் வரைவேன். அது கமல் செய்வது போல், படைப்பாளி ஓவியத்தில் நீர் ஊற்றிய துடைப்பாளி வேலை போல் இருக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
குங்குமம் இதழில், 'பாண்டியன்' என்ற ஓவியர் வரைந்த கலாம் அவர்களின் ஓவியம் பார்த்தவுடன், இதை வரைய வேண்டும் என்று தோன்றியது. அதை வரைந்து கொண்டிருக்கையிலேயே, இதை வரைந்து கலாம் அவர்களிடமே காட்டி கையெழுத்து வாங்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. (இதுவரை இது எப்பேர்ப்பட்ட சிந்தனை என்று இறுமாப்போடு இருந்தேன். சென்ற வார விகடனில் ஓவியர் ஸ்யாம் அவர்கள் இது போல் பல பெரியவர்களிடம், அவர்கள் படத்தை வரைந்து, அவர்களின் கையொப்பம் வாங்கியிருக்கிறார் என்று படித்தவுடன், புஸ்ஸென்றானது ஒரு சோகக் கதை.)
மாதத் தேர்வுகள் முடிந்த ஒரு திங்கட்கிழமை அந்த ஓவியத்தை எடுத்துக் கொண்டு, அவரது அலுவலகம் சென்றேன். கையில் புகைப்படக் கருவி இல்லாததால், நண்பரிடம் வாங்கிச் சென்றிருந்தேன்.
அவரது அறைக்கு முன்னிருந்த அலுவலரிடம் கலாம் அவர்களைக் காண வேண்டும் என்றேன். எதற்காக என்ற கேள்விக்கு, மாணவர் அட்டையைக் காட்டி விட்டு, அந்த ஓவியத்தைக் காட்டி, 'இதை அவரிடம் காட்டி, அவரது கையொப்பம் வாங்க வேண்டும்' என்றேன். அலுவலர், பாதுகாப்புக்குக் கையில் துப்பாக்கியுடன் இருந்த பாதுகாவலர், உள்ளிருந்த அலுவலர்கள் அனைவரும் ஓவியத்தைப் பார்த்து வியந்து வாழ்த்தினர்.சோதனைகள் முடிந்த பின் அவரிடம் அனுமதி பெற்று, உள் அனுப்பி வைக்கப் பட்டேன்.
பின் உள் நுழைகையில் தான் தெரிந்தது. உள்ளே மற்றுமொரு அறை இருப்பதை! முன்னறையில் அமர வைத்தனர். ஓர் ஐந்து நிமிடம் காத்திருக்கச் சொன்னார்கள். அதற்குள், இரண்டு தொலைபேசி அழைப்புகள். ஒண்று டி.ஆர்.டி.ஓ.வில் இருந்தும், மற்றொன்று ஹரிகோட்டாவில் இருந்தும்.
அழைப்பு கிடைத்தது.
அறைக்கதவு திறந்தது.
முன்னறை சிறியதாக இருந்தாலும், அவரது அலுவல் அறை பெரியதாக இருக்கும், நீளமாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டே சற்று நிதானமாக உள் நுழைந்தால், 'தடார்' என்று எதிரில் உட்கார்ந்திருக்கிறார். 'பட்'டென்று ஆகி விட்டது எனக்கு. என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
அமைதியாக எழுந்து நின்று கை கொடுத்தார். அமரச் சொன்னார். அமர்ந்தேன். பெயர், வகுப்பு என்று விசாரித்தார். பின் அந்த ஓவியத்தைக் காட்டினேன். பாராட்டினார். அதில்,'Role Model for Rural Students' என்று எழுதி, கீழே A.P.J.Abdul Kalam என்று எழுதியிருந்தேன். அவரது பெருமை பாடும் புகழ்ப் பட்டப் பெயர்களையோ, எந்த புகழ் உரைகளையோ எழுதாமல், வெறும் பெயர் மட்டும் எழுதியிருந்தேன். உண்மையில் அது மட்டும் தானே நமது அடையாளம்? மற்ற பட்டங்கள் எல்லாம் பிறர் தருவது தானே? என்ற எண்ணத்தில்..!
'With Best Wishes' என்று எழுதி,அவரது கையொப்பம் இட்டார். 'Rural Students' என்று எழுதி இருந்ததால், எந்த ஊர் என்று கேட்டார். 'பவானி' என்று சொல்ல எனோ கூச்சப்பட்டு, (அவருக்குத் தெரியுமோ, என்னவோ என்ற எண்ணம் தான்) 'ஈரோடு' என்றேன்.
பின் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தயக்கத்துடன் கேட்டுக் கொண்டேன். பொதுவாக அவர் புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதிப்பதில்லை/ விரும்புவதில்லை என்று கேள்விப்பட்டிருந்தேன். அதனால் தான்.
ஆனால் அவர் ஒத்துக் கொண்டார்.
பரவசத்தில், பதட்டத்தில் தடாரென்று எழுந்ததில், நான் அமர்ந்திருந்த நாற்காலியைத் தள்ளி விட்டு விட்டேன். பின் எடுத்து ஒழுங்கு படுத்தினேன். அவரது அலுவலக ஊழியரைக் கூப்பிடலாம் என்று கதவைத் திறக்கப் போனேன். அங்கு அடுத்த தவறுதல். அவரது அறைக் கதவு, உள்ளே தாழ்போட்டுக் கொள்ளும் வகையில், பட்டன் சிஸ்டத்தில் இருந்தது. பதட்டத்தில் அதை அழுத்தித் தொலைத்து விட்டேன். கதவைத் திறக்க முடியாமல் போயிற்று. சோகமாய் அவரைப் பார்த்தேன். 'சுத்த லூசா இருப்பான் போல்' என்று எண்ணினாரோ என்னவோ, அவரே வந்து கதவைத் திறந்து விட்டௌ, அவரது ஊழியர் ஒருவரை அழைத்து, புகைப்படம் எடுக்கச் சொன்னார்.
அந்த ஓவியத்தின் ஒரு முனையில் நானும் மறு முனையில் அவரும் மேலும் கீழும் பிடிக்க, அவரது ஊழியர் காமிராவின் பட்டனை அழுத்தினார்.
ஒரே ஒரு ஃப்ளாஷ்.
மற்றுமொன்று எடுக்கச் சொல்லலாமோ என்று (பேக் அப் - சரியாக வரவில்லை என்றால் என்பதால்) நினைக்கையிலேயே, அவர் கை கொடுத்தார். வேறு வழியின்றி நானும் கை கொடுத்து விட்டு வெளி வந்தேன். பிறகுதான் மூச்சே இயல்பு நிலைக்குத் திரும்பியது.
பிறகு சந்தோஷமாக அதை அனைத்து அலுவலர்களிடம் காட்டி விட்டு, விடுதிக்கு அத்தனை மகிழ்ச்சியுடன் திரும்பினேன். ஆனால் பசங்கள் அதை நம்பவேயில்லை. 'யார்ரா இந்த பொம்பளை' என்றே கேட்டு வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார்கள்.
அப்போதெல்லாம் அவர் குடியரசுத் தலைவர் ஆவார் என்று யாரும் எண்ணவேயில்லை.
பிறகு அந்த வரலாறு நிகழ்ந்த போது, ஐயாவுடைய மதிப்பு சும்மா, ஜிவ்வென்று கலாம் அனுப்பிய இராக்கெட் கணக்காக மேலேறியது. நானும் போதாக்குறைக்கு கொஞ்ச காலம் 'எனக்கு கையெழுத்து போட்டதால் தான் அவருக்கு அதிர்ஷ்டம் அடித்து ஜனாதிபதியானார்' என்று சொல்லிக் கொண்டு திரிந்தேன்.
முன்பே அவரது 'அக்னிச் சிறகுகள்' படித்திருந்தேன். அப்போதே அவர் மேல் மதிப்பாய் இருந்தது. அவர் எங்கள் பல்கலைக் கழகத்தில் படித்தவர் என்று அறிந்ததும், இன்னும் கொஞ்சம் நெருக்கம் மனதில் தோன்றியது. அது இன்னும் வளர்ந்தது, இந்த ஓவிய விளையாட்டில்!
ஒரு விஞ்ஞானி ஜனாதிபதியாகவும், ஒரு பொருளாதார மேதை பிரதமராகவும், ஒரு பொருளாதார அறிஞர் நிதியமைச்சராகவும் இருக்கையில் நாடு இன்னும் நிறைய விஷயங்களில் முன்னேறி இருக்கலாம் என்று தோன்றுகிறது இப்போது! இப்படி ஒரு கூட்டணி இனி இந்த தேசத்திற்கு மறுபடியும் எப்போது அமையுமோ?
ஆனாலும் தேசத்தின் இளம் தூண்களின் மனத்தில் நம்பிக்கை வெளிச்சத்தை ஏற்படுத்தியதிலும், உலகிலேயே இளமையான தேசத்தின் எதிர்காலம் இளம் குழந்தைகளின் கைகளில் தான் என்பதை உணர்ந்து, நாடெங்கும் பயணித்து இலட்சக்கணக்கான இளஞ்சிறார்களின் மனத்தில் தேசத்தின் வளர்ச்சியைப் பற்றிய கனவை விதைத்ததிலும், தான் வெறும் 'இரப்பர் ஸ்டாம்ப்' அல்ல என்று உணர்த்தியதிலும் கலாம் நாம் கண்டுவந்த மற்ற வெற்று ஜனாதிபதிகளில் இருந்து பெரிதும் வேறுபட்டு விளங்கினார்.
பல இலட்சக்கணக்கான மக்கள் வறுமையில் வாடுகின்ற நாட்டில், இராக்கெட் அனுப்புவதற்கும், செயற்கைக் கோள் அனுப்புவதற்கும் இத்தனை பணம் செலவு செய்ய வேண்டுமா என்று பலர் கேட்ட போது, 'தேசத்தின் பாதுகாப்பு' தான் முக்கியம். அது ஸ்திரமாக்கி விட்டு, பின் உற்பத்தியைப் பெருக்கலாம் என்று உண்மை நிலையைக் கூறினார்.
வெறும் அரசியல்வாதிகளுக்கு மட்டும் தான்,'அண்ணன் அழைக்கிறார்',' தலைவர் தறிகெட்டுக் கூப்பிடுகிறார்' என்று போஸ்டர் அடித்து வரவேற்பு கொடுக்க வேண்டுமா?
இதோ..
'தலை நகரில் ஆண்டு விட்டு, தாய் மண்ணிற்குத் திரும்பும் தமிழ்த் தங்கமகனே.. வருக.. வருக..'
'இராமேஸ்வரத்தில் பிறந்த இரத்தினமே... இந்தியா தந்த இசுலாம் இதயமே.. வருக.. வருக..'
'கற்ற இடத்திற்குப் பெருமை சேர்த்து, உற்ற இடம் அடைந்து, உயர் புகழ் பெற்று, தாயகம் திரும்பும் தவத் திருமகனே வருக...'
'அண்ணா பலகலைக்கழகத்திற்குத் திரும்பும் அண்ணலே வருக.. வருக..'
குறிப்பு : சிறப்பு இருக்கும் இடத்தின் மீது சேறு வீசப்படுவது உலக இயல்பு. 'ஞானி' என்று தம்மைத் தாமே கூறித் திரியும் ஒருவர், கலாம் அவர்களைப் பற்றி ஆ.வி.-யில் கேவலமாக எழுதியிருந்தார். அவருக்குக் கூறிக் கொள்ளும் பதில் இது தான்:
'ஆண்டவரே.. இவர்கள் தாம் என்ன செய்வது என்பதை அறியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியும்..'
கலைந்தது கலாம் கனவு..! பிழைத்தது இந்தியா..! அப்துல்கலாம் ஏன் ஜனாதிபதி ஆக கூடாது?
அப்துல் கலாம் தகுதியானவர் அல்ல! - ஞானிவிடை பெறுகிறார் 'மக்கள்' ஜனாதிபதி.....